கண்களைக் கர்த்தரை நோக்கி முழுமையாகத் திருப்புவோம்!

சகோதரி சாந்தி பொன்னு
(மே-ஆகஸ்ட் 2020)

வடதுருவத்தில் வாழுகின்ற கடல் பறவைகளைப்பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இது. இந்தப் பறவையினம் கடலோரத்திலுள்ள செங்குத்தான பாறைகளில் வசிக்கின்றனவாம். ஆயிரக்கணக்கான பறவைகள் இந்தப் பகுதிகளில் வந்து ஒன்றுகூடுமாம். இடம் மிக நெருக்கடியாக இருப்பதால், பெண்ணினப் பறவைகள் தங்கள் முட்டைகளை ஒரு நீண்ட வரிசையில் ஒன்றிற்குப் பக்கத்தில் ஒன்றாக இடுமாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு நீண்ட வரிசையில் இந்த முட்டைகள் இருந்தாலும், அவை ஒரேமாதிரியே காட்சி தந்தாலும், ஒவ்வொரு தாய்ப்பறவையும் தான் இட்ட தன் முட்டை எது என்பதைக் கண்டுபிடிக்குமாம். இப்பறவை இனத்தைக் குறித்து ஆராய்ச்சி செய்தவர்கள் வெளியிட்ட தகவல் இன்னும் ஆச்சரியத்தைத் தருகிறதாய் இருக்கிறது. அதாவது, ஒரு முட்டை சற்று விலகித் தூரத்துக்குத் தள்ளிப்போய் விட்டால்கூட அந்த முட்டைக்குரிய தாய்ப்பறவை அதைக் கண்டுபிடித்து, அது முதல் இருந்த இடத்திற்கே எப்படியோ கொண்டுவந்து சேர்த்துவிடுமாம். இது எவ்வளவு ஆச்சரியம்! இந்தச் சிறிய பறவையினத்திலேயே இத்தனை கரிசனை கொண்டுள்ள தேவன் நம்மில் எவ்வளவு கரிசனையாயிருப்பார்!

இதனை வாசித்தபோது பவுலடியாரின் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள்; அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில் கிடைக்கும்படி முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென் (ரோமர் 11:33-36).

2020ஆம் ஆண்டு பிறந்தபோது, இந்த ஆண்டில் ஒரு பெரிய திகைப்பு காத்திருக்கிறது; முழு உலகமுமே கலக்கமடையும், லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவர், ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து மடிந்துபோவர் என்பதையெல்லாம் யார் நினைத்திருந்தோம்! முன்னே சொல்லப்பட்டது என்று சிலர் சில காரியங்களை நினைவுபடுத்தியிருந்தாலும், பாடுகள் உண்டு என்பதை நாம் தலையறிவில் அறிந்திருந்தாலும், இந்த ஆண்டு இப்படியாகும் என்று வருட ஆரம்பத்தில் நாம் நினைத்ததில்லை. இன்னமும் மோதியடித்துக் கொண்டிருக்கின்ற இந்த அலையிலிருந்து இன்னமும் இந்த உலகம் மீளவில்லை. பல மரண ஓலங்கள், பல வேதனை சம்பவங்கள், நாடுகளுக்கிடையே பலத்த முறுகல்கள், தீவிரக் கண்டுபிடிப் புகள், கண்காணிப்புகள், முன்னெச்சரிக்கைகள், முடக்கல்கள், தனிமைப்படுத்தல்கள் என்று எத்தனை எத்தனை!

இத்தனை முயற்சிகள் நடந்தும், இந்த உலகத்தைச் சூழ ஆரம்பித்திருக்கின்ற கார் முகில் அகன்ற பாடில்லை. இனி இப்படித்தானோ? இந்த வைரஸ் ஒரு பக்கம், நாம் ஒரு பக்கம் என்றுதான் வாழ வேண்டுமோ?

சாகிறவன் சாக, பிழைக்கிறவன் பிழைக்கட்டுமோ? ஆரம்பத்தில் இந்தத் தொற்றால் ஏற்பட்ட பயம், அங்கலாய்ப்பு, கலக்கம், திகில் எல்லாமே இன்று பழகிப்போய்விட்ட நிலை உருவாகிவிட்டது. ஆனால், குழப்பமும், அழிவும் தொடரத்தான் செய்கின்றன.

இன்னொரு பக்கத்தில் இந்த நிலை எப்போ மாறும் என்ற கணக்கீடுகள் பல. மருத்துவ விஞ்ஞானம் தடை மருந்துக்காகப் போராடுகிறது.

