கெத்செமனே பூங்காவில்!

Dr.உட்ரோ குரோல்
(மார்ச்-ஏப்ரல் 2019)

ஒவ்வொருநாளும் நாம் இயேசுவைப் பின் பற்றிச் செல்லவேண்டும். அவ்வாறு பின்பற்றின கூட்டங்களை அறிந்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு ஆராய வேண்டும். வெற்றி வீரராக எருசலேமுக்கு பவனியாக வந்த இயேசுவுடன் பகலில் ஒரு கூட்டம் ஆடலோடும் பாடலோடும் வந்தது. ஆனால் இரவில் மற்றொரு கூட்டம் கோபத்துடன் வன்முறையை எதிர்பார்த்து நகரின் வீதிகளில் வந்தது. முதல் கூட்டம் இயேசுவுடன் கூடவே இருந்து அவரை நேசித்தவர்களாவார்கள். அவரை மேசியா என்றும் ஓசன்னா என்றும் புகழ்ந்துப் போற்றினர். அம்மக்கள் அவரது மரணம் வரை அவரைப் பின்பற்றினர்.

ஆனால் இன்று நாம் அவரை வெறுத்து அழிக்க நினைத்த இரண்டாவது கூட்டத்தைப் பற்றி ஆராய்வோம். இக்கூட்டங்களைப் பின் தொடர்ந்து செல்லும்பொழுது இயேசுவைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த எண்ணங்களையும், அவர்களைப் பற்றி இயேசு அறிந்திருந்ததையும் நாம் நன்கு புரிந்து கொள்ளமுடியும்.

இயேசுகிறிஸ்துவின் வாழ்வின் இறுதிவாரத்தில் நாம் அவரைப் பின் தொடர்ந்து செல்வோமானால் அவருடைய அன்பிலிருந்து சில முக்கிய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இன்றும் அநேக வேளைகளில் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றிச் செல்லும் கூட்டத்தில் நம்மையும் ஒருவராகக் கண்டு கொள்ளலாம். ஆனால் நாம் அவருடைய சாட்சிகளாக நிற்கிறோமா அல்லது அவருக்கு துரோகம் செய்கிறோமா?

லூக்கா 22ம் அதிகாரத்தில் காணப்படும் கூட்டத்தைப் பின்தொடர்ந்து நாமும் கெத்செமெனே தோட்டத்துக்குச் செல்வோமா? அங்கு நடந்தது என்ன?

“அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான். இயேசு அவனை நோக்கி: யூதாசே முத்தத்தினாலேயா மனுஷ குமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். அவரைச் சூழ நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான். அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத் தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்” (வச.47-53).

இது ஆண்டவராகிய இயேசுவை அவருடைய சீடனான யூதாஸ் காட்டிக்கொடுத்ததை விவரிக்கிறது. இதிலுள்ள சில முக்கிய உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும்.

அது இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின இரவு. வெளியே காரிருள். கெத்செமெனே தோட்டமானது ஒலிவ மலையின் மேற்குச் சரிவில் அமைந்திருந்தது. ஒலிவ மலை எருசலேம் நகரத்துக்கு கிழக்கே அமைந்திருந்தது. எனவே ஒலிவ மலையின் மேற்குப் பகுதி யானது எருசலேம் தேவாலயப்பகுதியை நோக்கியிருந்திருக்கும். அது கெதரோன் பள்ளத்தாக்கை ஒட்டிய பகுதியாகும்.

கெத்செமனே என்பதற்கு ஒலிவ எண்ணெய் ஆலை என்று பொருள்படும். இது ஒலிவ மலையின்மேல் அமைந்திருந்தது. ஒலிவ மரத்தோப்பு இருந்ததால் அங்கு ஒலிவ மரச்செக்கு இருந்தது. இப்பொழுது இந்தத் தோட்டம் எங்கிருக்கிறது என்பது துல்லியமாகத் தெரியவில்லை.

