பலவீனத்தில் மேன்மை

சகோ.ஜெப்ரி ஸ்டோனியர்
(செப்டம்பர்-அக்டோபர் 2019)

என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் (2கொரி.12:9) எனும் வரிகள் கிறிஸ்தவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டுகின்ற, பவுல் எழுதியவைகளிலேயே ஆச்சரியப்பட வைக்கும் வித்தியாசமான விஷயமாகும். அவ்வசனத்தை அவர், “ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்” என கூறி முடிக்கின்றார்.

அப்போஸ்தலனாகிய பவுல், பலவிதமான உபத்திரவங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்தாலும், எப்போதும் கிறிஸ்துவுக்காக சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தனது நிலைமையைக் குறித்து அவர் ஒருநாளும் முறுமுறுக்கவேயில்லை. அவர் அழுது புலம்பும் அப்போஸ்தலன் அல்ல. தைரியமற்ற கிறிஸ்தவன் அல்ல. மாறாக, கிறிஸ்தவ வாழ்வின் யதார்த்த நிலையை ஏற்றுக்கொண்ட ஒருவராவார்.

அத்துடன், பிற கிறிஸ்தவர்களின் வாழ்வில் செல்வாக்கு செலுத்துபவராக பவுல் இருந்தார். உங்களுக்காக வாழ்வில், உங்களுக்காக என் வாழ்வைத் தியாகம் செய்வதில் நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன் என்றே இவ்வசனத்தில் அவர் அறியத்தருகின்றார். அவர் ஒருபோதும் சோக மயமாகத் தன் முகத்தோற்றத்தை வைத்துக் கொண்டிருக்கவில்லை. கிறிஸ்துவின் மகிமையும் ஒளியும் மகிழ்ச்சியும் எப்போதும் அவரது வாழ்வில் பிரகாசித்துக் கொண்டிருந்தது, தேவன் தன்னை சிட்சித்தபோதும், உபத்திரவங்களும் நெருக்கடிகளும் தன் வாழ்வில் வர அனுமதித்த போதும், பவுல் அவற்றை சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டார்.

பவுலின் பலவீனங்கள்

தனது வாழ்விலிருந்த பெலவீனங்களைக் குறித்து பவுல் எவ்விதமான எண்ணமுடையவராக இருந்தார்? அவர் அவற்றில் மேன்மை பாராட்டினார். “இதுவே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால், எனது பல வீனங்களே எனது வாழ்வில் பெரும் நன்மையைக் கொண்டுவந்துள்ளன. எனவே அவற்றைக் குறித்து என்னால் மேன்மை பாராட்ட முடியும்” என்றே பவுல் கூறுகின்றார். பவுல் தன்னைக் குறித்து மேன்மை பாராட்டவில்லை. மாறாக, தேவன் அவருக்காக செய்தவைகள் குறித்தே மேன்மை பாராட்டினார்.

முதலாவது அம்சம்: (1கொரி.1:26-31)

இவ்வசனங்களில் கிறிஸ்துவே தனக்கு எல்லாமாக இருக்கிறார் எனப் பவுல் குறிப்பிட்டுள்ளார். ‘எல்லாமே எனக்கு கிறிஸ்துவே. அவரே எனக்காக எல்லாவற்றையும் செய்துள்ளார். நான் பிறப்பால் தாழ்வானவன் அல்ல, நான் பணக்காரன் அல்ல, இவ்வுலக ஞானிகள் என் அறிவைப் பரியாசம் பண்ணுகிறார்கள். என்னில் ஒன்றுமில்லை. ஆனால் தேவனோ ஒன்றுமில்லாதவைகளிலிருந்தும் ஏதாவதொன்றைச் செய்பவராக இருக்கிறார். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களையும் கீழே கொண்டுவருவதற்குத் தேவன் எவ்வித அந்தஸ்துமற்றவர்களையும் உபயோகிக்கின்றார். இது சகல கனத்தையும் மகிமையையும் தேவனுக்கே கொண்டுவருகின்றது. நாங்கள் உலகத்தில் தாழ்வானவர்களாகவும் இழிவானவர்களாகவும் கருதப்படுகின்றோம். ஆனால் தேவனுக்குள் நாம் எல்லாமாக இருக்கின்றோம். எனவே ஒருவன் மேன்மை பாராட்டுவானானால் அவன் தேவனிலே மேன்மை பாராட்டட்டும் (எரேமி.9:24) என்பதே பவுல் எழுதியுள்ளவற்றின் அர்த்தமாகும். இது உண்மையிலேயே மேன்மைபாராட்ட வேண்டியதொன்றாகவே உள்ளது.

