சகோதரி சாந்தி பொன்னு
(ஜூலை-ஆகஸ்டு 2019)

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (யோவான் 14:26).


“வசனமில்லாமல் ஆவியானவரை மிகைப்படுத்தினால் உடைந்துபோவோம்!
ஆவியானவரில்லாமல் வசனத்தை மிகைப்படுத்தினால் உலர்ந்துபோவோம்!!
ஆவியானவரையும் வசனத்தையும் ஒன்றாய்ப் பிடித்துக்கொண்டால் வளர்ந்துவிடுவோம்!!!”

இவ்வாறு ஒரு பக்தன் கூறியதாக ஒரு புத்தகத்தில் வாசித்தேன். அருமையான உண்மையான வார்த்தைகள்தான்!

பண்டிகை கொண்டாடுவோம்:

பண்டிகைகள் என்றால் யாருக்குத்தான் பிரியமில்லை! பழைய ஏற்பாட்டுகாலத்தில் கர்த்தரே பண்டிகைகளைக் குறித்த சகல ஒழுங்கு முறைகளையும், நினைவுகூரலின் நோக்கங்களையும் இஸ்ரவேலுக்குக் கற்றுக்கொடுத்து, பங்கெடுப்பவர்கள் யார் என்றும் கட்டளை கொடுத்து, அந்த தேதிகளையும்கூட குறித்து கொடுத்திருந்தார். அதில் பஸ்கா பண்டிகையும், கூடாரப்பண்டிகையும், ஐம்பதாம் நாள் சேர்ப்பின் பண்டிகையும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. முக்கியமாக பலியுடன் சம்பந்தப்படாத பண்டிகை எதுவும் இருக்கவில்லை. சபைகூடுதலும் மிக முக்கியமானதாக இருந்தது. ஆக, ஆராதனை, பண்டிகை, பலி இம்மூன்றும் ஒன்றுடோறொன்று இணைந்திருந்தன. எல்லாமே, தேவனுடைய அநாதி திட்டம் நிறைவேற்றப்பட ஆயத்தமாயிருந்த இயேசுவின் ஏகபலிக்கு முன்னோடியாகவே இருந்தது என்பதை இன்று நாம் அறிவோம்.

இன்று நமது கிறிஸ்தவ நாட்காட்டியில்கூட பல நினைவுகூரலின் பண்டிகை நாட்கள் உண்டு. அவற்றில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? கிறிஸ்துமஸ் பண்டிகைதான் என்பதை ஒரு சிறுபிள்ளைகூட சொல்லிவிடும். அந்தத் தேதியை யார் குறித்தார் என்பதெல்லாம் நாம் அறிந்த சங்கதியே. ஆனால், உயிர்த்தெழுதல் இல்லையானால் பெரிய வெள்ளியே இல்லை. இவை இரண்டும் இல்லையானால் கிறிஸ்துமஸ் பண்டிகையே இல்லை. இப்படியிருக்க முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய உயிர்த்தெழுதல் பண்டிகையை நாம் எப்படிக் கொண்டாடுகிறோம்? அடுத்தது, இயேசு பரத்துக்கு ஏறிய நாள் ஒன்று இல்லையானால், பெந்தெகொஸ்தே நாளே இல்லை. பெந்தெகொஸ்தே நாள் இல்லையானால் இன்று சபையே இல்லை. ஆக, முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டிய பெந்தெகொஸ்தே நாளுக்கு திருச்சபை கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?

சபையின் பிறந்தநாள்:

பெந்தெகொஸ்தே நாள், சபையின் பிறந்த நாள். இப்படியிருக்க, இந்த முக்கிய பிறந்த நாளுக்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவம் என்ன? ஏற்கனவே நம்முடன் இருக்கின்ற பரிசுத்த ஆவியானவரை மீண்டும், ‘வாரும் வாரும்’ என்று அழைக்கும் பாடலுடன்கூடிய ஒரு ஆராதனை மாத்திரமா! சிந்திப்போம். இன்று கிறிஸ்தவன் தடுமாறுவதற்கு முக்கிய காரணம், பரிசுத்தாவியானவரைக் குறித்து தாங்கள் நினைத்தபடி கற்பனைபண்ணி, அவருடைய பிரசன்னத்துக்கு அவனவன் விரும்பியபடி காரியங்களை நடப்பித்து, மக்களையும் தங்கள் வழியில் நடத்துவதுதான் என்றால் அதை மறுக்கமுடியுமா?

