ஜெபவீரன் தானியேல்

Dr.உட்ரோ குரோல்
(செப்டம்பர்-டிசம்பர் 2020)

பரிசுத்த வேதாகமத்தில் பல்வேறு மனிதர்கள் வித்தியாசமான சூழலில் ஜெபித்ததாக நாம் வாசிக்கிறோம். ஒவ்வொருவருடைய ஜெபமும் தனித்தன்மையுடையது. இந்த இதழில் தனது தேசத்துக்காக மன்றாடிய தானியேலின் ஜெபத்தைப் பற்றி நாம் காண்போம். நாமும் நமது தாய் நாட்டுக்காக ஜெபிக்கவேண்டியது நமது கடமையாகும். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தானியேல் திகழ்கிறார். அவர் தன் தேசத்தின் பாவங்களை அறிக்கையிட்டு ஜெபித்தார். அந்த பாவங்களை அவர் செய்யவில்லை, எனினும் தனது தேசத்தின் பாவங்களை அறிக்கையிட்டு தேவனுடைய இரக்கத்துக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும் அவர் மன்றாடினார். அதனை எவ்வாறு அவர் செய்தார் என நாம் தானியேல் 9ஆம் அதிகாரத்திலிருந்து ஆராய்வோம்.

“கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம் பண்ணுகிற முதலாம் வருஷத்திலே” என தானியேல் 9:1 கூறுகிறது. இங்கே அவர் தனது ஜெபத்துக்கான ஆரம்பத்தை அறிவிக்கிறார். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது மேதியனாகிய தரியு அரசரின் முதலாம் ஆண்டாக இருந்தது. இவ்வரசரைப் பற்றி பழைய ஏற்பாட்டில் அதிக விளக்கம் தரப்படவில்லை.

இரண்டாம் வசனத்தில், “தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித் தீர எழுபது வருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார். இது மிகவும் வியப்பான ஒரு காரியம். தானியேல் ஒரு தீர்க்கதரிசி. மேலும் அவர் தன்னுடைய வேதபுத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். தீர்க்கதரிசிகளும் வேதபுத்தகங்களை வாசிப்பார்கள் என்பதை நாம் பல வேளைகளில் நினைத்திருக்கமாட்டோம்.

தானியேலிடம் அநேக பழைய ஏற்பாட்டு புஸ்தகங்கள் இருந்திருக்க வேண்டும். தன்னுடைய சிறையிருப்பில் அவர் எரேமியா புஸ்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். ஒருவேளை அது அவரது தனி தியான வேளையாக இருந்திருக்கலாம். அவ்வாறு அவர் அப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, பாபிலோன் சிறையிருப்பில் யூத மக்கள் 70 ஆண்டுகள் இருப்பார்கள் என கண்டுபிடித்தார்.

திடீரென்று அவருக்கு “அட! 66 ஆண்டுகள் கழிந்துவிட்டன; சிறையிருப்பின் ஆண்டுகளோ 70 மட்டுமே” என்ற எண்ணம் உதித்தது. மற்ற எவருக்கும் இது தோன்றவில்லை. எப்பொழுது அச்சிறையிருப்பு முடியும் என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. “பாபிலோனியர்கள், பெர்சியர்கள் மற்றும் மேதியர்களிடமிருந்து என் தேசமாகிய இஸ்ரவேல் விடுதலையடைய ஆயத்தமாயிருக்கிறதா” என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. வேதத்தை ஆராய்ந்ததால் இஸ்ரவேல் தேசத்தின் பாவத்தையும் அதிலிருந்து அது விடுதலை அடைய வேண்டிய அவசியத்தையும் அவர் அறிந்து கொண்டார்.

தற்காலத்தில் நீங்களும் நானும் இதைப் போன்றதொரு சூழலில் இருக்கிறோம். நம்முடைய தேசத்துக்காக நாம் ஜெபிக்கவேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய நாட்டுக்காக ஜெபிக்க வேண்டியது அவசியம்.

