நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்?

Dr.உட்ரோ குரோல்
(மே-ஆகஸ்ட் 2020)

புனித பூமியான எருசலேமிலுள்ள எரிகோ பட்டணமானது இயேசுவோடும் கண்ணொளியற்ற பர்திமேயுவுடனும் தொடர்புடைய ஒரு முக்கியமான இடமாகும். இவ்வுலகமானது தன் கண்ணுக்குத் தெரிவதையே நம்புகிறது; ஆனால் இயேசுவோ எரிகோ பட்டணத்து குருடரின் வாழ்வில் வந்தபொழுது அதற்கு நேர்மாறனதே உண்மை என்று காட்டினார். நாம் விசுவாசிக்கும்பொழுது நம்மில் உள்ள குருட்டுத் தன்மையிலிருந்து குணமாகிறோம்.

“பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவை விட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான் (மாற்கு 10:46).

பஸ்கா பண்டிகை கொண்டாட எரிகோவை விட்டு எருசலேமுக்கு இயேசு சென்றபொழுது அநேக மக்கள் அவரோடு சென்றனர். அவர்கள் இயேசுவை அறிந்திருந்தனர். அவர் செய்த சில அற்புதங்களையும் கண்டிருந்தனர்; அவருடைய போதனைகளையும் கேட்டிருந்தனர். அவரைச் சுற்றிக் கூட்டமாக வந்தனர். எனவேதான் மாற்கு 10:1 “அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம் பண்ணினார்” என்று எழுதியுள்ளார். யோர்தானுக்கு அக்கரையில் அநேக மலைப்பிரதேசங்கள் உண்டு. அவை மோவாப் அம்மோன் தேசத்தைச் சார்ந்தவை.

இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி வந்தபொழுது யோர்தானுக்கு வந்தனர். எரிகோ என்பது ஒரு புறக்காவல் பகுதியாகும். அதுவே முதல் தற்காப்புப் பகுதியாகும். யோசுவா இப்பட்டணத்திற்குதான் தனது வேவுகாரர்களை அனுப்பினார்; இங்குதான் அவர்கள் ராகாப் என்ற பெண்ணைச் சந்தித்தனர். எரிகோவை விட்டு அவர்கள் அனுப்பிவிடப்பட்ட பொழுது அவர்கள் யோர்தான் நதிக்குச் செல்லவில்லை மாறாக, மலைக்குச் சென்று ஒளிந்து கொண்டார்கள். இந்த பட்டணத்தைச் சுற்றிதான் யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர்கள் சுற்றிவந்தனர்; கோட்டையின் அலங்கம் இடிந்து வழுந்தது அதனை ஜெயித்தார்கள்.

எரிகோவை நினைக்கும்பொழுது நம் எண்ணத்தில் தோன்றுவது யோசுவாவின் புகழ்பெற்ற இந்த யுத்தமே. ஆனால், எருசலேமுக்குச் சென்று கொண்டிருந்த இயேசுவை சந்தித்த இன்னொரு மனிதரையும் நாம் அவசியமாய் நினைக்க வேண்டும். பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவை விட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான் (மாற்கு 10:46).

பஸ்கா பண்டிகை வாரத்தில் எருசலேமுக்குச் செல்ல மக்கள் எரிகோவில் குழுமியிருந்தனர்; அந்த வழியருகே இந்த குருடன் அமர்ந்திருந்தான். ஒருவரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. மக்கள் கூட்டம் அவனைக் கடந்து சென்றது. அவன் விழியிழந்தவனாதலால் எந்த வேலையும் அவனால் செய்யமுடியாது. ஆகவே அவ்வழியே சென்ற மனிதர்களிடம் அவன் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய வாழ்வே அந்த வழியருகே கழிந்திருக்கும்.

