கிறிஸ்து எப்படி பிறப்பார்?

எம்.எஸ்.வசந்தகுமார்
(செப்டம்பர்-டிசம்பர் 2020)

மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் தேவனுக்கொரு திட்டமுண்டு. அந்த வகையில், இயேசுகிறிஸ்துவின் மானிட பிறப்பைக் குறித்து ஏறத்தாழ 232 பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் சொல்லர்த்தமாக நிறைவேறியுள்ளன. அதில் கிறிஸ்து எங்கு பிறப்பார் என மீகா 5:2லும், அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என ஏசாயா 7:14, 9:6லும் கூறப்பட்டுள்ளன.

இயேசுகிறிஸ்து எப்படி பிறப்பார் என்பதை ஆதி. 3:15 இல் தேவன் முன்னறிவித்துள்ளார்.

இது இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன் உரைக்கப்பட்ட முதலாவது தீர்க்கதரிசனமாகும். தேவனின் முதலாவது வாக்குத்தத்தமும் இதுவே. இதை முதலாவது சுவிசேஷம் எனலாம். ஏனெனில், உலகிற்கு வரும் மீட்பரைப்பற்றிய முதலாவது குறிப்பாகும்.

இவ்வசனமும் இதற்கு முன் உள்ள வசனமும் சர்ப்பத்துடன் தேவன் பேசுகின்ற வார்த்தையாக உள்ளபோதிலும், 14ஆம் வசனம் மாத்திரமே சர்ப்பத்திற்கான தண்டனை பற்றிய அறிவிப்பாக உள்ளது. 15ஆம் வசனத்தில் தேவன் சர்ப்பத்திற்குள் இருந்த சாத்தானிடமே பேசுகின்றார். ஏனெனில், ஆதாமையும் ஏவாளையும் வீழ்த்துவதற்காக சாத்தான் அவர்களைச் சோதிக்கச் சென்றபோது, அவன் சர்ப்பத்திற்குள் இருந்தே ஏவாளுடன் பேசினான் (ஆதி.3:1). அதனால்தான் புதிய ஏற்பாட்டிலும் சாத்தான் சர்ப்பமாக உருவகிக்கப்பட்டுள்ளான் (வெளி.12:9, 20:2).

முதலாவது பகை

உனக்கும் ஸ்திரீக்கும் என்று இவ்வசனம் ஆரம்பமாகின்றது. இது சாத்தானுக்கும் ஏவாளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட பகையாகும். சாத்தான் ஏவாளை சோதிக்கச் சென்றபோது, அவள் சாத்தானுடன் பேசுகிறவளாக இருந்ததினால், இனிமேல் அப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காக தேவன் அவளுக்கும் சாத்தானுக்கும் இடையில் பகையை ஏற்படுத்தப் போவதாகத் தெரிவித்தார்.

சில வேத ஆராய்ச்சியாளர்கள் இது சர்ப்பங்களுக்கும் மனிதருக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் பகை என்று கருதுகின்றனர். இதனால், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்னும் வாக்கியம் சர்ப்பங்கள் மனிதரின் காலையே தீண்டும் என்றும், அவர் உன் தலையை நசுக்குவார் என்னும் வாக்கியம், மனிதர்கள் சர்ப்பத்தின் தலையைக் குறிவைத்து அடித்து அவற்றை கொல்லுவார்கள் என்றும் இவ்வசனத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். சர்ப்பத்தைக் கண்டால் மனிதர் ஏன் அதைக் கொல்ல முற்படுகின்றனர் என்பதற்கும், சர்ப்பங்கள் மனிதரைக் கண்டால் ஏன் கொத்துகின்றன என்பதற்கும் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமாகவே இவ்வசனம் இருப்பதாகச் சில வேத ஆராய்ச்சியாளர்கள் கருதினாலும், இவ்வசனம் தேவன் சர்ப்பத்திற்குள் இருந்த சாத்தானிடம் பேசுகின்ற வார்த்தைகளாக இருப்பதனால், தேவன் சாத்தானுக்கும் ஏவாளுக்கும் இடையில் ஏற்படுத்திய பகையைப்பற்றிய அறிவிப்பாகவே உள்ளது.

மனிதன் பாவத்தில் விழுகின்ற விதத்தில் சாத்தான் ஏவாளைச் சோதித்ததினால், அவன் மனிதருடைய எதிரி என்பதை அறியத்தரும் விதத்தில் அவனுக்கும் ஏவாளுக்கும் இடையில் பகையை ஏற்படுத்தப்போவதாகத் தேவன் தெரிவித்துள்ளார்.