இன்னொரு பக்கத்தில், இயேசுகிறிஸ்து பரத்துக்கு ஏறியபோதே ஆரம்பித்துவிட்ட கடைசிக் காலத்தை மறந்து, “இதுதான் கடைசிக்காலம்” என்று எத்தனை அறிக்கைகள்! அதே சமயம், மனிதம் மாறியதா என்றால், அதுதான் இல்லை. சண்டைகளும், யுத்த மேகங்களும் ஒருபுறம்; மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு விரிசல் அதிகரிக்குமளவுக்கு கோபம் மூர்க்கம், சண்டை, பிரிவு, பொய், களவு, கொலை என்று எல்லாமே அதிகரித்துவிட்டது எனலாம். குடும்பங்கள் சீரழிகின்றன. தேவன் படைத்த அற்புத உறவுகள் உலகறிய கேலிக்கூத்தாகிவிட்டது; அக்கிரமம் பெருகிவிட்டது.

இன்னொரு புறத்தில், தேவனுடைய வார்த்தைகள் புரட்டப்படுவதும், ஏமாற்றுக்காரரினதும், கள்ளப் போதகர்களினதும், கள்ளத் தீர்க்கதரிசிகளினதும் நடவடிக்கைகளை எப்படி விபரிக்க!

அழிவு எப்போ வரும், மரணம் எப்போ நிகழும், அடுத்த நிமிடம் என்னவாகும் எதுவுமே தெரியாத நிலையிலும் மனிதன் சமாதானமின்றித் தவிப்பது ஏன்?

கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்!

இந்த இக்கட்டான சூழலில், தேவ பிள்ளைகள் நமது காரியம் என்னவென்று கேட்பதுண்டு. இந்த இடத்திலே பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய ஒரு வார்த்தையை நினைவுக்குக் கொண்டு வருவோம். “ஆகிலும், தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது” (2தீமோ.2:19). இங்கே ஒரு காரியத்தைக் கவனித்தீர்களா? “கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்”. “நான் அவைகளை அறிந்திருக்கிறேன்” (யோவா.10:27) என்று இயேசுவும் சொன்னார். நம்மை அறிந்திருக்கிற தேவனை நாம் எவ்வளவாக அறிந்திருக்கிறோம்? அதற்காக எவ்வளவு முயற்சிக்கிறோம்?

ஆம், என்ன வந்தாலும், எது நேர்ந்தாலும் கர்த்தர், நமது பரம தகப்பன், தமது பிள்ளைகளை அவ்வளவு நெருக்கமாக அறிந்திருக்கிறார், நம்முடைய ஒவ்வொரு சிந்தனை, உணர்வு, நாம் எடுக்கின்ற தீர்மானங்கள், நமது கற்பனைகளைக்கூட அவர் அறிந்திருப்பதுமன்றி, அவற்றை உற்றுக் கவனிக்கிறார். நாம் கண் விழிக்கும் நேரம் தொடங்கி தூங்குமளவும் அவர் நம் ஒவ்வொருவரிலும் தனிப்பட்ட கரிசனை கொண்டிருக்கிறார். இந்த சிந்தனையில் நனைந்த தாவீது, “இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது” (சங்.139:6) என்று எழுதுகிறார். அந்த கடற்பறவைகளைப் பாருங்கள். ஒரு சிறிய பறவைக்குள் இத்தனை ஞான அறிவை வைத்த தேவனுக்கு இன்று தமது பிள்ளைகளுக்கு என்ன நடக்கிறதென்பது தெரியாதா?

தேவனுடைய ஆழங்களை அறிந்தவன் யார்?

சிருஷ்டிப்பின் ஆழங்களைச் சரியாகப் புரிந்து கொண்டவர்தான் யார்? ஆதியாகமம் முதல் இரண்டு அதிகாரங்களை துல்லியமாக விளங்க வைக்கக்கூடியவர் யார்? ஆதியிலே தேவன் வானத்தையும் (வானங்கள் – Heavens), பூமியையும் (Earth) சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் (ஆதி.1:1,2). இங்கே, இந்த ஜலம் எங்கிருந்து வந்தது? தேவன் ஜலத்தை வேறாகச் சிருஷ்டித்தாக இல்லை. ஜலம் பூமியின் ஒரு அம்சமாகத் தெரிகிறது. பூமியின்மீது புரண்டு கொண்டிருந்த இந்த ஜலத்தைத்தான் தேவன், இரண்டாம் நாள் சிருஷ்டிப்பிலே மேலும் கீழுமாகப் பிரித்து நடுவில் ஆகாய விரிவை (Atmosphere) உண்டாக்கினார் என்று பார்க்கிறோம். இந்தப் பிரபஞ்சம் எத்தனை ஆச்சரியமானது! நமது கண்கள் காணாத இந்தப் பால்வெளியில் கணக்கற்ற நட்சத்திர மண்டலங்கள் குடும்பம் குடும்பமாகச் சுற்றி சுற்றிவருகின்றன. அதில் ஒன்றான சூரிய குடும்பத்தில் ஒரு அம்சம்தான் நாம் வாழும் இந்தப் பூமியாகும்.

