வருந்துகிறோம்!

Our Deep Condolence!!
(மே-ஜுன் 2019)

சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா-52:7).


அமெரிக்கா, லிங்கன் நெப்ராஸ்காவில் இயங்கி வரும் Back To The Bible பன்னாட்டு ஊழியத்தின் முன்னாள் தலைமை இயக்குநரும் வேதபண்டிதருமான அருள்திரு வாரன் வியர்ஸ்பி அவர்கள் 2019 மே 2ஆம் தேதி அன்று தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசித்தார்கள் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். அன்னாரின் குடும்பத்தினருக்கும் அவரது ஊழிய குழுவினருக்கும் சத்தியவசன ஊழியத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.

அருள்திரு வாரன் வியர்ஸ்பி அவர்கள் 1929, மே 16ஆம் தேதி அன்று அமெரிக்கா தேசத்தில் இந்தியானா மாநிலத்திலுள்ள சிகாகோவில் பிறந்தார். தனது சிறுவயதிலிருந்தே பக்தியோடு வாழ்ந்த வியர்ஸ்பி அவர்கள் தனது 16வது வயதில் பள்ளிபருவத்தின்போது, தேவ ஊழியர் பில்லிகிரஹாம் கலந்து கொண்ட வாலிபர் முகாமில் பங்குபெற்றபோது ஆண்டவருக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். அதன் பின்பு தனது 5 வருட இறையியல் படிப்பை கற்றுவந்தார். இறையியல் மாணவராக இருக்கும்போதே 1951ஆம் ஆண்டு கிழக்கு சிக்காகோ நகரில் அமைந்துள்ள Central Baptist Church இல் குருவானவராக அபிஷேகிக்கப்பட்டார். 1953ஆம் ஆண்டு Bachelor of Divinity பட்டம்பெற்றதோடு பெட்டி வாரனை திருமணம் செய்தார். 1961 முதல் 1971 வரை காவிங்டனிலுள்ள Central Baptist Church இல் குருவானவராக ஊழியம் செய்துவந்தார். 1971 ஆம் ஆண்டு புகழ்பெற்ற Moody Memorial Church இல் குருவானவராக பணியாற்றினார். அதை தொடர்ந்து Moody Bible Institute இன் President ஆக பொறுப்பேற்றார். இக்காலகட்டத்தில் இவர் ஆற்றிய இலக்கிய பணி மற்றும் Moody’s “Songs in the Night” என்ற தேசிய வானொலி நிகழ்ச்சிகளில் அளித்த செய்தியின் வாயிலாக மிகவும் பிரபலமடைந்தார். சபை சரித்திரத்தை மையமாக வைத்து எழுதின Listening to the Giants (1976) and Walking with the Giants (1980) ஆகிய படைப்புகள் இவர் சிறந்த கிறிஸ்தவ எழுத்தாளராவதற்கு அடிகோலிட்டது.

அதன்பின்பு வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் ஸ்தாபகர் தியோடர் எஃப் அவர்கள், தனது பணியைத் தலைமை தாங்கி நடத்திசெல்ல வாரன் வியர்ஸ்பி அவர்களை அழைத்தபோது தேவசித்தத்தை உணர்ந்தவராய் 1980ஆம் ஆண்டு இவ்வூழியத்திலே இணைந்து General Director ஆக பதவியேற்றார். தேவன் இவரை Back to the Bible வானெலி நிகழ்ச்சியில் வல்லமையாய் எடுத்து உபயோகப்படுத்தினார். இவரது செய்தியின் வாயிலாக உலகமெங்கும் உள்ள விசுவாசிகள் தங்களது ஆவிக்குரிய வாழ்வில் அதிக பிரயோஜனமடைந்தனர். இவரது செய்திகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேதாகமத்தின் மகத்துவத்தை அறியவும் சத்தியத்திற்கு சரியான விளக்கங்களை கற்றுக்கொள்ளவும் உதவியது. இக் காலப்பகுதியில் வானொலியில் அவர் அளித்துவந்த செய்திகள் சிறந்த தலைப்புகளில் புத்தகங்களாகவும் சிறிய புத்தக வடிவிலும் வெளிவந்தன. இவர் எழுதிய ஒவ்வொரு புத்தகத்திலும் இவர் கையாண்ட உயரிய எழுத்துநடை வாசிப்பவர்களை மேலும் மேலும் படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறதாய் இருக்கும். இப்புத்தகங்கள் உலகமெங்கும் உள்ள எல்லா சபை பிரிவினராலும் இன்றளவும் விரும்பி வாசிக்கப்படுகிறது.

1990ஆம் ஆண்டு Back to the Bible ஊழியத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் அநேக ஆவிக்குரிய தலைப்புகளில் அவர் எழுதிய புத்தகங்கள் வெளிவந்தன. இதுவரை வியர்ஸ்பி அவர்கள் 150 -க்கும் மேலாக புத்தகங்களை எழுதியுள்ளார். Be Series என்ற தலைப்பில் வேதாகமத்திலுள்ள 66 புஸ்தகங்களுக்கும் இவர் எழுதிய விளக்கவுரை சிறந்த படைப்பாக அமைந்தது. தற்போது இந்த விளக்கவுரையானது Wiersbe Bible Commentary ஆக வெளிவந்துள்ளது.

2014ஆம் ஆண்டு Back to the Bible ஊழியப்பணி தனது 75ஆம் ஆண்டை நிறைவு செய்தபோது, ஆங்கில வானொலி ஊழியத்தில் மீண்டும் வேதாகம ஆசிரியராக இணைந்து செய்திகளை வழங்கி வந்தார். ஏப்ரல் 24, 2019 அன்று Temptations, Trials and Triumphs என்ற தலைப்பில் வழங்கி வந்த தொடர் செய்தியின் இறுதி பாகத்தை வழங்கி விட்டு தனக்கு அடுத்து வேதாகம ஆசிரியராக பொறுப்பேற்கவிருந்த Rev. Bryan Clark அவர்களை வரவேற்றார். அதன்பின் மே-2 ஆம் தேதி தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசித்தார். கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது (சங்-116:15).

இவர் Pastor’s Pastor என்று ஊழியர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தேவன் தமது பணியில் வாரன் வியர்ஸ்பி அவர்களுக்குக் கொடுத்த உன்னத அழைப்பிற்காகவும் இவர் ஆற்றிய ஊழியப் பணிகளை யும் நினைவுகூர்ந்து அவரைத் துதிக்கிறோம்.

– ஆசிரியர்

சத்தியவசனம்