கிறிஸ்துமஸ் அபாய அறிவிப்பு!

Dr.வாரன் வியர்ஸ்பி
(நவம்பர்-டிசம்பர் 2019)

ஸ்காட்லாந்தின் பால்மோறல் காசல் என்னும் கோட்டை அரண்மனையில் ராஜ குடும்பத்தினர் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தபோது, திடீரென அபாய அறிவிப்பு ஒலிக்க ஆரம்பித்தது. காவலாளர்கள் வாசலை இழுத்து மூட, அபர் டீனிலுள்ள போலீசார் இளவரசர் சார்லசையும் இளவரசி டயானாவையும் பாதுகாக்க விரைந்தனர்.

ஆனால், அது தவறாய் நிகழ்ந்துவிட்ட அபாய அறிவிப்பு! என்ன நடந்தது?

அப்போது 16 மாதங்களே நிரம்பிய குட்டி இளவரசர் வில்லியம், நர்சரியிலுள்ள அபாய அறிவிப்பு பொத்தானை அழுத்திவிட்டார். அதுவே, போலீஸ் நிலையத்திலிருந்தவர்களையும், காவலாளர்களையும், அல்லோகல்லப்படுத்திற்று. குழந்தையின் தாதியார், நடந்ததை அறிந்ததும், அது தவறாய் நிகழ்ந்த ஒரு அபாய அறிவிப்பு என்பதைத் தெரியப்படுத்தினார்.

குழந்தையொன்று அபாய அறிவிப்பு ஒலி எழுப்பியது இது முதல் தடவையல்ல. இது போன்ற தொரு சம்பவம் சுமார் 20 நூற்றாண்டுகளுக்கு முன்பாக, பெத்லகேம் என்னுமிடத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தபோது நிகழ்ந்தது. மேரி எலிசபெத் என்பவர் தனது கவிதையில் இவ்வுண்மையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

தாழ்மையே உருவான மாட்டை குடிலில்
சிறியதோர் குழந்தை கண்டேன்
மாடுகள் பொறுப்பாகக் காத்தன அவரை
மனிதனோ அவரை அறியாதிருந்தான்
உலகினை காக்க வந்த சகாயமும் அவரே
உலகினை ஆழ்த்த வந்த அபாயமும், அவரே.

பொதுவாக நாம் கிறிஸ்துமஸ் செய்தியை சமாதானத்தின் செய்தி என்றே எண்ணுவது உண்டு. ஆம், அது சமாதான செய்தியேதான்! “பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக”. ஆனால், இயேசு நமது பூலோக வேலையை முடிக்கும் முன்பதாக “நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்.12:51) என்று கூறினார்.

பெத்லகேமில் இயேசுவின் பிறப்பு சமாதானத்தின் அறிவிப்புதான். ஆனால் அது ஒரு யுத்த பிரகடனமும் ஆகும். அவருடைய பிறப்பு அனைவர் மத்தியிலும் பதட்டத்தை ஏற்படுத்தி, உலகத்தையே விழிப்படையச் செய்தது.

பெத்லகேமில் நடந்த சம்பவம், தேவன் முதலில் மெய்யானவர் என்பதையும், அவர் வரலாற்றில் கிரியை செய்கிறார் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

1. தேவனை உதாசீனம் செய்து பரலோக சிம்மா சனம் வெறுமையானதென்று எண்ணுகின்ற அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி அபாய ஒலி எழுப்புகின்றது.

நமதாண்டவரின் பிறப்பானது ஒரு தெய்வீக நியமனமாகும். வரலாறு முழுவதுமே அதற்கு வழிவகுத்தது. “காலம் நிறைவேறினபோது…. தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” (கலா 4:5) என பார்க்கிறோம்.

தேவன் சகலத்தையும் ஆண்டு நடத்துகிறார் என்பதை மக்கள் நம்புவார்களானால் அவருக்குத் தங்களை ஒப்புவித்து, அவரை நோக்கி ஜெபித்து அவர் சித்தத்தை நாடுகிறவர்களும், கீழ்ப்படிகிறவர்களுமாயிருப்பார்கள். ஆனால், இன்று நமது உலகம் சிற்றின்பம், பண ஆசை, வல்லமை, வெற்றி என்பதையே முழுநோக்காகக் கொண்டு விரைகின்றது. எந்நேரமும் தேவனுடைய சித்தத்தை உதாசீனம் செய்கின்றது.

