Dr.உட்ரோ குரோல்
(ஜூலை-ஆகஸ்டு 2019)

மறக்க முடியாத சாதனை


ஆசகேல் தான் துரத்திச் சென்ற மனிதனைப் பிடிக்க முடியாத போதிலும், அவனைத் துரத்திச் செல்வதில் மிகுந்த தைரியமும், மன உறுதியும் கொண்டிருந்தான். சவுலின் படைத் தலைவனான அப்னேரும், அவனுடைய படை வீரர்களும் தாவீதின் படை வீரர்களால் ஒரு பயங்கர யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்னேர் எப்படியோ தப்பி, ஓடத்தொடங்கினான்.

ஆசகேல் அவனைத் துரத்திக்கொண்டு பின் சென்றான். அப்படி அவன் அப்னேரைத் துரத்திக்கொண்டு ஓடும்போது, தன்னைத் துரத்தி வரும் வீரனின் வேகத்தையும், ஓடும் திறமையையும் கண்டு திரும்பிப் பார்த்து அது ஆசகேல் என்று அடையாளம் கண்டுகொண்டான். அப்னேர், ஆசகேலைவிட முந்தி ஓடித் தப்பமுடியாது என்று கண்டான். எனவே அவன் திரும்பி ஆசகேலைப் பார்த்துப் பயமுறுத்தினான். எனினும் ஆசகேல் நின்றுவிடவில்லை. தொடர்ந்து ஓடினான். அப்னேர் நின்று தன் ஈட்டியினால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி அவனுடைய முதுகுப்பக்கம் நீட்டி நின்றது. ஆசகேல் அந்த இடத்திலேயே விழுந்து செத்தான். இவ்வாறு வேகமாகத் துரத்தி ஓடிய ஆசகேல் மரணமடைந்தான்.


மில்லியன் கணக்கான மனிதர்களின் உள்ளங்களில் சாதனையாளர்களின் பெயர்கள் பதிந்திருக்கின்றன. அவர்களுடைய சாதனைகளை யார்தான் மறக்கமுடியும்? இந்தப் பூமியில் மிக வேகமாக ஓடக்கூடியவர்களின் மத்தியில் அவர்கள் இருக்கிறார்கள். ஒருதடவை அல்லது இன்னொரு தடவை அவர்கள் உலக சாதனைகளைப் படைத்து விடுகிறார்கள். மைக்கேல் ஜான்சன், டோனோவன் பெய்லி மற்றும் கார்ல் லூயிஸ் போன்றவர்கள் ஓட்டத்தில் காட்டிய வேகத்தின் மூலம் தனிச்சிறப்புப் பெற்றுள்ளார்கள். அவர்கள் நிரூபிக்கப்பட்ட மாவீரர்கள். அவர்களை யாராலும் முறியடிக்க முடியாது. நிரந்தரமாகப் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக அவர்களின் பெயர்கள் காணப்படும்.

இவர்கள் எல்லாரும் பின்னால் வந்தவர்கள். இவர்களுக்கு முன்னரே இவர்களைவிட வேகமாக ஓடக்கூடியவர்கள் முன்னால் இருந்தனர். 1960இல் இருந்த தடகள வீரர் பாப் ஹெய்ஸ்-ஐ யார்தான் மறக்கமுடியும்! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பந்தை அவரிடம் எறிந்துகொடுக்க வேண்டியதுதான். பின்னால் அவர் என்ன செய்கிறார் என்பதைக் கவனித்துப்பார்க்க வேண்டும். இடையில் வரும் ஒருவருக்கும் பிடி கொடுக்காமல், சமாளித்து, முன்னேறிக் கடைசி எல்லைக்கு வந்துவிடுவார். அவருக்குமுன்னால் அவருக்குச் சமமான வேகம் உள்ளவர்கள், புகழ்பெற்றவர்கள் இருந்ததுண்டு.

