உறுதியாக நிற்றல்!

Rev.நாட் க்ராபோர்டு
(மே-ஆகஸ்ட் 2020

‘லெஸ் மிசரபிள்ஸ்’ என்ற இசைக் செய்தியில் வரும் ‘நான் ஒரு கனவு கண்டேன்’ என்ற பாடல் மனதை உருக்கக் கூடியதாக உள்ளது. நீங்கள் அந்த இசைச் செய்தியைக் கேட்காதிருந்தால், அதைக் கேட்குமாறு நான் உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். அது, மீட்பு, மன்னிப்பு, வாழ்வில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தல் போன்றவைகளைப் பற்றிக் கூறும் ஒரு கதையாகும். அந்த இசையில் வரும் முக்கிய கதாபாத்திரமாகிய ஃப்பாண்டிங் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறாள்.

அவள், காதல் வயப்பட்ட ஒரு பெண். அவள், அவளது வாழ்க்கை மிகவும் திருப்தியாக அவளது விருப்பத்தின்படி, பிரகாசமாக அமையும் என்று எண்ணினாள். ஆனால் விரைவில் உண்மை வெளியாகிறது. அவள் கருவுற்றவளாகவும், கைவிடப்பட்டவளுமாக ஆனாள். இப்பொழுது அவள் அவளுடைய சிறிய பெண் குழந்தையோடு, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை ஏதும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

“எனது வாழ்க்கை இப்படியாக துன்பம் நிறைந்த நரகம் போல இருக்கும் என்று எண்ணாமல், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டேன். நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் வேறுபட்டதாக உள்ளது. இன்றைய எனது உண்மையான வாழ்க்கை, நான் என் வாழ்க்கையைக் குறித்துக் கண்ட கனவை முற்றிலுமாக அழித்து, நொறுக்கிவிட்டது.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், கடந்த காலங்களில் அநேக கனவுகள் கண்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் இன்று, அவைகளில் ஒன்றுகூட நிறைவேறாத நிலையில் இருப்பார்கள். உதாரணமாக,

உங்கள் வாழ்க்கைத் துணையோடு, மரணம் பிரிக்கும் வரைக்கும், ஒன்றாக வாழ்வோம் என்று நீங்கள் கனவு கண்டிருக்கலாம். ஆனால் இன்று, அன்று கூறிய உறுதிமொழி கலைந்து, வேறு யாரோ ஒருவருடன் வாழும்நிலை ஏற்பட்டுள்ளது.

உங்களது குழந்தை ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வளரும் என்று கனவு கண்டிருப்பீர்கள். ஆனால், உங்கள் குழந்தை காரணமே கண்டுபிடிக்க இயலாத ஏதோ ஒரு நோயினால் பீடிக்கப்பட்டு இருக்கலாம்.

நீங்கள் ஒரு விரிவுரையாளராக பணிபுரிய கனவு கண்டிருப்பீர்கள். ஆனால் இன்று, மிகவும் குறைந்த ஊதியத்தில், பலசரக்கு சாமான்களை உறையிலிடும் பணியில் இருக்கலாம்.

உங்களது கல்லூரி வாழ்க்கையில் உங்களது பட்ட வகுப்பில் முதல் மாணவராக இருக்க கனவு கண்டிருக்கலாம். ஆனால் இன்றோ, பட்டப்படிப் பிற்கே வழியில்லாமல் இருக்கலாம்.

நீங்கள் திருமணம் செய்துகொண்டு, மகிழ்ச்சியாக குடும்பமாக இருக்க கனவுகள் கண்டிருக்கலாம். ஆனால் இன்றோ, அநேக இரவுகளில் இரவு உணவைத் தனிமையாக உண்ணக்கூடிய சூழ்நிலை உள்ளது.

நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் எதிர்பாராத சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு அப்படிப்பட்ட சூழ்நிலைகள் குறைவாகவும் , சிலருக்கு அவை அதிகமாகவும் உள்ளன. சிலருக்கு அந்த சூழ்நிலைகள், அவர்களது வாழ்க்கையையே அழித்துவிடக் கூடியவைகளாக இருக்கலாம். எது என்னவாக இருந்தாலும், நாம் அனைவருமே உடைந்துபோன கனவுகளை உடையவர்களாக இருக்கிறோம்.