மாற்கு எழுதும் பொழுது “எரிகோவை விட்டுப் புறப்படுகிறபோது பர்திமேயுவைச் சந்தித்தார்” (மாற்கு 10:1) என்கிறார். ஆனால் லூக்கா “அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது” என்றும் எழுதியுள்ளார் (லூக்கா 18:35). இது முரண்பாடாகத் தோன்றுகிறதல்லவா? ஒன்று – வேதபுத்தகம் தவறாக இருக்கவேண்டும் அல்லது நீங்கள் தவறாக இருக்கவேண்டும். இதை இவ்வாறு விளக்கலாம். அங்கு இரண்டு எரிகோ பட்டணங்கள் இருந்தன. ஒன்று பழைய எரிகோ. எனவே ஒரு நற்செய்தியாளரின் கண்ணோட்டத்தில் இயேசு பழைய எரிகோவிலிருந்து வெளியே சென்றார். மற்றொரு நற்செய்தியாளரின் பார்வையில் அவர் புதிய எரிகோவுக்குள் பிரவேசித்தார். இரண்டும் சரியானதே. இதில் முரண்பாடு எதுவும் இல்லை. இன்னும் விரிவாகக் கூறினால் ஏரோதின் காலத்தில் முதல் நூற்றாண்டிலிருந்தது பழைய எரிகோ; இது சவக்கடலின் அருகே 10 மைல் தெற்கே இருந்தது. பர்திமேயு வழியருகே உட்கார்ந்திருந்தான்.

“அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்து வரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். உடனே அவன் தன்மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்” (மாற்கு 10: 47-50).

அநேக வேளைகளில் நாம் வேதாகமத்தை மேலோட்டமாக வாசித்துவிடுகிறோம். ஆழ்ந்து வாசிப்பதில்லை. இயேசு வழியருகே அமர்ந்திருந்த பர்திமேயுவை தம்மிடம் அழைத்து வரச் சொன்னார். அவன் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபொழுது மற்றவர்கள் “அமைதியாயிரு” என்று அதட்டினார்கள். ஆனால் இயேசு அவனைக் கவனித்து “அவனை என்னிடத்தில்; அழைத்து வாருங்கள்” என்றார். உடனடியாக அவன் எழுந்து இயேசுவிடம் ஓடி வந்தான். அவன் விழியற்றவன், அவனால் இயேசுவைப் பார்க்க இயலவில்லை; ஆனால் அவர் சத்தத்தை கேட்டான். அத்திரளான ஜனங்களால் செய்யமுடியாததை தனக்கு இயேசுமாத்திரமே செய்யமுடியும் என்று நம்பினான். இதையே நாம் விசுவாசம் என்று அழைக்கிறோம்.

இந்த பர்திமேயு பார்வையில்லாதிருந்தும் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினான். எனவேதான்; அவர் வரும் வழியருகே உட்கார்ந்திருந்தான். இயேசு “அவனைத் தடை செய்யாதிருங்கள்; அவன்; என்னிடம் வரட்டும்; நான் அவனுடன் பேசுகிறேன்” என்று கூறி அவனை அழைத்தார். பர்திமேயு இயேசுவை, தாவீதின் குமாரன் என்று அழைத்தான். அவனுக்கு ஏற்கனவே இயேசுவைப்பற்றி சிறிது அறிந்திருந்தான். அவர்தான் மேசியா என்று நம்பினான். இதனை இயேசுவுக்கு மேசியா என்ற பட்டத்துக்குரிய தாவீதின் குமாரன் என்று அறிக்கையிட்டான். எனவேதான் இயேசு பயணம் செய்கிற போதகர் அல்லர்; அவர் தீர்க்கதரிசிகளில் ஒருவரும் அல்லர்; அவர் தாவீதின் குமாரன்; இந்த மேசியாவுக்காகவே யூதர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

இயேசு அவனைத் தம்மிடமாக வரச்சொன்னார். அவனும் எழுந்து இயேசுவிடம் சென்றான். அங்கு இருவருக்கும் இடையே ஓர் உரையாடல் நடைபெற்றது. அது முக்கியமான பாடங்களை நமக்குக் கற்றுத்தருகிறது.

“உடனே அவன் தன் மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” என்றார். அதற்கு அந்த குருடன்: “ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்” என்றான். இயேசு அவனை நோக்கி: “நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின் சென்றான் (மாற்கு 10:50,51).

இயேசு கலிலேயாவின் வடபகுதியிலிருந்து யோர்தான் வழியாக எருசலேமுக்கு பயணமாகிக்கொண்டிருந்தார். ஒரு குருடனை அந்த வழியருகே சந்தித்தார். அவனிடம் “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய்” என்று கேட்டார். இந்த வினா முக்கியமானது; அதற்குரிய விடையும் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். “என் வாழ்வின் முக்கியமான காரியம் நான் பார்வையடையவேண்டும்” என்று பதிலுரைத்தான்.

