மனந்திரும்பு! ஆயத்தமாகு!

சகோதரி சாந்தி பொன்னு
(மார்ச்-ஏப்ரல் 2020)

”இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: …. நீங்கள் மனந்திரும்பாற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்” (லூக்.13:3).


சலசலவென்று மெல்லிய ஓசையை எழுப்பிக் கொண்டு கற்களையும் மண்ணையும் தழுவிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் சிற்றாறுக்கு அருகில் நின்று, அந்தக் குளிர்ந்த நீரில் கால்களை நனைத்து, அந்த நீரோட்டத்தின் அழகை ரசித்திருக்கிறீர்களா? அது எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதைக் கண்டுகொள்வது கடினம். அதே சின்ன ஆறு திடீரென்று வேகம்கொண்டு, சிறிது சிறிதாகப் பெருக்கெடுத்து, வேகமாகப் பாய்ந்தோட ஆரம்பித்தால், கற்பனை பண்ணிப் பாருங்கள், அதை ரசித்து நின்ற நீங்கள் என்ன செய்வீர்கள்? திடுக்குற்றுப் பின்வாங்க மாட்டீர்களா?

காலத்துக்குக் காலம், ஏதோவொன்று இந்த உலகத்தைக் கலக்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மனிதர் நாம் உணர்வடைகிறோமா? ஒவ்வொரு அழிவும் நேரிடும்போது, இது கடைசிக்காலம் என்று எல்லார் வாயும் முணுமுணுக்கும். ஆனால் எவன் மனந்திரும்புகிறான்? வில்லங்கம் விலகிப்போக, நடந்ததும் பழசாய்ப்போக, நாமும் நமது வழிகளில் நடக்க ஆரம்பிக்கிறோம். இப்போதெல்லாம் சாதாரணமாகவே தும்மல் வந்தாலும், காய்ச்சல் ஜலதோஷம் வந்தாலும் மருத்துவரை நாடவே பயப்படுகிறோம். இது தேவையா? இன்னமும் நடக்கும்.

நவீன தொழில்நுட்பம், புதிய கண்டு பிடிப்புகள், ஆராய்ச்சிகள் என்றும், உலகின் இரண்டாவது வல்லரசு நாமேதான் என்பதுபோல சிறிது சிறிதாக முன்னேறி உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டிருந்த சீனாவிலிருந்து திடீரென்று சீறிக்கொண்டு எழுந்த அலைகள் இன்று சீனாவையே கேள்விக்குறியாக்கியிருப்பது மாத்திரமல்ல, தற்போது முழு உலகையுமே அசைத்துவிட்டது. இன்று யார் வாயிலும் “கொரோனா” இதுதான் பேச்சு. என் தகப்பனார் தன் சிறுவயது அனுபவங்களைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது, அதாவது 1914ம் ஆண்டளவில் அவருடைய பெற்றோர் கொள்ளை நோயில் பரிதாபமாக ஒருவர்பின் ஒருவராக மரித்துப் போனார்களாம். மாத்திரமல்ல, முழுக் கிராமமுமே அலறலும் கூக்குரலுமாய் இருந்தது என்று கண்கலங்கப் பகிர்ந்துகொள்வார். அது காலரா அதாவது கட்டுக்கடங்காத வயிற்றுப் போக்கு கொள்ளைநோயாக வெடித்த காலம். இந்த 19ஆம் 20ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலே பலவிதமான கொள்ளைநோய்கள், கொள்ளை கொள்ளையாக மக்களை வாரிக்கொண்டு போய்விட்டது என்பதை யார் உணருகிறார்?

சீனாவில் முன்னர் மிஷனெரியாகப் பணி புரிந்த ஒருவர், திடுக்கிடும் தகவல்களைத் தந்திருக்கிறதுமன்றி, சீனாவுக்காக ஜெபிக்கும்படி உள்ளம் உடைந்து கேட்டிருக்கிறார்கள். இன்னும் பலபல பயங்கரமான தகவல்கள், சரியோ தப்போ, வந்துகொண்டேதான் இருக்கின்றன. சீனாவில் தாக்கப்பட்டுள்ள வூஹான் பிரதேசத்தில் பணிபுரிகின்ற ஒரு தேவ ஊழியருடைய இணையத் தளத்தின் பதிவை வாசித்தபோது உள்ளம் உடைந்து விட்டது. யாரும் மனதுடைந்து போகவேண்டாம் என்றும், ஆண்டவருக்குள் உறுதிப்படும்படிக்கும், மரித்தாலும் கர்த்தரோடிருப்போம் என்ற உள்ளார்ந்த சமாதானத்தை தேவனுடைய வசனத்தில் பெற்றுக்கொண்டு கர்த்தருக்குள் திடமாக இருந்து, தேசத்திற்காக ஜெபிக்கும்படிக்கும் மனதுருகிக் கேட்டிருக்கிறார்.

