தேவன் அமைத்த முதல் குடும்பம்

திரு.பிரகாஷ் ஏசுவடியான்
(செப்டம்பர்-டிசம்பர் 2020)

குடும்பத்தைக் குறித்து தேவனுடைய அநாதித் திட்டம்


நம்முடைய குடும்பத்தின்மேல் இயேசுகிறிஸ்துவுக்கு அக்கறை உடையவராக இருக்கிறார் என்பதைக் குறித்து தியானித்து வருகிறோம். இயேசு கிறிஸ்துவுக்கு நம்முடைய குடும்பத்தின்மேல் அக்கறை இருந்தபடியினால்தான் குடும்ப வாழ்க்கையிலே இருக்கிற சில சிக்கல்களைப்பற்றி பேசியிருக்கிறார்.

மத்தேயு எழுதின சுவிசேஷம் 19ஆம் அதி. 13- 15 வசனங்களில் சிறுபிள்ளைகளைக் கொண்டு வந்தவர்களை சீஷர்கள் அதட்டினார்கள் என்று பார்க்கிறோம். அவர்களை இயேசுவினிடத்தில் கொண்டு வந்த நேரம் இயேசுகிறிஸ்து ஒருவேளை களைப்பாக இருந்திருக்க வேண்டும்; பல இடங்களிலே போய் பிரசங்கம் செய்துவிட்டு, தேவனுடைய ராஜ்யத்தின் காரியங்களிலே ஈடுபட்டுவிட்டு அவர் வந்து இளைப்பாறிக்கொண்டிருக்கும் போது, அந்த பிள்ளைகள் வந்திருக்கவேண்டும். சீஷர்கள் அங்கே நின்று அவர்களை அதட்டினார்கள், தடை செய்தார்கள் என்று பார்க்கிறோம். ஆனால் இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களை தடை பண்ணாதிருங்கள்; பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, பரலோக ராஜ்யத்தின் சத்தியத்தை அந்த சம்பவத்தின் மூலமாக இயேசுகிறிஸ்து எடுத்துச்சொல்வதைப் பார்க்கிறோம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், இயேசு கிறிஸ்துவுக்கு மனிதர்கள் முக்கியமானவர்கள், சிறுவர்கள் முக்கியமானவர்கள், யார் வந்தாலும் இயேசுகிறிஸ்து அவர்களுக்கு இடம் கொடுத்தார்.

யோவான் 4ஆம் அதிகாரத்தில் சீஷர்கள் போஜன பதார்க்கங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். அப்பொழுது அங்கே தண்ணீர் மொள்ள வந்த சமாரியா ஸ்திரீயினிடத்திலே, இயேசுகிறிஸ்து பேசிக்கொண்டிருக்கிறார், பசி நேரத்திலே, இயேசுகிறிஸ்து அந்த ஸ்திரீயினிடத்திலே பரலோக ராஜ்யத்தைக்குறித்து பேசுகிறார்.

யோவான் 3ஆம் அதிகாரத்தில் இரவு நேரம் உறக்க நேரம், அந்த நேரத்திலே நிக்கொதேமு என்பவர் வருகிறார், ஆனால். இயேசுகிறிஸ்து அந்த நேரத்திலே நிக்கொதேமுவினிடத்திலே மறுபடியும் பிறத்தல் என்ற சத்தியத்தை குறித்து பேச ஆரம்பிக்கிறார், சிலுவையிலே அவர் வேதனையோடு கூட அவர் தொங்கிக்கொண்டிருந்த போது, பக்கத்திலே இருக்கிற கள்ளன் அவரைப் பார்த்து, உம்முடைய ராஜ்யத்திலே நீர் வரும்போது என்னை நினைத்தருளும் என்று சொன்னாரே, அப்பொழுது நீ இன்றைக்கு நீ என்னோடு கூட பரதீசிலிருப்பாய் (லூக்.23:43) என்று அவனுக்கு நேரம் கொடுக்கிறார்.

