கிறிஸ்துமஸின் சிறப்பு

– பேராசிரியர் S.C.எடிசன் –
(நவம்பர்-டிசம்பர் 2019)

சத்தியவசன வாசகர்களுக்கு என் அன்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இயேசு பிறந்ததால் உண்டான அன்பும் சந்தோஷமும், சமாதானமும் உங்களோடும் உங்கள் குடும்பத்தோடும் இருப்பதாக.

கிறிஸ்துமஸ் பாடல்களின் காலம்.
Christmas is a season of Songs:

இயேசுவின் பிறப்பைக் குறித்து மரியாளுக்கு தேவ தூதன் சொன்னபோது இது எப்படி யாகும் என்று கலங்கினாள். ஆனால் எலிசபெத்தின் வீட்டில் எலிசபெத்து மரியாளை வாழ்த்தினபொழுது மரியாள் ஒரு அருமையான பாடலை பாடினாள். Magnificant எனும் இப்பாடலை மாலை ஆராதனைகளில் பாடுவார்கள். தன்னைத் தாழ்த்தி, “அடிமையின் தாழ்மையில் என்னை நோக்கிப் பார்த்தார்” என்று தேவ கிருபையையும் இரக்கத்தையும் பாடினாள். இயேசு பிறந்தபொழுது தேவதூதர்கள் வயல் வெளியிலிருந்த மேய்ப்பர்களுக்கு பாடினர்.

லூக்கா 2:13,14ஐ வாசியுங்கள்! “அந்த க்ஷணமே பரமசேனையின் திரள் அந்த தூதனுடனே தோன்றி உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று பாடினர்”. இயேசுவை எட்டாம் நாளிலே தேவாலயத்திற்கு கொண்டு வந்தபொழுது சிமியோன் இயேசு பாலனைக் கையிலேந்தி “இப்பொழுது அடியேனை சமாதானத்தோடு போகவிடுகிறீர்” என்று பாடினான். எதைக் குறித்து பாடுகிறோம்?

இந்த பாடல்கள் நமக்கு எதைச் சொல்லுகின்றன? நமக்கு ஒரு நற்செய்தி பாடலாக அறிவிக்கப்படுகிறது. எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷ முண்டாக்கும் நற்செய்தி. அது என்ன? பாவத்திற்கு அடிமையாயிருந்த நமக்கு விடுதலையளிக்க இயேசு பிறந்தார். மரண இருளின் பயத்தில் இருந்தவர்களுக்குப் பயத்தை நீக்கும் வெளிச்சமாக மெய்யான ஒளியாக இயேசு பிறந்திருக்கிறார் என்பதே.

சகோதரனே, சகோதரியே! கிறிஸ்துமஸ் உனக்கும் ஒரு நற்செய்திதான். உன்னைத் தேடி மீட்கும்படிதான் இயேசு மனிதனாகப் பிறந்தார். அவரை ஏற்றுக்கொள். அவர் உன் பாவங்களை மன்னித்து மனசாட்சியில் விடுதலை தந்து உன்னை சந்தோஷத்தால் நிரப்புவார். வாழவழி தெரியாமல் இருளில் தடுமாறுகிற உனக்கு வெளிச்சமாக உன்னோடு இருப்பார். இயேசுவே என்னை ஏற்றுக்கொள்ளும் என்று சொல். உன்னை தன் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு உனக்குள் வாசம்பண்ணுவார்.

கிறிஸ்துமஸ் கொடுப்பதற்கான காலம்:
Christmas is a season of Giving:

கிறிஸ்துமஸ் காலங்கள் ஒரு வருக்கொருவர் வெகுமதி கொடுக்கும் காலம். வெகுமதி (Gifts) கொடுப்பவருக்கும் சந்தோஷம் – பெற்றுக்கொள்பவர்களுக்கும் சந்தோஷம். எல்லாவற்றிலும் மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் வெகுமதி இயேசுவே.

திருச்சபைகளும், சேவை சங்கங்களும் வசதியற்றவர்களுக்கு இந்த காலங்களில் பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்துவார்கள். தேவனாகிய பிதாவும் முதல் கிறிஸ்துமஸில் இதே சந்தோஷத்துடன்தான் இருந்தார். காரணம் பாவமனுக்குலத்தை இரட்சிக்க, தன்னுடைய சொந்த குமாரனையே பலியாக சிலுவையில் மரிக்க அனுப்பினார். இதுதான் உலக சரித்திரத்திலேயே மிகப் பெரிய பரிசு!

நாமும் இப்படியே நம்மைப் பாதிக்கும் அளவிற்கு கொடுக்கவேண்டும். அன்பிருந்தால் தான் இப்படி கொடுக்கமுடியும். யோவான் 3:16ஐ வாசியுங்கள்: “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. பிதா இயேசுவைத் தந்து, நம் மேல் உள்ள தமது அன்பை வெளிப்படுத்தினார். எனவே நாமும் அன்பினால் மற்றவர்களுக்கு உதவி செய்து தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் இங்கிலாந்தின் மீது குண்டு வீசி தாக்கியதால் விளக்குகள் ஏற்றாமல் இருந்தார்கள். கிறிஸ்துமஸ் வந்தது. தங்களுடைய பிள்ளைகள் கிறிஸ்துமஸை சந்தோஷமாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டம்பண்ணி தூரத்திலுள்ள ஒரு தீவிற்கு கப்பல் மூலம் அனுப்பினார்கள்.

