கொரோனா கதைகளும் கோவில் கதவுகளும்

எம்.எஸ்.வசந்தகுமார்
(மே-ஆகஸ்ட் 2020)

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. ஆனால், இன்று ஊரெங்கும் கோவில்கள் இருந்தாலும், முன்னொருபோதும் இல்லாத விதத்தில் எல்லாமே மூடப்பட்டும், மனிதர்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டும் இருக்கும் முடமான நிலைமையை, நமது கண்களினால் காணவே முடியாத கொரோனா என்னும் கிருமிகள் ஏற்படுத்தியுள்ளன. இதனால் கிறிஸ்தவர்களும், ஆலயங்கள் மூடப்பட்டதினால் சபையே அழிந்துவிட்டது என்று அழுது கொண்டும், தேவன் சபையைத் தண்டித்துவிட்டார் என்று அலறிக் கொண்டும், சபையே தேவையில்லை என்று ஆன்லைனில் (இணையத்தில்) ஆர்ப்பரித்துக்கொண்டும் இருக்கின்றனர். இதனால், சபையைப்பற்றிய வேதாகம சத்தியங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாயுள்ளது. அதாவது,

சபை என்றால் என்ன?

ஆலயக் கதவுகள் மூடப்பட்டதினால், சபைக்கு முடிவு வந்துவிட்டதா?

சபையைத் தேவன் தண்டித்துவிட்டாரா? கோவில் கதவுகளைப்பற்றி கொரோன எத்தகைய கதைகளைச் சொல்கிறது?

– என்று வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியமாய் உள்ளது. கதவுகள் மூடப்பட்டாலும் சபையின் கதை முடிவடையவில்லை. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சபையை ஒரு கட்டிடம், அதாவது “ஆலயக் கட்டிடம்” என்றே எண்ணுகின்றனர். அதாவது, வாராவாரம் தாங்கள் தேவனை ஆராதிப்பதற்காகக் கூடிவரும் இடமே சபை என்று எண்ணுகின்றனர். இதனால்தான், தாங்கள் வழக்கமாகத் தேவனை ஆராதிக்கும் ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்டிருப்பதினால், சபையே அழிந்துவிட்டது என்னும் கவலையில் கதறுகின்றன. ஆனால், சபை ஒரு ஆலயக் கட்டிடமோ அல்லது ஓர் இடமோ அல்ல. ஏனெனில், வேதாகம சத்தியத்தின்படி கிறிஸ்தவர்களாகிய நாமே சபையாக இருக்கின்றோம்.

இதனால்தான், சபை என்பதற்கு “எக்ளீசியா” என்னும் கிரேக்கச் சொல் வேதாகமத்தில் உயோகிக்கப்பட்டுள்ளது. இது, “எக்” “காலெயோ” என்னும் இரண்டு கிரேக்கச் சொற்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் “எக்” என்பது “வெளியே” என்றும் “காலெயோ” என்பது “அழைத்தல்” என்றும் அர்த்தமுடைய சொற்களாகும். எனவே, இவ்விரு சொற்களும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ள “எக்ளீசியா” என்னும் சொல், “வெளியே அழைக்கப்பட்டவர்கள்” என்னும் அர்த்தமுடையது. கிரேக்க இலக்கியங்களில் இச்சொல், தற்கால நாடாளுமன்ற கூடுதல்களைப் போன்றதாக, அதாவது, அரசியல் அதிகாரிகள் ஒன்றுகூடி வருவதற்கே உபயோகிக்கப்பட்டிருந்தாலும், புதிய ஏற்பாட்டில், இயேசுகிறிஸ்துவின் சிலுவைப் பலியின் மூலம் பாவத்திலிருந்தும் உலகத்திலிருந்தும் சாத்தானின் பிடியிலிருந்தும் வெளியே கொண்டுவரபட்ட மக்களே சபையாக உள்ளனர். இதனால், மனிதர்கள் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடி வரும்போது மாத்திரமே சபை மானிட கண்களுக்குத் தென்படக்கூடியவிதத்தில் இருக்கின்றது. ஏனெனில், சபை என்பது மூடித் திறப்பதற்குத் தெரு மூலையில் இருக்கும் ஒரு கட்டிடம் அல்ல; கிறிஸ்தவர்களாகிய நாமே சபையாக இருக்கின்றோம்.

