குணமாக்குதலும் விசுவாச ஜெபமும்

Dr.தியோடர் எச்.எஃப்.
(மார்ச்-ஏப்ரல் 2020)

அவன் பாவம் செய்திருப்பானானால்…

“அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்” (யாக்.5:15).

இந்த வசனத்தில் உள்ள இரண்டு சொற்றொடர் கள் சிந்திக்கத் தகுந்தவையாகும்.

1. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிளை இரட்சிக்கும்.
2. அவன் பாவம் செய்திருப்பானானால் . . .

இதில் விசுவாசமுள்ள ஜெபம் எவ்வாறு பிணியாளிகளை இரட்சிக்கிறது என்பதைக் குறித்து விரிவாக பார்த்துள்ளோம். இவ்விதழில் இரண்டாவது சொற்றொடரான “அவன் பாவம் செய்திருப்பானானால்…” என்பதைக் குறித்து சிந்திக்க விருக்கிறோம்.

யாக்கோபு எண்ணெய் பூசி விசுவாசம் உள்ள ஜெபம் ஏறெடுத்தபின் அவன் பாவம் செய்தவனானால், அவன் செய்தபாவங்கள் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றான். யாக். 5:15 அந்தக் குறிப்பிட்ட பிணியாளி ஏன் வியாதியாய் இருக்கிறான் என்பதற்குரிய காரணம் இப்போது நமக்குத் தெரிகிறது. பாவச் செயல்கள் செய்ததால்தான் ஒருவன் வியாதியாயிருக்கிறான் என்று கூறுவது தவறு. வேதம் அப்படிக் கூறவில்லை. வசனம் கூறுவதைக் கவனியுங்கள். “அவன் பாவம் செய்தவனானால்” “அவன் பாவம் செய்திருந்தால்” – இது ஒரு அனுமானம் மட்டுமே நிச்சயம் அல்ல. அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

வியாதிகள் எப்போதும் பாவத்தின் விளைவால் வந்ததல்ல. சில வேளைகளில் வியாதி பாவத்தின் காரணமாகவும் வருவதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் அவன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப்படவேண்டியது கட்டாயமாகும்.

ஒருவகையில் பார்த்தால் எல்லா வியாதிகளும் பாவம் காரணமாக வந்தவையே. அதாவது ஆதாம் ஆதியில் செய்த பாவம் அவனிடத்திலிருந்து மக்களிடம் பரவியது. பாவம் இந்த உலகத்தில் பிரவேசிக்கவில்லையானால் உலகில் வியாதியே இருந்திருக்காது. அப்பொழுது மரணமும் இருந்திருக்காது. ரோமர் 5:12 கூறுகிறது: “இப்படியாக ஒரே மனுஷனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷருக்கும் பாவம் செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று” ஆதாமின் பாவத்தினால் உலகத்தில் மரணம் வந்தது.

இங்கே பாவம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஆதாமிலிருந்து எல்லா மனிதரிடத்திலும் பரவிய பாவத்தன்மையைக் குறிக்கிறது.

ஒரு தனிமனிதன் பாவம் செய்யும்போது அது எப்போதும் வியாதியில் வந்து முடிவதில்லை. அதே வேளையில் ஒரு கிறிஸ்தவனின் உடலில் எந்த வியாதியும் வரவில்லையானால் அவன் பாவமே செய்யவில்லை என்று முடிவு கட்டிவிடவும் முடியாது.

உண்மையான பயபக்தியுள்ள தேவபிள்ளைகளுக்குக் கடும் வியாதிகள் இருப்பதைக் காண்கிறோம். தெய்வபயமற்ற அக்கிரமக்காரர்கள் எந்த வியாதியுமின்றித் திடகாத்திரமாய் இருப்பதையும் காண்கிறோம்.

இந்த விஷயத்தில் சங்கீதக்காரன் கூறுவதை சங்.73:2-5, 8, 12-14, 16,17 ஆகிய வசனங்களில் கவனிப்போம்.

சங்.73:2-5: ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று. துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில் வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமை கொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை. அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர்படும் வருத்தத்தில் அகப்பட்டார்கள். மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.

