குணமாக்குதலும் விசுவாச ஜெபமும்

Dr. தியோடர் எச்.எஃப்.
(மே-ஜுன் 2019)

”உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்.5: 14-16).


இந்த மூன்று வசனங்களிலும் சில முக்கியமான சத்தியங்கள் இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு உள்ளன. இந்த வசனங்களில் விசுவாசமுள்ள ஜெபத்தின் வல்லமை வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு முக்கியமான வேதப்பகுதியைக் குறித்து தியானிக்கும்போது, வேதாகமத்தில் உள்ள இந்த வசனங்களில் எந்த மாற்றமும் சேதமும் நம்மால் செய்யப்படக்கூடாது. நாம் அவற்றில் கண்ட சத்தியங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றை அப்படியே விசுவாசித்து நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று இதில் கூறப் பட்டிருக்கிறதோ, அதன்படியே கிரியை செய்யவேண்டும்.

தேவனுடைய வார்த்தையை ஏற்று உபயோகிப்பதில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும்போது, ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு குறைபாட்டையும் சுட்டிக்காட்ட வேண்டும். இப்பகுதி கிரேக்க மூல மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்தால் மூலமொழியில் உள்ள நுட்பமான உட்கருத்துக்கள் ஆங்கிலத்தில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதில்லை. ஆங்கிலத்திலும் நல்ல மொழி பெயர்ப்புகள் உள்ளன. எனினும் இந்த வசனங்களின் முழுக் கருத்தையும் தெரிந்துகொள்ளும்படியாக மூல மொழி வசனங்களுடன் ஆங்கில மொழிபெயர்ப்புக்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்யவேண்டியது அவசியம். இந்த கருத்தை மனதிற்கொண்டு, இந்தப் பகுதியின் முதல் வசனத்தை ஆராய்வோம்.

“உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே, அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்”

இந்த வசனத்தில் நான்கு அம்சங்கள் உள்ளன.

1. வியாதிப்பட்டவன் மூப்பர்களை அழைக்க வேண்டும்.

2. மூப்பர்கள் வந்து அவனுக்காக ஜெபம் பண்ண வேண்டும்.

3. மூப்பர்கள் வியாதிப்பட்டவன்மேல் எண்ணெய் பூச வேண்டும்.

4. இவையெல்லாம் கர்த்தருடைய நாமத்தினாலே செய்யப்பட வேண்டும்.

இந்த ஒவ்வொரு பகுதியையும் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்வோம்.

1. வியாதிப்பட்டவன் மூப்பர்களை வரவழைக்க வேண்டும்?

இந்த வேதபகுதிக்குத் தவறான விளக்கம் கொடுத்து, தவறாகப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். இந்த வசனத்தில் ஜெபத்தில் குணமாக்கும் ஊழியம் நடத்தும் கூட்டங்கள் குறிப்பிடப்படவில்லை. சில பெரிய எழுப்புதல் கூட்டங்களில் பிணியாளிகளை முன் வரச்செய்து அவ்வளவு கூட்டத்தினரின் முன்பாகவும் அவர்களுக்காகவும் வேண்டுதல் செய்கின்றனர். இந்த வசனம் இப்படிச் செய்யத் தூண்டவில்லை.

இந்த வசனம் கூறுவது, ஒருவன் வியாதிப்பட்டால் சபையின் மூப்பர்களை அல்லது போதகரை அல்லது ஜெபிக்கும் தேவதாசர்களைத் தன் வீட்டுக்கு அழைக்கவேண்டும் என்பதே. அவர்கள் இவனுடைய படுக்கையின் அருகில் வர வேண்டும். கத்தோலிக்கர்களில் யாராவது மரணப் படுக்கையில் இருந்தால் பாதிரியார் வீட்டுக்கு வந்து அவனருகில் நின்று சில சடங்குகளும் அபிஷேகமும் செய்து அவனுடைய கை கால்களில் எண்ணெய் பூசி ஜெபம் செய்வார்கள். இந்த வசனம் இந்தப் வழக்கத்தையும் குறிப்பிடவில்லை. யாக்கோபு5:14ம் வசனம் படுக்கையில் இருக்கும் வியாதியஸ்தன் குணமடைந்து எழுந்திருக்க வேண்டும் என்றுதான் ஜெபிக்கும்படி மூப்பர்களை அழைத்தானேயன்றி, மரணத்துக்கு ஆயத்தப்படுவதற்காக அல்ல.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. ஒருவன் வியாதிப்பட்டால் அவன் தனக்கு மருந்து தந்து வியாதியைக் குணமாக்க ஒரு டாக்டரைத்தானே அழைக்க வேண்டும்! ஏன் மூப்பர்களை அழைக்கிறான்? அக்காலத்தில் வைத்தியர்கள் இருந்தார்கள். லூக்கா அப்படி ஒரு வைத்தியன்தான். இவன் அப்போஸ்தலனாகிய பவுலுடன் ஊழியஞ்செய்யச் செல்லும்போது அவன் தன்னுடைய மருத்துவ அறிவைச் செயல்படுத்தி ஊழியம் செய்தான்.