“உனக்கு பார்வையை மாத்திரமல்ல, அதை விட மேலானதையும் நான் தருகிறேன். உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். “என்னுடைய தொடுதலோ அற்புதமோ வேறு எதுவுமில்லை; நீ என்னை இன்னாரென்று விசுவாசிக்கும் சாதாரண விசுவாசமே உன்னை இரட்சித்தது.” பர்திமேயுவின் பார்வைக்குக் காரணம் மருத்துவ அறுவை சிகிச்சை அல்ல; அது இயேசுவை தாவீதின் குமாரன் என்று அறிக்கையிட்ட விசுவாசமே ஆகும்.

இச்சம்பவத்திலிருந்து நம்முடைய வாழ்வுக்கு நாம் மூன்று பாடங்களைக் கற்றுக் கொள்ளுகிறோம்.

1. நீங்கள் கண்ணால் பார்ப்பது இருதயத்தில் விசுவாசிப்பதற்கு உறுதிமொழியாகாது.

அநேக மக்கள் இயேசுவைப்பற்றி வாசிக்கிறார்கள். கண்களால் பார்த்தாலும் இருதயத்தால் அவரை விசுவாசிக்கவில்லை. அக்காரியங்களை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. அதை விசுவாசிப்பதில்லை; இவர்கள் ஆவிக்குரிய குருடர்கள். பர்திமேயு கண்களால் பார்க்கவில்லை; ஆனால் நம்பினான். அது அவனை முழுமையாக்கியது.

2. விசுவாசமில்லாமல் கண்களையுடையவர்களாய் இருப்பதைவிட குருடராய் விசுவாசத்துடன் இருப்பதே சிறந்தது.

பார்வையில்லாமல் நீங்கள் பரலோகம் சென்று விடலாம்; ஆனால் விசுவாசமில்லாமல் அங்கே செல்லமுடியாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று அப்.16:31ல் எழுதியுள்ளது. இது சரீரப் பார்வையல்ல; இயேசு தன்னைக் குறித்து கூறியவைகளை இருதயத்தில் விசுவாசிப்பதேயாகும்.

3. காண்பது விசுவாசமல்ல; விசுவாசமே பார்வையாகும்.

காண்பதே நம்பிக்கை என்று அநேகர் கூறக் கேட்டிருக்கிறேன்; அப்படியானால் பர்திமேயு எதையும் காணாமலே நம்பினான். எனவே இதன் வாயிலாக நாம் கற்றுக்கொள்வது, காண்பது விசுவாசமல்ல; விசுவாசமே பார்வையாகும்.

வழியருகே இருந்த அம்மனிதன் இயேசுவை நம்பினான். விசுவாசம் அவனை குணமாக்கிற்று. இயேசுவைப் பார்த்ததினால் அல்ல; அவரை நம்பினதே சுகமளித்தது. “உனக்கு பார்வையை மாத்திரமல்ல; அதைவிட மேலானதை நான் உனக்கு அருளுகிறேன்” என்று கூறி அவனுக்கு இரட்சிப்பையும் அளித்தார்.

இயேசு அவனுக்கு செவிசாய்த்திருக்க அவசியமில்லை; அநேகர் அவனுடன் நடந்திருக்க வேண்டும். இயேசுவை நோக்கி இவன் கூப்பிட்ட பொழுது இயேசு, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய்” என்று கேட்டார். இன்றும் இதனையே நம்மிடமும் அவர் அதே கேள்வியைக் கேட்க விழைகிறோம். இயேசு செய்வதை வேறு யாரும் செய்ய முடியாது. ஒருவேளை நாம் சரீரப்பிரகாரமாக ஊனமற்றவர்களாக இருக்கலாம். இயேசுவை நேரடியாகப் பார்க்க இயலாதவர்களாயும் இருக்கிறோம். நாமும் பர்திமேயுவைப்போலவே இருக்கிறோம். ஆனால் அவனுக்கிருந்த அந்த விசுவாசத்தை நாம் எப்படி பெற்றக் கொள்வது? இயேசுவின் சத்தத்தைக் கேட்டவுடனே அவன் அவரை நோக்கிக் கூப்பிட ஆரம்பித்தான். ஏனெனில், அவர் ஒருவரே அவனுக்கு உதவ முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான்.

