தேவன் அமைத்த முதல் குடும்பம்

திரு.பிரகாஷ் ஏசுவடியான்
(மே-ஆகஸ்ட் 2020)

பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோரின் பொறுப்பு


குடும்ப வாழ்க்கையிலே ஆசீர்வாதம் வர வேண்டுமென்றால் நம்முடைய குடும்ப வாழ்க்கையிலே பாக்கியமும், நன்மையும் உண்டாயிருக்க வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் நிறைவேற்றவேண்டிய பொறுப்புகளைக் குறித்து, 127,128 வது சங்கீதங்களில் பார்க்கிறோம்.

நீங்கள் அதிகாலையிலே எழுந்து நேரப்பட வேளையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தை சாப்பிடுகிறதும் விருதா, அவரே தனக்குப் பிரியமானவனுக்கு நித்திரையளிக்கிறார் என்று சங். 127:3இல் வாசிக்கிறோம். கர்த்தர் நம்முடைய வீட்டினை கட்டுவதற்கு நாம் இடங்கொடுக்க வேண்டும். கர்த்தர்தான் நம்முடைய வீட்டை பாதுகாக்க வேண்டும். காலையிலே பிள்ளைகள் வெளியே போகிறார்கள். மாலையிலே அவர்கள் வீட்டிற்குத் திரும்ப வரவேண்டும் என்றால் கர்த்தர் அவர்களை பாதுகாக்க வேண்டும். வீட்டிற்குள்ளே வந்தபிறகு கூட அவர்களை கர்த்தர்தான் பாதுகாக்க வேண்டும். ஆகவேதான் 121-வது சங்கீதத்திலே அவர் உன் போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் காப்பார் என்று சொல்லியிருக்கிறது. போக்கை மாத்திரம் அவர் காப்பதில்லை, வருகையையும் அவர் காக்கவேண்டும்.

உதாரணமாக, என்னுடைய வீட்டிலே பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது பள்ளிக்கூடத்திற்கு போகும்பொழுது காலையில் புறப்படுவார்கள், யூனிஃபார்ம் எல்லாம் போட்டு வந்து வாசலிலே நின்ற உடனே என்னுடைய மனைவி அவர்களுக்காக ஜெபித்து அவர்களை வெளியிலே அனுப்புவது வழக்கம். இப்படி நிறைய பெற்றோர்கள் செய்வார்கள், காரணம் என்னவென்றால், வெளியிலே போகிற அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், வேளியிலே போகிற அவர்களை தேவன்தான் காக்க வேண்டும் என்று ஒப்புக்கொடுத்து அனுப்புகிறோம்.

சரி, மாலையிலே அவர்கள் வீடுகளுக்கு வருகிறார்கள் எத்தனை குடும்பங்களிலே அவர்களை ஜெபித்து அவர்களை வீட்டிற்குள் ஏற்றுக்கொள்கிறோம். வீட்டிற்குள்ளே வந்த உடனேயே ஷூவைக் கழற்றி ஒருபக்கம் போடுவார்கள், சாக்ஸை கழற்றி இன்னொரு பக்கம் போடுவார்கள், புத்தகங்களை ஒருபக்கம் வீசுவார்கள், யூனிஃபார்மை மாற்றிவிட்டு விளையாடுவதற்காக ஓடிவிடுவார்கள். நாம் நினைக்கிற காரியம் என்ன? வெளியிலே போகிற அவர்களை கர்த்தர் காக்க வேண்டும். வீட்டிற்குள்ளே வந்தால் காக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை என நாம் எண்ணுகிறோம். ஆனால் வேதத்திலே நீங்கள் படிக்கும்போது போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு கர்த்தர் என்றென்றைக்கும் காப்பார். அப்படியென்றால் என்ன அர்த்தம்?