மூப்பர்களை அழைத்ததற்குக் காரணம் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி, பாவத்தினால் வந்தது. அங்குள்ள விசுவாசிகளின் கூட்டத்தின் ஆவிக்குரிய தலைவர்கள் இந்த மூப்பர்களே. எனவே இப்படிப்பட்ட காரியங்களுக்கு வைத்தியர் அல்ல, மூப்பர்கள்தான் அழைக்கப்படவேண்டும். மூப்பர்கள்தான் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வந்து, ஜெபித்து, தங்கள் மனம்போல் வாழ்ந்து, பாவம் செய்து, அதனால் வியாதிப்பட்டு தவிக்கிறவர்களை நல்வழிப்படுத்துவது சபை மூப்பர்களின் பணியே.

மூப்பர்கள் வியாதியஸ்தனுக்காக ஜெபிக்க வேண்டும்.

யாக்.5:14ஆம் வசனம் வியாதியஸ்தன் ஜெபம்பண்ணினதாகக் குறிப்பிடவில்லை. அவன் தான் சுகம் பெறுவதற்காக ஜெபிக்கும்படி மூப்பர்களை அழைக்கவேண்டும் என்று நினைப்பானானால் அவனுக்கு ஜெபத்தில் நம்பிக்கை உண்டு. அவனும் தன்னுடைய வியாதிக்காக ஜெபித்திருப்பான். இந்த வசனத்தில் மூப்பர்கள்மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பதால், ”சபை மூப்பர்கள் அந்த வியாதியஸ்தனுக்காக ஜெபிக்கட்டும்” என்று பொருள்.

வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்போது மூப்பர்கள் சிந்திக்க வேண்டிய காரியங்களை இந்த வசனத்தின் நான்காம் அம்சத்தைப்பற்றிச் சிந்திக்கும்போது, கவனிப்போம். கர்த்தருடைய நாமத்தினாலே செய்யப்பட வேண்டும்.

எண்ணெய் பூச வேண்டும்

யாக்கோபு மூப்பர்கள் வந்து, எண்ணெய் பூசி, வியாதிப்பட்டவனுக்காக ஜெபிப்பார்கள் என்று எழுதியபோது, யாருக்காக இந்த நிருபத்தை எழுதினாரோ, அவர்கள் இந்தப் பழக்கத்தைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்பினார்.

வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு புஸ்தகமும் ஒவ்வொரு காலத்திலும் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை தரக்கூடியது. ஏனென்றால் அவை பரிசுத்த ஆவியால் தூண்டப்பெற்று கர்த்தருடைய தாசர்களால் எழுதப்பட்டது. ஆனால் சில தனிப்பட்ட புத்தகங்கள் முதலில் எழுதப்பட்டபோது அவை குறிப்பிட்ட சில தனி நபர்களுக்காக அல்லது குழுவினருக்காக எழுதப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாக்கோபின் நிருபத்தின் முதல் அதிகாரத்தின் முதல் வசனத்தில் அது யாருக்காக எழுதப்பட்டதென்று கூறப்பட்டுள்ளது. “சிதறியிருக்கிற பன்னிரெண்டு கோத்திரங்களுக்கும்” இதிலிருந்து யாக்கோபு இந்த நிருபத்தை யூதர்களுக்காக எழுதினான் என்று அறிகிறோம்.

