பிதாவே, இவர்களுக்கு மன்னியும்!

Dr.W.வாரன் வியர்ஸ்பி
(மார்ச்-ஏப்ரல் 2020)

“அப்பொழுது இயேசு பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்” (லூக்கா 23: 34).


கர்னல் மார்க்ஸ் இறந்த நாளான மார்ச் 14, 1883 அன்று அவர் வீட்டுப்பணியாள் அவரிடம் வந்து ”உங்கள் கடைசி வார்த்தைகள் என்ன என்று சொல்லுங்கள் அதை நான் எழுதட்டும்” என்றான். அதற்கு அவர், போ, வெளியே போ, கடைசி வார்த்தைகள் முட்டாள்களுக்கானது; போதுமான அளவு அவைகள் சொல்லப்பட்டிருக்கவில்லையா?

கடைசி வார்த்தைகள் தங்களை யார் என வெளிப்படுத்தும் வார்த்தைகளாக முடியும். சிலர் சொன்ன கடைசி வார்த்தைகள் .

B.T.பர்னம்: இன்றைய வருமானம் என்ன?

நெப்போலியன்: இராணுவ படை தலைவனே

பாப்டிஸ்டு பிரசங்கி சார்லஸ் ஸ்பர்ஜன்: இயேசு எனக்காக மரித்தார்.

மெதடிஸ்டு சபையை உருவாக்கிய ஜான் வெஸ்லி: இருக்கும் எல்லாவற்றிலும் மிகவும் சிறந்தது தேவன் நம்மோடிருப்பது.

இவ்வார்த்தைகள் நமக்கு மிகவும் முக்கியமானவை: யார் பேசினார் என்பதற்காக மட்டுமல்ல; எந்நிலைமையிலிருந்து இவைகளை பேசினார்கள் என்பதற்காகவே இவ்வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நம் ஆண்டவர் மிகப்பெரிய இவ்வார்த்தைகளை கூறுகிறார். கடைசியாக, அவர் சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளும் தேவனின் இதயத்தையும் நித்தியத்தையும் பார்க்க வழி செய்யும் ஜன்னல்களாகும்.

சிலுவையில் கூறின 7 வார்த்தைகளில் முதல் வார்த்தையை லூக்கா நற்செய்தி நூலில் பார்க்கலாம். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் (23:33, 34).

மற்றவர்களை நாம் மன்னிப்பது சில நேரங்களில் மிகவும் கடினமாயிருக்கிறது. இன்றும் மன்னிக்காத ஆவியை கொண்டிருப்பது நமக்கு எவ்வளவு எளிதாயிருக்கிறது! ஒருவர் நம்மை காயப்படுத்துகிறார்; ஒருவர் நமக்கு விரோதமாக பேசுகிறார்; நமது இதயமோ அவரை மன்னிக்க முடியாததாகி விடுகிறது. இந்த ஜெபத்தை கவனியுங்கள்:

பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (வச.34).

இந்த வார்த்தைகளில் இருக்கும் ஆச்சரியத்தைப் பாருங்கள்! இவ்வார்த்தைகளில் உள்ள ஆச்சரியத்தைக் கிரகித்துக்கொண்டால் – நான் நினைக்கிறேன், இவ்வார்த்தைகள் நம்மையும் மன்னிக்கக்கூடியவர்களாகவும் அது தரும் மகிழ்ச்சியை அனுபவிக்கக் கூடியவர்களாகவும் மாற்றுகிறது!

பிதாவினிடத்தில் பேசுகிறார்

முதல் வார்த்தையில் “பிதாவே” என பேசும் ஆச்சரியத்தைப் பார்க்கிறோம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூன்று முறை சிலுவையிலிருந்து பிதாவே என அழைக்கிறார். அவருடைய முதல் வார்த்தையில் பிதாவே, இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (வச.34); அதன் பிறகு 4வது வார்த்தையில், “என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்!” (மத்.27:46) அதன் பிறகு கடைசி வார்த்தையில் பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் (லூக். 23: 46) எனக் கூறுகிறார்.

