யோவான் ஸ்நானகன்: அவர் (இயேசு) பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்!

கலாநிதி தியோடர் வில்லியம்ஸ்
(நவம்பர்-டிசம்பர் 2019)

ஒருமுறை தமிழ்நாட்டிலே ஒரு சின்ன ஊரிலே கூட்டங்கள் நடத்துவதற்காக பஸ்சிலே போய் அங்கு இறங்கினேன். பஸ் நிறுத்தத்திலே சைக்கிள் ரிக்ஷா ஓட்டுகிற ஒருவர் என்னிடத்தில் முகமலர்ச்சியோடு சிரித்துக்கொண்டே வந்தார். அவர் எனக்கு முன்பின் தெரியாதவர். நான் யார் என்று அவருக்கும் தெரியாது. என்னை வரவழைத்து என்னை தம்முடைய சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறும்படி செய்தார். அங்கே ஏறி உட்கார்ந்தவுடனே வேதவசனம் ஒன்றை அவர் ஒட்டி வைத்திருந்ததை நான் பார்த்தேன். அவரோடு பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவர் ஒரு விசுவாசி என்று கண்டுகொண்டேன். அவர் ஒரு நல்ல அருமையான விசுவாசி, சாட்சியாக வாழ்கிறவர் என்றும் அறிந்துகொண்டேன்.

பிறகு அந்த ஊரிலுள்ள மற்ற விசுவாசிகளும் தேவமக்களும் அவரைக் குறித்து சாட்சி சொன்னார்கள். ஐயா, அவர் ரொம்ப தாழ்மையான ஒரு மனிதர். எவ்வளவோ பாவத்தில் வாழ்ந்து வந்த அவர் குடிபழக்கத்திலிருந்து ஆண்டவராகிய கிறிஸ்துவினாலே விடுவிக்கப்பட்டு இப்பொழுது சாட்சியாக வாழ்கிறார். அவருடைய ரிக்ஷாவிலே ஏறி உட்காருகிற யாரிடத்திலும் இயேசுவைக் குறித்து ஒரு வார்த்தை சொல்லாமல் இருக்கமாட்டார். அவருடைய மனமகிழ்ச்சியையும் மனத்தாழ்மையையும் அன்பையும் பார்த்துவிட்டு அநேகர் இயேசுவை அறிந்திருக்கிறார்கள். அதற்காக நான் ஆண்டவரைத் துதித்தேன். பார்த்தீர்களா! பெரிய பணக்காரராக இருந்தால் மட்டும்தான் சந்தோஷமாகவும் மனமகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்று நாம் யோசிக்க அவசியமில்லை. அந்த மனிதரிடத்தில் பெரிய வாகனம் ஒன்றும் இல்லை. அவருக்கு இருந்ததெல்லாம் ஒரு சைக்கிள் ரிக்‌ஷா, அவ்வளவுதான். அதின் முலமாக தனது வயிற்றுப்பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தார். ஏழையான ஒரு மனிதனாயிருந்தாலும், எவ்வளவு ஒரு மனநிறைவு! எவ்வளவு பெரிய சந்தோஷம்!!.

