வாழ்வு தரும் வழி

My Favorite Verse
Dr.வாரன் வியர்ஸ்பி
(ஜூலை-ஆகஸ்டு 2019)

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு (சங்.16:11).


சிக்காகோ நகரின் இறையியல் கல்லூரி விடுதியின் ஓர் எளிமையான அறையில் பத்தொன்பது வயதான மாணவனாக, வீட்டைப் பிரிந்த துயரத்துடனும் பயத்துடனும் அமர்ந்திருந்தேன். மூன்று வருட கிறிஸ்தவனாக இருந்தபொழுது, ஊழிய அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வட பாப்திஸ்து இறையியல் கல்லூரியில் ஐந்து ஆண்டு படிப்புக்குச் சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகள்! முதல் பருவத்தையே முடிப்பேனா என்ற அச்சம் உண்டானது. பாடங்கள் எனக்கு கடினமாகத் தோன்றவில்லை; ஏனெனில் நான் நன்றாகப் படிக்கும் மாணவன். ஆனால் வீட்டிலிருந்து ஐம்பது மைல் தொலைவில் ஒரு புதிய சூழலைப் பழகுவது துன்பமாகத் தோன்றியது. சிக்காக்கோ மாநகரின் நடுவில் அக்கல்லூரி இருந்தாலும், என்னைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும் தனிமை உணர்வு என்னை வாட்டியது.

என்னுடைய சிறிய மேசையின் முன் அமர்ந்து புதியதாக வாங்கியிருந்த உடனொளிர்வு விளக்கின் சிகப்பு மற்றும் கருப்பு பொத்தான்களை அமுக்கினேன். கல்லூரி கட்டிடத்தின் வெளியே உள்ள சாலையில் மக்கள் போவதும் வருவதுமாக இருந்ததை ஜன்னலின் வழியே கவனித்தேன். அவர்கள் இக்கல்லூரி மாணவர்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். தாங்கள் செய்வது என்னவென்றும், எங்கு செல்வது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தனர். ஆனால் நானோ என்னை நொந்துகொண்டு அவ்வறையில் அமர்ந்திருந்தேன்.

ஒரு கிறிஸ்தவன் சோர்வுற்று இருக்கும் வேளையில் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க வேண்டும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே நான் சிக்காகோவில் புதிதாக வாங்கியிருந்த ஸ்காஃபீல்டு குறிப்பு வேதாகமத்தை திறந்தேன். அப்பொழுது பின்வருமாறு ஜெபித்தேன்.

“பிதாவே, நான் என் வீட்டிலிருந்திருக்க வேண்டும். ஆனால் நீர் என்னை இங்கு அழைத்து வந்தீர். உம் உதவியோடு நான் இங்கிருந்து கொள்கிறேன். உம் வார்த்தையை நான் அறிவிக்கவேண்டுமெனில், நீர் எனக்கு போதித்து என்னை ஆயத்தப்படுத்தும். நான் தொடர்ந்து செல்வதற்கு உம் வசனத்திலிருந்து எனக்கு சில வாக்குறுதிகளைத் தாரும்”.

என்னுடைய வேதத்தைத் திறந்தபொழுது சங்கீதம் 16-இன் பக்கம் காணப்பட்டது. அதில் 11ஆம் வசனம் என் கவனத்தை ஈர்த்தது. ஜீவ மார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. தேவன் தந்த வசனத்துக்காக அவரை நான் நன்றியுடன் துதித்தேன். தேவன் என் ஜெபத்தைக் கேட்டார். இதுவே அவர் எனக்குத் தரும் வாக்குறுதி என்பதை அறிந்துகொண்டேன்.