ஆனால், நமது உடைந்துபோன கனவுகள், வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வுகள், நம்மை தோல்வியடையச் செய்யவேண்டுமா?

நமது வாழ்க்கையின் வழிமுறைகளைக் கைவிட்டு விடுவதுதான் ஒரே வழியா?

நான் அவ்வாறு நினைக்கவில்லை. சிறப்பாக கிறிஸ்தவர்களுக்கு அந்தச் சூழ்நிலை இல்லை. நமது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சூழ்நிலைகள் எதுவாக இருப்பினும் நாம் உறுதியாக நிற்க இயலும். நாம் மூன்று நங்கூரங்களைப் பயன்படுத்தி உறுதியாக நிற்கலாம்.

விசுவாசிகளாக நீங்களும், நானும் நமது வாழ்க்கையில் இருவழிப் பாதைகளைச் சந்திக்க நேரிடும். அதில் எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்று நாம் தெரிந்தெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் நற்குணங்களைத் தேர்ந்தெடுப்போமா அல்லது உலகக் காரியங்களோடு சமரசம் செய்துகொள்வோமா?

நீங்களும், நானும் இரட்சிக்கப்பட்டபொழுது, ஏதோ ஒரு நோக்கத்தினால், ஒரு நோக்கத்திற்காக, இரட்சிக்கப்பட்டுள்ளோம். இரட்சிப்பு என்பது பரலோகத்திற்குச் செல்லும் ஒரு வழிப்பாதைக்கான பயணச் சீட்டு அல்ல, அது தமது ஆத்துமாவும், வாழ்க்கையும் முற்றிலும் மாற்றமடைவதற்கான பயணச் சீட்டாகும். அது நித்தியத்தில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானது அல்ல. ஆனால், அது இன்றைய நமது உலக வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒன்றாகும்.

ஆகவே, ஒவ்வொரு நாளும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அது ஒருவேளை கோவிட்-19 ஆகவோ, அல்லது நமக்கு நேர்ந்த அநீதியாகவோ இருக்கலாம். நமது உடல் நலத்திற்கான மருத்துவ சோதனையாகவோ, அல்லது நாம் எதிர்பாராத பணம் செலுத்துவதற்கான ரசீதாகவோ இருக்கலாம். என்னவாக இருந்தாலும், நாம் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. தேவன் மீது விசுவாசத்தோடு செயல்படுகிறோமோ அல்லது பயத்தோடு காரியங்களை எதிர் நோக்குகிறோமோ, நற்குணத்தை தேர்ந்தெடுக்கிறவர்களாக அல்லது சமரசம் செய்பவர்களாக இருக்கிறோமா என்ற நிலையில் உள்ளோம். ஆகவே இன்று, எதிர்பாராத சூழ்நிலைகள் நமது வாழ்க்கையில் வந்தால் விசுவாசத்தில் நாம் உறுதியாக நிற்கவேண்டும். இவ்வாறு விசுவாசத்தில் உறுதியாக நிற்பதற்கு நாம் பயன்படுத்த உதவும் மூன்று நங்கூரங்களைக் குறித்து 1 தெசலோனிக் கேயர் 3ம் அதிகாரம் வசனம் 6 முதல் 11 வரையுள்ள வேதபகுதியிலிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

முதல் நங்கூரம்: நமது விசுவாசத்தை ஆழப்படுத்துதல் (வச.6-7).

இரண்டாம் நங்கூரம்: நமது ஜெப வாழ்வை ஆழப்படுத்துதல் (வச.8-9).

மூன்றாம் நங்கூரம்: நமது அன்பை ஆழப்படுத்துதல் (வச.10-11).

