குணமாக்குதலும் விசுவாச ஜெபமும்

Dr.தியோடர் எச்.எஃப்.
(செப்டம்பர்-டிசம்பர் 2020)

நீங்கள் சொஸ்தடையும்படிக்கு…

அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக்.5:15,16).

இந்த வசனத்தில் நாம் கவனிக்கவேண்டிய மூன்றாம் பகுதி ‘நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு.. இது நாம் ஒருவருக்கொருவர் பாவம் அறிக்கை செய்தல், ஒருவருக்காக ஒருவர் ஜெபித்தல் இவற்றின் நோக்கம் ஆகும். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சொஸ்தமாகுதல் சரீர சுகம் பெறுதலைக் குறிக்கிறது. இதுதான் இந்த வாக்கியத்தின் எழுவாய் ஆக இருக்கிறது. இதே சொல் ஆத்துமா சொஸ்தமாக்கப்படுவதற்காக கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சத்தியத்தை 1 பேது. 2:24 மற்றும் எபி.12:13 வசனங்களில் காணலாம்.

தாவீதின் அனுபவத்திலிருந்து நாம் அறிக்கை செய்யப்படாத பாவம் நமது உள்ளத்தையும் ஆத்துமாவையும் சோர்ந்து போகச்செய்யும் என்று அறிகிறோம் (சங்.32:51). இந்த மனச் சோர்வு நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். நம் சரீரத்தில் ஏதாவது வியாதிகள் வரும். நம்முடைய சரீரமும் ஆத்துமாவும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ளவை. நமது ஆத்துமாவில் பாரம் நிறைந்திருந்தால் நம் உடல் சுகவீனமடையும். ஆத்துமபாரம் விலகிவிட்டால் சரீரம் புதுப் பெலனடையும்; திடகாத்திரமான சரீரத்தில் ஆரோக்கியமான ஆத்துமா இருந்தால் பரிசுத்த வாழ்வு வாழ்ந்து ஆண்டவருக்கு ஊழியம் செய்யமுடியும். பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டதெனும் உணர்வு, சுத்தமான மனச்சாட்சியினால் உண்டாகும் சமாதானம் இவை மானிட சரீரம் முழுவதும் பூரண சுகமடையும் அனுபவத்தைத் தரும். இதை நாம் விசுவாசித்துச் செயல்படுத்தும்போது, நம்முடைய அனுதின அனுபவத்தில் உண்மை என்று கண்டுகொள்ளுவோம்.

பலன் தரும் ஊக்கமான ஜெபம்

ஒரு ஜெபவீரனிடமிருந்து ஜெபத்தை எவராலும் பிரிக்க முடியாது. ஜெபம் செய்தல் என்பது தேவனுக்கு காத்திருத்தலாகும். எனவே, தேவனோடு நெருங்கி இருப்பவர்கள்தான் வல்லமையாக ஜெபிக்கமுடியும் என்று அறிகிறோம். யாக் கோபு 5:16இல் குறிப்பிடும் பெலனுள்ள ஊக்கமான ஜெபம் பற்றி நாம் விரிவாகப் பார்க்கவேண்டும். இதில பெலனுள்ள, ஊக்கமான என்னும் இரண்டு சொற்கள் உள்ளன. இவை கிரேக்க மொழியில் உள்ள ஒரு சொல்லின் பொருளாகத் தரப்பட்டுள்ளன.

கிரேக்க மொழிச்சொல்லின் பொருள் – வேலை செய்தல், செயல்படுதல், பெலனுள்ளதாய் இருத்தல் – இந்தச் சொல்லிருந்து நாம் இரண்டு சொற்களைப் பெறுகிறோம்.

1. ஆற்றல் ஊட்டுதல்
2. ஆற்றலுள்ள

யாக்கோபு இங்கு குறிப்பிடும் ஜெபம் வித்தியாசமான ஒருவகை ஜெபம் அல்ல.

