சகோதரி சாந்தி பொன்னு
(மார்ச்-ஏப்ரல் 2012)

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள் (எபி. 10:26-29).

நெற்றியில் திருநீரும் குங்குமமும் பளிச்சிட, கைகளில் அர்ச்சனைத் தட்டுடன் பக்தியே உருவாய் என்முன்னே நின்ற தாயாரைப் பார்த்து நான் திடுக்கிட்டுவிட்டேன். ஏனெனில், ஓரிரு வருடங்களின்முன் அவரும் எங்களுடன் சேர்ந்து ஜெபித்த ஒருவர்; தனது சாட்சியைப் பகிர்ந்துகொண்டவர். மாத்திரமல்ல, அந்த சகோதரி எங்களுடன் இணைந்து, குடும்பங்களைச் சந்திப்பார். அவர் சந்தித்த ஒரு குடும்பம் இன்னமும் கிறிஸ்துவை ஆராதிக்கிறார்கள். ஆனால், இந்த அம்மா, அவரது மகள், மகளின் மகள் என்று அனைவரும் இன்று கிறிஸ்துவைவிட்டு, தங்கள் பழைய வாழ்வுக்குத் திரும்பிவிட்டிருந்தார்கள். இது என்ன கோலம் என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மா, கிறிஸ்தவளாய் இருந்தும் எனக்கு எத்தனை பிரச்சனைகள். இப்பொழுதுதான் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இப்போது பிள்ளைகள் பணம் அனுப்புகிறார்கள். இந்த வாழ்க்கை எனக்குப் போதும் என்றார் அவர்.

அத்தாயார், வேற்று மதத்திலிருந்து, இயேசுவை அறிந்து, ஏற்று, ஞானஸ்நானம் எடுத்து, திருவிருந்தில் பங்குபெற்று, ஒரு கிறிஸ்தவ குடும்பமாக வாழ்ந்த ஒருவர். இன்று, சூழ்நிலைகள் காரணமாக பின்வாங்கி, எது தேவையற்றது என்று எண்ணிவிட்டு வந்தாரோ, அதே வாழ்வுக்குத் திரும்பிவிட்டார்கள். ஆனால், நாம் அப்படியல்ல; இன்னமும் நாம் கிறிஸ்துவின் பிள்ளைகளாகத்தான் வாழுகிறோம். நல்லது, அதுதான் உண்மை. ஆனால், அத் தாயாரோ வெளிப்படையாகவே கிறிஸ்துவை மறுதலித்துப் போயேவிட்டார். நாம் என்ன செய்கிறோம்? கிறிஸ்துவுடனேயே இருப்பதாகச் சொல்லிக்கொண்டே, நம்மில் எத்தனைபேர் கிறிஸ்துவை மறுதலித்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? அந்தத் தாயாரைப்பார்க்கிலும் நாமே கொடியவர்கள் என்று நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

பாவம் கொடியது:

பாவம் எவ்வளவு கொடியது என்று நமக்குத் தெரியாதா? தெரியும், ஆனால் அதன் பயங்கரத்தைக் குறித்து நாம் சிரத்தை எடுப்பதேயில்லை. அது பலவித விளைவுகளை ஏற்படுத்தினாலும், நம்மை தேவனை விட்டுப் பிரித்து, செத்துப்போனவர்களாக்குகிறதே! இதைவிடக் கொடிய விளைவு வேறென்ன வேண்டும். அதனால்தான், யாராலும், எந்த மிருக இரத்தத்தாலும் நிவிர்த்தியாக்க முடியாத இந்தப் பாவத்தின் கோரத்தை கிறிஸ்து ஒருவரே தம்மீது சுமந்துகொண்டு, தம்மையே பலியாக ஈந்து, பாவத்தின் கூரை ஒடித்து, அதன் முடிவாகிய மரணத்தை வென்று உயிர்த்தார். இந்த அறிவு, நம்பிக்கை, விசுவாசம் அன்றைய கிறிஸ்தவர்களிடம் மாத்திரமல்ல, இன்று நம்மிடமும் நிறையவே உண்டு. ஆனாலும், எனக்காக ஒருவர் மரணத்தையே ஏற்றாரே என்ற சிந்தனையே இல்லாமல், நாம் பாவத்தின் பிறப்பிடமாகிய பிசாசுக்கு இன்னமும் நம் வாழ்வில் தாராளமாக இடமளிப்பது ஏன்?

