தேவனுக்கு எதிராகப் புரட்சி

சகோ.பிரேம்குமார்
(மே-ஆகஸ்ட் 2020)

(ஆதியாகமம் 11:1-26)


மனிதன் சிருஷ்டிக்கப்பட்டது முதல் பாபேல் கோபுர வேலை நிறுத்தப்பட்டது வரை மக்கள் ஒரே பாஷையைப் பேசினார்கள், “பூமியெங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சும் இருந்தது” (ஆதி.11:1) அவர்கள் பேசிய அந்தப் பொதுவான பாஷை எபிரேய பாஷையாக இருக்கும் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் பேசிய பொதுவான பாஷை எதுவென வேதம் தெளிவாகக் கூறவில்லை. எல்லோரும் ஒரே பாஷையைப் பேசியதால் அங்கு மொழிப் பிரச்சனைக்கு இடமிருக்கவில்லை.

ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக் கண்டு, அங்கே குடியிருந்தார்கள் (ஆதி. 11:2). தமிழ் வேதாகமத்தில், ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில் என எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதன் சரியான அர்த்தம் கிழக்கை நோக்கிப் பிரயாணம் பண்ணுகையில் என்பதாகும். ஆதாம், ஏவாள் பாவம் செய்து ஏதேனைவிட்டு துரத்தப்படுகையில் கிழக்கே போனார்கள் (3:24). காயீன் ஆபேலை கொலை செய்து தேவனால் தண்டிக்கப்பட்டபோது, அவன் தேவபிரசன்னத்தைவிட்டு ஏதேனுக்குக் கிழக்கே போய் குடியிருந்தான் (4:16), லோத்து ஆபிரகாமை விட்டு பிரிகையில் கிழக்கே பிரயாணப்பட்டு போகிறார்கள்.

நோவாவின் சந்ததி முழுவதும் இப்படி கிழக்கே போனார்களோ அல்லது சேயின் சந்ததி போகாமலிருந்ததோ நாம் அறியோம். அவர்கள் கிழக்கே போகையில் இதெக்கேல், ஜபிராத்து நதிகளுக்கிடையில் அமைந்துள்ள செழிப்பான “சிநேயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு அங்கே குடியிருந்தார்கள்”. சிநேயார் என்பது பாபிலோனியாவாகும் (சகரியா 5:11, தானியேல் 1:2). அது நதிகளுக்கிடையில் இருந்ததால் செழிப்பாக, கவர்ச்சி கரமானதாக இருந்திருக்கும்.

சிநேயார் தேசத்தைக்குறித்து ஆதி 10:10இலும் வாசிக்கிறோம். ஆதி.10:8-12 வரையான பகுதியிலிருந்து நிம்ரோது என்பவன் தான், பாபிலோனியாவை ஸ்தாபித்தவன் என்று புலப்படுகிறது. நிம்ரோது, ஸ்தாபித்த ஆரம்ப ராஜ்யம் பாபேல் (பாபிலோன்) (ஆதி.10:10) காண்கிறோம். எனவே காமின் சந்ததியானான இந்த நிம்ரோத்தின் தலைமையில் இந்த பாபேல் கோபுரம் கட்டப்பட்டிருக்க வேண்டும். நிம்ரோத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட பாபிலோன் நேபுகாத்நேச்சரின் காலத்தில் அதன் மகிமையின் உச்ச நிலையை அடைந்தது. பின்னர் இந்த பாபிலோன் தேவனுக்கு எதிரான அமைப்புக்கும், பெருமைக்கும் தேவனற்ற சமுதாயத்திற்கும் திருஷ்டாந்தமாகியது.

ஆதியாகமம் 11ஆம் ஆதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள தேவனுக்கு எதிரான புரட்சியில் இரண்டு திட்டங்கள், இரண்டு நோக்கங்கள், இரண்டு செய்கைகள் இடம்பெற்றிருப்பதைக் காண முடியும்.

அ. இரண்டு திட்டங்கள்

“அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது” (ஆதி.11:3). கானானிலே கட்டிட வேலைகளுக்கு கல்லும், சாந்தும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், புதைப்பொருள் ஆராய்ச்சிகள் குறிப்பிடுவதுபோல மெசப்பொத்தேமியாவில் கல் பற்றாக்குறையாய் இருந்ததால் அவர்கள் கல்லுக்குப் பதிலாக செங்கல்களையும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் பயன்படுத்தினார்கள். பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப் போகாதபடி நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி …” (ஆதி.11:4) என வாசிக்கிறோம்.