ஆண்டவர் பாடுகளுக்குள்ளாக போகும்போதும், சகித்துக்கொள்கிறபோதும் வெற்றியுடன் அப்பாடுகளைக் கடந்து வெளியே வரும்போதும்தான் பரலோகத் தந்தையான பிதாவிடம் பேசுகிறார். இதை நீங்கள் பார்க்கும்போது பிதாவுடன் அவருக்கிருந்த உறவை வேறு எதுவும் பயமுறுத்திவிடவில்லை. மக்கள் என்னை இவ்வளவு கீழ்த்தரமாக நடத்திய பிறகு நான் கடவுளிடம் பேச முடியாது! ஜெபிக்க முடியாது! இதற்கு மேல் என்னால் நம்பிக்கை வைக்கமுடியாது என பல கிறிஸ்தவர்கள் கூற கேட்டிருக்கிறேன். சிலுவைக்கு கீழ் நின்ற மக்கள் ஆண்டவராகிய இயேசுவை நடத்திய விதத்தை பாருங்கள். அவருடைய சொந்த சீஷர்கள் தோற்றுப்போய் ஓடிவிட்டனர்; பிதாவாகிய தேவனோ தன் மகன் பாடுபட வேண்டும் என விரும்பினார். இதன் மத்தியிலும் இயேசு மேலே நோக்கிப் பார்த்து “பிதாவே” என அழைத்து பேச முடிந்தது. பிதாவோடு எவ்வளவு ஐக்கியமாய் இயேசு வாழ்ந்தார் என்பதை பார்க்கலாம். அவர் ஊழியத்தை ஆரம்பித்த நேரத்தில், “இவர் என் நேசகுமாரன்” என பிதாவானவர் கூறுவதை மத்.3:17 இல் பார்க்கலாம். அன்பின் ஐக்கியத்தில் இருவரும் மகிழ்ந்தனர்.

இப்போது உங்கள் மனம் காயப்பட்டிருக்கலாம். இப்போது உண்மையிலேயே கடவுள் என்னை நேசித்தால் நான் ஆச்சரியப்படுவேன் என நீங்கள் கூறலாம். அவர் நேசிக்கிறார், அவர் எப்போதும் உங்களை நேசிப்பதால் உங்களில் அவர் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

நீங்களும் “பிதாவே” என அழைத்து ஜெபித்தபின் அவரிடமிருந்து வல்லமை, கிருபை, பாடுபடும்போது கிடைக்கும் உதவி ஆகிய இவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். வலி காயப்படுத்தும் தன்மையுடையது. உடைபட்ட கரங்களைவிட உடைத்த உள்ளம் மோசமான காயத்தை ஏற்படுத்தி விடும்.

ஆனால் நீங்கள் மேலே பரலோகத்தை நோக்கிப்பார்த்து, “பிதாவே” என சொல்லும்போது பிதாவின் புன்முறுவல் (Smile of God) உங்கள் மீது இருப்பதை அறிந்துகொள்வீர்கள். மற்றவர்களை மன்னிக்க முடியும் என்கிற விருப்பம் வருமானால் அதை தொடங்கும் இடம், “பிதாவே” என அழைத்து பேச ஆரம்பிப்பதில்தான் இருக்கிறது. இது ஆச்சரியமல்லவா? பரலோக பிதாவுடன் சரியான உறவில் இருப்பதை உறுதிகொள்ளுங்கள்.

பிதாவினிடத்தில் வேண்டுகோள் வைத்து ஜெபிக்கிறார்

இரண்டாவதாக, பிதாவே, இவர்களை மன்னியும் (லூக்.23:24) என்கிற விண்ணப்பத்தில் ஆச்சரியம் இருக்கிறது.

கிரேக்க மொழி புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் திரும்பவும் திரும்பவுமாக இந்த ஜெபத்தை செய்தார் என குறிப்பிடுகிறது. பிதாவே இவர்களுக்கு மன்னியும் என பலமுறை சொன்னார்; தரையிலே சிலுவை மீது அவரை வைத்தபோதும், பிதாவே, இவர்களை மன்னியும் என்றார். சிலுவை மீது கரங்களை வைத்து ஆணி அறைந்தபோதும் கால்களில் ஆணி அறைந்தபோதும் மீண்டும் அவர்: “பிதாவே, இவர்களை மன்னியும்” என ஜெபித்தார். சிலுவையில் வைத்த பின் தூக்கி நிறுத்தி பூமியில் ஊன்றியபோதும், பிதாவே, இவர்களுக்கு மன்னியும் என ஜெபித்தார். அவர் வானத்துக்கும் பூமிக்கும் நடுவாக தொங்கி கொண்டிருந்த நேரத்திலும் திரும்பவும் திரும்பவுமாக, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்” என்று ஜெபித்துக் கொண்டேயிருந்தார்.