பாவத்தின் கொடூரத்தை விபரித்து எழுதப்பட்டுள்ள எபிரெய ஆசிரியரின் நிருபம், படிக்கவும் தியானிக்கவும் சற்றுக் கடுமையாகவும், அதிகபிரசங்கித்தனம் என்று எண்ணக்கூடிய விதத்திலும் எழுதப்பட்டிருந்தாலும், அதுதான் சத்தியம். எபிரெயருக்கு நிருபத்தை எழுதிய ஆசிரியர் வாழ்ந்த காலமானது சபை பலவித வெளிப்புறத் தாக்குதல்களுக்கு உட்பட்ட காலம். ஆனால், சபைக்குள்ளிருந்து எழுந்த பயமுறுத்தல்கள்தான் சபைக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்தது. (இன்றும் கிறிஸ்தவத்திற்கு எதிர்ப்பும், அச்சுறுத்தலும் வெளியிலிருந்தல்ல, நமக்கிடையே இருந்துதான் எழுகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை). போலித்தனமுள்ளவர்களும், கிறிஸ்துவையும் அவருடைய போதனைகளையும் வெளிப்படையாகவே தர்க்கத்துக்குள்ளாக்கி, தீய வழியில் வாழ்ந்தவர்களும் எபிரெய சபைக்குள்ளேயே இருந்தனர். அதனை எபிரெய ஆசிரியர் உணர்ந்து, பாரப்பட்டு இந்த நிருபத்தை எழுதியுள்ளார்.

அன்றைய எபிரெய சபைக்கும், இன்றைய நமது கிறிஸ்தவ வாழ்விற்கும் வேறுபாடு உண்டா என்பதைக் கேட்டுப்பார்ப்பது நல்லது. பக்தி மார்க்கத்தாராகக் காணப்படுகின்ற நம்மில் எத்தனைபேர் மெய்யாகவே தேவனுக்கு உண்மையாக இருக்கிறோம்? வெளிவாழ்வில் நாம் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்துகொண்டு, நமக்குச் சாதகமான வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, ஆண்டவருடைய வார்த்தைகளை நமக்கு ஏற்றபடி புரட்டிப்போட்டு, கிறிஸ்துவின் பேரிலேயே நமது வாழ்வை சுயத்திலும், பாவத்துடன் கைகோர்த்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது சிந்திக்கவேண்டிய விஷயம். ஆகையினால் இந்த நிருபம் அன்றைய நாட்களைவிட, இன்று நமக்கு அதிகம் பொருந்தும்.

பஸ்கா விருந்து:

நாம் கிறிஸ்தவர்கள், ஜெபிக்கிறவர்கள், வேதம் வாசிப்பவர்கள், இப்போதெல்லாம் பொதுப்பணிகளிலும் அதிகமாக ஈடுபடுகிறவர்கள், கிறிஸ்துவையே தெய்வமாகக் கொண்டிருப்பவர்கள்; இவை எதிலும் ஐயமேயில்லை. சந்தர்ப்பத்திலே கிறிஸ்தவ வைராக்கியத்தையும் காட்டத் தவறுவதில்லை. ஆனால், எவ்வளவுதூரம் நமது வாழ்விலே நாம் கிறிஸ்துவைக் காட்டுகிறோம், நமது இரட்சகருக்கும், அவரது வார்த்தைகளுக்கும் உண்மையுள்ளவர்களாயிருக்கிறோம் என்பதுதான் கேள்வி. ஒருவித அலட்சியப்போக்குடைய நமது கிறிஸ்தவ வாழ்வு, யாரை, எதனை, எப்படி அலட்சியப்படுத்துகிறது? யாரைத் துக்கப் படுத்துகிறது என்று மனதார சிந்தித்து நமது வாழ்வைச் சீரமைப்பது நல்லது.

