தேவன் அமைத்த முதல் குடும்பம்

திரு.பிரகாஷ் ஏசுவடியான்
(மார்ச்-ஏப்ரல் 2019)

அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்

குடும்பம் தேவனாலே உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம்; அந்த குடும்பத்திலே தேவன் கணவனும் மனைவியும் அதாவது ஆணையும் பெண்ணையும் தேவன் தம்முடைய சாயலாகவே சிருஷ்டித்தார்; ஒருவருக்கொருவர் உதவி செய்யும்படியாக அவர் சிருஷ்டித்தார்; அவரை நாம் நம்பவேண்டும்; அவருக்கு பரிபூரணமாக அர்ப்பணித்து அவர் நமது வாழ்க்கையிலே செம்மையானதை செய்வார் என்று காத்திருக்க வேண்டும் என்று நாம் பார்த்தோம்.

தொடர்ந்து அந்த பகுதியை நாம் படிக்கும் பொழுது தேவன் ஆதாமையும் ஏவாளையும் ஒன்றாக இணைத்தபொழுது, ஏவாளை தேவன் ஆதாமிடத்திலே கொண்டு வருகிறார். கொண்டு வந்து என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. ஒருவர் சொன்னார்: ஆதாமிடத்திலே தேவன் சொன்னாராம் ”Adam Adam This is Your Medam” இதை வேடிக்கையாக பலர் சொல்லுவார்கள். ஆனால் ஆதாமிடத்திலே ஏவாளை கொண்டு வந்தபொழுது ஆதாமிடத்திலே ஒரு விதமான உணர்வு உணர்ச்சி ஏற்பட்டதன் அடிப்படையிலே ஒரு பாடகனாக மாறியிருக்கிறான்.

இதைக்குறித்து ஆதி.2:23 வசனத்தில் வாசிக்கிறோம். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமும் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி எனப்படுவாள் என்றான். தேவனாகிய கர்த்தர் தான் மனுஷரிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அதை மனுஷரிடத்தில் கொண்டு வந்தார். அப்பொழுது அவன்: நீ என் மாம்சத்தில் மாம்சமும் என் எலும்பில் எலும்புமானவள் என்று சொல்லி ஒரு பாடலாக பாடியிருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. என் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமுமானவள் என்று சொல்லி அவளை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ளுகிறான். அங்கே ஒரு உற்சாகம் காணப்படுகிறது. தேவனுடைய நோக்கம் நிறைவேறுவதற்காய் கணவனும் மனைவியும் அதாவது மனுஷனும் மனுஷியும் ஒன்றாக இணைந்து கணவனும் மனைவியுமாக குடும்ப வாழ்க்கையிலே பிரவேசிக்கிறார்கள்.

ஆதாமைப் படைத்த தேவன் ஆதாமுக்கு துணையாக ஒரே ஒரு ஏவாளைத்தான் படைத்தார். இதிலேயிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிற காரியம்; தேவனுடைய மனதிலே இருக்கிற சிந்தனை என்னவென்றால், ஒரு மனுஷனுக்கு ஒரு மனுஷி என்பதுதான் தேவனுடைய திட்டம். ஆனால் இன்றைய உலகத்திலே 21வது நூற்றாண்டிலே மக்கள் பலவித சிந்தையோடுகூட குடும்ப வாழ்க்கையைக் கறைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனுஷனுக்கு ஒரு மனுஷி.

இரண்டாவது நான் சொல்கிற காரியம், ஒரு மனுஷனுக்கு ஒரு மனுஷி என்றுதான் தேவன் படைத்தார். ஒரு மனுஷனுக்கு ஒரு மனுஷன் என்று சொல்லவில்லை. இன்றைக்கு இந்தவிதமான மனுஷ உறவுகளைச் சீரழித்து ஆணும் பெண்ணும் தங்களுடைய வாழ்க்கையைக் கறைபடுத்திக்கொள்வதைப் பார்க்கிறோம். இந்தியா தேசத்திலேகூட இப்படிப்பட்ட காரியங்கள் பரவிக்கொண்டிருக்கிற இந்த நாட்களிலே வேதாகமம் சொல்லிக்கொள்ளுகிற காரியம் இதுதான். ஒரு மனுஷனை தேவன் படைத்தார்; அவனுக்கு துணையாக ஒரு மனுஷியை அவர் படைத்தார். இரண்டு பேரையும் ஒன்றாக இணைத்தபொழுது அவன் சொல்லுகிறான்: என் எலும்பில் எலும்பும் என் மாம்சத்தில் மாம்சமும் என்று.

