மனந்திருந்தாத கள்ளன்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மார்ச்-ஏப்ரல் 2019)

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் சத்தியவசன வாசகர்களாகிய உங்களை நான் வாழ்த்துகிறேன். இந்த நாளிலும் நாம் கற்றுக்கொள்ளும் படியாக தெரிந்துகொண்ட வேதபகுதி லூக்.23: 39-43 வரையுள்ள வசன பகுதியில் அடங்கியுள்ளது. “அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? (வச.39,40) என வாசிக்கிறோம். இந்தப் பகுதியிலேயே மீட்கப்படாத ஒரு கள்ளனைப் பற்றி நாம் சிந்திக்கப்போகிறோம்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்ட இடம் கொல்கொதா மலை என்பதை நாம் அறிவோம். அந்த மலையிலே மூன்று சிலுவைகள் நாட்டப்பட்டிருந்தது. ஆண்டவராகிய இயேசுவை நடுச்சிலுவையிலும் அவருக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலுமாக இரண்டு கள்ளர்களை சிலுவையில் அறைந்திருந்தார்கள். அந்த மூன்று பேருமே கொடிய வேதனையை சிலுவையில் சகித்துக்கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலே ஒரு கள்ளன் ஆண்டவரைப் பார்த்து இவ்வாறு சொல்கிறான்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். இது வலது பக்கத்தில் உள்ள திருடனா அல்லது இடது பக்கத்திலுள்ள திருடனா என்ற வாக்குவாதமெல்லாம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. எப்படியிருந்தாலும் நாம் சிந்திக்க இருப்பது மீட்கப்படாத ஒரு கள்ளனைப் பற்றியதேயாகும். மீட்கப்படாத திருடனுடைய வாழ்க்கையில் இருக்கிற நடு மைய பாவம் என்னவென்றால் அவிசுவாசமாகும். அவிசுவாசம் மனிதர்களை சத்தியத்திலிருந்து அல்லது உண்மையிலிருந்து அவர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி அவர்கள் கண்களைக் குருடாக்கி விடுகிறது. நாம் கற்றுக்கொள்ளுகிற முதல் காரியம் என்னவென்றால், அவிசுவாசம் கண்களை குருடாக்குகிறது. இந்த கள்ளனும் இவ்விதமான அவிசுவாசத்தோடே இருந்ததாலே ஆண்டவராகிய இயேசுவை தேவகுமாரனாக விசுவாசிக்க முடியவில்லை. இயேசுவை இரட்சகராக, இராஜாவாக விசுவாசிக்க முடியவில்லை. காரணம் அவனுக்குள்ளிருந்த அவிசுவாசம்.

அருமையானவர்களே, இன்றைக்கு நம்முடைய வாழ்விலும் அவிசுவாசம் நம்மை ஆண்டு வருகிறதல்லவா? அவிசுவாசத்தினாலேதான் ஆண்டவருடைய வசனங்களையும் வல்லமையையும் அவரது மீட்பையும் ஆசீர்வாதமான காரியங்களையும் நாம் அறிந்துகொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம். இந்த கள்ளனுக்கும் மீட்படைவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. மீட்பைக் கொடுக்கிற இரட்சகர் நடுவிலே தொங்கிக்கொண்டிருக்கிறார். மீட்பராகிய இராஜா அவனது பக்கத்திலே காண்கிற தூரத்திலே இருக்கிறார். இந்தப் பாக்கியம் அவனுக்குக் கிடைக்கக்கூடாத பாக்கியம். இருந்தாலும் அவனது அவிசுவாசம் உண்மையைப் புரிந்துகொள்ள முடியாதபடி அவன் கண்களைக் குருடாக்கிவிட்டது. “ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்” (எபி.3:!2) என்று வேதவசனம் சொல்கிறது. ஜனங்களுடைய அவிசுவாசத்தினாலே அற்புதங்கள்கூட நடைபெறமுடியாமல் போயிற்று என்று நாம் திருமறையில் வாசிக்கிறோம். அவிசுவாசம் ஆண்டவரிடத்திலிருந்து அற்புதங்களை பெறமுடியாதபடி தடுத்துவிடுகிறது. அவிசுவாசமானது தேவனுடைய உண்மைகளை முழுமையாய் புரிந்துகொள்ள முடியாதபடி நமது கண்களை அது குருடாக்கிவிடுகிறது.