கிறிஸ்தவர்களாகிய நாமே சபையாக இருக்கின்றோம் என்பதை அறியாததினாலேயே கொரோனா கிருமிகள் மனிதரைக் கொல்வதோடு, சபையையும் அழித்துவிட்டது என்று கிறிஸ்தவர்கள் கவலைப்பட்டு கலங்குவதற்கான காரணமாய் உள்ளது. மேலும், கிறிஸ்தவர்களாகிய நாம் சபையாக இருப்பது மாத்திரமல்ல, சபையாகிய நாம் இயேசுகிறிஸ்துவின் சரீரமாகவே இருக்கின்றோம். இதனால்தான், “சபையாகிய சரீரம்” (கொலொ.1:18), “சரீரமான சபை” (எபே.1:23) என்னும் சொற்பிரயோகங்கள் சபையைக் குறிப்பிட வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன. ஏனெனில், இரட்சிக்கப்படும் மக்களைச் சபையில் சேர்க்கும் இயேசுகிறிஸ்து (அப்.2:47), அவர்களைத் தம்முடைய சரீரத்தின் அவயவங்களாக்குவதன் மூலமாகவே சபையைக் கட்டிவருகின்றார்.

இதனால்தான், “நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயும் இருக்கிறீர்கள்'” (1கொரி.12:27) என்றும், “நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்'” (எபே.5:30) என்றும், “அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாய் இருக்கிறோம்” (ரோ. 12:5) என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே, நாம் தொலை தூரத்திலிருந்து இயேசுகிறிஸ்துவோடு தொடர்புகொள்கிறவர்களாக அல்ல, பிரிக்கமுடியாதபடி அவரோடு இணைந்துவிட்ட அவருடைய சரீரத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றோம்.

வேதாகம சத்தியத்தின்படி, இரட்சிக்கப்படுகிறவர்களை இயேசுகிறிஸ்து சபையில் சேர்த்து வருகின்றார் (அப்.2:47). எனினும், சபை இயேசுகிறிஸ்துவின் சரீரமாக இருப்பதினால், சபையில் சேர்க்கப்படுபவர்கள் இயேசுகிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாகின்றார்கள். சில கிறிஸ்தவர்கள், உலகிலுள்ள சகல கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கிய உலகலாவிய சபையே இயேசுகிறிஸ்துவின் சரீரமாக வேதாகமத்தில் உவமிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். இது உண்மை என்றாலும், ஒவ்வொரு பிரதேசத்திலும் இருக்கும் உள்ளூர்ச் சபையும் தனித்தனியே இயேசுகிறிஸ்துவின் சரீரமாகவே வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான், ரோமர் 12:3-5இல் ரோமில் இருந்த சபையும், 1கொரிந்தியர் 12:27இல், கொரிந்து பட்டணத்தில் இருந்த சபையும் தனியான இயேசு கிறிஸ்துவின் சரீரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சபை இயேசுகிறிஸ்துவின் சரீரமாய் இருப்பதினால், கொல்லும் கொரோனா கிருமிகளோ அல்லது கொத்தும் வெட்டுக்கிளிகளோ இல்லையென்றால் வேறு எந்தவிதக் கிருமிகளோ வந்தாலும், அல்லது, கொடூரமான யுத்தங்களும் கோரமான இயற்கை அழிவுகளும் ஏற்பட்டாலும் சபை அழியாது. இப்போது ஆலயத்தின் கதவுகளே மூடப்பட்டுள்ளன. ஆனால், இயேசுகிறிஸ்துவின் சரீரமாகிய சபை இணையத்தில் (ஆன்லைனில்) இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே, ஆலயக் கதவுகள் மூடப்பட்டதினால் சபை அழிந்துவிடவில்லை.