அதற்கு பிறகு சொல்லப்பட்டிருக்கிற காரியம் என்னவென்றால்; இதினிமித்தம் புருஷன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் (வச.24). இவைகளெல்லாம் நாம் கவனிக்கவேண்டிய ஆழமான சத்தியங்களாகும்.

இந்த வசனத்திலேயிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிற சில சத்தியங்களை நான் சொல்லுகிறேன்.

1. எப்பொழுது ஒரு வாலிபன் அல்லது வாலிப சகோதரி திருமணத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதற்கு இந்த வசனத்திலே பதில் இருக்கிறது. அவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டு பிரிந்து மனைவியோடே இசைந்திருப்பான். ஒரு முறை ஒரு வாலிபன் ஆலோசனைக்காக கடந்து வந்தான். பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக பெரியவனைப்போல் காணப்பட்டான். அரும்பு மீசை முளைக்க ஆரம்பித்திருந்தது. அவனோடுகூட நான் பேசிக்கொண்டிருக்கிறபொழுது அவன் எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது என்றான். என்ன பிரச்சனையென்றபோது, அவன் தனது தலையைச் சொறிந்துகொண்டு ஹி.. ஹி.. ஹி.. என்றான். நான் அவனைப்பார்த்து சொன்னேன். உன் பிரச்சனை ஹி.. ஹி.. ஹி.. ஆக இருக்க முடியாது, அது she.. she.. she.. ஆகத்தான் இருக்க முடியும் என்றேன். அது உங்களுக்கு எப்படித் தெரியும் என்றான். அதற்கு பின்பு பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் ஒரு வாலிப பெண்ணோடு கூட பழக ஆரம்பித்திருக்கிறான். அவளைத் திருமணம் செய்யவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. இதைப் பற்றி ஆலோசனைக்காக வந்தபொழுது பல ஆலோசனைகளை வேதத்திலிருந்து கொடுத்துவிட்டு கடைசியிலே நான் அவனிடத்திலே கேட்டேன்: தம்பி, நீ என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன். அவன் சொன்னான், எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் என்றான்.

இதை எங்கேயெல்லாம் சொல்கிறேனோ அங்கே மக்கள் சிரிப்பார்கள். நான் கேட்கிற கேள்வி நாம் ஏன் சிரிக்கவேண்டும். அவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். ஆனால் திருமணத்தைப்பற்றி யோசிக்கிறான். அவனிடத்திலே நான் சொன்ன ஆலோசனை; முதலிலே போய் உன் பாட புத்தகத்தை எடுத்து ஒழுங்காக படி என்று சொன்னேன். அடுத்து அவனிடத்திலே கேட்டேன்; தகப்பனையும் தாயையும் விட்டு நீ பிரிந்து இந்த பெண்ணோடுகூட இணைந்து குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு நீ ஆயத்தமாக இருக்கிறாயா என்று. அது இப்ப முடியாது. 10 வருஷம் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்றான். 10 வருஷம் கழித்து செய்யப்போகிற காரியத்திற்கு நீ ஏன் வீணாய் நேரத்தை செலவழிக்கிறாய். உன்னுடைய படிப்பை கெடுத்துக்கொள்ளுகிறாய் என்று சொன்னேன்.