இயேசுவானவர் தம் வாழ்விலே எத்தனை தடவைகள் எருசலேமுக்கு வந்திருப்பார். ஆனால், இம்முறை, இதுதான் எருசலேமுக்கான கடைசிப் பயணம் என்பது அவருக்குத் தெரியும். இதைக் குறித்து பலமுறை சீஷருக்குச் சொல்லியிருந்தாலும் அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த முறை பஸ்கா விருந்து வழக்கம்போலவே முன்னெடுக்கப்பட்டாலும், மனஉணர்வுகள் எப்போதும்போல இருக்கவில்லை. ஒருபோதும் இல்லாதவாறு இயேசு இம்முறை ஒரு கழுதைக் குட்டியில் ஏறி பவனியாக எருசலேமுக்குள் வரவும், தேவாலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் விரட்டி அடிக்கவும், இப்படிப் பல சம்பவங்கள் நேரிட்டன. இந்த இராவிருந்திலும் இயேசு தாமே எழுந்து சீஷரின் கால்களைக் கழுவியது ஒரு வித்தியாசமான செயற்பாடாக இருந்தது. அத்துடன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்றும் ஆண்டவர் சொல்லிவிட்டார். எல்லோருடைய மனஉணர்வுகளும் குழம்பித் தவிக்க இவை போதாதா?

தொடர்ந்து, இதுகாறும் இல்லாதவாறு, இயேசு அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார் (லூக்கா 22:19-20). மத்தேயு இப்பகுதியை சற்று விரிவாக எழுதியுள்ளார். இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக் கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது (மத்தேயு 26:26-29)

400 வருஷங்களாக எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்த இஸ்ரவேலர் மீட்கப்பட்டு வெளிக்கொணரப்பட்ட அந்த இராத்திரியின் சம்பவங்களே அன்றைய தினத்திலே நினைவு கூரப்பட்டு, பஸ்கா பண்டிகையாகக் கொண்டாடப்பட்டது. எகிப்திலே, அந்த இரவிலே கர்த்தர் கொடுத்த ஒழுங்குமுறைமையின்படி ஒரு ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு, அதன் இரத்தம் ஒவ்வொரு இஸ்ரவேலரின் வீட்டு வாசல் நிலைக்கால்கள் இரண்டிலும், மேற்சட்டத்திலும் தெளிக்கப்பட்டது. அதன் மாம்சத்தை நெருப்பில் சுட்டு, ஒன்றும் மிஞ்சாதபடி புளிப்பில்லாத அப்பத்துடனும் கசப்பான கீரையுடனும் இஸ்ரவேலர் சாப்பிட்டார்கள். இது ஏன்? அன்று இராத்திரி தேவனுடைய நீதி விளங்கிய இராத்திரி. எகிப்து தேசம் எங்கும், மனிதர் முதற்கொண்டு மிருகஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகள் எல்லாம் சங்காரம்பண்ணப்பட்ட இராத்திரி. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன் என்று கர்த்தர் சொன்னபடியே அந்த நடுராத்திரியிலே சம்பவித்தது. ….அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள் (யாத்.12:13,14) என்று கர்த்தர் சொல்லியிருந்தார்.

அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் அந்தப் பண்டிகையை உணர்வுடன்தான் கொண்டாடினர். ஆனால், கால ஓட்டத்தில், அது வெறுமனே ஒரு பண்டிகையாக மாத்திரமே மாறியது; அவர்களுடைய இருதயமோ தேவனை விட்டுத் தூரமாக விலகியிருந்தது. உள்உணர்வெல்லாம் செத்துவிட்டதுபோல அவர்களுடைய பண்டிகைகள் இருந்தன. இதனால் கர்த்தர் ஆமோஸ் தீர்க்கரை எழுப்பி இஸ்ரவேலைக் கடிந்துகொண்டார். உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை (ஆமோஸ் 5:21). வட இராஜ்யமான இந்த இஸ்ரவேல் ராஜ்யம் பின்னர் சிதறுண்டு போனது. ஆனால், கர்த்தர் தமது பிள்ளைகள் முற்றிலும் அழிந்துவிட அனுமதிக்கவில்லை. கி.மு.627 – 586 ஆண்டளவில் எரேமியா தீர்க்கரை எழுப்பிய தேவன், தென்ராஜ்யமான யூதாவுக்கும் அதன் தலைநகரான எருசலே முக்கும் ஒரு செய்தி அனுப்பினார். இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். …நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 31:31-33) என்பதே அந்தச் செய்தி.