யார் இந்தப் பரிசுத்தாவியானவர்? வெறும் வல்லமையா? அவர் ஆள்தத்துவம் உள்ள ஒருவர். உலக சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை, உலகம் முடியும்வரை கிரியை செய்துகொண்டிருக்கிறவர். விசேஷமாக இன்று, புதிய உடன்படிக்கையின் பிள்ளைகளான நம்முடன் இருந்து, நாம் தேவனுக்குச் சாட்சியாக வாழவும், சாட்சி சொல்லவும், தேவனுடன் வாழவும் நம்மை நடத்துகிறவர் பரிசுத்த ஆவியானவரே. ஆக, யார் இவர்? இவர் கடவுள். இதை நாம் அறிக்கை செய்ய தவறக்கூடாது. “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொல்லிய எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” என்றார் இயேசு (யோவா. 14:26). இந்த ஒரே வசனத்திலேயே மூன்று காரியங்களைக் காண்கிறோம். ஒன்று, அவர் தேற்றுகிறவர். இரண்டு, அவர் போதிக்கிறவர். மூன்று, அவர் நினைப்பூட்டுகிறவர். ஆக, வேத சத்தியங்களை மறந்து, தேவனுடைய வழிகளை நாம் புரட்டிப் போட்டால் அதன் அர்த்தம் என்ன? நாம் பரிசுத்தாவியானவரைப் புறந்தள்ளி ஜீவிக்கிறோம் என்பதுதானே.

பிதாவாய் குமாரனாய் பரிசுத்தாவியான வராய் மூவராய் நின்று, மூன்று காலங்களிலும் மனித சரித்திரத்தில் மனிதனுடன் இணைந்து, தம்முடைய உறவினின்று வஞ்சகமாய் பிரிக்கப்பட்டுப்போன மனிதனைத் தம்முடன் மீண்டும் சேர்த்துக்கொள்வதற்காக மனிதனுடன் இடைப்பட்டுக்கொண்டிருக்கிற தேவாதி தேவன், அன்றும் இன்றும் என்றும் ஒருவரே. ஒரு தகப்பனாய் நின்று எல்லாவற்றையும் படைத்தவரும், விழுந்துபோன படைப்பை மீட்க இயேசு என்ற மனிதனாய் வந்தவரும், மாம்சத்தில் வந்த இயேசு தம் பணியை முடித்துக்கொண்டு பரலோகத்திற்குச் சென்ற பின்னர், தமது பிள்ளைகள் தனித்திருக்கமுடியாது என்றே பரிசுத்த ஆவியானவராய் தம்மை உலகுக்குத் தந்தருளினவரும், ஒருவரே. சகல சத்தியத்திலும் நம்மை வழி நடத்தி, பரிசுத்த வாழ்வில் நம்மை நிலைநிறுத்துகின்ற இந்தப் பரிசுத்த ஆவியானவரை நாம் என்ன செய்கிறோம்?

பெந்தெகொஸ்தே நாள்:

பண்டிகைகளுக்கும் சபைகூடுதலுக்கும் சமஸ்த இஸ்ரவேலும் தேவாலயத்தில் அதாவது எருசலேமில் ஒன்றுகூடவேண்டும், இது கட்டளை. பஸ்கா பண்டிகை இஸ்ரவேலுக்குரியது. அதைத் தொடர்ந்து வரும் ஏழு நாட்கள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை முடிய, ஏழு வாரங்களின் பின்னர், அதாவது அறுப்புதொடங்கியதுமுதல் ஐம்பதாவது நாள் சேர்ப்பின் பண்டிகை. இந்த நாளிலே இஸ்ரவேல் மாத்திரமல்ல, அவர்களிடத்தில் இருக்கிற யாவருமே சேர்ந்து இப் பண்டிகையைக் கொண்டாடலாம். உபாகமம் 16ஆம் அதிகாரம் இதைக் குறித்து எளிதான விளக்கத்தைத் தந்திருக்கிறது. அதைத் தொடருவது ஏழு நாட்கள் கூடாரப்பண்டிகை.