தற்காலத்தில் கெத்செமெனே தோட்டம் என்று பல இடங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இன்று நீங்கள் எருசலேமுக்குச் செல்வீர்களெனில் இவ்விடங்களில் ஒன்றினுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். கான்ஸ்டன்டைன் அரசரின் தாயார் ஹெலினா காலத்திலிருந்து (கி.பி.325) இங்கு ஒரு ஆலயம் இருந்தது. இதுதான் கெத்செமெனே தோட்டம் இருந்த இடம் என அவர்கள் நம்பினார்கள். தோட்டம் இருந்த இடம் முக்கியமல்ல. ஆனால் அங்கே நடந்த நிகழ்வுகள்தான் முக்கியம். நீங்களும் நானும் அந்த கூட்டத்தினரோடு செல்லும் பொழுது அந்நிகழ்வு ஏன் நிகழ்ந்தது போன்ற வினாக்கள் எழுவது இயற்கையே.

வேதபகுதியை நாம் வாசிக்கும்பொழுது அந் நிகழ்வுக்கு முன்னர் நடந்த காரியங்களையும் நாம் கவனிக்க வேண்டும். அக்கூட்டம் தோட்டத்துக்கு வரும்பொழுது இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் பிதாவை நோக்கி விண்ணப்பம் பண்ணிக்கொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். பிதாவின் சித்தம் செய்ய போராடி ஜெபித்துக்கொண்டிருந்தார். அதற்குமுன்னர் அவர் தம் சீடர்களோடு ஒரு வீட்டின் மேலறையில் பஸ்கா உணவை ஆசரித்தார். இயேசு ஒரு புதிய விருந்தையும் புதிய விழாவையும் உருவாக்கினார். பழைய பஸ்கா பண்டிகைக்கு ஒரு புதிய பொருளைக் கொடுத்தார். ஆண்டவருடைய இராப்போஜனம் உருவாயிற்று. தம்முடைய சீடர்களின் கால்களை அவர் கழுவினார். அவர்களில் ஒருவன் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று முன்னறிவித்தார்.

“இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார். அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன், இயேசுவின் மார்பிலே சாய்ந்து கொண்டிருந்தான். யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன் தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ் காரியோத்துக்குக் கொடுத்தார். அந்தத் துணிக் கையை அவன் வாங்கின பின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்” (யோவான் 13: 21- 27).

யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கு முன் நடந்தவைகளை வேதாகம உரையாளரான ஹென்றிக்சன் பின்வருமாறு எழுதுகிறார். “துணிக்கையை வாங்கியபின் யூதாஸ் வெளியே சென்றான். இரவில் அவன் எங்கு சென்றான்? தன்னை கூலி பேசின பிரதான ஆசாரியர்களிடத்தில் அவன் சென்றிருந்தான். தன்னுடைய துரோகச் செயல் வெளிப்பட்டுவிடக்கூடாது என விரும்பினான். ஏனெனில் அந்நாளில் கலிலேய மனிதர்கள் அந்நகரில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட குழுமி இருந்தனர். அவர்களில் இயேசுவின் நண்பர்கள் அவரை எச்சரித்து காப்பாற்றிவிடுவார்கள் என அவன் எதிர்பார்த்தான். “சீக்கிரமாக செயல்படுங்கள்” என்று அவன் அதிகாரிகளுக்குக் கூறியிருக்க வேண்டும். “மக்கள் நடமாட்டமில்லாத இரவு நேரத்தில் செய்வது நலம். இன்று இரவே அதை செயல்படுத்துங்கள்” என்று அவன் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்திருக்கவேண்டும்.