பல கூட்ட மக்கள் அவரைப் பார்ப்பதற்காய் நெருக்கிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் இயேசுகிறிஸ்து நின்று, மரத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற சகேயு என்ற ஒரு தனிப்பட்ட மனிதனை நோக்கிப் பார்க்கிறார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நம்மேல் அக்கறை உண்டு, தனிப்பட்ட மக்கள்மேல், பிள்ளைகள்மேல் அக்கறை உண்டு, நம்முடைய வாழ்க்கையைக் குறித்து அக்கறை உண்டு. சமாரியா ஸ்திரீயினிடத்திலே இயேசுகிறிஸ்து, உன் புருஷனை அழைத்துக்கொண்டு வா, என்று ஏன் சொல்லியிருக்கவேண்டும். அவளுடைய குடும்ப வாழ்க்கையைப்பற்றி, அவளுடைய சீரழிந்த வாழ்க்கையைப்பற்றி இயேசுகிறிஸ்துவுக்கு அக்கறை இருந்தது. ஆகவே அக்கறையோடுகூட நம்முடைய வாழ்க்கையையும் இயேசுகிறிஸ்து சீர்ப்படுத்த விரும்புகிறார்.

மத்தேயு எழுதின சுவிசேஷம் 19வது அதிகாரத்திலே, திரளான ஜனங்கள் அவருக்கு பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களை சொஸ்தமாக்கினார். அப்பொழுது, பரிசேயர் அவரை சோதிக்க வேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாகிலும் தள்ளிவிடுவது நியாயமா? என்று கேட்டார்கள் (வச.2,3), இந்த 21வது நூற்றாண்டிலே மக்கள் கேட்கிற கேள்விகளிலே இது ஒன்று, விவாகரத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஐயா ஒரு குடும்பத்திலே பல பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகளோடுதான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கவேண்டுமா? ஏன் விவாகரத்து செய்து விடக்கூடாது.

அதே கேள்வியைத்தான் அன்று இயேசு கிறிஸ்துவினிடத்திலே கேட்கிறார்கள், அப்பொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷனை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார் (வச. 2-6). ஆகவே விவாகரத்தைப்பற்றி பேசும் பொழுது, அடிப்படையாக இயேசுகிறிஸ்து கற்றுக் கொடுத்த காரியம், தேவனாலே இணைக்கப்பட்ட மக்களை, மனிதனுடைய எந்த சக்தியும் பிரிக்கக்கூடாது, உடனே அவர்கள் கேட்கிறார்கள்: அப்படியானால் தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார்? என்றார்கள் (வச.7). இது வேத சாஸ்திரத்தை அறிந்தபடியினால் கேட்ட ஒரு கேள்வி. அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக் கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் இப்படி இருக்கவில்லை (வச.8).

இப்படிப்பட்ட கேள்விகள் நம்முடைய மனதிலே எழும்புகின்றபொழுது, காலாகாலங்கள் நடந்துகொண்டு இருக்கின்றபொழுது, காலத்தினுடைய மாறுதலினாலே சமுதாயத்திலும், குடும்பங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்போது, அந்த மாறுதல்களுக்கு நாம் இடங்கொடுத்துவிடலாமா?. கேள்விகள் நம்முடைய மனதிலே வரும்பொழுது இயேசுகிறிஸ்து சொல்லுகிறார்: உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே அவ்விதமாய் சொல்லியிருந்தாரே தவிர, ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை. இந்த விதமான சத்தியங்களுக்கு நாம் பதில் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், வேதாகமத்திலே ஆதியிலே என்ன நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும்? எதற்காய் ஆதிக்கு நாம் போகவேண்டும்? அங்கேதான் தேவனுடைய மனதிலே இருந்த திட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இடைகாலங்களிலே கால ஓட்டத்திலே காலங்கள் மாறும்பொழுது, மனிதனுடைய இருதய கடினத்தினிமித்தம், பல விதமான காரியங்கள் நமக்குச் சொல்லப்பட்டிருந்தாலும், ஆதியிலே ஆண்டவருடைய மனதிலே என்ன இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையைக் குறித்து நாம் இதுவரைக்கும், ஆதியாகமத்திலிருந்து பல காரியங்களை சிந்தித்ததற்கு காரணம், ஆதியிலே தேவனுடைய மனதிலே என்ன இருந்தது என்பதைச் சிந்தித்து அதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

