Dr. தியோடர் எச்.எஃப்.
(ஜூலை-ஆகஸ்டு 2019)

கர்த்தருடைய நாமத்தில் ஜெபிக்கவேண்டும்


”உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார் . . . . (யாக்.5: 14-16).


“கர்த்தருடைய நாமத்தினாலே” வியாதிப்பட்டவனுக்கு “எண்ணெய் பூசி” இந்தச் சொற்றொடர்கள் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளன. சபை மூப்பர்கள் செய்வதெல்லாம் கர்த்தருடைய நாமத்தினாலே செய்யப்படவேண்டும். அவர்கள் செய்யவேண்டிய ஆரம்ப வேலை “ஜெபித்தல்” ஆகும். இது இந்தக் கேள்வியை எழுப்புகிறது: கர்த்தருடைய நாமத்தில் ஜெபித்தல் என்றால் என்ன?

பலர் ஜெபிக்கும்போது கர்த்தருடைய நாமத்தில் அல்லது இதே கருத்துவரும் வேறு வார்த்தைகளைக் கூறி தங்கள் ஜெபத்தை முடிக்கிறார்கள். இப்படி ஜெபிப்பதில் தவறொன்றும் இல்லை. சிலர் ஜெபிக்கும்போது, “கர்த்தருடைய நாமத்தில்” ஜெபிப்பதில்லை. கர்த்தருடைய நாமத்தில் ஜெபிப்பதில் ஐந்து அம்சங்கள் உண்டு.

1. கர்த்தருடைய நாமத்தில் ஜெபிக்கும்போது, அவரே ஆண்டவர் என்று அறிக்கை செய்கிறோம். அவரை ஆண்டவர் என்று அழைக்கும்போது, அவர் நம்மை என்னவெல்லாம் செய்யச் சொல்கிறாரோ, அவை அனைத்திலும் இறுதி அதிகாரம் அவருக்கு உண்டு என்று அறிக்கை செய்கிறோம். அவரே இறுதியானவர் என்று நாம் கூறும்போது நமக்கு எது சிறந்தது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.

2. இரண்டாவதாக, கர்த்தருடைய நாமத்தினாலே என்று ஜெபிக்கும்போது, அவரே நம் ஆண்டவர் என்று அறிக்கை செய்வது மட்டுமல்ல, அவருக்கு நம்மை முற்றிலுமாக அர்ப்பணிக்கிறோம். நாம் நம்மைக் கிறிஸ்துவுக்கு அடிமை ஆக்குகிறோம். இயேசுவே இரட்சகரும் ஆண்டவருமாய் இருக்கிறார். நம்முடைய பிராயச்சித்தத்தைச் செலுத்துவதற்காக இரத்தம் சிந்தி மரித்தவர் அவர். எனவே அவர் நமக்கு இரட்சகர்!

இயேசுவே ஆண்டவர். விசுவாசியின் வாழ்க்கைக்கு எஜமானர் அவரே. இரட்சிப்பின்போது இயேசு விசுவாசியின் இருதயத்தில் வாழ வரும்போது, அவர் விசுவாசியின் புதிய வாழ்க்கை ஆகிறார்!

கிறிஸ்துவின் தெய்வீகத்தை ஒரு விசுவாசி பூரணமாகப் புரிந்துகொண்டிருக்கமாட்டான். அதனால் அவன் தன்னை அவருக்கு அர்ப்பணிக்கும்போது அவர் ஆண்டவர் என்பதை அறிக்கை செய்கிறான். அப்படிப்பட்ட விசுவாசி ரோமர் 8:28ஐ சந்தேகிக்கமாட்டான். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்”.

சமாதானத்தின் தேவன் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு, தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென் (எபி.13:20,21). எபிரெயர் ஆக்கியோன் இதை இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்:

தேவன் தமக்குப் பிரியமான காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார் என்று அறிகிறோம். “கர்த்தருடைய நாமத்தினாலே” என்று நாம் கூறும்போது அவருக்குப் பிரியமானதை நம் வாழ்வில் செய்ய நாம் நம்மை அவருக்கு அர்ப்பணிக்கிறோம்.

3. மூன்றாவதாக, கர்த்தருடைய நாமத்தினால் நாம் ஜெபிக்கும்போது தேவனுடைய தன்மையை நாம் அறிக்கை செய்கிறோம். வேதாகம காலங்களில் ஒரு பெயர் ஒருவருடைய தன்மையைப் பிரதிபலிக்கும். இயேசு தம் பிதாவோடு ஜெபிக்கும்போது, “மனுஷருக்கு முன்பாக உமது நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக் கொண்டிருக்கிறார்கள்” (யோவான்17:6).