திருமறையிலும் மகிழ்ச்சிக்கென்று ஒரு மனிதரை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அவர்தான் யோவான். அவரை யோவான் ஸ்நானகன் என்று நாம் அழைக்கிறோம். திருமுழுக்கு கொடுக்கும் யோவான் என்றும் சிலர் அழைப்பார்கள். இவரைப் பற்றி மாற்கு 1:6-8 ஆகிய வசன பகுதியில் பார்க்கிறோம். இந்த யோவான் ஒட்டக மயிர் உடையைத் தரித்து தன் அறையிலே வார்கச்சையைக் கட்டிக்கொண்டவனாக வெட்டுக் கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தார். இப்படிபட்ட ஒரு மனிதன் சந்தோஷமாய் இருக்க முடியுமா? அவனுடைய உடையைப் பாருங்கள். ஒட்டக மயிர் உடையைத் தரித்து, தன் அறையிலே வார்கச்சையைக் கட்டிக்கொண்டவன். இந்த நாட்களிலே, அநேகருடைய சந்தோஷம் எதைச் சார்ந்திருக்கிறது, தெரியுமா? உடையைச் சார்ந்திருக்கிறது. எந்த மாதிரி புடவையைக் கட்டிக்கொள்ளுகிறோம், எந்த மாதிரி சல்வார் அணிந்துகொள்ளுகிறோம், சுடிதார் அணிந்துகொள்கிறோம் என்பதைக் குறித்து சில பெண்களுக்கு சந்தோஷம். எந்த மாதிரி பேண்ட் அணிந்துகொள்ளுகிறோம், சர்ட் அணிந்துகொள்ளுகிறோம் என்பதைக் குறித்து சில ஆண்களுடைய சந்தோஷம். சில தம்பிமார்களுடைய சந்தோஷம்கூட அப்படித்தான் இருக்கிறது. தாங்கள் விரும்பின உடையை வாங்கி தரவில்லை என்றால் அப்பா, அம்மாவுக்கு அவர்கள் கொடுக்கிற உபத்திரவம் பெரியதாயிருக்கும். அன்பானவர்களே, மனநிறைவு, மனமகிழ்ச்சி இதையெல்லாம் சார்ந்திருக்காது. ஒன்று வாங்கிக் கொடுத்தால் அதைவிட மேலான ஒன்று வாங்கிக்கொடுக்க அடம்பிடிப்பார்கள் அல்லவா?

இன்னும் பாருங்கள், இவரைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது? வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும் புசிக்கிறவனாய் இருந்தான். ஐயையோ, இதுவா? இதையா சாப்பிடுவது? நல்ல ஓட்டலில் போய் பிரியாணி சாப்பிட்டால்தான் சந்தோஷமென சிலர் எண்ணுகிறதுண்டு. எங்க வீட்டுல எப்போது பார்த்தாலும் இரசமும் துவையலும்தான். நாங்க எங்க சந்தோஷமாய் இருக்கிறது? இப்படி குறைவுபடுகிறவர்களும் உண்டு. என் அருமையான சகோதரனே, நல்ல சாப்பாடு கொடுக்கவில்லை என்று சொல்லி உன் மனைவியை கடிந்துகொள்ளுகிறாயா? சகோதரியே, நீ கொடுக்கிற சம்பாத்தியத்துல, நீ கொடுக்கிற பணத்துல என்னத்த சமைத்துக் கொடுப்பது என்று கணவனிடத்திலே கேட்கிறாயா? சாப்பாட் டைச் சார்ந்திருப்பதில்லை சந்தோஷம்! அப்படியெல்லாம் இருந்திருந்தால் யோவான் ஸ்நானகன் சந்தோஷமாக இருந்திருக்க முடியுமா?

இவர் என்ன சொல்கிறார், பாருங்கள்: “மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று” (யோவான் 3:29) என்று கூறுகிறார்.

என் மகிழ்ச்சி நிறைவு பெற்றதென்று யோவான் ஸ்நானகன் பெருமிதத்தோடு கூறுகிறார். ஏன் யாராவது இவருக்கு சொத்து எழுதி வைத்துவிட்டார்களா? இல்ல, வேறு எங்கேயாவது விருந்து ஆயத்தம் பண்ணியிருக்கிறார்களா? அல்லது அழகான நல்ல ஆடை அணிந்து கொள்ளும்படி ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார்களா? இல்லை. எப்படி யோவானுடைய சந்தோஷம் நிறைவாயிற்று? அவனுடைய வாழ்க்கையிலே சுயம் ஆட்கொள்ளவில்லை, சுயம் அவரை நிறைக்கவில்லை. அவ்வளவுதான்!