பரிசுத்தாவியானவர் பகிரங்கமாக இயேசுவின் சீஷர்களில் ஊற்றப்படவும், அவர்களை அபிஷேகித்து, அந்த நாளிலேயே ஏறத்தாழ பதின்மூன்று பாஷை பேசும் மக்கள் மத்தியிலே தேவசெய்தி அறிவிக்கப்படவும் தேவன் தெரிந்து கொண்டது பிறரும் பங்குகொள்ளக்கூடிய அந்தப் பெந்தெகொஸ்தே நாள் என்பதை நினைக்கும்போது, தேவஞானத்தை என்ன சொல்ல! அவர் தமது பிள்ளைகளை முழுவதுமாக நிரப்பினார்; அபிஷேகித்தார் என்பதே மிகப் பொருத்தமானது. ஆதியிலே இருந்த பரிசுத்தாவியானவர், இயேசுவோடு இருந்த சீஷர்களுடன் கூடவே இருந்த பரிசுத்தாவியானவர், இப்போ, சீஷர்களை நிரப்பி, அவர்களுக்கான பணிக்காக அவர்களை அபிஷேகித்து அனுப்பியது இந்த பெந்தெகொஸ்தே நாளில்தான் என்பது தெளிவு.

சீஷர்கள் வாழ்வில் பரிசுத்த ஆவியானவர்:

ஆங்காங்கே வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் இயேசுவின் அழைப்புக்கு இணங்கி அவருடைய சீஷர்களாகி, அவரோடே வாழ்ந்தார்கள். இயேசு பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, புறப்பட்டுப்போய் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி இயேசு கட்டளைகொடுத்தாலும், அவர்கள் எருசலேமிலே காத்திருக்கவேண்டியிருந்தது. அந்தப் பெந்தெகொஸ்தே நாளன்று, பரிசுத்தாவியானவர் பலத்த காற்றின் முழக்கத்துடனும், அக்கினி மயமான நாவுகளின் அடையாளத்துடனும் பகிரங்கமாக சீஷர்களிடம் இறங்கினார். அக்கினி தூய்மைக்கும், பலத்த காற்று வல்லமைக்கும் அடையாளமாயின. அந்த நாளில் பலதரப்பட்ட பாஷை பேசுகிறவர்கள் கூடியிருந்த இடத்தில், எல்லோரும் அறிந்துகொள்ளத்தக்கதாக பல்வேறு பாஷைகளில் பேசும்படி கலிலேயராகிய சீஷர்களை நிரப்பியது யார்? பரிசுத்தாவியானவரே! அன்றைய தினத்தில், ‘இவரை அறியேன்’ என்று மும்முறை மறுதலித்த பேதுரு எழுந்து நின்று, ‘இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தீர்கள்’ என்று என்ன தைரியமாகப் பேசினான்!

அந்த நாளிலே கிறிஸ்துவுக்காக எழுந்த சீஷர்களில் யோவானைத் தவிர, யாராவது சுகமாக வாழ்ந்து சுகமரணம் அடைந்தார்களா? அவர்கள் மாத்திரமல்ல, பவுலுடன்கூட கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் இரத்த சாட்சிகளாக மரிக்க நேரிட்டபோதும் அவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை. அவர்களைத் தொடர்ந்து நான்காம் நூற்றாண்டுவரைக்கும் வாழ்ந்த கிறிஸ்தவ விசுவாசிகள், தொடர்ந்து எழுந்த மிஷனெரிகள், இவர்களில் யார் பின்வாங்கினார்கள். இவர்களால் எப்படித் தங்களை உயிரையே கிறிஸ்துவுக்காய் கொடுக்க முடிந்தது? பரிசுத்தாவியானவரே அவர்களுடன் கூடவே இருந்தவர்!

மனிதனாய் வந்த இயேசுவும், பரிசுத்த ஆவியானவரும்:

படைப்பிலே இருளின்மீது அசைவாடி (ஆதி. 1:1,2) அதாவது அடைகாத்து, ஒரு புதிய சிருஷ்டியின் உருவாக்கத்தில் கிரியை செய்த ஆவியானவர், பழைய ஏற்பாடு முழுவதும் தம் மக்களைத் தமது வல்லமையால் நிரப்பி பெரிய காரியங்களைச் செய்த ஆவியானவர், பாவிகளை இரட்சிக்க உலகுக்கு வந்த இயேசுவின் பிறப்பில் ஆற்றிய பங்களிப்பு மனித அறிவுக்கு எட்டாதது. ‘பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்’ (லூக்.1:35) என்று மரியாளுக்குச் சொல்லப்பட்டது. ஆக, உலகில் இருந்த பரிசுத்த ஆவியானவர், இப்போது மரியாளின் கர்ப்பத்தில் நிழலிடுகிறார். அப்படியே, மனிதனாய் உலகில் வந்துதித்த தேவன், இயேசு என்ற முழு மனிதராய் பரிசுத்தாவியால் நடத்தப்பட்டார் என்பது நமக்குப் புதிய செய்தி அல்ல.

