இதுவரைக்கும் நடக்காத….

சகோதரி சாந்தி பொன்னு
(ஜனவரி-பிப்ரவரி 2021)

இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை. … சர்வபூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப்பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது (யோசுவா 3:4,11)


அழகான இலக்கம்கொண்ட வருடம் என்று கொண்டாடப்பட்ட 2020ம் ஆண்டு எப்படிக் கடந்துசென்றது என்பதை நினைத்துப்பார்க்கவே நமக்கெல்லாம் திகைப்பாகவே இருக்கிறது. கண் மூடிக் கண் திறப்பதற்கு முன்பு அந்த வருடம் கொள்ளை நோயுடனும், சூறாவளியுடனும், நில அதிர்வுடனும் கடந்துசென்றுவிட்டது. முழு உலகமுமே கொரானாவினால் ஆடிப்போய்விட்டது. எதிர்பாராத சம்பவங்கள்! காத்திராத திருப்பங்கள்! கற்பனையிலும் காணாத காட்சிகள்! திகில்கள்! மரண ஓலங்கள்! ஆனாலும். நமது தேவன் நமக்கு இதுவரைக்கும் துணையாக நின்றிருக்கிறார்! இன்னமும் நம் காலங்கள் அவர் கரத்திலேயே இருப்பதால் நாம் தைரியத்தோடே இப் புதிய ஆண்டுக்குள் செல்லுவோமாக.

கானானை நோக்கிய பயணம்

எகிப்தின் கொடூரமான அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலை மீட்டுவந்த மோசேயும் ஆரோனும் மரித்துவிட்டார்கள். மாத்திரமல்ல, எகிப்திலிருந்து புறப்பட்டுவந்த சந்ததியே மரித்துப் போனது. இப்போதிருப்பது ஒரு புதிய சந்ததி யோசுவாவின் தலைமையில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையில் இவர்கள் வந்து நிற்கிறார்கள். சித்தீமிலிருந்து பிரயாணப்பட்டு யோர்தான் மட்டும் வந்தவர்கள், அதைக் கடந்துபோகுமுன்பு மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள் (யோசுவா 3:1-5). முக்கியமான கட்டம் இது! யோர்தானைக் கடந்துவிட்டால் வாக்குப்பண்ணப்பட்ட தேசம் அவர்களுக்காகவே காத்திருக்கிறது. அதற்காக அவர்கள் அதற்குள் இலகுவாக ஓடிப்போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ள முடியாது.

எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது, இஸ்ரவேல் ஒன்றும் செய்யவில்லை; புறப்படு என்றதும் அவர்கள் புறப்பட்டார்கள், அவ்வளவும்தான். மற்ற யாவையும் கர்த்தரே செய்தார். இராப்பகலாய் அக்கினி ஸ்தம்பத்திலும் மேக ஸ்தம்பத்திலும் அவர்களுடன் கூடவே வழிநடந்து வந்தார். அவர்கள் அதனைக் கண்டார்கள். செங்கடலின் கரையிலே அவர்கள் பிறந்த குழந்தைகள்போல நின்றிருந்தார்கள்; கர்த்தரே அவர்களுக்காக யாவையும் செய்தார். அவர்கள் சமுத்திரத்தைக் கடந்து சென்ற அந்த இரவு முழுவதும் கர்த்தர் வேலை செய்தார். மாத்திரமல்ல, சீனாய் மலையுச்சியில் முழங்கிய கர்த்தருடைய சத்தத்தையும் கேட்டார்கள். வழி நெடுகிலும் மக்களின் முறுமுறுப்புகளையும் முறைப்பாடுகளையும் நீடிய பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு, கர்த்தர் அவர்களை நடத்தி வந்ததையும் அவர்கள் அனுபவித்திருந்தார்கள். இவை யாவுமே கர்த்தர் அவர்களுக்கு அருளிய விசுவாசப் பாடங்கள். வாக்களிக்கப்பட்ட தேசத்திலே வசிப்பதற்கான ஆயத்தங்கள். அதற்காக, எப்போதும் அவர்கள் குழந்தைகள் அல்ல; தேவனுடைய பலத்த கரத்தைக் கண்ட அவர்கள், பல அனுபவங்களுக்கூடாகக் கடந்து வந்துவிட்டார்கள். இப்போது, அவர்களுக்காகக் காத்திருக்கின்ற கானானின் பெறுமதிப்பை அவர்கள் உணர வேண்டும்.