கிறிஸ்தவ சபையின் சரித்திரத்தில் இன்றைக்கு ஆலயங்கள் மூடப்பட்டிருப்பதைப் போன்ற நிலைமை இதற்கு முற்பட்ட காலங்களிலும் இருந்தது. குறிப்பாக, கி.பி.64 முதல் 312 வரை ரோம அரசினால் கிறிஸ்தவர்கள் கொடூரமான முறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட காலங்களிலும் கிறிஸ்தவர்களினால் வாராவாரம் ஆலயங்களில் கூடிவரமுடியாத நிலைமை இருந்தது. இதனால்தான், எபிரெயர் 10:25இல் குறிப்பிட்டுள்ளபடி அக்காலத்தில் சபை கூடிவருதலை சிலர் விட்டுவிட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்பதை எபிரெயர் 10:32-33 என்னும் வசனங்கள் அறியத்தருகின்றன. இதைப் போலவே, பிற்காலத்தில் யுத்தங்களும் இயற்கை அழிவுகளும் கொள்ளை நோய்களும் ஏற்பட்ட காலங்களிலும், குறிப்பிட்ட காலத்திற்கு சில பிரதேசங்களில் ஆலயங்கள் மூடப்பட்டிருந்தன. கி.பி. 1918-1920இல் ஏற்பட்ட ஸ்பானியக் காய்ச்சலின்போது உலகெங்கும் ஒரு வருடத்திற்கும் மேலாக மக்களின் வழக்கமான வாழ்வு பாதிக்கப்பட்ட போதும் பல இடங்களில் மக்களினால் சபையாகக் கூடிவர முடியாதிருந்தது. இதைப்போலவே தற்காலத்திலும் உலகின் பல நாடுகளில் கொரோனா கிருமிகளினால் ஒரு சில மாதங்கள் ஆலயக் கதவுகள் மூடப்பட்டிருந்தாலும், தற்பொழுது படிப்படியாக மறுபடியுமாக கிறிஸ்தவர்கள் சபையாகக் கூடி வரும் நிலைமை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

சபை இயேசுகிறிஸ்துவின் சரீரமாக இருப்பதினால், உலகில் இயற்கை அழிவுகளும் யுத்தங்களும் கொள்ளை நோய்களும் ஏற்பட்ட காலங்களில் கிறிஸ்தவர்கள் தேவனை ஆராதிப்பதற்காகக் கூடிவரும் இடங்கள் சில மாதங்கள் மூடப்பட்டிருந்தாலும், சபை அழிந்துபோகவில்லை. ஏனெனில், இயேசுகிறிஸ்துவின் சரீரமாகிய சபையை எவராலும் அழிக்கமுடியாது. இதனால்தான், “நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்று இயேசுகிறிஸ்துவே தெரிவித்துள்ளார் (மத்.16:18). அக்காலத்தில் இயேசுகிறிஸ்து பேசிய யூதர்களின் மொழிவழக்கில் “பாதாளத்தின் வாசல்” என்பது மரணத்தைக் குறிப்பிடும் உருவகமாய் இருந்தது. ஏனெனில், இது கல்லறை என்னும் அர்த்தமுடைய “யீயொல்” என்னும் எபிரெயச் சொல்லை அக்கால யூதர்கள் குறிப்பிடும் முறையாக இருந்தது. ஏசாயா 30:10இல் இத்தகைய அர்த்தத்துடன் “பாதாளத்தின் வாசல்” என்னும் சொல் உள்ளது. இரண்டு ஏற்பாடுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட யூதர்களின் நூல்களிலும் இத்தகைய சொற்பிரயோகம் உள்ளது.

