நம்பிக்கை நட்சத்திரம்

சகோதரி சாந்தி பொன்னு
(நவம்பர்-டிசம்பர் 2019)

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசாயா 9:2).


“எவ்வளவுதான் விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருந்தாலும், அந்த வேகத்திலும் அதிகமாக மனிதனுக்குள் பயமும் திகிலும் அங்கலாய்ப்பும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு ஒரு உதாரணம், கடவுள் இருக்கிறார் என்று மனிதன் நம்பினாலும், பக்திமயமான பாடல்கள் பெருகினாலும், கிறிஸ்தவர்களுக்கு வேதாகம அறிவு அதிகமதிகமாக மேலோங்கினாலும், இன்று எதற்கெடுத்தாலும், மனிதன் உடனடியாக ‘ஆன்லைன்’ இதைத்தான் நாடுகிறான், இல்லையா!’ என்று ஒரு முதியவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மறுபடியும் கிறிஸ்து பிறப்பின் நினைவு கூரலின் நாட்களுக்குள் வந்துவிட்டோம். சில குறிப்பிட்ட வேதப்பகுதிகள்தான் இந்நாட்களில் தியானிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அதே ஆராரோ பாடல்கள், இந்த நாட்களுக்கு ஏற்ற சில செய்திகள், கொண்டாட்டங்கள், களியாட்டங்கள், பரிசுகள் பரிமாறல்கள் என்றும், விடுதலை மனநிலை (இது பாவத்திலிருந்து கிடைக்கிற விடுதலை அல்ல), விருந்து வைபங்கள் என்றும் எல்லாமே களைகட்டிவிடுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, கிறிஸ்து முழு உலகுக்குமே ஆண்டவர், உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்தவர் என்பதை விசுவாசித்தோ விசுவாசியாமலோ, முழு உலகமுமே இந்த நாட்களில் குதூகலிப்பதையும், தங்கள் பொருளாதார நிலையை உயர்த்தப் பாடுபடுவதையும் மறுக்கமுடியாது.

ஆனால், இந்த உலகம் அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதையும், இனி இந்த உலகம் சந்திக்கப்போகும் பயங்கரங்களையும் அறிந்து உணர்ந்திருக்கிற தேவபிள்ளைகளும் இப்படியே நாட்களைக் கழிப்பது உகந்ததல்ல. உலகம் இருளுக்குள் தள்ளப்பட்டு வருகிறதையும், வெளிச்சம் என்று நம்பப்படுகிற காரிருளுக்குள் ஜனங்கள் கடந்துசென்று கொண்டிருப்பதையும் நாம் அறியாமல் இல்லை! அன்றாடம் நடக்கின்ற சம்பவங்களைப் பார்த்து, கேட்டறிந்து, ‘உலகம் எங்கே போகிறது’ என்கிற ஒரு பெருமூச்சோடு நமது பொறுப்பு முடிந்துவிடுகிறதா என்ற கேள்வியை, கிறிஸ்து பிறப்பின் இந்த நாட்களில் ஒருவிசை நம்மை நாமே கேட்டுப்பார்ப்போமாக.

ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதலில் தாக்குண்ட ஒரு சாதாரண நடுத்தர அல்ல, சற்றுக் குறைந்த குடும்பத்தைக் குறித்து தற்சமயமாக அறியவந்தபோது, அதனால் பாதிக்கப்பட்ட அந்த முழுக்குடும்பத்தில் அவலத்தை ஜீரணிக்க முடியாதிருந்தது. அந்தத் தாயார், ‘நாங்கள் எல்லோருமே செத்திடலாம் என்று தோன்றுகிறது’ என்று கலங்கிய கண்களுடன் கூறியது உள்ளத்தைக் கிழித்துவிட்டது. இவர்களைப்போல இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ! இப்படியிருக்க ஒரு கூட்டம் பெண்கள், கட்டாயத்தின் பேரில், கரோல் பாடல் ஆராதனையில் பாடுவதற்காக, நீண்டதூரம் பயணம் செய்வதற்காக பெருந்தொகை பணம் செலவுசெய்து புறப்படத் தயாராகும் செய்தி காதுகளில் எட்டியது. இவற்றை என்ன சொல்ல. இயேசு பிறப்பு கொண்டாடப்படவேண்டிய ஒன்று. இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நாம் எப்படிக் கொண்டாடுகிறோம், ஏன் கொண்டாடுகிறோம் என்ற உணர்வைக் குழிதோண்டிப் புதைப்பது சரியா!