ஆகையால் பல தடைகளுக்கு முகங்கொடுத்து அவர்கள் வேலை செய்யவேண்டும் என்று தேவன் சித்தம்கொண்டார். பிரவாகித்துப் பாய்கின்ற யோர்தான் நதி, வானளாவ உயர்ந்த அசைக்க முடியாத எரிகோவின் மதில்கள், சிறியதானாலும் சீறிப்பாயும் மக்களைக்கொண்ட ஆயி பட்டணம், மேலும் வழிநெடுகிலும் எதிர்த்துப் போரிடப்போகின்ற பல ராஜ்யங்கள்! மொத்தத்தில் முற்பிதாக்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசம் என்றாலும், இஸ்ரவேல் கானானைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமென்றால் பலவிதமான போராட்டங்கள், சோதனைகள், சவால்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும்; அவற்றை எதிர்கொண்டு அவர்கள் ஜெயம் பெற்றுத்தான் ஆக வேண்டும். தம்முடன் கூடவே இருந்து வெற்றி சிறக்கப்பண்ணும் கர்த்தரின் வல்லமையை அவர் கள் உணரத்தான் வேண்டும். அதிலேதான் மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கிறது.

அடிமைகளாக எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல், இப்போ விசுவாசப் பாடத்தில் முன்னேறியிருந்தனர்; வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்திருந்தனர். ஆகவே, இப்போ அவர்கள் தங்கள் விசுவாசக் கற்றலின் உயர்மட்டத்தில் இருந்தார்கள். வனாந்தரத்தில் பலவித அனுபவங்களால் உரமேற்றப்பட்டிருந்தவர்கள், கர்த்தர்கூடவே இருந்தாலும் அவர்களுடைய பங்களிப்பு அதிகமாக இருந்ததையும் அவர்கள் உணர வேண்டியிருந்தது. கானானில் யுத்தங்கள் புரிய வேண்டியிருந்தது; கர்த்தருடைய கட்டளைப்படி அங்கிருந்த ஜனங்களைத் துரத்த வேண்டியதிருந்தது; தேவ கட்டளையை மீறி அந்நியர் சிலரை வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கக்கூடிய சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இது விசுவாசப் பாடத்தின் முக்கிய கட்டமாகும்.

யோர்தான் நதிக்கரையிலே

யோர்தானைக் கடக்கும் முன்பதாக, யோசுவாவின் வார்த்தைகளை அதிபதிகள் எடுத்துக்கொண்டு பாளயம் எங்கும் போய், ஜனங்களின் செவிகள் கேட்கச் சொல்லுகிறார்கள்.

இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை. இதுதான் சொல்லப்பட்ட வார்த்தை. இதுவரை நடந்துபோகாத வழியில் நாம் நடக்கப்போகிறோம். ஆனால், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தை விட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள். உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத்தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்க வேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக என்று சொல்லிவிட்டு, இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்து போகவில்லை (யோசு.3:3,4) என்று ஜனத்துக்குக் கூறப்பட்டது.

மகா பரிசுத்த தேவன் தம் மக்கள் மத்தியில் வாசம் பண்ண விரும்பினாலும், தமக்குச் சமீபமாக வருகிறவர்கள் சாம்பலாகிவிடுவார்கள் என்பதாலேயே தாம் அன்று வாசம் பண்ணிய உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருந்த கிருபாசனத்தண்டைக்கு அன்பு நிறைந்த கர்த்தர் யாரும் அதற்குக் கிட்டிவர அனுமதிக்கவில்லை. இப்போதும், அவர்களுக்கு முன்செல்லுகின்ற உடன்படிக்கைப் பெட்டிக்கும் மக்களுக்கும் இடையே இரண்டாயிரம் முழம் தூரம் இருக்கவேண்டும் என்றிருக்கிறது. இது ஏறத்தாழ 900 மீட்டர் இடை வெளியாகும். சற்று கற்பனை பண்ணிப் பார்ப்போம். லட்சோபலட்சம் ஜனங்கள்; அவர்களுக்கு 900 மீட்டருக்கு முன்பாக அத்தனை தொலை தூரத்தில் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கின்ற ஆசாரியர்கள் செல்லுகிறார்கள். இது நம்மால் கற்பனையே செய்து பார்க்கமுடியாததொரு காட்சியாகும். ஆனால் தேவனாகிய கர்த்தர் இதனை நடப்பித்தார்.

