தேவன் வடிவமைத்த குடும்பம்

Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2021)

இப்புவியின் சுற்றுச்சூழலில் அனைத்தும் ஒரு நோக்கத்தையும் முக்கியத்தையும் கொண்டுள்ளன. இது குடும்பத்துக்கும் உண்மையாகும். தேவனால் உருவாக்கப்பட்ட குடும்பமானது பூரணமான சமநிலை கொண்ட, பூரண சமுகத்தின் ஓர் இயல்பான அங்கமாகும். அதனை நாம் குழப்பாமல் இருந்தால் இன்னும் அதிகமான மகிழ்ச்சியை நம் குடும்பங்களில் பெறமுடியும். ஆனால் இன்றைய காலத்தில் தேவன் வடிவமைத்த குடும்பத்தில் மக்கள் தங்களது நிலைப்பாட்டை உணராததால் அநேக குடும்பங்களில் குறைகள் ஏற்பட்டு அவை பிரிந்துவிடுகின்றன. இதற்கு திரைப்படங்களே காரணம் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவை பாரம்பரிய குடும்பங்களின் கட்டமைப்பை உதாசீனப்படுத்திவிட்டது.

அநேக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் வித்தியாசமான சேர்க்கைகளை குடும்பம் என்று சித்தரிக்கின்றன. ஆனால் குடும்பத்தைப் பற்றிய தேவனுடைய வரையறை இதுவல்ல. அதை அறியாததால், அநேக குடும்பங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. நாம்தான் அதனை அவ்வாறு சீர்குலைத்துவிட்டோம். அநேகர் இயற்கையை ரசிப்பதற்காக பல இடங்களுக்குச் சுற்றுச்சூழல் பயணம் செல்கின்றனர். அது தற்பொழுது ஒரு வியாபாரமாகிவிட்டது. அமேசான் மழைக்காடுகளுக்கும் ஆப்பிரிக்கக் காடுகளுக்கும் செல்கின்றனர். பசுமை வீடு, ஓசோன் வளிமண்டலம் இவற்றுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் நம்முடைய குடும்ப இயல்பினை நாம் சிந்திக்க உங்களை அழைக்கிறேன். தேவன் குடும்ப சூழல் அமைப்பை ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக வடிவமைத்தார். இயற்கையை பாழ்படுத்தும்பொழுது ஓசோன் மண்டலமோ, மழைக்காடுகளோ, தெற்காசிய சுனாமிப் பேரலைகளோ உலகத்தை அதிர்ச்சியடையச் செய்ததுபோல, குடும்பச்சூழல் பாதிக்கப்படும்பொழுது அது மாபெரும் அழிவை உண்டு பண்ணக்கூடியது.

நெற்பயிரின்மீது கரிசனை கொண்ட சீனா தேச கம்யூனிஸ்டுகளைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் வாசித்தது என் நினைவுக்கு வருகிறது. பல ஆயிரம் பறவைகள் வந்து அந்த பயிர்களைச் சாப்பிட்டு அழிவை உண்டு பண்ணின. எனவே அவர்கள் அப்பறவைகளை ஒழிக்க திட்டமிட்டனர். ஆனால் அதைச் செய்த பின்னர் நெற்பயிரின் விளைச்சல் அதிகரிப்பதற்கு பதிலாகக் குறைந்துவிட்டது. நடந்த காரியம் என்னவெனில், அந்த பறவைகள் நெற்பயிரை அழிக்கும் பூச்சிகளையே சாப்பிட்டுவந்தன. பறவைகளை அழித்த பின்னர் பூச்சிகள் அதிகரித்து பயிர்களை அழித்ததால் விளைச்சல் குறைந்துவிட்டது. முன்நிலையைவிட பின்நிலை மிகவும் மோசமாயிற்று. அவர்கள் விவசாய சூழ்நிலைக்கு இடையூறு செய்தனர். நமது குடும்பத்தின் சூழ்நிலையை நாம் சிந்திப்போம். தேவன் குடும்பத்தை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு நியமித்துள்ளார்.

பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் புத்தகத்தை வாசிப்போமானால் முதல் சில அதிகாரங்களில் தேவனுடைய உயிரியல் சூழலியலை நாம் காணலாம். ஒரு ஆணையும் பெண்ணையும் ஒன்றாக இணைப்பதே தேவனுடைய குடும்பத்தின் அமைப்பாகும். அவ்விருவரும் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் உருவாக்கினர். இதுவே குடும்பத்தின் கட்டமைப்பாகும். இந்த கட்டமைப்பு இடையூறு செய்யப்படுமானால் அது சூழியலையும் பாதிக்கும்.

