அடிமையின் ரூபமெடுத்து….

சகோதரி சாந்தி பொன்னு
(செப்டம்பர்-டிசம்பர் 2020)

அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள் (லூக்கா 2:7).


பின்னணியிலே குரல் ஒலித்ததும், மேடையின் திரை அகற்றப்பட்டது. கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த குட்டி ஷியா அம்மாவைச் சுரண்டினாள். ‘யார் அம்மா அது?’ ‘அது மரியாள், பக்கத்தில் நிற்கிறது யோசேப்பு’ அம்மாவை இடை மறித்தாள் பாப்பா. ‘அந்தப் பாப்பாவை ஏன் அம்மா வைக்கோலுக்குள்ளே படுக்க வைச்சிருக்கு. பாவம் பாப்பா. அது மரியாள் ஆன்டி என்றால் அந்தப் பாப்பா தான் இயேசப்பாவா?’ ‘நீ ஞாயிறு பள்ளியில் படிச்சது ஞாபகம் இல்லையா?’ என அம்மா கேட்டாள். ‘படிச்சது நடந்தது அப்ப. இப்பவுமா?’ அம்மாவின் பதிலுக்குக் காத்திராத சுட்டிப் பாப்பா எழுந்து ஓடி மேடையில் ஏறி, ‘பாவம் இயேசப்பா. இப்பவும் அவருக்கு இந்த வைக்கல் தொட்டியா? தாங்க, நான் என் கட்டிலை அவருக்குப் படுக்கக்கொடுக்கிறேன்’ என்றாள் மழலை மாறாத அந்தக் குழந்தை. பார்வையாளர்கள் ஸ்தம்பித்துப்போனார்கள்.

இது ஒரு கற்பனையென்றாலும் நமக்கு இதில் ஒரு பாடம் உண்டு. மேடையில் காட்டப்பட்ட காட்சி நடந்துமுடிந்த ஒரு சரித்திர நிகழ்வு. இது வேத சத்தியம்! ஆனால் இத்துடன் நாம் நிறுத்திவிடுகிறோமே, அதைத்தான் நாம் சிந்திக்கவேண்டும். இயேசு பிறப்பு என்றால் மாட்டுத் தொழுவம்தான் என்ற மனநோக்கோடும், இந்தக் காட்சிகளை மனதில் பதித்துக்கொண்டும் வளருகின்ற பிள்ளைகள், இன்று சத்திரத்திலே இடங்கிடையாத, வீடு வாசல் கிடையாத பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தவறுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதே மனநிலையில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும், அதாவது இன்று நாமும் அந்த மாட்டுத் தொழுவத்துடன் இயேசு பிறப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறோம். அன்று அது, அது சத்தியம்! ஆனால் இன்று எது என்று சிறு பிள்ளைகளின் இருதயத்திலே விதைத்துவிடுவோமானால், அடுத்த சந்ததியாவது நாம் தவறவிட்டதைச் சரி செய்து, தேவனை மகிழ்விக்குமல்லவா!

பல பழகிப்போன வழக்கங்கள்:

டிசம்பர் மாதம் என்றதும், மாட்டுத்தொழுவங்களும், இயேசு பிறப்புக்குச் சம்பந்தமே இல்லாத சவுக்கு மரக்கொப்புகளும் விற்பனைக்காக வீதிக்கே வந்துவிடுகின்றன. அன்றைய சம்பவத்தை நினைவுகூருவது கட்டாயம்; ஆனால் அதற்கே பழக்கப்பட்டவர்களாய் அங்கேயே முற்றுப்புள்ளி வைத்து விடுகிறோமோ என்பதை மாத்திரமல்ல, அன்று அந்தப் பிறப்பின் தார்ப்பரியத்தை, அதன் அடிப்படையில் ஆண்டவர் நமக்கு வைத்திருக்கின்ற அழைப்பை, நல்ல சுவிசேஷத்தை, செயற்படுத்திக்காட்டிய கிரியைகளை, இன்று நாம் செய்ய வேண்டியதை, இவற்றையெல்லாம் சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. கர்த்தர் நமக்கு ஏராளமான தருணங்களை வருடங்கள்தோறும் தந்தார்; அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்தினோம். அதனால்தானோ என்னவோ, கொள்ளைநோய்கள் போன்ற பல காரியங்கள் இன்று நமக்குத் தடைச் சுவர்களாக சவால்களாக எழுந்து நிற்கின்றன!

