Dr.தியோடர் வில்லியம்ஸ்
(மார்ச்-ஏப்ரல் 2012)

சாவின் மேல் அதிகாரமுள்ளவர்

இந்த உலக வரலாற்றிலும், உலக அனுபவத்திலும் பல மகான்களையும், பெரிய மனிதர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். அவர்களைப்பற்றி வாசித்திருக்கிறோம். அவர்கள் எல்லோருமே சாவை சந்தித்தார்கள் அல்லவா! மகாத்மா காந்தியடிகள்கூட சாவை சந்திக்க நேரிட்டது. மார்ட்டின் லூத்தர்கிங் சாவை சந்திக்க நேரிட்டது. புத்தர் சாவை சந்திக்க நேரிட்டது. இப்படி, பல பக்திமான்கள், மதங்களை உருவாக்கினவர்கள், மக்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்ந்தார்கள், எல்லோருமே மரித்தார்கள். சாவை சந்தித்தார்கள். அப்போது நீங்கள் ஒருவேளை கேட்கலாம். இயேசுகிறிஸ்துகூட சாகவில்லையா? அவரும் சாவை சந்தித்தாரே! மற்றவர்களைப் போல் இரத்த சாட்சியாகத்தானே அவர் மரித்தார். காந்தியடிகள் ஒரு நல்ல காரியத்திற்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்தார்.

அவ்விதமாகவே, மார்ட்டின் லூத்தர்கிங்கும், மனித உரிமைக்காக எல்லா மனிதரும் சம உரிமை உள்ளவர்கள் என்கிற அந்தப் பெரிய தத்துவத்திற்காகத் தம் உயிரைத் தந்தார். இயேசுகிறிஸ்துவும் அப்படித்தானே தன் உயிரைக் கொடுத்தார்! என்று சிலர் சொல்லுவார்கள். அதிலே என்ன வேறுபாடு என்று கேட்பார்கள். ஆனால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி நற்செய்தி நூல்களிலே நாம் வாசிக்கும் பொழுதும் அவருடைய சாவைப் பற்றிய விபரங்களை நாம் பார்க்கும்பொழுதும் அவருடைய சாவை அவர் சந்தித்ததிலே ஒரு வேறுபாடு இருந்தது. சாவுக்கு அடிமைப்பட்டவராக, வேறு வழியில்லை என்கிற முறையிலே அவர் சாவை சந்திக்கவில்லை. அவருக்கு சாவு ஒரு விபத்தாக (அல்லது) ஒரு விதியாக, தப்பிக்கொள்ள முடியாத ஒரு அனுபவமாக வந்துவிடவில்லை. அவர் தாமாகவே விரும்பி சாவை ஏற்றுக்கொண்டார் என்பதுதான் நமக்குத் தெளிவாகிறது. ஆண்டவர் சாவைத் தம்முடைய வாழ்விலே அவர் நிறைவேற்றப்போகிற ஒரு திட்டமாக அதைக் கருதினார். சாவுக்கும் அவருக்கும் இருந்த தொடர்பு என்ன? சாவைப்பற்றிய அவருடைய மனப்பான்மை என்ன? என்று பார்ப்போம்.

ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான் (லூக்கா 8:41,42). ஆனால், இயேசு போகிற வழியிலே பன்னிரண்டு ஆண்டுகள் பெரும்பாடுள்ள உதிரப்பெருக்குள்ள ஒரு பெண் அவரை சந்தித்தாள். அவளுக்கு நம்பிக்கையும், இரட்சிப்பின் நல்வாழ்வும், சுகமும் கொடுக்க அவர் நேரம் எடுத்துக்கொண்டபடியினாலே, அந்த சமயத்திலே யவீருவின் மகள் மரித்துப் போனாள் என்கிற செய்தி வருகிறது. அதைக் கேட்டவுடனே, இயேசுவானவர் யவீருவைப் பார்த்து, பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்று கூறுகிறார். பிறகு யவீருவின் வீட்டுக்கு வந்தவுடனே, பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல் அவர் அவள் இருந்த அறைக்குள்ளே செல்லுகிறார் (லூக்கா 8:51). அங்கே ஆண்டவர் சாவை எப்படிச் சந்தித்தார் என்று பார்க்கிறோம்.

