விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்.
(ஜூலை-ஆகஸ்டு 2018)

7. எதிர்பார்க்கப்படும் பலன்கள்

எபேசியர் 6:11இல் கண்டபடி நாம் தேவனுடைய பூரண சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொண்டால், நான் என்ன பலன்களை எதிர்பார்க்கலாம்? இதைக்குறித்துச் சிந்திக்கும்போது நாம் நினைவில் கொள்ளவேண்டிய காரியம் இந்தச் சர்வாயுதவர்க்கம் இயேசுகிறிஸ்துவை அறிந்த எல்லாருக்கும் கிடைக்கும், அதை விசுவாசத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்பதாம். இந்தச் சர்வாயுதவர்க்கம் அதை அணிந்தவனுக்கு முழுபாதுகாப்பும் அளிக்க வல்லது. எனவே இதை அணிந்த எவனும் எனக்கு சரீரத்தில் இந்த இடம் பலவீனமாய் இருக்கிறது என்று கூறமுடியாது. ஒருவன் விசுவாசத்தின் மூலம் சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொண்டபின், அதனால் வரும் நன்மைகள் இந்த வேதப்பகுதியில் காணப்படும் திராணி, தகுதி என்ற வார்த்தையில் மையங்கொண்டிருக்கிறது (வசனங்கள் 11,13,16).

வசனம் 11 இப்படிக் கூறுகிறது: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்”. இந்த வசனம் நாம் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொண்டால் பிசாசின் சகலவித தந்திரங்களையும் எதிர்த்து நிற்க முடியும் என்று கூறுகிறது. மிகவும் பலவீனமான விசுவாசியும்கூட கிறிஸ்துவின்மீது பூரண விசுவாசம் வைத்துச் செயல்பட்டால் தன் வாழ்வில் ஏற்படும் எந்தச் சோதனையையும் மேற்கொள்ள முடியும்.

13ஆம் வசனத்தில் போராட்டங்களை எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணி உள்ளவர்களாகும்படிக்கு தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறது. 16 ஆம் வசனத்தில் பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை யெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் (இதற்குத் திராணியும், தகுதியும் வேண்டும்) என்று வருகிறது. ஒவ்வொரு விசுவாசிக்கும் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வேண்டுமென விரும்புகிறார்.

பவுலோடு சேர்ந்து நாமும் இப்படிக் கூறுவோம். “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”. இதே வசனத்தின் கருத்து 1கொரி.15:57இலும் எதிரொலிப்பதைக் காணலாம். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”. எனவே நாமும் பவுலுடன் சேர்ந்து இந்த முடிவுரையைக் கூறலாம். “ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகிறவர்களாயும் இருப்பீர்களாக” (1கொரி.15:58).

எனவே நாம் தோல்வியை அல்ல; வெற்றியையே எதிர்பார்ப்போம். விசுவாசத்தினாலே நாம் வெற்றியடையலாம். ஏராளமானோர் தோல்வியை எதிர்பார்த்து ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபட்டபடியால் தோல்வியடைந்துள்ளார்கள். நாம் திராணியும் தகுதியும் உள்ளவர்கள் என்பதை மறவாதிருப்போமாக.

திராணி அல்லது தகுதி என்பதைக் குறிக்கும் இரண்டாவது வசனம் எபேசியர் 6:13இல் வருகிறது. “ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும் படிக்கு, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்”. யாக்கோபு 4:7 இன்படி, “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்”. இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் “எதிர்த்து” என்பதுதான் இங்கு “எதிர்க்கவும்” என்று கூறப்பட்டுள்ளது. 1பேதுரு 5:9 இலும்  “எதிர்த்து” என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு (சாத்தானுக்கு) எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே”. இந்தச் சர்வாயுத வர்க்கம் சாத்தானை உறுதியாய் எதிர்ப்பதற்கு வேண்டிய ஆற்றலைத் தருகிறது. ஜெயங்கொண்டவர்களாய் அந்தத் தீமை நிறைந்த நாளில் எழும்பி நிற்க இந்தக் கேடகம் உதவி செய்யும். கொடிய சோதனைகளும், பரீட்சைகளும் வரும் நாளைத்தான் “தீமையான நாள்” என்று கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்துவுக்குள் நாம் வேரூன்றி, நிலைத்து நிற்கும்போது தான் நாம் சாத்தானைத் தைரியமாக எதிர்கொள்ளவும், அவனைத் தோற்கடித்து துரத்தியடிக்கவும் முடியும். எனவேதான் யாக் கோபு 4:7இல் முதலாவது “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்தான் “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. நாம் நம்மை முழுவதுமாகக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, அவரையே சார்ந்திருப்போமானால், அவரை நமது அரணாக வைத்துக்கொள்வோமானால், அவரே நமது பூரணமான தற்காப்பு அரணாக இருந்து காத்துக்கொள்வார்.