யார் குற்றம்?

பிரியமானவர்களே, நடப்பவற்றிற்காக நாம் யாரைக் குற்றம் சொல்லலாம்? யாருக்கு விரோதமாகப் போர் தொடுக்கலாம்? யாரை நோக்கி ஏவுகணைகளை ஏவிவிடலாம்? நின்றபடியே விழுந்து மடிகின்ற காட்சிகள் உள்ளத்தை உலுப்புகின்றன. இதற்கு யாரைக் குற்றம் சொல்ல? ஒருவரிலொருவர் குற்றம் சாட்டுவது மிக இலகு.

ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நமது பொறுப்பு என்ன என்பதே முக்கியமான காரியம்! நமக்குப் பாதிப்பு வரும்வரைக்கும் இது நமக்கு வெறும் செய்திதானா?

வேதாகமத்துக்குத் திரும்புவதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை.

கர்த்தர் இஸ்ரவேலை எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுவித்தபோது, கடினப்பட்டிருந்த எகிப்தையும் பார்வோனையும் அசைப்பதற்கு பத்து வாதைகளை அனுமதித்தார். அதில் ஒன்று கொள்ளை நோய். அதற்காக பார்வோன் மனந்திரும்பினானா? இல்லை. எகிப்தியருக்கு மாத்திரமல்ல, தமது ஜனமாகிய இஸ்ரவேலையும் கர்த்தர் எச்சரித்தார்:

என் உடன்படிக்கையை மீறினால் கொள்ளை நோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன் என்றார்.

அப்போதும் இஸ்ரவேல் மனந்திரும்பியதா? இல்லை.

ஆண்டவர் இயேசு கடைசிக்காலத்தைக் குறித்துச் சொன்னபோது, தங்களைக் கிறிஸ்து என்று சொல்லிக்கொண்டு பலர் எழும்புவார்கள் என்றும், யுத்தங்களும், யுத்தங்களின் செய்திகளும், ஜனத்துக்கு விரோதமாக ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாக ராஜ்யமும், பஞ்சங்களும், கொள்ளை நோள்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும் என்றார். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என்றார். இவையெல்லாம் இன்று நிறைவேறிக்கொண்டிருக்கிறதல்லவா! ஒருபக்கம் அக்கினி, இன்னொரு பக்கம் சுழல்காற்றும் கொடும் வெள்ளமும், ஒரு பக்கம் எரிமலை குமுற, இன்னொரு பக்கம் இயற்கையே குமுறுகிறது. ஒருபக்கம் ஏவுகணைகள் பாய்கின்றன என்றால், இன்னொரு பக்கம் கண்ணுக்குத் தெரியாத வைரஸ்கள் திரள் திரளாகப் பரவி மனிதரைக் கொல்லுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்கிறோம்?

இப்போ யாரைக் குற்றம் சொல்ல? சீன அரசாங்கமே ஏற்கனவே பிடிக்கக்கூடாது கொல்லக்கூடாது என்று தடைபோட்டிருக்கிற ஊர்வனவற்றையும் மிருகங்களையும் சட்டத்தை மீறி, கொன்று சாப்பிட்டால் கடவுளை எப்படி நொந்து கொள்வது? மாத்திரமல்ல, இன்று Bio war என் றும் Bio weapon என்றும் ஏதோதோ புதிது புதிதாக இதுவரையும் கேள்விப்படாத பலவித திடுக்கிடும் செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

மனந்திரும்பு

ஒரு காரியத்தை நாம் உணரவேண்டும்? ஒரு தடவை பிலாத்து சில கலிலேயரைக் கொன்று அவர்களுடைய இரத்தத்தைப் பரிசுத்த பலிகளோடே கலந்துவிட்டான் என்ற செய்தியை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். அதற்கு இயேசு சொன்னது:

அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும், அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள் (லூக்.13: 1-3).

இந்த எச்சரிப்புத்தான் இன்று நமக்கும் வருகிறது. பிரியமானவர்ளே, நம்மைச் சுற்றிலும் சம்பவிக்கின்ற காரியங்கள் அத்தனையும் பரிசுத்த வேதாகமத்திலே கர்த்தர் ஏற்கனவே அறிவித்துவிட்டவைதான். ஒன்றும் புதிதில்லை. ஆகவே சம்பவிப்பவைகள் ஆச்சரியமல்ல என்றாலும், சம்பவங்களுக்கு முகங்கொடுப்பது மிகவும் கொடுமையான விஷயம்தான்.

