பெத்லகேமில் பிறந்த இரட்சகர்!

Dr.உட்ரோ குரோல்
(நவம்பர்-டிசம்பர் 2019)

சத்தியவசன வாசகர்களுக்கு என்னுடைய அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

நூற்றாண்டுகள் பல கடந்தாலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இன்றும் புதுமையாகவே விளங்குகிறது. நான் கல்லூரியில் படிக்கும் பொழுது கிரேக்க ரோம வரலாற்றை விரும்பிப் படிப்பேன். அந்த சரித்திரம் பரிசுத்த வேதாகமத்திலுள்ள வரலாறுகளுடன் நன்கு பொருந்துவதை நான் ஆர்வத்துடன் கவனித்தேன். வரலாற்றில் மாத்திரமல்ல, நம் அனைவருடைய வாழ்க்கையிலும் தேவனுடைய கரம் செயல்படுவதை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள் என நம்புகிறேன். தேவதூதர்கள், வல்லமையான அரசர்கள், ஏழை மேய்ப்பர்கள், மரியாள் மற்றும் யோசேப்பு இவர் களது வாழ்வை நாம் ஆராய்ந்து பார்ப்போமானால் அனைவரையும் தேவனுடைய கரம் இயக்குவதைத் தெளிவாக உணர முடியும். இந்த இதழில் பரிசுத்த லூக்காவின் கண்ணோட்டத்தில் அவரது பிறப்பின் சிறப்பை நாம் நோக்குவோம்.

லூக்கா எழுதின நற்செய்தி நூலின் இரண்டாம் அதிகாரத்தில் காணப்படும் மனிதர்கள் விசேஷித்தவர்கள். முதலாவது வசனத்தில் நாம் அகஸ்டஸ் இராயரை சந்திக்கிறோம். “அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்று அகுஸ்து ராயனால் கட்டளை பிறந்தது” (லூக்கா 2:1). இவர் கி.மு. 31 முதல் ஆகஸ்டு 19 கி.பி.14 வரை ரோமாபுரியை அரசாண்டார் என்பதை வேதாகமமும் வரலாறும் கூறுகிறது. இவர் ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரால் தத்தெடுக்கப்பட்டவர். ஜூலியஸ் சீசர் கி.மு.44இல் இறந்த பின்னர் ஆக்டேவியஸ் என்னும் அகஸ்டஸ் சீசர் அரசரானார். ஆனால் மார்க் அந்தோனி, லெப்பிடஸ் என்பவர்களுடன் ஒரு அரசியல் முக்கூட்டணியை அமைத்துக்கொண்டு ஆட்சி செய்தார். இவர்கள் “மாபெரும் முக்கூட்டணி” என்று அழைக்கப்பட்டனர். மார்க் அந்தோணி மற்றும் லூப்பிடஸ் இவர்களை வென்ற அகஸ்டஸ் அதிகாரம் முழுவதையும் பெற்று ரோமப் பேரரசை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.

கி.மு.27இல் ரோம செனட் சங்கமானது “நாங்கள் உங்களை எப்படி அழைக்கவேண்டும்?” என்று ஆக்டேவியஸைக் கேட்டனர். “முதன்மைக் குடிமகன்” என்ற பதிலை அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆக்டேவியஸ் சில நொடிகள் சிந்தித்த பின்னர் “மேன்மை மிக்கவர்” என்று அழையுங்கள் என்று கூறினார். இலத்தீன் மொழியில் மேன்மைமிக்கவர் என்பதற்கு அகஸ்டஸ் என்ற சொல்லை பயன்படுத்துவர். அவருடைய இயற்பெயர் ஆக்டேவியஸ் ஆகும். மேன்மை மிக்கவர் என்பதால் அகஸ்டஸ் என்று பெயர் பெற்று ரோம சாம்ராஜ்யத்தின் பேரரசர் ஆனார்.

“சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதி பதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று” (லூக்கா 2:2). சிரேனியு என்பவர் கி.மு.12இல் சீரியா தேசத்தின் வடபகுதிக்கு ஆலோசகராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். இவர் இரண்டு முறை குடிமதிப்பெழுதுவித்தார். முதலாம் குடிமதிப்பு கி.மு.6ம் வருடத்தில் எழுதப்பட்டது. இதைத்தான் பரி. லூக்கா தனது நற்செய்தி நூலில் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் குடிமதிப்பு கி.பி.6ம் வருடம் எழுதப்பட்டது. இது அப்போஸ்தலர் 5ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப்.5:37). “அகுஸ்து ராயனால் பிறப்பிக்கப்பட்ட கட்டளை” என்பதால் அதற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும்.”அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்” (லூ.2:3).

இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டைப் பற்றி சில மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், அகுஸ்து ராயனின் கட்டளையின்படி ஜனங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான் (லூக்கா.2:4).

அகஸ்டஸ் சீசர் ரோம தேசாதிபதி என்பதும் சிரேனியு என்பவர் சீரியா தேசத்து அதிபதி என்பதும் வெறும் வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; தேவனுடைய பரிபூரண திட்டத்தை அது தெளிவாகக் காட்டுகிறது. மரியாளும் யோசேப்பும் கலிலேயாவின் வடபகுதியில் வசித்து வந்தனர். ஆனால் மேசியா யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறக்க வேண்டும். யோசேப்பின் சொந்த ஊரான பெத்லகேமுக்கு வர அவர்கள் கலிலேயாவைவிட்டு கிளம்ப வேண்டும். தேவதிட்டத்தை அறியாத அகுஸ்து இராயன், “எனக்குக் கீழ் வாழும் யூத மக்களிடமிருந்து எனக்கு வரும் பணம் எவ்வளவு என்று அறிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. எனவே மக்கள் தொகையைக் கணக்கிடவேண்டும்” என்று ஆணையிட்டார். எனவே குடிமதிப்பு எழுதுவதற்காக யோசேப்பு நாசரேத்திலிருந்து பெத்லெகேமுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அவருக்கு மனைவியாக நியமிக்கப்பட்ட மரியாளும் உடன் சென்றாள்.

யோசேப்பின் வம்சவரலாறை மத்தேயு நற்செய்தியாளர் தனது முதல் அதிகாரத்தில் விவரித்துள்ளார். ஆனால் லூக்கா தனது நூலின் மூன்றாம் அதிகாரத்தில் மரியாளின் குடும்பத்தைப் பற்றி எழுதியுள்ளார். எனவே இயேசுவின் வம்ச வரலாறை மரியாளின் வழியாகவும் யோசேப்பின் வழியாகவும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்த இரு வம்சங்களின் முன்னோர்கள் வேறுபட்டவர்கள். ஆனால் அவர்கள் தாவீது அரசரில் ஒன்று சேருகின்றனர். இருவரும் தாவீதின் வழித்தோன்றல்கள்.

யோசேப்பு, ஒரு தச்சர் என்று நாம் அறிவோம். அதனால் அது அவர் வீடுகளைக் கட்ட வெளியே செல்வார் என்ற பொருளைத் தராது. அத்தேசத்தின் வீடுகள் கல்லுகளால் ஆனவை. எனவே தச்சர் என்ற சொன்னால் அவர் மரச்சாமான்களை அல்லது விவசாயம் தொடர்பான கருவிகளைச் செய்பவர் என்பது பொருளாகும்.

யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா மற்றும் பெயர் எழுதப்படாத சகோதரிகளுக்கும் யோசேப்பு தகப்பன் என்பதை மாற்கு 6:3 இலிருந்து நாம் அறிகிறோம். அவர் ஒரு சிறந்த மனிதர். ஆயினும் அவர் இயேசுவின் வளர்ப்பு தந்தையே.