இங்கு அவர்கள் இரண்டு கட்டிடத்திட்டங்களை செய்ய முனைந்தார்கள் என காண்கிறோம்.

1. ஒரு நகரம்,  2. ஒரு கோபுரம்

அவர்கள் கட்ட எண்ணிய கோபுரத்தை ஒத்த கோபுரங்கள் மெசத்பொத்தேமியாவில் இருந்தன. பாபிலோனியாவின் சிறப்பையும் இந்த உயரமான கோபுரங்கள் வெளிப்படுத்துகிறது. இந்த கோபுரங்கள் ஷிகரட் (Ziggurats) என்று அழைக்கப்படும். இது கீழே சதுரமாயும் உயர, உயர சுற்றளவு குறைந்து போய் அதன் சிகரத்தில் ஒரு கோயிலையும் கொண்டிருக்கும். அதன் சுற்றுப்புரம் படிகள் போல காணப்படும். இக்கோபுரங்கள் வானத்திற்கும், பூமிக்குமுள்ள ஏணிபடிகள் போல எண்ணப்பட்டது.

ஆ. இரண்டு நோக்கங்கள்

ஒரு நகரத்தை கட்டுவதிலோ அல்லது கோபுரத்தைக் கட்டுவதிலோ எந்தத் தவறும் இல்லை. ஒரே மொழி பேசும் மக்கள் ஒரே நோக்குடன் ஐக்கியமாக ஈடுப்பட்டதும் தவறில்லை. அவர்கள் ஒற்றுமை, பலத்திற்கு அடையாளம். உண்மையில் ஒரே நோக்குடன் ஒற்றுமையாக ஒரு முயற்சியில் ஈடுபடுவது நல்ல காரியமே! அப்படியானால் பாபேலை கட்டியவர்கள் செய்த தவறு என்ன? தேவன் ஏன் அவர்களைத் தண்டித்தார்? என்பதை 4ம் வசனம் தெளிவுபடுத்துகிறது. “நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு நமக்கு ஒரு நகரத்தையும் வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்கு பேர் உண்டாகப்பண்ணுவோம்” (வச.4).

அவர்கள் கட்டிய கட்டிடத்திலல்ல, அவர்கள் கட்டிய நோக்கத்திலேயே தவறு இருந்தது. அவர்கள் இரண்டு நோக்கங்களுக்காக நகரத்தையும், கோபுரத்தையும் கட்டினார்கள்.

1. அவர்கள் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாமலிருக்க, 2. அவர்களுக்குப் பேர் உண்டாக்க,

தேவன் நோவாவிடமும் அவன் குமாரரிடமும் “நீங்கள் பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள்” (ஆதி.9:1) என்றார். அதாவது அவர்கள் சந்ததி பெருகி பூமி முழுவதும் பரந்திருக்க வேண்டும் என்கின்றார் அப்படியிருக்க பூமியை நிரப்ப வேண்டிய இவர்கள் தாங்கள் பூமி முழுவதும் சிதறிப் போகாதபடி ஓரிடத்தில் இருக்க முற்பட்டனர், இது தேவ திட்டத்திற்கு எதிரான செயற்பாடு.

இன்று கிறிஸ்தவர்களிலும் அநேகர் தேவன் எதனைச் செய்யச் சொல்லுகிறாரோ அதனைச் செய்யாமல் தேவன் எதனைச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறாரோ அதனைச் செய்கிறதைக் காண்கிறோம்.

அவர்கள் தங்களுக்கு பேர் உண்டாகப் பண்ணுவதற்காக அவற்றைக் கட்டினார்கள். அந்தக் கோபுரம் அவர்களுக்குப் பாதுகாப்பு அரண் மட்டுமல்ல, அவர்கள் சாதனையின் உச்சக்கட்டமாயும் இருக்கும் என நம்பினர். பழைய ஏற்பாட்டில் பெயர் முக்கிய இடம் வகிக்கிறது. பெயர் ஒருவனது சுபாவத்தை, நற்பெயரை, புகழை, கீர்த்தியை குறிக்கும். எனவே தங்களுக்குப் பெயர்வர வேண்டும் என காரியங்கள் செய்தார்கள்.