மேலும், யோபு 38:17, சங்கீதம் 9:13, 107:18 என்னும் வசனங்களில் நேரடியாகவே மரண வாசல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தாம் கட்டும் சபைக்கு மரணம் இல்லை, அதாவது அழிவோ முடிவோ இல்லை என்றே இயேசு கிறிஸ்து மத்தேயு 16:18இல் தெரிவித்துள்ளார். இதனால், சபையில் இருப்பவர்கள் மரிக்கமாட்டார்கள் என்று நாம் கருதலாகாது. ஆனால், சபையில் இருப்பவர்கள் மரித்தாலும் சபை இல்லாமல் போகாது. ஏனெனில், சபையை யாராலும் அழிக்க முடியாது. சபையை அழிக்கக்கூடிய வல்லமை எதற்கும் இல்லை. எந்தத் தீய சக்தியினாலும் அதை மேற்கொள்ள முடியாது. சாத்தானின் சகலவிதமான தாக்குதல்களையும் மேற்கொண்டு சபை அழியாமல் இருக்கும் என்றே மத்தேயு 16:18இல் இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். ஏனெனில், சபைக்கு முடிவென்பதே இல்லை. இதனால், தற்பொழுது சிறிது காலத்திற்கு ஆலயக்கதவுகள் மூடப்பட்டிருப்பதினால், சபை அழிந்துவிட்டது என்று அழுது புலம்புவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இது மிகவும் அறிவீனமான ஒரு செயலாகவே உள்ளது.

சபை கூடிவருதல் தடைப்பட்டாலும் சபை தண்டிக்கப்படவில்லை

கிறிஸ்தவர்களாகிய நாமே சபையாக இருந்தாலும், நாம் வாரந்தோறும் தேவனை ஆராதிப்பதற்காக கூடிவரும் ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்டுள்ளதினால், தேவன் கொரோனா கிருமிகள் மூலம் சபையைத் தண்டித்துவிட்டார் என்று அழுது புலம்புகிறவர்களாகவே பலர் காணப்படுகின்றனர். ஆனால், கொரோனா கிருமிகள் ஆலயத்தை மாத்திரமல்ல, எல்லா கட்டிடங்களையுமே மூடிவிட்டன. எனவே, ஆலயங்கள் மாத்திரம் மூடப்பட்டிருந்தால்தான் கொரோனா கிருமிகள் மூலம் தேவன் சபையைத் தண்டித்துள்ளார் என்று கூறலாம். மேலும், தேவன் இக்கிருமிகள் மூலம் முழு உலகையும் தண்டிக்கின்றார் என்று கூறுவதும் தவறாகும். ஏனெனில், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் மனிதரின் பாவம் முழுமையாக இயேசுகிறிஸ்துவில் தண்டிக்கப்பட்டுள்ளதினால், தேவன் இக்காலத்தில் பாவத்திற்காக மனிதரைத் தண்டிக்காமல் அவர்கள் மனந்திரும்பி வரும்படி நீடிய பொறுமை உள்ளவராக இருக்கின்றார்” என்றும் (2பேதுரு 3:9), “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்குகிறார்” (2கொரி.5:19) என்றும் வேதாகமம் கூறுகிறது. இதனால்தான், தற்காலத்தில் ஒருவன் பாவம் செய்யும்போது தேவன் அவனைத் தண்டிக்கின்றார் என்றல்ல, இயேசுகிறிஸ்து அவனுக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராக இருக்கின்றார் என்றே வேதாகமம் கூறுகிறது (1யோவா. 2:1,2). எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் இவ் வேதாகம சத்தியங்களை சரியான விதத்தில் அறிந்திராவிட்டால், கொடிய கொரோன கிருமிகள் மாத்திரமல்ல, சிறிய கொசுக்கள் நம்மைக் கடித்தாலும் தேவன் தண்டிக்கின்றார் என்று கதறுகிறவர்களாகவே இருப்போம்.