கற்பலகையில் எழுதிக் கொடுக்கப்பட்ட உடன்படிக்கையை இஸ்ரவேலர் உடைத்துப் போட்டனர். அதற்காக தேவன் அவர்களை அழித்துவிடவில்லை. மாறாக, ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தார். இம்முறை தமது பிரமாணங்களை கற்பலகைகளிலல்ல, தமது பிள்ளைகளின் மனதிலே வைத்து, சதையான இருதயத்திலே அவற்றை எழுதச் சித்தங் கொண்டார் தேவன். இந்தப் புதிய உடன்படிக்கையின் அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவே. இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ…. (எபி. 8:6). இது, மிருகபலி போன்ற வெளிச்சடங்காச்சாரங்களின்படியல்ல; தம்மையே ஏகபலியாக ஈந்த கிறிஸ்து சிந்திய இரத்தத்தால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இது பொதுவானதல்ல; ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரியது. இது இஸ்ரவேலுக்கு மாத்திரமல்ல; புறவினத்தாருக்கும் விரிவாக்கப்பட்டது. இது, வெளிவாழ்வைப் பொறுத்ததல்ல; உள்வாழ்வில், மனதில் ஏற்படுகின்ற மனமாற்றத்தைப் பொறுத்தது. இது, இஸ்ரவேல் மாத்திரமல்ல, ஒவ்வொரு தனிமனிதனும் தேவனுடன் உறவுகொள்ளக் கூடிய வழியைத் திறந்தது. இது தண்டனை தரும் உடன்படிக்கை அல்ல; இது கிருபையின் உடன்படிக்கை.

அதற்காக தேவன் இஸ்ரவேலுடன் தாம் முன்னர் செய்த உடன்படிக்கையைத் தாமே மாற்றிப்போட்டார் அல்லது இல்லாமல் செய்தார் என்று அர்த்தமாகுமா? இல்லை, இஸ்ரவேலர் மீறிவிட்ட அந்தப் பழைய உடன்படிக்கையை, அவர் புதுப்பித்தார். பழையது, புதியதின் நிழலாட்டம் மாத்திரமே. கிறிஸ்துவின் பலிக்கு நேராக இஸ்ரவேலை நடத்திய தேவன், புதிய உடன்படிக்கையில் சகலரையும் தமது பிள்ளைகளாக்குகின்ற தமது அநாதித் திட்டத்திற்கு வழிதிறந்தார். இனி பிரமாணத்தின்படியான சுத்திகரிப்பு இல்லை; தனித் தனியே நமது இருதயத்தைத் தேவன் சுத்திகரிக்கிறார். இனி பாவமன்னிப்பைத் தேடி அலைந்து, பல கிரியைகளை நடத்தவேண்டிய தில்லை; இனி ஒரு பலி இல்லாமல் பூரணமான பழுதற்ற பலி செலுத்தப்பட்டு கிருபையாக மன்னிப்புக் கொடுக்கப்பட்டாயிற்று.

தாம் பலியாகத் தம்மையே ஒப்புக் கொடுக்கும் வேளை வந்தபோது, இதைத்தான் அந்தக் கடைசி பஸ்கா விருந்திலே இயேசு ஆரம்பித்து வைத்தார். பாத்திரத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணிக் கொடுத்த இயேசு, …. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது என்றார். மாத்திரமல்ல, தொடர்ந்து நித்திய ராஜ்யத்திற்குரியதும், தமது பிள்ளைகள் தம்மோடு வாழுவார்கள் என்ற நிச்சயத்திற்குரியதுமான வாக்கையும் கொடுத்தார் ஆண்டவர் (மத்தேயு 26:26-29).

மிருகத்தின் இரத்தம் தெளிக்கப்படுவதால் சரீரசுத்தி உண்டாகும்படி அது மனிதனைப் பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (எபி. 9:14).

நமது காரியம் என்ன?

தேவகிருபையினாலே நித்திய சுதந்திரத்தை நாம் அடையும்படிக்கு, தமது இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தி, நம்மைப் புதிய மனிதராக்கி, தமது பிள்ளைகள் என்ற சுதந்திரத்தை அளித்த ஆண்டவரை இன்று நாம் என்ன செய்கிறோம்? நம்மில் பலருக்குத் திருவிருந்தில் பங்கு கொள்வது, ஒரு சடங்காக மாத்திரமே தெரிகிறது என்றால் அது மிகையாகாது. மிகுந்த பக்திவிநயத்துடன் நாம் பங்குகொள்கிறோம்; அதைத் தவற விடவும் மாட்டோம். ஆனால், நமது கைகளில் கொடுக்கப்படுகின்ற அந்த அப்பமோ அல்லது அதன் மாதிரியோ எதுவானாலும், அது கிறிஸ்துவின் பிய்க்கப்பட்ட சரீரத்தின் ஒரு துண்டு என்று நினைக்கிறோமா? பானத்தை அருந்தும் போது, என் இயேசு எனக்காகவே சிந்திய இரத்தத்தின் துளிகள் என்று சிந்திக்கிறோமா? இன்று நாம் கிறிஸ்துவின் பிள்ளைகள் என்று சொல்லப்பட ஏதுவாக ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையை நாம் நினைவுபடுத்திப் பார்க்கிறோமா? நினைவிற்கொள்ளுவோமானால் ஆராதனை முடிந்ததும் சக விசுவாச சகோதர சகோதரிகளை வார்த்தையால் கொன்றுவிட்டு வீடு திரும்பமாட்டோமல்லவா!