இஸ்ரவேலர் செய்ய வேண்டியது, முதலில் அவர் கள் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களைக் காணும்போது மக்கள் தங்கள் இடங்களைவிட்டுப் பிரயாணப்பட்டு அதற்குப் பின்னேதானே செல்லவேண்டும். ஏனென்றால், அவர்கள் இதற்கு முன்னே ஒருபோதும் செல்லாத வழியாய் நடக்கப் போகிறார்கள். அந்த வழியை முன்சென்று காட்டப்போகிறவர், ஆசாரியர் அல்ல; கர்த்தருடைய பிரசன்னமேயாகும். அந்த வழியேதான் மக்கள் நடக்கவேண்டும். ஆனால், வார்த்தையை மீறி, அதாவது அந்த உடன்படிக்கைப் பெட்டியை மீறி, இன்னமும் சொல்லப்போனால் தேவபிரசன்னத்தை மீறி அவர்கள் அவசரப்பட்டுத் தாண்டிச் செல்லவும் கூடாது, பின் நிற்கவும் முடியாது. அப்படி நடந்தால் அதன் விளைவு அழிவுதான். யாவற்றையும் முன்னறிந்த தேவன் தம் மக்கள் இதுவரை நடக்காத வழியில் தாமே முன் சென்று பாதை காட்டினார்.

புதிய ஆண்டின் கரையோரத்திலே

கடந்துசென்ற ஆண்டு பல சுமையான நினைவுகளையும், இழப்பின் வேதனைகளையும், முற்றிலும் மாறிப்போன வாழ்வு முறைமையையும் நமக்குத் தந்துவிட்டு மறைந்துவிட்டது. இதனால், இனி என்னவாகுமோ என்பது பலருடைய ஏக்கம்! அது இயல்பு. ஆகவேதான் கர்த்தர், இதுவரை நீங்கள் ஒருபோதும் நடந்து போகாத வழியில் நானே முன்சென்று நடத்துவேன் என்கிறார்.

அன்று இஸ்ரவேலுக்கு உடன்படிக்கைப் பெட்டி அடையாளமாக முன்சென்றது; இன்று கர்த்தருடைய வேதம் நமக்கு அடையாளமாக நமது கரங்களில் மாத்திரமல்ல, நமது இதயத்தில் கர்த்தருடைய வார்த்தை, அவரது பிரசன்னமே இருக்கிறது, அது நம்முடனேயே இருக்கிறது. நாம் அதற்குத் தூரமாக விலகியில்லை. அன்று இஸ்ரவேலுக்கு உலகை வெற்றிசிறந்த இயேசுவைத் தெரியாது. இன்று நாமோ இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்களாய், அவருடைய பரிசுத்த ஆவியானவராலே வழிநடத்தப்படுகிறோம். கர்த்தருடைய வேதம் பொய் சொல்லாது. ஆனால் நாம் செய்யவேண்டிய ஒரு காரியம் உண்டு.

அன்று அந்த ஆசாரியர்கள் யோர்தானின் தண்ணீர் ஒரத்தைக் கிட்டிச்சேர்ந்ததும் அவர்கள் நிற்கவேண்டும், கட்டளை பிறக்கும்வரைக்கும் தண்ணீரில் இறங்கக்கூடாது. இந்த இடத்திலே யோசுவா ஆசாரியர்களுக்குச் சொன்னதாவது, ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் … உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது (யோசுவா 3:10,11).… பின்னர் நடந்தெல்லாம் நாம் வாசித்திருக்கிறோம், படித்திருக்கிறோம். இந்தப் பகுதியில் மிகவும் அழகானதும் ஆழமானதுமான பகுதி இதுதான். அறுப்புக்காலமாக அது இருந்ததால், கரை புரண்டோடிக் கொண்டிருந்த யோர்தானைப் பார்த்துப் பின்வாங்காமல், பெட்டியைச் சுமந்து வந்த ஆசாரியர்கள் யோர்தானை நோக்கி முன் வந்தார்கள். வசனம் சொல்லுகிறது: பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் (ஓரத்தில் பட்டாலே போதும், மற்றவற்றைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார்) பட்டவுடனே….. (வச.15).

