நன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்!

சகோ. கே.பழனிவேல் ஆபிரகாம்
(மார்ச்-ஏப்ரல் 2019)

“ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” (எபி, 12:24).


உலகத்தில் இதுவரை எத்தனையோ மகாத்துமாக்கள், அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. அதினாலே, ஜனங்களுக்குப் பாவ நிவிர்த்தியோ, எந்த விதமான புண்ணியமோ அல்லது நன்மைகளோ ஏற்பட்டதில்லை, அதற்குப் பதிலாக பகையும், கலகமும், விரோதங்களும், பிரிவினைகளுந்தான் ஜனங்கள் மத்தியில் உண்டாயிருக்கிறது.

வேதாகமத்தின் அடிப்படையில் இந்த பூமியில் முதலாவது இரத்தம் சிந்தின மனிதன் ஆபேல். “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார் (எபி.11:4). ஆனால், காயீனையும் அவன் காணிக்கையையும் தேவன் அங்கீகரிக்கவில்லை. “அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. … காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலை செய்தான்” (ஆதி.4:5,8). இவ்வாறு பொறாமையினிமித்தம் காயீனினால் பூமியில் சிந்தப்பட்ட நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் பரலோகத்திலுள்ள தேவனை நோக்கித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துக்கூறியது.

காயீன் செய்த கொலை பாதகத்தினிமித்தம் தேவன் காயீனை சபித்துப்போட்டார். “இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய், நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியிலே நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்” (ஆதி.4: 11,12). இவ்வாறு ஆபேலின் இரத்த பலி காயீனுக்கு சாபத்தையும், தேவ தண்டனையையும் பெற்று தந்ததோடு அவன் பூமியிலே நிலையற்றவனாய்த் திரிந்தான்.

நம் இரட்சகரும் மீட்பருமாகிய அருமை ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் குற்றமில்லாத திரு இரத்தமும் இந்தப் பூமியில் சிந்தப்பட்டது. அவர் பாவஞ்செய்யவில்லை, அவர் வாயிலே வஞ்சனை காணப்படவும் இல்லை. அவர் இரத்தத்தைச் சிந்த வைத்த அவருடைய சொந்த ஜனங்களுக்கு அவர் எந்தவொரு தீங்கும் செய்யவில்லை. இஸ்ரவேல் தேசம் எங்கும் அவர் நன்மை செய்கிறவராய்ச் சுற்றித் திரிந்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் போதித்தார். ஜனங்களின் சகல நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கி, பிசாசின் கட்டிலிருந்து அவர்களை விடுதலையாக்கினார். பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய தேவனை வெளிப்படுத்திக்காட்டினார். ஆனாலும், அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டினார்கள், அவருடைய அற்புதக் கிரியைகளையும், அவரது சத்திய வார்த்தைகளுக்கு ஜனங்கள் செவி கொடுப்பதையும், கீழ்ப்படிவதையும் கண்டு பொறாமையடைந்த மார்க்க வைராக்கியம் கொண்ட யூதத்தலைவர்கள், ஜனங்களின் மனதைத் திருப்பி, அவர் தேவ தூஷணம் சொன்னதாகக் குற்றப்படுத்தி அவரை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள் (மத்.26:65, 66).

“அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு… திறவாதிருந்தார்” (ஏசா.53: 7). இயேசுகிறிஸ்து தன் பிதாவை நோக்கி வேண்டிக்கொண்டால், பிதாவானவர் 12 லேகியோனுக்கு அதிகமான தூதர்களை அனுப்பித் தன் குமாரனை விடுவித்திருக்க முடியும். ஆனால், இயேசுகிறிஸ்துவோ தன்னுடைய உரிமையையும் வல்லமையையும் கையில் எடுக்கவில்லை. முன்னறிவித்த வேதவாக்கியம் நிறைவேற, தன்னை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடு படும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார் (1 பேது.2: 23).

இயேசுவைக் கைது செய்ததிலிருந்து அவர் படிப்படியாகத் துன்புறுத்தப்பட்டார். போர்ச்சேவகனால் பிரதான ஆசாரியன் முன் அறையப்பட்டார் (யோவா.18:22). அவருடைய முகத்தில் துப்பி அவரைக் குட்டினார்கள் (மத்.26:67). இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் அவரை அடித்தார்கள் (லூக்.23:63) வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள் (மாற்கு 14:65). அவர் தன்னை அடிக்கிறவர்களுக்கு முதுகையும், தாடை மயிரைப் பிடுங்குகிறவர்களுக்குத் தன் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தார் (ஏசா. 50:6). இரத்தம் சிந்தும்படி, இயேசுவை வாரினால் அடித்தார்கள். ஒவ்வொரு சொட்டு இரத்தமும் அவர் சரீரத்தில் வேதனைப் படுத்திக்கொண்டு வெளியேறியது. “அவருக்கு அழகு மில்லை, செளந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” (ஏசா.53:2).

இயேசுகிறிஸ்து பாடுபடும்பொழுது 5 சமயங்களில் இரத்தம் சிந்தினார் என்பதை நான்கு சுவிசேஷங்களிலிருந்தும் நாம் அறியலாம்.

