இயேசு ஏன் மரித்தார்?

Dr.ஜாண் நுஃபெல்ட்
(மார்ச்-ஏப்ரல் 2020)

உண்மையான கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் மையம் இயேசுவின் சிலுவையாகும்! நம்முடைய வாழ்வின் ஆதார மையமும் அதுவே!! ஒரு கிறிஸ்தவன் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளும் சிலுவையுடன் தொடர்புடையதாகவே அமைந்திருக்கும். சிலுவையில் நம்முடைய மன்னிப்பை மாத்திரமல்ல – நமது வாழ்வின் காரணத்தையும் நோக்கத்தையும் – நமது துன்பங்களுக்கான விளக்கத்தையும் – அதில் காணமுடியும். எனவே நாம் சுய பச்சதாபத்தோடோ குற்ற மனப்பான்மையோடோ வாழ அவசியமில்லை. நமது எதிர்காலத்தின் நம்பிக்கை இரட்சகரின் பாடுகளால் உருவம் பெற்று அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித குமாரனாகவும் தேவகுமாரனாகவும் அவர் சிந்திய இரத்தத்தையும் அவருடைய மரணத்தையும்விட வாழ்வில் வேறு எதுவும் முக்கியமல்ல.

நாம் தேவனை ஆராதிக்கக் கூடிவரும் பொழுது விசுவாசத்தின் இரு சடங்குகளை அனுசரிக்கிறோம். அவை சிலுவையைப் பற்றியதாகும். நாம் கிறிஸ்துவுடன் நடக்க ஆரம்பிக்கும்பொழுது திருமுழுக்கு எடுக்கிறோம். அது கிறிஸ்துவின் மரணத்துடன் அடக்கம் பண்ணப்பட்டு அவருடைய உயிர்த்தெழுதலில் எழும்புகிறோம் என்பதை அடையாளப்படுத்தும் ஒரு விழாவாக அமைகிறது.

அடுத்தது திருவிருந்தாகும். அது சிலுவையில் இயேசுவின் சரீரம் பிட்கப்பட்டதையும் அவருடைய இரத்தம் சிந்தப்பட்டதையும் காட்டும் இரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளன. நம்முடைய அனுதின வாழ்வும் நமது ஆராதனையும் சிலுவை ஒன்றையே மையமாகக் கொண்டுள்ளன. பரி.பவுல் “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்” என்று கலாத்தியருக்கு எழுதியுள்ளார் (கலா.6:14).

மேலும் சிலுவை நமக்கு ஓர் எச்சரிப்பின் ஒளியாகும். அது நமது கலங்கரை விளக்கம். உண்மை எது பொய் எது என்று அது நமக்கு அறிவிக்கிறது. சிலுவையை நீங்கள் புரிந்துகொண்டால் உலகின் அநேக கள்ள போதனைகளுக்கு நீங்கள் விலகியிருக்கலாம். எந்த ஒரு தவறான போதனையும் சிலுவையை இழிவுபடுத்துவதாகவே அமைந்திருக்கும். சிலுவையை நீங்கள் முழுவதுமாக புரிந்துகொள்ளாவிட்டால் இயேசு முழு மனிதனா அல்லது தேவனா? என்ற கேள்வி உங்களுக்கு எழும். தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நீதியின் கிரியைகளை செய்ய நாடுவீர்கள். சிலுவையின் மர்மத்தை நீங்கள் உணராவிட்டால் உங்களுடைய வாழ்வு முக்கியம் என்ற கருதமாட்டீர்கள். ஆண்டவரிடம் கோபப்படுகிறீர்களா?˜ நீங்கள் சிலுவையண்டைக்குச் செல்லவேண்டும். நித்தியத்தை எதிர்நோக்க நம்பிக்கையற்றிருக்கிறீர்களா? சிலுவையை நோக்கிப்பாருங்கள்.