இரண்டாவது அம்சம்: (கலாத்தியார் 6:14)

“நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார் பவுல்.

கிறிஸ்துவை உங்கள் வாழ்வின் மையமாக்கிக்கொள்ளுங்கள். வேறெதுவும் உங்கள் வாழ்வில் பிரதான இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். உலகம் என்பது ஒன்றுமில்லை. எனவே அதைக் குறித்து ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? இவை தற்காலிகமானவையும் பாவமானவையுமாகவே உள்ளன. கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தே மேன்மை பாராட்டுங்கள்.

கிறிஸ்துவின் சிலுவையே நான் இப்போதிருக்கும் நிலையை எனக்குத் தந்துள்ளது. சிலுவையில் மரித்து எனக்கு இந்நிலையைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளமையால் நான் சிலுவையைக் குறித்தே மேன்மைபாராட்டுவேன் என்பதே பவுல் இவ்வசனத்தில் அறியத்தரும் விஷயமாகும்.

மூன்றாவது அம்சம்: (2 தெசலோ. 1:4)

இங்கு பவுல், கிறிஸ்துவின் சபையைக் குறித்தே மேன்மை பாராட்டுகிறார். “நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக் குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மை பாராட்டுகிறோம்”.

தெசலோனிக்கேய சபையினரும் உபத்திரவங்களுக்கூடாகச் சென்றுகொண்டிருந்தனர். பவுலினுடைய இருதயம் அவர்களோடேயே இருந்தது. இதனால் அவர், “அன்பின் சகோதரர்களே, நீங்கள் படும் உபத்திரவங்கள் எத்தகையதென்பது எனக்கு நன்கு தெரியும். ஆயினும் உங்கள் விசுவாசம் பொறுமை என்பவற்றுக்காக நான் மேன்மை பாராட்டுகிறேன். ஏனென்றால், எனது உபத்திரவங்களிலும் பலவீனங்களிலும் மேன்மை பாராட்டும் தேவனுக்கு அவை மகிமையைக் கொண்டு வருகின்றன. மூன்று அம்சங்களும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் மேன்மை பாராட்டக்கூடிய விஷயங்களாகவே உள்ளன.

பலவீனங்கள் தோல்விகளா?

“என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” என்கிறார் பவுல் (2கொரி.12:9). உபத்திரவங்களுக்கு கிறிஸ்தவனது இயற்கையான பதில் அதிலிருந்து விடுபடுவதேயாகும். வியாதிகள் வருத்தத்தையும் வேதனையையும் கொண்டுவரும்போதும், இழப்புகள் வாழ்வில் வரையறைகளைக் கொண்டுவரும்போதும், விரக்தியையும் தோல்வியையுமே அனுபவிப்போம். இதற்கான எனது இயற்கையான பதில் அவற்றை நம் வாழ்விலிருந்து அகற்றுவதற்காக ஜெபிப்பதாகும். இதற்கு அடுத்ததாக நாம் செய்யும் காரியம், இதற்காக மற்ற கிறிஸ்தவர்களை ஜெபிக்கச் சொல்வதாகும்.

