குணமாக்குதலும் விசுவாச ஜெபமும்

Dr.தியோடர் எச்.எஃப்.
(மே-ஆகஸ்ட் 2020)

அவன் பாவம் செய்திருப்பானானால்…

பிறவியிலேயே குருடனாய்ப் பிறந்தவனைப்போல (யோவா. 9) அநேகர் தங்கள் பாவங்களின் காரணமாகச் சுகவீனமடையவில்லை. ரோமர் 8: 28,29 வசனங்களை எப்போதும் நினைவுகூர வேண்டும். “தேவன் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்”. வியாதிகள் எல்லாம், தனிமனிதனின் பாவத்தால் உண்டாவதல்ல என்று யோவான் 11:4லும் காண்கிறோம். இயேசு லாசரு வியாதியாயிருக்கிறான் என்று கேள்விப்பட்டதும், கூறியது, “இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல், தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார்” என்றார்.

வியாதியாய் இருக்கிற ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பாவங்களினால் வியாதிப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் விசனத்துக்குரியது. தங்கள் வாழ்நாள் முழுவதுமே கண் பார்வையில்லாமல் இருந்தவர்கள் மிகச்சிறந்த கல்வித் தகுதிகள் பெற்று கிறிஸ்துவுக்கு வல்லமையுள்ள சாட்சிகளாக ஊழியம் செய்வதைக் கண்டிருக்கிறோம். அதேவேளையில் தங்கள் வாழ்நாளில் வியாதிகள் எதுவும் தாக்கப்படாமல் இருந்தும் மிகவும் துன்மார்க்க ஜீவியம் செய்துகொண்டிருப்பவர்களையே காண்கிறோம்.

ஒருவனிடத்தில் பாவம் இருத்தல், அவனுடைய வியாதி குணமாகுதல் ஆகிய இவை குறித்து இப்படி ஒரு கேள்வி எழலாம்: தன்னிடத்தில் அறிக்கை செய்யப்படாத பாவம் உள்ள ஒரு மனிதனுடைய வியாதியை தேவன் குணமாக்குவாரா? சற்றுமுன் நாம் யோவான் 5ம் அதிகாரத்தில் வரும் பெதஸ்தா குளத்தருகே இருந்த 38 வருட வியாதிக்காரன் குணமடைந்த அற்புதத்தைக் கண்டோம். அதில் அவனுடைய பாவம் குறித்து எதுவும் செய்யப்படு முன்னரே அவன் (வச-8) குணப்படுத்தப்பட்டுவிட்டான். ஆனால், 14ஆம் வசனத்தில் இயேசு அவனிடத்தில் “இனிப்பாவம் செய்யாதே இனிமேல் அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி பார்த்துக்கொள்” என்றும் குணப்படுத்தப்படும் முன் அவன் தன் பாவத்தை அறிக்கையிட்டதாக எதுவும் கூறப்படவில்லை. அவனிடத்தில் பாவம் இருந்தது என்பது தெரிகிறது. இயேசுவின் மூலம் அற்புத சுகம் பெற்றவன் இனிமேல் பாவம் செய்யாமல் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக மத்தேயு 17ஆம் அதிகாரத்தில் உள்ள ஒரு இளைஞனைக் காண்கிறோம். அவனுடைய தகப்பன் இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே என் மகனை உமது சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை நீர் அவனைக் குணப்படுத்தும்” (வச-15) என்றான். அந்த இளைஞன் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டான். இயேசு அவனிடமிருந்த பிசாசை அதட்டினார். உடனே அது அவனைவிட்டுப் புறப்பட்டது. அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான். இந்த நிகழ்ச்சியில் மன்னிக்கப்பட வேண்டிய பாவம் ஏதும் இருந்ததாகக் குறிப்பிடவில்லை. அந்த இளைஞனுடைய வயதும் தெரியவில்லை. வயது தெரிந்தால் அவன் பாவம் அறிந்தவனா, இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்த இரண்டு அற்புதங்களையும் நினைவிற் கொண்டு ஜெபத்தால் வியாதியஸ்தரைக் குணமாக்குகிறவர்கள், ஒருவன் குணமாகவில்லையானால் அதற்கு அவனுடைய பாவமே காரணம் என்று கூறக்கூடாது. பலவேளைகளில் இப்படிப்பட்ட ஊழியர்கள் வியாதியஸ்தனிடம் அறிக்கை செய்யப்படாத பாவம் இருக்கலாம் என்றும் அவனிடம் விசுவாசம் இல்லை என்றும் கூறுவார்கள்.