அதிகாரிகள் அவனுக்காக காத்திருந்தனர். அவர்கள் பஸ்கா பண்டிகையை ஆசரிப்பதைவிட இயேசுவைக் கொலை செய்யும் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். இயேசுவின் இருப்பிடம் உறுதி செய்யவேண்டும். சட்ட நிபுணர்களின் குழு உருவாக்கவேண்டும். ஆசாரியர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். ஆலயக் காவலர்களுடன் ரோம போர்ச்சேவகர்கள் செல்வதற்கு பிலாத்து அல்லது ரோம அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். சனகெரிப் சங்க உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை தரவேண்டும். பிரதான ஆசாரியனாகிய அன்னாவை ஒதுக்கிவிடக்கூடாது. பட்டயங்கள், தடிகள் மற்றும் தீவட்டிகள் போன்றவற்றை சேகரிக்கவேண்டும். இதில் ஈடுபடும் ஒவ்வொருவரும் இரகசியத்தைக் காக்கவேண்டும். “அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான் என்று லூக்கா 22:47ல் நாம் வாசிக்கிறோம். திரளான ஜனங்கள் என்னும் சொல் ஒரு கட்டுப்பாடற்ற மக்களின் கூட்டம் என்ற பொருளைத் தருகிறது. வேதத்தின் பல பகுதிகளில் மிக அதிகமான மக்களின் சேர்க்கை என்பதைக் குறிக்க ochlos என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

“அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திர ரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர்களைச் சொஸ் தமாக்கினார். கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்”; (மத்தேயு 4:24,25) என்ற பகுதியிலும், “அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஜந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்” (மத்.14:19) என்ற ஐயாயிரம் பேரை போஷித்த சம்பவத்திலும், “திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்” (மத்.21:8) எருசலேமுக்கு அவர் பவனி வந்த பொழுதும் திரளான ஜனங்களைக் குறிக்கும் ochlos என்ற கிரேக்க பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரளான ஜனங்கள் கூட்டமாக வந்தனர். அவர்களுக்கு முன்பதாக யூதாஸ்காரியோத் இயேசுவைக் காட்டிக்கொடுக்க வந்தான். இந்த யூதாஸ் யார்? யோவான் 6:71இல் அவன் சீமோன் என்பவரது மகன் என்று வாசிக்கிறோம். ஸ்காரியோத் என்பது மற்றொரு யூதா என்ற சீடனிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட பயன்படுத்தப்பட்ட அடைமொழி. காரியோத் என்பது அவனது சொந்த ஊர். இது தெற்கு யூதாவிலிருந்த ஒரு பட்டணம். யூதாவின் பட்டணங்களில் ஒன்றாக யோசுவா 15:24 இல் குறிக்கப்பட்டுள்ளது. இஸ்- என்பது மனிதன் என்பதன் எபிரெய சொல். ஆக யூதாஸ் காரியோத் என்பதன் பொருள் கீரியாத் ஊரைச் சேர்ந்த மனிதன் ஆகும். இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் இவன்மாத்திரமே யூதேயா தேசத்தைச் சேர்ந்தவன். மற்றவர்கள் கலிலேயா தேசத்தைச் சேர்ந்தவர்கள். கெத்செமெனே தோட்டத்துக்கு வந்த திரளான ஜனங்களைத் தலைமையேற்று நடத்திவந்தவன் இவனே.

இக்கூட்டத்தில் இருந்த மற்றவர்களைப் பற்றியும் நாம் காண்போம். இக்கூட்டமானது சட்டத்துக்குப் புறம்பானதும் வெறிபிடித்ததுமாய் இருந்தது. முதலாவது பிரதான ஆசாரியர்கள். தன்னுடைய துரோகச் செயலுக்கு யூதாஸ் இவர்களையே அணுகினான். மத்.26:14-16 இதனை அறிவிக்கிறது. “அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்”.

இப்பிரதான ஆசாரியர்கள் யார்? இவர்கள் அக் காலத்தில் முதன்மையான மதத்தலைவர்களாக செயல்பட்டவர்கள். ஆலயத்தின் வழிபாட்டு முறைமைகளை நடத்தியவர்கள். சிறுமையானவர்களை ஒடுக்கி தாங்களே தேவனால் அபிஷேகம் செய்யப் பட்டவர்களாகக் கருதினர். இக்கூட்டத்தில் ஆலய காவற்காரர்களும் உண்டு. இவர்களை பிரதான ஆசாரியர்களின் மெய்க்காப்பாளர்கள் எனலாம். அடுத்து ரோம போர்ச்சேவகர்களின் கூட்டம். இவர்கள் ஆலய காவற்காரர்களுடன் இருந்திருக்க வேண்டும். ரோம தேசாதிபதியான பிலாத்துவின் அலுவலக பிரதிநிதிகளான இவர்களுக்கு மாத்திரமே ஒரு மனிதனைக் கைது செய்யும் அதிகாரம் உண்டு. யோவான் 18:3இல் போர்ச்சேவகர்களின் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏறக்குறைய 600 பேரை உள்ளடக்கியது. பிரதான ஆசாரியனின் வேலைக்காரனான மல்குஸ் என்பவனும் அதில் காணப்பட்டான். பேதுரு இவனது காதை பட்டயத்தால் வெட்டினான்.