வேதாகம சரித்திரத்தின்படி, இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை இஸ்ரவேல் மக்கள் நியாயப்பிரமாணக் கட்டளைகளைக் கைக்கொண்டால் ஆசீர்வாதம், இல்லையென்றால் சாபம் என்னும் வாழ்க்கைமுறையும் (உபா.28), தீர்க்கதரிசிகள் மூலமாகக் கடுமையாக எச்சரிக்கப்படும் நிலையும் இருந்தது. இதனால்தான், “நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான் வரைக்கும் வழங்கி வந்தது” (லூக்.16:16) என்று இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். ஆனால், இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, அதுவரை காலமும் மக்கள் செய்த பாவங்களும், அன்றிலிருந்து உலகின் முடிவுவரை மனிதர்கள் செய்யப்போகும் பாவங்கள் அனைத்தும் தண்டிக்கப்பட்டன (யோவா. 1:29, 1யோவா. 2:2). இதனால், தற்காலத்தில் இயேசுகிறிஸ்துவின் சிலுவைப் பலியை மையமாகக் கொண்டே தேவன் செயல்படுகிறவராய் இருக்கின்றார். இதனால்தான், இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் தற்காலத்தில் பாவத்திற்காகத் தண்டிக்கப்படுவதில்லை (ரோ. 8:1, யோவா.3:36).

அவர்கள் பரிசுத்தப்படுவதற்காகச் சிட்சிக்கப்பட்டாலும் (எபி.12:5-7), இது பாவத்திற்கான தண்டனை அல்ல. ஏனெனில், அவர்களுடைய பாவத்திற்கான தண்டனையை இயேசுகிறிஸ்து சிலுவையில் முழுமையாகப் பெற்றுக்கொண்டார். ஆனால், தற்காலத்தில் இயேசுகிறிஸ்துவை நிராகரிப்பவர்கள் தேவனுடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டை பண்ணி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்” (ரோ.2:4-5). அதாவது, இயேசுகிறிஸ்துவை நிராகரிப்பவர்கள் அதற்கான தண்டனையை இப்பொழுது பெறுகிறவர்களாக அல்ல, நியாயத்தீர்ப்பு நாளில் முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்காக சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள்.

இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் இரட்சிக்கப்படுவதும், அவரை நிராகரிப்பவர்கள் ஆக்கினைக்கு உட்படுவதுமே தேவனுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பாய் இருந்தாலும் (யோவா. 3:36), இதில், இரட்சிக்கப்படுவது நிகழ்கால அனுபவமாகவும் ஆக்கினைக்குட்படுவது உலகின் இறுதிகால நிகழ்வாகவும் உள்ளது. ஏனெனில், இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு முதற்தடவை வந்தபோது மனிதரை ஆக்கினைக்குள்ளாய்த் தீர்ப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் (யோவா.3:17). இதனால்தான், இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத மக்களை எலியாவைப்போல வானத்திலிருந்து அக்கினியை இறக்கி கொல்ல விரும்பிய சீடர்களின் கோரிக்கைக்கு அவர் இணங்காததோடு, தாம் மனிதரை அழிப்பதற்கு அல்ல, அவர்களை இரட்சிப்பதற்கே வந்துள்ளதாகத் தெரிவித்தார் (லூக்.9:53-56). ஏனெனில், மனிதர் ஆக்கினைக்குட்படுவது இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் பின்னர் நியாயத் தீர்ப்பு நாளில் நடைபெறும் காரியமாகவே உள்ளது (அப்.17:31, 2தெச.2:7-8).

இதனால்தான், புதிய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பைப்பற்றிய குறிப்புகள் அனைத்தும் எதிர்காலச் சொல்லினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசுகிறிஸ்துவை அறிந்தவர்கள் துயரங்களுக்கு ஊடாகச் செல்லும்போது, பாடுகள் அவர்களுடைய விசுவாசத்தைப் பரீட்சிக்கின்றன என்றும், இதன்மூலம் அவர்களுடைய விசுவாசம் பலமடைகிறது என்றும் புதிய ஏற்பாடு கூறுகிறது (யாக்.1:2-3). இதை கி.பி.313ஆம் ஆண்டுவரை கிறிஸ்தவர்களில் காணக்கூடியதாக இருந்தது. ஏனெனில், அக்காலத்தில் ரோம அரசாங்கம் கிறிஸ்தவர்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்ததினால் ஏறக்குறைய 6500 பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். ஆனாலும், இவர்கள் இயேசுகிறிஸ்துவுக்காக இரத்த சாட்சிகளாக மரித்தார்களே தவிர பாவத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த யோபு என்னும் பக்தனுடைய அனுபவமும் இதைப்போலவே உள்ளது.

