உறுதியாக நிற்றல்!

Rev.நாட் க்ராபோர்டு
(செப்டம்பர்-டிசம்பர் 2020)

(சென்ற இதழின் தொடர்ச்சி)

விசுவாசத்தில் உறுதியாக நிற்பதற்கு நாம் பயன்படுத்த உதவும் மூன்று நங்கூரங்களைக் குறித்து 1 தெசலோனிக்கேயர் 3ஆம் அதிகாரம் வசனம் 6 முதல் 11 வரையுள்ள வேதபகுதியிலிருந்து கற்று வருகிறோம். கடந்த இதழில் முதல் நங்கூரமான நமது விசுவாசத்தை ஆழப்படுத்துதலைக் குறித்து தியானித்தோம். இவ்விதழில் ஏனைய இரு நங்கூரங்களைக் குறித்து கற்றுக் கொள்வோம்.

முதல் நங்கூரம்: நமது விசுவாசத்தை ஆழப்படுத்துதல் (வச.6-7).

இரண்டாம் நங்கூரம்: நமது ஜெப வாழ்வை ஆழப்படுத்துதல் (வச.8-9).

மூன்றாம் நங்கூரம்: நமது அன்பை ஆழப்படுத்துதல் (வச.10-11).

இரண்டாம் நங்கூரம்: நமது ஜெபவாழ்வை ஆழப்படுத்துதல் (1தெச.3:8-9).

மேலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக் குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்? உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே (1தெச 3:9,10) .

9ஆம் வசனத்தில் பவுல் கூறும் வசனங்களை அவர் கூற விரும்பும் அர்த்தத்தை NLT மொழியாக்கம் சரிவர எடுத்துக் கூறவில்லை. ஆனால் NASB மொழியாக்கத்தில் “எப்படிப்பட்ட நன்றிகளை நாங்கள் செலுத்த முடியும்?” என்று எழுதப்பட்டுள்ளது. இது தேவனுடைய அதிசயப்படத்தக்க மகத்துவத்தை விவரிக்கிறது. தேவனுடைய மகத்துவமான செயல்களுக்கு நன்றி செலுத்த வார்த்தைகளே இல்லை. அவருடைய கிருபைக்கு முன் பேச வார்த்தைகளற்றவர்களாகவே இருக்கவேண்டும்.

ஆனால், பவுல் அப்போஸ்தலன் நாம் உறுதியாக நிலைத்து நிற்கத் தேவையான நங்கூரம் நீங்கள் உங்கள் ஜெப வாழ்க்கையை ஆழப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். தன் அன்பு நண்பருக்காக இரவும், பகலும் மிகவும் ஊக்கமாக ஜெபம் செய்வதாக பவுல் கூறுகிறார். அவர் எழுந்திருக்கும் பொழுதும், பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், உணவு தயாரிக்கும் பொழுதும், படுக்கைக்குச் செல்லும் பொழுதும் இடைவிடாது ஜெபித்துக்கொண்டே இருந்தார். அவர் இடை விடாது, உத்தமமாயும், உண்மையாகவும் ஜெபிக்கிறார். இந்த ஜெபம், தீவிரமாகவும், ஆழமாகவும், கருத்துடனும், சாதுரிய குணமில்லாது எளிமையாகவும் இருந்தது. நான் தூங்கப்போகிறேன், என்னோடிரும், நீர் என்னைக் காப்பாற்றி எனக்கு உதவியாயிரும் என்று பெயரளவிற்கு செய்யும் ஜெபத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால், பவுல் அப்போஸ்தலனின் ஜெபம் அண்டசராசரங்களைப் படைத்த கர்த்தருடன் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டே இருக்கும். உரையாடல் வாழ்க்கை சுருக்கமாகச் சொன்னால் எந்தவித கஷ்டங்களும் இல்லாமல் இருக்கும்பொழுதும், வாழ்க்கையில் பிரச்சனைகள் பலவற்றை சந்திக்கும் பொழுதும், இரவும் பகலும் தொடர்ந்து இடை விடாது தேவனுடன் நாம் உறவாடிக் கொண்டே இருக்கவேண்டும்.