இந்த அண்டசராசரத்தையே யாராலும் முற்றாய் ஆராய்ந்தறிய முடியாதிருக்க, அதைச் சிருஷ் டித்து ஆளுகை செய்கின்ற தேவனுக்கு முன்பாக யாரால் தலை நிமிர்ந்து நிற்கத்தான் முடியும்? தனக்கு நேர்ந்த ஆறாத் துயரத்துடன் போராடிக் கொண்டிருந்த யோபு எழுப்பிய ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்காமல், யோபுவுக்கு நேராக, தமது கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார் தேவன்.

“நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டு வந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? …நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு, இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்ற நான் சொல்லுகிற போதும் நீ எங்கேயிருந்தாய்?” (யோபு 38:4-11).

வானங்களுக்கு மேலாக உயர்ந்தவர், இந்தப் பிரபஞ்சத்தை ஆளுகை செய்கிறவர், வானத்தை சிங்காசனமாகவும் பூமியைப் பாதபடியாகவும் கொண்டிருக்கிறவர், தம்முடையவர்களைப் பெயர் பெயராக, முற்றுமாக அறிந்திருக்கிற தேவன் நமக்கிருக்க, நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? இந்த மகத்துவமான தேவனோடு நாம் என்ன செய்கிறோம்? எத்தனை கேள்விகள்? எத்தனை முறுமுறுப்புகள்? ஏதோ அன்றாட ஜெபங்களும் வேதவாசிப்புகளும் தொடர்ந்தாலும், நமது சிந்தனை, நோக்கம், செயற்பாடுகள் எதை நோக்கி இருக்கின்றன என்பதை உண்மை உள்ளத்துடன் சிந்திப்போம். இவை எல்லாம் ஒரு புறத்தில் இருக்க, யாராலும் எதனாலும் சங்கரிக்க முடியாத பாவத்தின் கோரப்பிடியிலிருந்து நம்மை மீட்பதற்காகத் தம்முடைய ஒரே பேறான குமாரனையே தந்த தேவன், இந்த அநித்திய உலகக் காரியங்களின் மத்தியில் நமது வாழ்வில் தமது வல்லமையை விளங்கவைக்கத் தாமதிப்பாரோ?

கண்களைத் திருப்புவோம்

இந்த தேவனை விசுவாசிக்கின்ற, ஆராதிக்கின்ற நாம், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற நாம் நமது கண்களை எங்கே வைத்திருக்கிறோம்? விழுந்துபட்ட இந்த உலகத்தில் எதுவும் நடக்கும்; என்னவும் ஆகும். இப்போ ஒரு வைரஸ்; இனி அடுத்தது என்னவாகும் என்று யார் அறிவார். ஆம், இயேசு சொன்ன கடைசிக்கால அடையாளங்கள் இன்று மாத்திரமா? இயேசுவின் வருகையைப்பற்றி எழுதிய பவுல், அவர் வரும்போது, “பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக” என்று அன்றைக்கே கடைசிக் காலத்தைக் குறித்து எழுதிவிட்டார். இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக எத்தனை அடையாளங்கள் நம்மை எச்சரித்துவிட்டன. ஆனால், நாமோ நிர்விசாரிகளாக, ஒவ்வொரு பிரச்சனைகள் நம்மைப் பயமுறுத்தும்போதும் பயமடைந்து, பின்னர் அதை மறந்து அல்லது ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, எவ்வித மாற்றமுமின்றி நம் வழிகளில் நடந்து கொண்டிருக்கிறோம் என்றால் மிகையாகாது. ஆனால், ஒரு வித்தியாசத்தை நாம் உணரலாம். இந்த அடையாளங்கள் இன்று ஒன்றுக்கொன்று குறுகிய இடைவெளிகளில், விநோதமான விதங்களில், எதிர்பாராத நேரங்களில் மனித குலத்தைத் தாக்கிக்கொண்டிருக்கின்றன.

ஆகவே, கர்த்தருடைய பிள்ளைகள் நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். (இதுதான் நான் உணர்த்தப்பட்ட காரியம்.) “நமது பார்வை, சிந்தனை, நோக்கம், செயல்கள்” யாவையும் தேவனை நோக்கித் திருப்புவோமாக. பலவித குழப்பங்களில் சிக்கித் தவித்த பல தேவ பிள்ளைகள், இறுதியில் கர்த்தருடைய ஆலயத்திலும், கர்த்தருடைய பிரசன்னத்திலும் தெளிவு பெற்ற ஏராளமான சம்பவங்கள் பரிசுத்த வேதாகமத்தில் உண்டு. தேவ பிரசன்னம் ஒன்றே யாவுக்கும் பதிலாகும்.