ஏனெனில், அவன் பாவம் எதுவும் செய்யாதவனாக இருந்ததினால் (யோபு 1:1), அவனுக்கு ஏற்பட்ட பாடுகள், பாவத்திற்கான தண்டனையாக அல்ல, அவனுடைய விசுவாசத்தைப் பரீட்சித்துப் பலப்படுத்துகிறவைகளாக இருந்துள்ளதை அவனுடைய சரிதை அறியத்தருகின்றது. இதனால்தான், “அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும். அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” (1பேது.1:7) என்று வேதாகமம் கூறுகிறது.

சில கிறிஸ்தவர்கள் 1 பேதுரு 4:17ஐ ஆதாரமாகக் கொண்டு, தேவன் கொரோனா கிருமிகள் மூலம் சபையை நியாயந்தீர்க்கின்றார் என்று கூறுகின்றனர். ஏனெனில் இவ்வசனத்தில் “நியாயத் தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது” என்று பேதுரு குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்று வந்த கொரோனா கிருமிகளின் மூலமான அழிவுடன் பேதுருவின் கூற்றை எவ்விதத்திலும் தொடர்புபடுத்த முடியாது. ஏனெனில், பேதுரு தனது காலத்தில் நடைபெற்ற நியாயத்தீர்ப்பைப்பற்றியே கூறுகின்றார். இதனால்தான், “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குங்காலமாயிருக்கிறது” என்று நிகழ்காலத்தில் தனது காலத்தில் நியாயத் தீர்ப்பு நடைபெறுவதாகப் பேதுரு எழுதியுள்ளார்.

மேலும், கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் பாடுகளை அல்லது அழிவுகளைத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று கூறுபவர்கள், நியாயத்தீர்ப்பு என்னும் சொல்லைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களாகவே இருக்கின்றனர். ஏனெனில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தண்டனை என்னும் அர்த்தத்திலேயே நியாயத் தீர்ப்பு என்னும் சொல்லை உபயோகிக்கின்றனர். ஆனால், நியாயத் தீர்ப்பு என்பது தண்டனை அல்ல. ஏனெனில், நியாயந்தீர்க்கப்படும்போது கொடுக்கப்படும் தீர்ப்புகளில் ஒன்றே தண்டனையாகும். எனினும் தீர்ப்பு எப்பொழுதும் தண்டனையாக மாத்திரம் இருக்காது. ஏனெனில், குற்றம் செய்தவனுக்கு கொடுக்கப்படும் தீர்ப்பே தண்டனையாகும். ஆனால், குற்றம் செய்யாதவனுக்கு கொடுக்கப்படுவது தண்டனை அல்ல. எனவே, நியாயத்தீர்ப்பு ஒன்றில் தண்டனையாக இருக்கும். அல்லது விடுதலையாக இருக்கும். ஆனால், நியாயத் தீர்ப்பு என்றால் தண்டனை என்னும் தவறான எண்ணமுடையவர்களாகக் கிறிஸ்தவர்கள் இருப்பதினாலேயே உலகத்தில் எத்தகைய அழிவு வந்தாலும் அதைத் தேவனுடைய தண்டனையாகவே பார்க்கின்றனர்.