நீர் யாரென்று அவரைக் கேட்கும்படி அவரிடத்தில் சிலரை அனுப்பினார்கள். அவர்கள் யார் தெரியுமா? பரிசேயர்களும் பிரதான ஆசாரியரின் ஆட்களும் ஆவர். யோவானிடத்தில் வந்து, “நீர் யாரென்று கேட்கிறார்கள்”. யாராவது சிலரிடத்திலே வந்து, நீ யாரப்பா என்று கேட்டால் என்ன சொல்வார்கள், தெரியுமா? இல்லாததும் பொல்லாததெல்லாம் சொல்லி தங்களைப் பெரிய ஆளாய் காட்டிக்கொள்வர். இந்த நாட்களிலே இல்லாத பட்டங்களையெல்லாம் இருக்கிறது போல காட்டிக்கொள்கிறதில்லையா? அப்போதுதான் அவர்கள் மகிழ்ச்சியடைவர். ஆனால் இதெல்லாம் அல்ல; இதெல்லாம் இன்றைக்கு இருக்கும் நாளைக்கு போய் விடும். இவரிடத்திலே நீர் யார் என்று கேட்டபோது, அவர் என்ன சொல்லுகிறார் என்று யோவான் 1:20-23 இல் வாசிக்கிறோம்.

“அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னே நீ யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வை பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான். அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள். அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்”. (யோவான் 1:20-27).

இந்த யோவான் ஸ்நானகன் இயேசுவுக்கு உறவினர். இயேசுவைவிட வயதிலே மூத்தவர். அப்படியிருந்தும் அவர் தன்னைத் தாழ்த்தி, அவர் பெரியவர், நான் சிறியவன் என்று தன்னைத் தாழ்த்தினார். அவருடைய காலின் செருப்பினுடைய வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரவான் அல்ல என்று சொல்லுகிறார். நான் கிறிஸ்து அல்ல என்று கூறுகிறார். உடனே கேட்கிறார்கள், பின்னே நீர் எலியாவா? அல்ல என்று அவர் கூறுகிறார். நீர் தீர்க்கதரிசியா எனக் கேட்டனர். நான் பெரிய தீர்க்கதரிசியாக்கும், நான் அந்த மரபிலே, அந்த வம்சத்திலே வந்தவன் என்று பெருமையாய் சொல்லியிருக்கலாம் அல்லவா? அப்போதும் அவர் அல்ல, அல்ல என்றுதான் சொல்லுகிறார்.

அருமையான சகோதரனே, முக்கியமாய் ஊழியத்தில் இருக்கும் உன்னிடத்தில் நான் ஒன்றைக் கேட்கிறேன், ஊழியத்திலே உனக்கு பெருமை தருவது எது? மனிதன் கொடுக்கும் பட்டங்களா? பாராட்டுகளா? புகழ் மாலைகளா? அல்ல. ஆண்டவர் பார்வையிலே நீ யார் என்பதுதான் உன்னை உயர்த்தி காட்டுவதாகும். உலகம் போகட்டும்; உனக்கு ஏன் அந்த வழி? யோவான் ஸ்நானகன் சொன்னார்: நான் எலியாவுமல்ல, நான் தீர்க்கதரிசியானவரும் அல்ல, பின்னே நீர் யாரைய்யா? என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்: நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றார். இதோ, மேசியா வருகிறார், சீக்கிரமாய் வருகிறார், நான் அவருக்கு முன்னோடி என்கிறார். அப்படி கூப்பிடுகிற ஒரு ஆளிடம் எவ்வளவு தாழ்மை பாருங்கள். தன்னை ஒன்றும் அற்றவனாக காட்டிக்கொள்ளுகிறார். அது மட்டுமல்ல, மணவாளர் அவர், நான் மணவாளனுடைய தோழன், என்று கூறுகிறார். அந்த சூழ்நிலையிலேதான் என்னுடைய சந்தோஷம் நிறைவு பெறுகிறது என்று யோவான் கூறினார்.