ஜெபம் செய்யும்போது உரக்கக் கத்தவேண்டியதில்லை. குறிப்பிட்ட சில பாரம்பரியப் பழக்க வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ஆனால், நமது தேவைகளை உண்மையான மனதுடன் பூரண விசுவாசத்துடன் தாழ்மையான வார்த்தைகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

பலர் மனப்பாடம் பண்ணிய ஜெபங்களைத் திரும்பத் திரும்ப சொல்லுகிறார்கள். இந்த ஜெபத்தில் வார்த்தைகள் நல்ல தெரிந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளாய் இருந்தாலும், அந்த ஜெபத்தைத் திரும்பத்திரும்பக் கூறும்போது வெறும் வார்த்தைகளைக் கூறுவதுபோல் ஆகிவிடும். உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவையை உண்மையாய் கேட்பதுபோல இருக்காது.

நம்முடைய ஜெபங்கள் பெலன் உள்ளவை யாயும் ஊக்கம் உள்ளவையாயும் இருக்க வேண்டும். நாம் நம்பிக்கை தளராமல் ஊக்கத்துடன் ஜெபித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஜெபம் கேட்கப்படுவது தாமதப்படுவதுபோல் தெரிந்தால் உடனே மனம் சோர்ந்து ஜெபிப்பதை நிறுத்தி விடக்கூடாது.

‘எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மன உறுதியோடும், சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள் (எபேசி.6:18). இந்த வசனத்தில் சகலவிதமான வேண்டுதலோடும் என்பது எல்லாவகையான ஜெபங்களையும் குறிக்கிறது.

இந்த ஜெபம்,

பொது இடத்தில் செய்யப்படுகிறதா, அல்லது அறைவீட்டில் அந்தரங்கமாய் ஏறெடுக்கப்படுகிறதா?

ஒரு பெரிய சபைக் கூட்டத்தின் முன் செய்யப்படுகிறதா? ஒரு சிறிய குழுவில் செய்யப்படுகிறதா?

சத்தமாகப் பேசி ஜெபிக்கப்படுகிறதா? மெளனமாக ஜெபிக்கப்படுகிறதா? எவ்வகையான ஜெபமாயிருந்தாலும், விடாமுயற்சியோடும், பணிவோடும் விண்ணப்பம் செய்யப்படவேண்டும் (வச.18).

இந்த முறையில் நாம் ஜெபிக்கும்போது, நாம் பொது ஜெபம் ஏறெடுப்பதில்லை. குறிப்பிட்ட தேவைகளுக்காக நாம் வேண்டுதல் செய்கிறோம். யாக் கோபு 1:5 இல், உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கட வன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். நாம் குறிப்பிட்டுக் கேட்டபடியால் அது அவனுக்குக் கொடுக்கப்படும் என்று காண் கிறோம்.

ஆனால், இந்த வசனப்பகுதி குறிப்பிடுகிறது: ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன்தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக (யாக்.1:6.7) என்று.

நாம் ஆண்டவரிடம் விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்ட காரியங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இன்னொரு வேதப் பகுதி உள்ளது. அது மாற்கு 11:23 ஆகும்.

இயேசு கூறுகிறார்: எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இந்த வசனத்தில் உள்ள குறிப்பிட்ட சொற்களைக் கவனியுங்கள். எந்த மலையையும் அல்ல, ஒரு குறிப்பிட்ட மலையைப் பார்த்து பேசப்படுகிறது. அந்த மலைக்கு என்ன நடைபெற வேண்டும் என்பது திட்டமாகக் கூறப்படுகிறது. இயேசு பூமியில் உள்ள மலைகளைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன். பலருக்கு மலை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். ஜெபம் என்று இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சொல், ஒரு குறிப்பிட்ட தேவையையும் அவசியத்தையும் குறிப்பிடுகிறது. யாக்.5:16 மற்றும் எபேசியர் 6:18இல் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல எல்லா ஜெபத்துக்கும் பொதுவான சொல் அல்ல.