அன்றும் இன்றும் கர்த்தர் மக்களை ஒன்றே யொன்றுக்கே அழைக்கிறார். மனந் திரும்புங்கள்! இதுவே தேவனுடைய சத்தம்!

இயேசு முதன்முதலில் செய்த பிரசங்கமும் இதுதான்: மனந்திரும்புங்கள்; பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்றார். ஆகவே நடக்கின்ற சோகங்களுக்குக் காரணம் தேடுவதைவிடுத்து, முதலில் நம்மை ஆராய்ந்து பார்த்து, தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக நாம் எவ்விதத்தில் செயற்படுகிறோம் என்பதை உணர்ந்து, மனந்திரும்புவோம்.

மோசே, நெகேமியா, தானியேல் என்பவர்களுடைய ஜெபங்களைத் தேடிப்பாருங்கள். நானும் என் ஜனத்தாரும் பாவம் செய்தோம் என்றுதான் அவர்கள் ஜெபித்தார்கள். நமது தேசத்தைப் பாதுகாக்கவேண்டுமென்றால், தேசம் அல்ல, நாமேதான் மனந்திரும்ப வேண்டும்.

தனிப்பட்ட வாழ்வில் திருமணவாழ்வில் குடும்ப வாழ்வில் முக்கியமாக சபை வாழ்வில் சமூக வாழ்வில் நாம் எங்கே நிற்கிறோம். தேவனுடைய திட்டத்துள்தான் நிற்கிறோமா? உண்மைத்துவத்துடன் சிந்தித்து தேவபாதம் பணிவோம்.

சீனா தேசத்துக்காக மாத்திரமல்ல, நம்முடைய நாட்டின் பாதுகாப்புக்காகவும் மனந்திரும்புதலுக்காகவும் முழங்கால்களை முடக்க அழைக்கப்படுகிறோம். இது கர்த்தர் சொன்னது:

“நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளை நோயை அனுப்புகிறபோது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்.”

இவ்வாறு வாக்களித்த தேவன் நிச்சயம் நமது தேசத்தைப் பாதுகாப்பார். ஆனால் நமக்குத்தான் இந்த வசனம் பரிச்சயமாகிவிட்டபடியால், நாம் உணர்வடைவதே அரிதாகிவிட்டது. தேவன் தேசத்தைப் பாதுகாக்கவேண்டுமென்றால் நாம், தேவனுடைய பிள்ளைகள் நாமேதான் மனந்திரும்பவேண்டும்.

திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கவும், சுவரின் துவாரத்தை அடைக்கவும் தேவன் ஒருவரைத் தேடுகிறார். அது ஏன் நாமாக இருக்கக் கூடாது.

ஒரு நவீன உலகம்

“தன்னை மதிக்காத மாமிக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலையில், இனிவரும் காலங்களில் ஆன் லைனில் வைரஸ் எடுப்பித்து, இரகசியமாகவே மாமியைக் கொன்றுவிடக்கூடிய வசதிகள் மருமக்கள்மாருக்குக் கிடைத்தாலும் கிடைக்கும்” என்று ஒருவர் தமாஷாகச் சொன்னார். இதையும் நாம் யோசிக்கத்தான் வேண்டும்.