கடந்த அக்டோபர் மாதம் முதலாம் தேதி, குழந்தைகள் தினமாக நினைவுகூரப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த ஞாயிறிலே ஓர் ஆலயத்திலே பிள்ளைகள் தினம் கொண்டாடப்பட்ட சில நிழற் படங்களை அந்தச் சபையின் போதகர் அனுப்பி வைத்தார். பிள்ளைகள் அழகாக வெள்ளை நிற உடை உடுத்தி, சில நிகழ்வுகளை ஆலய ஆராதனையிலே நிகழ்த்தி மகிழ்ந்திருக்கிறார்கள், அவர்களுடைய பெற்றோரும் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள் என்பதை அந்த நிழற்படங்கள் காட்டின. ‘கொரோனாவின் இரண்டாம் அலைக்குள் நாடு சிக்கித் தவிக்க ஆரம்பித்தாலும், நீங்கள் எப்படி இதையெல்லாம் செய்தீர்கள்?’ என்று கேட்க, அந்தப் போதகர் சொன்னது இதுதான்: ‘கொரோனா பயம் நீங்கியிருந்த அந்த சொற்ப இடைவெளிக்குள் பிள்ளைகளை நாங்கள் ஆயத்தம் செய்துவிட்டோம். என்ன செய்வது? ஒவ்வொரு வருடமும் செய்து பழகியாச்சு. பழக்கத்தை விட்டால் பிள்ளைகளுக்கு ஏமாற்றம், எங்களுக்கும் இதைச் செய்துமுடித்தால் ஒரு திருப்தி’ என்றார் அவர்.

இந்தப் பதிலில் தவறே இல்லை. ஆனால், அவருடைய பதிலில் ஒரு சொல்லைக் கவனித்தீர்களா?, ‘பழகிப்போச்சு’! இன்று நம்முடைய கிறிஸ்தவ வாழ்வுக்கு, அதாவது கிறிஸ்துவுக்காக வாழுகின்ற வாழ்வுக்கு இதுதான் பெரிய சவாலாகிவிட்டிருக்கிறது என்பதை, கிறிஸ்துவின் பிள்ளைகள் நாம் சிந்திக்கவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம். அந்த மேடைக் காட்சியோ, இந்தப் போதகரின் பதிலோ, எதிலும் தவறில்லை; ஆனால் ‘இவ்வளவுதானா?’ என்பதுதான் கேள்வி. பிள்ளைகள் மகிழ்விக்கப்பட வேண்டியவர்கள்; ஏனெனில் வாழ்வின் பாரத்தை அறியாத அவர்களுக்குள் எதிர்பார்ப்புகள் உண்டு. நாம் அவர்களை ஏமாற்றக்கூடாது. ஆனால், அவர்களை மகிழ்விக்கின்ற அதே சமயம், அடுத்தது என்ன என்பதையும் அவர்களுக்கு ஊட்டவேண்டியது, வாழ்வை உணர்ந்த பெரியவர்கள் நமது பொறுப்பல்லவா! அதற்கு, முதலில் நமக்குள் அந்தப் பொறுப்புணர்வு உண்டா என்பது ஒரு கேள்வி. கிறிஸ்து பிறப்பின் மாதிரியில் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை நாம் முதலில் உணர்ந்து செயற்பட வேண்டியது மிக அவசியம்.

தேவகுமாரனின் பிறப்புக்கான தெரிந்தெடுப்பு:

ஆண்டவர் ஏன் குடிமதிப்பு எழுதிய நாட்களில் பிறக்கத்தக்கதாய் கணக்கிட்டு மரியாளின் கர்ப்பத்தில் உதிக்கவேண்டும்? நிறைமாதக் கர்ப்பிணி என்றும் பாராமல், 70 மைல்கள் பிரயாணமாய் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து, யூதேயாவிலுள்ள பெத்லகேமுக்குப் போகவேண்டிய சூழ்நிலையில்தானா இந்தப் பிறப்பு நிகழ வேண்டும்? அவர்களிடம் நான்கு சக்கர வாகனம் இருந் ததா? தமது குமாரனை மரியாள் தன் வயிற்றில் சுமந்துசெல்லுவதால், அவர்கள் செல்லும் பாதையைத் தேவன் கரடுமுரடின்றி செவ்வையாக்கிக் கொடுத்தாரா? தமது குமாரனுக்காக அதியுயர்ந்த வசதிமிக்க அரண்மனையை ஆயத்தம் செய்து கொடுத்தாரா?