அன்று மாலை இவ்வசனத்தை நான் மனனம் செய்துகொண்டேன். அன்றிலிருந்து அது என்னை ஊக்கப்படுத்தும் ஒரு தேவசெய்தியாக அமைந்துவிட்டது. தங்களை தேவனுக்கு அர்ப்பணித்த அனைவருக்கும் இவ்வசனம் மூன்றுவித உத்தரவாதத்தை அளிக்கிறது. விசுவாசத்தோடு தேவனை நாம் பின்பற்றுவோமானால் அவருடைய வழியில், தேவபிரசன்னத்தில், தேவனுடைய மகிழ்ச்சிக்காக வாழ்கிறோம் என்பது நிச்சயம்!

தேவனுடைய வழியில் வாழ்தல்:

“ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்”

இவ்வசனம் என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்துகிறது. ஏனெனில் நான் நடக்க வேண்டிய குறிப்பிட்ட பாதை ஒன்று உண்டு. நான் கீழ்ப்படிய ஆயத்தமாயிருந்தால் அப்பாதையை அவர் காட்டுவார். இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்? ஆனால் இன்று தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கென்று வைத்திருக்கும் வாழ்வின் திட்டத்தில் மக்கள் கேள்வி எழுப்புவது நாகரிகமாகிவிட்டது. கிறிஸ்தவ வாழ்விலும் பணியிலும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய வாக்குறுதியை நான் சந்தேகப்பட வாய்ப்புகள் எழவில்லை. என் வாலிப வயதில் திடப்படுத்தல் வகுப்பின்பொழுது எபேசியர் 2:8-9 ஐ மனப்பாடம் செய்தேன். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.

சில ஆண்டுகள் கழித்து வசனம் எபேசி.2:10 என்னை உற்சாகப்படுத்தியது. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். கடந்த ஆண்டுகள் முழுவதும் தேவன் எனக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறவைகளுக்கு என்னைத் தகுதியாக்க அவரை நான் நம்பினேன். அவரும் என் வாழ்வில் அவரது திட்டங்களை நிறை வேற்றித்தர உண்மையுள்ளவராய் இருந்திருக்கிறார்.

நான் நடந்து செல்லும் வழியை எல்லா வேளைகளிலும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் நான் பாதை மாறும்பொழுது என் பிதா என்னைக் கண்டித்துத் திருத்தியுள்ளார். நான் அவருடைய சித்தத்தைச் செய்ய விரும்பும் பொழுது என் பிதா தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்த ஆயத்தமாய் இருக்கிறார் என்பதை நான் கற்றுக்கொண்டேன். அவர் என்னுடன் விளையாடுபவரல்லர். நான் கீழ்ப்படிவதற்கு அதனை கஷ்டமாக்குபவருமல்லர். என் வாழ்வின் பாதையில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை உருவாக்க நானே காரணமாய் இருந்திருக்கிறேன் என்பதை நன்கு அறிந்து கொண்டேன்.

தேவனுடைய பாதையை அறிந்துகொள்ளும் முதல்நிலை, விசுவாசத்தில் அவருடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிய விரும்புவதே ஆகும். “அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்” (யோவான் 7:17). ஆனால் தேவனுடைய சித்தத்தை அறிவது என்பது ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையை தியானித்து, ஜெபித்து ஆராதனை செய்ய நேரம் ஒதுக்குவது என்ற பொருளையும் உள்ளடக்கியது. ஆவிக்குரிய வாழ்வில் இந்த ஒழுங்கினை இன்றளவும் கடைப்பிடிக்க எனக்கு உதவிய என் இறையியல் கல்லூரி அறை நண்பருக்கு நான் நன்றியுடையவனாயிருக்கிறேன். வேதாகமம், ஜெபம், ஆராதனை இவற்றை ஒதுக்கிவிட்டு தேவனுடைய வழியைக் காண முயலும் மனிதர்கள் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகின்றனர். ஒவ்வொரு நாளும் தேவனுடனான உறவில் நான் நேரத்தை செலவிடும்பொழுது, அவரும் எனக்கு தமது வழியைக் காட்டுவது அவரது இரக்கத்தின் செயலேயாகும்.