புதிய ஏற்பாட்டில் குணமாக்கும் வரம் ஊழியர்களிடம் இருக்கும் வியாதியஸ்தனிடம் அது கிரியை செய்யும். யாக்கோபு 5ஆம் அதிகாரம் கூறுகிறபடி சபை மூப்பர்கள் செய்யும் விசுவாசம் உள்ள ஜெபம் பிணியாளியை குணப்படுத்தும். பிணியாளியிடம் உள்ள விசுவாசம் அல்ல, ஜெபிக்கும் மூப்பர்களின் விசுவாசமே அங்கு கிரியை செய்கிறது. எனவே விசுவாசக் குறைவைப்பற்றிப் பேசவேண்டுமானால் குணமாக்குபவரின் விசுவாசமே தவிர, பிணியாளியின் விசுவாசமே அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு விசுவாசி ஜெபிக்கும்போது தன்னிடம் அறிக்கை செய்யப்படாத பாவம் உள்ளதா? என்று சோதித்து அறியவேண்டும். பின்னர் அவன் ஜெபிக்கும்போது, தேவன் தமக்கு மகிமையும், விசுவாசிக்கு நன்மையும் தரும் காரியங்களைத்தான் செய்வார்கள் என்று நம்பவேண்டும். ஒரு விசுவாசி “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்போது தேவனுடைய சித்தம் செய்யப்படும்படி விட்டுவிடவேண்டும். தேவன் அந்தப் பிணியாளியைக் குணப்படுத்தலாம். குணப்படுத்தாமலும் இருக்கலாம். அது அவர் சித்தம். யாக்கோபு கூறுகிறார்: “அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்” (5:15).

ஒருவனிடத்தில் பாவம் இருந்தால் அது ஆண்டவரிடம் அறிக்கை செய்யப்பட வேண்டும் ஆண்டவர் நமக்கு ஒரு நல்ல வாக்குதத்தம் தந்திருக்கிறார்.

”நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9). இங்கேயும் “அறிக்கையிட்டால்” என்னும் சொல் உள்ளது. தேவன் நமது பாவத்தை மன்னிப்பதற்குமுன் நாம் அறிக்கையிட வேண்டும் என்பது நிபந்தனைக்குட்பட்ட ஒரு அவசியமாயிருக்கிறது.

மனமாற்றம் ஏற்பட்டு, மனந்திரும்பி, அதன் பின்புதான் பாவ அறிக்கை செய்யப்படும். தாவீது செய்த பயங்கரமான பாவத்தை அவன் உணர்ந்து மனந்திரும்பிய பின்புதான் 51ம் சங்கீதத்தில் பாவ அறிக்கை செய்கிறான். அவன் தன்பாவம் குறித்து மனஸ்தாபப்பட்டு, “என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொதும் எனக்கு முன்பாக நிற்கிறது” (சங். 51:2,3).

32ஆம் சங்கீதமும் இதே பாவத்தைத்தான் குறிக்கிறது. தாவீது அது குறித்த மிகுந்த வேதனையால் மெளனமாயிருக்கிறான். தாவீது இவ்வாறு கூறுகிறான்: (சங். 32:3-5):

வசனம் 3: நான் அடக்கி வைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

வசனம் 4: இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ண கால வறட்சிபோல் வறண்டு போயிற்று.

வசனம் 5: நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என்பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.

