உயிர்த்தெழுதலினால் உண்டான மாற்றங்கள்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மார்ச்-ஏப்ரல் 2020)

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையுள்ள நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவருடைய உயிர்த்தெழுதல் அல்லது உயிர்த்தெழுந்த செய்தி மக்கள் மத்தியிலே என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் தியானிக்கலாம்.

அப்.10:38-43 வரையுள்ள வேதபகுதியை நாம் சிந்திக்க இருக்கிறோம். உண்மையாகவே, ஒவ்வொரு கர்த்தருடைய நாளும் கர்த்தருடைய உயிர்த்தெழுதலை அறிவிக்கிறது! ஒவ்வொரு கர்த்தருடைய நாளின் ஆராதனையும் நம்முடைய ஆண்டவர் மரித்தார், மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார், இன்றும் உயிரோடிருக்கிறார், ஜீவிக்கிறார் என்பதை அறிவிக்கிற ஆராதனையாகத்தான் இருக்கிறது. ஆகவே உயிர்த்தெழுந்த அந்த செய்தி அல்லது இயேசுவின் உயிர்த்தெழுதல் என்னென்ன மாற்றங்களை நமக்குள்ளே கொண்டுவர என்னென்ன மாற்றங்கள் சீடர்களுக்குள்ளே கொண்டு வந்தன என்பதைக் குறித்துப் பார்க்கலாம்.

முதலாவது, உயிர்த்தெழுதலின் செய்தி நமது உணர்ச்சிகளிலே பலவித மாற்றங்களை கொண்டுவருகின்றன. லூக்கா 24ஆம் அதிகாரம் 13முதல் 32 வரையுள்ள தேவபகுதியை வாசித்து பாருங்கள். எம்மாவு ஊருக்குச் சென்ற சீஷர்கள் சோர்ந்துபோய் நம்பிக்கையிழந்தவர்களாய் துக்கத்தோடு போய்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார், நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் நடந்து ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று விசாரிக்கிறார். வசனம் 25இல் தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே என கடிந்து கொண்டார். மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். சீஷர்கள் தாங்கள் போகிற ஊருக்குச் சமீபமானார்கள். இயேசுவும் அப்புறம் போகிறவர்போல காண்பித்தார். சீஷர்கள் வேண்டிக்கொண்டதன்படி அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார். சீஷர்களோடே பந்தியிருக்கையில் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவரை அறிந்தார்கள். இயேசுவும் உடனே மறைந்துபோனார். அப்பொழுது தான் சீஷர்கள் உணர்ந்து சொன்னார்கள். அவர் நம்முடனே பேசி வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக் காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டார்கள். எம்மாவு என்னும் கிராமத்துக்குச் சென்ற சீஷர்கள் துக்கத்தோடு சென்றார்கள். ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார் என்று அறிந்துகொண்டபோது அவர்கள் உணர்ச்சிகளிலே பெரிய மாற்றங்கள் உண்டானது. அப்பொழுது சந்தோஷமாக கொழுந்துவிட்டு எரிகிற அனுபவத்துள்ளாக வந்தார்கள்.

அருமையான சகோதரனே, சகோதரியே உங்கள் உணர்ச்சிகளிலே உடைந்திருக்கலாம் அல்லது தாழ்வு மனப்பான்மையோடு இருக்கலாம். ஒன்றை நீங்கள் மறந்துவிடாதிருங்கள். நம்முடைய ஆண்டவர் உயிரோடிருக்கிறார். அவரை நீங்கள் அறிந்து கொண்டீர்களானால் உங்கள் உணர்ச்சிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவார்.

அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரம் 23ஆம் வசனத்தைப் பாருங்கள். பயந்து நடுங்கி மறுதலித்தப் பேதுரு, ஆண்டவர் உயிரோடு எழுந்தார் என்பதை அறிவுப்பூர்வமாக அனுபவப்பூர்வமாக அறிந்துகொண்டபிறகு தைரியமாக பிரசங்கிக்கிற ஒரு மனிதனாக எழுந்துநின்று மக்களிடத்தில் சொல்கிறான். அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தீர்கள். தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார் என்று சொன்னார் (அப். 2:24). ஆகவே பயந்த அனுபவத்திலிருந்து தைரியத்தின் அனுபவத்தில் அவன் வந்தான். இதற்கு காரணம் என்ன? இயேசுவின் உயிர்த்தெழுதலின் செய்தியேயாகும். இவ்விதமாக உணர்ச்சிகளிலே உயிர்த்தெழுதலின் செய்தி மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

இரண்டாவது உயிர்த்தெழுதலின் செய்தி பொறுமையிலே அநேக மாற்றங்களைக் கொண்டுவருகிறது. விளையாட்டு வீரர்களை கவனிப்போமென்றால் கொஞ்சநாட்கள் விளையாடுகிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாங்கள் ஓய்வு பெற்றுகொள்கிறோம் என்கிறார்கள். ஆனால் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட விசுவாசி, ஆண்டவருக்காக வாழ தீர்மானித்த ஊழியர் ஆண்டவரால் பயன்படுத்தப்பட்ட தேவ மனிதர்கள் கடைசி மூச்சு வரையிலும், அவர்கள் இந்த காரியத்திலே அர்ப்பணிப்பிலே நிலைத்திருக்கிறார்கள். தங்களது பொறுமையிலே நிலைத்திருக்கிறார்கள். ஆகவேதான் உயிர்த்தெழுதலின் செய்தி நமது வாழ்வில் பொறுமையையும் நமது நிலைத்திருப்பதிலேயும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

டேனி ஹாஸ் என்கிற ஒரு ஊழியர் இருந்தார். 500 விதமான சுவிசேஷப் பாடல்களை அவர்கள் எழுதியுள்ளார்கள். அவளுடைய பாடல்கள் உலகமெங்கும் அநேகரால் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த பெண்ணுக்கு பார்வை இல்லை. நடந்த காரியம் என்ன? ஒருநாள் ஒரு போதகர் வந்து, சகோதரியே! உனக்காக நான் ஜெபிக்கப்போகிறேன். உன் கண்களிலிருக்கிற பார்வையற்ற தன்மையை நீக்கி நல்ல பார்வையைத் தர அற்புதத்திற்காக நான் ஜெபிக்கப்போகிறேன் என்று சொன்னார். உடனே இந்த பெண் சொன்னாள்: ஐயா எனக்காக, என் கண்களில் பார்வை கிடைக்க நீங்கள் ஜெபிக்கவேண்டாம். ஏன் என்று அந்தப் போதகர் கேட்டாராம். ஏனென்றால் இந்த உலகத்திலே எந்த மனுஷரையும் மனுஷியையும் நான் பார்க்கவில்லை. நான் என் ஆண்டவருடைய ராஜ்யத்திற்கு போகும்போது முதன்முறையாக என் கண்ணால் பார்க்கப்போகிறவர் அவர். ஆகவே அவர் ஒருவரை நான் பார்த்தால் போதும் என்றபோது போதகருடைய கண்கள் குளமானது. பாருங்கள், தனக்கு பார்வை இல்லாவிட்டாலும் நித்தியத்திலே என் ஆண்டவரைச் சந்திப்பேன் என்ற பொறுமையில் நிலைத்திருப்பதற்குரிய காரணம் என்ன? இயேசு உயிரோடிருக்கிறார் என்று அந்த பெண் நம்புவதேயாகும். ஆக உயிர்த்தெழுதலின் செய்தி உணர்ச்சிகளில் மாற்றத்தைத் தரும். உங்களுடைய பொறுமையிலும் நிலைத்திருப்பதிலேயும் மாற்றங்களைக் கொண்டுவரும்.