திருமணம் எப்பொழுது நடைபெற வேண்டும்? ஒரு மனுஷன் அல்லது மனுஷி தகப்பனையும் தாயையும்விட்டு பிரிந்து தாங்கள் ஒன்றாக இணைந்து தங்கள் குடும்ப வாழ்க்கையை தனிப்பட்ட முறையிலே நடத்துவதற்கு ஒரு ஆயத்தமான ஒரு சூழ்நிலை இருக்கவேண்டும். சரீரத்திலே அப்படிப்பட்ட ஒருமனப்பாடு இருக்கவேண்டும். சமுதாயத்திலே வாழக்கூடிய ஒரு நிலைப்பாடு இருக்கவேண்டும். பண விஷயத்திலே பொருளாதாரத்திலே குடும்பத்தை நடத்தக்கூடிய தகுதி இருக்கவேண்டும். இன்னும் ஆவிக்குரிய வாழ்க்கையிலே ஒருவரோடு ஒருவர் இணைந்து ஆண்டவருக்காக சேவை செய்யக்கூடிய ஒரு தகுதி காணப்பட வேண்டும். இவையெல்லாம் முக்கியமான காரியங்களாகும்.

இதையெல்லாம் மனதில் வைத்து எப்பொழுது திருமணம் செய்யவேண்டும் என்பதை வாலிபர்களாகிய நீங்கள் சிந்திக்கவேண்டும். ஆகவே தகப்பனையும் தாயையும்விட்டு பிரிந்து மனைவியோடே இசைந்திருப்பான் என்பதில் முதலாவது நான் சொல்லுவது, அது திருமணத்திற்கான வேளையையும் காலத்தையும் தெளிவாக காண்பிக்கிறது.

இரண்டாவது, அப்படியென்றால் தகப்பனையும் தாயையும்விட்டு பிரிந்து தகப்பனையும் தாயையும் தூக்கி சாக்கடையிலே எறிந்துவிட்டு நம்முடைய குடும்ப வாழ்க்கையை நடத்திக்கொள்ளலாமா என்று சொல்லலாமா? அதற்கு வேதத்திலே ஆதாரம் இல்லை. வேதாகமத்தை நீங்கள் படிக்கும் பொழுது வேதத்தின் ஒரு பகுதியை அடுத்த பகுதியோடுகூட ஒப்பிட்டு படிக்க வேண்டும். வேதப் பகுதிகளிலே உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்று வேதம் சொல்லுகிறது. இரண்டையும் இணைத்து பார்க்கும் பொழுது அவர்களை கனம் பண்ண வேண்டும், மதிக்க வேண்டும். ஆனால் நம்முடைய குடும்ப வாழ்க்கை என்று வரும்பொழுது தனிப்பட்ட முறையிலே அதை நடத்துவதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உன்னுடைய குடும்ப வாழ்க்கை ஆசீர்வாதமானதாக இருக்க முடியும். அப்படிப்பட்ட கிருபையை தேவன் உங்களுக்கு தந்தருளுவாராக.

தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட குடும்பத்திலே உங்களில் யாராவது தகப்பனையும் தாயையும் புண்படுத்தினவர்களாக அவர்கள் மனதிலே வேதனையைக் கொடுக்கிறவர்களாக அவர்களை மதிக்காதவர்களாக இருந்தால் இந்த நாளிலே நீங்கள் மனந்திரும்பவேண்டும். அவர்கள் உங்கள் பெற்றோர்கள்; அவர்களை நீங்கள் மதிக்கவேண்டும், கனம் பண்ணவேண்டும். அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்கவேண்டும். ஆனால் கணவனும் மனைவியுமாக நீங்கள் இணைந்த பின்பு உங்களுடைய குடும்ப வாழ்க்கை ஒரு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு கணவன் ஒரு மனிதன் தன்னுடைய அம்மாவினிடத்திலே போய் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கிறான். அம்மா எனக்கு ஆகாரத்தை தாருங்கள் என்று கேட்கிறான். அவங்க சாப்பாடு போடுறாங்க, அவன் ஆபீஸ் புறப்பட்டு போகும் போது எனக்கு பஸ்ஸிற்கு பணம் கொடுங்கள் என்று கேட்கிறான், அதைக் கொடுக்கிறார்கள். செலவுக்கு பணத்தைக் கேட்கிறான், கொடுக்கிறார்கள். எல்லாம் அம்மா அப்பா கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவன் குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான். இன்னும் அவன் தன் தகப்பன் தாயினிடத்திலே போய் எனக்கு இதைக் கொடுங்கள் அதைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கியே வாழ்ந்து கொண்டிருப்பானாகில் அங்கே இருக்கிற மனைவி என்ன நினைப்பாள்? நான் ஏன் இங்கே இருக்கிறேன் எதற்காக இவரைத் திருமணம் செய்தேன் என்ற எண்ணம் வர ஆரம்பிக்கிறது. அதன் அடிப்படையிலே உருவாகிற பிரச்சனை தான் மாமியார்-மருமகள் பிரச்சனை.