நமது நிலைமையைக் கருத்திற்கொண்டு பவுல் பின்வருமாறு கூறுகிறார்: “நான் என்னுடைய வாழ்விலிருந்து அகற்றும்படி தேவனிடம் கேட்ட பலவீனங்களே தேவனுக்கு மகிமையைக் கொண்டு வந்துள்ளன. இதனால் நான் என் பலவீனங்களிலேயே மேன்மை பாராட்டுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பவுலின் மாம்சத்திலிருந்த முள் என்னவென்பதைக் குறித்து நம்மால் எதுவும் திட்டமாகக் கூற முடியாதுள்ளது. இது சரீர பிரகாரமான ஒரு வியாதியா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

எனினும் இங்கு பவுல் தன் சரீர பிரகாரமான வியாதியையே ‘பலவீனம்’ என்ற பதத்தால் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால், புதிய ஏற்பாட்டில் 80 தடவைகள் இடம்பெறும் இப்பதம் 38 தடவைகள் சரீரப் பிரகாரமான வியாதியைக் குறிக்கவே உபயோகிக்கப்பட்டுள்ளது. பவுல் தனது பலவீனங்களை தேவனால் அனுமதிக்கப்படுபவையாகக் கருதி, அவற்றில் மேன்மை பாராட்டினார். இதனால் நான் மேன்மை பாராட்டவேண்டுமானால் என் பலவீனத்துக்கடுத்தவைகளைக் குறித்து மேன்மை பாராட்டுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார் (2கொரி. 11:30).

தனக்கு நேரிட்ட அனுபவங்களை குறித்து எழுதும்போது: “நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்று தரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒரு தரம் கல்லெறியுண்டேன், மூன்று தரம் கப்பற் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகத்தரம் பிரயாணம் பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுய ஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச் சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேக முறை கண் விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேக முறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவை களையல்லாமல், எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள் தோறும் நெருக்குகிறது (2கொரி.11:23-28).

இது பவுலினுடைய பலவீனங்களைப் பற்றிய நீண்டதொரு பட்டியலாகும். இதற்கு முடிவுரையாக, “ஒருவன் பலவீனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? நான் மேன்மை பாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்” (2கொரி.11:29-30) என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் நமது பலவீனங்களைக் குறித்து வேதனையடைகின்றோமா? பொதுவாக, நாம் நமது பலவீனங்களை எண்ணிக் கவலைப்படத்தான் செய்கின்றோம். ஆனால், அவ்விடத்திலிருந்து தேவன் நம்மை வேறிடம் வழிநடத்திச் செல்லும்வரை பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம்.

பலவீனத்தின் காரணங்கள்:

வாழ்வில் எல்லாமே முடிவில்லாத துயரங்களாக இருக்கும்போது நம் வாழ்வில் நடைபெறுவது யாது? தேவன் நம்மைப் பாதுகாக்கிறார் என்னும் மாபெரும் உண்மையை அச்சமயம் அறிந்துகொள்ளுவோம்.

“என் பலவீனங்களைக் குறித்து நாம் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” என பவுல் கூறியமைக்கான காரணங்கள் யாது? இதற்குக் காரணம், தன் வாழ்வின் பலவீனங்களைத் தேவன் அனுமதித்திருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தமையேயாகும். “கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி” (2கொரி.12:9) என பவுல் கூறுகிறார்.

இங்கே “தங்கும்படி” என்ற பதம் மூலமொழியில் “கூடாரம்” என்ற அர்த்தம் தருகின்றது. பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக் கூடாரத்திலேயே தேவனுடைய மகிமை வெளிப்பட்டது. அவருடைய மகிமையைக் கண்டதாக யோவான் தனது சுவிசேஷ நூலில் குறிப்பிட்டுள்ளார் (யோவா.1:14). யோவானால் எப்படி தேவனுடைய மகிமையை காணக் கூடியதாயிருந்தது? ஏனென்றால், “வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்” பவுல் உபயோகித்த அதே பதமே இங்கு வாசம் பண்ணுவதற்கும் உபயோகிக்கப்பட்டுள்ளது.

