ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மார்ச்-ஏப்ரல் 2020

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

சத்தியவசன ஊழியப் பணிகள் நடைபெற தொடர்ந்து ஜெபத்தினாலும் காணிக்கையாலும் தாங்கி வரும் அன்பு பங்காளர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். நமது தேசத்தில் ஒவ்வொரு நாளும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்களுக்காவும் போராட்டங்களும் கலவரங்களும் வன்முறைகளும் பெருகிவரும் இவ்வாறான சூழலில் நாம் திறப்பின் வாசலில் நிற்கக் கடமைப்பட்டுள்ளோம். கடைசி காலத்தின் சகல அடையாளங்களும் நிறைவேற ஆரம்பித்துள்ளதை நாம் கண்கூடாக பார்த்துவருகிறோம். கொள்ளை நோயான கொரோனா வைரஸ் இன்று சீனாவை அசைத்துவிட்டு உலகத்தின் பல பகுதிகளுக்கும் பரவி ஜனங்களைப் பீதியடைய செய்துள்ளது. கடவுள் ஒருவர்தான் இதைக் கட்டுபடுத்த இயலுமென்ற மனநிலைக்கு மனிதன் இன்றைக்கு வந்திருக்கிறான். எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1 தீமோ.2:4). கர்த்தருடைய இந்த சித்தமானது நிறைவேற நாம் ஜெபிப்போம்; பிரயாசப்படுவோம்.

இவ்வாண்டின் அரசுத்தேர்வுகள், கல்வி இறுதியாண்டின் தேர்வுகளை எழுதிவரும் அனைத்து பங்காளர் பிள்ளைகளுக்காகவும் நாங்கள் ஜெபித்து வருகிறோம். மேலும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் அனைத்து பிள்ளைகளும் நன்கு எழுதுவதற்கு வேண்டுதல் செய்கிறோம். கர்த்தர்தாமே சிறந்த ஞானத்தை ஒவ்வொருவருக்கும் கொடுத்து அவர்களது மேற்படிப்புகளைத் தொடரச் செய்வதற்கு உதவி செய்வாராக.

இவ்விதழில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியனவற்றை சிந்திக்கும்படியாக செய்திகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் கொரேனா வைரஸினால் தற்போது பெருகிவரும் கொள்ளை நோயை மையமாக வைத்து நாம் எச்சரிக்கை அடையும் வண்ணமாக மனந்திரும்பு! ஆயத்தமாகு!! என்ற கருப்பொருளில் அருமையான சத்தியத்தை எழுதியுள்ளார்கள். இயேசு ஏன் மரித்தார்?! என்ற தலைப்பிலான செய்தியில் Dr.ஜாண் நுஃபெல்ட் கிறிஸ்துவின் பாடு மரணத்தை விளக்கியுள்ளார்கள். கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை ஏற்க விரும்பாத பேதுருவைக்குறித்து தயக்கமுள்ள சீஷத்துவம் என்ற தலைப்பில் கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் விளக்கியுள்ளார்கள். இயேசு அருளின ஏழு வார்த்தைகளில் முதல் வார்த்தையான “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்” என்ற தலைப்பில் Dr.W.வாரன் வியர்ஸ்பி அவர்களும் உயிர்த்தெழுதலினால் உண்டான மாற்றங்களைக் குறித்து சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் அளித்த செய்தியும் மேலும் Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய குணமாக்குதலும் விசுவாச ஜெபமும் என்ற தொடர் செய்தியும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் ஒவ்வொன்றும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்