1 தெசலோனிக்கேயர் 3:4,5 ஆகிய வசனங்களில் பவுல் தெசலோனிக்கேயாவில் இருந்த பொழுது, எதிர்காலத்தில் வர இருக்கும் பிரச்சனைகள் பற்றியும் கொடிய துன்புறுத்தல்கள் பற்றியும், எச்சரிக்கிறார். இப்பொழுது, அவர், அவர்களை விட்டு வெகுதூரத்தில் இருக்கும் சமயத்தில், அவர்கள், அவர்களது விசுவாசத்தை விட்டுவிடாமல் விசுவாசத்தில் நிலைத்து நிற்கிறார்களா என்று அறிந்துகொள்ள அவரது உடன்வேலையாளாகிய தீமோத்தேயுவை தெசலோனிக்கேயாவிற்கு அனுப்பினார். சோதனைக்காரனாகிய சாத்தான் அவர்களை சோதனைக்குட்படுத்தப்பண்ணி, அவர்களை அவர்களது விசுவாசத்தைவிட்டு விலக வைத்துவிடுவானோ எண்ணி பயமடைந்ததாக எழுதுகிறார். இந்த எண்ணம் பவுலை அதிகமாக தாக்கியது. ஆகவேதான் அவர்களது விசுவாச வாழ்க்கையின் நிலைமையை அறிந்துகொள்ள தீமோத்தேயுவை அனுப்பினார். தெசலோனிக்கேயாவிற்குச் சென்ற தீமோத்தேயு, அங்குள்ள விசுவாசிகளைச் சந்தித்த பின், திரும்ப பவுலிடம் வந்து அவர்களது விசுவாச நிலைமையைப் பற்றிக் கூறினார். அது பற்றிய வசனம் 6ல் இருந்துதான் நமது பாடத்தைத் துவங்க இருக்கிறேன்.

முதல் நங்கூரம்: நமது விசுவாசத்தை ஆழப்படுத்துதல் (வச.6-7).

“இப்பொழுது தீமோத்தேயு, உங்களிடமிருந்து, என்னிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும், அன்பையும் குறித்தும் நீங்கள் எப்பொழுதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாய் இருக்கிறதுபோல, நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்கள் என்பதைக் குறித்தும் எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே, சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உங்களைக் குறித்து ஆறுதலடைகிறோம். நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைப்போம்” (வச. 6,7,8).

பவுலிற்கு, தீமோத்தேயு கொண்டுவந்த செய்தி, மிகவும் நல்ல ஒரு செய்தியாகும். தெசலோனிக்கேயா சபை, விசுவாசத்திலும், அன்பிலும் சிறந்து விளங்கினது. அந்த சபையாருக்கு ஏற்பட்ட பலவிதமான எதிர்பாராத சூழ்நிலைகளிலும், உபத்திரவத்தின் நேரங்களிலும், அவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் நின்றார்கள். வாழ்க்கையில் எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்பொழுது, பயன்படுத்தக்கூடிய முதல் நங்கூரத்தைப் பற்றிய வசனம்,7,8ல் வாசிக்கின்றோம். அது “உங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்துதல்” என்பதாகும்.

அநேக கிறிஸ்தவர்களில், இந்தக் காரியத்தைக் கவனித்துள்ளேன். அதாவது அவர்களது விசுவாசம் ஒரு மைல் நீளமுள்ளதாக இருக்கும். ஆனால், அதன் ஆழமோ ஒரு அங்குலம் ஆழம் மட்டும் இருக்கும். அவர்கள் சிறுவயதில், இயேசு கிறிஸ்துவை அவர்களது சொந்த இரட்சகராக ஏற்றிருப்பார்கள். ஆலயத்திற்கு ஒழுங்காகச் செல்வார்கள். ஞாயிறு பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்வார்கள். அவர்கள் வளர்ந்து ஆளான பின்பு, யாரோ ஒருவர் அவர்களது விசுவாசத்தைக் குறித்து, கேள்வி கேட்பார்கள். அல்லது அவர்களது வாழ்வில், உடைந்துபோன உறவு, பொருளாதார நெருக்கடி, உடல் நலமின்மை, போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளைச் சந்திக்கும்பொழுது அவர்களது விசுவாசம் ஆட்டம் கண்டுவிடுகிறது. இது எல்லோருக்கும் எப்பொழுதும் நடக்கக்கூடியது. இது எனக்கும் நடந்துள்ளது.