நாம் எவ்வாறு தேவனுக்குப் பிரியமானதாகவும், அவர் ஆசீர்வதிக்க ஏற்றதாகவும் நமது குடும்ப அமைப்பை அமைத்துக்கொள்ளலாம் என நாம் ஆழ்ந்து ஆராய்வோம்.

இன்று உங்களுடைய குடும்பத்தில் அனைத்து காரியங்களும் நல்லமுறையில் நிறைவேறிக் கொண்டிருந்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் பொதுவாக சில குடும்ப சூழியலில் குறைபாடுகள் காணப்பட்டு அது அவர்களுக்கு துயரத்தைக் கொடுப்பதாக உள்ளது. உங்களுடைய குடும்பம் அவ்விதமாய் இருக்குமானால் குடும்ப அமைப்பை உருவாக்கிய தேவன் அதனை சரி செய்யவும் வல்லவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

தேவன் உருவாக்கிய குடும்பத்தின் சுற்றுப்புற சூழல் யாது? இதற்கு விடை காண நாம் முதல் குடும்பத்தின் உறுப்பினர்களான ஆதாம், ஏவாள் அவர்களுடைய பிள்ளைகள் ஆகியோரை நாம் கவனிக்கவேண்டும். ஆதாம் ஏவாளுக்கும் குமாரரும் குமாரத்திகளும் பிறந்தார்கள் என வேதாகமம் சொல்லுகிறது. இவ்வாறு குடும்பங்கள் உருவாகிப் பெருகின. ஆனால் ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து ஏவாளை உருவாக்கியவுடன் அவர் இருவரையும் இணைத்தார். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான் (ஆதி.2:24) என்று கூறினார். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தகப்பனோ தாயோ இல்லை; ஆயினும் தேவன் ஒரு கொள்கையை உண்டாக்கினார். அவர் ஒரு சூழியலை நிறுவினார். பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் (ஆதி. 2:18) என்று கூறியவர், அதற்கான தீர்வையும் செய்தார். மனிதனுக்கு சமமாக மனுஷியை உண்டாக்கினார். அவளை அவனுடைய பாதத்திலிருந்தோ தலையிலிருந்தோ அல்லது உடலின் வேறே இடத்திலிருந்தோ எடுக்காமல் விலா எலும்பிலிருந்து உருவாக்கினார்.

அவர் மனிதனுக்கு பின்வருமாறு கட்டளையிட்டார்: இது முக்கியமானது. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் (வசனம் 24). இதுவே முதல் குடும்பம். ஆணும் பெண்ணும் ஒரே நபராக, ஒரே குடும்பமாக, ஒரே நிறுவனமாக இருக்கவேண்டும். இதில் இருவருக்குமிடையில் உள்ள ஒற்றுமையை கவனிக்கத் தவறாதீர்கள். அவர்கள் தங்களுடைய சுற்றுப் புறச் சூழலைத் துறந்து ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகின்றனர்; அவர்கள் ஒன்றான இந்த சூழ்நிலையில் குழந்தைகள் உருவாகின்றனர்.

இந்த அமைப்பு கணவனும் மனைவியும் பிரிந்து வாழ ஆலோசனை தரவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக இணையவேண்டும்; ஒன்றாயிருக்கவேண்டும். இந்த திருமணத்துக்குள் பாலுறவு என்பது தேவன் அமைத்த ஒழுங்காகும்.

இரு ஆண்களோ அல்லது இரு பெண்களோ ஒரு குடும்பத்தை உருவாக்கமுடியாது. தேவனுடைய குடும்ப சூழலின் அமைப்பில் ஓர் ஆணும் பெண்ணும் இருக்கவேண்டும். அவர்கள் கணவனும் மனைவியுமாகி, பின்னர் தகப்பனும் தாயுமாக மாறுகின்றனர். தேவனுடைய இந்த திட்டத்தை விட்டு விலகும் எந்த அமைப்பும் தேவனால் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் அது குடும்பத்தின் இயக்கத்தை சீர்குலைப்பதால் தேவனுடைய தீர்ப்புக்குட்பட்டது.