காலாகாலங்களிலே இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற விவாகரத்து இப்படிப்பட்ட காரியங்களுக்கு, நாம் இடங்கொடுக்கக்கூடாது, ஆதியிலே ஆதாமையும் ஏவாளையும் தேவன் படைத்தபோது, ஆதாமுக்கு ஒரு ஏவாளை படைத்து, அவர்கள் இரண்டு பேரையும் ஒன்றாக இணைத்தபோது, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்கக்கூடாது என்று சொன்னதைப் போல, அந்த காரியத்திற்கு இடங்கொடுத்து, இன்றைக்கு இருக்கிற சூழலில் அதை நாம் எப்படி கையாளலாம் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும். தேவனிடத்திலே கேட்க வேண்டும். இதைச் செயலாற்றுவதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும், அப்பொழுது தேவனுடைய நோக்கம் நமது வாழ்க்கையிலே நிறைவேற ஆரம்பிக்கும். அப்படிச் செய்யாதபடிக்கு காலத்திற்கு ஏற்றபடி நமது கோணத்தை மாற்றிக்கொண்டே இருப்போமானால், தேவனுடைய சித்தத்தை நாம் நிறைவேற்ற முடியாது. ஆகவே, ஆதியிலே தேவன் சொன்ன காரியங்களுக்கு நாம் இடங்கொடுக்க வேண்டும். இது கிறிஸ்துவுடைய போதனை! அந்த போதனையிலே நிலைத்திருக்க வேண்டும்.

யாருடைய உள்ளத்திலாகிலும் நாம் பிரிந்து விடலாமா? விவாகரத்து செய்துவிடலாமா? மனைவியை விட்டுவிடலாமா? கணவனை விட்டுவிடலாமா? என்ற எண்ணங்கள் தோன்றிக்கொண்டிருக்குமேயானால், ஆண்டவரே, ஆதியிலே உம்முடைய மனதிலே கொண்டிருந்த எண்ணங்களை நீர் எங்களுக்கு வெளிப்படுத்தும். இவ்விதமாக பிசாசு கொண்டுவருகிற எண்ணங்களை இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அகற்றி, தேவன் சொன்ன காரியங்களுக்கு எப்படிக் கீழ்ப்படிவது என்ற ஞானத்தை எங்களுக்குத் தாரும் என ஜெபிக்கவேண்டும்.

சிலர் கேட்கலாம். ஒரு விசுவாசி இன்னொரு அவிசுவாசி ஆகிய இரண்டு பேரும் விவாகத்தில் ஒன்றாக இணைந்திருக்கும்போது, அவர்கள் விவாகரத்து செய்யலாமா? இப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு பவுல் அப்போஸ்தலன் 1கொரிந்தியர் 7வது அதிகாரத்திலே பதில் கொடுக்கிறார். நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக் குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும் (7:1,2). ஆகவே இந்த காரியத்தைக் குறித்து கொரிந்து பட்டணத்து மக்கள் பவுலுக்கு எழுதியிருக்கிறார்கள்.

கொரிந்து சபையைப்பற்றி நாம் படிக்கும் பொழுது அந்த சபையிலே இருந்த அநேக மக்கள் இவ்வித பல கலாச்சாரத்தின் அடிப்படையிலே பல காரியங்களைத் தங்கள் இஷ்டப்படி செய்துகொண்டு, இதிலே தவறில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த பின்ணனியிலே இருந்து வந்தவர்கள். இப்பொழுது இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ சபையிலே சேர்ந்தவர்கள், இவர்கள் இவைகளைப்பற்றி நீர் என்ன சொல்லுகிறீர்? என்று பவுலுக்கு பல கடிதங்களை எழுதுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குதான் பவுல் கொடுக்கிற பதிலை இங்கே நாம் பார்க்கிறோம். வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும் அவளவன் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும்.

புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன்சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்க வேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன் (வச.3-6). பவுல் சொல்லுகிற யோசனைகளிலே ஒன்று கணவனும் மனைவியும் பிரிந்திருக்கவேண்டுமென்றால், அவர்கள் சம்மதித்திருக்க வேண்டும். அதுவும் ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்குமே அவர்கள் சிறிதுகாலம் பிரிந்திருந்தாலும், மறுபடியும் இணைந்து ஒன்றாக வாழவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் அருமையானவர்களே! நாம் இணைந்து வாழவேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கம். ஒருமனிதர் மிகவும் வேடிக்கையாக சொல்லிக்கொண்டிருந்தார், ஒரு கணவன் இந்தியாவிலும், அவரது மனைவி வளைகுடா தேசங்களிலேயும் வாழ்ந்துகொண்டிருந்தால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கையிலே ஒரு பிரிவு வந்துவிடும் என்று சொன்னார். சில காலம் நாம் பிரிந்து வாழ்ந்தாலும் மறுபடியும் திரும்பவும் கூடிவிடவேண்டும்.

12வது வசனத்திலிருந்து மற்றவர்களைக் குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரன் ஒருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை தள்ளிவிடாதிருக்கக்கடவன். அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்கு சம்மதமிருந்தால் அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன் (1கொரி.7:12,13). இங்கே சொல்லியிருக்கிறது என்னவென்றால், இரண்டு அவிசுவாசிகள் திருமணமானவர்கள்; அதிலே ஒருவர் இப்பொழுது விசுவாசியாக மாறிவிட்டார். இன்னொருவர் அவிசுவாசியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையிலே அந்த விசுவாசியான சகோதரி, அல்லது விசுவாசியாகிவிட்ட சகோதரன் பிரிந்துவிடுவதற்கு இஷ்டம் இல்லையென்றால் அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவர்கள் பிரியக்கூடாது; ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் இணைந்துவிட்டவர்கள் பிரியக்கூடாது.

என்னத்திலாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன (வச.14).

இங்கே அவர் சொல்லுகிற காரியம் என்னவென்றால், எந்த சூழ்நிலையிலே எழுதப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்நிய நுகத்திலே அவிசுவாசியோடு பிணைக்கப்படக் கூடாது என்பதுதான் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற ஒரு கட்டளை. ஒரு விசுவாசி இன்னொரு விசுவாசியைத்தான் திருமணம் செய்ய வேண்டும். ஒரு விசுவாசியும் அவிசுவாசியும் திருமணம் செய்து வாழ்ந்துகொண்டிருந்தால் அவர்களுடைய வாழ்க்கையிலே கடவுளுடைய நோக்கம் நிறைவேற முடியாது. ஒன்றாக இணைந்து அவர்கள் ஜெபிக்க முடியாது, ஒன்றாக இணைந்து ஆலயங்களுக்கு போக முடியாது. ஒன்றாக இணைந்து தேவனுடைய ஊழியங்களை அவர்கள் செய்ய முடியாது. ஆகவே, தேவனுடைய நோக்கம் அங்கே தடைபடும்.