சாத்தான் நம்முடைய எதிரியாக இருப்பதனால் (1பேது.5:8) நாம் அவனுடன் நட்புறவு வைத்துக் கொள்ளக்கூடாது. உண்மையில், சாத்தான் என்ற எபிரெய சொல்லின் அர்த்தம் எதிரானவன் என்பதாகும். அவன் நமக்கு எதிராகச் செயற்படுகிறவனாகவே இருக்கின்றான்.

இரண்டாவது பகை

சாத்தானுக்கும் ஏவாளுக்கும் மாத்திரமல்ல, சாத்தானுடைய வித்துக்கும் ஸ்திரீயினுடைய வித்துக்கும் இடையிலும் பகையை உண்டாக்குவதாக தேவன் இவ்வசனத்தில் முன்னறிவித்தார். இத்தீர்க்க தரிசனத்தில் சாத்தானின் வித்தாகவும், ஸ்திரீயின் வித்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் யார் என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. ஏவாளின் பிள்ளைகளே ஸ்திரீயின் வித்தாக இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். வேறு சிலரோ, ஸ்திரீயை சபைக்கான அடையாளமாகவும், அவளுடைய வித்தை சபையின் விசுவாசிகளாகவும் கருதுகின்றனர். ஆனால், அடுத்த வாக்கியத்தில் இந்த வித்து “அவர்” என்று தனிப்பட்ட ரீதியாக ஒருவரைக் குறிப்பிடும் விதத்தில் இருப்பதனால், இதை ஏவாளின் வம்சத்தினராகவோ அல்லது கிறிஸ்தவ சபையின் விசுவாசிகளாகவோ கருதமுடியாது. தனிப்பட்ட ஒரு நபரே இவ்வசனத்தில் ஸ்திரீயின் வித்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஸ்திரீயின் வித்து

உண்மையில், ஸ்திரீயின் வித்தாக இத்தீர்க்க தரிசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவர் இயேசு கிறிஸ்துவே (கலாத்.3:16).

பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்னும் வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்டபோது (ஆதி.12:3), அவனுடைய வம்சத்தில் வரும் இயேசுகிறிஸ்துவினால் உலகிலுள்ள சகல ஜாதியினரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்னும் அர்த்தத்திலேயே அந்த வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கு கிறிஸ்து என்னும் சந்ததி (அதாவது மூலமொழியின்படி வித்து) ஆதியாகமம் 3:15இல் முன்னறிவிக்கப்பட்டுள்ள ஸ்திரீயின் வித்தாகவே உள்ளது. தமிழ் வேதாகமத்தில் வித்து என்ற வார்த்தைக்குப் பதிலாக சந்ததி என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ள போதிலும், மூலமொழியில் ஆங்கில மொழியில், வித்து என்னும் அர்த்தமுள்ள சொல்லே உள்ளது. இயேசுகிறிஸ்துவை ஸ்திரீயின் வித்தாகக் குறிப்பிடும் முதலாவது தீர்க்கதரிசனமானது, அவர் எவ்விதமாக பிறப்பார் என்பதை முன்னறிவிக்கின்றது. வழக்கமாக மனிதர் கருத்தரித்துப் பிறக்கின்ற விதமாக அவர் ஆணின் விந்தணுவின் மூலமாக அல்ல, ஆணின் விந்தணு இல்லாமலேயே அவர் ஒரு பெண்ணிடத்தில் பிறப்பார். இத்தகைய அர்த்தத்திலேயே பவுலும் கலாத்தியர் 4:5இல் இயேசுகிறிஸ்துவை ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் பிள்ளைகள் ஆணின் வித்தாகவே கருதப்பட்டார்கள். இதனால் பிள்ளைகள் அக்காலத்தில் பெண்ணின் வித்தாக அல்ல. ஆணின் வித்தாக குறிப்பிடப்படுவார்கள். ஆனால், இயேசுகிறிஸ்து ஆணின் விந்தணு இல்லாத நிலையில் அற்புதமான விதத்தில் கன்னிப்பெண்ணாக இருந்த மரியாளின் வயிற்றில் கருத்தரித்துப் பிறந்ததினால் (லூக்.1:35) அவர் ஆணின் வித்தாக அல்ல; பெண்ணின் வித்தாக ஆதியாகமம் 3:15 இல் முன்னறிவிக்கப்பட்டுள்ளார்.

இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் (ஏசா.7:14) என ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக 700 வருடங்களுக்கு முன்பே தேவன் வெளிப்படுத்தினார்.