நமது இரட்சிப்பைக் குறித்து, தேவன் செயல்பட இயலும் என்று விசுவாசிக்கிற நாம், நமது வாழ்க்கையின் எதிர்பாராத சூழ்நிலைகளிலும் தேவனால் செயல்பட இயலுமா, உதவி செய்ய இயலுமா என்று சந்தேகப்படுகிறோம். ஏன் அவ்வாறு நடக்கிறது? ஏனெனில், நாம் விசுவாசத்தில் இன்னும் ஆழமாக வளரவில்லை என்று அர்த்தமாகும். நாம் நமது விசுவாசத்தை ஆழப்படுத்தவில்லை, ஏனெனில், நமது விசுவாசத்தை இன்னமும் ஆழப்படுத்துவது எவ்வாறு என்று நாம் போதிக்கப்படவில்லை. அல்லது, ஒருவேளை நமது விசுவாசத்தை சரியான முறையால் ஆழப்படுத்த முயற்சிக்கவில்லை என்பதாகும். இது எனக்கு ஒரு கதையை நினைப்பூட்டுகிறது.

ஒரு போதகர், ஒரு சுவிசேஷகர், ஒரு ஊழியக்காரர் ஆகிய மூவரும் மீன் பிடிக்க ஒரு படகில் ஒரு குளத்திற்குச் சென்றார்கள். காலை முழுவதும் முயற்சி செய்தும் மூவருக்கும் எந்த ஒரு மீனும் கிடைக்கவில்லை. திடீரென சுவிசேஷகர் எழுந்து நின்று அவசரமாகக் கழிப்பறைக்குச் செல்லவேண்டும் என்று கூறி, படகை விட்டிறங்கி, தண்ணீரின் மேல் நடந்து கரையை அடைந்தார். 10 நிமிடங்கள் கழித்து, அவர் போனதுபோலவே தண்ணீரின்மேல் நடந்து திரும்பவும் படகிற்கு வந்தார். சிறிது நேரத்தில் ஊழியக்காரரும் கழிப்பறைக்குச் செல்லவேண்டும் என்று உணர்ந்தார். ஆகவே அவரும் படகை விட்டிறங்கி, தண்ணீரின்மேல் நடந்து கரையை அடைந்தார். அவரும் பத்து நிமிடங்களுக்குள் திரும்ப படகை அடைந்தார். உடனே, போதகர் அவர்கள் இருவரையும் பார்த்தார். அவர்கள் இருவரது விசுவாசத்தைப் போலவே அவரது விசுவாசமும் உறுதியானது என்று தீர்மானம் பண்ணினார். அவர்களைப் போலவே, தானும் தண்ணீர் மேல் நடக்க இயலும் என்று நம்பினார். அவர் எழுந்து நின்று, படகை விட்டு வெளியே காலை வைத்தார். ஆனால் மிகப் பெரிய சத்தத்துடன் தண்ணீரில் விழுந்துவிட்டார். சுவிசேஷகர், ஊழியக்காரரைப்பார்த்து, “தண்ணீ ரில் நடந்துபோவதற்கு பாறைகள் எங்கே உள்ளன என்பதைப்பற்றி அவரிடம் நாம் சொல்லியிருக்க வேண்டும்” என்று கூறினார்.