பிதாவே, இவர்களை நியாயம் தீர்த்துவிடும்; பிதாவே, இவர்களைத் தண்டித்துவிடும் என்று கூட இயேசு ஜெபித்திருக்க முடியும்; தன்னை விடுவிக்க தூதர் படையை அனுப்பும் என கேட்டிருக்க முடியும். ஆனால் அவர் அவ்விதம் செய்யவில்லை. சிலர் மீது பரலோகத்திலிருந்து அக்கினி விழட்டும் என்று நீங்களும் நானும்கூட விரும்பியிருக்கிறோம். பிதாவே, அவர்களை நியாயந்தீர்த்து விடும்; அவர்களை வேதனைகுட்படுத்தும் என்று கூட ஜெபித்திருக்கிறோம். ஆனால் நமது ஆண்டவர் தன் அன்பான இதயத்திலிருந்து, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்” என்று ஜெபித்தார்.

இயேசு ஏன் இவ்வாறு ஜெபிக்கிறார்?

i. வேதவாக்கியம் நிறைவேறும்படியாக

இயேசு ஏன் இவ்விதம் ஜெபிக்கிறார். வேத வாக்கியம் நிறைவேறவேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு ஜெபிக்கிறார்.

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்கு பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாக பங்கிட்டுக் கொள்வார் (ஏசா.53: 12).

பாவத்திலிருப்பவர்களுக்காக வேதவாக்கியம் நிறைவேறும்படியாக நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார்.

ii. தாம் பிரசங்கித்ததை நடைமுறைபடுத்தும்படியாக

இரண்டாவதாக, இயேசு தான் பிரசங்கித்த அதே செய்தியை நடைமுறைப்படுத்தினார். அவர் மன்னிப்பை பிரசங்கித்தார். அவர் தாம் அளித்த செய்திகளில் இப்போது இதயப்பூர்வமாக (மனதார) நீங்கள் மன்னிக்கவில்லை என்றால் கடவுளும் உங்களுக்கு மன்னிக்கமாட்டார் என்பதைச் சொன்னார். மன்னிப்பு நமது சொந்த நற்கிரியைகளை அடிப்படையாக கொண்டது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. அப்படியல்ல, ஆனால் எப்படி அர்த்தப்படுத்த வேண்டும் தெரியுமா? நான் இதயப்பூர்வமாக உங்களை மன்னிக்க விருப்பம் இல்லாதிருந்தால் நானும் கடவுளிடம் வந்து எந்நிலைமையில் என்னை மன்னியும் என்று எனக்காக கேட்க முடியும்.

ரோம பேரரசின் சீசர் ஆட்சி காலத்தில் இவைகளெல்லாம் நடந்தது. இதை நினைவில் கொள்ளவேண்டும். ரோமர்கள் பழிவாங்குதலை (revenge) கடவுளாக வணங்கினர் என்பது உங்களுக்கு தெரியுமா? பழிவாங்கும் கடவுள் அவர்கள் வணங்கிய கடவுள்களில் ஒன்றாகும். ஆனால், நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பழிவாங்குதலை வணங்கவுமில்லை; வணங்கச் சொல்லவும் இல்லை. “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்!” என இயேசு ஜெபித்ததால் வேதவாக்கியங்களை நிறைவேற்றினார். மேலும் அவர் பிரசங்கித்த மன்னிப்பின் செய்தியை நடைமுறையில் காண்பித்தார்.

iii. தமது மரணத்தின் நோக்கம் நிறைவேறுவதற்காக

நமது ஆண்டவராகிய இயேசு சிலுவை மீது தொங்கியது தேவன் பாவிகளை மன்னிக்க வேண்டும் என்பதற்காகத்தான். நிச்சயமாக இந்த நோக்கத்திற்காகத்தான் இயேசு மரித்தார். இதுவே சுவிசேஷத்தின் செய்தி! பாவத்தின் பளுவையும் அதன் பாரத்தையும் நாம் சுமக்கவேண்டியதில்லை. இந்த உணர்வையும் நாம் சுமக்கவேண்டியதில்லை. நாம் மன்னிக்கப்பட முடியும்.

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன (லூக்.5:20) என்று திமிர்வாதக்காரனிடமும் உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது; சமாதானத்தோடே போ (லூக்.7:48,50) என்று அந்த ஸ்திரீயிடமும் இயேசு கூறின பதிவை பார்க்கலாம்.

சிலுவையில் எல்லாமுமே மன்னிப்புத்தான்; நிச்சயமாக மன்னிப்பு என்பது மலிவான ஒன்றல்ல; விலைக்கிரயம் மிகுந்தது; இயேசுகிறிஸ்துவின் உயிர்தான் அதன் விலை!