அதற்காக இயேசு தாம் நினைத்தபடி எதுவும் செய்யவில்லை. அவர் காத்திருந்தார், பிதாவின் கரங்களுக்குள் அடங்கியிருந்தார். முப்பது ஆண்டுகள் ஒரு தச்சனுக்கு மகனாகத் தம்மைக் காட்டிக்கொண்டு, ஒரு சாதாரண குடும்பத்திலே வாழ்ந்தவர். எந்த வித பாவமும் அறியாதவர் என்பதை எபி.4:15ம் வசனம் நமக்குத் தீர்க்கமாக எடுத்துக்காட்டுகிறது. பிதாவின் வேளை வந்தபோது, அவர் தம் ஊழியத்தைத் தம் இஷ்டப்படி ஆரம்பிக்கவில்லை. அவர் நேரே சென்றது யோவான் ஸ்நானன் ஸ்நானம் கொடுத்த யோர்தான் நதிக்கே. பாவத்திலிருந்து மனந்திரும்பி ஒரு புதிய வாழ்வு வாழ விரும்பியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது அன்றைய வழக்கம். அதையேதான் யோவானும் செய்தான். அப்படியிருக்க பாவமே இல்லாத இயேசு ஏன் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்? தடுத்த யோவானிடம் அவர் கூறியது: இப்பொழுது இடங்கொடு. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார் (மத்.3:15). அது என்ன நீதி? அது தேவனுடைய நீதி. பாவமில்லாதவர் பாவமாக்கப்பட்டு, பாவிகளுக்காகப் பலியாகப் போகும் நீதி. ஆகவே இயேசு அதன் முன்அடையாளமாக, பாவிகளாகிய மனிதருடன் தம்மை அடையாளப்படுத்துவதையே இங்கே காண்கிறோம். தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதன் முதற்படியாக இது அமைந்தது.

ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்ற போது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்றார். அதன்பின்னர் ஜெபம் பண்ணினார் என்று லூக். 3:21,22ம் வசனத்தில் வாசிக்கிறோம். இது ஒரு முக்கிய சம்பவம். அவர் ஜெபம் பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது; பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

இந்த சம்பவத்தைக் கவனித்தீர்களா? இயேசு தாம் எதற்காக அனுப்பப்பட்டு வந்தாரோ, அந்தப் பணியை ஆரம்பிக்கும்போது, நான் பரிசுத்தர் என்று தள்ளி நிற்காமல் பாவிகளோடு தம்மை அடையாளப்படுத்தி, ஜெபித்து ஒப்புக்கொடுத்தபோது, பரிசுத்தாவியானவர் ரூபங்கொண்டு, ஒரு புறாவாக அங்கே அவர்மேல் இறங்கி அவருடைய பணிக்கென்று அவரை நிரப்புகிறார். அதேசமயம் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி, இவர் தமது நேசகுமாரன் என்று பிதா திருவுளம்பற்றுகிறார். படைப்பிலே மூவராய் நின்ற தேவன், இரட்சிப்பின் கிரியையிலும் பிதாவாய் குமாரனாய் பரிசுத்த ஆவியானவராய் நிற்கிறதைக் காண்கிறோம். இது மகா மேன்மை அல்லவா!

பரிசுத்த ஆவியானவரின் புறாவின் அடையாளம்:

ஞானஸ்நானம் எடுத்துக் கரையேறிய இயேசு ஜெபித்த பிற்பாடு பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல இறங்கியது என்ன?