வீட்டிற்குள்ளேயே பல பிரச்சனைகள், சோதனைகள் வந்துவிடுகிறது. சினிமா தியேட்டருக்கு நீ போகக்கூடாது, அந்த காட்சிகளை நீ பார்க்கக்கூடாது, துன்மார்க்கருடைய ஆலோசனையின் படி நடக்கக்கூடாது, பாவிகள் வழியிலே நிற்கக்கூடாது, பரியாசக்காரர் எல்லாம் அங்கே இருக்கிறார்கள், நீ அங்கே போய் உட்காரக்கூடாது என்றெல்லாம் ஒரு காலத்திலே நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுத்தோம். ஆனால் இன்றைக்கு அங்கே அவர்கள் போகவேண்டிய அவசியமில்லை. வீட்டிற்குள்ளேயே எல்லாம் வந்துவிட்டது, Television மாத்திரமல்ல, கம்பியூட்டர், இன்டர்நெட் மூலமாக பல காரியங்கள் வந்துவிட்டது, உள்ளே இருக்கிற இந்த காரியங்களிலே நம்மை சோதிக்கக்கூடிய பல சோதனைகளும் பல அசுத்தமான காரியங்களும் உள்ளடங்கிக் கிடக்கிறது. இதில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. இவை இரண்டும் இணைந்து, அதை பயன்படுத்துகின்ற நமது பிள்ளைகளை கர்த்தர்தானே பாதுகாக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் அருமையானவர்களே, ஆகவே கர்த்தர் உன் வீட்டையும் நகரத்தையும் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா (சங்.127:1). எனவே நம்முடைய குடும்பங்களை கர்த்தர்தான் பாதுகாக்க வேண்டும். சரி, காலம் செல்கிறது, நம்முடைய கையைவிட்டு நம்முடைய பிள்ளைகள் வெளியே புறப்பட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. ஒருவேளை அவர்கள் வேலைக்காகப் போகலாம் அல்லது திருமணமாகிப் போகலாம். இப்பொழுது யார் அவர்களைப் பாதுகாக்க போகிறார்கள். அன்றைக்கு மோசேயை மூன்று மாதம் காப்பாற்றி, அதற்கு பிறகு கூடையிலே வைத்து, விட்டுவிட்டதைப்போல, கர்த்தருடைய கரத்திலே வைத்து நாம் அவர்களை விட்டுவிட வேண்டும்.

ஒருவேளை உங்கள் வாழ்க்கையிலோ, அல்லது நமது பிள்ளைகளுடைய வாழ்க்கையிலோ, பிரச்சனைகள் இருக்குமானால் இன்றைக்கு ஆண்டவர் கரத்திலே அதை விட்டுவிடுங்கள், கர்த்தர் அவர் நம்மையும் நமது பிள்ளைகளையும் பாதுகாக்கிறார்.

வருத்தத்தின் அப்பமும் நித்திரையும்

இங்கே சொல்லப்பட்டிருக்கிற அடுத்த காரியத்தைப் பார்ப்போம். காலையிலே எழும்புகிறோம் வேலைகளைச் செய்கிறோம். பல இடங்களுக்கு சென்று வருகிறோம். காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் பல அலுவல்களைச் செய்து கொண்டிருக்கிறோம், ஏன் ஐயா நாம் செயல்படுகிறோம்? எல்லாம் சுற்றிசுற்றி வளைத்து, நம்முடைய சாப்பாட்டுக்காகவும் வயிற்றுக்காகவும்தான் அவ்வாறு செய்கிறோம்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கிற ஒரு தம்பியைப் பார்த்து “ஏன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாய்?”, கேட்டபோது, அவன்: “படிக்கவேண்டும் அதற்காக சாப்பிடுகிறேன்” என்றான்.

“ஏன் படிக்கிறாய்?” என்றதற்கு “நான் பட்டம் பெற வேண்டும், அதற்காக படிக்கிறேன்” என்றான். “எதற்காய் பட்டம் பெறவேண்டும்?” “வேலை பார்க்க வேண்டும், அதற்காக பட்டம் பெறவேண்டும்” என்றான்.