1. கெத்சமனே தோட்டத்தில் மிகுந்த வியாகுலத்தோடு போராடி ஜெபிக்கும்போது அவர் வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் விழுந்தது.

2. முள்முடி சூட்டப்பட்டுக் கோலினால் அவர் சிரசில் அடிக்கப்பட்டபோது.

3. வாரினால் முதுகில் அடிக்கப்பட்டபோது,

4. சிலுவையில், அவரது கைகளிலும், கால்களிலும் ஆணிகளால் கடாவப்பட்டபோது,

5. சேவகர்கள், அவரது விலாவில் ஈட்டியினால் குத்தினபோது,

இவ்வாறு வேதனையோடு சிந்தப்பட்ட இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மனுக்குலத்திற்கு சாபத்தையும், தண்டனைகளையும் பிதாவினிடத்தினின்று பெற்றுத்தரவில்லை. மாறாக, இன்றைக்கும் மாசற்ற அந்த இரத்தம் நமக்காகவும், உலகத்து ஜனங்களுக்காகவும் நன்மைகளையே அதாவது இரக்கத்தையும், மன்னிப்பையும் குறித்துப் பேசுகிறது. ஆம்! இது நமக்காகச் சிந்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் இரத்தம், இரத்தஞ் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்புண்டாகாது என்ற வேதப்பிரமாணத்தைத் தம்முடைய சொந்த இரத்தத்தையே சிந்தி, நிறைவேற்றி மனுக்குலத்தை விடுவித்தார். ஆபேலின் இரத்தம் சாபத்தையும், தண்டனையையும் கொண்டு வந்ததைப் போலல்லாமல் இயேசுகிறிஸ்துவின் இரத்தமோ எண்ணிலடங்கா நன்மைகளைக்கொண்டு வந்ததை அறிந்து தேவனை மகிமைப்படுத்தக் கடமைப்பட் டுள்ளோம். அவர் பரிசுத்த இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டதின் நிமித்தம் நமக்குக் கிடைத்துள்ள நன்மைகள் சிலவற்றை தியானிப்போம்.

1. பாவமன்னிப்பாகிய மீட்பு:

(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது (கொலோ.1:14, எபே.1:7). ஆதாமின் மீறுதலினாலும், கீழ்ப்படியாமையினாலும் மனுக்குலம் முழுவதும் பாவத்திற்குள் அடைபட்டுக் கிடந்தது. எல்லாரும் வழிதப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள். நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை என்று சங்.53:3இல் வாசிக்கிறோம். நியாயப் பிரமாணத்தை தேவனிடத்தில் பெற்ற இஸ்ரவேல் ஜனங்கள், வெள்ளாட்டுக் கடாக்களையும், இளங்காளைகளையும் தங்கள் பாவ நிவிர்த்திக்காக பலியிட்டார்கள். இவைகளினால் ஜனங்களுக்குப் பூரண இரட்சிப்போ, விடுதலையோ கிடைக்கவில்லை. காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் பாவங்களை நிவிர்த்தி செய்யவில்லை. சர்வாங்க தகனபலிகளும், பாவ நிவாரண பலிகளும் அவருக்குப் பிரியமாயிருக்கவில்லை (எபி. 10:4,6). பாவத்திலிருந்து ஜனங்களை விடுவிக்க வரப்போகும் ஒரு மீட்பருக்காகப் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் காத்திருந்தனர். காலம் நிறைவேறினபோது நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்து ‘கிருபாதார பலியாகத் தம்மையே ஈந்து’ பாவமன்னிப்பாகிய மீட்பை இலவசமாக நமக்கு ஏற்படுத்தித் தந்தார். இதற்காகத் தம்முடைய சொந்த இரத்தத்தைக் கிரயமாகச் செலுத்தினார். “தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார்” (எபி.9:12). அன்பானவர்களே, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறாதவர்களாய் இருப்பீர்களென்றால் பாவமன்னிப்பாகிய மீட்பை, உங்களுக்கு அருள இயேசுவின் இரத்தம் உங்களை வருந்தி அழைக்கிறது.

2. சமாதானம்:

இயேசுவின் இரத்தம் நம்மிடத்தில் பேசுகிற இரண்டாவது நன்மை சமாதானம்.

“அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோ.1:20). முன்னே பரத்திற்கு அந்நியராயும், துர்க்கிரியைகளினாலே அவருக்குச் சத்துருக்களாயுமிருந்தோம். நம்முடைய பாவங்களே நமக்கும் தேவனுக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணினது. நாம் தேவனுக்கும் பரலோக ஆசீர்வாதங்களுக்கும் தூரமாயிருந்தோம். அவரோ நம்முடைய சமாதான காரணராகி இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து … இப்படிச் சமாதானம் பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். இப்படியாக முன்னே தூரமாயிருந்த நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானோம்” (எபே.2:14-16,13). மேலும், கிறிஸ்து தம்முடைய குற்றமில்லா இரத்தத்தைச் சிந்தி, சமாதானத்தை உண்டுபண்ணினதால் பரலோகத்திலுள்ள பிதாவாகிய தேவனோடும், அவர் வலது பாரிசத்தில் அமர்ந்து நமக்காகப் பரிந்து பேசும் குமாரனோடும், தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரோடும் நாம் ஐக்கியமானோம். இதினாலே நாம் உன்னதங்களில் உள்ள சகலவித ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் இந்தப் பூலோகத்தில் பெற்று அனுபவிக்கும்படியான சிலாக்கியம் நமக்குக் கிடைத்தது.