யூதர்களுக்காக எழுதியதால், “எண்ணெய் பூசுதல்” குறித்து விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் இது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு பழக்கம். யாக்கோபு புறஜாதியாரான மக்களுக்கு இதைப் பற்றி எழுதியிருந்தாரானால், அவர்களுக்கு இது குறித்து ஒன்றும் தெரியாததால். விளக்கம் கொடுக்க வேண்டியது அவசியமாக இருந்திருக்கும்.

மேலும் புதிய ஏற்பாட்டில் ”எண்ணெய் பூசுதல்” என்பது வேறு இரண்டு இடங்களில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய்பூசி சொஸ்தமாக்கினார்கள்” (மாற்கு 6:13). இந்தச் சூழ்நிலை- இயேசு தம் 12 அப்போஸ்தலர்களை நற்செய்தி அறிவிப்பதற்காக அனுப்பிய நேரம். அவர்களால் செய்யப்பட்ட காரியங்களைக் குறிப்பிடும்போது இது வருகிறது.

இதே நிகழ்ச்சியை மத்தேயு நற்செய்தி நூலிலும் காண்கிறோம். அதிகாரம் 10இல் அப்போஸ்தலர்களும் இஸ்ரவேல் மக்களாகிய யூதர்களிடம் மட்டும் போய் எல்லா ஊழியங்களையும் செய்யும்படி அனுப்பினார். மாற்கு 6:13இல் 12 அப்போஸ்தலர்களும் பிணியாளிகளுக்கு எண்ணெய் பூசி வியாதிகளை சொஸ்தமாக்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த புதிய ஏற்பாட்டுப்பகுதி லூக்கா 7:46 “நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமள தைலம் பூசினாள்” – இது இயேசு சீமோனிடம் கூறியது.

எண்ணெய் பூசுதல் பற்றிப் புதிய ஏற்பாட்டில் மூன்று இடங்களில் கூறப்பட்டுள்ளது. அவை 1.மாற்கு 6:13, 2. லூக்கா 7:46, 3. யாக். 5:14.

புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களில் புறஜாதியாருக்கென்று எழுதப்பட்ட புத்தகங்களில் ‘எண்ணெய் பூசுதல்’ பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கதக்கது. ஏனெனில் அவர்களுக்கு இந்த பழக்கம் அறிமுகமானதல்ல.

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் எண்ணெய் பூசுதல் ஒரு மருத்துவ முறை என்று எல்லாராலும் அறியப்பட்டிருந்தது. நல்ல சமாரியனின் உவமையில் காயம்பட்டவனின் காயங்களில் நல்ல சமாரியன் எண்ணெயும் திராட்ச ரசமும் வார்த்து காயம் கட்டியதாகக் காண்கிறோம். லூக்கா 10:30-37இல் உள்ள இந்த உவமையில் ஒரு வழிப்பிரயாணி கள்ளர் கையில் அகப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டு, அடிக்கப்பட்டுக் காயப் பட்டவனாய் ரோட்டருகே கிடக்கையில், அவ் வழியே வந்து, அவனைக் கண்டு, அவனுக்கு உதவி செய்யாமல் கடந்து சென்றவர்களைப் பற்றிப் பேசினார். எனினும் ஒரு சமாரியன் அவனைக் கண்டு அவன்மேல் மனதுருகி, தன் வாகனத்திலிருந்து இறங்கிக் கிட்டவந்து, அவனைத் தூக்கி, காயங்களைத் துடைத்து, தாகத்தைத் தீர்த்து, காயங்களில் எண்ணெயும், திராட்ச ரசமும் வார்த்து காயம் கட்டி உதவி செய்தவனைப் பற்றிப் பேசுகிறார் இயேசு (வச.34).

அந்த நல்ல சமாரியனிடம் முதலுதவிப்பெட்டி இருந்தது! அவன் அந்த மனிதனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்ச ரசமும் வார்த்தான். திராட்ச ரசத்திலுள்ள மருத்துவ குணம் கிருமி நாசினியாகக் கிரியை செய்தது. (ஒலிவ) எண்ணெய் காயத்தை ஆற்றும் மருந்தாகச் செயல்பட்டது. புதிய ஏற்பாட்டுக்காலத்தில் அநேக மருந்துகளின் மூலப்பொருளாக ஒலிவ எண்ணெய் பயன்படுத்தப்பட்டது.