தேவன் குறுகிய மனப்பான்மையுடையவரல்லர். பரிசுத்த வேதாகமம் வலியுறுத்தும் கருத்தினை நாம் கவனிக்க வேண்டும்; அது குடும்பம் என்பது ஒரு சமநிலையான சூழலின் அடிப்படை அலகு என மிகத்தெளிவாக கூறுகிறது. அந்த சமநிலையை நாம் மாற்றினால் அந்த அலகை நாம் குலைத்துவிடுகிறோம்; அதாவது தேவனுடைய அமைப்பைவிட்டு நாம் விலகி விடுகிறோம்.

இது நெற்பயிரைக் காப்பாற்ற பறவைகளை அழித்த செயல் போன்றதாகும். சுற்றுப்புற சூழல் அமைப்பில் பலவிதமான வேறுபாடுகள் உண்டு. அதுபோலவே குடும்பங்களும் வேறுபாடுகளால் உருவானவை. ஆனால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாடு. குடும்பத்துக்கு வெளியே உள்ள வேறுபாடுகள் குடும்பத்தில் வேறுபாட்டைக் கொண்டுவரக்கூடாது.

ஆண்களையும் பெண்களையும் தேவன் வேறுபட்டவர்களாய் உண்டாக்கினார். அவர்களை உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் வேறுபடுத்தினார். ஆணும் பெண்ணும் சரீரத்தில் வேறுபட்டவர்கள். அவர்களது உடலியல் அமைப்பு வித்தியாசமானது. பெண்களைவிட ஆண்களது உடலமைப்பு பெரியது. அவர்களது உணர்ச்சிகளும் வித்தியாசமானவை. ஆண்களைவிட பெண்கள் அதிக கரிசனையுள்ளவர்களாகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

தாய்மை என்று நாம் குறிப்பிடுவோம்; ஆனால் தந்தையைப் பற்றிய சொல் இல்லை. குழந்தை பராமரிப்பு என்ற கருத்தில் அரவணைப்பு என்று தாய்மையைக் குறிப்பிடுவோம். தந்தையைப் பற்றி அவ்விதம் யாரும் கூறுவதில்லை.

ஆண்களும் பெண்களும் வித்தியாசமானவர்கள். இரு ஆண்களும் இரு பெண்களையும் ஒன்றாக வைத்தால் அங்கு மாறுபாடு இல்லை. இருவரும் ஒரே பாலினமாக இருந்தால் தேவன் உண்டாக்கிய சமநிலையை நாம் அழித்துவிடுகிறோம்.

ஒருமுறை நான் டென்னிசி மாநிலத்திலுள்ள நாஷ்வில்லி என்ற இடத்திலிருந்து அதே மாநிலத்திலுள்ள பிரிஸ்டலுக்கு ட்ரை சிட்டிஸ் என்ற விமான நிலையத்துக்கு வானூர்தியில் சென்றேன். அந்த விமானம் எட்டு அல்லது ஒன்பது பேர் அமரக் கூடிய ஒரு குட்டி விமானம். நான் விமானத்தில் ஏறியபொழுது ஓர் இளம் பெண் வாசலில் நின்று புன்சிரிப்புடன் பயணிகளை வரவேற்றாள். நான் பலமுறை விமான பயணத்தை மேற்கொண்டிருந்ததால் அவளுடைய தோளில் காணப்பட்ட நான்கு சிறிய பட்டைகளையும், கைகளில் நான்கு சிறிய பட்டைகளையும் கண்டு அவளே அந்த விமானத்தின் ஓட்டுநர் என்று அறிந்துகொண்டேன். அப்பொழுது இரு இளம் வாலிபர்கள் அங்கு வந்து ஏறினர். முதலாவது அவர்கள் “அன்பே, எங்களுக்கு தேநீர் கொண்டுவா” என்று அவளிடம் கூறினர். அவள் புன்முறுவலுடன், “விமானம் புறப்பட்ட சில நொடிகளில் உங்களுக்கு தரப்படும்” என்று பதிலளித்தாள். இன்னும் பல விதங்களில் அவளைக் கேலி செய்தனர். சில நிமிடங்களுக்குப் பின்னர் அவள் கதவைப் பூட்டிவிட்டு விமானியின் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள். அதைக் கண்ட அவ்விளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஓர் ஆணின் வேலையை ஒரு பெண் செய்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. செய்யும் தொழில் முக்கியமல்ல; ஆனால் தேவன் உருவாக்கிய சமநிலை சூழல் அமைப்புக்கு நாம் இடையூறு செய்யக்கூடாது. ஆனால், இன்றைய காலத்தில் நாம் அனைத்துக்கும் ஊறு விளைவித்திருக்கிறோம்.