‘அக்கினி ரதங்கள்’ (Chariots of Fire) என்ற பெயருள்ள ஒரு திரைப்படம் பார்த்த ஞாபகம் இருக்கிறதா? அது எரிக் லிட்டெல் என்பவரின் கதை. அவர் தன் இளமைப் பருவத்திலேயே ஆண்டவருடைய மகிமைக்காக வேகமாக ஓட முடியும் என்று கண்டுபிடித்தார். அப்படியே ஓடினார். ஆனால் ஸ்காட்லாந்தின் சமய அறிவுரை கண்டிப்பாக விளையாட்டை விட ஆண்டவருக்கே அதிக கனமும் மகிமையும் செலுத்தவேண்டும் என்று போதித்தது. அவர் தன் வாழ்வின் கடைசிப் பகுதியில் சீனாவில் நற்செய்திப் பணியாற்றும் ஒரு மிஷனெரியாகிவிட்டார். அங்கு அவர் ஒரு யுத்தக் கைதியாகப் பிடிக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இப்படிச் சிறைவாசம் அனுபவித்தபோதும் தன்னுடைய மரணம்வரை தேவனைத் தேடிக்கொண்டிருந்தார். 1945இல் வெய் ஷியன் முகாமில் அவரது வாழ்க்கை முடிந்தது.

இப்படிப்பட்ட மாவீரர்கள் எல்லாம் சாதாரண மக்களே! அவர்கள்மூலம் தேவன் தம்முடைய மகிமைக்கென்று அசாதாரண தீரச் செயல்களைச் செய்யச் செய்தார். அவர்களெல்லாம் பெரிய, மகத்துவ தேவனுக்கு ஊழியம் செய்யும் சிறிய மனிதர்களாய் இருந்தார்கள்.

மூன்றாவது சகோதரர்

உங்களுக்குச் சகோதரர்களோ, சகோதரிகளோ உண்டா? அவர்களில் யாராவது புகழ் பெற்றவர்களா? ஒரு புகழ்பெற்ற நபரின் சகோதரனாய் இருப்பது சுலபமல்ல. அந்திரேயாவைக் கேளுங்கள், புதிய ஏற்பாட்டில் அவனுடைய பெயர் 12 இடங்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் 6 இடங்களில் ‘சீமோன் பேதுருவின் சகோதரன்’ என்றே கூறப்பட்டுள்ளது. அவனுடைய வாழ்நாள் முழுவதும் அவன் ‘பேதுருவின் சகோதரன்’ என்றே அறியப்பட்டிருந்தான். இது கடினமானதாய் இருக்கலாம். ஆனால் இதைவிட மோசமான ஒன்று உள்ளது. ஒரு குடும்பத்தில் மூத்த இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக ஒரு மூன்றாவது சகோதரன் உள்ளான். மூத்த இரண்டு புகழ்பெற்ற சகோதரர்களுக்கு அடுத்த சிறிய சகோதரன். இதுதான் ஆசகேலின் பிரச்சனை என்றபோதிலும், அறியப்படாத நிலையில் இருந்த அவன் தேவனுக்காக ஒரு பெரிய தீரச் செயலைச் செய்து புகழ்பெற்றுவிட்டான்.

பழைய ஏற்பாட்டில் ஆசகேல் என்னும் பெயருடைய நான்கு பேர் உள்ளனர்.

அவர்களில் ஒருவன் ஒரு லேவியன். இவன் யோசபாத் இராஜாவினால் மக்களுக்கு நியாயப்பிரமாணம் கற்றுக்கொடுக்க அனுப்பப்பட்டவன் (2நாளா.17:8).

இன்னொரு ஆசகேல் எசேக்கியா இராஜா வினால் ஆலயத்தின் காணிக்கைகளை மேற் பார்க்கும்படி நியமிக்கப்பட்டவன் (2நாளா.31:13).

இன்னொரு ஆசகேல் யோனத்தானின் தகப்பன். இவன் சிறையிருப்பின் போது புற ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்த இஸ்ரவேலரை ஒழுங்குபடுத்துவதில் எஸ்றாவுக்கு உதவி செய்தான் (எஸ்றா 10:15).

நான்காவதான நமது ஆசகேல் வேகமாக ஓடும் கால்களை உடையவன். அதிகமாக அறியப்படாதவன். இவன் இஸ்ரவேலில் மிகவும் பிரபலமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன்.