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி.4:6,7) (NASB) என்று பவுல் எழுதுகிறார்.

மேற்கூறிய வசனங்களை நீங்கள் மனப் பாடம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் உங்கள் ஜெப வாழ்க்கையை ஆழப்படுத்தும்பொழுது உங்கள் துன்பங்களுக்கு ஊடாக தெய்வீக சமாதானத்தைப் பெறுவீர்கள். லண்டன் மாநகரம் பெருமளவு பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டிருந்த நிலையில் டிஃப்-ம் நானும் 7 ஆண்டுகளுக்கு முன்னர் பிலி.4:6,7 வசனங்களை மனப்பாடம் செய்தோம். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளின் மத்தியிலும் தேவனையே நமது சமாதான காரணராக தொடர்ந்து பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் பிரச்சனைகள் எதிரிடும் பொழுது நாம் ஜெபிக்கும் மாந்தர்களாக இருக்க வேண்டும். பிலிப்பியர் 4: 6-7 வசனங்களை நீங்கள் மனப்பாடம் செய்வது உங்களுக்கு ஆசீர்வாதமாக அமையும். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம், எல்லாவற்றிற்காகவும் ஜெபியுங்கள், எதற்கும் கவலைப்பட வேண்டாம், எல்லாவற்றிற்காகவும் ஜெபியுங்கள் என்று என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள், அதுதான் காரியம். எதற்கும் கவலைப்படவேண்டாம், எல்லாவற்றிற்காகவும் ஜெபியுங்கள். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக கவலைப்படாதீர்கள். இதில் நங்கூரம் போல் நிலைத்திருங்கள். உங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்துங்கள். அதைத் தொடர்ந்து உங்கள் ஜெப வாழ்க்கையை ஆழப்படுத்துங்கள்.

நண்பர்களே, முதலாவது ஜெபியுங்கள், சோர்ந்துபோகவேண்டாம். நீங்கள் உங்கள் ஜெப வாழ்க்கையை ஆழப்படுத்தும்பொழுது ஜெபமே உங்கள் முதலும் மிகச்சிறந்த மூலதாரமாக மாறும். கஷ்டங்கள் எதிரிடும்பொழுது, உடனே உங்கள் நண்பர்களை அழைக்க வேண்டாம். கூகுளின் உதவியை நாடாதீர்கள், உடனே செய்தியை டைப் செய்யாதீர்கள், அண்ட சராசரங்களைப் படைத்த தேவனை நோக்கி உங்கள் கண்களை மேலே உயர்த்துங்கள், உங்கள் ஜெபங்கள், உங்கள் கண்ணீர்கள், உங்கள் நம்பிக்கை, சிதைந்த உங்கள் கனவுகளை அவரிடம் கூறுங்கள். முதலாவதாக இதைச் செய்யுங்கள், பின் மற்ற காரியங்களைச் செய்யுங்கள்.

அமெரிக்காவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு இது மிகவும் கடினமானதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத தங்களுக்கு அந்நியமான காரியமாகவும் காணப்படுகிறது. எங்களுக்குப் போதுமான பணம் இருக்கிறது, எங்களுக்கு மருந்துவர்கள் இருக்கிறார்கள், எங்களுக்கு ஆலோசகர்கள் இருக்கிறார்கள், எங்களிடம் கிரடிட் கார்ட் (கடன் அட்டை) இருக்கிறது, எங்களிடம் கூகுள் (Google) இருக்கிறது என்று எண்ணுகின்றனர். ஆனால், உலகமனைத்திலுமுள்ள கிறிஸ்தவர்களுக்கு தேவன் ஒருவர் உண்டு. அவர்கள் ஜெபிக்கிறார்கள். ஆனால் காரியம் இதுதான். தேவைக்கு அதிக பணமோ, அல்லது கிரடிட் கார்டோ இருப்பதற்கும் அதிகமான அற்புதங்களை தேவனிடத்திலிருந்து நாம் பெற முடியும். அற்புதமான முறையில் நவீன மருந்து வசதிகளும் அவர்களுக்கு தேவனிடமிருந்து கிடைக்கும். அவர்கள் தேவனை நோக்கிக் கூப்பிடும்பொழுது அவர் கேட்டு பதிலளிக்கிறார்.

என் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் நடந்த ஓர் ஆச்சரியப்படத்தக்க நிகழ்ச்சியை நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மெக்ஸிகோவில் உள்ள ஓர் வேதாகமக் கல்லூரியில் ஆண்டிற்கு ஒருமுறை நான் போதித்து வந்தேன், மெக்ஸிகோவில் என் உடன் ஊழியர்களில் ஒருவர் ஜாவீர் என்பவர் ஆவார். அவர் ஆழ்ந்த விசுவாசத்துடன் கூடிய ஓர் ஜெபவீரன். சில ஆண்டுகளுக்கு முன் ஆலயத்திலிருந்து சில மக்களுடன் வாகனத்தை ஓட்டிச்சென்று கொண் டிருந்தார். உடன் சென்ற ஒரு வாகனத்தை இயக்க முடியவில்லை. அந்த வாகனத்தை ஓட்டியவர் பலமுறை முயன்றும் அது இயங்க மறுத்தது. தேவனுடைய வல்லமையை, தன்னகத்தே கொண்ட ஜாவீர், சாதாரணமாக நடந்து சென்று, இயக்கும் இயந்திரத்தின் மீது தன் கைகளை வைத்து ஜெபித்தார். சாவியை அவர் திருகிய பொழுது இயந்திரம் இயங்க ஆரம்பித்துவிட்டது. நமக்கு தேவன் கொடுத்துள்ள பொருளாதார வசதிகள், மருத்துவ வசதிகள், ஆலோசனை பெறுதல் இதுபோன்ற பிற வசதிகளை பயன்படுத்துவது தவறு என்றா நான் கூறுகிறேன்? அவ்வாறு நான் கூறவில்லை. ஜெபத்தில் நாம் விருப்பப்பட்டு கேட்கும் அனைத்திற்கும் தேவன் பதில் கொடுப்பார் என்று கூறுகிறேனா? இல்லை. ஆனால் நமக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிவார் என்பதை நாம் விசுவாசிக்கலாம். இறுதியாக நான் கூறுவது என்னவென்றால், முதலாவதாக தேவனை நோக்கிப் பார்த்து ஜெபிக்கவேண்டும் என்பதே.

எனவே நாம் தேவனில் உறுதியாக நிலைத்து நிற்க, நம் விசுவாசத்தை ஆழப்படுத்தவேண்டும். நம் ஜெபவாழ்க்கையை ஆழப்படுத்த வேண்டும்.

மூன்றாவது நங்கூரம்: நம் அன்பை ஆழப் படுத்தவேண்டும் (1 தெச 3: 11-13).

1 தெசலோனிக்கேயர் 3ஆம் அதிகாரம் கடைசி மூன்று வசனங்களைப் பாருங்கள், பவுல் தொடர்ந்து இவ்வாறு ஜெபிக்கிறார் (NLT):

“நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக. நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக” (1 தெச 3: 11-13).