ஆகவே, ஒரு விசுவாசி இன்னொரு அவிசுவாசியோடு திருமணம் செய்யக்கூடாது. நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோம். நீ வெளியே போகிறாய் துன்மார்க்கருடைய ஆலோசனையிலே நடக்காதே, பாவியின் வழியிலே நிற்காதே, பரியாசக்காரர் உட்காரும் இடத்திலே உட்காராதே, என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம் அல்லவா? இது சாதாரணமாக கிறிஸ்தவர்களாகிய நாம் சொல்லுகிற காரியம். அப்படியானால் திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் நெருங்கி இணைந்து வாழக்கூடிய நட்பாகும், அந்த நட்பிலே இந்த வசனத்திலே எவ்வளவாய் நாம் பயன்படுத்தவேண்டும். ஒரு விசுவாசி அவிசுவாசியோடு திருமணம் செய்யக்கூடாது. ஆனால், இரண்டு பேரும் அவிசுவாசிகளாயிருந்து இப்பொழுது ஒருவர் விசுவாசியாக மாறிவிட்டால், நீங்கள் பிரியவேண்டாம் என்று அவர் சொல்லுகிறார். ஆகவே, பிரியாதபடிக்கு ஒருவருடைய வாழ்க்கையின் மூலமாக மற்றொருவருடைய வாழ்க்கை பரிசுத்தமாக்குவதற்கு பரிசுத்த பாதையிலே நடத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுக்கவேண்டும். இப்படிப்பட்ட பாக்கியத்தை தேவன் உங்களுக்கு கொடுப்பாராக!

என் வாழ்க்கையிலே அவிசுவாசியோடு நான் வாழ்கிறேனே என்ற எண்ணங்களோடுகூட இருக்கிற மக்கள் இருக்கலாம். நமது குடும்பத்திலே ஆவிக்குரிய காரியங்களிலே எந்த உறவும் இல்லாத மக்களோடு வாழ்கிறோமே என்று எண்ணுகிறீர்களா? அப்படிப்பட்டவர்களை உம்மண்டை இழுத்துவிடக்கூடிய பாக்கியத்தை நீர் எங்களுக்குத் தரவேண்டும் என ஜெபியுங்கள். இந்த அற்புதத்தை கர்த்தர் பல குடும்பங்களிலே செய்து தம்முடைய சித்தத்தை நிறைவேற்றி தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துவார்.


நீங்கள்தான் இயேசுவா?

சுகவீனமான ஒரு தாய், தன் மகனை தேவையான ஒரு சில பொருட்கள் வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பினார்கள். சிறுவனும் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கி ஒரு பையில் வைத்துக்கொண்டு அதற்குரிய பணத்தைக் கடைக்காரரரிடத்தில் கொடுத்துவிட்டு வெளியே செல்ல ஆயத்தமானான். அப்பொழுது அங்கிருந்த ஒரு பெட்டியின் கூர்மையான முனையில் அவன் பை சிக்கியதால் கிழிந்து அதற்குள்ளிருந்த ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள், பதப்படுத்தப்பட்ட டப்பாக்கள், தானியப் பொட்டலங்கள் எல்லாம் கீழே சிதறி ஓடின. சிறுவன் அவைகளைப் பொறுக்கிக்கொள்ள தடுமாறினான். அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. சிதறிப்போன பொருட்களை எப்படி ஒன்று சேர்த்து தன் வீட்டுக்கு எடுத்துச்செல்வது என்று திகைத்து நின்றான்.

அப்பொழுது அங்கிருந்த உயரமான மனிதர் ஒருவர் சிரித்த முகத்தோடு “உனக்கு நான் உதவி செய்கிறேன்” என்று சொல்லி சிதறிப்போன பொருட்களைப் பொறுக்கி எடுத்து, சிறுவனோடு அவன் வீடு வரைக்கும் சென்று அவைகளைக் கொண்டுபோய்க் கொடுத்தார். அந்த நல்ல மனிதரின் அன்பைக் கண்டு சிறுவன் மிகவும் வியப்படைந்தான்.

தன் வீட்டு வாசலில் வைத்து சிறுவன் அந்த நல்ல மனிதரைப் பார்த்து “ஐயா, நீங்கள்தான் இயேசுவா?” எனக் கேட்டான். சிரித்துக்கொண்டே அந்த மனிதர் கூறினார், “நான் இயேசு அல்ல; ஆனால் எனக்கு அவரைத் தெரியும்”.

அன்பானவர்களே, உங்களைப் பார்த்தும் மற்றவர்கள் இவ்வாறு கேட்கிறார்களா? சிந்திப்போம், செயல்படுவோம்!

சத்தியவசனம்