நம்மிடமுள்ள பிரச்சனை என்னவென்றால், நாம் தேவனைப் பற்றி மிகக் குறுகிய பார்வையைக் கொண்டுள்ளோம். கம்பீரமான தேவனுடைய வல்லமை, மகிமை, ஞானம் ஆற்றல் இவற்றைப் பற்றிய அறிவினை நாம் இழந்து விட்டோம். சிலுவையின் மூலமாக நாம் தேவனுடைய மாட்சிமையைக் காணும்பொழுது மிகச் சிறப்பான அவருடைய தோற்றத்தையும் காட்சியையும் அறிந்து கொள்ளமுடியும். தேவனுடைய நீதியை சிலுவை அழகாகக் காட்டுகிறது என்பதைப் பரி.பவுல் ரோமர்3:25 இல் தெளிவாகக் கூறியுள்ளார். சிலுவையை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வீர்கள் எனில் மெய்தேவனுடைய மாட்சிமைக்கு நிச்சயம் அடிபணிவீர்கள்.

ஆனால் சிலுவையைப் பற்றி நிலவி வருகின்ற இரு தவறான கருத்துக்களை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒன்று: இயேசு மரித்தபின் அவருக்கு என்ன நிகழ்ந்தது? இரண்டு: அவர் யாருக்காக மரித்தார்? இரண்டுமே முரண்பாடாகத் தோன்றுகின்றன. ஆனால் பரிசுத்த வேதாகமத்தை நாம் ஆழ்ந்து படிப்போமானால் அது சிலுவையைப் பற்றிய காரியங்களைத் தெளிவாக நமக்கு விளக்கித்தரும். யோவான் 19:30ல் இயேசு காடியை வாங்கின பின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் என்று எழுதியுள்ளது.

பிறகு என்ன நிகழ்ந்தது? மூன்று நாளைக்குப் பின்னர் அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினார். அந்த மூன்று நாட்களில் நடந்தது என்ன? உயிர்த்தெழுந்த காலையில் தன்னை சந்தித்த மகதலேனா மரியாளிடம் இயேசு, என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை என்று கூறினார் (யோவான் 20:17). அப்படியானால் இயேசுவின் மரணத்துக்கும் அவர் மரியாளைச் சந்தித்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிதாவின் சமுகத்தில் இல்லையா? அப்படியானால் அவர் எங்கேயிருந்தார் என்ற கேள்வி எழுகிறது.

நீங்கள் கிறிஸ்தவ பாரம்பரிய சூழ்நிலையில் வந்தவர்கள் எனில் ஆலய ஆராதனையில் அப்போஸ்தலரின் விசுவாசப் பிரமாணத்தை அநேகமுறை கூறியிருப்பீர்கள். அதில் “அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னி மரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார்; பொந்தியுபிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்; மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்” என்று அதில் நாம் அறிக்கையிடுகிறோம்.

அந்த அறிக்கையில் இயேசுகிறிஸ்து பாதாளத்தில் இறங்கி என்ன செய்துகொண்டிருந்தார் என்று அநேக விசுவாசிகள் ஆச்சரியப்படுகின்றனர். இயேசுகிறிஸ்துவின் பாடுகளும் துன்பங்களும் சிலுவையில் முடிந்துவிட்டனவே. சிலுவையில் அவர் நம்முடைய அனைத்து பாவங்கள் முழுவதற்கும் முழுகிரயத்தையும் செலுத்திவிட்டார். எனவேதான் அவர் முடிந்தது என்று கூறினார். ஆகவே அவர் பாதாளத்தில் துன்பப்பட்டார் என்று கூறுவது ஒரு தவறான போதனை. அது நம்முடைய பாவங்களைப் போக்குவதற்கு இயேசுவின் சிலுவை மரணம் போதுமானதல்ல என்ற பொருளைத் தரும். இயேசு உண்மையிலேயே அந்த மூன்று நாட்களில் பாதாளத்துக்குச் சென்றாரா?

அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமாணம் மிகவும் பழமையானது. பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு அப்போஸ்தலர்கள் ஒன்று கூடி தாங்கள் செல்லுமிடமெங்கும் போதிக்க வேண்டிய காரியங்களைப் பற்றி முடிவெடுத்தனர் என ஒரு பாரம்பரியம் கூறுகிறது. அது உண்மையாயின் அப்பிரமாணம் கி.பி. 200 முதல் 750க்குள் பலவித மாற்றங்கள் பெற்றுவிட்டன. அப்பொழுது பாதாளத்தில் இறங்கினார் என்ற சொற்றொடர் அதில் இடம்பெறவில்லை. ஆனால் கி.பி.650க்குப் பின்னரே இது இணைக்கப்பட்டது. ‘வேதாகமத்துக்குத் திரும்புவோம்’ என்ற நமது ஊழியம், வேதாகமம் மட்டுமே நம்முடைய விசுவாசத்தின் அடிப்படை ஆதாரம் என்று போதிக்கிறது. அப்போஸ்தலரின் விசுவாசப்பிரமாணம் நமக்கு உதவுவது என்றாலும் அதனை விசுவாசம் மற்றும் வாழ்வுமுறையின் இறுதி வடிவம் என்று நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. இயேசு பாதாளத்தில் இறங்கினாரா என்று நாம் பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமே தேடவேண்டும்.

