ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

நவம்பர்-டிசம்பர் 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

இவ்வளவாய் இவ்வுலகத்திலும் நம்மிடத்திலும் அன்புகூர்ந்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வாண்டின் இறுதி பகுதிக்குள் வந்திருக்கிறோம். இவ்வருடத்தில் நாம் கடந்து வந்த பாதைகள் அனைத்திலும் தேவன் நமக்குப் போதுமானவராக இருந்திருக்கிறார். “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” (சங்.103:2) என்ற சங்கீதக்காரனின் வாக்கின்படியே தேவன் நமக்கும் நமது குடும்பத்திற்கும் பாராட்டின நன்மைகளுக்காக கர்த்தருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி அவரைத் தொழுதுகொள்வோம்.

அக்டோபர் 2-ம் தேதி சென்னையிலும் 26-ஆம் தேதி ஈரோட்டிலும் சத்தியவசன விசுவாசப் பங்காளர் கூடுகை சிறப்பாக நடைபெற தேவன் கிருபை செய்தார். சென்னையிலும் ஈரோட்டிலும் விசுவாசப் பங்காளர்களைச் சந்தித்ததில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசனம் 2020ஆம் ஆண்டு காலண்டர் அச்சுப் பணியில் உள்ளது. கூடிய விரைவில் விசுவாச பங்காளர்களுக்கு அனுப்பி வைப்போம்.

இவ்வருடம் முழுவதும் தங்கள் அன்பின் ஈகையாலும் ஜெபத்தாலும் சத்தியவசன ஊழியத்தைத் தாங்கிவந்த அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி களைத் தெரிவிக்கிறோம். வருகிற புதிய ஆண்டிலும் தேவன் சத்தியவசன ஊழியப் பணிகள் மூலமாக இன்னும் அநேகமாயிரம் ஆத்துமாக்கள் ஆதாயப்படுத்தப்படவும் இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்ய அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் கிறிஸ்துமஸின் சிறப்பைக் குறித்து பேராசிரியர் எடிசன் அவர்கள் எழுதிய சிறப்பு செய்தியும் பரம சேனையைத் தரிசித்த மேய்ப்பர்களின் அனுபவத்தைக் குறித்து சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் அளித்த அருளுரையும் இடம்பெற்றுள்ளது. உலகின் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த அறிவிப்பைக் குறித்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். இருளான இவ்வுலகில் நம்பிக்கை நட்சத்திரமாக இயேசு எவ்வாறு நம் மத்தியில் உதித்தார் என்பதைக் குறித்து சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். இயேசு பிறப்பில் சமாதான அறிவிப்புகள் மாத்திரமல்ல; அபாய அறிவிப்புகளும் உண்டு என்பதைக் குறித்து Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் தனது அருளுரையில் விளக்கியுள்ளார்கள். நான் சிறுக வேண்டும்; அவர் பெருக வேண்டும் என்ற முழக்கத்தோடு இறுதிவரை தாழ்மையோடு இருந்து இரத்த சாட்சியாய் மரித்த யோவான் ஸ்நானகனைக் குறித்து கலாநதி தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் அளித்த வேதபாடமும் இவ்விதழை சிறப்பிக்கிறது.

இச்செய்திகள் அனைத்தும் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். இக்கிறிஸ்துமஸ் நாட்களில் தங்கள் குடும்பங்களில் சந்தோஷமும் சமாதானமும் தேவனுடைய ஆசீர்வாதமும் நிறைந்திருப்பதாக!

கே.ப.ஆபிரகாம்


சத்தியவசன நேயர்கள், பங்காளர்கள், ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள், பிரதிநிதிகள் யாவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும், ஊழியர்கள் சார்பாகவும் அன்பின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம் !!

சத்தியவசனம்