இயேசுகிறிஸ்து மரியாளிடத்தில் பிறந்தபோது இது நிறைவேறியது (மத்.1:22,23). மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்ட மணப்பெண்ணாயிருந்தபோதிலும், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு முன்பே, மரியாள் கர்ப்பவதியாய் இருந்தாள் என்பதையும் (மத்.1:18), இயேசுகிறிஸ்து பிறக்கும்வரை யோசேப்பு மரியாளுடன் பாலுறவில் ஈடுபடவில்லை என்பதையும் (மத்.1:25) மத்தேயு குறிப்பிட்டுள்ளார். எனவே, ஆதியாகமம் 3:15 முன்னறிவித்த விதமாக, இயேசுகிறிஸ்து ஸ்திரீயின் வித்தாக, கன்னிப்பெண்ணான மரியாளின் மூலம் இவ்வுலகத்திற்கு வந்தார்.

அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்…

இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்த நாள்முதல், சாத்தான் அவரை அழிப்பதற்கு தன்னால் எதையெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்தான். இதனால்தான், இயேசு கிறிஸ்து பிறந்தபோது, சாத்தான் ஏரோதுவைத் தூண்டி சகல ஆண் பிள்ளைகளையும் கொலை செய்வித்தான் (மத்.2:12-16). தேவாலய உப்பரிகையிலிருந்து அவரைக் கீழே குதிக்கும்படி கூறினான் (மத்.4:5,6). இயேசுவை செங்குத்தான மலை சிகரத்திலிருந்து தலைகீழாய்த் தள்ளிவிட தூண்டினான் (லூக்.4:28,29).

கலிலேயாக் கடலில் படகைக் கவிழ்த்து அவரைக் கொல்லும் நோக்கத்துடன் சாத்தான் கொந்தளிப்பை ஏற்படுத்தினான். அதனாலேயே, இயேசுகிறிஸ்து மனிதரைப் பிசாசுகளின் பிடியிலிருந்து விடுவிக்க எந்த வார்த்தைகளை உபயோகித்து அதட்டினாரோ, அதே வார்த்தைகளை உபயோகித்துக் காற்றையும் கடலையும் அதட்டி அமைதிப்படுத்தினார் (மாற்.4:39). இன்னும் பல சம்பவங்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்வில் ஏற்பட்டன.

கடைசியாக இயேசுகிறிஸ்து தம்மையே பலியாக சிலுவையில் ஒப்புக்கொடுத்தபோது, யூத மதத் தலைவர்களையும் ரோம அதிகாரிகளையும் சாத்தான் தூண்டிவிட்டு, அவரைக் கொலை செய்தான். சாத்தான் மரணத்துக்கு அதிகாரியாக இருப்பதனால் (எபி.2:14) இயேசுகிறிஸ்துவின் மரணம் அவனால் அவருக்கு ஏற்படுத்தப்பட்டதொன்றாக உள்ளது. எனினும் இது தேவனால் அனுமதிக்கப்பட்ட காரியமாகவே உள்ளது. இதைப் பற்றியே ஆதியாகமம் 3:15 இல் நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்று சாத்தானுக்கு சொல்லப்பட்டது.

உண்மையில், இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் சாத்தான் அவரது குதிங்காலை நசுக்கும் செயலாகவே இருந்தது. ஏனெனில் சாத்தானால் அவரை முழுமையாக அழிக்க முடியவில்லை. அவர் மரணத்தையே ஜெயித்தவராக மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

சாத்தானின் வித்து

சாத்தானின் வித்தைச் சில வேத ஆராய்ச்சியாளர்கள் பிசாசுகளாகவும், ஏனையவர்கள் அதை அவிசுவாசிகளாகவும் கருதுகின்றனர். எனினும், ஸ்திரீயின் வித்து ஒருமையில் இருப்பது போலவே, சாத்தானின் வித்தும் ஒருமையில் இருப்பதனால், இதுவும் தனிப்பட்ட ஒரு நபரையே குறிக்கின்றது. உண்மையில், உலகின் இறுதிகாலத்தில் சாத்தானால் கொண்டு வரப்படும் உலக ஆட்சியாளனான அந்தி கிறிஸ்துவே சாத்தானின் வித்தாக இருக்கின்றான் (வெளிப்படுத்தல் 19:20). இவன் ஒருநாள் முழுமையாக அழிக்கப்படுவான்.

ஆதியாகமம் 3:15 இன் தீர்க்கதரிசனத்தை அடிப்படையாகக் கொண்ட பவுல், சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார் (ரோம.16:20) என எழுதுகிறார். சாத்தானின் அழிவு அவன் நரகத்திற்குத் தள்ளப்படுவதாகவே இருக்கும் (வெளி.20:10). ஸ்திரீயின் வித்தாக உலகத்திற்கு வந்த இயேசுகிறிஸ்து, மறுபடியும் இவ்வுலகத்திற்கு வரும்போது, சாத்தானையும் அவனுடைய வித்தாக எதிர்காலத்தில் வரும் அந்திகிறிஸ்துவையும் நரகத்தில் தள்ளுவார்.

சத்தியவசனம்