காயங்களுக்கு மருந்தாக எண்ணெயைப் பயன்படுத்துதல் பழைய ஏற்பாட்டு காலத்திலும் இருந்தது. இஸ்ரவேல் தேசம் உச்சி முதல் உள்ளங்கால் வரை உடலெல்லாம் காயம் பட்ட ஒரு மனிதனுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

”உள்ளங்கால் தொடங்கி, உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும் வீக்கமும் நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும் எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது” (ஏசா.1:6). காயங்களை ஆற்ற எண்ணெய் பயன்படுத்தப்பட்டது என்று அங்கு காண்கிறோம்.

புதிய ஏற்பாட்டில் “அபிஷேகம்” என்பதைக் குறிக்க இரண்டு கிரேக்க மொழிச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை “கிரையோ”, “அலெய்போ” என்பன. “கிரையோ” என்னும் சொல் வழக்கமான அபிஷேகத்தைக் குறிக்கும். “கிறிஸ்து” என்னும் பெயர் இதிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். இதன் பொருள் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்”.

இரண்டாவது சொல் “அலெய்போ” என்பது “தேய்த்தல், பூசுதல்” என்னும் பொருளை மட்டும் தருகிறது.

புதிய ஏற்பாட்டுக்காலத்தில் கிரேக்க மொழியில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்றொடர் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ”நீங்கள் மிகவும் கவனமாகப் பூசவேண்டும்” யாக்.5:14 இல் கூறப்பட்டிருப்பதை “எண்ணெயினால் எண்ணெய் பூசுதல்”என்று கூறலாம்.

அபிஷேகம் செய்தல் என்னும் வழக்கமான பொருளுடன் யாக்கோபு இந்த வசனத்தை எழுதவில்லை. சாதாரணமாகக் காயங்களுக்குச் சிகிச்சையளிக்கும்போது “பூசுதல்” என்னும் பொருளுடன்தான் எழுதினார். யாக்கோபு பயன் படுத்திய சொல் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் உள்ள மருத்துவ மொழியில் காணப்படுகிறது. அந்த எண்ணெயே ஒரு குணமாக்கும் மருந்தாகும். எனவே அக்காலத்தில் மிகவும் பிரபலமாய் இருந்த மருத்துவ முறையைக் குறிப்பிட்டு யாக்கோபு எழுதினான் என்று அறிகிறோம். எண் ணெய் பூசுதல் அதோடு ஜெபித்தல்.

எண்ணெய் பூசுதலோடு ஜெபிக்கவும் வேண்டும். இதுதான் முதலில் செய்யப்பட வேண்டும். எண்ணெய் பூசப்பட்ட வியாதியஸ்தனுக்காக மூப்பர்கள் ஜெபிக்க வேண்டும் (வச.14).

சிலர் இந்தச் சம்பவத்திலிருந்து “தெய்வீகக் குணமாக்குதலை” கூறுகின்றனர். ஆனால் இந்த வசனம் அதை ஆதரிக்கவில்லை. எண்ணெய் ஒரு மருந்து. அது அக்காலத்தில் எல்லோராலும் பயன்படுத்தப்பட்டது. இங்கும் எண்ணெய் பூசி ஜெபிக்கவேண்டும். எனவே இங்கு மருத்துவ சிகிச்சையும் செய்யப்பட்டு, அதோடு ஜெபிக்கவும் வேண்டும் என்று காண்கிறோம். அந்த மூப்பர்கள் மருந்தினால் குணமாவதில் பூரண நம்பிக்கை வைக்கவில்லை. தேவனுடைய கிருபையும் வல்லமையும் அங்கு செயல்பட வேண்டும் என்று விசுவாசித்தான்.

யாக்கோபு 5:14 ஜெபத்துக்கும் மருந்துக்கும் உள்ள உறவை வலியுறுத்துகிறது. மக்கள் நடப்பிலிருக்கும் சிகிச்சை முறைகளையும், மருந்துகளையும் புறக்கணித்துவிட்டு ஜெபிக்கமட்டும் செய்யவேண்டும் என்பது கடவுளின் நோக்கமல்ல. அதேவேளையில் விசுவாசி மருந்தை மட்டும் உட்கொண்டுவிட்டு ஜெபிக்க வேண்டியதில்லை என்றும் கருதவில்லை.