தேவனோடு நமக்குள்ள உறவும் அவர் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதும் ஆகியவை சரியாக இருந்து, நாமும் மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நினைவிற்கொண்டால், நாம் மற்றவர்களை மன்னிப்பதில் பிரச்சனை இருக்காது. மற்றவர்களை மன்னிக்காதவர்கள் தாங்கள் நடந்துசெல்ல வேண்டிய பாலத்தை தாங்களே அழிப்பவர்கள் ஆவார்கள். ஆனால் போதகர் வியர்ஸ்பி அவர்களே, மற்றவர்கள் என்னை எப்படி நடத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது என்று ஒருவேளை நீங்கள் என்னோடு வாதிடலாம். நல்லது, இயேசுவை அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது எனக்கு கொஞ்சம் தெரியும். ஆனாலும் அவர்: “பிதாவே இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்பதை அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று பிதாவிடம் வேண்டுகோள் விடுத்து ஜெபித்தது ஆச்சரியமல்லவா?

2. பிதாவினிடத்தில் வாதாடுகிறார்

இரண்டாவது ஆச்சரியம் என்னவென்றால், “தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்று (லூக்.23:34) வாதிடுவதாகும். இயேசு அவருடைய எதிராளிகளை மன்னியும் என்று ஜெபிப்பது மட்டுமல்ல; அவர்கள் சார்பாக வாதிடவும் செய்கிறார். “பிதாவே, அவர்களை ஏன் மன்னிக்கவேண்டும் என்கிற காரணத்தை உங்களுக்கு சொல்கிறேன்” என்று ஒரு வழக்குரைஞராக வாதிடுகிறார்.

இந்த வார்த்தை மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது; ஒவ்வொருவரும் ‘இயல்பாகவே’ மன்னிக்கப்பட்டிருக்கிறோம்’ என்பது இந்த வார்த்தையின் அர்த்தமல்ல. அல்லது ‘தெரியாமல் செய்தோம்’ என்பது மன்னிப்பை பெற்றுத்தந்தது என்பதும் சரியல்ல. சட்டத்தின் பார்வையில் தெரியாமல் செய்ததற்கு மன்னிப்பு கிடையாது.

நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒருமுறை சிக்காகோ நகரில் காரோட்டி சென்றுகொண்டிருந்தபோது இடதுபுறம் காரைத் திருப்பினேன்; நீண்ட தூரத்துக்கு பின்னால் ஒளிர்ந்து கொண்டிருந்த வெளிச்சத்தை அப்போதுதான் பார்த்தேன்; காவலர் காரை நிறுத்தி என்னை வெளியே அழைத்து நான் காரை இடதுபுறம் திருப்பியது சட்டவிரோதம் என்றார். நான் அநேகமுறை இப்படித்தான் திருப்பியிருக்கிறேன் ஆனால் இப்போது சட்டத்தை மாற்றி “இடதுபுறம் திரும்பாதே” என ஒளிர் பலகையில் எழுதி வைத்திருந்ததை நான் கவனிக்கவில்லை. எனவே நல்லது காவலரே, வருந்துகிறேன்; எனக்கு அது தெரியாது என்றேன்; அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? ‘தெரியாமல் செய்துவிட்டேன்’ என்பதற்கும் ‘சட்டத்தை மீறிவிட்டேன்’ என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒள்றுமில்லை. கவனிக்காமல் அல்லது தெரியாமல் செய்துவிட்டேன் என்று சட்டத்தின் முன் மன்னிப்பு கேட்க வழியில்லை. அவர்கள் அறியா நிலைமையை இயேசு இவ்விதம் வாதிடுகிறார்:

i. அவர்கள் இயேசுவை அறியாதிருந்தனர்

ஆண்டவர் என்ன சொல்லிக்கொண்டிருந்தார்? அவர்கள் எதை அலட்சியம் பண்ணினார்கள்? அவர்கள் இயேசுவை யார் என்று தெரியாதிருந்தனர்…. உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல்… (லூக்.22:64) அவரை தீர்க்கதரிசி என்று ஏளனம் செய்தனர். நீ யூதரின் ராஜாவானால் உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம் பண்ணினார்கள் (லூக்.23:37) ராஜா என்று ஏளனம் செய்தனர். அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியை பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலை கொடுத்து, …அவரை பரியாசம் பண்ணி… அடித்தார்கள் (மத்.27:28-30). அவர் யார் என்பதையே அலட்சியம் பண்ணினார்கள். நமக்கு அவர் இயேசு என்று தெரியும். முழுமையான புதிய ஏற்பாட்டை கையில் வைத்திருக்கிறோம். இன்று நாம் 2000 வருட சபைச் சரித்திரத்தை உடையவர்களாயிருக்கிறோம். நமக்கு இயேசு யார் என்று தெரியும். அவர் தேவனுடைய குமாரன்!