ஏரோது அப்படிப்பட்ட ஒருவனே, கிறிஸ்துமஸை முன்னிட்டு, அபாயத்தை எதிர்நோக்கிய ஒருவன் இருப்பானேயென்றால், அவன் தெய்வமற்ற ஏரோது அரசனே. புதிய ராஜாவின் மகிமைக்கும், பலத்துக்கும் அச்சுறுத்தல் வந்துவிட்டது. இரக்கமற்ற அரசனான ஏரோது, தன்னிடமிருந்த ஒரே ஆயுதமான கூர்வாளை உபயோகித்து, இயேசுவை கொல்ல முயற்சித்தான். சூழ்ச்சிக்காரனான ஏரோது தனது கொலைத் திட்டத்தை மார்க்க பக்தியின் மூலம் மறைக்க முயன்றான். ஆனால், தேவனோ, அவனை மேற்கொண்டு, தன் குமாரனையும், அவரது பெற்றோரையும் காப்பாற்றினார்.

2. கிறிஸ்துமஸ், உலகப் பொருளுக்காக மட்டுமே வாழ்பவர்களுக்கும் அபாய ஒலி எழுப்புகிறது.

இயேசு பெத்லகேமுக்கு வறுமையாய் வந்தார் என்பதை ஞாபகப்படுத்த வேண்டுமா? “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே, அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரி 8:9).

இன்று ஆவிக்குரிய காரியங்களை ஐசுவரியத்தோடு சம்பந்தப்படுத்துகின்ற கிறிஸ்தவ அமைப்புகள் உண்டு; உண்மையிலேயே நீங்கள் தேவனுக்கு உங்களை ஒப்புக்கொடுத்திருந்தால் நீங்கள் ஒருபோதும் சுகவீனப்படமாட்டீர்கள். உங்களுக்கு தொழில் சேதம்வராது. பண விஷயத்தில் செல்வந்தராவீர்கள். உங்கள் குடும்பம் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் என்று இவர்கள் கூறுவார்கள்.

உலகப்பொருளின் வெற்றிதான், தேவ ஆசீர்வாதத்தின் மெய்அர்ப்பணிப்பின் அடையாளமென்றால், பெத்லகேமையும் இயேசுகிறிஸ்துவையும் என்னவென்று விளங்குவோம்? அவர் ஏழையிலும் ஏழையாயிருந்தார். ஆயினும் அவரே தேவனுடைய குமாரனுமாயிருந்தார். ஐசுவரியத்தின் ஏமாற்றுத்தன்மை, புற்றுநோய் போன்ற அபகரிக்கும் தன்மை ஆகியவற்றிற்கு எதிராகவே, தனது ஊழியகாலம் முழுவதும் திரும்பதிரும்ப எச்சரித்து வந்தார்.

நம்முடைய தன்மைகளை ஆராய்ந்து பார்த்து நம் வாழ்வின் அதிமுக்கியமானதைக் கண்டுகொள்வதற்கு, கிறிஸ்துமஸ் காலம் ஏற்ற ஒரு காலமாகும்.

மிகச் சாதாரண காரியங்கள், நம் வாழ்வின் அதிமுக்கிய காரியங்களை நிரப்பிவிடுகின்றனவா?

அழிந்துபோகும் காரியங்கள், நிரந்தரமானவற்றை ஈடு செய்துவிடுகின்றனவா?

விலைமதிப்பாய்த் தோன்றுகின்ற காரியங்களில் கூடுதலான நாட்டமுள்ளவர்களாக இருக்கிறோமா?

3. இயேசுகிறிஸ்துவின் பிறப்பு தங்களை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்துகிறவர்களுக் கும் ஒரு அபாய அறிவிப்பாகும்.

பெத்லகேம் தேவனுடைய தாழ்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. “தேவ குமாரன் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்” (பிலி 2:7). கிறிஸ்தவர்கள் உட்பட தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக அதிகளவு நேரத்தை செலவழித்து, தங்களை விளம்பரப்படுத்துபவர்களுக்கு, எத்தனை அருமையானதொரு எடுத்துக்காட்டு!

புகழ்பெற்ற கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் தன்னுடைய சபையினருக்கு “தேவன் தன் வாழ்வில் செய்ததை” சாட்சியாக சொன்னதைப் பற்றிய ஒரு கதையை வாசித்தேன். அவருடைய தொழில் வெற்றி, அன்பு மனைவி, இனிய குடும்பம், உடைமைகள், அவரது சாதனைகள் போன்றவற்றைப்பற்றி கூறினார்.