வியாதி வந்தால் நடைமுறையில் இருக்கும் மருத்துவ உதவிகளைப்பெற்று மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும். அதேவேளையில் குணமாக்கும்படி ஆண்டவரிடம் ஜெபிக்கவும் வேண்டும். அவனுடைய நம்பிக்கை மருந்தில் மட்டுமல்ல, ஆண்டவரிடத்திலேயே இருக்க வேண்டும்.

இந்த வசனம் மருத்துவ ஊழியத்துக்கு ஒரு அடிப்படை ஆதாரமாய் இருக்கிறது. அறியப் பட்டிருக்கிற மருத்துவ சிகிச்சைகள் வியாதிப்பட்டவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அதன்பின் ஜெபிக்க வேண்டும். அப்பொழுது தேவன் அந்த நபரில் கிரியை செய்வார். அவர் வியாதியைக் குணமாக்குவார். சுகம் தருவார்.

புதியஏற்பாட்டுக் காலத்தில் இயேசுவின் அப்போஸ்தலர்களும், இயேசுவும் எண்ணற்ற வியாதியஸ்தர்களைக் குணமாக்கினார்கள். அவர்கள் எந்த மருந்தையும் பயன்படுத்தவில்லை. இது ஒரு அற்புதம். இதைச் செய்ய தேவனால் முடியும். இது இன்றும் நடைபெறுகிறது. தேவன் சுகம் கொடுக்கச் சித்தங்கொண்டால், தம் வல்லமையால் அந்த நொடியிலேயே சுகத்தைக் கொடுப்பார்.

மருத்துவ முறைகளையும் மருந்துகளையும் வியாதியஸ்தர்களுக்கும் பயன்படுத்துதல் தேவனுடைய சித்தத்துக்கு எதிரானதல்ல என்று யாக் கோபு 5:14 காட்டுகிறது. தேவனுடைய கிருபை இல்லாமல் மருந்துகள் ஒருவனைக் குணமாக்குவதில்லை. வியாதிகள் குணமாவது முழுவதும் கடவுளின் செயலே. ஒருவனுடைய உடலில் தேவன் அமைத்திருக்கும் தத்துவங்களால் இயற்கையாகவே குணமாகுதல் நடந்தாலும் சரி, அல்லது இயற்கைக்கு மாறாக மனிதனுடைய உடலில் மாறுதல்கள் ஏற்பாட்டாலும் சரி, எல்லாம் கடவுள் செயலே.

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் சுகவீனமடைந்த விசுவாசிகள் அனைவரும் சுகம்பெற்று விட்டார்களா? என்று அதிசயிப்பதுண்டு. அவர்களில் எல்லோரும் குணமடையவில்லை. விசுவாசிகள் மத்தியில் வியாதி வந்தால் அவர்கள் சுகமடைந்து விடுவார்களானால் விசுவாசிகள் மத்தியில் மரணமே வராதே! எனினும் மரணம் பாவத்தின் பலனாய் வருகிறது. ஆதாமிடமிருந்து பெற்ற பாவத் தன்மையால் ஒவ்வொருவருக்கும் மரணம் ஏற்படுகிறது. இந்தப் பாவத்தின் தன்மையைக் குறித்து ரோமர் 5:12இல் பவுல் இப்படிக் கூறுகிறார்: “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று”.

வேதாகமம் குறிப்பிடுவது, இயேசுவால் உயிர்த்தெழச்செய்யப்பட்ட லாசருவும் உலகில் இன்னும் சிலகாலம் வாழ்ந்து, மரணமடைந்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்டான். எனவே விசுவாசிகளுக்கு வியாதி வரும்போதெல்லாம் அவர்கள் குணமாக்கப்படுவதில்லை.

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்


உங்களுக்குத் தெரியுமா?

தீமையான காரியங்களை வெறுக்காதவன் ஆவிக்குரிய நல்ல காரியங்களின்மேல் பிரியம் வைக்கமாட்டான்!

சத்தியவசனம்