பேதுரு தன்னுடைய முதலாவது நிருபத்தின் நான்காம் அதிகாரம் 17ஆம் வசனத்தில் என்ன சொல்கின்றார் என்பதை சரியான விதத்தில் அறிந்துகொள்வதற்கு, அவர் எத்தகைய சூழ்நிலையில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு இந்நிருபத்தை எழுதியுள்ளார் என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், முதலாம் நூற்றாண்டின் சின்ன ஆசியாவின் ஐந்து மாகாணங்களில் சிதறிப் போயிருந்த கிறிஸ்தவர்களுக்கு இந்நிருபத்தை எழுதும் பேதுரு (1பேது.1:1), அவர்கள் “பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறார்கள்” (1பேது.1:6) என்பதை அறியத்தருகின்றார். எனினும், அவர்கள் பாவம் செய்ததினால் அல்ல, “நீதியினிமித்தம் பாடுபடுகிறவர்களாகவும்” (1பேது.3: 14), “நன்மை செய்தும் பாடனுபவிப்பவர்களாகவும்” (1பேது.3:17), “கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்படுகிறவர்களாகவும்” (1பேது.4:14), “கிறிஸ்துவின் பாடுகளுக்குப் பங்காளிகளாகத்” (1பேதுரு 4:13), “தேவனுடைய சித்தத்தின்படி பாடனுபவிப்பவர்களாகவும் இருந்தனர்” (1பேது.4: 19). இதனால், நன்மை செய்கிறவர்களாகத் தேவனுடைய சித்தத்தின்படி இயேசுகிறிஸ்துவின் பாடுகளுக்குப் பங்காளிகளாகப் பாடுபட்டவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள் என்று கூறமுடியாது. இதனால், அவர்களுடைய பாடுகளாக, “உங்களை சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினி” (1பேது. 4:12) என்று பேதுரு எதைப்பற்றி கூறுகிறார் என்பதை அறியாதவரையில் அவர் குறிப்பிடும் நியாயத் தீர்ப்பு என்னவென்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது.

அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடைய முதலாவது நிருபத்தை எழுதிய காலத்தில் கிறிஸ்தவர்கள் நீரோ என்னும் ரோம அரசனால் கொடூரமான முறைகளில் மூர்க்கத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு வந்தனர். கி.பி.64ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரோம் நகரம் முழுமையாக தீயினால் அழிந்தபோது, அதற்குக் கிறிஸ்தவர்களே காரணம் என்று அவர்கள் மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டனர். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்த கிறிஸ்தவர்களைப் பெலப்படுத்துவதற்காக இந்நிருபத்தை எழுதும் பேதுரு, அவர்கள் எதிர்நோக்கிய கோர மரணத்தையே “உங்களை சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினி” என்று நிகழ்காலத்தில் குறிப்பட்டுள்ளார். அதாவது, ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது அதற்கு கிறிஸ்தவர்களே காரணம் என்று கூறிய நீரோ, கிறிஸ்தவர்களைக் கொல்லும்போது, அவர்களை உயிரோடு கம்பங்களில் கட்டி வைத்து எரித்து, அவர்களை இரவு நேரத்தில் வீதிகளுக்கும் பூங்காக்களுக்கும் உல்லாச விடுதிகளுக்கும் வெளிச்சம் கொடுக்கும் தீவட்டிகளாக உபயோகித்தான். உண்மையில், இதைத்தான் பேதுரு “உங்கள் நடுவிலே பற்றியெரிகிற அக்கினி” (1பேது.4:12) என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் ரோம் நகரில் ஆரம்பமான இத்தகைய கொடூரச் சித்திரவதை நீரோவின் ஆட்சிக் காலத்தில ரோம ராட்சியத்தின் ஏனைய பகுதிகளிலும் நடைபெற்றது. எனவே, பேதுருவின் வாசகர்கள் பாவம் செய்ததினால் பாடுபடுகிறவர்களாக இருக்கவில்லை. இதனால், பேதுரு குறிப்பிடும் “தேவனுடைய வீட்டில் துவங்கிய நியாயத் தீர்ப்பு” பாவத்திற்கான தண்டனை அல்ல. எனவே, 1 பேதுரு 4:17ஐ ஆதாரமாகக் கொண்டு, தேவன் பாவத்திற்காக சபையைத் தண்டிக்கிறார் என்று எவ்விதத்திலும் கூறமுடியாது.