தன் தேசத்துக்காக ஜெபிக்கவேண்டிய அவசியத்தை வேதத்தை வாசித்ததன் மூலம் தானியேல் அறிந்துகொண்டார் என்பது ஆச்சரியமல்லவா!˜ தேவன் நம் நாட்டுக்கு வைத்திருக்கும் திட்டத்தை அறிந்துகொள்ள பரிசுத்த வேதத்தை ஆராய்வது அவசியம். பாபிலோனியரிடத்தில் இஸ்ரவேலர் சிறைபட்டதைப்போன்றே பாவத்தில் சிறைபட்டுள்ள நம் தேசமும் விடுதலையடைய நாம் மன்றாட வேண்டுமே!

இப்பொழுது அவர் ஜெபிக்க ஆயத்தமாகிறார். தன்னுடைய வேதபுத்தகத்தை வாசித்து, யூத மக்களுடைய வாழ்வில் தேவனுடைய திட்டத்தை அறிந்துகொண்ட பின்னர் தனது மக்களுக்காக ஜெபிக்க தீர்மானிக்கிறார். நான் உபவாசம் பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி என்று வசனம் 3ல் எழுதப்பட்டுள்ளது.

இந்த 21ஆம் நூற்றாண்டுக்கு இரட்டு உடுத்துதல் என்பது நமக்குப் புரியாத ஒரு காரியமாகும். அடுத்து முகத்தை அவருக்கு நேராக்கி என்று கூறுகிறார். வேத புத்தகத்தில் இது தனித்தன்மையான ஒரு சொற்றொடராகும். அது ஓர் உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்துகிறது. நான் ஜெபிக்கப்போகிறேன்; பதில் கிடைக்கும்வரை நான் ஓய்வதில்லை என்று அவர் கூறுகிறார்.

நான் ஜெபிக்கப்போகிறேன்; தேவன் எனக்கு பதில் தரும்வரை நான் விடமாட்டேன் என எப்பொழுதாவது நீங்கள் கூறினதுண்டா? இங்கே தானியேல் அவ்வாறு கூறியுள்ளார்.

இருபது ஆண்டுகள் தன் மாமனுடன் வாழ்ந்த யாக்கோபு “கீலேயாத் மலையை நோக்கி” என்று ஆதியாகமம் 31:21 கூறுகிறது. இயேசுகிறிஸ்துவுக்கும் இச்சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வாரிக்குச் செல்லும்வேளை நெருங்கிவிட்டதை அறிந்து அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி என லூக்கா 9:51இல் காண்கிறோம். தானியேலைப்போல நாமும் தேவனை நோக்கி நமது முகத்தைத் திருப்ப வேண்டும்.

அடுத்ததாக, தானியேல் உபவாசித்தார் எனக் காண்கிறோம். உபவாசம் என்பது ஓர் ஆன்மீக செயல்; அது உங்களை தேவனுக்கு அருகில் கொண்டு செல்லும். தானியேல் தேவனை நெருங்கிச்சேர விரும்பினார். பரிசுத்த வேதாகமத்தில் உபவாசம் என்பது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. உதாரணமாக சிறையிருப்புக்குப் பின்னர் யூதர்கள் அதன் நினைவுகூருதலாக ஆண்டுக்கு நான்கு உபவாச நாட்களை அனுசரித்தனர்.

ஆனால், பரிசேயரோ வாரத்துக்கு இருமுறை உபவாசித்ததாக நாம் லூக்.18:12 இல் வாசிக்கிறோம். வேதாகமம் ஆண்டுக்கு நான்கு முறை உபவாசம் செய்யக் கூறியுள்ளது. ஆனால் தாங்கள் மற்றவர்களைவிட சிறந்தவர்களாய் வாரத்துக்கு இரண்டு முறை உபவாசிப்போம் என பரிசேயர் கூறினர். இது பரிசேயர்களின் மனப்பான்மை. இயேசு அவர்களைக் கண்டித்தார். ஏனெனில் அவர்கள் மாய்மாலக்காரர்களாய் உபவாசித்தனர். தங்களுடைய உபவாசத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். “நான் இன்று உபவாசம் இருப்பதால் உங்களைச் சந்திக்க இயலாது” எனக் கூறுவார். தாங்கள் சரியான காரியத்தைச் செய்து கொண்டிருப்பதாகவும் ஆன்மீகத்தில் அதிசிறந்தவர்கள் என அனைவரும் அறியவேண்டும் எனவும் விரும்பினர்.