பவுல் அப்போஸ்தலன் இந்த வேத பகுதியை ஒரு சிறிய ஜெபத்துடன் முடிக்கிறார். இதில் ஓர் முக்கியமான வேதாந்த தத்துவத்தை நாம் காணமுடிகிறது. வசனம் 11 இவ்வாறுதான் எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். இப்பொழுது அவரும், நம் பிதாவாகிய தேவனாகிய அவரும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய அவரும் எங்களை உங்களுக்கு நேராக வழிநடத்துவாராக. அவரும், இந்த அவரும் என்ற பதம் யாரைக் குறிக்கிறது? பிதாவாகிய தேவனையும், இயேசுகிறிஸ்துவையும் குறிக்கிறது, அவரும், என்ற பதம் ஒருமையைக் குறிக்கும் சொல், இந்த ஒருமை பதம் தேவனையும், இயேசுகிறிஸ்துவையும் ஒருமையாகக் கூறுவதுடன் வழிநடத்துவாராக என்றும் ஒருமையில் கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு ஒருவராகக் குறிப்பிடப்படும் இருவர் தேவனையும் இயேசுவையும் ஒருமைப்படுத்துகிறது. எனவே பிதாவாகிய தேவனும் இயேசுவும் இருவரல்ல, ஒருவரே: பவுல் அப்போஸ்தலன் எழுதியுள்ள இந்த துவக்க கால நிருபத்தில் கிறிஸ்துவின் தேவத்துவத்தை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இதை மனமுவந்து நம் கருத்தில் கொள்வது மிகவும் தகுதியானது.

பவுலின் இந்த ஜெபத்தில் இரு விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார்: முதலாவது விண்ணப்பம் வசனம் 11இல் காணப்படுகிறது: தெசலோனிக்கேயாவிலிருக்கும் தம் அன்புக் குடும்பத்தாருடன் தேவன் மீண்டும் தன்னை இணைக்க வேண்டும் என்று ஜெபிக்கிறார். அவர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழமான அன்பையும், அவர்களுடன் மீண்டும் இணையவேண்டும் என்ற வாஞ்சையையும் இந்த நிருபம் முழுவதிலும் நிறைந்திருப்பதை அல்லது பறந்துபட்டுக் கிடப்பதைக் காணலாம். பின் 12ஆம் வசனம்: இதில் தன்னுடைய இதர ஜெப விண்ணப்பங்களை எழுதுகிறார். இது அன்பின் உச்சநிலை – அகப்பே என்னும் தெய்வீக அன்பு. அகப்பே அன்பு என்பது சுயநலமற்ற அன்பாகும். அது எந்தவித எதிர்பார்ப்பும் அற்ற ஓர் தூய்மையான அன்பு! அது மாத்திரமல்ல; அகப்பே என்னும் அன்பு, பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனால் மாத்திரம் அருளப்படக்கூடிய இயற்கையான அன்பாகும். பவுல் கூறுவதுபோல நாம் இந்த அகப்பே அன்பில் வளரவும், நிலைத்தோங்கவும் வேண்டும்.

பிற விசுவாசிகளின் மத்தியிலும் நமது ஆழமான அன்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் எவ்வாறு நடத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒருவருக்கொருவர் அன்புடன் பேசிப் பழகுகிறோமா? அன்புடன் பழகுகிறோமா? அன்பின் மேலீட்டால் பிறருடன் பேசிப் பழகுகிறோமா அல்லது மாய்மாலமான அன்புடன் பழகுகிறோமா? அல்லது கடமைக்காகவா? அன்பாய் ஏவப்பட்டு நாம் செயல்பட வேண்டும் என்று பவுல் கூறுகிறார். பேதுரு அப்போஸ்தலனும் நாம் சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள் என்று கூறுகிறார் (1பேது. 1: 22).