இக்கருத்தை அநேக வேதபகுதிகள் நமக்கு விளக்குகின்றன. ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள் (1பேதுரு 3:18-20). இதனை நாம் பல்வேறு விதங்களில் புரிந்துகொள்ளலாம். இயேசுகிறிஸ்து பாதாளத்தில் துயரப்படவில்லை என்றும், அங்குள்ள மக்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தரவும் அங்கு சென்றார் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். இவைகள் உண்மையானால், வேதாகமம் கூறும் கருத்துகளுக்கு அவை முரணானதாகும்.

ஏனெனில் எபி.9:27ல் அன்றியும் ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயந்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே என்பதே வேதாகம ஒழுங்கு. லூக்கா 16:19-31 ல் ஐசுவரியவான் – லாசரு உவமையை இயேசு கூறியுள்ளார். இங்கு ஐசுவரியவான் மரித்தவுடனே பாதாளத்துக்குச் சென்றுவிட்டான். எனவேதான் உயிரோடிருக்கிற நமக்கு, இதோ இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள் என்று கூறப்பட்டுள்ளது (2 கொரி.6:2). ஆகவேதான் விசுவாசிகளாகிய நாம் இறந்தவர்களுக்காக ஜெபம் பண்ணுவதில்லை. உயிரோடிருப்பவர்களுக்காகவே விண்ணப்பம் பண்ணுகிறோம். இறந்தவர்களுடைய நிலை மாறுவதில்லை. நித்தியத்தின் பாதையிலே ஏற்படும் மாற்றங்கள் யாவும் மரணத்துடன் முடிவடைந்துவிடும். மரணமே நாம் பிரவேசிக்கும் கடைசி திரை. மரணம் அல்லது நித்தியம்.

எனவே, இயேசு பாதாளத்தில் துன்பப்படவில்லை. மரித்தவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பையும் அவர் அருளவில்லை. இது மற்றொரு விளக்கத்துக்கும் வழிவகுக்கிறது. 1பேதுரு 3இல் கூறப்பட்டுள்ள பிரசங்கித்தார் என்ற வார்த்தை “euangelizomai” அல்ல, மாறாக “kyruzzo” ஆகும். அதாவது அறிவித்தார் என்பதே. ஒரு வேளை அவர் பாதாளத்தில் இறங்கி அங்கே காவலில் இருந்த ஆவிகளுக்கு தனது வெற்றியை அறிவித்தார் என்று நாம் கொள்ளலாம். இக்கருத்து உண்மையாயின், அது அந்த ஆவிகளின்மேல் வெற்றி என்று கொள்ளமுடியாது. ஆனால் உயிரோடிருக்கும் விசுவாசிகள் தங்களுடைய பாடுகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொள்ள உற்சாகத்தை அது அளிக்கிறது.