ஆனால், அந்த இக்கட்டிலும் தேவன் அவர்களுடன் கூடவே இருந்தார்; பெலப்படுத்தினார்; உலகை இரட்சிக்கிறவர் உதிப்பதற்கேற்ற தாழ்மையின் சூழலை ஏற்படுத்திக்கொடுத்தார். இவை யாவும் தேவனுடைய அநாதி திட்டமாயிருந்தது என்பதை நாம் வேதாகமத்தினூடாக அறிந்திருக்கிறோம். ஆனால் அன்று இயேசு பிறப்பின் பாடுகள் நிறைந்த சூழலை, அதில் தேவன் கொண்டிருந்த நோக்கத்தை, இன்று நமக்கு மகிழ்ச்சி தரும் சூழலாக மாற்றி, அதில் மகிழ்ந்திருக்கவும் நாம் பழகிவிட்டோம். அதற்கேற்ப போதனைகளும் நம்மை வளைத்துக் கொண்டிருக்கின்றன.

மேலும், நாம் கற்பனைசெய்து வைத்திருப்பது போல, அன்று இயேசு பிறந்த மாட்டுத்தொழுவத்தின் சூழல் இருக்கவில்லை. அந்நாட்களில் தொழுவம் என்பது மந்தைக்குத் தீனி கொடுப்பதற்காக ஒரு குகைக்குள் அதன் சுவரில் தொட்டிபோல செதுக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். ஆக, நாம் கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல்களில் பார்ப்பதுபோல அது காணப்படாது. அங்கே வெளிச்சமோ பெரிய சுத்தமோ கிடையாது. மேசியா, ராஜாவாக அரண்மனையில் ஆடம்பரமாகப் பிறப்பார் என்று எதிர்ப்பார்த்திருந்த யூதர்களால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை. ஆனால் இன்று, அவர் இப்படித்தான் பிறப்பார், பிறந்தார் என்று வேத வாக்கியங்களின் அடிப்படையில் விசுவாசிக்கிற நாமோ, நமது கற்பனைகளில் எழுந்த அலங்காரமான தொழுவம் இயேசு பாலகனுக்குப் போதாதா என்பதுபோல அதற்கு நன்கு பழகிவிட்டோமோ! போதாதென்று பிறரையும் அந்த சிந்தனைக்குப் பழக்கியும் விட்டோமோ!

வாக்களிக்கப்பட்ட மேசியா வந்து பிறந்தபோது, ஆரவாரம் இருக்கவில்லை; தாம் பிறப்பதற்காக எவருடைய வீட்டையும் அவர் அபகரிக்கவில்லை; தமது பிறப்பை ராஜாக்களோ, பிரமுகர்களோ, அரசியல்வாதிகளோ அறிய இடமளிக்கவில்லை; மாறாக, ஒரு தச்சன், ஒரு ஏழைப் பெண், சில மேய்ப்பர்கள் இவ்வளவும்தான். சாஸ்திரிகள் நட்சத்திரத்தைக் கண்டு, கணிப்பீடுகள் செய்து, புறப்பட்டு, நீண்டதூரம் பிரயாணப்பட்டு வர ஏறத்தாழ இரண்டொரு ஆண்டுகளாவது எடுத்திருக்கும். ஆக, இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்டது யாருக்கு என்பதை நாம் உணரவேண்டும். இன்று அந்தப் பிறப்பின் சந்தோஷம் அறிவிக்கப்படவேண்டியவர்களை விடுத்து, ஏற்கனவே அதை அறிந்த நாமே தொடர்ந்து அறிந்துகொண்டிருக்கிறோம். இதற்கும் நாம் பழகிவிட்டோம்.

அன்று தேவதூதர்கள் வானில் தோன்றி, உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சுவிசேஷ செய்தியைப் பாடலாகப் பாடி, இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிற செய்தியை மேய்ப்பர்களுக்கு அறிவித்து அவர்களை மகிழ்வித்தார்கள். அவர்களும் உடனே ஓடிச்சென்று. முன்னணையிலே கிடத்தியிருந்த பிள்ளையைக் கண்டு, திரும்பிப்போய் அந்தப் பிள்ளையைக் குறித்துப் பிரசித்தம் பண்ணினார்கள். இன்று நாமும் பிரசித்தம் பண்ணுகிறோம்; ஆனால் எங்கே? நமது ஆலயக் கட்டிடங்களுக்குள், நமது வீடுகளுக்குள், நமது உறவினருக்குள்! அதுவும் நல்லது! ஆனால், நம்முடைய பொறுப்பு என்ன? வருடா வருடம் செய்து வருகின்ற ஆலய நிகழ்வுகளுக்கும் நாம் பழகிவிட்டோம்.