1பேதுரு 5:9இல் காணப்படும் கூற்று “விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்” நமக்கு நினைவுப்படுத்துவது என்ன வென்றால், விசுவாசத்தின் வெற்றிகரமான நிலையில் நாம் நிலைத்து நிற்கவேண்டும் என்பதாம். ஆவிக்குரிய போராட்டம் ஒரு விசுவாசப்போராட்டம் என்பது தெளிவு. தன்னுடைய கடைசிக்காலத்தில் பவுல் தீமோத்தேயுவிடம், “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு” என்று கட்டளையிட்டார் (1தீமோத்.6:!2). தன்னைக்குறித்து பவுல் கூறியது, “ஏனென்றால், நான் இப்பொழுதே பான பலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” (2தீமோத்.4:6-7).

நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நம்முடைய ஆண்டவரை நம்புவோமாக. எப்போதாவது நாம் தவறிப் பாவம் செய்துவிட்டால், நம் பாவத்தை அவரிடம் அறிக்கை செய்வோம். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் அவற்றை மன்னித்துவிடுவதாக அவர் நமக்கு வாக்குத்தத்தம் செய்துள்ளார் (1யோவான் 1:9). “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடக்கக்கடவோம் (1 யோவான் 1:7). அப்பொழுது சாத்தானின்மீது வெற்றியைக் கண்டடைவோம். நாம் கர்த்தருடைய வேதத்தைப் படிக்கும்போது அதன் ஒளி நம்மிடம் காணப்படும் எல்லாப் பாவங்களையும், சிறு பாவங்களையும்கூட வெளிப்படுத்தும். நாம் அந்தப் பாவங்களை உடனே ஆண்டவரிடம் அறிக்கை செய்வோம்.

‘திராணி’ அல்லது “தகுதி” என்னும் பொருள் கொண்ட சொல் வரும் மூன்றாவது இடம் எபேசியர் 6:16 இல் காணப்படுகிறது. “பொல்லங்கன்  எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்”. இங்கு ஆவிக்குரிய சர்வாயுத வர்க்கத்தின் ஒரு பலனைக் காண்கிறோம். அதை அணிந்திருக்கும் நாம் சாத்தான் எய்யும் அக்கினியாஸ்திரங்கள் அத்தனையையும் அவித்துப் போடத்தக்க திராணி, தகுதி, திறமை உடையவர்களாய் இருப்போம். இது இயேசுவை நாம் பூரணமாக விசுவாசிக்கும்போது நடக்கும். அவரே விசுவாசியைப் பாதுகாக்கும் கேடகமாயிருக்கிறார். நாம் ஏற்கெனவே பல வசனங்கள் மூலம் (கலாத்தியர் 2:20; கொலோசெயர் 3:3,4) கவனமாக ஆய்வு செய்து, கிறிஸ்துவே நமது கேடகமும், ஜீவனுமாய் இருக்கிறார். அவர் நம்மிலும், நம் மூலமாகவும் வாழ்கிறார் என்று புரிந்துகொண்டிருக்கிறோம்.

விசுவாசம் நமக்குத் தருவது கிறிஸ்து என்னும் கேடகம். அவரே விசுவாசிக்கும் சாத்தானுக்கும் இடையில் நிற்கிறார். எனவே நாம் ஒருபோதும் பயப்படத் தேவையில்லை. தாவீது உணர்ந்ததைப்போல ஆண்டவர் எப்போதும் நம்மோடிருக்கிறார் (சங்.23). நாம் அவர்மீது பூரண விசுவாசம் வைத்தால் அவர் எப்போதும் நம்மைக் காப்பார்.

சர்வாயுத வர்க்கத்தின் ஆறு பகுதிகளையும் தனித்தனியாக ஆராய்ச்சி செய்ததன் மூலம் நாம் தெரிந்துகொள்வது ஒவ்வொன்றின் மூலமாகவும் இயேசு தமக்குச் சொந்தமானவர்களை எப்படிக் காக்கிறார் என்று காட்டுகின்றன. நம்முடைய பொறுப்பு நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும், அசைவிலும் நம் முழு நம்பிக்கையையும் இயேசுவின்மீது வைக்கவேண்டும் என்பதே!

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்