1 பேதுரு 4:7ஐ மாத்திரம் தனியாக எடுத்துக் கூறப்படும் விளக்கங்கள் அனைத்தும் பேதுரு இவ்வசனத்தில் எழுதியுள்ளதைச் சரியாக அறியாமல் கூறப்படும் தவறான கருத்துகளாகவே உள்ளன. ஏனெனில், இவ்வசனம் இதற்கு முன்னும் பின்னம் உள்ள வசனங்களுடன் தொடர்புற்றுள்ளது. உண்மையில், மூலமொழியில் இவ்வசனம் 12ஆம் வசனத்திலிருந்து ஆரம்பமாகி 19ஆம் வசனத்தில் முடிவடையும் ஒரு பந்தியின் இடையில் உள்ள ஒரு வாக்கியமாகும். இதனால், சபையைத் திருத்தும் சிட்சைகளாக வந்த பாடுகளையே பேதுரு இவ்வசனத்தில் நியாயத்தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார் என்னும் சிலரது விளக்கமும் தவறானதாகவே உள்ளது. ஏனெனில், வேதாகம சத்தியத்தின்படி தவறுகளைத் திருத்துவதற்காகவே சிட்சை வருகிறது. ஆனால், பேதுருவின் வாசகர்கள் தவறு செய்து சிட்சிக்கப்படுகிறவர்களாக அல்ல, அவர்கள் நன்மை செய்தும் பாடுபடுகிறவர்களாக, அதாவது, கிறிஸ்தவர்களாய் இருப்பதினால் கொடூரமான முறையில் மரிப்பவர்களாக இருந்தனர். இதனால், வேதாகம சத்தியத்தின்படி நியாயத் தீர்ப்பு உலகின் இறுதியிலேயே நடைபெறுவதாய் இருந்தாலும் (அப்.17:31), பேதுருவின் வாசகர்கள் இரத்த சாட்சிகளாக மரிக்கிறவர்களாக இருந்ததினால், அவர்களுடைய காலத்திலேயே அவர்கள் இருக்கும் சபையிலேயே அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு கொடுக்கப்படத் தொடங்கிவிட்டது என்று பேதுரு கூறுகின்றார். எனினும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு தண்டனை என்று பேதுரு கூறவில்லை. ஏனெனில், அக்காலத்தில் இரத்த சாட்சிகளாக மரித்தவர்கள் தேவனால் தண்டிக்கப்படுகிறவர்களாக அல்ல, ஸ்தேவானைப்போல இயேசுகிறிஸ்துவினால் பரலோகத்திற்கு வரவேற்கப்படுகிறவர்களாகவே இருந்தனர். இதனால்தான் வழக்கமாகப் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவராகச் சித்தரிக்கப்படும் இயேசுகிறிஸ்து, ஸ்தேவான் மரித்தபோது எழுந்து நிற்கிறவராகக் காணப்பட்டார் (அப்.7: 56).

இதைப்போலவே அக்கால சபைகளில் இரத்த சாட்சிகளாக மரிப்பவர்களை இயேசுகிறிஸ்து தம்மிடம் வரவேற்றதினால், நியாயத்தீர்ப்பு தேவனுடைய சபையில் துவக்குங்காலமாயிருக்கிறது என்று பேதுரு குறிப்பிட்டுள்ளார். அதாவது அவர்கள் பரலோகத்திற்குச் செல்கின்றார்கள் என்பதைப் பேதுரு அறிந்திருந்ததினால், அவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டார்கள் என்று பேதுரு கூறுகிறார். எனவே, இதை அறியாத நிலையில் 1பேதுரு 4:17ஐ ஆதாரமாகக்கொண்டு தேவன் கொரோனா கிருமிகள் மூலம் அல்லது வேறு அழிவு கள் மூலம் சபையைத் தண்டிக்கிறார் என்று கூறுவது அறியாமையும் அறிவீனமுமான தவறாகவே உள்ளது.

(தொடரும்)

சத்தியவசனம்