என்னுடைய பயிற்சி ஆண்டுகள் முழுவதும் அவர் என்னை வழிநடத்தினார். ஓர் ஊழியக்காரன் எதிர்பார்க்கும் நல்ல மனைவியாக அமையும் பெண்ணையும் எனக்குக் காண்பித்தார். எங்கள் இருவரையும் தனியாகவும் குடும்பமாகவும் ஊழியத்தின் முடிவுகளை எடுக்கவும் உதவி செய்தார். நாங்கள் மூன்று ஆலயங்களிலும் இரு சபை சார்ந்த ஊழிய நிறுவனங்களிலும் பணியாற்றினோம். எங்களுடைய கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்பொழுது அவர் எங்கள் குடும்பத்தை வழிநடத்தி பாதுகாத்து வந்ததைக் கண்டு அவரைத் துதிக்கிறோம். நாங்கள் உண்மையாய் அவருடைய பாதையைத் தேடி வாழும்பொழுது அவர் எங்களை இரக்கமாய் ஆசீர்வதித்திருந்தார். எங்களுடைய வாழ்வின் வழியில் பள்ளத்தாக்குகளும் புயல்களும் காணப்பட்டன. ஆனால் தேவன் அவைகளை எங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் ஊழியத்தின் உயர்வுகளுக்கும் மாற்றிக் கொடுத்தார்.

தேவனுடைய வழியில் நடப்பது சிலவேளைகளில் தனிமையுணர்வைத் தருவதை உணர்ந்திருக்கிறேன். நான் நீண்ட தூரம் நடக்கும் பொழுது வழி குறுகலாக மாறுவதையும் தேவன் என்னிடத்தில் அதிகம் எதிர்பார்ப்பதையும் அறிந்தேன். சில நண்பர்கள் என்னுடன் நடக்க மறுத்துவிட்டனர். ஆனால் அப்பொழுது வழி அதிக வெளிச்சமாக மாறியதைக் கண்டுள்ளேன். “நீதி மான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்” (நீதி.4:18). தேவன் என்னுடன் எப்பொழுதும் இருக்கிறார். அவருடைய வழி வாழ்வு தரும் வழியாகும். அது நிறைவுள்ளதும் கனி நிறைந்ததாயும் இருக்கும். தேவனுடைய வழியில் நான் வாழும் பொழுது அவரது சித்தத்தை உண்மையாய்த் தேடி அதைச் செய்ய விரும்பும்பொழுது அவர் என்னை எப்பொழுதும் வழிநடத்துகிறார்.

தேவனுடைய சமுகத்தில் வாழ்தல்

“உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்”

நான் மனந்திரும்பிய பதினாறாவது பிறந்த நாளைக்கு சில தினங்களுக்குமுன்வரை எனக்கு தேவ சமுகத்தைப் பற்றி அதிகம் தெரியாது. உள்ளுர் உயர்நிலைப்பள்ளி ஒன்றின் அரங்கத்தில் கிறிஸ்துவுக்கு வாலிபர் சங்கம் நடத்திய கூட்டத்தில் சுவி.பில்லி கிரகாம் என்பவர் பேசினார். யாவரும் நான் ஒரு கிறிஸ்தவன் என்று நினைத்துக் கொண்டனர். நான் ஆலயத்துக்கும் ஞாயிறு பாடசாலைக்கும் தவறாமல் சென்றுவந்தேன். வாலிபர் கூட்டத்திலும் உற்சாகமாய்ப் பங்கெடுத்தேன். திடப்படுத்தலும் பெற்றுக்கொண்டேன். ஆனாலும் நான் ஒரு பாவி என்பதை அறிந்தேன். அன்று இரவு இரட்சகருக்கு என்னை அர்ப்பணித்தேன். கர்த்தரின் பிரசன்னத்தை என்னுள்ளே நான் உணர்ந்தேன். அவருடைய பிரசன்னத்துடன் அதிக மகிழ்ச்சியை அனுபவித்தேன்.