அந்த ஊர் ஆலயத்தில் சுமார் 40 பிள்ளைகள் வந்தனர். அந்த ஆலய போதகர் சொன்னார்: “யார் யார் இந்த பிள்ளைகளை ஏற்றுக்கொள்வீர்களோ, அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.

ஒரு விதவைத் தாய் தன்வீட்டில் உள்ள இடத்திற்கு தகுந்தபடி 3 பிள்ளைகளை ஏற்றுக்கொண்டாள். கடைசியில் ஒரு சிறு பையன் நின்றான். அவன் பெயர் கென்னி. ஒருவரும் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவன் பெற்றோரை நினைத்து அழுதுகொண்டே இருந்தான். இவனைக் கொண்டுபோனால் நாம் சந்தோஷமாயிருக்க முடியாதென்று நினைத்தவர்கள் அவனை விட்டுவிட்டு போய் விட்டார்கள்.

போதகருக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை. கடைசியில் அவர் அந்த விதவைத் தாயைக் கூப்பிட்டு இவனையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அந்தத் தாய் அவனைப் பார்த்து, மன துருகி, ஐயா, எப்படி இந்த பிள்ளையை விட்டுச் செல்வேன். என் கட்டிலை இவனுக்கு கொடுப்பேன் என்று அழைத்துச் சென்றார்கள்.

கென்னியின் அழுகை குறைந்தது. வீட்டிற்குச் சென்று அவன் உடையை மாற்றியபோது அவனது உள்ளாடையில் ஒரு கவர் இருந்தது. அந்த கவரில் “என் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் தாய்க்கு” என்று எழுதியிருந்தது. பிரித்துப் பார்த்தால் உள்ளே 500 பவுண்ட் இருந்தது. 1941ல் அது ஒரு பெரிய பொக்கிஷம்! அந்தத் தாயின் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை!!

கிறிஸ்துமஸ் ஒப்புரவாகுதலின் காலம்:
Christmas is a Season of Forgiving

ஏதேனை விட்டு துரத்தின மனிதனை தேடிவந்து, அவனுடைய பாவத்தினின்றும் சாபத்தினின்றும் விடுவிக்க தேவன் தம்முடைய சொந்த குமாரனையே பலியாக அனுப்பினார். இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தாலே நம்மை தேவனோடு ஒப்புரவாக்கினார். பகை ஒழிந்ததால் மனுஷர்மேல் பிரியம் உண்டாயிற்று. இந்த கிறிஸ்துமஸ் நாம் மற்றவர்களை மன்னித்து, அவர்களுடன் ஒப்புரவாகி, அன்பு செலுத்தும் நாட்களாய் இருக்கட்டும்! குடும்பத்திற்குள் இன்னும் பிரிவினைகள் உண்டா? இன்னும் பேசாதவர்கள் உண்டா? உள்ளத்தில் வெறுக்கிறவர்கள் உண்டா?

இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம், அவரைப்போலவே தாழ்மையும், சாந்தமும் உள்ளவர்களாய் மாறுவோம். இதுவே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். ஒவ்வொரு கிறிஸ்துமஸ்-ம் நாம் இயேசுவைபோல் ஆவதற்கு தேவன் கிருபையாய் தரும் தருணங்களாகும். எத்தனையோ கிறிஸ்துமஸ்களை வீணாக்கி விட்டோம். இந்த கிறிஸ்துமஸையாவது தேவனுக்கு பிரியமானபடி கொண்டாடுவோமா?

கிறிஸ்துமஸ் நன்றி சொல்லும் காலம்:
(Christmas is a Season of Thanks giving)

பிதா தனது குமாரனை நமக்கு அனுப்பினதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்லுகிறோம். குமாரன் தன்னுடைய இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டதற்காக அவருக்கு நன்றி சொல்லுகிறோம். “அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்.1:21) என்று சொன்னதினால் நாம் தேவனுக்கு நன்றி சொல்லுகிறோம். அவர் நம்மை இரட்சித்ததற்காக நன்றி சொல்லுகிறோம். பரலோகத்தின் வாசலை திறந்ததற்காக நன்றி சொல்லுகிறோம்.

கிறிஸ்துமஸ் இல்லையேல் கல்வாரி இல்லை, கல்வாரி இல்லையேல் நமக்கு பரலோகமும் இல்லை. எனவே, இந்த கிறிஸ்துமஸிலே தேவன் நமக்கு இரட்சிப்பை தந்ததற்காய் நன்றி சொல்லுவோம். நமது குடும்பத்தை அவர் இரட்சித்ததற்காகவும், அவரை ஆராதிக்கும்படியாக நம்மை அவரது சபையில் சேர்த்துக்கொண்டதற்காகவும், அவருக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். நம் மூலம் கிறிஸ்துவை அறிந்துகொண்ட ஆத்துமாக்களுக்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நீங்கள் இப்படி யாக இயேசுவின் பிறப்பை மற்றவர்களுக்குச் சொல்லி, அவர்களை பாவப்பிடியிலிருந்து விடுவிப்போம்.

சத்தியவசன நேயர்கள் வாசகர்கள் யாவருக்கும் என் அன்பின் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

சத்தியவசனம்