இயேசு அவர்களைப் பார்த்து: அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்று கூறுகிறார். மரணத்தை நித்திரை என்று அவர் குறிப்பிடுகிறார். லாசருவின் சாவைப் பற்றிச் சொல்லும்பொழுதும் அவர் அப்படிச் சொன்னார். இல்லையா? இது ஒரு இளைப்பாறுதல் ஆகும். வாழ்விலே நாம் கடந்து செல்ல வேண்டிய ஒரு கட்டம்தான் மரணம். ஆனால் இறுதிக் கட்டம் அல்ல, என்பதைக் காட்டுவதற்காகத் தான் அந்தச் சொல்லை அவர் பயன்படுத்துகிறார். உண்மைதான்! சாகும்பொழுது நம்முடைய உடலைக் கல்லறையிலே வைத்து விடுவார்கள். அது அங்கே இளைப்பாறுகிறது. நம்முடைய ஆளத்துவமும், ஆவியும், நாம் விசுவாசிகளானதால் இயேசுவோடுகூட இருக்கிறது. அங்கேயும் நாம் நிம்மதியான, அமைதியான ஒரு நிலையில்தானே இருக்கிறோம். ஆனால், தன்னறிவுள்ளவர்களாக, உணர்வுள்ளவர்களாகத்தான் இருக்கிறோம். ஆகையினாலே, மரித்தபிறகு கல்லறையிலேயே நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற போதனை வேதத்திற்குப் பொருந்தாத போதனை! நம் உடல்தான் அங்கிருக்கிறதேயொழிய நாம் இயேசுவோடு இருக்கிறோம். அவிசுவாசிகளோ நித்திய ஆக்கினைக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அதினால்தான், இயேசு அவள் தூங்குகிறாள் என்று சொன்னார். அவர்களோ அவரைப்பார்த்து நகைத்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே போகப்பண்ணினார். 54, 55ஆவது வசனம்: …அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.

பாருங்கள்! இங்கே மரணத்தை அவர் எப்படிச் சந்திக்கிறார்?! வெற்றி சிறந்தவர் போல! அதிகாரமுள்ளவர் போல! அவர் இராஜாவைப் போல சாவை இங்கு சந்தித்தார் இல்லையா! சாவின் மேலுள்ள அதிகாரத்தை அவர் இங்கு விளங்கப்பண்ணுகிறார். அவர் சாவின்மேல் அதிகாரமுள்ளவர். சாவிற்கும் ஆண்டவர் என்பதை இங்கு விளங்கப்பண்ணுகிறார். இந்த உண்மையை யோவானும், யாக்கோபும், பேதுருவும் அறிந்துகொள்ள வேண்டும். ஏன் இந்த மூன்று பேருக்குமட்டும் இது தேவை? அவர்கள் சபையின் தலைவர்களாக, அப்போஸ்தலர்களாக விளங்கப் போகிறவர்கள். அது மட்டுமல்ல, சபையின் ஆரம்ப நாட்களிலே இவர்கள்தான் சபைக்குத் தலைமைப்பதவி வகித்து வழிநடத்தினவர்கள் என்பதை அப்போஸ்தலர் நடபடிகள் முதல் நான்கு அதிகாரங்களிலே நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்கள் இயேசு சாவின்மேல் அதிகாரமுள்ளவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பேதுருவை எடுத்துக்கொள்ளுங்கள், சாக பயந்துதானே, அவர் இயேசுவை மறுதலித்தார். இயேசுவைவிட்டு ஓடிப் போனார். அந்த பேதுரு இயேசு யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும், இல்லையா! இன்னொருமுறை யோவானும், யாக்கோபும் தங்கள் பதவியைப்பற்றி இயேசுவோடு பேசும்போது, அவர்களுடைய தாயார் மூலமாக ஒருவர் வலது பக்கத்திலும், இன்னொருவர் இடது பக்கத்திலும் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். அதற்கு இயேசு என்ன பதில் சொன்னார்? அவர்களைப் பார்த்து, என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்களோ என்று கேட்கிறார். மத்தேயு 20ஆவது அதிகாரம் 22ஆவது வசனத்திலே, நீங்கள் கேட்டுக் கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.