இதுவரை நடக்காத

இந்நாட்களில், கிறிஸ்தவர்கள், புறவினத்தார் சகலருடைய வாயிலும், உலகம் கடைசிக் காலத்தைக் கிட்டிவிட்டது என்ற சத்தம் தொனிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் இதைக் குறித்து நாம் கலங்கவேண்டியதில்லை. உண்மைதான், கிறிஸ்து இயேசு வெற்றிவேந்தனாக பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே ஆரம்பித்துவிட்ட கடைசிக் காலத்தின் கடைசிக் கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம். இப்போது நடப்பவை எல்லாம் ஒருவித முன்னெச்சரிக்கைதான். இனி இப்படித்தான். பல திடுக்கிடும் நிகழ்வுகளுக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும். பல ஆச்சரியங்களை நாம் காணத்தான் போகிறோம். எதிர்பாராத சங்கதிகள் அடுத்தடுத்து வரத்தான்போகிறது. ஆனால் இவற்றைக் குறித்து ஏற்கனவே பரிசுத்த வேதாகமம் நமக்கு எச்சரித்துவிட்டது. ஆகவே நாம் கலங்க வேண்டிய அவசியமில்லை.

ஆகவே, இன்னமும் தூங்குகிறவர்களாக இல்லாமல் விழித்தெழவேண்டிய கட்டாயம் நமக்குண்டு. நமக்கு முன்னே நீண்டு நெடிதாக இருப்பது நாம் இதுவரை ஒருபோதும் நடக்காத வழி! இந்த வழியில் நம்மை அள்ளிக்கொண்டு போகக்கூடிய யோர்தான் குறுக்கிடலாம். அல்லது நமக்கு மேலேயே இடிந்துவிழுந்து நம்மை நசுக்கிப் போடுகின்ற எரிகோவின் மதில் பயமுறுத்தலாம். ஆனால் தடைகளை நீக்கிப்போடுகிறவர் நம் முன்னே செல்லுவதால், பயத்தைத் தள்ளிவிட்டு, வீண் கற்பனைகளைத் தூர எறிந்துவிட்டு, கர்த்தருடைய வார்த்தைக்கு மட்டும் செவிகொடுக்கிறவர்களாக, வார்த்தையை மாத்திரமே பின்பற்றி முன்செல்லுவோம். வார்த்தையை முந்திக்கொண்டு செல்லவோ, பின்வாங்கிப் போகவோ துணியாதிருப்போம். நமக்கு முன்னே அல்ல; நமக்குள்ளே வாசம்பண்ணி நம்மை நடத்துகிறவர் நம்மோடிருக்கிறார்.

இந்தப் புதிய ஆண்டும் நமக்கு எதையும் தரட்டும். ஆனால் நாம் விசுவாசித்து கீழ்ப்படிந்து பின் செல்லுகிறவர் சர்வ பூமிக்கும் தேவனாயிருக்கிற ஆண்டவராகிய கர்த்தர் மாத்திரமல்ல, சாவை வென்று நித்தியத்தின் நிச்சயத்தை நமக்கு அருளியவர். இப்புதிய ஆண்டும் ஒருநாளைக்கு மாறிப்போகும். நமக்கு முன்னே இருப்பதும், நமது பயணத்தின் இலக்குமாகிய நித்தியமான பரம கானானை நோக்கிய நமது பயணத்தில் நாம் தைரியமாக நமது கால்களை முன்னே வைக்கலாம். காலைத் தூக்கி நம்பிக்கையோடு வைத்தாலே போதும். மற்றவற்றை கர்த்தர் பார்த்துக்கொள்வார்.

ஆகவே, வீண் வார்த்தைகளையும், வீணான தீர்க்கதரிசனங்களையும், வீணான போதனைகளையும் நாடி ஓடி வீணராய்ப் போய்விடாதபடிக்கு, கர்த்தருடைய வார்த்தையில் நிலைத்திருக்கப் பரிசுத்த ஆவியானவர் தாமே நம் ஒவ்வொருவரையும் பலப்படுத்தி நடத்துவாராக. இனிவரும் காலங்கள் எப்படித்தான் இருந்தாலும், கர்த்தருக்குள் எப்பொழும் மகிழ்ச்சியாய் இருக்கின்ற கிருபையைப் பெற்றிருக்கிற நமக்கு வேத சத்தியமே அரணும் அஸ்திபாரமுமாக இருக்கட்டும். வானம் இடிந்தாலும் பூமி நிலைதடுமாறினாலும், கர்த்தருக்குள் திடமாய் ஸ்திரமாய் நிற்க ஆண்டவர் நம்மைப் பெலப்படுத்துவாராக. ஆமென்.

சத்தியவசனம்