3. தைரியம்:

இயேசுகிறிஸ்து இரத்தஞ்சிந்தினதினால் நமக்குக் கிடைத்த மற்றொரு நன்மை தைரியம். “இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும் …. (எபி.10:19,20). இயேசு கிறிஸ்து பாடுபட்டு வேதனையைச் சகித்து உண்டு பண்ணின புதிதும் ஜீவனுமான மார்க்கத்தில் பிரவேசிக்க நாம் எதுவும் செலுத்தவேண்டிய அவசியமில்லை. அந்த மார்க்கத்திற்கு அவரே வாசலாயும், அதற்கு வழியாயும், இருக்கிறார். அதில் செல்லுவதற்கு அபாத்திரர்களான நம்மை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கி அன்பின் குமாரனின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க தைரியத்தை அளித்த தேவனை நாம் ஸ்தோத்திரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்தத் தைரியத்தைப் பெறாத பிரியமானவர்களே! இயேசு உங்களுக்காகச் சிந்தின இரத்தத்தை விசுவாசித்து, அவரை நோக்கிப் பாருங்கள். இந்தப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தின் வழியாகப் பிரவேசிக்க தேவன் நமக்கு தைரியத்தை அருளுவார்.

4. பரிசுத்தமாகுதல்:

நான்காவதாக, இயேசுகிறிஸ்து இரத்தஞ் சிந்துதலினால் நமக்கு கிடைத்த நன்மையானது பரிசுத்தமாகுதலாகும். “அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்” (எபி.13:12). தம்மால் மீட்டுக்கொள்ளப் பட்ட ஜனங்கள் பரிசுத்தத்தோடே வாழ தேவன் விரும்புகிறார். “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு வலியுறுத்திக் கூறியுள்ளார் (1 பேதுரு.1:14,15). பரிசுத்தமில்லாமல் நம் தேவனை தரிசிக்க இயலாதே! நாம் கறை, திரையற்றவர்களாய் அவர் இரத்தத்தால் கழுவப்பட்டாலொழிய, அவருடைய சமுகத்தில் நிற்பது இயலாத காரியம். நம் ஜென்ம பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தவர், அவரது சொந்த இரத்தத்தினாலே, நம்முடைய பாவக்கறைகளைக் கழுவிப் பரிசுத்தம் செய்யவல்லவராயிருக்கிறார்.

ஆகையால், அவருடைய சமுகத்திற்குச் செல்லும் பொழுதெல்லாம் நம்மைநாமே நிதானித்து அறிந்து நம்மைக் கறைப்படுத்துகிற பாவங்களையும், துர்க்கிரியைகளையும் அறிக்கை செய்து, அவருடைய இரத்தத்தினால் பரிசுத்தம் அடைவது மிகவும் அவசியமாயிருக்கிறது. “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1யோ.1:7). “இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன்” (ரோ.6:22).

5. நித்திய வாழ்வு:

ஐந்தாவதாக, இயேசுகிறிஸ்து இரத்தஞ் சிந்துதலினால் நாம் அடைந்த அளப்பெரிய நன்மையானது நித்திய வாழ்வு. நாம் என்றென்றைக்கும் அவரோடு வாழ்கின்ற பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இயேசுகிறிஸ்து நமக்கு ஏற்படுத்தி வைத்த அவருடைய பந்தி இதற்கான உறுதியையும் நம்பிக்கையையும் நமக்கு அளிக்கிறது. இதை இயேசுகிறிஸ்து இவ்வாறு விளக்கினார்: “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன் (யோவா. 6:54). அவருடைய இரத்தத்தினாலே கழுவப்பட்டு அவரது பிள்ளைகளான ஒவ்வொருவரும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளும் படியாகவும் என்றென்றும் அவரோடு வாழும் பாக்கியத்தை அடையும் படியாகவும் கடைசி நாளில் அவர்களை எழுப்புவார். எனவேதான் நாம் தவறாமல் அவரது பந்தியில் பங்குபெற வேண்டும். மேலும் இயேசுகிறிஸ்து இதைக்குறித்து எச்சரிப்பாக கூறும்போது, “நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவா-6:53) என்றார்.

இயேசுகிறிஸ்துவின் பாடு மரணங்களைக் குறித்து தியானிக்கிற இந்நாட்களில் மாத்திரமல்ல, நம் வாழ்நாட்கள் முழுவதும் அவர் நமக்காகச் சிந்தின விலையேறப்பெற்ற இரத்தத்தின் புண்ணியங்களைத் தியானித்து அவருக்குப் பரிசுத்தமுள்ள சாட்சிகளாய் விளங்குவோமாக!

“நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறி வரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசு கிறிஸ்துவைக்கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபி.13:20,21).

சத்தியவசனம்