யூதாவின் இருளடைந்த நிலைமையில் ஒரு அன்பின் செய்தி:

தேவபிள்ளைகள் நம்மிடம் ஒரு பாரிய, பரிசுத்த, மாறாத, நம்பிக்கையூட்டுகின்ற சத்தியமான அன்பின் செய்தி உண்டு. ‘நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்.’ இந்த வசனத்திலே, ‘பிறந்தார், கொடுக்கப்பட்டார்’ என்று முடிவுற்ற சம்பவமாக எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த இந்தத் தீர்க்கதரிசனத்தை அவர் பிறப்பதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏசாயாவினால் உரைக்கப்பட்டபோது, அன்றைய மக்களின் நிலைமையை நாம் சற்றுத் திரும்பிப்பார்ப்பது நல்லது. அன்று யூதா இருளடைந்த நிலையில் இருந்தது என்பதே உண்மை.

கர்ததரால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல், மற்ற நாடுகளைப்போல தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டுமென்று அடம்பிடித்ததும், சவுல் ராஜாவாக ஏற்படுத்தப்பட்டு கர்த்தரால் அவன் தள்ளப்பட்டதும், பின்னர் தாவீது, சாலொமோன் என்பவர்கள் சமஸ்த இஸ்ரவேலையும் அரசாண்டதும், சாலொமோனின் பாவத்தால் அவன் மகனுடைய காலத்தில் ராஜ்யம் இரண்டாகப் பிரிந்து வட தென் ராஜ்யமாகி. இரண்டு பக்கமும் மாறிமாறி பல ராஜாக்கள் ஆண்டதும் நாம் அறிந்திருக்கிற விசயங்கள்தான். ஆனால், ஒட்டு மொத்தமாக, தேவனுடைய மக்களும், அவர்களுடைய ராஜாக்களும் தேவனை உண்மையாய் சேவிக்கத் தவறிவிட்டார்கள். என்றாலும், ஆசா, யோசபாத், எசேக்கியா, யோசியா போன்றவர்கள் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானவற்றைச் செய்தாலும், ஒரு கட்டத்தில் இடறிப்போனவர்கள்தான். எல்லோருடைய ஆரம்பமும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், காரியங்கள் வாய்த்திருக்க, யுத்தமின்றி அமைதலுண்டாக, ஐசுவரியம் பெருக இவர்களுடைய நடவடிக்கைகள் தேவனுக்குப் பிரியமற்றதாய் மாறிப்போனதாகவே வாசிக்கிறோம். இன்றும் நிலைமை இதுதானே. நெருக்கங்கள் வரும்போது தேவனை நோக்கி ஓலமிடுகிற நாம், எல்லாம் சுமுகமாக வரும்போது எல்லாவற்றையும் மறந்து நம் வழி நடக்கிறோம் அல்லவா!

இந்த வரிசையில் உசியா ராஜாவும் ஒருவன். அவனுடைய ஆரம்பமும் நன்றாகவே இருந்தது (2நாளா.26ம் அதிகாரம்). ஆனால், அவன் பலப்பட்டபோது மனமேட்டிமையாகி, கர்த்தருக்கு விரோதமாகத் தூபங்காட்ட ஆலயத்துள் பிரவேசித்தான். இதன் பலனாக அவன் மரணமட்டும் குஷ்டரோகியாகவே இருந்தான். இவன் மரித்தபோது, மக்கள் நம்பிக்கையிழந்து தவித்தனர். அப்போது தேவன் ஏசாயாவுக்கு ஒரு உன்னதமான தரிசனத்தைக் கொடுத்து, யூதாவை மனந்திரும்புதலுக்கு அழைக்கும்படி அனுப்பியதை ஏசா.6ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். உசியாவின் மகன் யோதாமுக்குப் பின்னர், அவன் மகன் ஆகாஸ் ராஜாவானான்.

ஆகாஸ் ராஜாவின் ஆரம்பமே தப்பாயிற்று. அதனால் தேவனாகிய கர்த்தரே அவனைச் சீரியருடைய ராஜாவினதும், இஸ்ரவேல் ராஜாவினதும் கைகளில் கொடுத்தார். ஆகாஸ் பயந்தான். அவன் தேவனுக்குப் பிரியமில்லாமல் நடந்த போதும், கர்த்தர் ஏசாயாவை அனுப்பி, “நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார். உன் இருதயம் துவள வேண்டாம்” என்று தைரியப்படுத்தினார். மேலும், இந்த இடத்திலே இஸ்ரவேல் என்ற வடராஜ்யத்தின் முடிவும் அறிவிக்கப்பட்டது (ஏசா.7:16). அதுவும் யூதாவுக்கு ஒரு எச்சரிப்பாகவே இருந்தது. மாத்திரமல்ல, அசீரியாவினால் வரக்கூடிய பாதிப்பையும் கர்த்தர் அறிவித்தார். என்றாலும், இஸ்ரவேலின் முக்கிய நகரங்களாகிய செபுலோன், நப்தலி நாடுகளின் உண்டான இருள் நிச்சயம் அகலும் என்றும், ‘இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது’ என்றும் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தான். இது இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியதை மத்தேயு 4:13-16 வரையான வசனங்களிலே வாசிக்கிறோம்.