ஆம், அப்படிப்பட்ட ஒரு காலத்துக்குள் நாம் வரமாட்டோம் என்று சொல்லமுடியாத அளவுக்குக் காரியங்கள் வேகமாக சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. நம்முடைய சமகாலப் பிரச்சனை இந்த கொரோனா வைரஸ்தான். இதுவும் தாண்டி இன்னும் என்னென்ன வருமோ, ஆனால் நாம் நினையாதவற்றையெல்லாம் நாம் சந்திக்கப் போகிறோம் என்பது உறுதி. எயிட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.ஐ.வி. வைரஸ் வந்தபோது உலகமே நடுங்கியது. தவறான உறவுகொள்கிறவர்கள் உதறியடித்துக்கொண்டு ஓடினார்கள். இப்போ அதைப்பற்றி யார் பேசுகிறார்கள். அதெல்லாம் தொற்றாதபடி மனிதன் தடைகளைக் கண்டுபிடித்துவிட்டு, தன் இச்சையில் தொடருகிறான். சமீபத்தில் வெளியான ஒரு திடுக்கிடும் செய்தி. இந்த எச்.ஐ.வி. வைரஸ்ஸைக் கண்டுபிடித்த விஞ்ஞானி, அவர் சாகும்போது, சொன்னதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட இன மக்களை அழிப்பதற்கென்றே இந்த வைரஸ்ஸைக் கண்டு பிடிப்பதற்குத் தான் வற்புறுத்தப்பட்டதாக அவர் சொல்லியிருக்கிறார். பயங்கரம் இல்லையா! சமகாலப் பிரச்சனை இதையெல்லாம் தாண்டிவிட்டது. ஆரம்பத்தில் பாம்பு, எலி என்றார்கள். ஆனால் இப்போ மக்களைக் கொன்றழிக்கின்ற இந்த கொரானா வைரஸ் விவகாரத்தில் உணவுப்பழக்கம் மாத்திரமல்ல, நாடுகள் சம்பந்தப் பட்டிருக்கின்றனவோ என்று சந்தேகிக்கும் பயங்கரமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இது வரை வெளியே வராத பலவிதமான திடுக்கிடும் தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிலே எவ்வளவு உண்மையோ பொய்யோ, உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது என்பது மாத்திரம் தெளிவு.

காலம் இனிச் செல்லாது

நாம் சுகமாய் தங்கியிருக்கிற அதே நேரத்தில் நம்மைச் சுற்றிலும் எத்தனை கூக்குரல்கள், வேதனை முனகல்கள், நினைவை முந்திய சாவுகள், மாத்திரமல்ல, புதிய கண்டுபிடிப்புகளில் உலகம் மயங்க மயங்க, அதே புதியனவை மக்களின் அழிவுக்கே அவர்களை இட்டுச்செல்லுகின்ற பரிதாபமான நிலைமையை என்ன சொல்ல.

முதலாம் இரண்டாம் உலகப் போரின் நினைவுகள் இன்னமும் அழியாத நிலையில், மூன்றாம் உலகப்போரைப்பற்றி நமது பள்ளி நாட்களிலேயே நாம் கேள்விப்பட்டதுண்டு. ஏகே 47 ரக துப்பாக்கிகளை இரண்டாம் உலகப் போருக்கென்றே கண்டுபிடித்ததாக அதைக் கண்டுபிடித்தவரே சொல்லியுள்ளார். நாமும் யுத்தம் என்றால் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற காலம் போய், வாள், துப்பாக்கி, கைக்குண்டு என்ற காலத்தையும் கடந்து, போர் விமானங்கள், குண்டுமழைகள் என்று காலத்தினூடாக, இப்போ ஏவுகணை காலத்துக்கு வந்து விட்டோம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் இனி ஒரு யுத்தம் வருமானால், யுத்தம் இருக்காது, இரத்தம் இருக்காதுபோல் தெரிகிறது. ஒரு துளி வைரஸ் முழு தேசத்தையுமே அழித்துப் போடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த நிலையில் நமது பொறுப்பு என்ன? வேதாகமத்திற்குத் திரும்புவோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆண்டவரும் நமது மீட்பருமாகிய இயேசு உலகத்தின் முடிவைப்பற்றி விளக்கமாகக் கூறியுள்ளார். யுத்தங்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள் ஒரு புறம் என்றால், அன்பு தணிந்து ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, அக்கிரமம் பெருகி, வஞ்சகம் தலை விரித்தாடி, நியாயம் எடுபட்டுப்போம் என்றார். இத்தனையையும் நாம் இன்று சந்திக்கிறோம் இல்லையா! ஆனால் இந்த விஷயங்களை அவர் சொன்னபோது, நாம் செய்யவேண்டிய மூன்று காரியங்களை நமக்கு உணர்த்தியுள்ளார்.

ஒன்று: எச்சரிக்கையாயிருங்கள்
இரண்டு: விழித்திருங்கள்
மூன்று: ஆயத்தமாயிருங்கள்

எச்சரிக்கையாயிருப்பதற்கு ஒரே வழி:
அனுதினமும் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருப்பதுதான்!

விழித்திருக்க ஒரே வழி:
தூக்கத்திலும்கூட நமது இருதயம் தேவனை நோக்கி ஜெபித்துக்கொண்டிருப்பதுதான்!!