உபவாசம் முக்கியமே. தானியேல் நான் உபவாசிக்க வேண்டும்; இல்லையெனில் என்னுடைய ஜெபம் வல்லமையாக இராது எனக் கூறினார். பரிசுத்த வேதாகமத்தில் ஜெபமும் உபவாசமும் இணைந்தே செல்லுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?˜ அவை வல்லமையுள்ள இரட்டையர்கள் என நாம் எண்ணலாம். ஒன்று இருந்தால் அங்கே மற்றதும் காணப்படும். தானியேல் அதைத்தான் செய்ய ஆரம்பித்தார். ஜெபிக்க ஆரம்பிக்குமுன்னர் நான் என்னுடைய சாதாரண ஆடையைக் களைந்து இரட்டை உடுத்திக்கொள்வேன் என்றார். இந்த இரட்டு என்பது உடையுடனோ சாக்குத்துணியுடனோ தொடர்புடையது அல்ல; ஆனால், அது வெள்ளாட்டுத்தோலால் ஆனது. அதிக எடையுடனும் முரடாகவும் இருக்கும். இக்கருப்பு வெள்ளாட்டுத் தோலானது நீங்கள் ஒரு தனித்துவமானவர் என்றும் மிக முக்கியமானதைச் செய்ய விருப்பமுடையவர் என்றும் வெளிப்படுத்தும்.

மூன்றாவதாக, அவர் தன்மேல் சாம்பலைப் பூசிக்கொண்டார். அது துயரத்தையும் இழப்பினையும் வெளிப்படுத்துகிறது. அது அவமானத்தின் சின்னம். பழைய ஏற்பாட்டு பக்தனான யோபு ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் (யோபு 42:6) என்றார். நாட்டில் பாவம் இருக்கும் பொழுது வாழ்வது கடினம் என்பதைத் தெரிவிக்க பக்தர்கள் தங்களது உடம்பிலும் தலையிலும் நெற்றியிலும் சாம்பலைப் பூசிக் கொண்டார்கள்.

வேத புத்தகங்களை வாசித்து தங்களுடைய சிறையிருப்பு முடியும் காலத்தை அறிந்த தானியேல், “தேவனுக்கு விரோதமாக என் தேசம் பாவம் செய்தது. எனவே நான் என் தேசத்துக்காக ஜெபிக்க வேண்டும்; தேவன் யூத ஜனங்களை விடுதலை செய்ய இருக்கிறார்; ஆனால் அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் அல்ல; நான் என் தேசத்தையும் மக்களையும் நேசிப்பதால் அவர்களை அதற்குத் தகுதியானவர்களாக்க நான் ஜெபிக்க வேண்டும்; என்னுடைய ஜெபம் வல்லமையாக இருக்க என்னை மாற்றவேண்டும்” என்றார்.

அன்பானவர்களே, நீங்களும் நானும் இத்தகைய சூழலில்தான் இப்பொழுது இருக்கிறோம். நம்முடைய தேசத்துக்கு நம்முடைய சாதாரண ஜெபம் அல்ல; வல்லமையான ஜெபமே தேவைப்படுகிறது. இதைச் செய்வதற்கு இரட்டும் சாம்பலும் தேவையல்ல; அவை தாழ்மையின் அடையாளங்களைக் குறிக்கும். தேவனுக்கு முன்பாக உங்களை நீங்கள் தாழ்த்தவேண்டும்.

இரட்டும் சாம்பலும் வெளியரங்கமான கலாச்சார அடையாளங்கள். ஜெபத்துக்குத் தடையாக இருக்கும் தொலைக்காட்சி, பொழுதுபோக்குகளை நீக்கிவிட்டு ஒருமனப்பட்டு தேவனை நோக்கிப் பார்க்கவேண்டும். தேசத்துக்காக ஜெபிக்கும்பொழுது அமைதியாகவும் பக்தியாகவும் இருக்கவேண்டும். அது நமது ஜெபத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தும்.