இம்மாந்தர்களில் முக்கியமானவர் மரியாள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி (லூக்கா.2:5) பெத்லகேம் சென்றார். மரியாள் கன்னியாக இருந்தாள்; கர்ப்பவதியாகக் காணப்பட்டாள். ஒருவேளை அவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கவேண்டும். இங்கு அவர் யோசேப்புக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்டு கர்ப்பவதியாகக் காணப்பட்டாள் என்று எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் யூத மக்களிடையே நிலவிய திருமண நிச்சயத்தின் முறைகள் நமக்குத் தெரியாது. ஆனால் நெல்சன் வேதாகம விளக்கவுரை அகராதி, புதிய ஏற்பாட்டின் திருமண முறைகளை உங்களுக்கு எளிதாக விளக்குகிறது. இதிலிருந்து அவர்களுக்கிடையே இருந்த உறவை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

“வேதாகமக் காலங்களில் திருமண நிச்சயத்தில் ஒரு இளைஞனுக்கு ஒரு இளம்பெண்ணை குறித்து வைக்கும் ஒரு ஏற்பாடு ஆகும். இந்த நிச்சயமானது மரணம் அல்லது விவாகரத்தால் மட்டுமே உடைக்கப்படும். மரியாள் கர்ப்பவதியானாள் என்று யோசேப்பு அறிந்தபொழுது அவளை வெளிப்படையாக அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்திருந்தான். ஆனால்; அதனை அவனால் செயல்படுத்த முடியவில்லை. ஏனெனில் மரியாளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது என தேவதூதன் அவரிடம் கூறியிருந்தார்.

யூத கலாச்சாரத்தின்படி நிச்சயத்துக்கும் திருமண விழாவிற்கும் கால இடைவெளி இருக்கும். இவ்விடைப்பட்ட காலம் வேறுபடும். அக்காலத்தில் மணமகன் தனது தந்தையின் வீட்டில் மணமகளுக்குத் தேவையான வசதிகளை ஆயத்தப்படுத்துவான். மணமகள் தனது இல்லற வாழ்வுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளுவாள். திருமண நாளில் மணமகனும் அவரது நண்பர்களும் சிறப்பான ஆடைகளை அணிந்து மணப்பெண் வீட்டுக்குச் செல்வர். மீண்டும் தம்பதிகள் அவர்களது நண்பர்களின் ஆடலுடன் பாடலுடன் மணமகன் வீட்டுக்குச் செல்வர். மணமகன் வீட்டில் தம்பதிகள் சிறப்பாக ஆயத்தப்படுத்தியிருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்படுவர். அதன் பின்பு திருமணம் முழு நிறைவாகும். திருமண அறிவிப்பு கொடுத்த பின்னர் விருந்தினர்கள் ஒரு வாரம் திருமண வைபவங்களில் கலந்துகொள்வார்கள்.

இந்த நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடையே உள்ள காலத்தில்தான், மரியாளும் யோசேப்பும் கூடி வருமுன்னர் மரியாள் கர்ப்பவதியானாள் என்று கண்டுகொண்டனர். ஆண்டவராகிய இயேசு பிறக்கும் முன்னர் மரியாளுக்கும் யோசேப்புக்கும் இடையே எந்த உறவும் உண்டாகவில்லை என்பது மத்.1:18,25லிருந்து தெளிவாகிறது. நிச்சயதார்த்த சட்டத்தினால் இணைக்கப்பட்ட மரியாளும் யோசேப்பும் முதலாவது கிறிஸ்துமஸைக் கொண்டாடினார்கள். “அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவ காலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்” (லூக். 2:6-7).

லூக்கா 2 ஆம் அதிகாரத்தில் காணப்பட்ட சில மனிதர்களை நாம் அறிந்துகொண்டோம். “அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்” (லூக்.2:8,9). இந்த மேய்ப்பர்களைப் பற்றி நாம் விரிவாகக் காண்போம்.

முதலாவது அவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து சென்றார்கள். எனவே கூடாரங்களில் வசித்தார்கள். பாதுகாப்பு கருதி இரவிலே தங்கள் மந்தைகளை ஓரிடத்தில் வைத்திருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரும் கூடி தங்களுக்கு தேவையான உணவு மற்றும் பானம் ஆகியவற்றைத் தயார் செய்ய முடிந்தது. ஆனால் மேய்ப்பர்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் நகரத்துக்குள் பிரவேசிக்க அனுமதியில்லை. எனவேதான் நகரத்துக்கு வெளியே தங்கள் மந்தையை மேய்த்தார்கள். பொதுமக்கள் அவர்களை நம்பவில்லை. ஏனெனில் அவர்களில் சிலர் திருடர்களாயிருந்தனர். இன்றைய ஐரோப்பிய நாடோடிகளை இதற்கு ஒத்தவர்களாய் நாம் கருதலாம்.