பிறரை அன்புடன் திருத்துவதும், பிறருக்காக உத்திரவாதம் எடுப்பதும் அன்பின் ஒரு பகுதியாகும். உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால் அவனுக்கு மன்னிப்பாயாக என்று இயேசு கூறுகிறார் (லூக்.17:3). சில சமயங்களில் மக்கள் கண்மூடித்தனமாக தவறு செய்யலாம். விசுவாசிகளாகிய நாம் அன்புடன் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். இதுவும் அன்பு செலுத்தும் ஓர் முறை, நாமும் சில சமயங்களில் மற்றோர் விசுவாசியுடன் தவறாக நடந்து அவரை புண்படுத்தி விடுகிறோம். அதை உணர்ந்தவர்களாய் உடனே அவர்களிடம் மன்னிப்புக் கேட்க தீவிரிக்க வேண்டும்; இதுவும் ஓர் அன்பின் வெளிப்பாடே, அதே போன்று பிறர் நமக்கு பலமுறை தீங்கு செய்யும்பொழுதும் நாம் மனமுவந்து மன்னிக்கவேண்டும். இவ்வாறு நாம் நமது உடன் விசுவாசிகளை நேசிக்கவேண்டும்.

அதுமாத்திரமல்ல, அனைத்து மக்களையும் நாம் ஆழமாய் நேசிக்கவேண்டும் என்று கூறுகிறார், அனைத்து மக்கள் என்றால் யார் அவர்கள்? ஆச்சரியம்! அவர்கள் அனைத்து மக்கள்!! உன் சத்துருவை உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களை சிநேகிப்பதுபோல் உங்கள் அயலாரைச் சிநேகியுங்கள் என்று இயேசு கூறுவதை நினைவுகூருவோம், எனக்குப் பிறன் யார்? (அனைவரும்) ஒவ்வொருவரும். அதாவது, அவிசுவாசிகள், சத்துருக்கள், கடவுள் ஒருவர் உண்டென்றும், சிருஷ்டிப்பையும் அறிந்துகொள்ள இயலாது என்ற கொள்கையுடையவர்கள், நாஸ்திகர்கள், முகமதியர், இந்துக்கள், மார்மோன்கள், யோகோவா சாட்சிக்காரர்கள், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் தங்கள் நாயை மலம் கழிக்கச் செய்து, அதை சுத்தப்படுத்தாமல், நாற்றமெடுக்கச் செய்து, அது உங்களுக்கு அருவருப்பைக் கொடுக்கும்பொழுதும் அவர்களை சிநேகியுங்கள், ஒவ்வொருவரையும் சிநேகியுங்கள், பரிசுத்த ஆவியானவர் மூலமாகத்தான் இப்படிப்பட்ட அர்ப்பணிப்புடன்கூடிய அன்பைக் காட்டமுடியும் என்பதை அவர்களுக்குக் காண்பியுங்கள். மேற்கூறப்பட்டவாறு நான் நமது சிநேகத்தை வெளிக்காட்டுவதுதான் இருண்டதும், அழிந்துவரும் இந்த உலகத்தில் உப்பாகவும், வெளிச்சமாயிருப்பதாகும்.

இப்படிப்பட்ட அன்பை அனைத்து மக்களிடமும் நாம் ஏன் காட்டவேண்டும்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நாம் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி நம்முடைய இருதயங்களை ஸ்திரப்படுத்துகிறார் என்று 1தெச.3:13இல் பவுல் கூறுவதைப் பார்க்கிறோம், இது பரிசுத்தமாக்குதலின் செயலாகும் என்பதை புதிய விசுவாசிகள் அறிந்துகொள்ள வேண்டும். இது ஒரு கடினமானப் பதமாகக் காணப்பட்டாலும் பரிசுத்தம் அல்லது ஓர் குறிக்கோளுக்காக வேறு பிரிக்கப்படல் என்பதே அதன் அர்த்தமாகும். நாம் சுத்திகரிக்கப்பட்டு, மேலும், மேலும் கிறிஸ்துவைப்போல் மாறுவதற்காக கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் வேறு பிரிக்கப்படுகிறோம். இவ்வாறு வேறுபிரிக்கப்பட்டு கிறிஸ்துவைப் போலாகவேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது என்ற மிக முக்கியமான காரியத்தை நீங்கள் இழந்துவிட நான் விரும்பவில்லை. நாம் அவரின் வருகைக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்!