பலராலும் அறியப்படாமல் இருப்பது மோசமானது. அதுவும் புகழ்பெற்ற ஒரு குடும்பத்தில் இருந்துகொண்டு இன்னும் அறியப்படாமல் இருப்பது அதைவிட மோசமானது. ஆசகேல் செரூயாவின் மகன். அவள் தாவீதின் ஒன்றுவிட்ட சகோதரி. அப்படியானால் அவன் இஸ்ரவேலின் இராஜாவாகிய தாவீதை, “தாவீது மாமா” என்று உரிமையுடன் அழைத்திருக்கலாம். ஆனால் அவன் அப்படி அழைக்கவில்லை. ஒரு தேசத்தின் இராஜாவுக்கு உறவினனாய் இருப்பது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவன் சிறுவனாய் இருந்தபோது இராஜாவின் அரண்மனையில் இருந்துகொண்டு, எருசலேமில் நடத்தப்பட்ட எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கலாம். தன்னுடைய மாமா இராஜாவாய் இருக்கும்போது, எந்தச் சிறுவன்தான் இராஜாவின் அரண்மனையில் அடிக்கடி சென்று விளையாடாமல் இருந்திருப்பான்?

ஆனால் இந்த ஆசகேல் இராஜாவின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு தடைகள் இருந்தன. அவன் அந்த இரண்டையும் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. அந்தத் தடைகளின் பெயர் யோவாப், அபிசாய். அவர்கள் இருவரும் இவனுடைய மூத்த சகோதரர்கள். இவர்கள் அரண்மனையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் சென்று பலவித உடற்பயிற்சிகள் செய்து தங்கள் பொழுதைப் போக்க விரும்பினார்கள். அவர்கள் தங்கள் தாயாகிய செரூயாவிடம் “அம்மா, நாங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் விளையாடப் போகிறோம். சின்னத்தம்பி ஆசகேலையும் எங்களுடன் அழைத்துச்செல்லவா? அவன் மிகவும் சிறியவனாக இருக்கிறானே. அவன் எங்களுடன் வந்தால் எங்கள் வேகத்தைக் குறைத்துவிடுவான்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்களுடைய அம்மா “வேண்டாம்” என்று சொல்லியிருக்கலாம். ஆனால் இந்தச் சிறிய ஆசகேல் ஒருநாள், தன்னுடைய ஓட்டத்தின் வேகத்தால் சாதனை படைத்து, அந்த நாளைத் தன் மூத்த சகோதரர் இருவரும் தங்கள் வாழ் நாள் முழுவதும் மறக்கமுடியாததாக்கிவிடுவான்.

ஆசகேல் தன் சகோதரர்களின் நிழலில் வாழ்ந்துகொண்டிருந்தான்.

சவுல் இராஜா தாவீதின் மீது பொறாமை கொண்டு, அவனைக் கொன்றுவிடுவதற்காகத் துரத்திக்கொண்டு சென்றபோது, இரண்டு தடவை தாவீதுக்குத் தன்னைக் கொல்ல நினைக்கும் சவுல் இராஜாவைக் கொலைசெய்து விடுவதற்கான நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் தாவீது பெருந்தன்மையுடன் ‘தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் மேல் கை போடலாகாது’ என்று கூறி இரண்டு தடவையும் தப்ப விட்டுவிட்டான்.

முதல் தடவை சவுல் இராஜா என் கேதியின் வனாந்திரத்தில் உள்ள ஒரு கெபியிலிருந்தான். (1சாமு.24 ஆம் அதிகாரம்)

இரண்டாவது தடவை சவுலும், அவனைச் சேர்ந்தவர்களும் ஆகிலா மேட்டில் பாளயமிறங்கி, நித்திரை செய்துகொண்டிருந்தார்கள். தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக், அபிசாய் ஆகிய இருவரையும் பார்த்து, சவுல் இராஜா நித்திரை செய்யும் இடத்துக்கு நான் போகிறேன். என்னுடன் வருவது யார்? என்று கேட்டான். அப்பொழுது அபிசாய் “நான் வருகிறேன்” என்றான் (1சாமு. 26:6). தாவீதும், அபிசாயும் மெதுவாக எதிரியின் பாளயத்துக்குள் நடந்துசென்றார்கள். இரதங்களண்டையில் சவுலும், அவனுடைய மெய்க் காப்பாளன் அப்னேரும், மற்ற வீரர்களும் படுத்து நித்திரை செய்வதைக் கண்டார்கள். சவுலின் அருகில் சென்றதும் அபிசாய்க்குக் கை துறுதுறுவென்று ஆயிற்று. அவன் தாவீதிடம் உங்களைக் கொல்லும்படி ஓடஓட விரட்டிவரும் இந்த இராஜாவை என் ஈட்டியினால் ஒரே குத்தாகக் குத்திக் கொன்றுவிடவா? என்று கேட்டான். தாவீது அவனைத் தடுத்துவிட்டுச் சவுலின் ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான்.