இனி தானியேல் ஏறெடுத்த மன்றாட்டைக் காண்போம். என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணி, பாவ அறிக்கை செய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே (வச.4) என ஆரம்பிக்கிறார். தானியேல் தன்னுடைய ஜெபத்தில், முதலாவது அவருடைய பாவத்தையோ தனது தேசத்தின் பாவத்தையோ அறிக்கையிடவில்லை. தேசத்துக்குத் திரும்பிச் செல்ல இன்னும் நான்கு ஆண்டுகளே இருந்தன. தனது தேசத்தை தேவன் எப்படியாவது ஆசீர்வதிக்க வேண்டுமென்று கேட்கவில்லை.

சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட ஜெபம் எப்பொழுதுமே தேவனை ஆரம்பமாகக் கொண்டிருக்கும்.

இது அநேகருடைய வாழ்வில் உண்மையல்ல; நமது அநேக ஜெபங்கள் சுயத்தையே மையமாகக் கொண்டிருக்கிறது. ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்; என்னை ஆசீர்வதியும். நான், என்னை, எனக்கு … என்று நம்மைச் சுற்றியே நம் ஜெபங்கள் அமைந்திருக்கின்றன.

ஆனால், ஜெபம் என்பது நம்மைப் பற்றிய தல்ல; அது தேவனைப் பற்றியது. நாம் தேவனிடம் பேசுகிறோம். நீங்கள் உங்கள் ஜெபத்தில் தேவனிடம் செல்லவேண்டுமெனில், அவரைத் துதிக்க ஆரம்பியுங்கள். இதுவே நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம்.

நம்முடைய தேவைகளை உடனடியாக ஏறெடுக்காமல் தேவன் யார் என்பதற்காக அவரைப் போற்றவேண்டும்; ஏனெனில், அவர் ஜெபத்தைக் கேட்கிற ஜீவனுள்ள ஆண்டவர்!

சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட ஜெபம் பாவ அறிக்கையைக் கொண்டிருக்கும்.

நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம் பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்று போனோம் (வச.5). இந்த ஜெபத்தில் நாங்கள் பாவஞ்செய்து என்று தானியேல் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். அவரது பாவ அறிக்கையில் கூறியுள்ளபடி அவர் பாவம் செய்ததாகத் தெரியவில்லை.

பாவஞ்செய்தவர்கள் அதனை அறிக்கையிடும் வரை ஜெபிக்கமுடியாது. எனவே தேவனுக்கு முன்பாக நீங்கள் நேர்மையாக நடப்பீர்களெனில், நீங்களே தேசத்துக்காக ஜெபிக்க தகுதியானவர்கள். நீங்கள் நேர்மையற்றவர்களாய் இருந்து உங்களது அரசாங்கத்துக்காக ஜெபித்தீர்களெனில், உங்களது ஜெபம் கேட்கப்படமாட்டாது. தேசத்தின் ஒரு குடிமகனாக இருப்பதால் தேசத்தின் பாவத்தில் தனக்கும் பங்குண்டு என்று தானியேல் நினைத்து பாவ அறிக்கை செய்தார்.

சரியான முறையில் வடிமைக்கப்பட்ட ஜெபம் பாவத்தின் பெயரை குறிப்பிட்டிருக்கும்.

வசனம் 6: “உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற் போனோம்.” தங்களுடைய குறிப்பிட்ட பாவத்தை அறிக்கையிட்டார். “நீர் எங்களுக்கு தீர்க்கதரிசிகளை அனுப்பினீர்; ஆனால் நாங்கள் அவர்களுக்கு செவிகொடுக்கவில்லை.” என்று கூறினார். தானியேல் 66 ஆண்டுகள் சிறையிருப்பில் இருந்தார். தீர்க்கதரிசிகளுக்கு தாங்கள் செவிகொடுக்கவில்லை என்று தனது தேசத்தின் பாவத்தை அறிந்தவராய் தேவனிடம் ஒப்புக்கொண்டார்.

சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட ஜெபம் தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்ற நம்பிக்கையுடன் தேவநீதியை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

வசனம்7: “ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; வெட்கம் எங்களுக்கே உரியது.” தேவன் நீதியுள்ளவராக இல்லையெனில் அவரிடம் ஏன் ஜெபிக்கவேண்டும். அவர் நேர்மையற்றவரெனில் நீதியான தீர்ப்பு செய்யமாட்டார். ஏனெனில் நீதியும் நேர்மையும் இணைந்தே செல்லும். நீங்கள் தேசத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவரிடம் ஜெபிக்கும்பொழுது உங்கள் தேசத்தின் பாவத்தை அறிக்கையிடவேண்டும். தேவன் நீதியையும் அநீதியையும் அறிவார் என்றும் அவர் நீதி செய்வார் என்பதையும் நாம் வெளிப்படுத்துகிறோம்.

சரியான முறையில் வடிமைக்கப்பட்ட பாவ அறிக்கை ஜெபம் பாவத்துக்கான வெட்கத்தை வெளிப்படுத்தும் என்று வசனம் 8ல் நாம் காண்கிறோம்.

நம்முடைய பாவங்களைக் குறித்து நாம் வெட்கப்படவேண்டும். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இதைக் காண்பது அரிது. நாம் எதற்கும் வெட்கப்படுவதில்லை. நாம் பாவத்தை அறிக்கையிடும்பொழுது வெட்கமும் அதனுடன் இணைந்ததே. ஏனெனில் வெட்கமே பாவத்தை அறிக்கையிட வைக்கிறது.

வசனம் 16இல் தானியேலின் ஜெபம் தொடருகிறது. அவர் தேவ இரக்கத்துக்காக மன்றாடுகிறார். தனது ஜனங்களுக்கு தேவனுடைய இரக்கம் தேவை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். தேவன் தம்முடைய கோபத்தையும் உக்கிரத்தையும் விட்டுவிட மன்றாடுகிறார். “ஆண்டவரே, உம்முடைய சர்வ நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.” இவை யாவும் இரக்கத்துக்கான கெஞ்சுதலாகும். இதில் தன்னையும் இணைத்துக்கொள்ளுகிறார். தன்னுடைய மக்களுக்கு தேவ இரக்கம் தேவை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

வசனம் 17இல் தேவன் தன்னுடைய ஜெபத்தைக் கேட்கவேண்டுமென்று இறைஞ்சினார்.

“இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்ட வரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப் பண்ணும்” என்று அவர் தேவனிடம் இறைஞ்சுகிறார். தேவன் ஜெபத்தைக் கேட்காதவரெனில் நீங்கள் அவரிடம் வேண்டுதல் செய்வது எந்த நன்மையையும் தராது. உங்களுடைய ஜெபத்தை தேவன் கேட்கவேண்டுமல்லவா! நீங்கள் ஜெபிக்க ஆயத்தமில்லையெனில் தேவனும் உங்களுக்கு செவிகொடுக்க ஆயத்தமாயிருக்கமாட்டார். எனவே முன்னேற்பாடு மிக அவசியம். தானியேல் ஜெபிப்பதற்கு தன்னை தயார்செய்த பின்பு, தன் விண்ணப்பத்தை தேவன் கேட்கவேண்டுமென்று விரும்பினார். தன்னுடைய ஜெபத்துக்கு பதிலாக தேவனுடைய கிருபையை அவர் எதிர்பார்த்தார். தேவனுடைய முகம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரகாசிக்க விரும்பினார்.

வசனம் 18 இல் “என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்” என்று மன்றாடுகிறார். அவருடைய நாமம் தரிப்பிக்கப்பட்டிருக்கிற நகரம் எருசலேம். இந்த நகரத்தை மாத்திரமே தம்முடைய நகரம் என்று தேவன் அழைக்கிறார். ஆனால் இந்த நகரம் பாழாக்கப்பட்டு அவருடைய ஜனங்கள் 66 ஆண்டுகள் சிறையிருப்பில் இருந்துள்ளனர். தேவன் எருசலேமுக்கும் யூதர்களுக்கும் இரங்கி மீண்டும் அவர்கள் தாய்நாடு திரும்பவேண்டுமென்று ஜெபிக்கிறார்.

