உங்கள் நம்பிக்கை வீண்போகாது…

சகோ.கே.பழனிவேல் ஆபிரகாம்
(ஜூலை-ஆகஸ்டு 2019)

 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது (நீதி-23:18).


கிறிஸ்தவ வாழ்வில் தேவன் நமக்கு தரும் ஆசீர்வாதங்களில் ஒன்று “நம்பிக்கை” ஆகும். தேவனுடைய பிள்ளைகளாய் வாழும் பாக்கியத்தை நாம் பெறும்வரையிலும் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையற்றவர்களாய் வாழ்ந்தோம். இதைக் குறித்து பவுல் அப்போஸ்தலன் விளக்கும்போது, “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாய் இருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்” (எபே-2:12) என்றார்.

அழிந்துபோகும் உலகத்தின்மேலும், மனுஷர் மேலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேலும் நாம் வைக்கும் நம்பிக்கை ஒருநாளில் வீணாய் போகும் என்று வேதம் எச்சரிக்கிறது. ஆனால் கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கும் ஜனம் பாக்கியமுள்ளது, அவர்களின் நம்பிக்கை ஒருநாளும் வீண் போகாது என வேதம் வாக்களிக்கிறது. ஏனென்றால், தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்திருப்பது “ஜீவனுள்ள நம்பிக்கை” என்று பேதுரு கூறுகிறார். (1பேது-1:4) அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். அந்த நம்பிக்கை ஜீவனுள்ளது மாத்திரமல்ல, அது மகிமையின் நம்பிக்கையென பவுல் கொலோ. 1:27 இல் கூறுவதைப் பார்க்கிறோம். ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்த ஒருவன் எந்தவொரு சூழ்நிலையாயினும் அவன் அசைக்கப்பட்டுப் போவதில்லை. எனவேதான் பவுல், மரணம் நேரிடினும் நம் அன்பானவர்களை இழக்கத் தரும்போதும் நம்பிக்கையற்றவர்களைப் போல அழவேண்டாம் என கூறினார். தேவனுடைய பிள்ளைகளுக்கு மரணத்திலும் நம்பிக்கையுண்டு.

எனவேதான், தேவபிள்ளைகள் அவர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை சாத்தான் அசைத்துப் பார்ப்பான். ஏனென்றால் அதைத் தகர்த்து விட்டால் அவர்களை எளிதாக வீழ்த்தி விடலாம் என்பது அவனுடைய தந்திரமாகும். இதினால் தான் வேதாகமத்தில் நாம் பார்க்கிற அவருடைய தாசர்கள் அனைவரும் தங்கள் நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் உறுதியாயிருந்தார்கள். அவர்கள் தேவன்மேல் வைத்த நம்பிக்கை ஒரு போதும் வீண் போகவில்லை. அவர்கள் தங்கள் காரியங்கள் அனைத்திலும் நன்மையான முடிவைக் கண்டனர்.

“நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்” என எபி-3:14 இல் வாசிக்கிற படி எந்த சூழ்நிலையிலும் நமது நம்பிக்கையை இழந்துவிடாதபடி இறுதிவரை நாம் உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டும். தங்கள் நம்பிக்கையில் உறுதியாயிருந்த ஒரு சிலரைக் குறித்து இந்தச் செய்தியில் தியானிப்போம்.

ஆபிரகாம் தேவன் தனக்கு வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பினார் என்று சாட்சி பெற்றார் (ரோமர் 4:21). தேவன் தனக்குத் தந்த வாக்குத்தத்ததைச் சுதந்தரித்துக்கொள்ள ஆபிரகாம் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. அவருடைய சரீரம் செத்தாதயிருந்த போதும் சாராளுடைய கர்ப்பம் செயலற்றதாயிருந்த போதும் ஆபிரகாம் தனது நம்பிக்கையில் தளராமல் உறுதியாயிருந்தார். தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தார் (ரோமர் 4:18). அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. ஆபிரகாம் கர்த்தரிடத்தில் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், வேதாகம சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்றார். ஆபிரகாமின் ஆசீர்வாதம் இன்று கிறிஸ்து இயேசுவின் மூலமாக சுதந்தரித்துக்கொள்ளும் பாக்கியத்தை நாமும் பெற்றோம் (கலா.4:14).