நாம் நெருக்கடியான சூழ்நிலைகளில், வேதனைகளை அனுபவிக்கும்போது நாம் தேவனுடைய கரிசனைக்கு மிக அருகில் இருப்பதை நாம் அறிந்துகொள்வதோடு, நமது பலவீனங்களில் தேவனுடைய பிரசன்னம் நமக்கு வெளிப்படுவதோடு, அவரது மகிமையும் வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு வீதி விபத்தினால் சரீர பலவீனத்தினால் நான் பாதிக்கப்பட்டிருந்தபோது, நான் அதுவரையில் அறிந்திராத முறையில் தேவன் தன் அன்பை எனக்கு வெளிப்படுத்தினார். கிறிஸ்தவர்கள் தம் பலவீனத்தில் இவ்வாறு தெய்வீக அன்பை அறிந்துகொள்வார்கள். தேவன் இத்தகைய சந்தர்ப்பங்களில் நம் அருகில் இருப்பதனால், நாம் அவரால் பாதுகாக்கப்படுவதை உணருவோம்.

கிறிஸ்துவின் வல்லமைக்கான விவரணம்:

தேவனுடைய அன்பில் நாம் கிறிஸ்துவின் வல்லமையையும் பெற்றுக்கொள்கின்றோம்.

2கொரி.12:9 இல் “கிறிஸ்துவின் வல்லமை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொற்பிரயோகமும் புரிந்துகொள்வதற்கு சற்று கடினமானதொன்றாகும். மூலமொழியில் புதிய ஏற்பாட்டில் இவ் விடத்திலும் 2 பேதுரு 1:16லிலும் மட்டுமே இச் சொற்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. ‘இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்’.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் துயரங்களின்போது, அவற்றைத் தேவனின் பிரசன்னத்திற்கு கொண்டு வருவதற்கு தயங்குகின்றனர். துயரங்களில் களிகூருவதன்மூலம் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. ஆனால், பவுலினுடைய அனுபவம் சாதாரண கிறிஸ்தவர்களது செயல்முறையை விட மேலானது. தேவனுடைய வல்லமையானது நமது பலவீனங்களில் வெளிப்படுவது மட்டுமல்ல, அவர் தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் நமது துயரங்களை உபயோகிக்கின்றார்.

கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலனாகிய பவுலைப் போல, மற்றவர்களால் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில், கிறிஸ்துவின் வல்லமையை வெளிப்படுத்துவார்கள். பல நோயாளிகள், வியாதியஸ்தர்களின் வாழ்வில் கிறிஸ்துவின் வல்லமை வெளிப்பட்டுள்ளது. தேவன் சுகம் கொடுப்பவராக இருக்கின்றார்.

எனினும், எல்லா நேரங்களிலும் அவர் சுகம் தந்தேதான் ஆகவேண்டும் என்பதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களும்கூட தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகின்றன.

அந்தப்படி நான் பலவீனமாய் இருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும, நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும் இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் (2கொரி.12:!0) என பவுல் கூறுகின்றார்.

தேவனுடன் சமாதானமாக இருப்பது உண்மையிலேயே நித்திய அனுபவமாகும். நமக்குள் சமாதானமாயிருப்பது அதிசயமானது. ஆனால் நெருக்கடியும் பிரச்சனையும் மிகுந்த சூழ்நிலையிலும் நாம் சந்தோஷமாயிருப்பதானது கிறிஸ்தவ விசுவாசிக்கு இவ்வுலகத்தில் கிடைக்கும் மிகப் பெரிய ஆசீர்வாதமாகும்.

நமது பலவீனங்களைக் குறித்து நாம் இனிமேல் கவலைப்படாமல் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்பட பவுலைப் போல நாமும் நம்மை விட்டுக்கொடுப்போமாக!

சத்தியவசனம்