நோவாவின் நாட்களில் கீழ்ப்படியாமலிருந்து காவலில் இருந்த ஆவிகளுக்கு இயேசு நற்செய்தியைப் பிரசங்கித்தார் என்பது ஒரு சிறந்த விளக்கமாகும். அதாவது அவர் பாதாளத்துக்குச் சென்றார் என்று அப்பகுதி கூறவில்லை. இயேசு சிலுவையிலிருந்து நேரடியாக பரத்துக்கு வெற்றி முழக்கத்துடன் சென்றார் என்று கொள்வது நம்புவதற்கு எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இயேசு பாதாளத்துக்குச் சென்றார் என்பதற்கு வேதாகம ஆதாரம் எதையும் நான் காணவில்லை. அப்படியானால் அவர் எங்கே சென்றார்? அவரது சரீரம் கல்லறையில் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய ஆவி பரத்துக்குச் சென்றது. அப்படியானால் அவர் ஏன் மரியாளுக்குக் காட்சியளிக்கவேண்டும்? “என்னைத் தொடாதே; நான் இன்னும் என் பிதாவினிடத்தில் போகவில்லை” என்று ஏன் சொல்லவேண்டும்? இதற்கான விடை மிகவும் வெளிப்படையானது. மூன்று நாட்களுக்குப் பின்னர் இயேசுவின் ஆவி அவருடைய சரீரத்துக்குள் திரும்பிவந்தது. அவருடைய சரீரம் உயிர்த்தெழுந்தது. அந்நாளில் இயேசு அந்த உயிர்த்தெழுந்த சரீரத்துடன் பரத்துக்கு செல்லவில்லை. இயேசு மரித்தபின் உயிர்த்தெழுந்தார் – மரித்தோரிலிருந்து எழுந்தவர்களில் முதற்பலனுமானார். கிறிஸ்துவை விசுவாசிக்கும் நாமும் அவரைப்போலவே மரித்தபின் பரத்துக்குப் போவோம். கிறிஸ்துவைப் போலவே உயிர்த்தெழும் சரீரத்துக்காக நாம் காத்திருப்போம். கிறிஸ்துவை விசுவாசிக்கும் எவரும் நரகத்துக்குச் செல்லமாட்டார்கள்.

சிலுவையைப் பற்றி நாம் என்ன கூறுவோம்? ஒரு விதத்தில் அது இயேசுவுக்குச் செய்ததையே நமக்கும் செய்யும் என நாம் எண்ணலாம். நம் மரணத்துக்குப் பின்னர் பரதீசின் கதவுகளைத் திறக்கப்படும். மகிமையின் வாசலில் நாம் பிரவேசிக்கும்பொழுது வெற்றி கீதங்கள் தொனிக்கும்.

இரண்டாவதாக, மற்றொரு சிக்கலான கேள்விக்கு நாம் விடை காண முயற்சிப்போம். இயேசு யாருக்காக மரித்தார் என்பதே அக்கேள்வி. ஒரு சிலருக்கு இக்கேள்வி ஆச்சரியத்தை உண்டாக்கலாம். நமக்கு ஏற்கனவே இதற்கான விடை தெரியும் என நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். என்னுடைய கண்ணோட்டத்தில் வித்தியாசமாக இதை அணுகுவோம்.

யோவான் 1:29இல் யோவான் ஞானஸ்நானன் இயேசுவைக் கண்டபொழுது இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டி என்றார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார் (1 யோவான் 2:2) என்பதையும் நாம் அறிவோம். இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் மரித்தார். நாம் கிறிஸ்தவரல்லாத நம் நண்பர்களுடன் இந் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் பொழுது கிறிஸ்து உனக்காக பாடுபட்டு மரித்தார் என்று கூறுவோம். ஆனாலும் சிலர் கிறிஸ்து தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக மாத்திரமே மரித்தார் என்று வாதிடுகின்றனர். அவர்களுடைய வாதினை ஆதரிக்கும் சில வேத பகுதிகளை நாம் காண்போம். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவான் 10:10) என்று இயேசு கூறினார். இங்கு இயேசு ‘மந்தை’ என்று கூறியது உலக மக்கள் அனைவரையும் குறிக்காமல் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையே காட்டுகிறது. யோவான் 10:27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. அந்நியரின் சத்தத்துக்கு அவைகள் செவிகொடுப்பதில்லை. இயேசுவின் சத்தத்தைக் கேட்டு அவரைப் பின்பற்றும் ஆடுகளுக்காகவே அவர் தமது ஜீவனைக் கொடுத்தார்.

அப்.20:28 ல் பரிசுத்த பவுல் இயேசுவின் இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட தேவனுடைய சபையைப் பற்றி பேசுகிறார். கிறிஸ்துவின் இரத்தத்தால் கிரயமாகக் கொள்ளப்பட்ட அச்சபை சில தன்மைகளால் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இதைப்போன்று புதிய ஏற்பாட்டில் நாம் அநேக பகுதிகளை வாசிக்கலாம். ரோமர் 14 ல் கிறிஸ்தவ விடுதலையைப் பற்றி பவுல் நீளமான ஒரு வாக்குவாதத்தை முன்வைக்கிறார். அது கிறிஸ்தவ சகோதரனுக்கு இடறுதலாக இருக்கக்கூடாது என்பதே. வசனம் 15இல் போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. இப்பகுதி கிறிஸ்து தன் ஜீவனைக் கொடுத்த மக்கள் – அதாவது இரட்சிக்கப்பட்டவர்களைக் குறித்ததாகும்.

