தயக்கமுள்ள சீஷத்துவம்!

Dr.தியோடர் வில்லியம்ஸ்
(மார்ச்-ஏப்ரல் 2020)

“நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்” (லூக், 22:32).


சீமோன் பேதுருவுக்கு ஆண்டவர் கொடுத்த எச்சரிக்கையை லூக்கா 22:31-34 வது வசனம் வரை உள்ள பகுதிகளில் பார்க்கிறோம். ஆண்டவராகிய இயேசு: சீமோன் பேதுரு அவரை மறுதலித்து விடுவான் என்று எச்சரித்தார். இந்த பகுதியிலே மூன்று பேரை நாம் பார்க்கிறோம். 1.சாத்தான், 2.இயேசு, 3.சீமோன்பேதுரு.

சீமோன் பேதுருவினுடைய வாழ்க்கையிலே ஒரு பெலவீனம் இருந்தது, அவனுடைய சீஷத்துவம் ஒரு தயக்கமுள்ள சீஷத்துவமாகும் . இதை சாத்தான் நன்றாய் அறிந்திருந்தான். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலுள்ள சில குறைவுகளை சில சமயத்திலே நாம் காண்பதில்லை, ஏன் நம்மைக் குறித்து நாமே பெரிதாக எண்ணிக்கொள்ளுகிறோம். சில நேரங்களில் அதிக மேன்மையாக எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணிக்கொள்ளுகிறோம். ஆனால் ஆண்டவர் நம்மை நன்றாய் அறிவார். சாத்தானும் நம்மை அறிவான்.

உன்னுடைய வாழ்க்கையிலே உன்னைக் குறித்து நீ அதிகமாய் எண்ணிக்கொள்ளுவாயானால் உன் விசுவாசம் பாதிக்கப்படுகிறது. ஆகையினாலே தான் ரோமர் 12ஆம் அதிகாரம் 3ஆம் வசனத்திலே பவுல் எழுதுகிறார்: உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுடையவனாய் எண்ணவேண்டும். நம்மைக் குறித்து மிஞ்சி எண்ணிக்கொள்ளுவோமானால் நம்முடைய தெளிந்த எண்ணத்தை இழந்துவிடுகிறோம். அந்தச் சூழ்நிலையிலே சோதனை நம்மைத் தாக்குகிறது. இதைத்தான் பேதுருவின் வாழ்க்கையிலே நாம் பார்க்கிறோம். அவனது குறை அவனுக்கே தெரியாமற் போயிற்று. மத்தேயு 16ஆம் அதிகாரத்திலே அவனுடைய குறையைப் பார்க்கிறோம். தயக்கமுள்ள சீஷத்துவம் அவனுடைய சீஷத்துவம் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

ஆண்டவர்: நீங்கள் என்னைக் குறித்து என்ன சொல்லுகிறீர்கள் என்று சீஷர்களிடம் கேட்டபோது, சீமோன்பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான், இதை மத்தேயு 16:16 இல் பார்க்கிறோம். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்று கூறினார். ஆம், அவனுடைய சீஷத்துவமும், அவனுடைய சாட்சியும், அவனுடைய அறிக்கையும் பாராட்டப்பட்டது.

ஆனால், ஆண்டவராகிய இயேசு தம்முடைய பாடுகளைப் பற்றியும் சாவைப் பற்றியும் பேச ஆரம்பித்தார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான் (மத்.16:22) ஏன்? அவனுடைய சீஷத்துவத்திலே சிலுவைக்கு இடமில்லை, ஆண்டவருடைய அடையாளங்களை விரும்பி கண்டான். அடையாளங்கள் செய்துகொண்டே இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தான். அவருடைய வார்த்தைகளை கேட்டான். அவர் மேசியா என்பதைக்கூட ஒப்புக்கொண்டான். ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கையிடுகிறான். ஆனால் சிலுவை சுமக்க வேண்டுமென்று சொன்னபோது, அதை அவன் விரும்பவில்லை. அவனுடைய வாழ்க்கையிலே ஒடுக்கமான நெருக்கமான பாதையிலே செல்ல சிலுவை சுமக்க அவனுக்கு விருப்பமில்லை. இதுதான் அவனுடைய சீஷத்துவத்தின் குறையாகும்.

ஆண்டவர் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல், மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய் என்றார் (மத்.16:23). சாத்தானே என்று அழைக்கிறார், ஏன்? சாத்தானுக்கு அவன் இடம் கொடுத்துவிட்டான், சாத்தான் ஒருவேளை யூதாசுக்குள் புகுந்ததுபோல சீமோன் பேதுருவுக்குள் புகுந்துவிடவில்லை. அவனை ஆட்கொள்ளவில்லை; ஆனால் அவனுடைய வாழ்க்கையிலே சாத்தானுக்கு இடங்கொடுத்துவிட்டான். மனுஷர் சிந்திக்கிற பிரகாரமாய் சிந்திக்கிறபொழுது தன்னுடைய சிந்தனையை முழுவதுமாக கடவுளுக்கு ஒப்புக்கொடுக்காத பட்சத்திலே, சீஷத்துவத்திலே தயக்கமுள்ளவனாய் சீமோன் பேதுரு இருந்தபோது, சாத்தானுக்கு இடங்கொடுத்துவிட்டான்.