அந்நாளில் என்னுள்ளத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததை அறிந்தேன். எனக்கு பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கவும் படிக்கவும் அதிகமான ஆவல் எழுந்தது. தேவனுடைய வார்த்தையின் மூலமாகவே தேவனுடைய பிரசன்னம் எனக்கு புரிந்தது. எங்கள் ஆலயத்தின் பெரியவர்கள் ஓர் இல்ல ஐக்கியத்தையும், வேத ஆராய்ச்சியையும் ஜெபத்தையும் ஆரம்பித்தனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நான் என்னுடைய வேதாகமத்துடன் அங்கு சென்று எபிரெய புத்தகத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். ஒரு புதிய விசுவாசிக்கு அதிலும் இளைஞனான எனக்கு அது சிறந்த ஆன்மீக ஆகாரமாக அமைந்து அதிக நன்மையைக் கொண்டுவந்தது.

சங்கீதம் 16:11இல் காணப்படுவதுபோல் இந்த பரிபூரண ஆனந்தத்தை அனுபவிப்பதனாலேயே தேவனுடைய சமுகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகள் எப்பொழுதுமே சாதகமாக அமையும் என்றும், அனைத்தும் நமது விருப்பப்படியே நடந்தேறும் என்றும் சொல்ல முடியாது. நாம் துன்பத்துக்கு நீங்கலாவோம் என்றும் அழுகைக்கு இடமில்லை என்றும் கூற முடியாது. ஆனால் நமது இருதயத்தின் மகிழ்ச்சியானது தேவனிடமிருந்து மட்டுமே வரும். வேறு எதுவும் அதனைத் தரமுடியாது. எனவேதான் அப்.பேதுரு அதனை “சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷ முள்ளவர்களாய்” (1பேது.1:8) என்று அழைக்கிறார்.

இந்த சந்தோஷத்தை நான் அசாதாரண சூழ்நிலைகளில் அனுபவித்திருக்கிறேன். 1966ம் ஆண்டு ஜுன் மாதம் ஒரு மாலை வேளையில் குடித்துவிட்டு மணிக்கு 90 மைல் வேகத்தில் ஓர் ஓட்டுநர் தனது வாகனத்தை, மலையின் மீது ஏறிக்கொண்டிருந்த என் வாகனத்தின்மீது மோதினார். என்னுடைய காரின் முன் இருக்கையில் உடைந்த கண்ணாடிகளும் இரத்தமும் என் முகத்தை மூடியிருந்தது. நான் ஒரு கெட்ட கனவு காண்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது, “உங்களுடைய இருக்கை பெல்ட்டை அவிழ்த்துவிட்டு வெளியே வருகிறீர்களா” என்ற சப்தம் கேட்டது. அதிக இரத்தப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் என்னால் வெளியே வரமுடியவில்லை; அவசர உதவிக்குழுவினர் என்னை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த பயணத்தை என்னால் மறக்க இயலாது. ஆனாலும், தேவனுடைய பிரசன்னம் எனக்கு பரிபூரண சந்தோஷத்தையும் உள்ளான சமாதானத்தையும் தந்தது.

இரவு வரை இவர் உயிரோடு இருக்கமாட்டார் என்று என் மனைவியிடம் அம்மருத்துவமனை அலுவலர் கூறியிருந்தார். காரின் காற்றுத்தடுப்பான்கள் என் முகத்தில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியிருந்தன. தீவிர சிகிச்சையின் தலைமை தாதி (Head Nurse) எங்களுடைய நண்பராயிருந்தும் என்னை அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. மருத்துவமனை தாதிகள் என்னை அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். தேவனுடைய பிரசன்னம் என்னோடு இருந்தது. நான் கண்விழித்த பொழுது தீவிர கண்காணிப்பு அறையில் இருந்தேன். அங்கும் தேவனுடைய பிரசன்னத்தையும் சந்தோஷத்தையும் உணர்ந்தேன். அதிகமான வலி இருந்தது உண்மைதான். ஆனாலும் விவரிக்க முடியாத ஆழமான மகிழ்ச்சியும் என்னை நிரப்பியிருந்தது. அனைத்துவிதமான கருவிகளும் என்னில் பொருத்தப்பட்டது. எங்கெல்லாம் திறப்பு உள்ளதோ அங்கெல்லாம் மருத்துவர்கள் குழாய்களைச் சொருகினார்கள். அதிகமான அசெளகரியங்கள் இருந்தபொழுதிலும் என்னுடைய சிந்தையில் “கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது” என்ற வசனம் தொனித்துக்கொண்டிருந்தது. எனக்கு அவ்வசனம் தெரியாது. ஆனால் வீடு திரும்பியபின் எனது ஒத்தவாக்கிய வேதாகமத்தில் தேடியபொழுது அது சங்கீதம் 145:3 என்று கண்டுகொண்டேன்.