பல வருஷங்களாக ஆயிரக்கணக்கான முறை நான் பயன்படுத்தியிருக்கும் வேதவசனம் சங்கீதம் 37:4ஆம் வசனமாகும். இதில் ஜெபம் என்னும் சொல் இல்லை. ஆனாலும் இந்த வசனம் ஜெபத்தோடு தொடர்புள்ளது என்று நம்புகிறேன். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார். தன் இருதயத்தின் வேண்டுதல்களை ஒருவன் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், அவன் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமாம். ஜெப வாழ்க்கைக்கு எது தேவை என்பதை இது காட்டுகிறது. நாம் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கவேண்டும். கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருப்பது என்றால் என்ன? பழைய ஏற்பாட்டுக்காலத்தில் அது என்ன? என்பதை ஏசாயா கூறியுள்ளார்.

என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப் பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மன மகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமைள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாய் எண்ணுவாயானால் அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய் (ஏசா.58:13,14.).

ஓய்வு நாள் பற்றிய சிறப்பு விதிகள் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கிறவர்களைச் சார்ந்தது. இந்தப்பகுதியில் நமக்குத் தெரிவது என்னவென்றால், கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கிறவன்; கர்த்தர் சொல்லுகிறதற்கு கீழ்ப்படிகிறவனும், கர்த்தரைக் கனம் பண்ணுகிறவனுமே என்று அறிகிறோம்.

நாம் நமக்குத் தேவையானவைகளைக் கேட்காமல், நாம் விரும்புகிறவைகளைக் கேட்டு ஜெபிப்பதால் நம் ஜெபங்கள் கேட்கப்படுவதில்லை, தேவனை எவரும் ஏமாற்ற முடியாது. நமக்கு உண்மையில் என்ன தேவை என்பது அவருக்குத் தெரியும். நாம் ஆசைப்படுவதையும், விருப்பப்படுவதையும் தருவேன் என்று தேவன் ஒருபோதும் நமக்கு வாக்குத்தத்தம் செய்யவில்லை. நம் முடைய தேவைகளைத் தருவதாக வாக்குப் பண்ணியிருக்கிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் இது குறித்து கூறுவதைப் பாருங்கள்: என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி.4:19). சில விசுவாசிகள் தங்களுக்கு நல்லதல்லாத பொருட்களைத் தரும்படி ஆண்டவரிடம் கேட்பார்கள். அப்படிப்பட்ட வேளைகளில் தேவன் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்பார் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு விசுவாசி தனக்கு ஒரு பொருள் தேவை என்று நினைப்பான். ஆனால், அது அவனுக்கு நீண்டகாலத்துக்குப் பயன்படாது என்பதை தேவன் அறிவார். இப்பொழுது நம்மில் ஒரு கேள்வி தோன்றலாம். நமக்கு என்ன தேவை என்பது ஆண்டவருக்குத் தெரியும்; நமக்குத் தேவையானவைகளையே தேவன் நமக்குத் தருகிறார். பின் நாம் ஏன் ஆண்டவரிடம் ஜெபிக்கவேண்டும்?

இது ஜெபத்தில் உள்ள இரகசியத்தின் ஒரு பகுதியை வெளிப்படுத்துகிறது. நன்றாக எண்ணெய் போடப்பட்டு சீராய் இயங்கச் செய்யப்படும் இயந்திரத்தைவிட நாம் உயர்ந்தவர்கள், வித்தியாசமானவர்கள்.

இது தேவன் நம்மை உலகில் உள்ள மற்ற எல்லாப் படைப்புகளையும்விட மேலாகப் படைத்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.

மிருகங்களுக்கும் தேவைகள் உள்ளன. ஆனால். அவைகளுக்குத் தங்களைப் படைத்த தேவனுடன் தொடர்புகொள்ளவோ, தங்கள் தேவைகளை அவரிடம் தெரிவிக்கவோ முடிவதில்லை. நாம் நம்முடைய தேவைகளை தேவனிடம் தெரிவிக்கும் தனித்திறனுடன் தேவன் நம்மைப் படைத்திருக்கிறார்.

