ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மே-ஆகஸ்ட் 2020

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நமக்கு சமாதானம் உண்டுபண்ணும் ஆக்கினையை தம்மேல் ஏற்றுக்கொண்ட அன்பின் இரட்சகர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

தேவனுடைய இராஜ்யம் விரிவடையும் பணியில் எங்களோடு இணைந்து செயல்படும் பங்காளர் ஒவ்வொருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஏப்ரல் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் தாக்குதலினால் ஏற்பட்ட தொடர் லாக்-டவுனினால் எமது அலுவலகப் பணிகளும் வெகுவாய் பாதிப்புக்குள்ளாகியது. இந்த சூழ்நிலையிலும் வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள், இணையதளம் மற்றும் வாட்ஸ்-ஆப் செய்திகள் ஆகியவை தடையின்றி இயங்க தேவன் கிருபை செய்தார். சத்தியவசனம் சஞ்சிகை மே-ஜுன் இதழை தயாரித்து அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறோம். தற்போது மே-ஜுன் மற்றும் ஜூலை-ஆகஸ்ட் இதழ்களை இணைத்து ஒரே இதழாக தயாரித்துள்ளோம். அதேபோல் சத்தியவனம் செப்டம்பர் – அக்டோபர் மற்றும் நவம்பர் – டிசம்பர் ஆகிய இதழ்களும் இணைந்து ஒரே இதழாக கூடுதல் பக்கங்களோடு வெளிவரும். அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து வழக்கம்போல் இருமாத இதழாக வெளிவரும் என்பதை பங்காளருக்குத் தெரியப்படுத்துகிறோம்.

நமது பங்காளர்கள், வாசகர்கள் குடும்பங்களிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சுகமடைய தொடர்ந்து வேண்டுதல் செய்கிறோம். ஒரு சிலர் அதிக பாதிப்புக்கு உள்ளானதை அறிந்து வேதனையடைந்தோம். நமது குடும்பங்களின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து வேண்டுதல் செய்கிறோம். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் வேலையின்மையினிமித்தமும் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானதினிமித்தமும் வருமானமின்றி பங்காளர்களில் அநேகர் கஷ்டப்படுவதை உணருகிறோம். உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திக்கும்படியாக பாரத்தோடு வேண்டுதல் செய்கிறோம்.

இவ்விதழில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு செய்திகளும் தங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்ற செய்தியை டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் பர்திமேயு என்ற குருடனின் சம்பவத்திலிருந்து விளக்குகிறார். கண்களைக் கர்த்தரை நோக்கி முழுமையாகத் திருப்புவோம் என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் கொரோனா கதைகளும் கோவில் கதவுகளும் என்ற தலைப்பில் வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்த குமார் அவர்களும் எழுதிய இக்காலத்திற்குரிய செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும் நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் மத்தியில் நாம் உறுதியாக நிற்பதைக் குறித்து போதகர் நாட் கிராப்போர்டு அவர்களும் காரியங்கள் ஆட்டம் காணும்போது என்ற தலைப்பில் டாக்டர் வாரன் வியர்ஸ்பி அவர்களும் எழுதிய செய்திகள் நமக்கு நல் ஆலோசனைகளைத் தருவதாயுள்ளது. தேவனுக்கு எதிரான புரட்சி என்ற தலைப்பில் சகோதரர் பிரேம் குமார் அவர்கள் பாபேல் கோபுரத்தைக் குறித்து எழுதிய வேத ஆராய்ச்சியும் இடம்பெற்றுள்ளது. வழக்கம்போல் இடம்பெறும் தொடர் செய்திகளும் இடம்பெற்றுள்ளது. தேவனுடைய மாறாத கிருபையும் பாதுகாப்பும் தங்களோடு இருப்பதாக!

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்