நோவா இவர்களைப்போல தனக்கு பெயர் உண்டாக்க எத்தனியாமல் கர்த்தருடைய நாமத்தைத் (பெயரை) தொழுது கொண்டான். ஆனால், பாபேலைக் கட்டினவர்களோ தேவனுக்குப் புறம்பாக தங்களுக்குப் பெயர் உண்டாக்க நினைத்தனர். ஆபிரகாம் தன் பெயரை பெருமைப்படுத்த எண்ணவில்லை, ஆனால் கர்த்தர் ஆபிரகாமை நோக்கி “நான்……உன்னை ஆசீர்வதித்து, உன் பேரை பெருமைப்படுத்துவேன்” என்றார் (ஆதி 12:2). ஆனால், பாபேலைக் கட்டியவர்களோ தங்கள் பெயரை பெருமைபடுத்த நினைத்தனர். 3ஆம், 4ஆம் வசனங்களில் “நாம்” “நமக்கு” என்ற சொற்கள் பலமுறை வருகிறது. இது அவர்களின் சுயநலம் நிறைந்த பெருமை மிக்க மனோபாவத்தைக் காட்டுகிறது.

இதனை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே நீ உனக்கு பெயர் உண்டாக்கும், உன்னை பிரபல்யப்படுத்தவும் காரியங்களைச் செய்கிறாயா? அல்லது தேவன் உன் பெயரை உயர்த்தும்படி அவரது பலத்த கைக்குள் அடங்கியிருக்கிறாயா? உனக்காக உன் பெயரை உயர்த்த சபைகளை ஸ்தாபித்து, ஊழியங்களை பெருக்குகிறாயா? அல்லது கர்த்தருடைய நாம மகிமைக்காக செய்கிறாயா? நீ உனக்காக பாபேல்களை கட்டுகிறாயா என உன்னையே ஆராய்ந்து பார்.

இன்று சிலர் எல்லா மதங்களும் ஒன்றுசேர வேண்டும் என்றும் சபைகள் எல்லாம் ஒன்று பட்டு ஓர் அமைப்பாக இயங்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அடிப்படையான உபதேசத்தில் குழப்பங்கள் இல்லாவிட்டால் சபைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது நல்ல காரியமே. ஆனால், சத்தியத்தை கிரயமாகச் செலுத்தி சமாதானத்தைப் பேண எல்லாவற்றையும் ஒன்று கூட்டுவது தவறு. சத்தியத்திற்கு எதிராக ஐக்கியமாயிருப்பதிலும் பிரிந்திருப்பது சரியானது (லூக்கா 12:51). தேவனோடுள்ள உறவே நம் ஐக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கவேண்டும். பாபேலைக் கட்டியவர்களைப்போல தேவ சித்தத்திற்கு எதிராக ஒன்றுபடுவது கிறிஸ்தவ ஐக்கியமல்லவே.

பாபேலைக் கட்டியவர்கள் தேவனுக்கு எதிராக தேவனுடைய இடத்தில் தங்களை வைத்து தங்களுக்கு பெயர் உண்டாக்க நினைத்தார்கள். அவர்கள் தேவனையும் அவரது சித்தத்தையும் புறக்கணித்து சுயசித்தப்படி சுயபுகழ்ச்சிக்காக காரியங்களைச் செய்தார்கள். அவர்கள் தேவன் தங்களுக்கு வேண்டாம் என்பதுபோல தேவனற்ற சமுதாயமாக சுய நலத்திற்கும், சுய புகழ்ச்சிக்குமாக தேவனுக்கு எதிராக புரட்சி செய்தார்கள். மனிதன் தேவனை அகற்றிவிட்டு தேவனுடைய இடத்தை தான் பிடிக்க முற்பட்டதை இங்கு காண்கிறோம்.

தேவன் மனிதனை தனது மகிமைக்காக படைத்தார். மனிதன் தேவனோடு உறவுகொண்டு வாழ வேண்டும் என்பதற்காகப் படைத்தார். ஆனால், மனிதனோ தேவனுக்கு கீழ்படிய விரும்பாமல் தான் படைக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து தன் மகிமைக்காக வாழும் இந்த நிலைமை பாபேலைக் கட்டிய அன்றைய மனிதருக்கு மட்டுமல்ல, இன்றைய உலகில் வாழும் அநேகருக்கும் பொருந்தும்.

“மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்ப்பதற்கு கர்த்தர் இறங்கினார்” (ஆதி.11:5). வானத்தையும் அளாவும் சிகரமுள்ள கோபுரத்தைக் கட்ட எண்ணினார்கள். ஆனால் தேவனோ இறங்கி வரவேண்டியதாயிருந்தது. கர்த்தர் நடக்கும் காரியங்களை இறங்கி வந்துதான் அறிந்தார் என்பதை இது குறிக்கவில்லை. தேவன் எல்லா இடத்திலும் ஒரே சமயத்தில் இருக்கக் கூடியவர், எல்லாவற்றையும் அறிந்தவரும் அறிபவரும் ஆவார். எனவே, இறங்கி வந்தார் என்பது, நடந்த காரியங்களைக் குறித்து தேவன் அலட்சியமாக இருக்கவில்லை. அவற்றை பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கு தனது விசேஷ கவனத்தைச் செலுத்தினார் என காட்டுகிறது. தேவன் அவர்கள் கட்டும் கோபுரத்தை மாத்திரமல்ல, அவர்கள் கட்டும் நோக்கத்தையும் அறிந்திருந்தார்.

இன்று நாம் செய்யும் காரியங்களில் மட்டுமல்ல, நமது நோக்கங்களையும் தேவன் அறிந்திருக்கிறார். அநேகர் பிழையான நோக்குடன் சரியான காரியத்தை செய்வதுண்டல்லவா? கிறிஸ்தவர்கள்கூட மற்றவர்கள் தங்களைப் பாராட்ட வேண்டும், தங்களைப் பெரிய பரிசுத்தவான்களாக எண்ணவேண்டும் என்றுகூட பெரிய சேவைகளையும் ஊழியத்தையும் செய்வதை நாம் காணக் கூடியதாகவுள்ளது. சில ஊழியர் தாங்கள் பாவத்தில் விழுந்த பின்பாக தம் பாவத்தை அறிக்கையிட்டால் நற்பெயர் கெட்டுவிடும் என்றும், ஊழியத்தை நிறுத்தினால் மற்றவர்கள் சந்தேகப்பட நேரிடும் என்று ஊழியத்தைத் தொடர்ந்தும் செய்து வருகின்றனர். ஒருநாள் நம் அந்தரங்க நோக்கங்கள் பகிரமங்காகும். சுயமகிமைக்காக செய்யப்படும் ஊழியங்கள் இயேசுவின் வருகையில் நிருபணமாகும். அவர் நம் கிரியைகளை நியாயந்தீர்ப்பார்.

“அப்பொழுது கர்த்தர் இதோ ஜனங்கள் ஒரே கூட்டமாயிருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைப்படமாட்டாது என்று இருக்கிறார்கள்” (ஆதி.11:6) என்பதை தேவன் கண்டார். மனிதர் ஒன்று கூடுகையில் அங்கு பெரிய வல்லமையுள்ளது என்பதை மறப்பதற்கில்லை. ஆனால் மனிதர் தேவனுக்கு விரோதமாக ஐக்கியப்பட்டு சாதனை படைக்க நினைத்தனர். அவர்கள் சாதனை வானத்தை எட்டும் என நினைத்தனர். ஆனால் அவர்கள் பாவமே வானத்தை எட்டியது. மனிதன் தேவனுக்கு எதிராக புரட்சி செய்து தேவனுக்கு சமமாகக் கூடுமோ? கர்த்தருக்கு விரோதமாக ராஜாக்கள் கூட்டம் கூடி கர்த்தரை மேற்கொள்ள நினைத்தார்கள். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர், நகைப்பார் (சங்.2:4) என சங்கீதத்தில் காண்கிறோம். மனிதபலம் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் தேவனை மேற்கொள்ளமுடியாது. தேவன் அவர்கள் திட்டங்களை அவமாக்குவார். தேவன் எல்லா சக்திக்கும் மேலான சக்தி கொண்டவர். தேவன் மனித புரட்சியால் கலங்கிவிடுபவர் அல்ல.