ii. அவர்கள் தங்களது செயல்களை அறியாதிருந்தனர்

அவர்கள் தங்கள் செயல்களையும் அறியாதிருந்தனர்; அவர்களையும் அறியாமல் அவர்களே தேவனுடைய வார்த்தைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டு சீட்டுப்போட்டார்கள் (லூக்.23: 34). இச்செயலால் சங்கீதத்தில் சொல்லப்பட்டிருந்த (சங்.22:18) வார்த்தையை நிறைவேற்றினர். அவருக்கு காடியை குடிக்க கொடுத்து (லூக்.23: 34) இச்செயலால் சங்.69:21ஐ நிறைவற்றினர்: என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். குற்றவாளிகளுடனே அவரை சிலுவையில் அறைந்து ஏசா.53:12ஐ நிறைவேற்றினர்: அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத்தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

iii. அவர்கள் தங்களது பாவத்தை அறியாதிருந்தனர்

அநேகர் தங்களுடைய சொந்த பாவத்தின் தீவிர தன்மையை அறியாதிருக்கிறார்கள். தாங்கள் எவ்வளவு பெரிய பாவிகள் என்பதை உணராதிருக்கிறார்கள். அறியாமைப் பாவம் என்பதைக் குறித்து பழைய ஏற்பாட்டில் யூத சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். அறியாமல் செய்த பாவத்துக்குரிய பாவ நிவாரணபலி குறித்து லேவியராகமம் 4ஆம் அதிகாரத்தில் பார்க்கலாம். இயேசு சொன்னார்; என் மக்கள் புரிந்துகொள்ளவில்லை; அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள்; அவர்களுக்காக நான் மரித்துக் கொண்டிருக்கிறேன்; தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். நான் அவர்களுக்காக மரித்துக்கொண்டிருக்கிறேன்; இப்போது அவர்களை மன்னியும். இப்படி அவர் வாதிடுவது ஆச்சரியமல்லவா!

கடவுளின் பதில்

இந்த ஜெபம் கடவுளிடமிருந்து அவர் சித்தப்படி என்ன பதிலை கொண்டு வந்தது? கடவுளின் பதில் என்ன? ஒரு ஆச்சரியத்தை இந்த பதிலில் கவனியுங்கள்.

அவர்கள் மீது நியாயத்தீர்ப்பு தண்டனை ஏதும் வரவில்லை. யூதர்களுக்கு இரட்சிப்பின் செய்தியை கடவுள் இன்னும் அனுப்பிக்கொண்டே இருந்தார். அப்போஸ்தலனாகிய பேதுரு யூத தலைவர்களிடம் கூறுகிறார், சகோதரரே நீங்களும் உங்கள் அதிகாரிகளும் உங்கள் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன் (அப்.3:17). அப்போஸ்தலனாகிய பவுல் தன்னை குறித்து இவ்விதம் சொன்னார்: நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படி செய்தபடியினாலே (1தீமோ.1:13) கடவுள் இஸ்ரவேலரிடம் பொறுமையாயிருந்தார்; அநேக மக்களும் கிறிஸ்துவை இரட்சகராக அறிந்தனர்; சவுலும் இரட்சிக்கப்பட்டு சிறந்த அப்போஸ்தலன் ஆனான்.

நீங்கள் பாருங்கள், கடவுள் பாவத்தை உடனே நியாயந்தீர்க்கமாட்டார். பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்கள் (லூக்.23:34) என்று தேவகுமாரன் ஜெபித்ததால் கடவுளின் இரக்கம் நியாயத்தீர்ப்பை தள்ளிப்போடுகிறது. நீங்களும், நானும் கிருபையின் காலத்தில் வாழ்கிறோம். நியாயத்தீர்ப்பின் நாளில் அல்ல, தொலைந்துபோன பாவிகளை கடவுள் தேடி தனக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளும் அந்த நாளில் … ஆம்! இந்த ஜெபம் ஆச்சரியமானதல்லவா? அப்படி இல்லையா? கடவுள் இந்த ஜெபத்திற்கு பதிலளித்தார். இன்று நீங்கள் கிறிஸ்துவை நம்பும்போது அவர் உங்களையும் மன்னிக்க முடியும்.

மொழியாக்கம்: Bro.சற்குணம் சாமுவேல்


உங்களுக்குத் தெரியுமா?

தம்முடைய எல்லாவற்றையும் தியாகம் செய்த கிறிஸ்துவுக்கு நாம் ஒருபோதும் அதைவிட அதிகமாக தியாகம் செய்ய முடியாது!

சத்தியவசனம்