சத்தியவசனம் பங்காளர் மடல்

ஜனவரி-பிப்ரவரி 2012

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

நம் தேவைகளை சந்திக்கும் அன்பின் ஆண்டவர் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

சத்தியவசன ஊழியத்தை தங்கள் காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கி வரும்படியாக தேவன் தந்த பங்காளர்களுக்காகவும், சத்தியவசன பிரதிநிதிகளுக்காகவும், தொலைகாட்சி மற்றும் வானொலி ஆதரவாளர்களுக்காகவும் தேவனைத் துதிக்கிறோம். 2011ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாட்களில் விசேஷித்த காணிக்கைகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இவ்வாண்டிலும் சத்தியவசன ஊழியப்பணிகள் அனைத்தும் தடையின்றி நடக்கவும் தேவைகள் அனைத்தையும் கர்த்தர் சந்திக்கவும் வேண்டுதல் செய்ய அன்பாய் கேட்கிறோம்.

2011 டிசம்பர் கடைசி வாரத்திலும் 2012 ஜனவரி 10ஆம் தேதி வரையும் அலுவலக கட்டிடம் பராமரிப்பு வேலைகள் நடைபெற்றபடியால் எங்களோடு தொடர்புகொண்ட பங்காளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் கடிதங்கள் மற்றும் பண இரசீது அனுப்புவதிலும் தாமதங்கள் ஏற்பட்டிருந்ததைப் பங்காளர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். பிப்ரவரி மாதம் முதல் Web TV வாயிலாக தினமும் இரவு 9.00 மணிக்கு சத்தியவசன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சிகளை www.newlifetv.in என்ற இணையதள முகவரியில் காணலாம். இந்நிகழ்ச்சிகள் வாயிலாகவும் அநேகர் வேதாகமத்தைக் கற்றுக்கொள்ளவும் சத்தியத்தை அறியவும்  வேண்டுதல் செய்கிறோம்.

இவ்விதழில், புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கும் நம் அனைவரும் பிரயோஜனமடையும் வண்ணம் சுவிசேஷகர் சுசி பிரபாகரதாஸ் அவர்கள் அளித்த விசேஷித்த செய்தி இடம்பெற்றுள்ளது. தேவனுக்கு முன்பாக எவ்வாறு பரிசுத்தமாய் வாழவேண்டும் என்பதை மையமாக வைத்து டாக்டர் உட்ரோ குரோல் எழுதிய சிறப்பு செய்தி இக்கடைசி நாட்களில் வாழும் நம் அனைவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். தேவனது பாதத்தில் அமர்ந்திருப்பதே நம் வாழ்வில் எழும் பல கேள்விகளுக்கும் பதில் என்பதை தனது செய்தியில் சகோதரி சாந்திபொன்னு விளக்கியுள்ளார்கள். மேலும் ஆசீர்வாதமான குடும்பத்திற்கு கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் அளித்துள்ள ஆலோசனைகளும், சகோதரர் வசந்தகுமார் எழுதிய பயத்தின் மத்தியில் பக்தனின் மனம் என்ற தலைப்பில் எழுதிய செய்தியின் இறுதி பாகமும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் உங்கள் ஆவிக்குரிய வாழ்வைப் புதுப்பிக்கும்படி வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்