மறுநாள் காலையில் தாவீது மலையின் உச்சியில் இருந்து ஏளனமாக அப்னேரைக் கூப்பிட்டான். நீர் இஸ்ரவேலில் மிகவும் பராக்கிரமசாலியாமே. இராஜாவின் தளபதியும், மெய்க் காப்பாளனுமாமே! நேற்று இரவு உம்முடைய இராஜாவை ஏன் சரியாகப் பாதுகாக்கவில்லை? நேற்று இரவு நானும் அபிசாயும் அங்கு வந்திருந்தோமே! நாங்கள் நினைத்திருந்தால் இராஜாவைக் கொன்றிருக்க முடியும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை. நாங்கள் வந்ததற்கு அடையாளம் இராஜாவின் ஈட்டி எங்கே? இராஜாவின் தண்ணீர்ச் செம்பு எங்கே? பாரும், அவை இதோ எங்கள் கையில் இருக்கிறது. உங்கள் வாலிபரில் ஒருவனை அனுப்புங்கள். அவன் வந்து இவற்றை வாங்கிச் செல்லட்டும் என்றான். இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது சவுலும் தாவீதின் சத்தத்தை அறிந்துகொண்டான். முன் இரவு நடந்ததை அறிந்து வருந்தினான். தாவீதை மனமுவந்து ஆசீர்வதித்தான். அப்னேருக்கு மிகுந்த அவமானம் உண்டாயிற்று.

தாவீதும் அபிசாயும் செய்தது ஒரு தீரச் செயல். இஸ்ரவேல் தேசம் எங்கும் இச்செய்தி பரவிற்று. அனைவரும் இவர்கள் இருவருடைய தைரியத்தையும் வீரத்தையும் பாராட்டினார்கள். இளைஞனாகிய அபிசாய் எப்படி அவ்வளவு துணிச்சல் உள்ளவன் ஆனான்?

சின்னத்தம்பி ஆசகேல் தன் அண்ணன் அபிசாயின் நிழலில் வாழ்ந்துகொண்டிருந்த போதிலும், தன் மூத்த அண்ணன் யோவாபின் வீரப் பிரதாபங்களையும் பார்த்துப் படித்துக்கொண்டிருந்தான். யோவாப் தாவீதின் படை முழுவதுக்கும் தளபதி. இராணுவத்தின் அதிபதி அவனே. அவன் ஒரு மனிதனின் மனிதனாக இருந்தான். அவன் பல தடவைகளில் பயம் இல்லாதவனாகவும், சில வேளைகளில் இரக்கமற்ற கொடியவனாகவும் இருந்தான். இராஜாவுக்கு யுத்தத்தில் கையாளும் உத்திகள் குறித்து ஆலோசனை சொல்லும் அளவுக்குப் பொது அறிவும், விவேகமும் உள்ளவனாயிருந்தான். அவனுக்குத் தாவீதுடன் நெருங்கிய, அந்தரங்க உறவும் நட்பும் இருந்தபடியால், தாவீதின் செயல்பாடுகள் குறித்துக் கேள்விகளும் கேட்பான் (1நாளா.21:3). யோவாபின் தைரியமும், யுத்தத்திறமையும் வரலாற்றில் குறிக்கப்பட்டவை. சின்ன ஆசகேல் இப்படிப்பட்ட மூத்த அண்ணனை ஆச்சரியத்துடனும், பயத்துடனும் பார்த்து காரியங்களை எப்படிச் செய்யவேண்டும்? அணுகவேண்டும்? என்று கற்றுக்கொள்ளுவான்.