ஸ்நானம் என்று சொல்லும்போது அவருடைய சாவைப் பற்றிச் சொல்லுகிறார். என்னைப்போல சாவதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா என்று கேட்கிறார். ஆயத்தம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், பின்னாலே வரலாற்றிலே என்ன பார்க்கிறோம்? அப்போஸ்தலர் 12ஆவது அதிகாரத்திலே, ஏரோது யாக்கோபைக் கொன்றுவிட்டான். அவர் இரத்தசாட்சியாக மரித்தார் என்று பார்க்கிறோம். யோவானும்கூட பல உபத்திரவங்களுக்குள்ளாகி, பத்மு தீவிலே அவர் சிறைப்பட்டு அங்கே அனுப்பப்பட்டார்; தெய்வாந்திர சிட்சைபெற்று அங்கே அனுப்பப்பட்டார். இப்படியெல்லாம் பார்க்கும்பொழுது இந்த 3 பேரும், இயேசு சாவின்மேல் அதிகாரமுள்ளவர் என்கிற சத்தியத்தை அறிய வேண்டும் என்று ஆண்டவர் விரும்பினார். அதற்காகத்தான் யவீருவின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். சாவைப்பற்றிய இன்னும் மற்ற சத்தியங்களையும் கற்றுக்கொள்ளும்படியாக, மறுரூபமலைக்கும் கெத்செமனே தோட்டத்திலே ஜெபிக்கச் சென்றபோதும், இவர்கள் மூவரையும்தான் அவர் அழைத்துச் சென்றார். என் அருமைச் சகோதரனே! சகோதரியே! நாம் ஒருவேளை ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் இவ்வுண்மையை அறிந்திருக்கிறோமா? வாழ்க்கையின் சூழ்நிலைகளிலே சாவை நாம் சந்திக்கும்பொழுதும், நமது குடும்பத்திலே சாவை சந்திக்கும்பொழுதும், இயேசு சாவின் மேல் அதிகாரமுள்ளவர் என்பதை விசுவாசிக்கிறோமா?

சாவை வென்றவர்

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய இலட்சியத்திற்காகவே மரித்தாரா? மற்றவர்களைப்போல் இரத்த சாட்சியாக, அவர் நின்ற இலட்சியத்திற்காக, ஒரு நல்ல காரியத்திற்காக மரித்தரா? இல்லை. தேவகுமாரனாக அவர் சாவை சந்தித்தார். அவர் வாழும்பொழுதே இது நமக்குத் தெளிவாகிறது.

யாக்கோபையும், யோவானையும், பேதுருவையும் அவர் அழைத்துக்கொண்டு சென்ற மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம். லூக்கா எழுதிய நற்செய்தி நூல் 9ஆவது அதிகாரத்தில் 28ஆவது வசனத்தை கவனித்துப் பாருங்கள். இந்த வார்த்தைகளை அவர் சொல்லி, அதாவது தம்முடைய உயிர்த்தெழுதலை முன்னறிவித்து, அவர் சீஷர்களோடு பேசி, ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு, ஜெபம் பண்ணுகிறதற்கு ஒரு மலையின் மேல் ஏறினார். இதுதான் அவருடைய மறுரூப அனுபவம் என்று சொல்லப்படுகிறது. அவர் ஜெபம் பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. அன்றியும் மோசே, எலியா என்னும் இரண்டு பேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணை பண்ணினார்கள். ஏன் மோசே, எலியா மட்டும் அங்கு தோன்றினார்கள்? மோசே நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதியாகவும், எலியா தீர்க்கதரிசிகளின் பிரதிநிதியாகவும், பழைய ஏற்பாடு முழுவதும் தம்முடைய சாவைப்பற்றி முன்னறிவிப்பதை குறித்து இயேசு இப்படி அறிந்துகொள்ளும்படியாக, உறுதிபடுத்திக்கொள்ளும்படியாக அந்த இரண்டு பேரும் அங்கு தோன்றினார்கள். எருசலேமிலே அவர் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பார்த்தீர்களா! அவர்கள் நோக்கமில்லாமல் தோன்றவில்லை.