பவுல் எபேசியருக்கு எழுதின 4வது அதிகாரம் 27வது வசனத்திலே பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் என்று கூறுகிறார். சாத்தான் காலடி எடுத்து வைப்பதற்கு கொஞ்சம்கூட நாம் இடம் கொடுக்கக்கூடாது. நம்முடைய சிந்தனையை கடவுளுடைய சித்தத்திலிருந்து திருப்புவோமானால், அவருக்கு ஒப்புக்கொடுக்காதபடி மனுஷீகத்திலே, மாம்சபிரகாரமாக சிந்திக்க ஆரம்பிப்போமானால், சாத்தானுக்கு இடங்கொடுத்து விடுவோம்; இடறலாயிருக்கிறோம். இதைத்தான் ஆண்டவர் பேதுருவுக்கு எடுத்துக்காட்டினார். ஆனால் அந்த சமயத்திலும் பேதுரு அவருடைய எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. நம்முடைய வாழ்க்கையிலும் அநேகமுறை ஆண்டவர் நம்மோடு பேசுகிறார். பலவிதத்திலே பேசுகிறார். பலர் மூலமாகப் பேசுகிறார், நம்முடைய வீழ்ச்சியின் மூலமாக, சூழ்நிலைகளின் மூலமாக, சில சந்தர்ப்பங்களிலே அவர் நெருங்கி வந்து, நம் மோடு பேசுகிறார், அவர் பேசும்போது நாம் கேட்காமற்போனால் சீக்கிரத்திலே வீழ்ச்சிக்கு வழி உண்டாக்கி விடுகிறோம். சாத்தான் நம்மை முழுவதுமாய் சுளகினால் புடைப்பதற்கு நாம் இடம் கொடுத்து விடுகிறோம். இதைத்தான் சீமோன் பேதுருவின் வாழ்க்கையிலே பார்க்கிறோம்.

அவன் ஏற்கனவே ஆண்டவருடைய எச்சரிப்பை ஏற்றுக்கொண்டிருந்தானானால் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டான். இப்பொழுதுகூட ஆண்டவர் அவனை எச்சரிக்கிறார். கோதுமையை சுலகினால் புடைக்கிறதுபோல, சாத்தான் உங்களை புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். எல்லா சீஷர்களையும் சாத்தான் சோதிப்பான், சுளகினால் புடைப்பான் என்று எடுத்துச் சொல்கிறார். லூக்கா 22ஆம் அதிகாரம் 32வது வசனத்திலே நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்று கூறுகிறார்.எல்லோரும் சோதிக்கப்படுவார்கள். ஆனால் சீமோன் பேதுருவுக்கு விசேஷமான ஜெபம் தேவை, அவன் விசுவாசம் ஒழிந்துபோகக் கூடும். ஆகையினாலே அவனுக்காக ஜெபிக்கிறேன் என்று இயேசு கூறுகிறார். இந்த சமயத்தில் அந்த எச்சரிப்பை அவன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவன் என்ன கூறுகிறான். 33வது வசனத்திலே ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மை பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன் என்று கூறுகிறான். அவருடைய வார்த்தைகளை அவன் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. தன்னுடைய பெரிய எண்ணங்களினால் நிறைந்தவனாய் தன்னைக் குறித்து மேன்மையாக எண்ணிக்கொண்டு அவன் எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளாமற் போய்விடுகிறான்.

என்னுடைய சகோதரனே, சகோதரியே, உன்னுடைய வாழ்க்கையிலும் இவ்விதமான பெருமை, ஆவிக்குரிய பெருமை காணப்படுகிறதா? ஆண்டவருக்கு முன்பாக குறைகளை ஏற்றுக்கொள்ளாதபடி உன்னுடைய மேன்மையும், விசுவாசத்தையும், ஜெபவாழ்வையும் பற்றியே நீ பேசிக்கொண்டு, அதைக் குறித்தே யோசித்துக்கொண்டு, இருக்கிறாயா? அப்படியானால் நீ விழுந்துபோகக் கூடும். சாத்தான் சுளகினால் புடைப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான். நாம் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். மத்தேயு 26:35வது வசனத்தில் பேதுரு நான் உம்மோடே மரிக்கவேண்டிய தாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று கூறுகிறார். 33வது வசனத்திலே உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்று கூறுகிறான். தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு, அவர்களை விட தான் மேலானவன் என்று கூறிக்கொள்கி றான். இதுதான் அவனது வீழ்ச்சிக்கு வழி உண்டாக்கிற்று. இந்த பாவத்திலிருந்து குறையிலிருந்து ஆண்டவர் நம்மைக் காத்துக்கொள்வாராக.

ஜெபம்: அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய எச்சரிப்பு எங்களுடைய வாழ்க்கையிலே வரும்பொழுது, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை எங்களுக்குத் தாரும். எங்களுடைய குறைகளை ஒப்புக்கொண்டு அறிக்கையிட்டு நீர் அவற்றிலே செயல்பட உமக்கு இடங்கொடுக்க உதவி செய்யும். எங்களை உறுதியுள்ள சீஷர்களாக்கும். இயேசுவின் நாமத்திலே வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

சத்தியவசனம்