“எதற்காக வேலை பார்க்கவேண்டும்?” என்றதற்கு “நான் சம்பாதிக்கவேண்டும். அதற்காய் வேலை பார்க்கிறேன்” என்றான்.

“எதற்காக சம்பாதிக்கவேண்டும்?” என்றதற்கு “சாப்பிடவேண்டும் அதற்காய் சம்பாதிக்கிறேன்” என்றான்.

பாருங்கள், சுற்றிசுற்றி வளைத்து, இந்த எண் ஜான் உடம்புக்கு வயிறே பிரதானம் என்று சொல்லுவார்களே, அதேபோல நம்முடைய சாப்பாட்டிற்காகவே நாம் எல்லாம் செய்கிறோம்.

காலையிலே எழும்பி வேலை செய்கிறோம், அங்கே அப்பத்தை நாம் சம்பாதிக்கிறோம் இவைகளெல்லாம் செய்துவிட்டு, கடைசியிலே வந்து அப்பத்தை சாப்பிடும்பொழுது இந்த சங்.127: 2ஆம் வசனம் சொல்லுகிறது: வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா என்று. அப்படியென்றால் இதற்கு என்ன அர்த்தம்? இவ்வாறு எல்லாவிதத்திலும பிரயாசப்பட்டுவிட்டு நமது குடும்பத்திலே சந்தோஷமும் சமாதானமும் இல்லை, நமது உறவுகள் சரியாக இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே சாப்பிடும்போது அந்த சாப்பாடை சந்தோஷமாக சாப்பிட முடியுமா? அது வருத்தத்தின் அப்பமாக மாறுபடுகிறது அல்லவா. எனவேதான் சிலர் Hotel-லில் போய் சாப்பிட்டுவிட்டு, அங்கு எவ்வளவு அருமையாய்; இருக்கிறது என்று சொல்லுவார்கள். வீட்டிலே வந்து மனைவி சாப்பாடு பறிமாறும் பொழுது, என்ன சாப்பாடு நீ போடுகிறாய்? வெளி இடங்களில் சென்று சாப்பாட்டதை ஒப்பிட்டுக்கொண்டு மனைவியைக் குறைசொல்லிக் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் செய்வதெல்லாம் அவர்களுக்கு நன்மையாக தெரியும், தன் மனைவி செய்கிற ஆகாரம் அவர்களுக்கு நன்மையாக தெரிவதில்லை. இப்படி இருக்கும்போது அது வருத்தத்தின் அப்பமாயிருக்கிறது. அப்படி வருத்தத்தின் அப்பத்தை புசிப்பது, விருதா என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான்.

இதினால் அடுத்து என்ன நடக்கும்? நித்திரை வராது. ஆகவே அவரே சொல்லுகிறார் தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார். சாப்பிடுகிற வேளையில் கணவன், மனைவி இருவருக்கிடையில் சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்வோம், அவள் இரசம் ஊற்றும்பொழுது அதிலே உப்பு இல்லை என்று கணவர் சத்தம் போடுவான். இவ்வாறு சண்டைபோட்டு விட்டு, அப்புறம் படுக்கைக்கு செல்லும்போது, எங்கே எப்படி நித்திரை வரும்? மனதிலே அமைதி இருக்காது, குடும்பத்திலே சமாதானம் இருக்காது, இதினால் நித்திரை வராது. விஞ்ஞான யுகத்திலே நமக்கு நிறைய செளகரியம் இருக்கிறது. தூங்குவதற்கு வசதியாக மிகவும் செளகரியமான மெத்தைகள் கிடைக்கிறது. ஆனால் அந்த மெத்தைகளில் படுத்து நமக்கு நித்திரை வரவேண்டுமென்றாலும் நமது மனதிலே அமைதி இருக்க வேண்டும், குடும்பத்திலே சமாதானம் இருக்க வேண்டும். ஆகவே வருத்தத்தின் அப்பத்தை புசிக்கிற வர்களுக்கு நித்திரை வராது. ஆனால் தேவனுக்கு பிரியமான மனிதனுக்கு தேவன் நித்திரையைக் கொடுக்கிறார்.