இந்த மேய்ப்பர்களின் சமுதாயத்துக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி அறிவிக்கப்பட்டது மாபெரும் ஆச்சரியத்துக்குரியது. மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்பதிலிருந்து அது குளிர்காலம் அல்ல என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம். ஏப்ரல் மாதம் பஸ்கா பண்டிகையிலிருந்து இலையுதிர்காலம் வரைக்கும் மந்தைகள் பசுமையான மேய்ச்சல் நிலங்களிலேயே தங்கியிருக்கும். அந்த மந்தைகள் தேவாலயத்துக்கு சொந்தமானதும் அவை அங்கு பலியிடுவதற்காக வளர்க்கப்படுவதாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருவேளை அது உண்மையாகவும் இருக்கலாம்.

மேசியாவின் பிறப்பின் நற்செய்தி ஏன் மேய்ப்பர்களுக்கு முதலாவதாக அறிவிக்கப்பட்டது? ஏன் சீசருக்கு அறிவிக்கப்படவில்லை? யூதருக்கு இராஜா பிறக்கப்போகும் செய்தி ஏன் ஏரோது இராஜாவுக்கு கூறப்படவில்லை? இஸ்ரவேலின் ஆசாரியரும் மேசியாவுமானவரின் பிறப்பு தேவாலயத்தின் ஆசாரியர்களுக்கு சொல்லப்படவில்லை. மாறாக மேய்ப்பர்களுக்கே வெளிப்பட்டது. நீங்கள் அரசராகவோ ஆசாரியனாகவோ சமுதாயத்தில் உயர்நிலையிலோ இல்லாமல் இருக்கலாம்; ஆனால் தேவனுடைய கிரியை சாதாரண மக்களுக்கே தெரிவிக்கப்படும். அவர் பிரபுக்களுக்கு உதவியாயிராமல் எளியவர்களுக்கே உதவிக்கரம் நீட்டுவார்.

“எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார்” என்று பரி. பவுல் எழுதியுள்ளார் 1 கொரி.1: 26,27. அதாவது தேவன் சாதாரண மக்களாகிய நமக்குள் கிரியை செய்கிறார். தம்முடைய ஞானத்தையும் வல்லமையையும் நம்மில் விளங்கப்பண்ணுவதில்; அவர் பெரிதும் மகிழ்ச்சியடைகிறார். எனவேதான் மனுக்குலத்தின் மாபெரும் சரித்திரத்தில் மகா உன்னதமான பிறப்பின் செய்தியைப் பெற்றுக்கொள்ள மேய்ப்பர்களைத் தெரிந்து கொண்டார்.

இயேசு பெருமையுள்ளவராகவோ வல்லமையுள்ளவராகவோ வரவில்லை. ஒதுக்கப்பட்ட மக்களைத் தேடிவந்தார். தாழ்மையுள்ளவர்களிடமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களையுமே அவர் தேடி வந்தார். இந்த அறிவிப்பு ஏழை மக்களுக்கே தரப்பட்டது (லூக்கா 2:11)

இறுதியாக, நாம் தேவதூதர்களைப் பற்றி காண்போம். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறினார். ராஜாக்களுக்கும் ஆசாரியர்களுக்கும் மாத்திரமா நற்செய்தி என்று கூறினார்? இல்லை, அவர் மேய்ப்பர்களுக்குக் கூறிய நற்செய்தி அனைத்து மக்களுக்கும் உரியது. (லூக்கா 2:9-14)

ஏழை மக்களான மேய்ப்பர்களுக்கு இந்நற் செய்தி அறிவிக்கப்பட்டதால் இது சிறப்பான அறிவிப்பு அல்ல என்று நாம் கருதக்கூடாது. அது மேய்ப்பர்களுக்குக் கூறப்பட்டது. ஆனால் தூதர்களால் தரப்பட்டது. தேவன் சமுதாய ஏணிப்படியின் உயர்மட்டத்தில் உள்ளவர்களிடமும் அடிமட்டத்தில் உள்ளவர்களிடமும் கரிசனையுள்ளவராய் இருக்கிறார்.