சங்.73:8: அவ்ாகள் சீர்கெட்டுப்போய் அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள் இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.

வசனம் 12-14: இதோ அவர்கள் துன்மார்க்கர் இவர்கள் என்றும் சுக ஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம் பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலை தோறும் நான் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.

வசனம் 16: இதை அறியும்படிக்கு யோசித்துப் பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,

வசனம் 17: அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.

தேவனற்ற அக்கிரமக்காரர்கள் அற்புதமாக வளமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதையும் எந்தவித உபாதைகளோ, வியாதிகளோ, அவர்களைத் தாக்காமல் இருப்பதையும், கண்டு சங்கீதக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஏன் என்று விளங்கவில்லை. ஆனால், அவன் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தபோதுதான் அவனுக்குப் புரிந்தது. அவர்களுடைய முடிவைக் கவனித்து அறிந்தான்.

நாம் இந்த உலக வாழ்வுதான் நிலையானது என்று நினைத்து விடக்கூடாது. விசுவாசிக்கு மிகச்சிறந்த வெகுமதி இனி வரப்போகும் வாழ்வில் வழங்கப்படும்.

சில வேளைகளில் நமக்குவரும் வியாதிகள் தனிமனிதனின் பாவம் காரணமாக வந்ததாயிருக்கும். ஒரு விசுவாசிக்கு வியாதி வந்தால் அது தன்னுடைய ஏதாவது பாவம் காரணமாக வந்ததா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தேவனை அவமரியாதை செய்வதால் வியாதி வரும். 1 கொரி.11:29,30: “என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனம் பண்ணுகிறவன் கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால் தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜன பானம் பண்ணுகிறான். இதினிமித்தம் உங்களில் அநேகர் பலவீனரும், வியாதியுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள். அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்”.

கொரிந்து சபையில் உள்ள விசுவாசிகள் தேவனை அவமதித்தார்கள் அவர்கள் கர்த்தருடைய இராப்போஜன விருந்தில், தகுதியில்லாமல் கலந்து கொண்டபடியால் பலர் வியாதி உள்ளவர்களானார்கள். பலர் மரித்துப்போனார்கள்.

இப்படி ஒருசிலரின் தனிப்பட்ட பாவத்தினால் வியாதி வருவது உண்மையாக இருந்தாலும், எல்லா வியாதிகளும் பாவத்தினால் வருகின்றன என்று நினைப்பது தவறு.

யோபுவின் சிநேகிதர்கள் இப்படித்தான் நினைத்தார்கள். அவர்கள் யோபுவிடம் இதைச் சொல்லிக் குற்றஞ்சாட்டினார்கள். யோபு தன் வாழ்வில் பாவம் செய்திராவிட்டால் அவனுக்கு இவ்வளவு கொடிய வியாதியும் துன்பமும் வந்திருக்காது என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது தவறு. யோபுவின் புத்தகம் முழுவதையும் வாசிக்கும்போது சிநேகிதர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று அறிகிறோம். எனவே யோபுவின் சிநேகிதர்கள்போல நாம் நினைக்கவும், பேசவும் கூடாது.

இது ஒரு முக்கியமான சத்தியம் எனவே ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இயேசு செய்த அற்புத நிகழ்ச்சியைக் கவனிப்போம். ஒரு திமிர்வாதக்காரனை இயேசுவிடம் குணமாக்குவதற்காகக் கொண்டு வந்ததைப் பற்றி மத்தேயு எழுதுகிறான். அவன் இயேசுவுக்கு முன்னால் வைக்கப்பட்டபோது, அவனைக் குணமாக்குவதற்கு முன் இயேசு அவனது பாவங்களை மன்னிக்கிறார்.

மத்தேயு 9:2-7: “அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி, “மகனே திடன்கொள். உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்றார். அப்பொழுது வேதபாரகரில் சிலர் இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ? எழுந்து நடவென்று சொல்வதோ? எது எளிது?

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி திமிர்வாதக்காரனை நோக்கி, நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ என்றார். உடனே அவன் எழுந்து தன் வீட்டுக்குப் போனான்.