அருமையானவர்களே, நமது குடும்ப வாழ்க்கையிலே சந்தோஷமும் சமாதானமும், அமைதியும், நிம்மதியும் திருப்தியம் குடிகொள்ள வேண்டுமென்றால் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை நாம் வாழவேண்டும். கர்த்தர் நம்முடைய வீட்டைக் கட்டவேண்டும், கர்த்தர் நம்மைப் பாதுகாக்க வேண்டும், நமது பிள்ளைகளை வெளியிலேயும், உள்ளேயும் காக்கவேண்டும், நம்மையும் காக்கவேண்டும் என்றால், அவருடைய பாதுகாக்கும் கரத்திற்குள்ளாக நம்முடைய குடும்பத்தை அர்ப்பணிக்க வேண்டும்.

தேவன் படைத்த குடும்பவாழ்வைக் குறித்து நாம் அறிந்திருக்கவேண்டிய மூன்று காரியங்கள்:

1. குடும்ப வாழ்க்கை என்பது தேவன் படைத்த ஒரு நிறுவனம். ஆகவே குடும்பத்தைக் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். இதைக் குறித்து நாம் அதிகமாக கற்று வந்திருக்கிறோம்.

2. குடும்ப வாழ்க்கை என்பது பெரிய தேவனுடைய மனிதர்களாலும் பரிசுத்தவான்களாலும் தங்களுடைய நடக்கையினாலே நடப்பித்து காண்பித்த ஒன்றாகும்.

உதாரணமாக மோசேயினுடைய வாழ்க்கையிலே குடும்பம் இருந்தது, அவர் பெரிய தலைவராக இருந்தார். ஆபிரகாமுக்கு குடும்பம் இருந்தது, அவர் விசுவாசத்தின் தந்தையாக இருந்தார். ஏனோக்குக்கு குடும்பம் இருந்தது, அவர் தேவனோடு சஞ்சரித்தார், இன்றைக்கு சிலர் சொல்லுவது, ஐயா, குடும்ப வாழ்க்கை இருந்தால், தேவனுக்கென்று நாம் வாழமுடியாது, தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்ற முடியாது, ஒருசிலர் என்னிடத்தில், “ஐயா, கல்யாணத்திற்கு முன்னே ஆண்டவருக்கென்று எல்லாம் செய்து கொண்டிருந்தேன், இப்பொழுது கல்யாணம் ஆன பின்பு ஆண்டவருக்கென்று எதையுமே என்னாலே செய்ய முடியவில்லை” என்று வருத்தத்தோடு சொன்னதுண்டு. என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் சொல்லுவதிலே தவறு இருக்கிறது.

நாம் நம்முடைய குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகளை நிறைவேற்ற ஆரம்பிக்கும்போது, கர்த்தர் வீட்டைக் கட்டவேண்டுமென்று அவருடைய கட்டுப்பாட்டிற்குள்ளே விட்டுக்கொடுத்து விடவேண்டும். அப்பொழுது அங்கே தேவனுடைய நோக்கங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த ஏனோக்குக்கும், குடும்பமும் பிள்ளைகளும் இருந்திருக்கிறார்கள். நோவா, பெரிய நீதிமானாக தேவனாலே கண்டுபிடிக்கப்பட்டவர், அவர் ஜலப்பிரளயத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார். அவருக்கும் குடும்ப வாழ்க்கை இருந்திருக்கிறது, யோபுவிற்கு குடும்ப வாழ்க்கை இருந்திருக்கிறது, பேதுருவின் குடும்ப வாழ்க்கை மிகவும் அருமையானதாக இருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஏனென்றால் இயேசுகிறிஸ்து பேதுருவினுடைய மாமியாரை சுகமாக்குவதற்கு அங்கு வந்தபொழுது அதற்கு அனுமதி கொடுக்கிறார். நல்லதொரு குடும்ப வாழ்க்கை அவருக்கு இருந்தது, ஆகவே தேவனுடைய மனிதர்கள் குடும்ப வாழ்க்கையை நடத்தினார்கள்.