வாக்குமாறாத கர்த்தர்:

தாவீதுக்குக் அருளிய வாக்கிலிருந்து கர்த்தர் ஒருபோதும் விலகவுமில்லை, மாறவுமில்லை. கர்த்தத்துவத்தை, அதாவது ஆளுகையைத் தன் தோளிலே கொண்டிருக்கிற மேசியாவின் வருகை, ஆசாவின் காலத்திலேயே தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டுவிட்டது என்பதைக் கவனிக்கவேண்டும். அதை ஏற்றுக்கொண்டாவது ஜனங்கள் மனந்திரும்பினார்களா? இல்லை. தொடர்ந்து வந்த ராஜாக்களின் காலங்களிலும் பல தேவ துரோகங்களை ஜனங்கள் செய்தார்கள். என்றாலும், கர்த்தர் தமது பிள்ளைகளுக்குக் கொடுத்த நம்பிக்கை, ஏற்றகாலத்திலே இயேசுகிறிஸ்துவில் நிறைவேறியது. அவரைத்தான் நாம் இன்று அனுபவிக்கிறோம்.

ஆனால், ஒரு விஷயம், தேசம் இருளடைந்து நம்பிக்கையற்ற நிலையில் தடுமாறியபோதும், கர்த்தர் அவர்களுடைய மனமேட்டிமைக்குக் கணக்கு வைக்காமல் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியைக் கொடுத்தாரே, அதை நாம் இந்த நாட்களில் சிந்தித்து செயலாற்றுவது சிறந்தது. அதற்காக, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நடந்த இந்த சங்கதிகள் இன்று நமக்கு எதற்கு என்று நாம் எண்ணலாம். உண்மைதான், ஆனால், அன்று கர்த்தருடைய ஜனம், பாவ இருளுக்குள் தள்ளப்பட்டு, தங்களை ஆண்டு கொண்ட ராஜாக்களால் தேவனுக்கு விரோதமாக நடத்தப்பட்டபோதும், கர்த்தர் தமது தீர்க்கன் மூலமாக ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தாரென்றால், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்க்கதரிசனம் இன்றும் நமக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளாகவே இருக்கின்றன; அந்த நம்பிக்கை நட்சத்திரத்தை அந்த வெளிச்சத்தை நாம் மறைத்து வைக்க முடியாது அல்லவா! அதற்காக வீதிகளிலும் வீடுகளிலும் ஆலயங்களிலும் ஒளிவிளக்கு ஏற்றுவது அல்ல இதன் அர்த்தம். எங்கெங்கே மக்களின் வாழ்வு இருண்டுபோயிருக்கிறதோ அங்கெல்லாம் ஒளியேற்றவேண்டிய பொறுப்பு நம்முடையதல்லவா!

உரைக்கப்பட்டபடியே நம்பிக்கை நட்சத்திரம் உதித்தார்:

கர்த்தர் உரைத்தபடியே நித்திய ராஜாவாக கிறிஸ்து வந்து பிறந்தார். அதிலும் இல்லாமற்போன வடராஜ்யத்தின் பகுதிகளாகிய செபுலோன் நப்தலி நாடுகளாகிய, புற ஜாதிகளின் நாடாகிப் போன இந்த இடங்களிலேயே இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தார் என்றால், கிறிஸ்துவின் வெளிச்சம் இன்று இருளாய்ப்போன அனைத்து நாடுகளில் மாத்திரமல்ல, ஒவ்வொரு மனித வாழ்விலும் ஒளி வீச ஆயத்தமாகவே இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். ஆனால், மாம்சத்தில் வந்துதித்த இயேசு இன்று நம் மத்தியில் இல்லை. ஆனால், முன்னர் அந்த காரத்தில் இருந்து இப்போது அந்த ஆச்சரியமான ஜீவ ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அந்த மங்கிப்போகாத ஒளியை வாழ்வில் பெற்றுக்கொண்ட நாமேதான் அந்தப் பணியைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். அதற்கு நம்மை வழி நடத்தவே பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டுள்ளார். அந்தப் பெரிய பொறுப்பை, சுவிசேஷ உக்கிராணத்துவத்தை நாம் என்ன செய்கிறோம்?