ஒரு பெரிய வெளிப்பாடு, தரிசனம் கிடைக்க வேண்டும் என்று தோன்றவில்லை! அவர் சாகப்போகும் அந்த நோக்கத்திலே, இலட்சியத்திலே, அவரைப் பலப்படுத்த, அவர் நிறைவேற்றப்போகிற மரணத்தைக் குறித்து அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். சாவு இங்கு எப்படிச் சொல்லப்படுகிறது? அவர் நிறைவேற்றப்போகிற ஒரு காரியமாக இங்கு அறிவிக்கப்படுகிறது. அதை அவர் எதிர்பார்த்தார், தம்மைத்தாமே அதற்கு ஒப்புக்கொடுத்தார், நிறைவேற்றப்போனார் என்று அவருடைய சாவைப் பற்றி இங்கு பார்க்கிறோம். ஆனால், பேதுருவும், யோவானும், யாக்கோபும் இதை அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் நித்திரை மயக்கமாயிருந்தார்கள். மகிமையைக் கண்டனர். எலியாவையும், மோசேயையும் பார்த்தனர். அவர்களெல்லாம் தங்குவதற்குக் கூடாரம் செய்வோம் என்றுதான் சொன்னார்கள். ஆனால், இயேசுவின் சாவைப்பற்றிய உண்மையான சத்தியத்தை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆகையினால்தான், பிதாவாகிய தேவன் என்ன சொன்னார்? 35ஆவது வசனத்திலே, இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று. உங்கள் சொந்த எண்ணங்களில் இருக்க வேண்டாம்; நீங்கள் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். இவர் சொல்லுவதைக் கேளுங்கள், இவருக்குச் செவி கொடுங்கள் என்று பிதாவானவர் அவர்களை எச்சரித்தார். பார்த்தீர்களா! மறுரூப அனுபவ சம்பவம் நமக்கு எதை எடுத்துக்காட்டுகிறது? இயேசு சாவை வென்றவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சாவை வென்றார். வெளிப்படுத்தின விசேஷம் முதல் அதிகாரத்திலே, அவர் தம்மை வெளிப்படுத்தும்பொழுது சொன்ன சொற்களைக் கவனிக்கிறோம்.

வெளிப்படுத்தின விசேஷம் முதல் அதிகாரம் 18ஆவது வசனத்திலே, மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவர் என்று சொல்லுகிறாரே, அதன் பொருள் என்ன? திறவுகோல் அதிகாரத்தைக் காட்டுகிறது. பாவத்தின் மரணத்தின்மேல் அதிகாரமுள்ளவர். பாதாளத்தின்மேல் அதிகாரமுள்ளவர். ஆனால், அதை சொல்லுவதற்கு முன்பு, மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று ஏன் சொல்லவேண்டும்? தம்மை மரித்தவராகக் காட்டுகிறார். மரித்தாலும் உயிரோடு எழுந்து, எப்போதும் உயிரோடிருக்கிறவராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். இதிலேதான் அவர் சாவை வென்றதின் இரகசியத்தை நாம் பார்க்கிறோம். சாவை சந்தித்ததின்மூலமாக, சாவின் அனுபவத்தின்மூலமாக அவர் சாவை வென்றார். ஆகையினாலே, அவர் மரித்ததிற்கும், மற்றவர்கள் மரித்ததிற்கும் வேறுபாடு இருக்கிறதில்லையா! மதத் தலைவர்கள் மரித்தார்கள்; சாகிறார்கள்; சாவார்கள். ஆனால், இயேசுகிறிஸ்து செத்தது ஒரு நோக்கத்திற்காக. பாவத்தை மேற்கொள்ளுவதற்காக. பாவத்திற்குப் பிராயசித்த பலியாக அவர் தம்மைக் கொடுத்தார். இதை வேதம் எடுத்துக்காட்டுகிறது. ஆண்டவராகிய இயேசுவுமே இதை சொல்லியிருக்கிறார்: பாவத்திலிருந்து மனிதரை மீட்கும் பொருளாக அவர் தம் உயிரைக் கொடுத்தார் என்று கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, சாத்தானை மேற்கொள்வதற்காக, பிறகு சாவை மேற்கொள்ளுவதற்காகவும் சாவின் பயத்திலிருந்து மனிதனை விடுவிப்பதற்காகவும் அவர் தாமே சாவிற்கு உள்ளானார். …பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார் (எபி.2:14). அதாவது, அவர் மனித சாயலைத் தரித்துக் கொண்டார், மனிதனானார், மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். வசனம் 15இல், மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும் படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார். பிசாசானவன் மரண பயத்தைப் பயன்படுத்தி அநேக மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான். சில பக்தியுள்ள மக்கள்கூட சாவுக்கு பயந்தவர்களாக இருக்கிறார்கள் இல்லையா?