அன்று ரோம அரசாட்சியிலே, ‘இந்த உலகத்தில் வாழத் தகுதியற்ற இழைஞன்’ என்று யார் தீர்க்கப்படுகிறார்களோ அவர்களுக்கே சிலுவைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆக, ஒரு இழைஞ னாவது பாவமன்னிப்பிலிருந்தும், பாவத்தின் மீது அருளப்படுகின்ற மீட்பின் வெற்றியினின்றும் விலக்கப்படக்கூடாது என்பதற்காகவே, பரிசுத்தராகிய இயேசு, தம்மை சிலுவைபரியந்தம் தாழ்த்தினார். ஆக, உலகத்தின் பாவத்தைச் சுமந்து, முழுமையான பாவபலியாக ஏகபலியாக தம்மை ஒப்புக்கொடுக்கவேண்டிய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவும், ஒரு மனிதனும் இரட்சிப்புக்குப் புறம்பாகக்கூடாது என்பதற்கும் அடையாளமாகவே இயேசு வந்தார் என்பதை உலகம் காணும்படியாக, பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல ரூபங்கொண்டு இயேசுவின் மீது இறங்கி, அவரை அபிஷேகித்ததைக் காண்கிறோம்.

பரிசுத்த ஆவியானவராலே பிறந்த இயேசு, இப்போ பரிசுத்த ஆவியானவரால் இங்கே அபிஷேகம் பண்ணப்பட்டார். முழு மனிதனாய் நமக்கு முன் மாதிரியாய் வாழ்ந்த இயேசுவே இன்று விசுவாசிகளாகிய நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.

ஞானஸ்நானம் எடுத்தவுடன் அவர் ஊழியத்தை ஆரம்பித்தாரா? இல்லை. அவர் பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே வனந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். இது என்ன? இன்று இப்படியா ஊழிய ஆரம்பங்கள் இருக்கிறது? பரிசுத்தாவியால் நிறைக்கப்பட்டால் நமக்குச் சோதனைகளே வராதா? அதன்பின்னர் தான் சோதனைகளும், வனாந்தர அனுபவங்களும் ஏராளமாய் வரும். ஆனால் வெற்றிசிறந்த ஆண்டவர் நம்முடன் இருப்பார்.

இயேசுவுக்கு நடந்தது என்ன? எந்த எதிரியைப் பகிரங்கமாகச் சிலுவையில் தோற்கடிக்க இயேசு வந்தாரோ, அவனை முதலில் தனிமையில் எதிர்கொள்ள பிதா அனுமதித்தார். அவர் அவனை வார்த்தையால் வெற்றிகொண்ட பின்னர், ‘இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார்’ என்று வாசிக்கிறோம். இப்போது, தாம் வந்த ஊழியத்தை ஆரம்பிக்க ஆவியானவரே இயேசுவைக் கொண்டுவிடுகிறார். இயேசுவின் கீர்த்தி தேசமெங்கும் பரவிற்று.

நம்மோடு பரிசுத்த ஆவியானவர்:

ஆவியின் அபிஷேகம் என்பதை இன்று பலர் பலவாறு விளக்கம்கொடுத்து, மக்களை உற்சாகப்படுத்தி, பரவசப்படுத்தி, இதுதான் அபிஷேகம் என்று சொல்லுவதைக் குறித்து நமக்கு எச்சரிப்பு அவசியம். அநாதியாய் இருக்கிற பரிசுத்தாவியானவர், படைப்பில் அசைவாடி, இன்றும் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பாவியாய்ப் போன மனிதனைத் தேவனோடு இணைக்கின்ற படிமுறையில் நின்று அவர் செயல்பட்டார். ‘இதோ! தேவாட்டுக்குட்டி’ என்று யோவான் ஸ்நானன் எவ்வாறு இயேசுவை மக்களுக்குச் சுட்டிக்காட்டினானோ, பாவத்திலிருந்து மனந்திரும்ப மனதாயிருக்கிற ஒவ்வொருவருக்கும் இரட்சகராகிய இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறவரும் பரிசுத்தாவியானவரே. எவனொருவன் ஆண்டவராகிய இயேசுவே தனது இரட்சகர் என்று ஏற்றுக்கொண்டு மறுவாழ்வுக்குள் வருகிறானோ, பரிசுத்தாவியானவர் அவனைப் பொறுப்பெடுக்கிறார். அவனுக்குள் வாழ வருகிறார். இதுவரை பாவம் செய்தவன், தன்னை நியாயப்படுத்துவான். ஆனால் இப்போ அவனுக்குள் வாழுகின்ற பரிசுத்தாவியானவர் அவனை உணர்த்தி நல்வழிப்படுத்தி, விழுந்தாலும் தூக்கிவிடவும் ஆயத்தமாயிருக்கிறார். அந்த மனிதனிலே இப்போ ஆவியின் கனி கனிய ஆரம்பமாகிறது.