இங்கே பாவ அறிக்கை, பாவமன்னிப்பு ஆகிய வைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். ஒருவன் இரட்சிப்படையும்போது செய்யப்படும் பாவ அறிக்கை இதுவல்ல. அது வித்தியாசமானது. அது ஒருவன் இயேசுவை இரட்சகர் என்று அறிக்கை செய்து அவர்மேல் பூரண விசுவாசம் கொள்ளும்போது ஏற்படுகிறது. 1 யோவான் 1:9இல் கூறப்படும் அறிக்கை பாவ அறிக்கையாகும். இது பரலோக பிதாவோடு நம்முடைய உறவு புதுப்பிக்கப்படுவதற்காக செய்யப்படுகிறது.

ஒருவர் மறுபடியும் பிறந்த பின்னர் தனிநபர்கள் செய்யும் பாவங்களால் தேவனோடுள்ள உறவு முறிக்கப்படுவதில்லை. தேவனோடுள்ள ஐக்கியம் பாவத்தால் முறிந்துவிடும். அந்தப் பாவம் அறிக்கையிடப்பட்டு மன்னிப்புப் பெறும்போது, மீண்டும் ஐக்கியம் புதுப்பிக்கப்பட்டுவிடும்.

தனிநபர்கள் தங்கள் பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்வதைக் குறித்துப்பேசிய பின்பாக யாக்கோபு தொடர்ந்து வசனம்-16இல் இப்படிக் கூறுகிறார்:

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.”

இந்த வசனத்தில் மூன்று முக்கிய காரியங்கள் இருப்பதைக் கவனியுங்கள்:

1. உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிடுங்கள்.

2. ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்.

3. நீங்கள் சொஸ்தமாகும்படிக்கு குற்றங்களை அறிக்கையிடுங்கள்.

யாக்கோபு 5:16இல் இன்னும் குணமாக்குதலைப்பற்றி விவாதிக்கப்படுகிறது. “அறிக்கை செய்தல்” என்று பொருள்கொள்ளும் கிரேக்கச் சொல்லின் பொருள் “ஒத்துக்கொள்ளுதல் அல்லது சம்மதித்தல்” என்பதாகும்.

ஒரு விசுவாசி ஒரு பாவத்தைச் செய்துவிடும்போது அவன் தேவனிடத்தில் “ஆண்டவரே, நான் செய்த இந்தக் காரியம் ஒரு பாவம் என்று ஒத்துக்கொள்ளுகிறேன்” என்று கூற வேண்டும்.

“பாவம்” என்பதற்குரிய கிரேக்கச் சொல்லின் பொருள் சாதாரணமாகப் பாவத்தைக் குறிக்கிறது.

ஒரு சாதாரண வேதாகமக் கொள்கை நீதி. 28:13இல் உள்ளது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ, இரக்கம் பெறுவான்”.

ஒருவருக்கொருவர் பாவத்தை அறிக்கை செய்தல் என்பதில் சிலர் ஒருவர் செய்த தனியான இரகசிய பாவங்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் யாக் கோபு 5:16ஆம் வசனம் இப்படிப்பட்ட விளக்கத்தை ஒப்புக்கொள்ளுவதில்லை.

குற்றத்தின் தன்மை அறிக்கையிடுவதைத் தீர்மானிக்கட்டும். ஒருவன் செய்த பாவம் ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிரானதாக இருந்தால், அவன் நேராக அந்த நபரிடம் சென்று தான் செய்த குற்றத்தை அறிக்கையிட்டு வருத்தம் தெரிவித்து ஒப்புரவாகிவிடலாம். மற்றபடி அவன் சபை நடுவிலோ மற்றவர்கள் முன்னிலையிலோ, விசுவாசிகள் கூட்டத்திலோ நின்று, நான் இன்னாருக்கெதிராகப் பாவம் செய்துவிட்டேன் என்று அறிக்கை செய்யத் தேவையில்லை.

மத்.5:23,24 இப்படிக் கூறுகிறது: “நீ பலிபீடத் தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால் அங்கே தானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து”.

ஒரு குழுவினருக்கு எதிராக ஒரு பாவம் செய்யப்பட்டிருக்குமானால், அது அந்த குழுவினருக்கு முன்பாக அறிக்கை செய்யப்பட்டு மன்னிப்புப் பெறப்பட வேண்டும். ஒருவன் செய்த பாவம் ஒரு தனிமனி தனுக்கு எதிராகவும் அல்ல, ஒரு குழுவுக்கு எதிராகவும் அல்ல; தேவனுக்கெதிராக நேரடியாகச் செய்யப்பட்டதாக இருந்தால் அவன் நேரடியாக தேவனிடம்தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.