வாழ்க்கை இலகுவாக இருக்குமென்று தேவன் உறுதிமொழி தரவில்லை. ஆனால், தம்முடைய பிரசன்னம் நம்முடன் இருக்குமென்றே வாக்களித்துள்ளார்! மத்தேயு நற்செய்தி நூல் “தேவன் நம்மோடு இருக்கிறார்” (1:23) என்று துவங்கி, “இதோ உலகத்தின் சகல நாட்களிலும் நான் உங்களோடு இருக்கிறேன்” என்று முடிகிறது. மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் நாம் பயப்பட வேண்டாம். “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங். 23:4). தேவனுடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சியில்லாமல், இரட்சிக்கப்படாத மக்கள் இந்த பள்ளத்தாக்கில் செல்லமுடியுமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. தேவனுடைய பிரசன்னம் உங்களுடைய வாழ்வில் இல்லை என்றால் வேறு எதுவும் உங்களுக்கு நிறைவைத் தராது. தேவ சமுகம் மாத்திரமே வாழ்க்கையை நிறைவு செய்யும்!

தேவசமுகத்தை பாவம் மறைத்துவிடுகிறது. “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1யோவா.1:5-7).

தேவனுடைய அன்பின் சமுகத்தில் அனுதினமும் நான் மகிழ்ந்திருக்கவேண்டுமெனில் நான் தேவனுக்கு முன்பாக உண்மையாய் இருக்கவேண்டும். தேவன் எனது பாவத்தை வெளிப்படுத்துவாரெனில் உடனடியாக அதனை அறிக்கையிட்டு அவருடைய சுத்திகரிப்பின் வாக்குறுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அநேக வேளைகளில் “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவா.1:9) என்ற வாக்குறுதியை அடிக்கடி நான் பெற்றிருக்கிறேன்.

அவருடைய சமுகம் நம்முடன் இருக்கிறது என்ற உணர்வு நம்மை உற்சாகப்படுத்தி அவர் காட்டும் பாதையில் பயமின்றி நடத்திச்செல்லுகிறது. “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா.41:10) என்ற வசனம் எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. அடுத்த பக்கத்தைப் புரட்டியபொழுது 43:2இல் ‘நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது” என்ற வசனத்தைக் கண்டேன். நம் வாழ்வில் எதிர்கொள்ளக் கடினமான சூழ்நிலைகள் யாவற்றுக்கும் அவரது பிரசன்னம் போதுமானது.

அவருடைய சமுகத்தை நாம் பயிற்சி செய்யும் பொழுது நாம் எங்கு செல்லவேண்டும் எதைச் செய்யவேண்டும் என்று முடிவெடுப்பது எளிதாயிருக்கும். சிக்காக்கோ நகரில் மேஜைப் பந்தாட்ட (பில்லியர்ட்ஸ்) அரங்கம் ஒன்றின் மாபெரும் திறப்பு விழாவுக்கு சுவி.டி.எல்.மூடிக்கு அழைப்பு வந்தது. தன்னுடன் தனது நண்பர் ஒருவரையும் அவ்விழாவுக்கு அழைத்து வர அனுமதி கேட்டார். அந்த நண்பரை அழைத்து செல்லாமல் தான் எங்கும் செல்வதில்லை என்றும் கூறினார். அரங்கத்தின் உரிமையாளர்கள் அவரை சந்தேகித்தனர். மூடி முழங்காற்படியிட்டு ஜெபித்தார். ஒரு சில வாரங்களுக்குள் அந்த அரங்கம் மூடப்பட்டது. தேவனுடைய பிரசன்னமே அவர் சரியான முடிவெடுக்க உறுதியையும் சாட்சியாக வாழ தைரியத்தையும் அளித்தது. எனவே தேவன் அவரை ஆசீர்வதித்ததில் ஆச்சரியமில்லை!