மிருகங்களைப்போல நாமும் கர்த்தரின் படைப்புகளை அனுபவிக்கும் திறன் படைத்திருந்தாலும், மனிதர்களாகிய நாம் மட்டும் இன்னும் நமக்குத் தேவையானவைகளை தேவனிடம் ஜெபத்தின் மூலம் கேட்கும் திறன் பெற்றிருக்கிறோம்.

நாம் அவரை இராஜாதி இராஜாவாகக் கருதுவதால், நடத்துவதால், கனப்படுத்துவதில் அவர் நமக்காக இராஜரீகமான காரியங்களைச் செய்வார். அவர் நம்மை நேசிப்பதால் இப்படிச் செய்கிறார். அவருடைய கிருபை என்றுமுள்ளது. சங்கீத புஸ்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது அவர் கிருபை என்றுமுள்ளது என்று அடிக்கடி கூறுவதைக் கவனித்திருப்பீர்கள்.

தாவீது தேவனுடைய இரக்கங்களையும் கிருபைகளையும் அனுபவித்தறிந்தவன். எனவே தேவனுடைய இரக்கத்துக்காக எப்போதும் நன்றி செலுத்திக்கொண்டிருந்தான். தேவனுடைய இரக்கம், தயவு, கிருபை, மன்னிப்பு இவற்றைப் பெற்று அனுபவித்தான். நம்மில் எவரும் தேவனுக்கு முன்பாக நிற்க முடியாது. நம்மில் ஒவ்வொருவரும் தாவீது செய்ததைப்போலச் செய்யவேண்டும். தாவீதுத் தேவனுடைய இரக்கங்களின் மீது சார்ந்திருந்தான்.

யாக்கோபு 5:16ஆம் வசனத்தில் கண்டபடி நம்முடைய ஜெபம் பெலனுள்ளதாகவும் ஊக்கம் உள்ளதாகவும் இருக்கவேண்டும். தேவன் அதைப் பெலப்படுத்த வேண்டும். இதுவே தேவனால் விடை கூறப்பட்ட ஜெபங்களுக்குத் திறவுகோல். நம்முடைய ஜெபங்கள் தேவனுடைய சித்தத்தின்படி இருக்கவேண்டும். இல்லையேல் அவை கேட்கப்படமாட்டாது.

நாம் தேவனுடைய சித்தத்தை அறிவது எப்படி? இதற்குரிய விடை ரோமர் 8:26,27 வசனங்களில் உள்ளது. அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். ஒவ்வொரு விசுவாசியிலும் குடியிருக்கும் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஜெபத்தைப் பெலப்படுத்தி, ஊக்கப்படுத்தி, கர்த்தருடைய வசனத்தின்படி நாம் என்ன, எப்படி ஜெபிக்கவேண்டும் என்று வெளிப்படுத்திக் காட்டுகிறார். எனவே நம்முடைய ஜெபம் பரிசுத்த ஆவியால் பெலப்படுத்தப்பட்டதாய் இருக்கவேண்டும்.

இயேசுகிறிஸ்துவின் மூலம் யூதர்களும், புற ஜாதியாரும் ஒரே ஆவியினாலே பிதாவாகிய தேவனைச் சேரும் சிலாக்கியம் உண்டு (எபேசி 2:18). பரிசுத்த ஆவியானவருக்கு தேவனுடைய உள்ளமும், சித்தமும் என்ன? என்பது தெரியும். எனவே நாம் எதற்காக ஜெபிக்கவேண்டும் என்பதைப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்துவார்.

யாருடைய ஜெபம் கேட்கப்பட முடியும்? யாருடைய ஜெபம் கேட்கப்படும்? இதற்குரிய விடை யாக்கோபு 5:16 இல் இருக்கிறது.

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்