இரண்டாவது இந்த கள்ளனுக்குள்ளிருந்த அவிசுவாசம், அவனை கேள்வி கேட்க தூண் டியது. லூக்.23:39 ஆம் வசனத்தில் “நீ கிறிஸ்துவானால்…” எனக் கேட்கிறான். நீ கிறிஸ்துவானால் என்ற கேள்வியை எழுப்புவதிலிருந்து, இவர் கிறிஸ்துதானோ என்ற சந்தேகமும் கேள்வியும் எழும்புவதை அறிய முடிகிறது. அவிசுவாசம் சந்தேகக் கேள்விகளை நமக்குள் எழுப்பிவிடுகிறது. நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அறிந்துகொள்ளக்கூடிய கேள்விகள் உண்டு. அவைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை. ஆனால் அதேசமயத்திலே அவிசுவாசத்தினாலே வரக்கூடிய கேள்விகள் நம்மை தவறான பாதையில் கொண்டுபோய் விடும்.

அருமையான சகோதரனே, சகோதரியே உன் வாழ்க்கையில் எழக்கூடிய ஏராளமான கேள்விகள் மீட்பைக் குறித்து, உயிர்த்தெழுதலைக் குறித்து, ஆண்டவராகிய இயேசு பிறந்த கன்னிப்பிறப்பைக் குறித்து, பரலோகத்தைக் குறித்து, ஆவியானவரின் நிறைவைக் குறித்து, ஆவியானவருடைய வரங்கள் செயல்படுகிறதைக் குறித்து என ஆயிரக்கணக்கிலே உங்களுக்கு கேள்விகள் எழலாம். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஊற்று என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் இருக்கிற அவிசுவாசம்தான். இந்த அவிசுவாசம் நீங்கிப்போவதற்கு ஒரேயொரு வழி என்ன? திருமறையை ஊன்றி கருத்தோடு திறந்த மனதோடு பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு படிக்கும்போது இந்த அவிசுவாசத்திலிருந்து விடுதலை பெறக்கூடிய வல்லமையை இயேசுவானவர் தருகிறார். ஆகவே அவிசுவாசம் சத்தியத்தை காணாதபடி, சத்தியத்தை புரிந்துகொள்ள முடியாதபடி கண்களைக் குருடாக்கி விடுகிறது. அவிசுவாசம் சத்தியத்தை உணராததினாலே சத்தியத்திற்கு விரோதமான ஏராளமான கேள்விகளை எழுப்பக்கூடிய நிலைக்கு நம்மை தள்ளிவிடுகிறது.

மூன்றாவது,நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்னவென்றால், அந்த கள்ளனுடைய அவிசு வாசத்தினாலே தனியாக மரிக்கவேண்டியது நேரிட்டது. இன்னொரு பக்கத்தில் இருந்த கள்ளனைப் பார்த்தால் அவன் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டான், அர்ப்பணித்தான், அவருடைய மரணத்திலே ஆண்டவரோடு இணைந்து மரிந்தான். ‘இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்’ என்று ஆண்டவர் அவனுக்கு வாக்குக்கொடுத்தார். அவன் மடிந்தான்; ஆனால் தனியாக அல்ல, ஆண்டவரோடு இணைந்து அர்ப்பணித்தவனாய் மரித்தான். ஆனால் மனந்திருந்தாத கள்ளன், அவனது அவிசுவாசம் அவனை தனியாக மடிய வைத்தது. கிறிஸ்து இல்லாமலும் அல்லது அவருக்கு தன்னை அர்ப்பணம் செய்யாமலும் இருந்தபடியால் அவன் தனியாக மரிக்க நேர்ந்தது.

மனந்திரும்பாத கள்ளனிடத்தில் இருந்த மூன்று காரியங்கள்:

அவிசுவாசம் சத்தியத்தை காண முடியாதபடி நம்முடைய கண்களை குருடாக்கி விடுகிறது.

அவிசுவாசம் சத்தியத்திற்கு விரோதமான கேள்விகளை எழுப்பிவிடுகிறது.

அவிசுவாசம் ஆண்டவரோடு இணைந்து வாழாமலும் அர்ப்பணிக்க முடியாமலும் தனியாக மரிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளி விடுகிறது.

இப்படிப்பட்ட நிலை நம்மிலே காணப்படுகிறதா? ஆண்டவருக்கு நம்மை அர்ப்பணித்து விசுவாசத்தோடு வாழுவோம். ஆண்டவர் நித்தியத்திற்கு நேராய் நம்மை சரியாய் நடத்துவார்.

சத்தியவசனம்