ஆயத்தமாயிருக்க ஒரே வழி:
நினையாத நேரத்தில் நினைக்காத காரியங்கள் நினைக்காத இடங்களிலிருந்து நினைத்திராத நபர்களிடமிருந்து முளைத்தெழும் என்பதால், மனிதரைத் தேடாமல், தேவனுடைய வார்த்தையின்படி வாழவும், பிறரையும் தேவனுடைய வார்த்தைக்குத் திருப்புவதிலும், அதாவது நாமும் ஆயத்தமாகி பிறரையும் ஆயத்தப்படுத்துவதும்தான் ஒரே வழி!!!

ஆனால் உங்களுக்குத் தெரியுமா? இந்த மூன்று காரியங்களையும் மறந்துவிட, அலட்சியம் செய்ய, செய்யாதிருக்க சத்துரு எல்லாத் தந்திரங்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறான். தேவனுடைய வார்த்தைகள் புரட்டப்படுகின்றன. அற்புதங்கள் அடையாளங்கள் மனித மனங்களை மயக்குகின்றன.

அன்று தேவசந்நிதானத்தில் நின்றவன் பெருமையினால் தள்ளப்பட்டான். அவனே இப்போ மனிதருக்குள் தன் பெருமையை ஊட்டி வளர்த்துக்கொண்டிருப்பதை உணராத தனி மனிதனோ, உலக நாடுகளோ, தாங்கள்தான் வாழவேண்டும் தாங்கள்தான் ஆளவேண்டும் என்ற பெருமையில் அடுத்தவனை, அடுத்த தேசத்தை அழிக்க முன்வந்துவிட்டார்கள். பெருமை அழிவுக்கே வித்திடும்.

இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று அன்று எருசலேம் தேவாலயத்தைப் பார்த்து இயேசு சொன்னாரே, நடந்ததா இல்லையா! இன்னமும் அந்தத் தேவாலயம் மீண்டும் கட்டப்படவில்லை. அது எப்போ கட்டப்படுகிறதோ அங்கேதான் முடிவும் காத்திருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முன்பு, நீ உன் தேவனிடத்திற்குத் திரும்பு. உன் விளக்கில் எண்ணெய் இருக்கிறதா என்று பார்த்துக்கொள். உன் விளக்கு அணையாதபடி விழித்திரு. எந்நேரம் எது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. “காலம் இனிச் செல்லாது”. இந்தக் கொரோனா வைரஸ்கூட மறக்கப்பட்டு இன்னுமொரு பயங்கரத்துள் உலகம் வெகு விரைவில் கடந்துசெல்ல அதிக காலம் செல்லாது.

இந்த நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டியது ஒன்றுதான். நமது அழியாத ஆத்துமா தன் நித்தியத்தை எங்கே கழிக்கப்போகிறது? உலகம் என்ன அழிவை ஏற்படுத்தினாலும், கர்த்தர் சொன்னபடி உலகமே அழிந்துபோனாலும், ஆண்டவருடைய அழியாத மாறாத வார்த்தை நிச்சயம் நிறைவேறும். ஆகவே, வேதத்துக்குத் திரும்புவோம். குடும்பமாகத் திரும்புவோம். திருச்சபையாகத் திரும்புவோம். கர்த்தருடைய வார்த்தையை உட்கொண்டு, அதையே நமது மூச்சாகக் கொள்ளுவோம். சீக்கிரமாக ஆண்டவருடைய சுவிசேஷத்தை அறிவிக்க ஓடுவோம். கேட்கிறவன் கேட்கட்டும். ஒவ்வொரு கணப் பொழுதும் நமக்குத் தருணம்தான். அடுத்த கணம் என்ன நடக்கும் என்று தெரியாது. ஆகவே, நமக்கு மரணம் நேர்ந்தாலென்ன, ஆண்டவருடைய வருகை அதற்கு முன் நிகழ்ந்தாலென்ன, வாழ்விலும் சாவிலும் மறுமையிலும் ஆண்டவருடன்தான் என்ற ஒரே காரியத்திற்கு ஆயத்தமாவோம்.

இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்றவர் வந்திடுவார். பின்னர் அழுது பயனில்லை. உலகம் தன் அழிவுக்கேற்றதை எவ்வளவு வேகமாக வீரியமாகச் செய்துகொண்டிருக்கிறது. அழியாத நித்திய வாழ்வுக்காகப் போராடவேண்டிய நாம் அதிலும் வீரியமாக வேகமாகச் செயல்பட வேண்டாமா?

பிள்ளைகளே, தேவனைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமா?

அதற்காகப் பிறரை ஆயத்தப்படுத்த நீங்கள் புறப்படுவீர்களா?

நமது உணர்வுகள் விழித்தெழட்டும். ஆமென்.

சத்தியவசனம்