தேவனுடைய பாதையில் நாம் நடக்கவும் அவருடைய சமுகத்தில் வாழவும் அவர் எதிர்பார்க்கிறார். இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ (ஆமோஸ் 3:3). தேவனுடன் கொள்ளும் உறவு ஒரு விபத்து அல்ல; அது முன்குறிக்கப்பட்டது. அவர் நம்முடன் நடக்க வேண்டும் என்று நாம் விரும்பும்பொழுது அவருடைய பிரசன்னம் நம்மோடு வருகிறது; ஆனால் தடைகளும் பாவங்களும் அவருடைய ஐக்கியத்தின் மகிழ்ச்சியை அழித்துவிடும். பரிபூரண மகிழ்ச்சி என்பது உண்மை வாழ்வின் பலனாகும். “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப் படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்த மேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” (2கொரி.6:14) இதற்கு விடை இல்லை என்பதாகும். அங்கு நட்பும் உறவும் கிடையாது. தேவன் தம் முடன் நாம் ஐக்கியமாயிருக்க எதிர்பார்க்கிறார். அந்த உறவை நாம் சரிசெய்து கொண்டால் மற்ற உறவுகள் தாமாகவே சீராகிவிடும். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத். 6:33).

தேவனுடைய மகிழ்ச்சிக்காக வாழ்தல்:

உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

நான் இரட்சகரை நம்புவதற்கு முன் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது பாடுகளையும் துன்பங்களையும். சகிக்கவேண்டியதாயிருக்கும் என நம்பினேன். நான் அறிந்திருந்த எந்த கிறிஸ்தவரிடமிருந்தும் இதனை நான் கற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான குழுவாகவே காணப்பட்டனர். நான் ஒரு பாவியோ அல்லது மூர்க்கத்தனமான வாலிபனோ அல்ல. ஆனால் நான் கிறிஸ்தவனாகிவிட்டால் இப்பொழுது மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் பல காரியங்களை விட்டுவிட வேண்டியதாயிருக்கும் என்று ஆழமாக எண்ணினேன்.

ஆனால் ஆச்சரியமான விதத்தில் “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்கவேண்டும்” (1தீமோ.6:17) என்பதை கண்டு கொண்டேன். மகிழ்ச்சி என்ற வார்த்தை வேதாகமத்தில் உண்டு என்பது எனக்குத் தெரியாது. கிறிஸ்தவ வாழ்வின் அறிவில் வளரும்பொழுது புதிய காரியங்களையும் சந்தோஷங்களையும் கண்டுகொண்டேன். பழைய பாவசந்தோஷங்களின் சோதனையில் அகப்பட்டு அதில் விழுந்த நேரங்களுமுண்டு. ஆனால் எனக்குள் இருந்த புதுவாழ்வானது என்னை தேவனுடைய வலது கரத்திலிருந்து வரும் மகிழ்ச்சியால் திருப்தியாக்கி என்னைப் பெலப்படுத்தியது. தேவனுடைய வலதுகரத்தில் இருக்கிறவர் யார்? தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து!