அதுபோல நாமும் உண்மையை அறியாமல், குருட்டுப் போக்கில், கிறிஸ்தவ விசுவாசத்தில் மூழ்கி இருக்கலாம். ஆனால், நமது விசுவாசம் ஒருக்காலும் குருட்டு விசுவாசமாக இருக்கக் கூடாது என்று திட்டமாகக் கூறுகிறேன். நமது விசுவாசம் ஒருபொழுதும் உணர்வுகளைச் சார்ந்தி ருக்கக்கூடாது. அதாவது நமது விசுவாசம் சோதிக்கப்படத்தக்கதல்ல என்று நான் கூறவில்லை. உண்மையில் அது சோதிக்கப்படத்தக்க ஒன்றாகும், நமது விசுவாசம் உணர்ச்சிகளைமட்டும் அடிப்படையாகக் கொண்டிருந்தால், ஒருவருடைய விசுவாசம்கூட நிலைத்திருக்கக்கூடிய விசுவாசமாக இருக்க இயலாது என்று எண்ணுகிறேன். நீங்கள் நம்புவதற்கு காரணம் வேண்டும். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு அநேக உண்மையான காரணம் உண்டு. அவற்றைப் பற்றி சிந்திப்போம்:

நீங்கள் இயேசுவை விசுவாசிப்பதற்குக் காரணம் என்ன? அதைப்பற்றி நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா?

ஆதித் திருச்சபையில் தூண்களாக இருந்த பவுலையும் யாக்கோபையும் குறித்து சிந்தியுங்கள். அவர்கள் இருவருமே கர்த்தர்மேல் நம்பிக்கை அற்றவர்களாகவும் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாகவும் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். முதலாவது பவுலைப்பற்றிச் சிந்திப்போம். அப்போஸ்தலனாகிய பவுல் திருச்சபைகளைத் துன்பப்படுத்துகிறவனாக ஆரம்பகாலத்தில் இருந்தான். அவனுக்கு திருச்சபையின்மீது அன்பு இல்லை. கிறிஸ்தவர்களை அவனால் பொறுக்க முடியவில்லை. இயேசுகிறிஸ்துவை முற்றிலுமாக வெறுத்தான். இயேசுகிறிஸ்துவின் சத்தியத்திற்கு எதிர்த்து நின்ற அவன் ஒரு யூத மத வெறியன். அவன் நூற்றுக்கு நூறு பரிசேயன். ஆயினும் அவன் சில காரணங்களுக்காக, அவனது கவுரவம், செல்வாக்கு, புகழ், பெருமை, செல்வம் அனைத்தையும் குப்பையாக எண்ணி உதறித் தள்ளினான். ஏதற்காக? இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக அவன் அனைத்தையும் விட்டுக்கொடுத்தான். ஏன் அதைச் செய்தான். அதிக பணம் பெற்றுக்கொள்ளவா? மேலும் அதிகமான வல்லமைக்காகவும், அதிகாரத்திற்காகவுமா? அவர் இன்று அதுபோல் ஒப்புக்கொண்டால், இலவசமாக, நாகரீகமான T சர்ட்டுகள் கிடைக்குமா அல்லது அவருக்கு ஒரு பரிசுச்சீட்டு கிடைக்குமா? இல்லை. அப்போஸ்தலர் 9ம் அதிகாரத்தின்படி சவுல் என்று அழைக்கப்பட்ட பவுல், தமஸ்கு செல்லும் பாதையில், எதிர்பாராத வகையில், அவன் யாரைச் சந்தித்தான்? அவன் மரணத்தினின்று உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவைச் சந்தித்தான். அவன் உணர்ச்சிகளால், கட்டாயப்படுத்தவில்லை. அவன் நம்பிக்கையினால் கட்டாயப்படுத்தவில்லை. அவன் நம்புவதற்கு ஒரு காரணம் இருந்தது. அவன் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டு, அவரைச் சந்தித்தான்.