இயேசு திரும்ப வருகிறார் ஆமென். இயேசு திரும்ப வருவது எந்த வேளையாகவும் இருக்கலாம். தம் சபையை அழைத்துக்கொள்ள எந்த வேளையிலும் கிறிஸ்து மீண்டும் வருகிறார், உங்களையும், என்னையும் சேர்த்துக்கொள்ள வருகிறார், அல்லேலூயா! ஆமென். இதை நாம் உண்மையாகவே நம்பினோமானால் கிறிஸ்துவை அறியாத அனைத்து மக்களிடம் அன்பு பாராட்டுகிறவர்களாக இருப்போம். இவ்வாறு நேசிக்கும்பொழுது தேவையுள்ளவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தல், உணவு தயாரித்தளித்தல், வேலி உடைந்திருந்தால் அதை சரி செய்து கொடுத்தல், காற்று இறங்கிய சக்கர ட்யூபிற்கு காற்றடித்துக் கொடுத்தல் போன்ற சிறிய சிறிய உதவிகள் செய்வது மற்றும் வேலை இழப்பு, திருமண முறிவு, மரணம் போன்ற பாதிப்பை அனுபவிப்பவர்களுக்கு ஆறுதலாக இருத்தல் போன்ற உதவிகளை நாம் அவர்களை நேசிப்பதால், மனமுவந்து செய்ய வேண்டும். உண்மையாகவே அவர்களை சிநேகித்தால் ஓர் அடி முன்னேறிச் செல்லவேண்டும். சுவிசேஷம் என்னும் நற்செய்தியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பைக்காட்டிலும் மேலான அன்பு வேறில்லை என்று இயேசு கூறுகிறார். இயேசு தனக்காக மரிக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் ஜீவன் பெற அவர்களுக்காக அவர் மரித்தார். உண்மையாகவே நாம் அனைத்து மக்களையும் நேசித்தோமானால், இயேசுவின் வருகை வெகு சீக்கிரம் இருக்கிறது என்று நாம் விசுவாசித்தோமானால், நாம் இயேசு முதலாவது வந்ததையும், அனைவரின் பாவங்களுக்காகவும் மரித்து உயிர்த்து, மீண்டும் வருகிறார் என்ற நற்செய்தியையும் கூறாமல் இருக்கமுடியாது. நாம் சுவிசேஷத்தை – அன்புடனும், நல் நம்பிக்கையுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்பொழுது நமது அன்பை ஆழப்படுத்த முடியும்.

இறுதியாக, நமது வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்து காணப்படலாம். நம் அனைவருக்கும் கனவுகள் உண்டு. சில சமயங்களில் கனவுகள் பலிக்காமல் போகலாம். நாம் எதிர்பார்த்தது கிடைக்காததால் நாம் பயத்தினாலும், தோல்வியினாலும் செயலிழந்து போக நேரிடும்.

இவை எல்லாவற்றிற்கும் மாறாக, நமது விசு வாசத்தை ஆழப்படுத்தியும், நமது ஜெப வாழ்க்கையை ஆழப்படுத்தியும், அன்பை ஆழப்படுத்தியும் நாம் உறுதியுடன் நிலை நிற்க முடியும்.

நீங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று நான் விரும்புவதாவது, இந்த செய்தியில் நாம் கற்றுக்கொண்ட ஒவ்வொரு ஸ்திரமான நங்கூரத்தையும் உங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். அப்பொழுது அது,

உங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தும்,

உங்கள் ஜெப வாழ்க்கையை ஆழப்படுத்தும்,

உங்கள் அன்பை ஆழப்படுத்தும்.

மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan


நினைவுகூருங்கள்

கிறிஸ்துவின் பிறப்பு தேவனை மனிதனிடம் கொண்டு வந்தது! ஆனால் மனிதனை தேவனிடம் கொண்டுவருவதற்கு சிலுவை அவசியமாயிருந்தது!

சத்தியவசனம்