முடிவில் “இதைவிட மேலாக, வேறெதை தேவன் எனக்குத் தரமுடியும்?” என அவர் பெருமையோடு கேட்டபோது, சபையின் பின்புறத்திலிருந்து ஒரு குரல் இவ்வாறு ஒலித்தது: “தாழ்மை என்னும் பண்பைத் தர வேண்டும்! என்று.”

பிரசங்கபீடம்கூட பெருமையின் குற்ற உணர்வுக்குள்ளாகலாம். “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவை கர்த்தரென்றும் எங்களையே இயேசுகிறிஸ்துவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்” (2 கொரி 4:5) என்று கொரிந்தியருக்கு பவுல் உறுதிப்படுத்தினார். இது இன்னொரு உண்மைக்குள் நம்மை வழிநடத்துகிறது.

4. ஊழியம் செய்ய விரும்பாதவர்களுக்கு கிறிஸ்துமஸ் அபாய மணி அடிக்கிறது.

இயேசு பணிவிடைக்காரனாக வந்தார். “நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறேன்” (லூக்.22:27) என்று தம் சீஷர்களுக்குக் கூறினார். பிதாவானவர் எல்லா காரியங்களையும் கிறிஸ்துவின் கைகளில் கொடுத்திருந்தார். இருந்தபோதிலும் அவரோ தம் கைகளில் சீலையை எடுத்துக்கொண்டு சீஷர்கள் கால்களைக் கழுவினார். நீங்கள் சீலையை எடுப்பீர்களா? இயேசு எடுத்தார்.

இன்று பணிசெய்யும் வழிகாட்டிகளும் வழி காட்டும் பணியாளர்களும் ஆலயங்களுக்குத் தேவை. இப்போது புதுவகை ஊழியர் குலாம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. அவர்கள் உத்தியோக பூர்வமானவர்கள். காரியாலய மேசை மனிதர்கள். பொதுவாக மக்களுக்கும் விசேஷமாக அவர்களுடைய நேர அட்டவணையை குறுக்கிடுகிறவர்களுக்கும் மிகக்குறைந்த நேரத்தை செலவிடுபவர்கள் அல்லது நேரமே இல்லாதவர்கள். ஆனால், அடுத்த கூட்டங்களுக்கு அல்லது கருத்தரங்குகளுக்கு விரைந்து செல்லவோ புதிய செய்திகளைக் கேட்டு மகிழவோ, எப்படி காரியங்களை செய்யலாம் என்பதைக் குறித்து பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதுவதற்கோ இவர்களுக்கு போதியளவு நேரம் உண்டு.

பணிவிடை செய்வது இலகுவானதல்ல, செய்யும்போது குறுக்கிடுதல் வரவேற்புக்குரியதல்ல. மக்களை நசுக்கும், உள்ளத்தை உடைக்கும் பிரச்சினைகளுடன் சம்பந்தம் வைத்துக்கொள்வது நமது வேலை அட்டவணையில் முதலாவது அம்சமாகக் கொள்வதற்கு நம்மில் அநேகர் முனைவதில்லை. ஆனால், அதுதான் பணிவிடை சேவையாகும். இயேசு பணிவிடைக் காரனாக இப்பூமிக்கு வந்தார். நீங்களும் நானும் ஒரு பணிவிடைக்காரனின் இதயத்தையும் சிந்தையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். அப்போதுதான், பவுல், தீமோத்தேயுவைப்பற்றி கூறுவதுபோல நம்மைப் பற்றி மக்கள் கூறுவார்கள். “உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல் தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்” (பிலி.2:20, 21).

கிறிஸ்தவர்கள் நம்முடைய ஐக்கியத்திலிருப்பவர்களிடையே ஒருவருக்கொருவர் பணிவிடை செய்வது மட்டுமல்ல, சபையின் வெளியே இருப்பவர்களுக்கு பணிவிடை செய்வதும், அவசியமாகும். பொய்யாய் குற்றஞ்சாட்டுகிறவர்களின் வாயை மூடவும், அதிகாரத்திலுள்ளவர்களை கருத்துடன் கவனிக்கச் செய்யவும் வேண்டுமானால், நற் கிரியை செய்யவேண்டுமென பேதுரு தனது முதலாவது நிருபத்தில் தெளிவுற எடுத்துக்காட்டுகிறார்.

“புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில் அவர்கள் உங் கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும் படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடத்தையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்” (1 பேதுரு 2:12).