இரு முக்கியமான காரணிகளை வைத்து அநேகர் வாதிடுகின்றனர். ஒன்று: கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் எனில் அதற்கு அவர் கிரயம் செலுத்தியிருக்கவேண்டும். உதாரணமாக ஹரி என்பவரை எடுத்துக்கொள்வோம். அவருக்கு வீட்டின் மீது அதிகமான கடன் இருந்தது. அவருடைய நண்பர் பிராங்க் என்பவர் வங்கிக்குச் சென்று அக்கடனை அடைத்துவிடுகிறார். இதற்கு ஹரியின் செயல்பாடு எதுவாயிருந்தாலும் கடன் தீர்ந்துவிட்டது. அதுபோல கிறிஸ்து ஒருவருடைய பாவங்களுக்கு மரித்துவிட்டார்; அதற்கான கிரயம் செலுத்தியாகிவிட்டது. இரண்டு: அது கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றியது; அவர் சிலுவையில் மரித்தது 100 விழுக்காடு சக்தி வாய்ந்ததா இல்லையா என்பதாகும். இதற்கு “நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” (1 யோவான்2:2) என்ற வசனம் பல நூற்றாண்டுகளாக நடக்கும் வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

ஒரு கிறிஸ்தவனிடம் “கிறிஸ்து உனக்காக மரித்தார்” என்று கூறுவதும், கிறிஸ்தவரல்லாதவரிடம் “கிறிஸ்து உனக்காக மரித்தார்” என்றும் கூறுவதும் இரு வித்தியாசமான காரியங்களாகும். ஒரு கிறிஸ்தவனிடம், “கிறிஸ்து உனக்காக மரித்தார்” என்று சொல்லும்பொழுது அவனுடைய பாவங்கள் அகற்றப்பட்டது என்று நான் உறுதி யளிக்கிறேன். அவர்கள் நான் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டேனா? – நான் பரலோகம் செல்வேனா? – இரட்சிப்பின் உறுதி உண்டா? என்ற குழப்பங்களில் இருக்கும் பொழுது, சகோதரனே, உன்னை நீயே குற்றவாளியாகத் தீர்த்துக்கொள்வதை நிறுத்து. உன்னுடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்தாகிவிட்டது. “கிறிஸ்து உனக்காக மரித்தார் ” என்று திருமறை ஆறுதல் அளிக்கிறது.

கிறிஸ்தவரல்லாத ஒருவரிடம், “கிறிஸ்து உனக்காக மரித்தார்” என்று சொல்லும்பொழுது மேற்கண்ட எதையும் நான் கூறவில்லை. கிறிஸ்து மரித்தார்- உனக்கு இலவசமாக மன்னிப்பு அளிக்கப்படுகிறது. கிறிஸ்துவின் கொடிய சிலுவை மரணத்தைத்தவிர வேறு எதுவும் உனக்கு மன்னிப்பை அளிக்காது. பிதாவின் நீதியான கோரிக்கையை கிறிஸ்து நிறைவேற்றிவிட்டார். நீ இதனை ஏற்றுக்கொண்டால் – உன்னுடைய பாவங்களுக்கு வருந்தி கிருபையின் இலவச பரிசினைப் பெற்றுக்கொள் – உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். “கிறிஸ்து உனக்காக மரித்தார்” என்ற வார்த்தைகள் இரட்சிக்கப்பட்ட வருக்கும் இரட்சிக்கப்படாதவருக்கும் வேறுபட்ட பொருளினைத் தருகிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அனைவரும் இரட்சிக்கப்படமாட்டார்கள். ஆனால் இயேசுவின் சிலுவை மரணம் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது. பாதை திறக்கப்பட்டுள்ளது – அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள எவரும் அதில் பிரவேசிக்கலாம். ஏனெனில் கிறிஸ்து உலக மக்கள் அனைவரின் பாவங்களுக்காகவும் மரித்தார்!