இ. இரண்டு செய்கைகள்

“நாம் இறங்கிப் போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையை தாறுமாறா ஆக்குவோம் என்றார்” (ஆதி.11:7). இங்கு தேவன் யாருடன் பேசுகிறார்? “நாம்” என்று பன்மையில் குறிப்பிடுவது ஏன்? அவர் இயேசுகிறிஸ்துவையும் பரிசுத்த ஆவியையும் சேர்த்து “நாம்” என்று கூறுகிறார் என இதனை பொருள்படுத்தலாம். தேவனுக்கு எதிராக ஐக்கியப் பட்ட மனிதரை தண்டிக்கும் முகமாக தேவன் இரண்டு காரியங்களை செய்கிறார்.

1. அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார் (வச.7)

2.  அவர்களை பூமி மீதெங்கும் சிதறிப்போக பண்ணினார் (வச: 8).

ஒருவர் பாஷையை ஒருவர் புரிந்துக்கொள்ள முடியாமல் செய்தார். ஒருவர் பேசுவதை மற்றவரால் புரிந்துகொள்ள முடியாமல் இருந்த அந்த சூழ்நிலை மிகவும் வேடிக்கையாய் இருந்திருக்கும். தேவனுக்கு எதிராக ஒன்றுகூடி சாதனை படைக்க நினைத்தவர்களின் வேலை பாதியிலே நிறுத்தப்பட்டது. தேவ சித்தத்திற்கு எதிரான சாதனை வேதனையில் முடிந்தது என்றால் பிழையாகாது.

தேவ சித்ததிற்கு கீழ் ஒன்று கூடுவது ஆசீர்வாதத்தைத் தரும். பெந்தேகொஸ்தே நாளிலும் விசுவாசிகள் தேவசித்தத்திற்குள்ளாக ஒன்று கூடி ஆசீர்வாதம் பெற்றார்கள். ஆனால் தேவ சித்தத்திற்கு முரணாக ஒரே பாஷையை பேசி ஒன்றுகூடி பாபேலை கட்டியவர்களை தண்டித்த தேவன், தேவ சித்தத்திற்குட்பட்ட, பல பாஷைகள் பேசிய விசுவாசிகளை பெந்தேகொஸ்தே நாளில் ஆசீர்வதித்தார்.

தேவனுக்கு எதிராக மனிதர் செய்யும் எந்த காரியத்தையும் தேவன் அறிந்திருக்கிறார். மனிதன் தேவனை நிராகரித்து தேவ சித்தத்தை புறக்கணித்து தனக்காக வாழ்க்கையில் தேவன் அதனைக் குறித்து அலட்சியமாயிருப்பதில்லை. மனிதன் சுயசித்தத்தை விட்டு, தேவசித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, தேவ மகிமைக்காக வாழும்படி மனந்திரும்ப வேண்டும் என்று நீடிய பொறுமையுடன் காத்திருக்கிறார் என்பது உண்மை. ஆனால் மனிதன் சுயசித்தத்தை திருப்திப்படுத்தி சுய பெருமைக்காக வாழ்ந்துகொண்டே இருப்பானானால், தேவன் பாபேலை கட்டியவர்களை தண்டித்ததுபோல அவனையும் நிச்சயம் தண்டிப்பார். தேவனுக்கு கீழ்ப்படியாமல் தேவனுக்கு எதிராக செயல்படுவது எப்பொழுதுமே தண்டணையில் முடியும். ஒருவன் தேவ திட்டத்தை உடைக்க முற்பட்டால் அவன் தேவ தண்டனைக்கு உட்படுவது நிச்சயம்.

“பூமியெங்கும் வழங்கின பாஷையை கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால் அதின் பெயர் பாபேல் எனப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமி மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்” (ஆதி. 11:8). பாபேல் என்பதன் மூல அர்த்தம் தேவனிடம் செல்வதற்கான “ஒரு வாசல்” என்று பொருள்படும். ஆனால் பாபேல் குழப்பத்திற்கு பயன் படுத்தப்படும் எபிரேயர் சொல்லுக்கு ஒத்ததாகும். எனவே பாபேல் என்றால் “குழப்பம்” அல்லது “தாறுமாறு” என்றும் அர்த்தப்படும். அவ்விடத்தில் தேவன் அவர்களைப் பாஷைகளை தாறு மாறாக்கியபடியால் அது பாபேல் எனப்பட்டதாக காண்கிறோம். இந்த பாபேல், பாபிலோன் ஆகும். இந்த பாபிலோன் பின்னர் பாபிலோனியாவின் தலைநகரமாக மாறியது.