எசேக்கியா இராஜாவைக் குறித்து வேதாகமம் இவ்வாறு சாட்சி கொடுக்கிறது: “அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை” (2இரா-18:5). எசேக்கியா இராஜா தேவன்மேல் வைத்திருந்த அந்த உறுதியான நம்பிக்கைக்கு சோதனை வந்தது. அசீரியா இராஜா தனது தளபதி ரப்சாக்கே வாயிலாக, “நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?” என்றும் “எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்துவிடாதே” என்றும் எசேக்கியா இராஜாவிற்கு சொல்லி அனுப்பினான். மேலும் இஸ்ரவேல் ஜனங்களிடத்தில், “கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப் பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள்” என்று ரப்சாக்கே ஜனங்களை வஞ்சிக்கப் பார்த்தான். எசேக்கியா தனது ஜனங்களிடத்தில், “அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தானே” என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள் (2நாளா-32:8).

பின்பு எசேக்கியா தேவனுடைய ஆலயத்தில் பிரவேசித்து அவரிடம் மன்றாடினான். ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தருடைய வார்த்தை வெளிப்பபட்டது. நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்று தேவன் எசேக்கியாவிற்கு வாக்களித்தார். அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள் (2 இராஜா 19:35). தன்மேல் நம்பிக்கை வைத்த எசேக்கியாவிற்காக தேவன் யுத்தம் பண்ணினார். அவன் தேவன் மேல் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. தம்மை நம்பினவர்களை தேவன் ஒருபோதும் கைவிடுவதில்லை. எனவே அருமையானவர்களே, நீங்களும் இவ்வாறான சூழ்நிலையிலிருந்தால், சோர்ந்துபோகாமல் அவரிடம் நம்பிக்கையாயிருங்கள். நம்மால் செயல்படுத்தமுடியாத காரியங்களையும் கர்த்தர் செயல்படுத்துவார்.

பவுல் அப்போஸ்தலனும் இவ்வாறான அனுபவத்திற்குள்ளாக கடந்து சென்றார். 2 கொரி 1:8-10இல் ஆசியாவில் தனக்கு நேரிட்ட உபத்திரவத்தை நினைவுகூருகிறார். பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. நாங்கள் எங்கள் மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத் தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம். நாம் நம்பியிருக்கின்ற தேவன் அவர் மரித்தோரை எழுப்புகிறவர். எப்பேர்பட்ட பாரமான வருத்தமும் துன்பமும் நமக்கு நேரிட்டாலும், அவர்மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை வீண் போகாது. இதுவரை நம்மை தப்புவித்தவர், இப்பொழுதும் தப்புவிக்கிறார், அவர் இனியும் தப்புவிப்பார். அவர் நம்மை, “திராணிக்கு மேலாக… சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1கொரி.10:13).

எனவே மிதமிஞ்சின பாரமோ கஷ்டங்களோ சோதனைகளோ நமக்கு வரும்போது நம்பிக்கையை இழப்பதற்காக அல்ல, அவைகள் நாம் நம்பிக்கையிலே பெருக தேவன் தரும் தருணங்களாக அமைகிறது. உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும், உண்டாக்குகிறது (ரோமர் 5:3).

இதை வாசிக்கும் அருமையான தேவ பிள்ளைகளே, நிச்சயமாகவே முடிவு உண்டு; உங்கள் நம்பிக்கை வீண்போகாது (நீதி-23:18).


நினைவுகூருங்கள்

பாவம் நமக்கு கசப்பானதாக இருந்தால்தான் கிறிஸ்து நமக்கு இனிமையானவராய் இருப்பார்!

சத்தியவசனம்