என்றைக்கு வாழ்க்கையிலே சுயத்தை மையத்தில் வைத்து நம்முடைய புகழையும், பெருமையையும் பெரிதுபடுத்துகிறோமோ, அன்றைக்கு சந்தோஷம் பாதிக்கப்படும். என்னுடைய சொந்த வாழ்க்கையின் அனுபவத்திலே நான் சொல்லுகிறேன். ஐயோ, எனக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை எனக்குக் கொடுக்கவில்லையே, நான் இங்கே கன்வென்ஷனுக்காக வந்திருக்கிறேன், நான் கூட்டம் நடத்த வந்திருக்கிறேன். என்னைக் கொண்டுபோய் ஒரு சின்ன அறையிலே போட்டுவிட்டார்களே? சாப்பாடுகூட சரியில்லையே, இதைப்பற்றியே நான் பேசிக் கொண்டிருந்தால் என் வாழ்க்கையிலே ஆசீர்வாத பெருக்கு இருக்குமா? ஜீவத்தண்ணீருள்ள நதிகள் என் உள்ளத்திலிருந்து பெருக்கெடுத்து ஓட முடியுமா? எல்லாம் வற்றிப்போகுமே? எல்லாம் உலர்ந்து போகுமே, வெறும் வாய் சத்தம் இருக்கலாம், ஆரவாரம் இருக்கலாம், ஆர்ப்பரிப்பு இருக்கலாம், ஆனால் ஆத்துமாக்களை இரட்சிப்பிற்கென்று தொடும் வல்லமை இல்லாமல் போகுமே.

என் அருமையான ஊழியக்காரனே, வெறும் தம்பட்டம், மனிதனுடைய புகழ்ச்சி பாராட்டு இதைச் சார்ந்து உன் ஊழியத்தை நீ நடத்துவாயானால் ஜீவத்தண்ணீருள்ள நதிகள் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு சென்று மற்றவர்களை வாழ வைக்க முடியாது. இப்படி எத்தனையோ, சூழ்நிலைகளிலே நம்மை உயர்த்தி காட்டும்படியான ஒரு சோதனை நமக்கு வருகிறதல்லவா? உள்ளங்களை ஆராய்கிறவர் பார்த்துக்கொண்டிருப்பார். நம்மைப்பற்றி அவருக்குத்தான் தெரியும். யாருக்கும் தெரியாது, இவைகளை நாம் உள்ளத்தில் வைத்து செயல்படுவோமானால் எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் இல்லையா!

ஒரு சமயத்திலே சீஷர்கள் யோவானுடைய சீஷர்கள் வந்து சொல்லுகிறார்கள், இதோ, எனக்குப் பின்னாலே வருகிறவர் என்று காட்டிக்கொடுத்தீரே, அவர் யோர்தான் நதியிலே திருமுழுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரைப் பின்பற்றி எல்லாரும் போய்கின்றனர் என்று சொன்னார்கள். இயேசு திருமுழுக்கு கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள், என்று வேதத்திலே நாம் பார்க்கிறோம். யோவானைப் பின் பற்றினவர்களில் அநேகர் இயேசுவுக்குப் பின் சென்றுவிட்டார்கள். இயேசுவின் சீஷர்களில் இரண்டு பேர் யோவான், அந்திரேயா, யோவானுக்கு சீஷராய் இருந்தவர்கள்.

இப்படி அவர்கள் போய்விட்டவுடனே யோவானுடைய சீஷருக்கு இது பொறுக்கமுடியவில்லை. ஐயோ, எங்களுடைய போதகர், எங்களுடைய குரு, அவருடைய பெயர் கீழே போகிறது, அவருடைய கூட்டம் சிறியதாகிறது, ஆனால் இயேசுவினுடைய கூட்டம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி, யோவானிடத்திலே அதை முறையிடுகிறார்கள், அதற்கு யோவான் என்ன சொன்னார் தெரியுமா?

