காரியங்கள் ஆட்டம் காணும்போது…?

Dr.W.வாரன் வியர்ஸ்பி
(மே-ஆகஸ்ட் 2020

எபிரேயர் நிருபத்தை ஆரம்பத்தில் பெற்ற கிறிஸ்தவர்கள் அதை எளிதில் புரிந்துகொள்ளவில்லை. இதை வாசித்தவர்கள் யூத விசுவாசிகள். அவர்கள் தங்கள் பழைய சமயக் கொள்கைகளால் உந்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் விசுவாசத்துக்காகத் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்களில் சிலர் சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டார்கள். இந்த எபிரேயக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய “பழம் பெரும்நாட்களுக்கே’ திரும்ப விரும்பினார்கள். ஏனென்றால், அவர்கள் தங்களுக்குக் கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தைக் குறைத்துக்கொண்டு மறுபடியும் சமாதானத்தையும், பாதுகாப்பையும் பெற விரும்பினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தேவன் கருதியது என்ன? தேவன் காரியங்களை அசைக்க ஆரம்பித்தார். ஏன்? இந்த விசுவாசிகள் தற்காலிகமானது எது, என்பதற்கும் நிரந்தரமானது என்பதற்கும் வித்தியாசம் அறிந்துகொள்ள வேண்டுமென்று தேவன் விரும்பினார். இன்னும் சில வருஷங்களில் யூத ஜாதியார் முழுவதும் ரோமப் பேரரசு முழுவதிலும் சிதறடிக்கப்படப் போகிறார்கள். அப்பொழுது எருசலேம் பட்டணமும், தேவாலயமும் இடிக்கப்பட்டுப் பாழாக்கப்படும். அசைக்கப்படக்கூடியவற்றை அகற்றிவிட்டு, அசைக்கப்பட முடியாதவைகளை நிலைத்திருக்கச் செய்ய தேவன் விரும்பினார் (எபி. 12:27). கட்டட வேலை செய்வோர் நின்று வேலை செய்வதற்காகத் தற்காலிகமாக அமைக்கும் சாரக் கட்டுக்கும், தேவன் கட்டியெழுப்பும் நிரந்தரமான ஆவிக்குரிய தேவாலயத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் அறியவேண்டுமென்று விரும்பினார்.

நம்முடைய சூழ்நிலை இந்த எபிரேயர்களின் சூழ்நிலைக்கு இணையாகாது. ஆனால் நாம் இப்போது, காரியங்கள் ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாற்றத்தின் தன்மையே மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றங்கள் படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அவற்றை நாம் கவனித்து பரிசோதித்து, ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், இன்றைய நிலை அப்படியல்ல; இன்று மாற்றங்கள் அதிகசக்தியுடன், அதிவேகமாக வந்துவிடுகின்றன. நமக்குத் தலையைக் குனிந்துகொள்ளும் நிலைதான் ஏற்படுகிறது. நாம் இந்த எபிரேயர்களைப்போலப் பின்வாங்கிப் பழைய முறைகளில் அடைக்கலம் தேடினால்கூட நல்லது என்று தோன்றலாம். உலகம் அதன்போக்கில் போகட்டும் என்று விட்டுவிடலாம். நாம் அமைதியை விரும்புகிறோம். பாரம்பரிய பழைய வழி முறைகளை நாடுகிறோம்.

ஆனால், நாம் இப்படிப் பின்நோக்கித் திரும்பிச் செல்வோமானால், நாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாதவர்களாவோம். அவர் நமக்குத் தரும் ஊழிய வாய்ப்புக்களை இழந்துவிடுவோம். பெரிய மாற்றங்கள் ஏற்படும் காலங்களில், கிறிஸ்தவர்களாகிய நாம் மக்களிடத்தில் மாற்றம் அடையாத சில காரியங்கள் உண்டு என்று கூற வாய்ப்பு கிடைக்கும். மாறாத சில உண்டு.

1. தேவனுடைய வார்த்தை மாறுவதில்லை

தேவன் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார். நாம்தான் அதைச் செவிகொடுத்துக் கேட்கவேண்டும் (வச.25). நம்முடைய வாழ்க்கையையும், ஊழியங்களையும், எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் இவை மத்தியில் கட்டியெழுப்புவோமானால், குழப்பமடையவும், தோல்வியடையவும் வாய்ப்பு உண்டு. ஆனால் நாம் மாறாத தேவனுடைய நித்திய வார்த்தையின் மீது கட்டுவோமானால் நம்மைச் சுற்றிலும் ஏற்படும் மாற்றங்கள் நம்மைச் பயமுறுத்துவதில்லை. தேவனுடைய வார்த்தைகள் உண்மையுள்ளவைகளாகவும், ஆற்றுலுள்ளவைகளாகவும் தலைமுறை தலைமுறையாக நீடித்து இருந்து வருகின்றன. அது இன்று நம்மை ஏமாற்றப் போவதில்லை.