தேவனை நிராகரித்து தேவனுடைய திட்டத்தை முறிக்கவும் தேவனுடைய இடத்தை எடுக்கவும் முற்பட்ட புரட்சிக்கு பாபேல் அடையாளமாகியது. பூமியை நிரப்புமாறு தேவன் கூறிய கட்டளையை மீறி தேவ திட்டத்தை உடைக்கும் முகமாக ஒரு இடத்தில் சேர்ந்து தமது பெயரை உயர்த்த நினைத்தனர். ஆனால் தேவனோ அவர்கள் பாஷையை தாறுமாறாக்கி அவர்கள் ஐக்கியத்தை உடைத்து அவர்களை பூமியெங்கும் சிதறச்செய்து தமது திட்டத்தை நிறைவேற்றினார். புதிய ஏற்பாட்டிலும் இயேசு, பரிசுத்த ஆவியை பெற்ற பின்பாக உலகெங்கிலும் சுவிசேஷத்தை அறிவிக்குமாறு கட்டளையிட்டிருக்க (மத்.28:18-20) சீஷர்கள் எருசலேமிலேயே இருந்துவிட்டார்கள். அப்பொழுது தேவன், ஸ்தேவானின் மரணத்தின் மூலம் உபத்திரவத்தை அனுமதித்து அவர்களை எருசலேமை விட்டு வெளியே சிதறிப்போகும்படி செய்து அதன் மூலம் தமது திட்டத்தை நிறைவேற்றினார். எனவே மனுஷ முயற்சிகள் ஒருபோதும் தேவ திட்டத்தை அசைக்க முடியாது என்பது உறுதி.

பாபேல் கோபுரத்தை பற்றிய சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் உண்டு. நோவாவின் சந்ததியார் வெள்ளத்தை மறவாதபோதிலும் அந்த வெள்ளத்தின் பாடங்களை மறந்து திரும்பவும் தேவனுக்கு எதிராக செயல்பட்டனர். நாமும் கடந்த காலங்களில் நடந்தவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வது மிக அவசியம். வேதாகமத்தின் சம்பவங்கள் நம் அறிவை பெருக்குவதற்காக மாத்திரம் கொடுக்கப்படவில்லை. அவற்றிலிருந்து நாம், பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும், எச்சரிப்படைய வேண்டும் என்பதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது. “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்கு சம்பவித்தது. உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாகும்படி எழுதப்பட்டும் இருக்கிறது” (1கொரி 10:11). எனவே நாம் வேதாகமத்தின் பாடங்களை ஒருபோதும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

பாபேலை கட்டியவர்களின் அடிப்படைப் பாவம் தேவனையும் அவரது சித்தத்தையும் புறக்கணித்து தேவனற்ற சமுதாயமாக தமது பெருமைக்காக சுயநலத்துடன் தேவனுக்கு எதிராக செயல்பட்டதேயாகும். அன்பானவர்களே, இன்று நாம் செய்யும் காரியங்கள் எப்படிப்பட்டவை? அவை தேவ சித்தம் என்ற வரம்பிற்குள் செய்யப்படுபவையா? அல்லது தேவ சித்தத்திற்கு முரணாக அவர் வழி நடத்துதல் இல்லாமல் சுயப்பெருமைக்காக செய்யப்படுவதா? நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அதன் நோக்கத்தையும்கூட தேவன் அறிந்திருக்கிறார். எனவே நாம் செய்யும் ஊழியங்களையும் என்ன நோக்கத்தோடு செய்கிறோம் என்று ஆராய்ந்து பார்ப்போம். நமக்காக சபைகளை பாபேல் போல் கட்டுகிறோமா? அல்லது தேவ நாம மகிமைக்காக செய்கிறோமா?