இயேசு பூமிக்கு வந்தபோது, எல்லாமே தாறுமாறாக இருப்பதைக் கண்டார். அவரது சொந்த ஜனமான இஸ்ரவேல், ரோம அரசாட்சிக்குக் கீழ்ப்பட்டு மத சட்டதிட்டத்தின் அடிமைக்குட்பட்டு நொறுக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள், சம்பளம் குறைவானதாயும், வரி கூடினதாயும் இருந்தது. அரசியல் மிருகத்தனமானதும், நேர்மையற்றதுமாய் இருந்தது. அடிமைத்தனம் என்பது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாயிருந்தது. இச்சூழ்நிலையில் அவர் என்ன செய்தார்? “அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார்” (அப். 10:38). அவர் ஒரு பணிவிடைக்காரனாயிருந்தார்! சிலுவையின் மரணபரியந்தம் பிதாவின் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்தார்.

அதிகாரத்திலிருப்பவர்களை, கிறிஸ்தவர்களாகிய நாம் ஆதரவுப் பேச்சுகள், காகிதப் போர், அரசியல் நெருக்கம் முதலிய பலவிதமான போராட்டத்தின் மூலமாக வசப்படுத்த வேண்டுமென்று முயற்சித்திருக்கிறோம். ஆனால் எல்லா வேளைகளிலுமே வெற்றிபெற்றதில்லை, ஒருவேளை நாம் பொது இடங்களிலும் மற்றவர்களுக்கு நற்கிரியை செய்து, பணிவிடை புரிந்துவாழ ஆரம்பிப்போமானால் நம் கிறிஸ்தவத்தை அலட்சியம் பண்ணாமல் முக்கியமானதாகக் கருதுவார்கள். இருக்கின்ற சட்டதிட்டங்களை கிறிஸ்தவத்தை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் நாம் நிச்சயம் பயன்படுத்த வேண்டும். ஆனால், நற்கிரியைகளோடு கூடிய சாட்சியும் பின்னணியாக அமையுமானால், இம்முயற்சிகள் பெரிதளவு பயன் தரும்.

5. கடைசியாக, பாவத்தை அலட்சியம் செய்து, கொடியது என்று கருதாதவர்களுக்கு கிறிஸ்துமஸ் அபாயமானதாகும்.

எல்லா பிரச்சினைகளுக்கும் ஆணிவேர் போன்றது இதயத்திலுள்ள பிரச்சினையே. தேவனுடைய கிருபையே மனிதனுடைய இதயத்தை மாற்றமுடியும். அக்கிருபையானது பெத்லகேமி லும், கல்வாரியிலும் வெளிப்படுத்தப்பட்டது.

தேவன் பாவத்தை வெறுக்கிறார். ஆனால் பாவிகள் தாங்கள் விதைத்ததை தாமே அறுக்க வேண்டுமென நியமித்திருக்கிறார். பாவம், மனித இனத்துக்கு கொண்டு வந்த வேதனையை குருடர்கள், அங்கவீனர், பிசாசு பிடித்தவர், நெருக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், போன்றவர்களைப் பார்த்த போது, நமதாண்டவரின் இதயம் நொறுங்கிப் போயிருக்கவேண்டும். இப்படிக் கைவிடப்பட்டவர்களை இரட்சிக்கவும், காக்கவுமே அவர் வந்தார்.

பாவமானது இன்று நம் மத்தியிலேயே அந்தஸ்துக்குரிய காரியமாகிவிட்டது. ஆனாலும் அதன் பிரதி பலனானது மாறுவதில்லை. நொறுங்கின சரீரம், சிந்தையழிவு, முறிந்த உறவுகள், சிதைந்த திருமணங்கள், ஆத்தும அழிவுகள், பாவத்தில் மூழ்கியிருக்கும் உலகிற்கு, கிறிஸ்துமஸ் செய்தி, ஈஸ்டர் செய்தியோடு சேர்ந்து, சொல்லும் காரியம் என்னவென்றால், “நீங்கள் இப்படியாக வாழ வேண்டிய அவசியமில்லை. பாவத்துக்கு அடிமையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இயேசு கிறிஸ்து உங்களை விடுதலையாக்கி ஒரு புது மனிதனாக ஆக்க முடியும்” என்பதாகும்.

தேவன் பாவத்தைக் குறித்து, மிகவும் கொடியதாகக் கருதுவதால், தனது சொந்த குமாரனையே பாவத்துக்காய் மரிக்கும்படி ஒப்புவித்தார்.

இவரை உன் சொந்த இரட்சகராக நம்பி, நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறாயா?

பரிசுத்த பெத்லகேம் குழந்தையே,
பாவியெம்மிடம் வந்திடுமே
பாவத்தை அகற்றி மனந்தனில் புகுந்து
பாவியெம்மில் பிறந்திடுமே!

சத்தியவசனம்