நான் இன்று பல தேசங்களுக்கு போய்விட்டு வரும்போது இது இந்தியாவில்மட்டும் இருக்கிற பிரச்சனையல்ல; அகில உலகிலும் இருக்கிற பிரச்சனையாகும். உலகத்திலே எங்கே போனாலும் மாமியார் மருமகள் மாமனார் மருமகன் இப்படியான பல கதைகளைச் சொல்லுகிறார்கள்.

உதாரணமாக இதைச் சொல்லுவார்கள். ஒரு ஓய்வு நாள் பாடசாலையிலே பிள்ளைகளிடத்திலே ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். ஏன் பேதுரு இயேசுகிறிஸ்துவை மூன்று முறை மறுதலித்தார் என்று. அப்பொழுது ஒரு குழந்தை எழுந்து சொன்னதாம்; பேதுரு இயேசுகிறிஸ்துவை மூன்று முறை மறுதலிக்க காரணம் பேதுருவினுடைய மாமியாரை இயேசு சுகப்படுத்தினதினாலே என்று சொன்னதாம். இது வேடிக்கையான காரியம். ஏன் உலகத்திலே ஆதாம் ஏவாள் சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் அவர்கள் இருவருக்கும் மாமியார் கிடையாது என்று சொல்லுவார்கள். இப்படியான வேடிக்கையான கதைகளைக் கேட்கும்போது இங்கே பார்க்கிற காரியம் என்னவென்றால், கணவனும் மனைவியும் தனியாக குடும்பத்தை நடத்தக் கூடியவர்களாக இருக்கவேண்டும். தகப்பனையும் தாயையும் கனம் பண்ணவேண்டும். அவர்களை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமானால் அவர்களை கவனிக்க வேண்டும். ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கக்கூடிய ஒரு உறவு தன்னிகரற்ற உறவு! அந்த உறவிலே வேறு யாரும் பிரவேசிக்காதபடி நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆகவே, தகப்பனையும் தாயையும் விட்டு மனைவியோடே இசைந்திருப்பான்; அதின் அடிப்படையிலே சொல்லப்படுகிற இன்னொரு வார்த்தை என்னவென்றால்; ஒரே மாம்சமாயிருப்பார்கள், இரண்டு பேர் ஒரே ஆளாக மாறிவிடுவார்கள். ஆங்கிலத்திலே Two Shall be one இரண்டு பேர் ஒன்றாக மாறிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு இந்த ஒன்று என்பது யார்? மனைவி சொல்லுவாள் நான்தான் அந்த ஒன்று என்று. கணவன் சொல்லுவான் நான்தான் அந்த ஒன்று என்று. பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்கள் சொல்லுவார்கள் நான்தான் அந்த ஒன்று என்று. இதினால் ஒருவருக்கொருவர் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்களே ஒழிய நாம் இரண்டு பேரும் இணைந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அநேகருடைய வாழ்க்கையிலே இல்லை. இரண்டு பேராக இணைந்து செயல்படுவதற்காகதான் தேவன் கணவனும் மனைவியுமாக அவர்களைப் படைத்திருக்கிறார்.