உக்கிராணத்துவப் பொறுப்பு

இன்று, வசதி வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. பல பல புதிய கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் அல்ல, நிமிடத்துக்கு நிமிடம் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எங்கே பார்த்தாலும், மக்கள், அதிலும் தேவனுடைய பிள்ளைகளே மிகவும் பரபரப்பாகத் திரிகிறார்கள். கிறிஸ்தவ பணிகள் பெருகிவிட்டது. எங்கே பார்த்தாலும், கருத்தரங்குகள், பயிற்சிக் களங்கள், படிப்புகள் என்று பல விஷயங்கள் நம்மைக் கவர்ந்துகொண்டே இருக்கின்றன. அவை நல்லது, ஆனால், அதன் பின்னர் என்ன என்பதே கேள்வி. ஆலயங்கள் பெருப்பிக்கப்படுவதும், பிரமாண்டமான ஆலயக் கட்டடங்கள் எழும்புவதும் ஒருபுறம் என்றால், புதிய புதிய சத்தியங்கள், ஆழங்களில் தோண்டப்பட்டவையாகக் காட்டப்படுகின்ற வெளிப்பாடுகள் என்ற பெயரில் குழப்பமான போதனைகள் மறுபுறம். கிறிஸ்தவ நிகழ்ச்சிகள், கேரோல் பாடல்கள், வானொலி, காணொளி போதாதென்று ஆன்லைன் நிகழச்சிகள் ஏராளமாகிவிட்டது. ஏன், மொபைல் தொலைபேசியைத் திறந்தாலே பல கிறிஸ்தவ பாடல்கள் செய்திகள் வசனங்கள் என்று எத்தனை எத்தனை!

ஒரு காரியத்தை நாம் உணரவேண்டும். இத்தனை இருந்தும் மனிதன் நிம்மதியாக சமாதானமாகவா இருக்கிறான்? நன்றாய்த்தானே இருக்கிறான் என்று நீங்கள் கணக்குப்போடுகிற ஒருவரை மெதுவாக அணுகி, நட்பாகி, மெய்யான கரிசனையுடன் அவருடைய கரங்களை வருடிப் பாருங்கள்; கண்கள் கண்ணீர் கொட்டும். வாழ்வு முறை, உணவு முறை, பழக்கவழக்கங்கள், கலாச்சரம் பண்பு எல்லாமே மாற்றமடைந்து, நாகரீகம் என்ற போர்வைக்குள் அடங்கிவிட்டது. சந்தோஷமாக வாழுவதுபோல மாய்மாலம் வேறு. போலியான வெளிச்சங்களை உருவாக்கி, இருளை மறைத்துவைக்கும் போலித்தனமான வாழ்வில் மனிதன் சிக்கித்தவிக்கிறான். இன்று ‘ஆன்லைன்’-இல் பொருட்களைத் தேடுகிறவர்கள் நாளை கிறிஸ்துவையும் தேடமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? தேவ சத்தியத்திற்காக இணையத்தளத்தை நாடுகிறவர்கள், நாளை வேதாகமத்தைத் தொலைத்துவிடமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

ஆனால், அன்றைய இஸ்ரவேலைப் போலவே, இன்று கர்த்தர் நம்பி இரட்சிப்பளித்த அவருடைய பிள்ளைகள் நாங்கள் நமது போக்கில் போய்க்கொண்டிருந்தாலும், தேவன் தோற்றுப்போகிறவர் அல்ல. அவர் தமக்கான ஒரு கூட்டம் மக்களை, இருளுக்குள் இருக்கும் மக்களை, ஒளியினிடத்திற்கு அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலே, சமூகத்தினாலே சேர்த்துக்கொள்ளப் படாத, தனித்த கூட்டமாக, படிப்பறிவில்லாத, வசதி வாய்ப்பு எதுவுமே இல்லாத ஒரு இனத்தவர்களிடையே சென்று அவர்களுடன் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. வேற்று மொழி பேசுகிறவர்களாயினும் தமிழைக் கற்றுக்கொண்டு, தமிழ் வேதாகமத்தை அதிகமாக நேசித்து வாசித்து, தாம் அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பதுதான் தாம் ஆண்டவரில் அன்பாயிருப்பதைக் காட்டுகின்ற ஒரே வழி என்று அறிக்கை செய்யுமளவுக்கு குழந்தைகளைப்போன்ற அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, சென்ற நாமே வெட்கித் தலைகுனிந்தோம். இருளடைந்த நிலையில் நம்பிக்கை இழந்து வாழ்ந்துகொண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் சென்று நம்பிக்கை நட்சத்திரத்தின் நல்ல செய்தி அறிவிக்கவும், அந்தக் கூட்டத்தாருக்குள் ஒரு கூட்டம் மக்களைத் தமக்கென ஆயத்தப்படுத்தவும், தேவன் ஒரு அடியாளைப் பயன்படுத்தியிருப்பதைக் கண்டபோது, தலைவணங்கி தேவனுக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை. அந்த அம்மாவுக்கு இப்போது 80 வயதிற்குக் கிட்ட இருக்கும்.