இரண்டு மாவீரர்களின் சின்னத் தம்பி என்று இருப்பதைவிட மோசமானது, ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் இரண்டு மூத்த சகோதரர்கள். மாவீரர்களின் தம்பி என்பதாகும். இந்த இருவரையும் புகழ்ந்து பாடல்கள் பாடுவர். புகழ்வர், பாராட்டுவர். ஆனால் சின்னத் தம்பிமட்டும் விடப்பட்டு விடுவான். இது ஆசகேலுக்கு மிகுந்த ஏமாற்றமாய் இருக்கும்.

நல்லெண்ணத்தோடு அம்மோன் புத்திரரின் இராஜாவாகிய ஆனூனுக்கு ஆறுதல் சொல்லத் தாவீது அனுப்பிய ஸ்தானாபதிகளைச் சிலரின் பேச்சைக் கேட்டு ஆனூன் அவமானப்படுத்திவிட்டான். தாவீதின் ஆட்களின் தாடிகளைச் சிரைத்துவிட்டான். அவர்களுடைய ஆடைகளை இடுப்புமட்டும் விட்டுவிட்டு அதற்குமேல் உள்ள பகுதியை வெட்டி எடுத்துவிட்டான். இதைக் கேள்விப்பட்ட யோவாபும், அபிசாயும் கொதித்தெழுந்தார்கள் (1நாளா.19ஆம் அதி.). அம்மோனியருக்கு உதவி செய்யச் சீரியர் வந்திருந்தார்கள். யோவாப் தன் படையை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவைத் தனக்கு வைத்துக்கொண்டு அடுத்த பிரிவைத் தன் தம்பி அபிசாயின் பொறுப்பில் விட்டான். யோவாப் தன் படையுடன் சென்று சீரியரைத் தாக்கினான். அபிசாய் தன் படையுடன் சென்று அம்மோனியரைத் தாக்கினான். யோவாபின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சீரியர்கள் முறிந்தோடினார்கள். இதைக் கண்ட அம்மோனியரும் சிதறிப் பின்வாங்கி ஓடிவிட்டார்கள். இவ்வாறு ஆனூனுக்குப் பாடம் புகட்டப்பட்டது. இந்த யுத்தத்தின் வெற்றி தாவீதைச் சேரட்டும் என்று சகோதரர்கள் இருவரும் தாவீதை வரவழைத்து மீதியான பகைவரை வெட்டிக் கொல்லச் செய்தார்கள். எவ்வளவு அற்புதமான சகோதரர்கள்! யோவாபும் அபிசாயும் இணைந்து செயல்பட்டனர். இவர்கள் இருவரும் அமெரிக்க அரசியலில் கென்னடி சகோதரர்களை விடச் சிறந்தவர்கள்.

நாம் இவர்களைச் சந்திப்போம். ஆசகேல் என்னும் சின்னத்தம்பிக்கு இத்தகைய சாதனைகளைப் படைத்த மாவீரர்களாகிய தன் மூத்த சகோதரர்களுக்குச் சரியாக ஈடுகொடுக்க முடியவில்லை.

நிழலில் வாழுதல் என்பது வேடிக்கை அல்ல. அது பாதுகாப்பானது. சில வேளைகளில் நாம் மற்றவர்களின் நிழலிலிருந்து தப்பிச்செல்ல நினைத்தால் பொறுப்பு என்னும் சூரிய வெளிச்சம் நம்மைப் பொசுக்கிவிடும். மற்றவர்களின் நிழலில் அறியப்படாதவர்களாக இருப்பது இதைவிட எவ்வளவோ மேல். ஆசகேல் இந்தப் பாடத்தை ஒரு சோக முடிவுடன் கற்றுக்கொள்ளுவான்.