பொதுவாகக் கூறினால் எல்லாப்பாவங்களும் தேவனுக்கு எதிராகச் செய்யப்படுவதே. ஆனால் இங்கே தேவனுக்கெதிராகச் செய்யப்படும் பாவத்தையும் மற்றவர்களுக்கெதிராகச் செய்யப்படும் பாவத்தையும் பிரித்துக் காட்டுகிறோம்.

யாக்கோபு 5:16 வசனத்தின்படி பாவம் செய்த வியாதிப்பட்டவன் அந்த மூப்பரிகளிடம் பாவ அறிக்கை செய்ய வேண்டியதில்லை. அவன் அந்த மூப்பர்கள் கெதிராகப் பாவம் செய்தால் அவர்களிடம் அறிக்கை செய்யவேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தைச் சிலர் புரட்டித் தவறான விளக்கம் கொடுக்கிறார்கள். வியாதிப்பட்டவன் தான் செய்த சகல பாவங்களையும் தன் போதகரிடம் அறிக்கை செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படியானால், அந்த போதகரும் தன்னுடைய பாவங்களை சாதாரண மனிதர்களிடம் அறிக்கை செய்யவேண்டும். ஏனென்றால் “நீங்கள் ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது (வச16). இது ஒருவருக்கொருவர் செய்யும் அறிக்கை என்று தெரிகிறது. நாம் நம் பாவங்களை தேவனுக்கு அறிக்கையிட வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இந்த இடத்தில், தேவனிடத்தில் அறிக்கை செய்வதோடுகூட, மனிதரிடத்திலும் அறிக்கை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பாவ அறிக்கையானது தேவனிடத்தில் எங்கள் பாவங்களுக்காக ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்பதற்காக அல்ல. ஏனெனில் இயேசு நமக்காகப் பாவப்பரிகாரம் செய்துவிட்டார். இயேசு நம் பாவங்களைச் சுமந்து, சிலுவையில் தொங்கி உயிர்த்ததின் மூலம் நம்மை விடுவித்துவிட்டார். நாம் அவரை நம் சொந்த இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் போது நமக்கு அவரால் சம்பாதிக்கப்பட்ட இரட்சிப்பு கிடைக்கிறது. இங்கே நாம் செய்யும் அறிக்கையின் மூலம் தேவனுடனும், உலகில் ஒருவருக்கொருவருடனும் தொடர்புகொள்ளுகிறோம்.

நாம் ஒருவருக்கொருவர் பாவ அறிக்கை செய்யாமலிருந்தால் நமக்குள் ஐக்கியம் இருக்காது நம்மில் இருக்கும் பாவம் தடையாய் இருக்கும் 1யோவான் 1:6,7 வசனங்களில், இப்படி வாசிக்கிறோம். “நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்”.

நமக்கு தேவனோடுள்ள ஐக்கியத்தை நம்முடைய பாவம் முறித்துவிடுகிறது அதனால்தான் சங்கீதக்காரனாகிய தாவீது சங்.66:18இல் இப்படிக் கூறுகிறார்: “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார்”. மற்ற விசுவாசிகளிடமும் நமக்குள்ள ஐக்கியத்தையும் பாவம் முறித்து விடுகிறது. அதனால்தான் பவுல் இப்படிக் கூறுகிறார்: “இதனால் நான் தேவனுக்கும், மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்”. இதை வேறுவிதமாகக் கூறினால், “பவுல் தன் பாவங்களை தேவனிடமும் மற்ற மனிதர்களிடமும் அறிக்கை செய்து வாழ்ந்தார்” எனலாம்.