இதன்மூலம் இயேசு கூறியது: அவர்கள் என்னைக் கண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னைக் கண்டதனால் என்மூலமாக உம்மையும் கண்டிருக்கிறார்கள். பரலோக பிதாவின் தன்மையை இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தும் வண்ணமாக, தேவன் தமது மக்களுக்காக இவ்வுலகில் இயேசு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று சித்தம் கொண்டாரோ, அவற்றை வெளிப்படுத்தினார்.

பிதாவாகிய தேவன் விசுவாசிகளுக்கு நன்மைகளைச் செய்யவே சித்தம் கொண்டுள்ளார். அதாவது அவர்களுடைய வாழ்க்கையில் சிறந்த ஆசீர்வாதங்களையும், தேவனுக்கு மகிமையைத் தருவதாயும் இருக்கும் காரியங்கள் மட்டுமே அனுமதிக்கச் சித்தங்கொண்டார். எனவே ஒரு விசுவாசி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் பண்ணும்போது, அவன் தேவனுடைய பரிசுத்த தன்மையை ஏற்றுக்கொள்ளுகிறான். தமது விசுவாசிகளுக்குச் சிறந்த ஆசீர்வாதங்களையே தர தேவன் விரும்புகிறார். விசுவாசிகளின் வாழ்க்கையில் சூழ்நிலைகள் சரியில்லாதது போலத் தோன்றும். ஆனால் தேவன் அந்த விசுவாசியோடு சேர்ந்து கிரியை செய்வதால் முடிவு பலன் நல்லதாகவே அமையும்.

4. நான்காவதாக, கர்த்தருடைய நாமத்தினால் ஜெபிக்கும்போது, தேவனுடைய சமுகத்தில் நாம் பிரவேசிக்க வேறு எந்த நாமமும் இல்லை என்பதை நாம் அறிக்கையிடுகிறோம். இரட்சிப்புக்காகவோ, வேறு எந்தக் காரணத்துக்காவோ இயேசுவின் நாமம் அல்லால் வேறு வழி இல்லை.

”அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்” (அப்.4:12).

யோவான் 14:6 மற்றும் எபி.10:19 ஆகிய இரண்டு வசனங்களும் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே நாம் பிதாவாகிய தேவனை அடைய முடியும் என்று கூறுகின்றன. இந்த இரு வசனங்களும் “நாமம்” என்ற சொல் இல்லை. ஆனால் தேவனை அடைய கிறிஸ்துவே வழி என்று கூறுகின்றன. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் என்று நாம் கூறும்போது. நாம் தேவனுடைய சமுகத்தில் வந்து சேருகிறோம். யோவான் 14:6 இவ்வாறு கூறுகிறது: “அதற்கு இயேசு: நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”.

எபி.10:19 இவ்வாறு கூறுகிறது: “ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால்” என்று. இந்த இரண்டு வசனங்கள் மூலமாகவும் ஒருவன் பிதாவாகிய தேவனின் சமுகத்தில் செல்ல வேண்டுமானால் அவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே செல்லமுடியும் என்று அறிகிறோம். எனவே நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் பண்ணுகிறோம்.

5. கர்த்தருடைய நாமத்தினால் ஜெபிக்கும்போது, உண்மையிலேயே “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்றுதான் ஜெபிக்கிறோம். அதாவது விசுவாசி, ஆண்டவரே, நீர் எனக்காக வைத்திருப்பது எதுவானாலும் நான் அதை ஏற்றுக் கொள்ளுகிறேன்.

நாம் ஆண்டவரோடு எவ்வளவு நெருங்கி இருந்தாலும் சரி, நம்மால் நமக்குச் சிறந்தது எது என்று அறியமுடியாது. நாம் அளவுக்குட்பட்டவர்கள். அவர் அளவற்றவர், எல்லையற்றவர். நாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கும்போது நாம் நமக்கு வேண்டியது அவருக்கே தெரியும் என்று கூறிவிடுகிறோம். சரீரத்தைக் குணமாக்குதல் தேவனுடைய திட்டமில்லாதிருந்தால் மருந்தோ, ஜெபமோ, சுகத்தைத் தருவதில்லை. தேவனுக்கு ஒன்று சித்தமில்லாதிருக்குமானால் அது நமக்கு நல்லதில்லை. தேவனுக்குச் சித்தமில்லாதவை நமக்கு வேண்டாம் என்னும் மனநிலையை நாம் பெற வேண்டும்.