வேறொரு சந்தர்ப்பத்தில் இயேசு இன்னொரு மனிதனைக் குணமாக்கினார். அப்போது அந்த மனிதனுடைய பாவம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. யோவான் 5ஆம் அதிகாரத்தில் பெதஸ்தா குளத்தண்டை படுத்திருந்த வியாதியஸ்தனை இயேசு குணமாக்குவதைக் காண்கிறோம். இயேசு அவனைக் கண்டபோது 38 வருடங்களாக வியாதிப்பட்டிருப்பதாகக் கூறினார் அவன் குணமடைய விரும்பினான் இயேசு அவனிடம் சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்று கேட்டார். யோவான் 5:6 சுகமாக வேண்டும் என்னும் அவனது ஏக்கத்தை அறிந்து “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அவன் குணமடைந்து எழுந்து நடந்தான். ஆனால் இந்த அற்புதம் ஓய்வு நாளில் செய்யப்பட்டதால், யூதர்கள் பிரச்சனை பண்ணினார்கள். இயேசு ஜனக்கூட்டத்தில் அவர்களை விட்டுவிலகி இருந்தார். பின்னர் இயேசு அந்த மனிதனைக் கண்டு “இதோ நீ சொஸ்தமானாய் அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப்பாவம் செய்யாதே” என்றார். வச.14 இயேசுவின் இந்த எச்சரிக்கை பாவத்தினால் வியாதி வரும் என்பதைக் காட்டுகிறது.

யோவான் 9ஆம் அதிகாரத்தில் குருடனாய்ப் பிறந்த ஒரு மனிதன் குணமாக்கப்பட்டதைக் காண்கிறோம். அவருடைய சீஷர்கள் இயேசுவிடம்: “ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமோ? இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ? என்று கேட்டார்கள் (வச.2). அப்பொழுது இயேசு சீஷர் களிடம் “இது இவன் செய்த பாவமும் இல்லை. இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் அல்ல. தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்” என்றார் (வச.3). தேவன் தம்முடைய மகிமை வெளிப்படுவதற்காக ஒருவனைக் குருடனாகப் பிறக்க அனுமதித்தார். இதிலிருந்து சிலருக்கு வரும் நோய்கள் அவர்களுடைய பாவத்தினால் வருவதல்ல. அவன் மூலம் தேவநாமம் மகிமைப்படத்தக்கதாக வியாதிகள் வருகின்றன அறிகிறோம்.

ஒரு விசுவாசிக்கு வியாதி வரும்போது அவன் தன்னிடத்தில் இதுவரை அறிக்கை செய்யப்படாத பாவம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். பரிசுத்த ஆவியானவர் அவனிடத்தில் பாவம் ஏதும் இருப்பதாக உணர்த்தவில்லையானால், தன்னுடைய பலவீனத்தில் தேவன் தம்முடைய பலத்தை வெளிப்படுத்தவே தனக்கு வியாதி வந்துள்ளது என்று அறிந்துகொள்ளுவான். ஒருவன் தன்னைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்பதை 1கொரி.11ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.

கர்த்தருடைய இராப்போஜனத்தில் ஒருவன் பங்குபெறுவதற்கு முன் அவன் தன்னைப் பரிசோதனை செய்யவேண்டும். அபாத்திரமாய்ப் பந்தியில் சேர்ந்தவர்கள் வியாதிப்பட்டதும், மரணமடைந்ததும் உண்டு என்று ஏற்கெனவே எழுதியுள்ளேன். சூழ்நிலையின் முக்கியத்துவத்தை உணர்த்தத்தான் வேதாகமம் இப்படி அறிவுரை தருகிறது.

வசனம் 28: “எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தை புசித்து இந்தப் பாத்திரத்தில் பாணம் பண்ணக்கடவன்” . மேலும் வேதம் தொடர்ந்து கூறுவதைக் கவனியுங்கள்.

வசனம் 31: “நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந் தீர்க்கப்படோம்.”

வசனம் 32: நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்குக் கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.”