புத்துயிர் தருகின்ற புதிய உடன்படிக்கை

நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் (எபிரெயர் 8:10). இதுவே தேவன் கிறிஸ்துவின் இரத்தத்தைக்கொண்டு, நம்முடன் ஏற்படுத்திக்கொண்ட புதிய உடன் படிக்கை. இது மாறாது, அழியாது. சாத்தானின் பிடியில் இருந்த நாம், இன்று தேவனுடைய புத்திரசுவீகாரப் பிள்ளைகள் என்ற உன்னத ஸ்தானத்தை உறுதிப்படுத்துவது இந்த உடன்படிக்கைதான். நமக்குள் வாசம் பண்ணும் பரிசுத்தஆவியானவர் இந்த உடன்படிக்கையினாலான சுதந்திரத்தை நமக்குள் எப்போதும் ஞாபகப்படுத்துகிறவராயிருக்கிறார். இந்த உடன்படிக்கையின் பிள்ளைகள்தான் நாம் என்றால், நம் வாழ்வில் கிறிஸ்து காணப்படுகிறாரா? அல்லது, நாம் அன்று பிலாத்துவின் வீட்டு முற்றத்தில் நின்ற பேதுருவாகவும், நான்றுகொண்டு செத்த யூதாஸாகவும், விட்டுவிட்டுச் சிதறி ஓடிய சீஷர்களாகவும்தானா வாழப்போகிறோம்?

உடன்படிக்கையை மீறினால் . . .

இந்த உடன்படிக்கையை நாம் மீறும்போது நாம் பாவம் செய்கிறோம். அந்தப் பாவம் எப்படி யெல்லாம் நம்மை ஆட்கொள்கிறது தெரியுமா?

  • நாம் கிறிஸ்துவைக் காலின்கீழ் மிதிக்கிறோம். இது பிரமாணத்திற்கு எதிராகச் செய்யும் கலகம் அல்ல; மாறாக, கிறிஸ்துவின் அன்புக்கு எதிரான கலகம். உங்கள் சொந்தப் பிள்ளையே உங்களுக்கு எதிராகக் கலகம் செய்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்?
  • அடுத்ததாக, பாவத்தோடு கைகோர்க்கும் போது, நம்மைப் பரிசுத்தஞ் செய்த உடன் படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்று எண்ணுகிறோம். இது எவ்வளவு பெரிய கொடுமை! சிலுவையை நாம் நிந்திக்கிறோம். தேவனோடு நம்மை ஒன்றிணைப் பதற்காகச் செலுத்தப்பட்ட விலையேறப் பெற்ற இரத்தத்தின் பெறுமதிப்பை நாம் அவமாக்குகிறோம்.
  • எபிரெயர் ஆசிரியர் நமக்கு மேலும் சுட்டிக் காட்டுவது, நாம் பரிசுத்தாவியானவரை நிந்திக்கிறோம். நம்முடைய பாவத்தை நமக்கு உணர்த்துகின்ற பரிசுத்தாவியானவரையே நாம் உதாசீனம் செய்யும் போது, அது தேவனையே துக்கப்படுத்துகின்ற செயலாகிறது.

இப்படியிருக்க, நமது காரியம் என்ன? நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம். படிப்பதற்கும் பட்டம் பெறுவதற்கும் அடுத்தவருக்குப் பிரசங்கிப்பதற்கும் அல்ல சத்தியம்; சத்தியம் நம்மை விடுதலையாக்குகிறது. அந்த விடுதலையை நாம் பெற்றிருக்கிறோமா? இராப்போஜனப் பந்தியில் – திருவிருந்துப் பந்தியில் நாம் பங்குகொள்ளும்போது உணர்வுள்ளவர்களாக பந்தியில் சேருவோமாக.

(தொடரும்)