இயேசு தம்மைக் கொடுத்தார் என்று விசுவாசிக்கின்ற நாம் ஒருவருக்கொருவர், விசேஷமாக நமது பிள்ளைகளுக்கு வீட்டிலும் சபையிலும் பரிசில்கள் கொடுத்து, மறந்துவிடாமல் ஒரு கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் மரக் கொண்டாட்டம் நடத்துகிறோம். மிகவும் நல்லது. அந்நாட்களில் இந்த தாத்தா யார், மரம் எது என்று எதுவும் நமக்குப் பெரிதாகத் தெரியாது. ஆனால், இன்று சின்னப்பிள்ளைகள் முதற்தொட்டு யாவரும் இவற்றைக் குறித்து அறிந்திருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவற்றிற்கும் நாம் பழகிவிட்டோம்; விட்டிடலாமா!

பழக்கத்தை வழக்கமாக்குவதா? பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதா?

பழக்கத்தை எப்படி மாற்றுவது அல்லது விட்டு விடுவது? மாற்றவும் வேண்டாம், விடவும் வேண்டாம். ஆனால், இயேசுவை ஒரு பாலகனாக இன்னமும் முன்னணையில் கிடத்திவைத்து அழகு பார்க்கப்போகிறோமா என்று நம்மைநாமே கேட்டுப் பார்ப்போம். மாட்டுத்தொழுவத்தின் காட்சி நமக்குக் கிறிஸ்துமஸ் சந்தோஷ காட்சி; தவறில்லை. ஆனால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடுகிறதா? பாடல்களும் கொண்டாட்ட நிகழ்வுகளும் தொடரட்டும்; ஆனால், நாம் நமக்காகவே இன்னமும் பாடிக்கொண்டிருக்கப் போகிறோமா? இயேசுவின் பிறப்பை நேர்த்தியாகவும் சரியாகவும் நாம் பிரஸ்தாபப்படுத்தத் தவறுவதனால்தானோ என்னவோ, அது இன்று வீதிகளிலும் விற்பனைக் கூடங்களிலும் கவர்ச்சியாக ஜொலிக்கிறது. இவற்றுக்கும் நாம் பழகிவிட்டோம், இல்லையா!

இயேசுவை நாம் அந்த மாட்டுத்தொழுவத்திற்குள் விடமுடியாது. அப்படியானால் நாம் அவரை என்னதான் செய்யலாம். கிறிஸ்துமஸ் காலம் வந்ததும் அவர் இன்றும் குழந்தைதானா? இந்த ஆதரவற்ற அழகிய சின்னப் பாலகன் அற்புதமாக வாழ்ந்து, நமக்காக மரித்து, உயிர்த்தெழுந்து, பரத்துக்கு ஏறி, ராஜாதி ராஜாவாக மீண்டும் வரவும், இன்று தம்மை நாம் என்ன செய்கிறோம் என்பதற்கு நீதி வழங்கும் நீதியுள்ள நியாயாதிபதியாக மீண்டும் வரும் நாளுக்காகக் காத்திருக்கிறார். நாம் அவரை இன்னமும் ஒரு குழந்தை என்று கருதுகிறோமா? இல்லை, அவர் மீட்பர்தான் என்றால், அவரே இரட்சகர் என்று பிரகடனப்படுத்துகிறோமா? நமக்குப் பழகிவிட்ட காரணங்களுக்காக, ஜெயங்கொண்ட ஆண்டவரை ஒருபோதும் குறைவாக மதிப்பிடக்கூடாது. அவர் நமக்குள், பிள்ளைகளுக்குள் வளரவேண்டும்; அவருக்குள் நாமும் வளரவேண்டும். நமது குழந்தைத்தனமான பழக்கங்கள் மாறவேண்டும். அவருடைய பிறப்பின் நினைவுகூருதல்கள், அவருடைய ஜெயத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும். பிரகடனப்படுத்துவது என்றால் வெறுமனே பரிசில்கள் பரிமாற்றமா? அல்லது, பிறப்பின் பாடல்களும் கொண்டாட்டங்களுமா? சிந்திப்போம்.