அப்போஸ்தலர் நடபடிகளில் அதிகாரம் 5இல் அனனியா, சப்பீராள் தம்பதியினரைச் சந்திக்கிறோம். இவர்கள் துணிகரமாகப் பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் சொன்னார்கள். இந்தப் பாவம் செய்தபடியால் அந்த இடத்திலேயே செத்து விழுந்தார்கள்.

பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பொய் சொல்லுதல் எவ்வளவு பயங்கரமானது என்று அறிகிறோம்.

தேவனுடைய கிருபையும் இரக்கமும் இல்லாதிருந்தால் இதுபோன்ற பாவங்களுக்காக எத்தனையோ கிறிஸ்தவர்கள் வெகுகாலத்துக்கு முன்னரே மரணத்தைச் சந்தித்திருப்பார்கள் அல்லது தீராத வியாதி பிடித்தவர்களாகத் துன்பப்படுவார்கள்.

தேவன் நம்முடைய பாவங்களுக்கு தக்கதாக நமக்குச் செய்யவில்லை. இந்த உண்மையை சங்கீதம் 103:8-17 நமக்கு நினைவூட்டுகிறது.

வசனம் 8: கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்.

வசனம் 9: அவர் எப்பொழுதும் கடிந்து கொள்ளார் என்றைக்கும் கோபம் கொண்டிரார்.

வசனம் 10: அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்கு செய்யாமலும் அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

வசனம் 11: பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.

வசனம் 12: மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.

வசனம் 13: தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

வசனம் 14: நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவு கூறுகிறார்

வசனம் 15: மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்

வசனம் 16: காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.

வசனம் 17: கர்த்தருடைய கிருபையோ அவர்களுக்கு பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.”

உண்மைகள் இப்படியிருக்க, நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த எண்ணற்றபாவங்கள் அறிக்கை செய்யப்படாமலும், மன்னிக்கப்படாமலும் இருக்கும்போது, நாம் எப்படி “என்னுடைய வியாதியைக் குணமாக்கு” என்று கேட்கலாம்? நாம் இவ்வளவு அகந்தை உள்ளவர்களாக எப்படி இருக்கலாம்?

நாம் நம்மைத் தற்பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். 1கொரி. 11:28,31,32 வசனங்களின்படி செய்யவேண்டும். சில வேளைகளில் நாம் நம்மைத் தற்பரிசோதனை செய்வது தீமையாக முடிவதும் உண்டு. எனவே தாவீதைப் போல நம்மைச் சோதனை செய்துபார்க்கும்படி ஆண்டவரிடம் வேண்ட வேண்டும்.

சங்கீதம் 139:23: தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும். என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

சங்கீதம் 139:24: வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்


வருந்துகிறோம்!

சத்தியவசன ஊழியத்தில் மொழி பெயர்ப்பு பணியில் இணைந்து செயலாற்றிய சகோதரர் G.வில்சன் அவர்கள் 2019 டிசம்பர் 16 அன்று கர்த்தருடைய இராஜ்ஜியத்திற்கு பிரவேசித்ததை அறிந்து வருந்துகிறோம். வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் ஆங்கில புத்தக வெளியீடுகளையும் செய்திகளையும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டு வந்தார்கள். சத்தியவசன ஊழியத்தில் அன்னாரது பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூருகிறோம்!


நினைவுகூருங்கள்!

நீ உன் வாழ்நாளெல்லாம் மறுபடியும் பிறவாதிருப்பாயாகில் ஒருநாள் நான் பிறவாமலேயே இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கும் நிலை ஏற்படும்!


சிந்தியுங்கள்!

நம் அருமை ஆண்டவர் இயேசு பாவமன்னிப்பு, சமாதானம், நித்திய ஜீவன் ஆகியவற்றை அளிப்பதுடன் நமக்கு ஒரு சிலுவையையும் கொடுக்க விரும்புகிறார். அவர் கொடுக்கும் சிலுவையைச் சுமப்பதற்கு ஆயத்தமில்லாதவன் அவர்மேல் வைத்திருக்கும் அன்பு அழமற்றதாயிருக்கும்!

சத்தியவசனம்