“வானமும் பூமியும் ஒழிந்துபோம் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார் (மத். 24:35).

வேதாகமத்தின் அற்புதமான தன்மைகளில் ஒன்று அதன் காலமற்ற தன்மையாகும். தேவனுடைய வார்த்தைகளில் காணப்படும் கொள்கைகளும், வாக்குத்தத்தங்களும் கலாச்சாரம், காலம் இவற்றுக்குக் கட்டுப்பட்டவை அல்ல ஆதித் திருச்சபையில் இருந்த விசுவாசிகளுக்குப் பழைய ஏற்பாடு மட்டுமே வழிகாட்டியாக இருந்தது. எனினும் பரிசுத்த ஆவியானவர் அவர்களைச் சரியான தீர்மானங்களை எடுக்க உதவி செய்துவந்தார்.

இன்று நமக்கு ஒரு முழுவேதாகமம் உண்டு தேவன் நம்மைத் தமது வார்த்தைகள் மூலம் வழிகாட்ட இடங்கொடுக்க வேண்டும். தேவன் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமானால், நாம் தேவனுடைய சத்தத்துக்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிய வேண்டும் என்று நாம் எச்சரிக்கப்படுகிறோம்.

2. தேவனுடைய ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மாறுவதில்லை.

“பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்க மாட்டோமென்று விலகாதிருங்கள்” (எபி.12:25). ஏன் இந்த எச்சரிக்கை தரப்பட்டிருக்கிறது? ஏனென்றால் தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுக்காதவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். ஆனால் நாம், “கிருபையின் காலத்தில் வாழ்கிறோம்”. எனவே சிலர் இப்படிக் கூறலாம். “இந்தக் கிருபையின் காலத்தில் தேவன் நம்மிடத்தில் அன்புகூர்ந்து பிள்ளைகளைப்போல நம்மை நடத்துகிறார்” என்று.

இதுதான் எபிரேயர் நிருபத்தின் முக்கியமான “மையப்பொருளாகும்”. நாம் தேவனுக்குப் பிரியமான பிள்ளைகள். எனவே நாம் தவறு செய்யும்போது, அவர் நம்மைச் சிட்சித்தும் கண்டித்துச் சீர்ப்படுத்த வேண்டும். இப்படி அவர் நம்மைச் சீர்திருத்துவதனால் அவர் நம்மை நேசிக்கிறார் என்று அறியலாம் (எபி.12:5,6) பழைய ஏற்பாட்டிலோ, புதிய ஏற்பாட்டிலோ, தேவன் பாவத்தை சமரசப்படுத்துவதில்லை.

ஒரு சபையில் போதகர் சபை மக்களின் பாவங்களைக் குறித்துக் கண்டித்துப் பிரசங்கம் செய்து வந்தார். சபை உறுப்பினராகிய ஒரு பெண்மணி இதற்காகப் போதகரைக் குற்றஞ்சாட்டினாள். அவளுடைய வாதம் ஒரு கிறிஸ்தவனுடைய பாவத்துக்கும், ஒரு இரட்சிக்கப்படாதவனுடைய பாவத்துக்கும் வித்தியாசம் உண்டு என்பதே! இதைக் கேட்ட சபைப் போதகர் “ஆம். அது சரிதான். கிறிஸ்தவர்கள் செய்யும் பாவம், கிறிஸ்துவை அறியாதவர்கள் செய்யும் பாவத்தைவிட அதிக மோசமானது” என்றார்.

நம்மிடம் காணப்படும் பாவங்களையும், நமது சபையில் செய்யப்படும் பாவங்களையும் நாம் லேசாக நினைத்து விடுகிறோம். “ஒரு கறைப்பட்ட ஊழியமானது, தோல்வியடைந்த ஊழியம்” என்பதே உண்மை. இப்படி நினைத்துக்கொண்டிருந்தால் ஒருநாள் நாம் கிறிஸ்தவ மரபுகளையும், பண்புகளையும், கொள்கைகளையும் அறவே பின்பற்றவில்லை என்று அறிந்து அதிர்ச்சியடைவோம். நாம் எப்போதும் தேவனுடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, அவருடைய கட்டளைகள் என்றும் மாறுவதில்லை என்பதை உணர வேண்டும்.