தேவனுக்கு கீழ்படியாமல் அவரை நம் வாழ் வைவிட்டு தள்ளிவிட்டு நமது வழியில் ஜீவிப்பது எப்பொழுதுமே தண்டனையில் முடியும். தேவன் இவ்வுலகை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். எனவே அவருக்கு எதிராகச் செய்யும் எதுவும் வாய்க்காதே போகும். நாம் தேவ சித்தத்திற்கு முன்பாக நமது சித்தத்தைக்கொண்டு தேவனுடைய வழிகளைச் சிந்தியாமல் நமது வழிகளில் காரியங்களை செய்ய எத்தனித்த சந்தர்ப்பங்களை எண்ணிப்பார்ப்போம். அவற்றைத் திருத்திக்கொள்வோம். நமக்கு பெறுமதிப்பை தேவனில் தேடுகிறோமா? அல்லது நமது சாதனைகளில் தேடுகிறோமா? என சிந்தித்து பார்ப்போம்.

பெருமை நம்மை அழிக்கும் கொடிய பாவமாகும். சாத்தானில் தொடங்கி ஆதாம் ஏவாளில் தொடர்ந்து இன்றும் அநேக ஊழியர்களைக்கூட பாவத்தில் விழத்தட்டும் ஒரு காரியம் பெருமையாகும். நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது? எல்லாம் தேவ கிருபையாய்த் தந்த கொடைகள் அல்லவா! “பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்”. எனவே பெருமையை நம்மை விட்டு அகற்றுவோம். நாம், தாழ்மையே உருவாகக்கொண்ட இயேசுவை நோக்கிப் பார்ப்போம். நாம் செய்யும் எல்லாவற்றையும் தேவ மகிமைக்கென செய்வோம்.

ஆதி 11:10-26 வரையான பகுதியில் சேமின் சந்ததியைப்பற்றி வாசிக்கிறோம். சேம் தொடங்கி ஆபிரகாம் வரையுள்ள பத்து தலைமுறைகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டுள் ளது. இந்த சந்ததியிலிருந்துதான் விக்கிரங்களை வணங்கிய ஆபிரகாமுக்கு தேவன் தம்மை வெளிப்படுத்தி (யோசுவா 24:2) அவன் மூலம் ஒரு ஜாதியை தோன்றப்பண்ணி, அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தி, தமது வார்த்தைகளைக் கொடுத்து, அவர்களுடன் உடன்படிக்கையும் செய்தார். உலகத்தின் இரட்சகரும் மேசியாவுமாகிய இயேசுகிறிஸ்துவும் இந்த சந்ததியில்தான் மனிதனாக தோன்றினார்.

ஆதியாகமம் பல ஆரம்பங்களைக் கொண்ட புத்தகம். அது உலகம் எப்படித் தோன்றியது, பாவம் எப்படி உலகில் பிரவேசித்தது என்றெல்லாம் தெளிவாக நமக்கு விளக்குகிறது. தேவன் உலகைப் படைத்து மனிதனை தனது பிரதிநிதியாக, தன்னோடு சேர்ந்து உலகை இயக்குபவனாக ஏற்படுத்தினார். மனிதனை குறித்தும் அவன் உறவு முறைகளைக்குறித்தும் தமது திட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பமுதலே தேவன் மனிதனை ஆசீர்வதிக்கவும் அவன் தேவைகளைச் சந்திக்கவும் சித்தங்கொண்டார். ஆனால் மனிதனோ தொடர்ந்தும் தேவனை நம்பத் தவறி அவருக்கு கீழ்ப்பட்டிருக்க விரும்பாமல் அவருக்கு எதிராக செயல்பட்டு அவர் திட்டங்களை முறிக்க முற்பட்டு இறுதியில் அவனே நஷ்டமடைந்து போனதைக் காண்கிறோம். மனிதன் தேவனை தன் வாழ்க்கைக்கு வெளியேத் தள்ளி தேவனுடைய இடத்தைப் பிடிக்க நினைத்து தேவனுக்கு எதிராக புரட்சி செய்து விழுந்து தேவனால் தண்டிக்கப்பட்டதையும், தேவன் கிருபையாய் ஒரு ஜாதியைக் காத்து அதன் மூலம் தமது திட்டங்களை செயல்படுத்துவதையும் காண்கிறோம்.

மனித தோல்விகளும் மனித புரட்சிகளும் தேவனது அனாதி திட்டத்தை எவ்வளவும் அசைக்கமுடியாது.

தேவன் நம் வாழ்வில் வைத்திருக்கும் திட்டத்தைச் செயல்படுத்த நம்மை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுப்போமா!

சத்தியவசனம்