இரட்சிக்கப்பட்ட நமக்கு – கிறிஸ்து நமக்காக மரித்தார் – என்பது நம்முடைய பாவங்களுக்கான கிரயம் செலுத்தியாகிவிட்டது என்று அர்த்தமாம். பாவத்தின் விலையுயர்ந்த விலை நம்முடைய இரட்சகரின் விலையுயர்ந்த இரத்தமே. சிலுவையில் தேவனுடைய நீதி நிறைவேறிற்று. என்னுடைய பாவங்களை நான் சுமக்கவேண்டியதில்லை; கிறிஸ்து தமது ஜீவனைக் கொடுத்தவர்களின் உறுப்பினர்களை ஜீவ இரட்சகரின் சபை என்று நாம் அழைப்பது மிகச் சரியானதாகும். ஏனெனில் அவரது மரணம் நமக்கு உரியது –- அது அழைப்புக்குரியதல்ல -– கிரயம் செலுத்தப்பட்டுவிட்ட கடனாகும். கிறிஸ்து தனக்காக மரித்தார் என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் அறிந்திருக்கவேண்டும். சிலுவையே நம்முடைய சிந்தையில் தியானிக்கவேண்டிய மகிமையான விலையேறப்பெற்ற ஒன்றாகும். தேவன் என்மீது கோபப்படவில்லை – அவரது சினம் சிலுவையில் தணியப்பெற்றது. பிசாசு என்னை உரிமைகோர முடியாது. ஏனெனில் கிறிஸ்து சிலுவையில் அவனை ஜெயித்துவிட்டார். கிறிஸ்துவின் அன்பைவிட்டு எதுவும் நம்மைப் பிரிக்கமுடியாது. சிலுவையே அதனை செய்தது. நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறேன் (கலா. 6:14).

தேவனுக்கு முன்பாக புகழும்படிக்கு எதுவும் பவுலின் வாழ்வில் மேன்மையானதாகக் காணப்படவில்லை என்கிறார். உலகத்தின் பார்வைக்கு மேலானதாகத் தெரியும் புகழ், கல்வி, செல்வம் போன்ற அனைத்தும் அவருக்கு குப்பையாகவே காணப்பட்டது. யூத மதத்தில் பவுல் ஒரு வளரும் நட்சத்திரமாக இருந்தார்; ஆனால், அவை அனைத்தையும் சிலுவைக்காக இழக்கத் தயாரானார். நாமும் அவ்வாறே செய்யவேண்டும். திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி, புகழ், உறவுகள், நண்பர்களின் ஏற்பு செல்வாக்குகள் உலகம் தரும் மகிழ்ச்சி மற்றும் வசதிகள் – இவற்றை நாம் பெருமையாக எண்ணக்கூடாது. என் இரட்சகர், மரித்த சிலுவை ஒன்றே எனது முன்னேற்றத்துக்கும் ஊக்கமளிக்கும் திட்டங்களிலும் முதன்மையானதாயிருக்க வேண்டும்.

உலகத்தையும் அதன் செல்வத்தையும் நான் சிலுவையில் அறைந்துவிட்டேன். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். விந்தைக் கிறிஸ்தேசு ராஜா, உந்தன் சிலுவை என் மேன்மை!

ஜெபம்: பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, இதுவரை தங்கள் இருதயத்தை ஆண்டவரும் இரட்சகருமான கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடாமலிருக்கிற வாசகர்களுக்காக ஜெபிக்கிறேன். இயேசுவின் மரணமாகிய அருட்கொடை எனக்கு அளிக்கப்படாதிருந்தால் நான் தேவனுக்குரிய காரியங்களுக்கு மரித்திருப்பேனே. பரம பிதாவே, இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தேவன் தந்தருளிய குமாரனை விசுவாசித்து அதை ஏற்றுக்கொள்ள உதவும். இப்பொழுதும் என்னுடைய பாவங்களை நான் அறிக்கையிடுகிறேன். நான் மரித்து உம்மண்டை வந்து சேரும் நாள்வரை உம் சிலுவையை நம்பி, உம் பிள்ளையாக வாழ என்னை உமது அன்பின் கரத்தில் ஒப்புவிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்