பாவ அறிக்கை செய்தல் எப்போதும் வல்லமையான பாவத்தடையாக அமைகிறது. உதாரணமாக ஒருவன் ஒரு பொய் கூறினால், அவன் அதை உணர்ந்துவிட்டானானால், அவன் யாரிடம் பொய் கூறினானோ, அந்த ஆளிடம் சென்று தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மனஸ்தாபப்பட்டு சமாதானம் செய்துகொள்ளுவானானால், அதன் பின் எந்த சந்தர்பத்திலும் பொய்கூற சந்தர்ப்பம் ஏற்பட்டால் தயங்குவான். ஒருமுறைக்கு இரு முறை சிந்திப்பான்.

தன் பாவங்களை அறிக்கை செய்வது கடினமான காரியம் ஆனால் அந்தக் கஷ்டத்தில் நன்மைக்குரிய வல்லமை இருக்கிறது. ஆனால், நாம் ஒருவருக்கு எதிராக ஒரு பாவம் செய்த நிலையில் நாம் அதை உணர்ந்து அவரிடம் சென்று அந்தத் தவறைக் கூறி அறிக்கையிட்டு, அவருடைய மன்னிப்பைப் பெற்று, இருவரும் சமாதானமாகி இருவர் மனதிலும் ஒருவர் போலாகுவர். அவர்களிடம் இருந்த வெறுப்பு, விரோதம், பகைமை ஆகியவை மறைந்து ஐக்கியம் தெளிவாகிறது.

ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்:

பாவ அறிக்கை செய்தால்மட்டும் போதாது அதோடுகூட ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண் ணவும் வேண்டும் (யாக்.5:16).

காயப்படுத்தினவனும், காயப்பட்டவனும் ஒரு வருக்காக ஒருவர் ஜெபம் பண்ணவேண்டும், இப்படிப்பட்ட ஜெபம் இருதயங்களை இணைக்கும். இந்தப் பாவ அறிக்கை இருக்கும் இடங்களில் பகை, வெறுப்பு, விரோதம், தவறான கருத்துக்கள், காயங்கள் (உடல், மனம்) ஆகியவையெல்லாம் மறைந்துவிடும். அங்கு ஒற்றுமையும் அன்பும் ஐக்கியமும் சமாதானமும் ஏற்படும்.

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்


காலதாமதம்

எலிசா கிரே என்பவரை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவரைப்பற்றித் தெரிந்திருக்க முடியாது. ஆனால் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்பவரை உங்களுக்குத் தெரியும் என்று நான் நிச்சயமாக அறிவேன். அவர்தான் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்.

எலிசா கிரே என்பவர் சிக்காகோவைச் சேர்ந்த ஒரு மின்பொறியாளர். இவர், தான் கண்டுபிடித்த தொலைபேசியைப் பதிவு செய்து, உரிமம் பெறுவதற்காக அலெக்சாண்டர் கிரஹாம் பெல் விண்ணப்பித்து இரண்டு மணி நேரம் கடந்தபின், தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். வெறும் இரண்டு மணி நேரதாமதம் எலிசா கிரே என்பவருக்குப் பெரும் புகழையும், திரண்ட சொத்தையும் இழக்கும் நிலையை ஏற்படுத்தியது.

பிரசங்கி புத்தகம் காலதாமதம் செய்யக் கூடாது என்று நமக்குப் போதிக்கிறது. “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ அதை உன் பெலத்தோடே செய்”. இந்த ஞான முத்தில் அவசரம்’ தொனிக்கிறது. ஏனெனில் “நாளைய தினம் நிச்சயமற்றது” என்று பலர் கண்டுபிடித்துள்ளனர்.

தேவன் ஒரு வேலையைச் செய்ய நம்மை அழைத்தால் அதை உடனே, நல்ல முறையில் செய்து முடிக்கவேண்டும்.

ஆண்டவர் உங்களுக்குச் செய்யக் கொடுக்கும் பணியில் உங்கள் அனைத்துத் திறன்களையும் பயன்படுத்துங்கள்.

உங்கள் கரங்களில் ஆண்டவர் ஒப்படைத்துள்ள அனைத்தையும் தாமதமின்றிப் பயன்படுத்துங்கள்.

எதையும் பயன்படுத்தாமல் வைத்து வைக்காதேயுங்கள்.

• டாக்டர் உட்ரோ குரோல்

சத்தியவசனம்