ஆனால், சில மனிதர்கள் குடும்ப வாழ்க்கையிலே பிரவேசிக்க வேண்டாம் என்று சொல்லி, அந்த விசேஷித்த அழைப்பைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள், இதைக் குறித்து இயேசு கிறிஸ்து மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப் பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக் கடவன் என்றார் (மத்-19:12).

ஒருவேளை இந்தச்செய்தியைக் படித்துக் கொண்டிருக்கும்போது, ஐயா, எனக்குத் திருமணமாகவில்லை, நான் படித்தவளாக, தனிமையானவளாகவே வாழ்ந்துவிட்டேன், எனக்கு என்ன செய்தி இருக்கிறது என்று கேட்கிறீர்களா? உங்களையும் தேவன் ஆசீர்வதித்து, பயன்படுத்த முடியும், ஆனால், உங்கள் அழைப்பின் அடிப்படையிலே உண்மையும், உத்தமமுமாக இருக்க வேண்டும். சாதுசுந்தர் சிங் என்ற தேவனுடைய மனிதருடைய வாழ்க்கையிலே, நடந்ததாக பல சந்தர்ப்பங்களை பல இடங்களிலே வாசிக்கின்றோம். அதிலே ஒன்று, அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக அவரோடுகூட பழகிக்கொண்டிருந்த ஒரு சகோதரி, அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவ மார்க்கத்திற்கு வந்த பிறகு, அவரிடத்திலே வந்து, அவரைச் சோதித்து, தம்முடைய பழைய சீக்கிய மதத்திற்கு வந்துவிட வேண்டும் என்று சொல்லி, அவர்கள் சோதனைக்குள்ளாக விட்டுச் சென்றபொழுது, சாதுசுந்தர் சிங்கைப் பார்த்துச் சொன்னதாக, நான் வாசித்த ஒரு காரியம், எனக்கு ஒரே ஒரு இருதயம்தான் இருக்கிறது, அந்த இருதயத்தை நான் இயேசு கிறிஸ்துவுக்கு கொடுத்துவிட்டேன், உன்கென்று கொடுப்பதற்கு எனக்கு வேறு இருதயம் இல்லை என்று சொன்னாராம். இது அவருடைய அழைப்பு, அந்த அழைப்பின் அடிப்படையிலே தனிமையானவராக, அவர் திருமணம் செய்யாதவராக, உண்மையுள்ளவராக வாழ்வதற்கு, தேவனுக்கென்று அர்ப்பணித்த ஒரு அழைப்பு, ஆனால், இந்த அழைப்பு, எல்லாருக்கும் உரியது அல்ல.

ஒருவேளை இந்தச்செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கிற திருமணமான, உங்களிலே யாராவது போய், உங்கள் மனைவியினிடத்திலே எனக்கு ஒரேயொரு இருதயம்தான் இருக்கிறது, அதை கிறிஸ்துவுக்குக் கொடுத்துவிட்டேன். உனக்குக் கொடுப்பதற்கு இருதயம் இல்லை என்று சொல்வீர்கள் என்று சொன்னால், இராத்திரி உங்களுக்கு சாப்பாடு கிடையாது, எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், சிலரை தேவன் தனிப்பட்டவர்களாக அழைத்திருக்கிறார். அந்த அழைப்பிலே அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும், ஆனால் பொதுவாக வேதத்தைப் படிக்கும்போது, அநேக தேவனுடைய மக்கள், குடும்ப வாழ்க்கையிலே பிரவேசித்திருக்கிறார்கள், குடும்ப வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள், அந்த குடும்பங்களின் வாயிலாக, ஆசீர்வாதங்கள் உலகத்திற்கு வந்திருக்கிறது. ஆகவே குடும்ப வாழ்க்கை என்பது அநேக தேவனுடைய மக்களாலே நடத்தி நிருபிக்கப்பட்ட ஒன்றாகும்.

