ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜனவரி-பிப்ரவரி 2021

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நமக்கு முன்பாக சென்று வழிநடத்துகிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

மக்களை ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்துகிற இப்பணியில் தங்கள் ஆதரவுகளைத் தெரிவித்துவருகிற அனைத்து பங்காளர்களுக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறோம். 2020ஆம் ஆண்டு முழுவதும் நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி பாதுகாத்த ஆண்டவர் இப்புதிய ஆண்டிலும் எந்தச் சூழ்நிலையாயிருந்தாலும் நம்மை வழிநடத்த அவர் வல்லவராயிருக்கிறார். தேவன்தாமே கொடிய காலத்திற்குள்ளாய் பிரவேசித்திருக்கிற நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாத்து வழிநடத்த அனுதினமும் அவர் பாதத்தில் மன்றாடுவோம். ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும் (மல்கி.4:2).

2021ஆம் ஆண்டு சத்தியவசன காலண்டரை பங்காளர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்திருந்தோம். கிடைத்திருக்கும் என்றே நம்புகிறோம். கடந்த ஆண்டு முழுவதும் சத்தியவசன வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து ஜெபத்தோடு தாங்கின ஆதரவாளர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்புதிய ஆண்டிலும் ஆதரவாளராக, பங்காளர்களாக இணைந்து ஜெபத்தினாலும் உதாரத்துவமான காணிக்கையினாலும் தாங்க அன்புடன் வேண்டுகிறோம். 2020ஆம் ஆண்டு அனுதினமும் கிறிஸ்துவுடன் அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் தங்கள் பெயர்களை எங்களுக்குத் தெரிவியுங்கள். அடுத்து வெளிவரும் தியான புத்தகத்தில் பெயர்களைப் பிரசுரிப்போம்.

இவ்விதழில் இதுவரை நடக்காத… என்ற தலைப்பில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் நமது இலக்குமாகிய நித்தியமான பரம கானானை நோக்கிய பயணத்தில் கைக்கொள்ளவேண்டிய ஆவிக்குரிய ஆலோசனைகளைத் தந்திருக்கிறார்கள். நமது வாழ்வின் முக்கியமான தேவை குடும்பத்தின் சமநிலையை பாதுகாப்பதே என கிறிஸ்துவுக்குள்ளான குடும்பவாழ்க்கைக்கான போதனைகளை தேவன் வடிவமைத்த குடும்பம் என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதியுள்ளார்கள். மேலும் குடும்பத்தைக் குறித்த தேவனுடைய அநாதிதிட்டம் என திரு. பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் அளித்த தேவன் அமைத்த முதல் குடும்பம் என்ற தலைப்பிலான செய்தியின் இறுதிபாகம் இடம் பெற்றுள்ளது. சகோ.பிரேம் குமார் அவர்கள் எழுதிய கசப்புணர்விலிருந்து வெளிவருதலைக் குறித்த சத்தியங்களின் தொடர்ச்சியும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய குணமாக்குதலும் விசுவாச ஜெபமும் என்ற தொடர் வேதபாடமும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஆவிக்குரிய நன்மைகளைக் கொண்டுவர வேண்டுதல் செய்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக தாங்கள் அடைந்துவரும் ஆசீர்வாதங்களை எங்களுக்கு தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்