இப்பூமியிலே தம் பிள்ளைகள் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகவே பரிசுத்தாவியானவர் நம் வாழ்விலே இடைப்படுவதன் முக்கிய நோக்கம், என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. ஆவியானவர் நம்மை நிரப்புவதன் முக்கிய நோக்கமே அதுதான்.

கிறிஸ்தவ வாழ்வு என்பது நாம் நினைக்கிறபடி ரோஜாப்பூக்களால் நிரம்பிய மெத்தை அல்ல. அதற்குள் ஏராளமான முட்கள் உண்டு என்பதை மறக்கக்கூடாது. ஆனால், எவனொருவன் தன்னைப் பாவி என்றுணர்ந்து, மனந்திரும்புதலுக்கு வருகிறானோ, கிறிஸ்துவினாலான புதிய உடன் படிக்கைக்கு அவன் உட்படுகிறான். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் அல்ல, கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு எவன் ஆவியிலே பிறக்கிறானோ, எவன் ஆவியானவராலே நடத்தப்படத் தன்னை ஒப்புக்கொடுக்கிறானோ அவனை ஆவியானவர் பொறுப்பேற்கிறார். பொறுப்பேற்ற ஆவியானவர், பிதாவாகிய தேவன் அவன்மீது கொண்டுள்ள அவருடைய சித்தத்தை நிறைவேற்ற அவனை நடத்துகிறார். அதற்காக பரிசுத்த ஆவியானவர் அவனை நிறைத்து அபிஷேகிக்கிறார்.

“கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததாலும், கிறிஸ் தவ சடங்காசாரங்களைப் பின்பற்றுவதாலும் ஒருவன் கிறிஸ்தவனாக முடியாது. நாம் ஆவியினாலே பிறக்கவேண்டும். ஆவியானவர் நம்மைப் புதுப்பித்து புது வாழ்க்கையிலே நடத்தவேண்டும். நமக்குள்ளே அவர் வாசம் பண்ணவேண்டும். இதுதான் விசுவாச வாழ்க்கையின் ஆரம்பம். அதோடுகூட பரிசுத்த ஆவியினால் நாம் நிறைக்கப்படவேண்டும். அபிஷேகம் பண்ணப்படவேண்டும். …ஒரு விசுவாசிக்குள்ளே பரிசுத்த ஆவியானவர் வந்து வாசம்பண்ணி, அவன் தன்னை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுத்து விசுவாசிக்கும்போது அவர் அவனை நிறைக்கிறார். இந்த அனுபவம் நம்முடைய வாழ்க்கையிலே அவசியமானது” என்று தியோடர் வில்லியம்ஸ் அவர்கள், ‘திருமறையில் தூய ஆவியானவர்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார் (பக்கம் 94).

ஒரு புற மத நம்பிக்கையிலிருந்து விடுபட்ட ஒருவன் கிறிஸ்தவனாக மனமாற்றமடையும் போது, அது வெளிப்படையான செயலாகிறது. பரிசுத்த ஆவியானவராலேதான் ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளாகிறான். ஒரு பிரத்தியேக பணிக்கென்று இயேசுவை அபிஷேகித்தபோது, ஒரு புறாவாக ரூபங்கொண்டு. இவரே எல்லா மனிதருக்குமான ஏகபலி என்று எல்லார் முன்னிலையிலும் சாட்சிபகிர்ந்த பரிசுத்தாவியானவர், தூய்மையோடும் வல்லமையோடும் இயேசுவுக்குச் சாட்சியாக நிற்கும்படி அன்று சீஷர்களை நிறைத்து சாட்சியாய் நின்ற பரிசுத்த ஆவியானவர்.

இன்று நமக்காகத் தேவன் கொண்டுள்ள சித்தத்தை நிறைவேற்ற நம்மை அபிஷேகிக்க ஆயத்தமாயிருக்கிறார். கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு பாவத்தின் கொடிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்ட ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றும் பரிசுத்த ஆவியானவர் பலத்த கிரியை செய்ய ஆவலாயிருக்கிறார். நாம் அவருக்கு இடமளிப்போமா!