மேலும் வேத பாரகர்கள், பரிசேயர்கள், இன்னும் ஆர்வமிக்க சில சனகெரிப் சங்கத்தின் அங்கத்தினர்களும் இவர்களுடன் கலந்திருக்கலாம். பிரதான ஆசாரியர்கள், தேவாலயத்துச் சேனைத் தலைவர்கள் மற்றும் மூப்பர்கள் யாவரும் கலந்த ஒரு கூட்டம் அத்தோட்டத்தில் காணப்பட்டது. யூதாஸ் முன்வந்து இயேசுவை முத்தமிட்டான். நட்பு மற்றும் அன்பின் பரிமாற்றத்துக்கு அடையாளம் முத்தமாகும். ஆனால் இயேசுவை அடையாளம் காணவும் அவரைக் கைது செய்து சனகெரிப் சங்கத்தினரால் விசாரிக்க பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும் யூதாஸ் முத்தத்தைப் பயன்படுத்தினான்.

அன்றிலிருந்து சபையானது, நட்பைக் காட்டும் முத்தத்தை பரிசுத்த முத்தம்; என்று அழைத்தனர். “ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.” யூதாஸ் கொடுத்தது துரோக முத்தம்!

இக்கூட்டத்துடன் நம்மை இணைத்து கெத்செமெனே தோட்டம் வரை சென்றோம். இக்காட்சிகளிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்ன? இயேசுவை விரோதிப்பவர்கள் ஒன்றாகக் கூடிக் கொள்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தவர்கள் அல்லர்; இயேசுவின் மீதிருந்த வெறுப்பு அவர்களை ஒன்று திரட்டியது. ஆனால் இயேசுவின் செயல்பாடு வேறுபட்டதாயிருந்தது. பேதுரு பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டியபொழுது இயேசு மனதுருகி அவனுடைய காதைத் தொட்டு சுகப்படுத்தினார். ஒரு வேளை அத்திரள்கூட்டம் ஒரு சண்டையை எதிர்பார்த்து போர்ச்சேவகர்களையும் தேவாலயத்து சேனைவீரர்களையும் கூட்டிச்சென்றது.

ஆனால், முன்னதாகவே கெத்செமெனே தோட்டத்தில் சண்டை நடந்தாகிவிட்டது. அது பிதாவின் சித்தத்தைச் செய்ய இயேசு நடத்திய போராட்டமாகும். “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (மத். 26:39) என்று இயேசு ஜெபம் பண்ணினார்.

கூட்டம் செயல்பட்டவிதத்துக்கும் இயேசு செயல்பட்ட விதத்துக்கும் மாபெரும் வேறுபாட்டை நாம் காண்கிறோம். இயேசு சந்தித்த இது போன்றதோர் நிலை – மற்றவர்கள் உங்களுக்கு துரோகம் இழைத்தால் – உங்களுக்கு நேரிட்டால் உங்களுடைய நிலைப்பாடு யாது? கூட்டத்தினரைப்போன்று செயல்படுவீர்களா அல்லது இயேசுவின் அன்பு வழியைக் காட்டுவீர்களா? கூட்டத்தினரைப் பின் பற்றினால் தற்காலிக புகழும் திருப்தியும் கிடைக்கும். ஆனால் இயேசுவைப் பின்பற்றினால் நித்திய ஜீவனும் பூரணநிறைவும் கிடைக்கும். கவனமாகத் தெரிந்தெடுங்கள். உங்களது எதிர்காலம் இதைப் பொறுத்தே அமையும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்