மூன்றாவது உயிர்த்தெழுதலின் செய்தி நமது எதிரிகளிடத்திலேயும் அநேக மாற்றங்களைக் கொண்டுவரும். நம்முடைய வாழ்க்கையில் ஏராளம் எதிரிகள் இருக்கலாம். கிறிஸ்தவ வாழ்க்கையில் உள்ள மூன்று எதிரிகள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது: உலகம், மாமிசம், பிசாசு. ஆகிய இந்த மூன்று எதிரிகளிடத்திலேயும் ஆண்டவர் உயிர்த்தெழுந்ததின் மூலமாக பெரிய மாற்றங்களை கொண்டு வந்தார். உலகத்தை ஆண்டவர் ஜெயித்தார். அவர் உயிரோடெழுந்ததினாலே உலகத்தை அவர் மேற்கொண்டார்.

அருமையானவர்களே, சுவிசேஷகர் மூடி ஒருமுறை ஒரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது புயல் வந்துவிட்டது. புயலில் அகப்பட்ட ஒரு சிறுபெண்ணின் கையைப்பிடித்து மூடி அவளை காப்பாற்றிவிட்டார். அந்த சிறு பெண் கேட்டாள், மூடி ஐயா, இந்த உலகம் இப்போது அழிந்துபோகின்றதா என்று சொல்லி கேட்டாள். உடனே மூடி சொன்னார்; அதைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று தெரியும்: இந்த உலகம் நமக்கு சதமல்ல; ஆனால், நமக்கு இன்னொரு உலகம் ஒன்று இருக்கின்றது என்று. ஆகவே உலகத்தைக் குறித்த மனப்பான்மையிலே ஜெயத்தைத் தருகிற காரியம் என்னவென்றால் இயேசு உயிரோடெழுந்தார் என்ற செய்தி.

அடுத்தது, மாம்சம் அது ஒரு எதிரியாகச் சொல்லப்பட்டுள்ளது. மாம்சம் என்றால் நமது சரீரம் என்று எண்ணிவிடக்கூடாது. அதாவது, மாம்சீக ஆவல்கள், ஆசைகள் ஆகியவற்றை ஜெயிப்பதற்கு ஆண்டவர் உதவி செய்கிறார். ஆண்டவர் உயிரோடு எழுந்ததினாலே மாம்சத்தின் கிரியைகளை ஜெயிக்க அவர் வல்லமையைத் தருகிறார்.

மூன்றாவதாக பிசாசானவன். இந்தப் பிசாசானவனை ஆண்டவர் மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலமாக ஜெயங்கொண்டார். ஆண்டவர் உயிரோடு எழுந்ததினாலே உலகத்தையும் மாம்சத்தையும், அதோடு பிசாசையும் ஜெயித்தார். ஒரு யுத்த வீரன் ஒருவனை ஒருமுறை எதிரிகள் துப்பாக்கியினால் சுட்டார்கள். அவன் ஒரு காயமும் படாமல் தப்பித்தான். எப்படியென்றால் அவன் குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்தனாலே ஒரு காயமும் படாமல் தப்பித்தான். அதேபோல எபேசி யர் 6: 13-14 வரையுள்ள வசனங்களிலே சாத்தானாலே துளைக்கப்படாத ஆவிக்குரிய ஆயுதங்களைக் குறித்து கூறப்பட்டிருக்கிறது. இதை அணிந்துகொள்வோமானால் எந்த சாத்தானுடைய கிரியைகளும் நம்மை ஜெயிக்காது.

கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினாலே உணர்ச்சிகளிலே மாற்றங்கள், நமது பொறுமையிலும் நிலைத்திருப்பதிலும் மாற்றங்கள், நமது எதிரிகளிடத்திலே மாற்றங்கள் உண்டாகின்றன. உயிர்த்தெழுநத ஆண்டவருக்கு நம்மை அர்ப்பணிப்போம். அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.

சத்தியவசனம்