ஒரு சமயம் ஒரு நண்பர் சொன்னார்: வனாந்தரமான ஒரு இடத்திலே அவர்கள் பிரயாணமாகிக் கொண்டிருக்கும்பொழுது, அவர்கள் போய்க் கொண்டிருந்த ஜீப்பை நிறுத்தி, ஆயுதந்தரித்த ஒரு மனிதன் தான் உள்ளே வரும்படி கேட்டானாம். அவர்கள் பயத்துடன்தான் அனுமதித்தார்கள். அவனைத் தடுத்து நிறுத்த அவர்களால் முடியாது. ஏனென்றால் கொள்ளைக்காரர்கள் நிறைந்த இடம் அது. அவர்கள் நடுவிலே மிஷனெரி ஒருவர் இருந்தார். அவர் அவனுக்காக ஜெபித்துக்கொண்டே, ஆண்டவரே, அவனோடு பேசும்படியாக, சாட்சி சொல்லும்படியாக ஒரு வாய்ப்பு தாரும் என்று கேட்டுக்கொண்டே, பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அவன் அடிக்கடி இருமிக் கொண்டேயிருந்தானாம். ஏன் இருமிக் கொண்டேயிருக்கிறாய்? உனக்கு ஏதாவது நோய் இருக்கிறதா என்று அவனிடம் கேட்டாராம். அவ்வளவுதான்! உடனே தன்னுடைய உள்ளத்தைத் திறந்து, தன்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்த அந்தப் பயத்தை, சாவைப்பற்றிய பயத்தை அவன் வெளிப்படுத்திவிட்டான். பார்த்தீர்களா! வெளியில் பார்த்தால் கொடூரமான தோற்றம்! ஆயுதந்தரித்தவன். உள்ளுக்குள்ளேயோ கோழை, சாவைப்பற்றிய பயம். இப்படித்தான் நம் வாழ்க்கையிலே அநேக மனிதரை நாம் சந்திக்கலாம். நாம் அவர்களுக்குச் சாட்சிகளாய் இருக்கவேண்டும்.

சாவைப்பற்றிய பயம் எல்லா மனிதருக்கும் இருக்கிறது. உயர்ந்த பதவியில் உள்ளவர்களுக்கும் உண்டு. இயேசு சாவை அனுபவித்ததின் மூலமாக அந்த பயத்திலிருந்து மக்களை விடுதலை ஆக்குகிறார். சாவை அவர் முறியடித்தார். ஆக தம்முடைய சாவின்மூலமாகத் தான் அவர் சாவை மேற்கொண்டார் என்பது வேதத்தின் சத்தியம். அவருடைய சாவுக்கு ஒரு நோக்கம் இருந்தது. மரணத்தை மேற்கொள்வதற்காக அவர் செத்தார் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம். சாவை மேற்கொண்டார்! ஆகையினாலேதான் அவர் உயிர்த்தெழுந்தார்! சாவு அவரைப் பிடித்துவைக்க முடியாமல் போயிற்று!