இயேசுவைப்போல…

மொத்தத்தில் இயேசு நமது வாழ்வுக்குரிய சகல நிலைகளுக்கும் மாதிரியை வைத்துப் போயுள்ளார். அவரைப்போல வாழவே நாமும் அழைக்கப்பட்டுள்ளோம். மானிடத்திற்காகத் தம்மை முழுவதுமாகக் கொடுத்த இயேசுவை ஏன் நாம் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது? ஆடல் பாடல்களாலும் பரிசுகளாலும் புதிய ஆடைகளாலும் நமது பிள்ளைகளை மகிழ்விக்கின்ற அதே சமயம், மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத ஏராளமான பிள்ளைகள் உணவின்றி உடையின்றி ஆதரவின்றி புகலிடமின்றி இருக்கிறார்கள் என்பதையும் நமது பிள்ளைகளுக்கு ஏன் நாம் உணர்த்தக்கூடாது? பிள்ளைகளிடமிருக்கிற நல்லவை சிறந்தவற்றை, இல்லாத பிள்ளைகளுக்கு நமது பிள்ளைகள் கைகளாலேயே அன்போடு கொடுக்கவைத்து, அந்தப் பிள்ளைகளுடன் நமது பிள்ளைகள் மகிழ்ந்திருக்கின்ற ஒரு நிகழ்வை ஏன் திருச்சபை -– அதுதான் நாம் செய்யக்கூடாது? ‘இயேசு பிறந்தார்’ என்று தனக்குத்தானே பாடிக் கொண்டாடுகின்ற திருச்சபை – அதுதான் நாம், இரட்சிப்பையோ இரட்சகரையோ அறியாத மக்களண்டைக்கு சந்தோஷ செய்தியோடு ஏன் எழுந்துபோகக்கூடாது? கிறிஸ்துமஸ் செய்தியை மாட்டுத் தொழுவத்துடன் நிறுத்தாமல், இவரே மரித்து உயிர்த்து இன்றும் ஜீவிக்கிற இரட்சகர் என்று ஏன் திருச்சபை, அதுதான் நாம் ஏன் பிரகடனப்படுத்தக்கூடாது? எல்லாம் நிறைவாயிருக்கிற நாமே நமக்குப் பரிசில்களைக் கொடுப்பதை விடுத்து, இல்லாத மக்களை நாடி கிராமங்களுக்கும், யாருமே கால்மிதிக்காத இடங்களுக்கும் எழுந்து சென்று கிறிஸ்துவின் அன்பை கொடைகளாலும் அரவணைப்பினாலும் ஏன் திருச்சபை, அதுதான் நாம் பகிரக்கூடாது?

அடிமையின் ரூபமெடுத்து…

அநாதியான தேவன், வார்த்தையான தேவன், மாம்சமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் மனிதராகிய நமக்குள்ளே வாசம் பண்ணும்படி தாமே மனுஷனானார் என்று காண்கிறோம் (யோவான் 1:14). தேவனாகிய கர்த்தர் தமது மக்களாகிய இஸ்ரவேலுடன் வாசம் பண்ணும்படிக்கு, வாசஸ்தலம் ஒன்றை அமைத்து, அதிலே வந்து வாசம் பண்ணிய சிந்தனையைக் கொண்டிருந்த யூத வாசகர்களுக்கு, இந்த ‘வாசம் பண்ணும்படி’ என்ற வார்த்தை பெறுமதியான அர்த்தத்தைக் கொடுக்கும் என்பதை யோவான் அன்று அறிந்திருந்தார். ஆனால் இன்று, தமது பரலோக மேன்மை யாவையும் துறந்து, மனுஷனாக வந்துதித்த கர்த்தர், ஆரோன் மாத்திரம். அதிலும் வருடத்தில் ஒருமுறை மாத்திரம், அதிலும் மிகவும் பரிசுத்தமாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்ட மகா பரிசுத்த ஸ்தலத்தில் அல்ல; அவர் நமக்குள்ளே வாசம் பண்ணும்படி வந்தாரே! மேக ஸ்தம்பமாக, அக்கினி ஸ்தம்பமாக, இடிமுழக்கத்துடன், பெருங்காற்றுடனா அவர் வந்தார்? இல்லை. “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலி.2:6,7).