3. முன்றாவதாக, இயேசுகிறிஸ்து நமது குடும்ப வாழ்க்கையின்மேல், மிகவும் அக்கறை உடையவராக இருக்கிறார்.

இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்க்கை, அவரது போதனைகள் இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது, குடும்பத்தின்மேல் அவருக்கு இருந்த அக்கரையை அடிக்கடி வெளிப்படுத்தி இருக்கிறார். விவாகரத்தைப் பற்றி மக்கள் அவரிடத்திலே பேசினபொழுது, அவர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார். குழந்தைகளை அவரிடத்திலே கொண்டுவந்தபொழுது அவர்களை அணைத்துக்கொண்டு ஆசீர்வதித்திருக்கிறார்.

அவர், மார்த்தாள்-மரியாள் இவர்களுடைய குடும்பத்திற்கு போன பொழுது, லாசரு இறந்த பொழுது, அவர்களோடுகூட சேர்ந்து கண்ணீர் விட்டிருக்கிறார். இவ்வாறு குடும்ப வாழ்க்கையின் மேல் இயேசுவுக்கு அதிகமாக, அக்கறை இருந்தது. இந்தச் செய்தியைக் வாசித்துக் கொண்டிருக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிற ஒரு காரியம் என்னவென்றால், உங்கள் குடும்பத்தின் மேலும் இயேசுகிறிஸ்துவுக்கு, அக்கறை உண்டு. உங்களுடைய வாழ்க்கையினுடைய எல்லா சுக, துக்கங்களிலும் இயேசுகிறிஸ்துவுக்கு அக்கறை உண்டு. உதாரணமாக மார்த்தாள் மரியாள், அங்கே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த பொழுது, இயேசுகிறிஸ்து அவர்கள் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறார், அவர் தேவனாயிருந்தபடியால், லாசரு உயிரோடு வரப்போகிறான் என்பது அவருக்கு நன்றாக தெரியும், அவர்களுடைய கவலைகள் போய்விடப்போகிறது என்பதும் அவருக்கு தெரியும். இவைகள் எல்லாம் தெரிந்திருந்தும் அவர்களோடுகூட உட்கார்ந்திருந்த இயேசுகிறிஸ்து, கண்ணீர்விட்டார் என்று வேதத்திலே நாம் வாசிக்கிறோமே? இதைக்குறித்து நாம் சிந்திக்கவேண்டும். பிரசங்கிமார்களாகிய நாங்கள் சில வேளைகளிலே, உங்களைப் பார்த்து சொல்லுவோம், உங்கள்மேல் எங்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது, உங்களுக்காகவே நாங்கள் கண்ணீர் விடுகிறோம் என்று சொல்லுவதுண்டு. ஆனால், உண்மையிலே உங்களுக்காக, எப்பொழுதும் கண்ணீர்விட இயலாது. உங்களுடைய பிரச்சனைகளிலே உங்களோடு உட்கார்ந்து உங்களுடைய வேதனைகளை ஒன்றுபடுத்தி, கண்ணீர் விடுகிற பிரசங்கிமார்கள் மிகவும் குறைவு. ஆனால், இயேசுகிறிஸ்து அப்படிப்பட்டவர் அல்ல, மார்த்தாள் மரியாளோடு கூட உட்கார்ந்து, அவர்களுடைய வேதனைகளிலே தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு, இயேசு கண்ணீர் விட்டார்.

உங்கள் குடும்ப வாழ்க்கையைக் குறித்து இயேசுகிறிஸ்துவுக்கு அக்கறை உண்டு. உங்களுக்காக வேதனைப்படுகிற கிறிஸ்து, அன்றைக்கு மார்த்தாள் மரியாளுக்கு உதவி செய்தது போல, உங்களுக்கும் உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.

ஆகவே உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக கிறிஸ்துவுக்கு அர்ப்பணியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

சத்தியவசனம்