ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மே-ஜுன் 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

இராஜாதி இராஜாவாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

நம் தேசத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்காக நாம் யாவரும் ஜெபித்தோம். தேவன் நமது ஜெபங்களைக் கேட்டு தேர்தல் நல்லபடியாக முடிவதற்கு கிருபை செய்தார். தற்போது மத்தியில் ஆட்சி அமைத்துள்ள அரசுக்காக நாம் தொடர்ந்து ஜெபிப்போம். நீதி நேர்மையுமாக ஆட்சி செய்யவும் பாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லவும் வேண்டுதல் செய்வோம். கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும் (சங்-85:12).

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு எழுதின பிள்ளைகளில் நல்ல மதிப்பெண்களோடு வெற்றி பெற்ற பிள்ளைகளுக்காக ஆண்டவருக்கு நன்றி கூறுகிறோம். ஒருவேளை குறைவான மதிப்பெண்கள் பெற்றும் தேர்வில் தோல்வியடைந்தும் இருக்கிற பிள்ளைகள் சோர்ந்துபோகாமல் நம்பிக்கையோடு இருப்போம். தோல்வியடைந்த பிள்ளைகள் மறுதேர்வில் வெற்றி பெறவும், தேர்ச்சி அடைந்தவர்கள் மேற்கல்விக்கான நல்ல பாடங்களை தேர்வு செய்து படிப்பதற்கும் ஆவியானவர் அவர்களுக்கு வழி காட்டுவார், துணை செய்வார். இக்கல்வியாண்டிற்குள் புதிதாய் பிரவேசித்திருக்கிற பங்காளர் பிள்ளைகள் அனைவருக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். பிள்ளைகள் படிப்பிலும் நல் ஒழுக்கத்திலும் கர்த்தருக்குப் பிரியமாயும் நடந்து கொள்வதற்கு பெற்றோராகிய ஒவ்வொருவரும் கருத்தாய் ஜெபிக்க வேண்டும். உங்களுக்காக ஜெபிக்க வேண்டிய விசேஷித்த ஜெப விண்ணப்பங்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்காக நாங்கள் பாரத்துடன் ஜெபிப்போம். இவ்வருட பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்துக்கொள்வதற்கும் நினைவூட்டுகிறோம்.

இவ்விதழில் இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்து நாடும் கிறிஸ்துவின் பிள்ளைகள் நாமும் என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்களது சிறப்புக் கட்டுரையும், தேவன் நமக்கென வைத்திருக்கும் திட்டத்தை நிறை வேற்றுவதில் நாம் காத்திருக்க வேண்டியதை விவரித்து கர்த்தருக்குக் காத்திருத்தல் என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்களும் எழுதியுள்ளார்கள். யாக்கோபு 5:14-16 வேதபகுதியை மையமாகக் கொண்டு குணமாக்குதலும் விசுவாச ஜெபமும் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப் அவர்களது புதிய வேதபாட தொடர் ஆரம்பமாகியுள்ளது, தேவன் ஒருவரே நம்மை வழிநடத்துகிறவர் என்கிற சத்தியத்தை கழுகு தன் கூட்டைக் கலைத்து என்ற தலைப்பில் சகோ. பழனிவேல் ஆபிரகாம் அவர்கள் எழுதியுள்ளார்கள். மேட்டிமையையும் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை விளக்கும் சில வழிமுறைகளையும் சகோ.எம்.எல்.பிரான்சிஸ் அவர்கள் விளக்கியுள்ளார்கள், மேலும் திரு.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் வழங்கிய குடும்பங்களுக்கான தொடர்செய்தியும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் ஒவ்வொன்றும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்