பாவத்தில் சந்தோஷமுண்டு. இல்லையெனில் ஒருவரும் சோதனையில் அகப்படமாட்டார்கள். மகிழ்ச்சியில்லையேல் பாவத்துக்கு மதிப்பில்லை. ஆனால் பாவம் தரும் சந்தோஷம் தற்காலிகமானது. ஒவ்வொரு முறையும் நீங்கள் பாவம் செய்யும்பொழுது அதனால் வரும் மகிழ்ச்சி குறையும். எனவேதான் கூடுதல் மகிழ்ச்சியடைய பெரும் பாவங்களுக்கு அடிமையாகிறார்கள். பாவசந்தோஷம் உங்களை அழித்துப்போடும். “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23). அதற்கு வருடங்கள் பல ஆனாலும் அது நிறைவேறியே தீரும்.

தேவன் என்னை சிறுவயதிலேயே இரட்சித்ததற்காக அவருக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். என்னுடைய சரீரத்தையும் சிந்தையையும் அநேக பாவங்கள் மேற்கொள்ள வாய்ப்பு இல்லாதபடி தேவன் என்னை மீட்டுக்கொண்டார். பயங்கரமான பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட அநேக கிறிஸ்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன். தேவனுடைய மிகுந்த இரக்கங்களுக்காக அவரைத் துதிக்கிறேன். என்னை இரக்கமாய் இரட்சித்து அவ்வித அனுபவங்களிலிருந்து என்னைக் காத்துக்கொண்டார். தேவனுடைய வழியில் நடந்து அவருடைய பிரசன்னத்தில் வாழ நீங்கள் விரும்பும்பொழுது அவருடைய இரக்கத்தின் கரங்கள் புதிய சந்தோஷத்தை உங்களுக்குத் தரும். அந்த ஆத்தும சந்தோஷங்கள் புதிதாகவும் உற்சாகப்படுத்துவதாகவும் அமையும். “உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்” (சங்.36:8). நதி எப்பொழுதும் புத்துணர்ச்சியையும் திருப்தியையும் தரும். எனவே தேவன் தமது பிள்ளைகளுக்குத் தரும் மகிழ்ச்சிக்கு “நதி” ஒரு சரியான உதாரணமாகும். தேவனுடைய சிங்காசனத்திலிருந்து அவருடைய சந்தோஷம் பாய்ந்து வரும். நாம் அதனை விசுவாசத்துடன் பருகவேண்டும்.

சங்கீதம் 16:11 இன் வசனத்தை நான் முதன் முதலில் வாசித்தபொழுது அது என் எதிர்காலத்திற்கு கொண்டுவரும் பொருளை நான் உணரவில்லை. என்னுடைய கிறிஸ்தவ வாழ்வும் ஊழியமும் முழுமை அடையவில்லை என்பதையும் நான் நன்கு உணர்ந்திருந்தேன். அவ்வசனத்தின் அனைத்து வாக்குறுதியையும் நான் அனுபவிக்கத் தொடங்கவில்லை. ஆனால் எனக்கு அதில் வருத்தமில்லை. தேவன் சங்கீதம் 16:11 இல் கூறியிருப்பவை யாவும் உண்மை என்று நான் சாட்சி கொடுப்பேன். அவ்வழி தேவனுடைய மகிமையின் பிரசன்னத்துக்கு நேராக பிதாவின் வீட்டுக்கு நம்மை ஒருநாள் நடத்திச்செல்லும். அங்கே தேவனுடைய சந்தோஷத்தை பரிபூரணமாக நாம் அனுபவிக்கலாம். “ஓயா இன்பம் எனக்குண்டு மோட்சத்தில்!”

தேவனுடைய வழியிலும் அவருடைய சமுகத்திலும் அவருடைய மகிழ்ச்சிக்காகவும் வாழுதலே அர்த்தமுள்ள வாழ்வு! இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு நமது ஆண்டவராக அவரிடம் அர்ப்பணிக்கும்பொழுதே இவை யாவும் கிடைக்கும். இந்த வழியில் வாழ உங்களுக்கு விருப்பமா? உங்கள் வாழ்வை தேவனுக்கு அர்ப்பணியுங்கள்; தெய்வீக சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அனுபவியுங்கள்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்