தேவன் நீதியுள்ளவர்; அவருடைய நீதியே நாம் தேவனுடைய கிருபாசனத்தை நெருங்குவதற்கு தைரியம் அளிக்கிறது. நம்முடைய ஆதாயத்துக்கென்று நமது ஜெபம் அமையுமெனில் அது தேவனுடைய கண்களுக்கு சுயநலமாகவே தெரியும். தேவன் நமது தேசத்தை ஆசீர்வதிக்கும்படி ஜெபித்தோமானால் அது உலகின் வல்லரசாக அமைய வேண்டும் என்று பொருளாகாது. பூமியின்மேல் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நமது தேசம் பணியவேண்டும் என்பதே அதன் பொருளாகும்.

தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார்; நாம் தேவனுக்கு முன்பாக பாவம் செய்தபடியால் அவருடைய நீதிக்கு முன்; நம் தேசம் நிலைநிற்காது. எனவே நீதிபரரான தேவனுடைய இரக்கத்துக்காக தானியேல் கெஞ்சுகிறார்.

வசனம் 19 இல் தேவனுடைய நகரமாகிய எருசலேம் மீண்டும் கீர்த்தி அடைய அவர் வேண்டுதல் செய்கிறார்.

தேசத்தின் பாவத்துக்காக நாம் ஜெபிக்க வேண்டுமெனில், முதலாவது நமது பாவத்தை நாம் அறிக்கையிடவேண்டும். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவான் 1:9). தேவன் நீதியுள்ளவர்; உண்மையுள்ளவர். எனவே எனது எல்லா அநீதிகளையும் நீக்கி அவர் சுத்திகரிப்பார். அப்பொழுதுதான் நான் ஜெபிக்க ஆயத்த நிலையில் இருக்கிறேன்; என் தேசத்தைப்பற்றி தேவனிடம் நான் பரிந்து பேசமுடியும். எனது பாவத்தை நான் அறிக்கையிடாமல் என் தேசத்தின் பாவங்களுக்காக தேவனிடம் எவ்வாறு ஜெபிக்கமுடியும்.

தேசத்தின் பாவங்களுக்காக ஜெபிப்பதற்கு நம்மில் சுத்தமான கரங்களையும் சுத்தமான இருதயத்தையும் கொண்டிருக்கவேண்டும். என் தேசம் இப்படியாக பாவத்துடன் இருக்கிறது என்று தேவனிடம் கூறுவதற்கு தைரியம் வேண்டும். நம் கண்ணில் உத்திரத்தை வைத்துக்கொண்டு தேசத்தின் கண்களில் உள்ள துரும்பைப் பார்க்க நமக்கு அருகதையில்லை.

நம்முடைய தேசத்தைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ளுகிறோமே. ஆனால் அதில் நிலவும் பாவங்களுக்காக வருந்துகிறீர்களா? கருக்கலைப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பெண்களுக்கெதிரான பலாத்காரங்கள் … இன்னும் பல உண்டு. இதைக் குறித்த அக்கறை நமக்கு உண்டா? தேசத்தின் பாவங்களுக்காக ஜெபிக்க ஆரம்பிப்பதே தேசத்தின் எழுப்புதலுக்கான ஆரம்பம். உங்கள் தேசத்தின் பாவங்களுக்காக ஜெபித்து அதனால் எழுப்புதல் உண்டாவது மிக மேன்மையுடையதல்லவா?

எனவே முதலாவது, நம்முடைய ஜெபம் தேவனி டத்திலிருந்து ஆரம்பிக்கட்டும்; அது நம்மைப்பற்றிய தல்ல; அது தேவனைப் பற்றியது.

இரண்டாவது, பாவ அறிக்கை. நம்முடைய பாவங்களையும் தேசத்தின் குறிப்பிட்ட பாவங்களையும் அறிக்கையிடவேண்டும்.

மூன்றாவது, அவரது இரக்கத்துக்காக மன்றாட வேண்டும். தேவனுடைய நன்மதிப்பு நிலைநிறுத்தப்படவேண்டும்.

எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவரை நாம் சேவிக்கிறபடியால் அரியபெரிய காரியங்களுக்காக ஜெபிக்கவேண்டும்.

தேவனே எழுப்புதலை உண்டாக்குகிறவர். அந்த எழுப்புதலில் அவர் நம்மை உபயோகிக்கவும், நாம் அவரது குரலாக அமையவும் ஜெபியுங்கள்.

தேவன் நிச்சயமாகவே பெரிய காரியங்களை நமது தேசத்தில் செய்யவல்லவர்!

நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை


சுவிசேஷத்தின் வல்லமை

கட்டடங்கள் எவ்வளவு அழகாயிருந்த போதிலும் சுவிசேஷத்தின் வல்லமை அவைகளில் இல்லை. மனிதர் எவ்வளவு ஞானத்திலும் அறிவிலும் போதிப்பவர்களாக இருந்த போதிலும் சுவிசேஷத்தின் வல்லமை அவர்களில் இல்லை. சுவிசேஷத்தின் வல்லமை இயேசுவின் நற்செய்தியில்தான் இருக்கிறது.

இரட்சிப்பை அளிப்பதற்கு தேவனுடைய வார்த்தையில்தான் அவரது வல்லமை இருக்கிறது.


தேவனின் விந்தையான வழிநடத்தல்

சூதாட்டத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு துன்மார்க்கன் தனக்கு வரவேண்டிய பணத்தை சேர்க்க கழுதையின் மேலேறி தன் கிராமத்தினின்று வடதிசை நோக்கிச்சென்றான். கிராமத்தின் எல்லையை அடைந்ததும், கழுதை, மேலும் செல்ல மறுத்தது. கழுதையை மேலும் செலுத்த முடியாததால், தென்திசையிலும் தன் கடனாளிகள் இருந்தபடியால், அத்திசையிலேயே கழுதையை ஓட்டினான். சாலை தென்மேற்கிலும், தென்கிழக்கிலுமாகப் பிரியுமிடம்வரை கழுதை அமைதியாகச் சென்றது. தென்மேற்காக அவன் தெரிந்து கொண்ட பாதையில் ஒரு அடிகூட முன்செல்ல மறுத்தது. உதைகளும், வசை மொழிகளும், மன்றாட்டுகளும் வீணாயிற்று. பொறுமை இழந்தவனாய் அதன் விருப்பப்படியே போகவிட்டான்.

சூதாடிக்குச் சிறிதளவும் சிரமம் அளிக்காமல் அமைதியாகக் கழுதை சென்றது. சிறிது நேரத்திற்குள் ஒரு கிராமத்தை அடைந்தான். கழுதை அங்குள்ள ஆலயத்தின் வாயிலின் முன்நின்றது. சூதாடியின் அடியும் வசை மொழிகளும் கழுதையிடம் பலிக்கவில்லை. பின் சோர்வுடன் ஆலயத்தின் அருகே சென்றான்.

அங்கு மனந்திரும்பிய லியாங் கிறிஸ்தவர்கள் பாடிய கீதங்களின் இன்னொலி இவனைக் கவரவே ஆலயத்தினுள் சென்றான். கிறிஸ்துவால் தாங்கள் வாழ்க்கையில் பெற்ற சந்தோஷத்தையும், சமாதானத்தையும் பற்றி மலர்ந்த முகத்துடனும் ஒளிவீசும் கண்களுடனும் கூறுபவரையும் அங்கு கண்டான். தேவனது வல்லமையான பிரசன்னத்தில், தன் பாவங்களைக் குறித்து ஆழமாக உணர்த்தப்பட்டான். தன் பிழைகளை சபையில் அறிக்கை செய்து, தேவன் தமது அதிசயமான கரத்தால் அவ்வாலயத்திற்குத் தன்னை நடத்திய விந்தையை எடுத்துரைத்தான்.

மனந்திரும்பிய அப்பாவியினிமித்தம் பரலோகத்தில் பேரானந்தம் உண்டாயிற்று.

(சீனாவில் கோபோர்த் ஊழியங்கள்)

சத்தியவசனம்