நமக்குச் சிறப்பானது என்று அறிந்து தேவன் அந்த நன்மையைத் தந்து நம்மை ஆசீர்வதிக்கிறார் என்பதை உணருவது எவ்வளவு பெரிய காரியம்! எப்போதும் நமக்கு நன்மையானதை ஆண்டவர் தருவார் என்னும் நம்பிக்கையுடன் நாம் எல்லாவற்றையும் அவர் பேரில் ஒப்படைத்து விடவேண்டும். இதுதான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்பதாகும். எல்லாவற்றையும் தேவனிடம் ஒப்படைத்துவிட்டு ஜெபிப்பது எப்படியென்று பவுல் விளக்கிக் காட்டுகிறார்:

அன்றியும் … நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது (2கொரி.12:7). இந்த முள் தன்னைவிட்டு எடுபடும்படி பவுல் ஜெபித்தார். மூன்று தடவை கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டபோதும் கர்த்தர் கொடுத்த பதில். என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என்பலம் பூரணமாய் விளங்கும் என்றார் ( வச.9).

இந்த முள் தன்னைவிட்டு நீங்க வேண்டும் என்று பவுல் மூன்று தடவை வேண்டினான். தேவன் ‘இருக்கட்டும்’ ‘நான் உன்னைப் பலப்படுத்துவேன்’ என்று உறுதியளித்ததும், அவன் கூறுவதைப் பாருங்கள். கிறிஸ்துவின் வல்லமை என் மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன் (வச.9). பின் தொடர்ந்து பவுல் கூறுவதைக் கேளுங்கள். “அந்தப்படி பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால், கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” (வச.10). பவுல் தன்னை பூரணமாகக் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்திருந்தான். தன்னுடைய பாடுகளில் தேவனுடைய சித்தத்தையும் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தான். இதுதான் ஆண்டவரின் நாமத்தில் ஜெபம் செய்வதாகும்.

குணமாக்குதலில் ஆண்டவருடைய சித்தத்தைப் பொறுத்தவரையில், தேவன் எப்போதும் குணமாக்குவதில்லை. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் எண்ணெய் பூசப்பட்டு, ஜெபம் ஏறெடுக்கப்பட்டபோதும் இதுதான் நிலை. தேவன் எப்போதும் குணமாக்கிக்கொண்டே இருப்பாரானால் சில விசுவாசிகள் ஒருபோதும் மரணமடைய மாட்டார்கள்.

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத் தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” (எபி.9:27). இது ஒவ்வொருவருக்கும் உண்டு என்று கூறுகிறது.

ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும், சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து, அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலை நிற்காமல் ஓடிப் போகிறான் (யோபு 14:1,2).

அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர் (வச.5). மீண்டும் யோபு கேட்கிறான். மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? (வச.14). அந்தக் கேள்விக்கு அவனே அளிக்கும் பதில், எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். யோபு தனக்கு நியமிக்கப்பட்ட ஒரு காலம் உண்டென்று நம்பினான். தனக்கு வியாதி வரும்போதெல்லாம் தேவன் குணமாக்க மாட்டார் என்று அறிந்தான்.

எனவே மாம்ச பெலவீனம் வரும்போது கர்த்தருடைய நாமத்தில் ஜெபிக்கவேண்டும். யாக். 5:14 இப்படி ஜெபிப்பது, அந்த மனிதன் குணமாவது தேவனுக்குச் சித்தமில்லையானால் அவன் குணமாகமாட்டான் என்று அறிந்து, உணர்ந்து ஜெபிப்பதாகும். கர்த்தருடைய நாமத்தில் ஜெபிப்பதே தேவனோடு நமக்குள்ள தொடர்பைக் காட்டுவதாகும். விசுவாசிக்குத் தம் சித்தப்படி நல்லதைச் செய்ய நாம் அவரிடம் ஒப்படைத்துவிடுகிறோம். நாம் செய்வது உன்னத தேவனுக்கு நாம் முற்றிலுமாக நம்மை அர்ப்பணிப்பதற்கு அடையாளமாகும்.

இப்படி ஜெபிப்பதன் மூலம் விசுவாசி தேவன் மேல் தனக்குள்ள முழு நம்பிக்கையைத் தெரிவிக்கிறான். தனக்கு எது தேவை என்பதை தேவன் அறிந்திருக்கிறார் என்றும், தான் எப்படி இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ, அப்படி ஆவதற்கு அவர் உதவி செய்கிறார் என்றும் அவன் உணர்ந்திருக்கிறான்.

விசுவாசிக்கு எந்தத் தீமை ஏற்பட்டாலும் அது தேவனால் வருவதில்லை. அவனது சொந்தக் கிரியையால் ஏற்படுவதேயாகும். இது தேவனைப் பூரணமாக விசுவாசிக்காததால் ஏற்படுகிறது. தேவன் சில காரியங்களை விசுவாசியின் நன்மைக்காக அனுமதிக்கிறார். இதைக்குறித்து யாக்கோபு தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்.

அப்பொழுது விசுவாசம் உள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்பு வார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் (வச 15).

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்