புகழ் ஏணியில் ஏறுதல்

ஆசகேல் தீரச்செயல்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறிவிட முடியாது. அவனிடத்தில் இருந்த தைரியமும், துணிச்சலும் அவனுடைய சகோதரர்களிடமிருந்து அவன் பெற்றது. ‘ஆசகேல்’ என்னும் பெயரின் பொருள், ‘தேவன் கிரியை செய்கிறவர்’ என்பதாம். ஆசகேலும் தேவனைப் போலக் கிரியை செய்கிறவனாக இருக்க விரும்பினான். அவன் வித்தியாசமாக ஒரு காரியத்தைச் செய்ய விரும்பினான். எல்லோராலும் நினைவு கூரக்கூடிய ஒரு காரியத்தைச் செய்ய விரும்பினான். முடியாது என்று கருதப்படும் ஒரு காரியத்தைச் செய்துமுடிக்க ஆசைப்பட்டான். தன்னுடைய மாமாவான தாவீது இராஜாவுக்கு என்ன தேவையோ அதைச் செய்து முடிக்க ஆயத்தமாய் நின்றான். கடைசியில் அவன் விரும்பிய நாள் வந்தது. அவன் தன் சகோதரர்களின் நிழல்களிலிருந்து உயரத் தூக்கி எடுக்கப்படும் நாள் அதுவாகும்.

தாவீது இராஜா மாதம் ஒருமுறை அரண்மனை ஊழியக்காரர்களை மாற்றுவது வழக்கம். 1நாளாகமம் 27:1 இப்படிக் கூறுகிறது: “தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆயிரத்துக்குச் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும், இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநாலாயிரம் பேர் இருந்தார்கள்”.

ஒரு மாதம் முழுவதும் ஒரு பிரிவான போர் வீரர்கள் இராஜாவுக்குச் சேவை செய்வார்கள். இந்த மாதம் முடிந்தபின் வருடத்தின் மீதி 11 மாதங்கள் வேலை செய்யத் தேசத்தின் ஏதாவது ஒரு பகுதிக்கு அனுப்பப்படுவார்கள்.

ஒவ்வொரு படைப் பிரிவிலும் 24000 பேர் இருந்தார்கள். இது யுத்தத்துக்குச் செல்லும் ஒரு தெரிந்தெடுக்கப்பட்ட பிரிவாய் அமைந்தது. இந்தப் பிரிவினரை வழிநடத்திச் செல்ல ஒரு நல்ல தலைவர் தேவை. ஒவ்வொரு பிரிவுக்கும் தகுதியான, திறமையான ஒரு தளபதி நியமிக்கப்பட்டிருந்தான்.

யாஷோபியாம் தாவீதின் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன். அவன் தாவீதின் முதற் படைப் பிரிவுக்குத் தளபதியாயிருந்தான். அவர்கள் வருஷத்தின் முதல் மாதத்தில் தாவீதுக்குச் சேவை செய்யவேண்டும். அது நம்முடைய காலக் கணக்கின்படி ஏப்ரல் மாதமாகும். மற்றத் தளபதிகளும் பெயர் பெற்றவர்களாயிருந்தார்கள். பெனாயா கிரேத்தியருக்கும், பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான் (1நாளா.18:17). அவன் “சிங்கம் போன்ற மோவாபிய பராக்கிரமசாலிகளைக் கொன்றவன்”. மேலும் அவன் “… உறைந்த மழை காலத்தில் அவன் இறங்கிப் போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்” (2சாமு.23:20). மேலும் தாவீதின் மரணத்துக்குப் பின் சாலொமோன் இராஜாவாக ஆவதற்கு மிகுந்த உதவி செய்திருந்தான். (1இராஜா.1ஆம் அதிகாரம்)

கடைசியில் ஆசகேல் இப்படிப்பட்ட பராக்கிரமசாலிகளின் வரிசையில் ஒருவனாகக் கருதப்பட்டான். அவன் தாவீதின் நான்காவது படைப் பிரிவின் தலைவன் ஆக்கப்பட்டான். அவனுடைய வீரர்கள் தாவீதுக்கு நான்காம் மாதம் சேவை செய்ய வேண்டும். அதாவது கோடைகாலம். உஷ்ணமான மாதங்கள். அப்பொழுது மற்றப் படைப்பிரிவுகள் வனாந்தரப் பகுதிகளிலும், எல்லைப்பகுதிகளிலும் இருப்பார்கள். ஆசகேலும், அவனுடைய பிரிவைச் சேர்ந்தவர்களும் எருசலேமில் பணிபுரியும் பொறுப்பைப் பெற்றுக் கொண்டார்கள். யூதேயாவின் உயர்ந்த பர்வதங்களின் உச்சியில் இருந்து பணியாற்றுதல். இது ஒரு நல்ல வேலையாயிருந்தது.

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்