ஆம், தேவன் தமக்கென்று ஒரு கூட்டம் மக்களை, உலகம் அறியாத சாதாரண பிள்ளைகளைப் பயன்படுத்தி மிக விரைவாகவும் தெளிவாகவும் ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். அதை நினைந்து நம்மைத் தாழ்த்தி, மனந்திரும்புவோம். உக்கிராணத்துவம் என்றதும் நமக்குப் பணம்தான் ஞாபகத்திற்கு வரும். அப்படியல்ல. தேவன் நம்மிடம் தமக்குரிய எதையெல்லாம் கொடுத்திருக்கிறாரோ, அவற்றுக்கெல்லாம் நாமேதான் உக்கிராணக்காரர். அந்தப் பிரகாரம் சுவிசேஷமும் நமது கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நாம் என்ன செய்கிறோம்? ஒளித்து வைத்திருக்கிறோமா? இரண்டு மடங்காகப் பெருகப் பண்ணி அநேக ஜனங்களை அந்த சுவிசேஷத்தின் ஒளிக்குள் வழிநடத்துகிறோமா?

நம்பிக்கை நட்சத்திரம் இருளிலேதான் பிரகாசமாகத் தெரியும். அந்த நம்பிக்கையைச் சுமந்து இருளில் இருக்கிற மக்கள் மத்தியில் புறப்பட்டுச் செல்லுவோம். இதை வாசிக்கின்ற அன்பான வாசகரே, இந்த நாட்களில் மாத்திரமல்ல, இந்த நாட்களிலாவது நாம் ஒரு புதிய யாத்திரையை ஏன் ஆரம்பிக்கக்கூடாது? ஒளியில் இருப்பதாக நினைப்பவர்கள் இருக்கட்டும். நம்பிக்கையற்று, வியாதிப்பட்டு, மரண அவஸ்தையில் தவித்து, உறவுகளால் கைவிடப்பட்டு, உதவியற்று, உடைகளற்று, பசியினாலும் பட்டினியினாலும் வாடி வதங்கி, உளரீதியாகப் பாதிக்கப்பட்டு, தனிமையில் தவித்து, திசை தெரியாமல் தடுமாறி…. இப்படி எவ்வளவோ சொல்லலாம். ஏன் நாம் இவர்களைத் தேடிப் புறப்பட்டுப்போகக்கூடாது.

நமது தேசத்தைக் காரிருள் சூழ்ந்துகொண்டு வருகிறது. காலமும் இனிச் செல்லாது. தேவன் நம்மிடம் தந்த சுவிசேஷத்தின் உக்கிராணத்துவத்துக்கான கணக்குக் கேட்கும் காலமும் சமீபமாகிவிட்டது. நமக்குள் கிறிஸ்துவின் ஜீவ ஒளி பிரகாசித்தது மெய்யானால், இருண்டுபோயிருக்கும் மக்களுக்குள் அந்த ஒளியை நாம் கொண்டு செல்ல யாரும் நம்மை உந்தித்தள்ளவேண்டிய அவசியம் கிடையாது.

நமக்குள் வாழுகின்ற பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருந்து நம்மை உந்தித்தள்ளுவதை உதாசீனம் செய்யாது, நம்பிக்கை நட்சித்திரத்தின் நம்பிக்கையின் செய்தியை இருளுக்குள் தவிக்கின்ற மக்களிடம் எடுத்துச் செல்லுவோம்!

சொல்ல முடியாவிட்டாலும், நம்மில் வீசுகின்ற ஓளி அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்படி நமது வாழ்வு முறை மாறட்டும்!!

நம் உள்ளத்தை மாத்திரமல்ல, கரங்களையும் திறப்போம். கர்த்தர் தந்த ஈவுகளை, பணம் உட்பட யாவையும் பகிர்ந்தளிப்போம்!!!

சத்தியவசனம்