அன்பானவர்களே, நம்மைநாமே ஆராய்வோம். இயேசுவின் சத்தம் என்பது தேவனுடைய வார்த்தையே! அவருடைய வார்த்தைகள் நமக்காக வேத புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை வாசிக்க வாசிக்க நாம் அவரைப்பற்றி பலவற்றை அறிந்துகொள்கிறோம். அநேக காரியங்களை அவர் நமக்கு வாக்களித்திருக்கிறார். ஆனால், வேதத்தை வாசிக்காததால் பலர் அதைப் பற்றி அறியாமலிருக்கிறார்கள்.

பர்திமேயுவின் விசுவாசத்தை நாம் பெற்றுக் கொண்டால் விசுவாசத்தின் உச்சியில் இருக்கிறோம். ஆனால் நாம் அங்கேயே இருக்க முடியாது. பள்ளத்தாக்குகளும் சமவெளிகளும் உண்டு. விசுவாசம் சமநிலையில் இருக்க நாம் என்ன செய்யவேண்டும்? உலகத்தின் சகல ராஜ்யங்களையும் பிசாசு இயேசுவுக்குக் காட்டினான். அவருடைய 40 நாள் உபவாசத்தில் கல்லுகளை அப்பங்களாகும்படி ஆலோசனை கொடுத்தான். விசுவாச மலையின் உச்சியிலோ அடிவாரத்திலோ சாத்தான் எங்கும் நம்மை சோதிப்பான். பர்திமேயுவைக் கடந்து சென்ற அநேகர் அவனை உதாசீனம் செய்தனர். ஆனால் இயேசு ஒருவர் மாத்திரமே “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய்?” என்று கேட்டார்.

இயேசு இந்த கேள்வியைக் கேட்கும்பொழுது நாமும் விசுவாசத்தோடு பதில் அளிப்போம். எந்த நிலையிலிருந்தாலும் விசுவாசத்தோடு வாழ்வதே முக்கியம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை


ஜார்ஜ் முல்லரின் வெற்றியின் இரகசியம்

முல்லரின் ஊழியத்துக்கான ஆரம்பத் துடிப்பை அநாதைகளின் நண்பரான ஃபிராங்க் என்பவர் கொடுத்தார்.

முன்னே தூஷிக்கிறவராயிருந்து மனமாற்ற மடைந்த ஜாண் நியூட்டனின் வாழ்க்கை வரலாறு, கர்த்தரின் செயல்பாடுகளைக் குறித்த தொகுப்பறிக்கையை அளித்தது.

1838ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஜியார்ஜ் விட்ஃபீல்டு என்பவரது வாழ்க்கை சரிதையைப் படிக்க ஆரம்பித்தார். மாபெரும் சுவிசேஷகரான விட்ஃபீல்டின் வரலாறு, முல்லரின் பொதுவான குணங்களை வடிவமைத்து, அவரது பிரசங்கத்திற்குப் புதிய வல்லமையைக் கொடுத்து, ஆத்துமாக்களுக்குப் பரவலான ஊழியம் செய்ய ஆசீர்வாதமாயிற்று. ஜியார்ஜ் விட்ஃபீல்டினுடைய வழக்கத்திற்கு மாறான ஜெபிக்கும் தன்மை மற்றும் முழங்காலில் நின்று வேதாகமத்தை வாசித்தல் ஆகிய இவ்விரண்டு காரியங்களும் முல்லருக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

அவர் அதன் பின்னர், முழங்காலில் பல மணி நேரங்கள் நின்று வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கினார். அப்படிப்பட்ட தியானம் மற்றும் தியானித்த வேதப்பகுதியைக் கொண்டு ஜெபித்த தன்மூலம் பெரிய ஆசீர்வாதத்தைக் கண்டார். அவரது ஈடு இணையில்லாத வெற்றிக்கும் காரணங்களாயின.


சிந்தியுங்கள்!

தேவனுக்காக வாழும் வாழ்வில் மிகச் சிறந்தது என்னவெனில் தேவனுடைய சித்தம் இன்னதென்று பகுத்தறியும் திறனாகும்.

சத்தியவசனம்