இரண்டாவதாக நாம் பார்க்கவேண்டியது, யாக்கோபு. இந்த யாக்கோபு, இயேசுவின் ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரன். யாக்கோபு அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரனாகிய இயேசுவை மேசியா என்பதை விசுவாசிக்கவில்லை என்பதை உணர்ந்தீர்களா? இயேசு, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை யாக்கோபு விசுவாசிக்கவில்லை. உண்மைதானா? ஆம், உண்மைதான் யோவான் 7:5 அதை அறிவிக்கிறது: “அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.” அதை நம்புவதற்குக் கடினமாக உள்ளதல்லவா? அதாவது, நீங்கள், உங்களை, இயேசுவின் சகோதரராகக் கற்பனை செய்ய இயலுமா? அது மிகவும் கடினமான காரியமாகும். இயேசு எந்த ஒரு வேலையைச் செய்தாலும், மிகவும், ஒழுங்காகவும், சிறப்பாகவும் செய்தார். அவரது செயல்பாடுகளைப்பற்றி யோசிக்கும் பொழுது, அனைத்தும் மிகவும் தலை சிறந்ததாக இருந்தன, இயேசுவின் சகோதரர்களாகிய யாக்கோபும், யூதாவும் பின் முற்றத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தபொழுது, அவர்களது தாயாராகிய மரியாள் வெளியே வந்து, வழக்கம்போல, “பிள்ளைகளே, இயேசு, இவ்விடத்தில் இருந்தால் என்ன செய்வார்?” என்று வழக்கம்போலக் கேட்டு இருப்பாள். அதாவது, அவர்கள் அனைவருமே இயேசு தனித்தன்மை வாய்ந்தவர் என்று எண்ணினார்கள். ஆனால் இயேசு தான் மேசியா என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. அதாவது, இயேசு மரித்தோரிலிருந்து எழுந்து, அவர்கள் முன் தோன்றின வரை, அவரை மேசியா என்று அவர்கள் நம்பவில்லை. இயேசு தான் மேசியா என்று யாக்கோபு எப்பொழுது விசுவாசித்தாரோ, அப்பொழுதிலிருந்து, அவரது யூதமத வெறியிலிருந்து விடுபட்டு, திருச்சபைகளை ஸ்தாபிக்கிறவராக மாறிவிட்டார். இது எவ்வளவு பெரிய ஆச்சரியம்!

பரிசுத்த ஆவியானவரின் பயனுள்ள அழைப்பைப்பற்றி நாம் இவ்வேளையில் அறிந்துகொள்வது அவசியம். பரிசுத்த ஆவியானவர்மட்டும்தான் இரட்சிப்பை செயல்படுத்துகிறவராக உள்ளார். நாம் அதை நம்பவேண்டும். பவுல் இந்தக் காரியம் குறித்து 1 கொரிந்தியர் 3: 5-8ல் தெளிவாகக் கூறியுள்ளார்:

“பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார். அப்படியிருக்க நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச் செய்கிற தேவனாலே எல்லாமாகும் மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள். அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலி பெறுவான்.”

தேவன் நம்மை வைத்துள்ள இடங்களில், குறிப்பிட்ட நோக்கங்களோடு நாம் வாழவேண் டும். இருளிலே வெளிச்சமாக இருக்கவேண்டும். சுவிசேஷமாகிய விதையை விதைக்கவேண்டும். நமது சாட்சியுள்ள வாழ்க்கையின் மூலம் அதற்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆனால், அதை விளையச் செய்கிறவர் தேவன். அதாவது, இரட்சிக்கிறவர் தேவனே!

இப்பொழுது, மறுபடியும் உங்களில் சிலர், நம்மைத் தேவன் தெரிந்தெடுக்கவில்லையா என எண்ணுகிறீர்கள். ஆம், அவர் நம்மைத் தெரிந்தெடுத்துள்ளளார். எபேசியர் 1, ரோமர் 8, யோவான் 6 மேலும் சில வேதாகமப் பகுதிகள் இதுபற்றி தெளிவாகப் போதிக்கின்றன. ஆகவே நமது சுய சித்தமும், தேவனுடைய வல்லமையும் இணைந்து செயல்படவேண்டும். அது அப்படித்தான் செயல் படவேண்டும். ஆனால் அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அது ஓர் இரகசியம்! ஆகவேதான், நான் அல்ல, தேவன்தான் தேவனாக இருந்து செயல்படுகிறார்.