தேவதூதனின் இந்த அறிவிப்பு தேவனுடைய ஷெகினா மகிமையுடன் வெளியிடப்பட்டது; மனுக்குலத்துக்குக் கிடைத்த மாபெரும் உன்னத அறிவிப்பு இது. நம்முடைய பாவம் மற்றும் குற்றங்களின் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக நமக்கு இரட்சகராக இயேசு தேவனால் கொடுக்கப்பட்டார்!

பரலோகத்தின் மேன்மையைத் துறந்து நம்முடன் வாழ அவர் சம்மதித்தது தேவன் நம்மை நேசிக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது. எனவேதான் “தேவன் நம்மோடு இருக்கிறார்” என்ற பொருளுடைய “இம்மானுவேல்” என்ற பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது. தேவன் மாம்சமாகி இப்பூமியில் வரவேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் அதைத் தெரிந்து கொண்டார். ஏழைகளான மரியாள் யோசேப்பு மற்றும் மேய்ப்பர்களுடன் வாழ்ந்து மனுக்குலத்துக்கு இரட்சகரானார். இது உலகில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த அறிவிப்பு!

இந்த அறிவிப்புக்குப் பின்னர் தூதர்கள் பரலோகத்துக்குப் போய்விட்டனர். மேய்ப்பர்களும் தங்களுடைய மந்தைவெளிக்குச் சென்றுவிட்டனர்; யோசேப்பு, தான் ஒரு தந்தை என்று பெருமிதம் கொண்டார்; மரியாளோ இவை அனைத்தையும் தன் இருதயத்திலே வைத்து சிந்தனை பண்ணினாள். இதைப்போன்றதோர் அறிவிப்பு அதற்குப் பின் வரவில்லை, இனி வரப்போவதுமில்லை.

ஏனெனில் இந்த அறிவிப்பு “உலகை மாற்றுபவர்” வந்துவிட்டார் என்று தேவனால் தரப்பட்டதாகும். ஒரு மதத்தலைவரோ, சிறந்த போதகரோ அல்லது நீதிநெறியாளரோ அல்லர்; அனைத்தையும் மாற்ற தேவன் அனுப்பியவர் பிறந்தார். அவர்தான் இயேசு. அனைவருக்கும் இவர் உரியவர். வசனம் 10ல் கூறியுள்ள எல்லா ஜனத்துக்கும் என்ற செய்தி சிலரால் ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது. ஒரு சிலர் அது மேற்கத்திய மதம் என்கின்றனர். ஆனால் இயேசு மத்திய கிழக்கு நாடுகளில் பிறந்தார். அது மத சார்புடையதுமல்ல. ஒரு சாதாரண சிற்றூரான பெத்லெகேமிலே பிறந்த ஒரு மனிதர் உலகின் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மதங்களுக்கும் இரட்சகரானவர். தேவன் ஒரே ஒரு இரட்சகரை இவ்வுலகிற்கு அனுப்பினார். இனி வேறு ஒருவரை இரட்சகராக அனுப்பப்போவதில்லை. அவரை வேறு மதங்களிலும் காணமுடியாது. பெத்லெகேம் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த வேளையிலேயே அவர் உலகமனைத்துக்கும் இரட்சகர் என்று அறிவிக்கப்பட்டார்.

நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் எந்த நாட்டைச் சேர்ந்தவராயினும் தேவன் உங்களை நேசிக்கிறார். உங்களுக்காக மரிக்க தமது குமாரனையே அனுப்பினார். இந்த இரட்சிப்பின் நற்செய்தியை நாம் அனைவருக்கும் அறிவிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாகும். இந்த கிறிஸ்மஸ் பண்டிகையில் இந்நற்செய்தியை கிறிஸ்துவை அறியாத மற்றவர்களுக்கு அறிவித்து நாம் கொண்டாடுவோமா?.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை


நினைவுகூருங்கள்!

மரித்துக் கொண்டிருக்கும் இவ்வுலகத்திற்கு உயிருள்ள இரட்சரைத் தவிர வேறெந்த வெகுமதியும் தேவையில்லை!

சத்தியவசனம்