ஆகவே, நமது கண்களைத் தேவனை நோக்கித் திருப்புவோம். பிரச்சனைகள் குழப்பங்கள் தொல்லைகள் ஒன்றுமாறி ஒன்று வரத்தான் போகிறது. சோதனைகள் நிச்சயம் நம்மைச் சூழத்தான் போகிறது. இந்த நிலையில். நாம் அவற்றையே நோக்கிக்கொண்டு, அவற்றையே சிந்தித்துக்கொண்டு, அவற்றுக்கே முக்கியத்தும் கொடுத்து, அவற்றுக்குள் மூழ்கிவிடாதபடி எச்சரிக்கையாக இருப்போமாக. அதே சமயம், நிர்விசாரிகளாக மனம் போனபடி வாழ்வதை நிறுத்துவோமாக. நாம் செய்ய வேண்டியவற்றைச் சரியாகச் செய்வோம். ஆரோக்கியத்திற்காக கடைபிடிக்க வேண்டியவைகளைச் சரியாகப் பின்பற்றுவோம். உணவு உண்பதில் கவனம் செலுத்துவோம். பிறருடனான உறவில் அவதானமாக இருப்போம். இவை நமது ஆரோக்கியத்திற்கு அவசியம்.

இவற்றுக்கு மேலாக, நமது கண்களைத் தேவனுக்கு நேராக, அவருக்கு நேராக மாத்திரமே திருப்புவோம். அதுவே ஞானமான செயல். கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறென்ன வேண்டும்? கர்த்தரும் நம்மிடம் எதிர்பார்ப்பது அது ஒன்றைத்தானே! கர்த்தருடைய வார்த்தைக்கு நேராக நாம் பூரணமாகத் திரும்பும்போது, சகல கேள்விகளுக்கும், சகல பிரச்சனைகளுக்கும், இனி வரப்போகும் சகல பயங்கரத்துக்கும்கூட நிச்சயம் பதில் மாத்திரமல்ல, தப்பித்துக்கொள்ளும் வழியும் கிடைக்கும். “நீங்கள் உண்மையாகவே சமாதானமாக இருக்கிறீர்களா?” என்று ஒருவர் கேட்டார். “உலகமும், அது கொண்டு வருகின்ற தீவினைகளும் நமது சரீரத்தைத்தான் தாக்கும். கர்த்தருக்குள் வாழுகின்ற ஒருவனுடைய ஆத்துமாவை எதுவும் அசைக்கமுடியாதல்லவா!”

ஆகவே, நாம் செய்யவேண்டியது ஒன்று தான். “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள். ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன். பூமியிலே உயர்ந்திருப்பேன்” என்ற தேவ வார்த்தைப்படி கர்த்தருக்குள் அமர்ந்திருப்போம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். “அமர்ந்திரு” என்றால் கர்த்தருக்குள் சமாதானமாக, வெளியே அலை மோதியடித்தாலும் அமைதியாக இருந்து, நமது காரியங்களைச் சரியாக நடத்துவோம். அந்தந்த வேளையில் அந்தந்தக் காரியங்களைக் கர்த்தர் நேர்த்தியாய் நடத்துவார் என்று வேதம் வாக்களித்திருக்கிறது. மரணம்தான் நேர்ந்தாலும், நமது பரம தகப்பன் நம்முடன் இருக்கிறார். நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத தனியேயிருக்கும்படி விடவில்லை (யோவா.8:29) என்ற இயேசுவின் வழியைத் தெரிந்தெடுப்போமாக.

அரசாங்கத்துக்கும், வைத்தியத்துறைக்கும் கீழ்ப்படிவது நமது கடமை. ஆனால், நமது பார்வை தேவனை நோக்கித் திரும்பட்டும். அநியாயங்களைவிட்டு விலகி, தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு, அவருக்குப் பிரியமானதைச் செய்து, நம்மைக் சூழ்ந்திருக்கிறவர்களுக்கு ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் வாழுவோம். மிகுதியைத் தேவன் பார்த்துக்கொள்வார்.

இந்த தேவனே என்றென்றைக்கு சதாகாலங்களிலும் நமது தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் (சங்.48;114). ஆமென்.


உங்களுக்குத் தெரியுமா?

வார்த்தைகளினூடாக செய்யும் பிரசங்கத்தைவிட வாழ்க்கையினூடாக செய்யும் பிரசங்கத்திற்கே வல்லமை அதிகம்!

சத்தியவசனம்