நீங்கள் இரட்சிக்கப்பட்டபின் சீஷத்துவத்தைப் பற்றிய தெய்வீக அறிவு இல்லாமலேயே வளர்ந்திருப்பீர்கள். ஆகவே தான் நாங்கள், அதாவது “வேதாகமத்திற்குத் திரும்புக” என்ற ஸ்தாபனத்தின் மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பொதுவாக அநேகரைப் போல, நீங்களும், சற்று சோம்பலாகவோ, எந்தவிதமான பாதிப்பையும் விரும்பாதவர்களாவோ இருக்கலாம். அதாவது, அதுபோலதான் நம்மில்அநேகர் இருக்கிறோம் என்று கூறுகிறேன். இன்றையத்தினம் நமது கவனம் சிதறப்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். நமது வாழ்க்கையின் செயல்பாட்டு முறையை இக்கால நவீன கைபேசிகள் (Mobile Phone) சிதைத்து சீரழிக்கின்றன. சமூக வலை தளங்கள், இணைய தளங்கள், யூடியூப் போன்ற இந்த நவீன செயலிகள் தேவனுடைய வார்த்தையின் ஐசுவரியத்தை நாம் உணரவிடாமல் நம்மைத் தடுக்கின்றன.

வாசிப்பதற்கு, வேதாகமம்தான் தலை சிறந்த ஆச்சரியமான புத்தகம் என்பதை உண்மையில் நாம் நம்புகிறோம். வோதாகமத்தில் அதிகமான அளவு, நம்பிக்கை, மீட்பு, துன்பங்கள், இரத்தம், செயல்பாடுகள், மேலும் அன்பு ஆகியவை HBO அல்லது அமேசான் பிரைம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் காட்டப்படுவதைவிட அதிகம் காணப்படுகின்றன. அதில் தலைசிறந்தது என்னவெனில், அதில் கூறப்பட்டுள்ள காலத்திட்குட்படாத கொள்கைகளாகும்.

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் உண்மை நிகழ்வுகள். அவற்றில் ஆழமான அர்த்தமும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் உள்ளன. அவற்றோடு எதையும் ஒப்பிடமுடியாது. ஆகவே, இன்று கிறிஸ்தவர்களாக நாம் வேதாகமத்திற்கு திரும்ப வேண்டும் என்று நாங்கள் உங்களை அழைக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறப்போனால், நீங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பூரணராகவும். உங்கள் விசுவாசத்தில் இன்னமும் ஆழமாகவும் வளர உங்களை அழைக்கிறோம். ஆகவே, பவுல் 1 தீமோத்தேயுவில் கூறியுள்ளபடி, கர்த்தரைப் பற்றிய அறிவிலும், விசுவாசத்திலும், நாம் இன்னமும் அதிகமாக பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமது விசுவாசத்தை நாம் இன்னமும், அதிகரிக்க நாம் செய்யவேண்டிய மூன்று ஆலோசனைகளை உங்களுக்குத் தருகிறேன்.

i. விசுவாசத்தில் நீங்கள் ஆழமாய் வளர்வதற்கு வேத வசனங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்களில் சிலர் என்ன நினைக்கின்றீர்கள் என்று அறிவேன். பிரசங்கிமாரும், போதகர்களும் வேதாகமத்தை வாசியுங்கள், தேவனுடைய வசனத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று எப்பொழுதும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள் ஆம், ஆம், நாமும் அதைச் செய்கிறோம். ஏன் நாம் வேதத்தை வாசிக்கிறோம்:

முதலாவது, தேவனுடைய வார்த்தைகள் தேவனால் கூறப்பட்டவையாகும். அவை நம்மை நீதியின் பாதையில் நடத்துவதற்கு உரியவையாகும். அது தேவனுடைய வார்த்தைகள்!

இரண்டாவதாக, நீங்கள் வேதாகமத்தைப் படியுங்கள் என்று கூறுகிறோம். ஏனென்றால், நாம் அவ்வாறு செய்யவேண்டும் என்று தேவன் கூறியுள்ளார். “இரவும், பகலும் அதை தியானித்துக்கொண்டிருப்பாயாக” என்று யோசுவா 1:8, கூறுகிறது.