3. தேவனுடைய இராஜ்யம் மாறுவதில்லை

அசைக்கப்பட முடியாத ஒரு இராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை மறக்கக்கூடாது (எபி. 12:28). தேவன் தம்முடைய மக்களை இந்த உலகத்தில் வைத்திருக்கிறார். இவ்வுலக மக்கள் தேவனில் பாதுகாப்பைப் பெற்றிருக்கிறார்கள். “ஆண்டவரே தேவரீர் தலைமுறை, தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்” (சங்.90:1). இந்த உலகக் காரியங்கள் மீது நம்பிக்கை வைத்து நம் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோமானால், நம்முடைய பிரயாசம் நிலைக்காது. காத்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கன்மலையாகிய அவரை அஸ்திபாரமாகக்கொண்டு நம் ஊழியத்தைக் கட்டியெழுப்புவோமானால், நம்முடைய ஊழியம் என்றென்றும் நிலைத்து நிற்கும் (மத்.7:24-27).

ஆவிக்குரிய தலைவர்கள் கட்டட வேலைக்காரர்கள் தற்காலிகமாக பயன்படுத்தும் “ஆட்டம் காணும் சாரக்கட்டு” போன்ற காரியங்களை ஆதாரமாகக் கொண்டு. அதிக நேரம் செலவிட்டு, அதிகக் காரியங்களைச் செய்வது எவ்வளவு பரிதாபமான காரியமாகும்! அவர்கள் நித்தியமான, நிலைத்து நிற்கக்கூடிய காரியங்களை ஆதாரமாகக் கொண்டு செயல்படவேண்டும் அல்லவா? ஆட்டங்கண்டுகொண்டிருக்கும் இந்த உலகத்தில், அசையாததும் அழிக்கப்பட முடியாததும், நித்தியமாக நிலைத்து நிற்கக்கூடியதுமான காரியங்களை நாம் ஆதாரமாகக்கொள்ள வேண்டும். இதை நாம் எப்படிச் செய்ய முடியும்? இந்த வேதப் பகுதியின் கடைசிக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படி வதன் மூலம் அதைச் செய்யலாம்.

“கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்” (எபி.12:28). தேவனுடைய கிருபை இல்லாமல் கிருபையின் தேவனுக்கு நாம் ஊழியம் செய்ய முடியாது. நம்மில் ஒருவரும் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதியுடையவர்கள் அல்ல. தேவனுடைய போதுமான கிருபை நம் ஒவ்வொருவருக்கும் தேவை.

“நாம் பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்வோம்” (எபி. 12:28). தேவனுக்கு ஆராதனை செய்வதும், ஊழியம் செய்வதும் முக்கியமான காரியமாகும். நம்முடைய எஜமானாகிய ஆண்டவருடைய வேலையில் கவலையீனமாக இருக்கக் கூடாது. நம்முடைய உற்சாகத்தையும், அக்கரையையும் இழந்து விடவும் கூடாது. “தேவனைக் குறித்த பயம்” என்பது நாம் தேவனை மதித்துக் கனப்படுத்துகிறோம். அவரை நமது ஆண்டவர் என்று ஏற்றுக்கொள்ளுகிறோம். அவர் நமக்குத் தரும் வேலைகளைக் கரிசனையோடும், பொறுப்புணர்வோடும், பயத்தோடும் பக்தியோடும், செய்து நிறைவேற்றவேண்டும்.

“நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே” (வச.29). அப்படியானால் எது விட்டு வைக்கப்படும்? பரிசுத்தமாக்கப்பட்ட பொக்கிஷங்களா? கவலையீனமாகவும், அக்கறைமில்லாமலும் நாம் செய்துவிட்டோம் என்று கூறும் சாம்பலா? ஒருநாள் தேவனுடைய அக்கினி நம்முடைய கிரியைகளைப் புடமிடும் (1கொரி. 3:10-15).

காரியங்கள் ஆட்டம் காணும்போது, நாம் நம்முடைய வேலைகளைச் சீக்கிரத்தில், குறுக்கு வழியில் செய்து முடிக்க நினைப்பது இயல்பு. அப்படிப்பட்ட வேலைகள் கவலையீனமாகச் செய்யப்படும். எனவே, அசைந்துவிடும், அழிந்து போகும் காரியங்களைப் புறக்கணித்துவிட்டு, அசையாத அழியாத, நித்தியம் வரை நிலைத்து நிற்கக்கூடிய அஸ்திபாரங்களைத் தேடிக்கண்டு பிடித்துப் பயன்படுத்துவோம். அவற்றின் மேல் தேவனுடைய திட்டங்களைக் கட்டியெழுப்பி, அவரை மகிமைப்படுத்துவோம்!

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்