ஆதி.25வது வசனத்தை வாசித்தீர்கள் என்றால் ஆதாமும் ஏவாளும் கணவனும் மனைவியுமாக இரண்டு பேரும் நிர்வாணிகளாய் இருந்தும் வெட்கப்படாதிருந்தார்கள். அதிலிருந்து நாம் பார்க்கிற காரியம் என்ன? தங்களுக்குள்ளே ஒழிவு மறைவு இல்லாத ஒரு உறவு இருந்தது அது வெறுமனே மாம்சத்திலே மாத்திரமல்ல; வாழ்க்கையிலே எல்லா சூழ்நிலையிலும் ஒளிவு மறைவு இல்லாதபடிக்கு வெளியரங்கமான ஒரு உறவு அவர்களுக்குள்ளே இருக்கவேண்டும். தன்னுடைய வாழ்க்கையிலே ஒருவருக்கொருவர் காரியங்களை மறைத்து செயல்பட ஆரம்பிப்பார்கள் என்றால் அங்கே பலவிதமான பிரச்சனைகள் குடும்பங்களிலே வந்துவிடும். ஆகவே குடும்ப வாழ்வை தேவன் படைத்தபோது உன்னுடைய குடும்ப வாழ்வை நீங்களாகவே நடத்தவேண்டும், அங்கே ஒழிவு மறைவு இருக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தைகள் இருக்க வேண்டும். உரையாடுதல் இருக்க வேண்டும்.

ஆங்கில பதத்திலே சொல்வோமென்றால் That should be Communication என்று சொல்லலாம். பல குடும்பங்களிலே ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தையே கிடையாது. குடும்பங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு கூட்டத்திலே நான் அவர்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுத்தேன். என்னவென்றால், கணவனும் மனைவியுமாக இங்கே வந்திருக்கிறீர்கள் உட்கார்ந்து கணவன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும். மனைவி கணவனுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று சொன்னேன்.

எல்லாரும் உட்கார்ந்தார்கள், சிலர் எழுத ஆரம்பித்தார்கள், சிலரால் எழுத ஆரம்பிக்க முடியவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் பக்கத்திலே நான் போய் கேட்டேன் ஏன் எழுதவில்லை என்று. ஒருவர் சொன்னார் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை என்று சொன்னார். அதே மாதிரி அந்த அம்மா சொன்னார்கள் என்ன எழுதுவதென்று தெரியவில்லை என்றார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கு கற்றுக்கொள்ளவில்லை. ஒருவருக்கொருவர் வெளியரங்கமான காரியங்களை பேசுவதற்கு கற்றுக்கொள்ளவில்லை. ஏதோ கணவர் வீட்டுக்கு வருகிறார் எதற்கு உணவு அருந்துவதற்கு, அதற்கு பின்பு டிவி பார்ப்பதற்கு, பின்னர் கொஞ்சநேரம் ஜெபித்துவிட்டு தூங்கசெல்வதற்கு. இதற்காக குடும்பவாழ்வு ஏற்படுத்தப்படவில்லை. ஒருவருக்கொருவர் உரையாடுதல் இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசவேண்டும். நான் கொடுக்கிற ஆலோசனை இந்த வேகமான யுகத்திலே நாம் போய் கொண்டிருக்கிற இந்த நாட்களிலே நேரத்தை எடுத்து உங்கள் துணை அல்லது துணைவரோடு காரியங்களை பரிமாறிக்கொள்வதற்கு உங்களையே நீங்கள் ஒப்புக்கொடுக்க வேண்டும். இப்படி ஒருவரோடு ஒருவர் பேசி ஒப்புக்கொடுக்கும்போது இரண்டு பேர் ஒருவராக செயல்படுவார்கள். ஒரே விதமான காரியங்கள் நடக்க அங்கே வாய்ப்பு உண்டு. இந்த நாளிலிருந்து இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தைச் செய்வீர்களா? இரண்டு பேரும் சேர்ந்து பேசுவோம், ஒருமனப்பட்டு கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம், கிரியை செய்வோம் என்று உங்களை ஒப்புக்கொடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.


உங்களுக்குத் தெரியுமா?

பெற்றோரின் பரிசுத்தமான வாழ்க்கையே அவர்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய சொத்து!


சிந்தியுங்கள்!

கிறிஸ்துவின் சிலுவை தேவ அன்பின் உச்சத்தையும் மனிதனின் பாவத்தின் அகோரத்தையும் வெளிப்படுத்துகிறது!

சத்தியவசனம்