இறுதியாக, நான் கூறுவதென்னவென்றால், கிறிஸ்தவர்களில் அநேகர், வேதாகமத்தை வாசிப்பதில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். ஆகவே, வேதாகமத்தின் அடிப்படையில் அவர்களுக்கு சிந்திக்கத் தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவேதான், வேதாகமத்திற்குத் திரும்புங்கள் என நாங்கள் உங்களை அழைக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம் என்று ஒழுங்காக வாசியுங்கள், தியானியுங்கள்.

ii. விசுவாசத்தில் நீங்கள் ஆழமாய் வளர்வதற்கு பிறருடைய விசுவாச வாழ்க்கையைப்பற்றி அறிந்துகொள்வது அவசியமாகும்.

ஓர் நோயாளியிடம், புதுவிதமான ஓர் நோயைக் கண்டறியும்பொழுது ஓர் மருத்துவர் என்ன செய்வார்? அவர் மருத்துவ பத்திரிக்கைகள், முன்பு பதிவு செய்யப்பட்ட மருத்துவ முறைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை தீர ஆராய்ந்து, ஆவணப்படுத்தப்பட்ட இப்படிப்பட்ட நோய்களுக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என சிந்திப்பார். இது அந்த நோயாளிக்கு சிகிச்சை செய்ய பெரிதும் உதவும், இதுவே நமக்கும் பொருந்தும். பிற கிறிஸ்தவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளைச் சமாளித்தார்கள் என்றும், அவர்கள் விசுவாசம் அதைக் கடந்து வர எவ்விதம் உதவியாக இருந்தது என்றும் அறிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளான, சந்தித்த உலகப்பிரகாரமான சச்சரவுகள், காரியங்கள் வேலையிழப்பு, பொருளாதாரப் பின்னடைவு, மனரீதியாக, சரீரப்பிரகாரமான நோயின் தீவிரப் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளைச் சந்தித்து வெற்றி பெற்றவர்களின் சாட்சிகளைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அப்படிப்பட்ட பிரச்சனைகளின் மூலமாகக் கடந்துசென்று தங்கள் விசுவாசத்தின் மூலம் வெற்றிபெற்ற கிறிஸ்தவர்கள் உண்டு என்று நான் நிச்சயமாக உறுதி கூறுகிறேன் அவர்களின் சாட்சியும், ஆலோசனையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

iii. விசுவாசத்தில் நீங்கள் ஆழமாய் வளர்வதற்கு கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரிடையாக வரும் அனைத்தையும் வாதத்தின் மூலமோ, சாதாரண பேச்சு வார்த்தையின் மூலமோ தற்காத்துக்கொள்ள படியுங்கள்.

அதாவது, அப்போலொகெடிக்ஸ் (Apologetics) கற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு சொல்லுவது உங்களுக்கு ஓர் அதிர்ச்சியைத் தரும் செய்தியாய் இருக்கலாம். அவரவர் தங்கள், கொள்கைகளை வாதங்கள் மூலமாகவும், சொற்பொழிவுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கருத்துக்களைப் பிறர் மீது திணிக்கும் ஓர் சந்தையாக செயல்படும் இச்சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில், நாம் எதை விசுவாசிக்கிறோம், எதற்காக அதை விசுவாசிக்கிறோம் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். நமது விசுவாசத்தைத் தற்காத்துக்கொள்ள நாம் எதை, எதற்காக விசுவாசிக்கிறோம் என்பதைத் தெளிவாகக் கூறக்கூடிய மனநிலையில் இருக்கவேண்டும் என்பதே இந்த அப்போலியாகெடிக்ஸ் வார்த்தையின் பொருளாகும். உங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிற்பதற்கு தங்களுக்கு கால்கள் உண்டா என்பதை நேரமெடுத்து ஆராய்ந்து பாருங்கள்.

நமது ஆவிக்குரிய வாழ்வில் உறுதியாய் நிற்பதற்கு உதவிகரமாக உள்ள மற்ற இரண்டு நங்கூரங்களைக் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம். மகிமைப்படுத்துவோம்!

மொழியாக்கம்: Mrs.Sweetleen / Mrs.Jeya Suseelan

சத்தியவசனம்