‘அடிமை’ என்பவன் யார்? அவனுக்கு ஒரு உரிமையோ, உரிமைச்சொத்தோ எதுவும் கிடையாது. தன் எஜமான் கை அசைக்கும்போது அசைய வேண்டியவன் அவன். நமது ஆண்டவர் எதற்காக இப்படியொரு பிறப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்? ஒரு ராஜாதிராஜாவாக, அல்லது பரலோகிலிருந்து மனுக்குலம் காணத்தக்க ஒரு அதிசய அபூர்வ அவதாரமாக இறங்கியிருந்தால் இந்த உலகம் பயந்து அவரை ஏற்றிருக்குமோ! ஆனால் அது அவர் நோக்கமல்ல. தமக்கென்று தாம் படைத்த அன்பின் மனுக்குலம், தம்மை விட்டுப் பிரிக்கப்படக் காரணமாயிருந்த பாவத்திலிருந்து மீட்கப்பட்டு, மீண்டும் ஒப்புரவாக்கப்பட்டு, நித்தியமாய்த் தம்முடன் வாசம் பண்ணவேண்டுமென்பதே அவருடைய சித்தமாயிருந்தது. அப்படியானால், அவர் நமக்குள்ளே நம்மில் ஒருவராய் வாசம் பண்ண வேண்டுமல்லவா! தமக்கென்று ஒரு வேறுபட்ட, மனிதர் அணுகமுடியாத ஒரு வாழ்வை அவர் கொண்டிருந்திருந்தால், நமக்கென்று வாழும் வாழ்வை அவர் சுமந்திருக்க முடியாது.

ஆக, ‘எனக்காகவா, எனக்காகவேயா அவர் அடிமையானார்? இவ்வளவும் செய்தார்? பிறப்பிலும் வாழ்விலும் மரணத்திலும்கூட இரவல் கல்லறைக்குள் வைக்கப்படும்வரைக்கும் தம் யாவையும் எனக்காகவா துறந்தார்?’ என்று நம்மை நாமே கேட்டுப்பார்ப்போம். அடிமையின் ரூபமெடுத்த இயேசுவை நமக்குள் உள்வாங்காத வரைக்கும், அவருடைய சிந்தையை நமக்குள் கொண்டிராத வரைக்கும், நம்மால் நமது பழக்கத்தையும் மாற்றமுடியாது; தேவனுக்காக அவர் சித்தப்படி வாழவும் முடியாது; தேவன் நம்மீது கொண்டுள்ள பரம நோக்கத்தைச் செயற்படுத்தவும் முடியாது; இந்த உலகிற்கு அவரை என்னால் இரட்சகராகக் காண்பிக்கவும் முடியாது. இத்தனையும் நாம் அறிந்ததே. ஆனால், இயேசு நமக்குள் மெய்யாகவே வாசம் பண்ணுகிறாரா? அது மெய்யானால், அவரைப்போலவே யாவும் மாறவேண்டுமல்லவா!

நமது பழக்கங்கள், பழக்கங்களாகவே இருக்கட்டும். ஆனால், கிறிஸ்துவின் அடிமையின் சிந்தை சிறிதாவது வெளிப்படும்படி அப்பழக்கங்களில் சற்று மாற்றத்தையாவது ஏற்படுத்தலாமே. அடிமைகள் என்று சொல்லிக்கொண்டு, அலங்காரம் செய்து நம்மை நாமே அழகு பார்க்கின்ற பழக்கத்தைச் சற்று மாற்றி, நொந்துருகி, வெந்துருகி, கொள்ளைநோயினால் தட்டுத்தடுமாறி, அருமையானவர்களை இழந்து, வியாதிப்பட்டு வேதனைக்குள்ளாகத் தவித்து நிற்கும் இந்த உலகிற்கு முன்னால் நாம் ஏன் அடிமைகளாகக் கூடாது! கிறிஸ்துவின் அன்பை ஏன் நாம் வெளிப்படுத்தக்கூடாது?

வாழ்வுமுறை மாற்றம், தொழில் நுட்ப மாற்றம், உணவுப்பழக்க மாற்றம், என்று உலகில் எத்தனை மாற்றங்கள்! ஆனால் நமது பழக்கங்கள் மாத்திரம் ஏன் உயிரற்றிருக்க வேண்டும்? சிந்திப்போம். ஆதரவற்று மீட்புக்கு வழிதெரியாத நம்மைத் தேடியே, தமது யாவற்றையும் விட்டு ஓர் அடிமையைப்போல இயேசு வந்தார். ஏன் நாமும், தேவனால் ஏற்படுத்தப்பட்ட அடிமைகளாக எழுந்து மக்களைத் தேடிப்போகக் கூடாது? ஆமென்.


உங்களுக்குத் தெரியுமா?

தேவனை உதாசீனம் செய்து பரலோக சிம்மாசனம் வெறுமையானதென்று எண்ணுகின்ற அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி அபாய ஒலி எழுப்புகின்றது!

சத்தியவசனம்