அவர்கள் யோவானிடத்தில் வந்து: “ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங் கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள் … அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” என்றான் (யோவான் 3: 26-30).

என் அருமையான சகோதரனே, சகோதரியே, ஊழியத்தில் இருக்கும் நீ, பொறாமைக்கு உள்ளாகி, அந்த பொறாமையின் அடிப்படையிலே இன்னொரு ஊழியனை சிறுமைப்படுத்த, என்னவெல்லாம் செய்கிறாயே, இது பெரும் தவறு, உனக்குத் தெரியுமா? கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். உயர்த்துகிறவரும் அவர், தாழ்த்துகிறவரும் அவர், ஆசீர்வதிக்கிறவரும் அவர், நீ ஏன் குறுக்கே நிற்கவேண்டும்? உன்னுடைய மகிழ்ச்சியும் சந்தோஷமும் உனக்கு வரும் கூட்டத்தை சார்ந்திருக்குமானால், உன்னுடைய புகழை சார்ந்திருக்குமானால் நீ துக்கப்படுவாய், துக்கப்படுவது மட்டுமல்ல, மிகுந்த சஞ்சலத்திலிருப்பாய். எப்பொழுதுமே உன் உள்ளத்திலே மகிழ்ச்சி இருக்காது, கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்பதே அவர் தரும் பெலன் என்று திருமறை சொல்லுகிறதே. அந்த பெலன் உன்னிடத்திலிருக்காது. ஆனால் கர்த்தர் என்னைப் பார்த்துக்கொள்வார்; அவருடைய ஆசீர்வாதமும், அவருடைய பிரசன்னமும்தான் எனக்கு முக்கியம் என கருதி மற்றவர்கள் வாழ்ந்தாலும் அதைப் பற்றி நான் பொறாமைப்படமாட்டேன், என்னுடைய ஊழியத்தை அவர் சித்தப்படி நான் நிறைவேற்றுவேன், என்று திருப்தியோடு இருப்பாயானால் இந்த மகிழ்ச்சி உன்னை உயர்த்தும்.

என் அருமையான சகோதரனே, சகோதரியே! அவர் பெருகவேண்டும், நான் சிறுகவேண்டும் – இது கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். பொறாமையின் எண்ணம் என் உள்ளத்திலும் வந்ததுண்டு, ஐயோ, நான் சீர்குலைந்து போவேனோ என்ற அச்சமும் வந்ததுண்டு, ஆனால் அந்தவேளையில் எல்லாம் கர்த்தர் என்னை உறுதிப்படுத்தி, நிச்சயப்படுத்தி சொன்னது என்ன தெரியுமா? “நான் உன்னை அழைத்தேன்; என் சித்தத்தை செய்வதிலேயே உன் கவனத்தை செலுத்து, என்னை பிரியப்படுத்துவதிலேயே உன் கவனத்தைச் செலுத்து” என்று சொன்னார். ஆம், அதைத்தான் பவுல் அப்போஸ்தலன் கலாத்தியருக்கு எழுதின நிருபம் 2வது அதிகாரத்திலே 20வது வசனத்தில் இவ்வாறு கூறுகிறார்:

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் (கலா.2:20).

என் அருமையான சகோதரனே, சகோதரியே, குடும்ப வாழ்விலும் சரி, அல்லது ஊழியத்திலும் சரி, சபையிலும் சரி, எந்த சூழ்நிலையிலும் நான் சிறுகவேண்டும், கிறிஸ்து பெருகவேண்டும் என்று ஒப்புக்கொடுக்கும்போது நிச்சயமாய் நீ வாழ்வாய்! மகிழ்ச்சி பெறுவாய்!! உன்னை தேவன் மென்மேலும் எடுத்து பயன்படுத்துவார்!!!

சத்தியவசனம்