நாம் ஒன்றுபோல தோற்றமளிக்கவும், ஒன்று போல சிந்திக்கும் மனப்பான்மை உடையவர்களாயும் இருக்கிறோம். இருபாலருக்குமுரிய முடிதிருத்தும் நிலையத்துக்குச் சென்றால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சிகையலங்காரம் செய்யப்படுகிறது. ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான உடை அணிந்து வருகின்றனர். இன்றைய நமது சமுதாயத்தில் தேவனுடைய நியதி மீறப்படுவதை நாம் காணலாம்.

சுற்றுச் சூழலில் இரண்டுக்கு மேல் அனுமதி உண்டு. ஆனால் திருமணத்தில் அவ்வாறு இல்லை. திருமணத்தின் விளைவாக உருவாகும் பிள்ளைகளுக்கே அதில் இடமுண்டு. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள் (ஆதி.4:1-2) என்று வாசிக்கிறோம். இங்கே தேவனுடைய குடும்ப அமைப்பில் பிள்ளைகள் ஒரு அங்கமாக விளங்குகின்றனர். ஆனால் அவர்கள் மட்டுமே குடும்பத்தை அமைக்கமுடியாது. ஒரு ஆணும் பெண்ணுமே குடும்பத்தை உருவாக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் குடும்ப வாழ்வில் சமநிலையை நாம் பாதுகாக்கவேண்டும். தேவன் கூறியுள்ள குடும்பத்தின் அமைப்பையோ குடும்ப உறுப்பினர்களின் பங்கினையோ அதன் வெற்றியின் காரணிகளையோ நாம் பின்பற்றாவிட்டால் அக்குடும்பம் குழப்பமாகவே அமைந்துவிடும்.

வாழ்வின் ஒரு முக்கியமான தேவை நமது குடும்பத்தில் சமநிலையைப் பாதுகாப்பதேயாகும். அதை மறந்துவிடும்பொழுது நமது குடும்பம் தோல்வியில் முடியும். இக்குடும்பத்தின் உறுப்பினர்களான கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் இவர்களது பங்கினை நாம் இனி காண்போம்.

1. கணவன்: தன்னுடைய முன்மாதிரியினாலும் சில நேரங்களில் அதிகாரத்தினாலும் ஒரு கணவன் தனது குடும்பத்தை வழிநடத்திச் செல்லுகின்றான். குடும்பத்தைப் பாதுகாத்து அதன் தேவைகளை சந்தித்து வலிமையையும் தருகின்றான்.

2. மனைவி: தன் குடும்பத்தை பாதுகாக்கிறாள். ஒவ்வொரு நாளும் தன் வீட்டுக்காரியங்களை இயக்குகிறாள். குடும்பத்தின் உறுப்பினர்களை நேசிக்கிறாள்; ஆறுதலளிக்கிறாள்; திருத்துகிறாள்; புரிந்துகொள்ளுகிறாள்.

3. பிள்ளைகள்: அவர்கள் வழிகாட்டப்பட வேண்டியவர்கள். அவ்வாறு செய்யும்பொழுது அவர்கள் வளருகிறார்கள். அநேகமாக மூத்த குழந்தைகள் இளைய குழந்தைகளுக்கு வழிகாட்டுகிறார்கள்.

இங்கு நாம் ஓர் சிறந்த குடும்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு குடும்பத்தின் சூழ்நிலை அமைப்பை தேவன் இவ்வாறே உருவாக்கியுள்ளார். அதில் அங்கத்தினர்களின் பங்கை மாற்றும்பொழுதோ அல்லது நீக்கும் பொழுதோ அங்கு குழப்பமே மிஞ்சும். இக்குடும்பத்தின் குழப்பம் சமுதாயத்திலும் எதிரொலிக்கும்.

காற்றிசைச் சரம் (wind Chimes) என்பது சுற்றிலும் உலோகங்களால் தொங்கவிடப்பட்டு, நடுவில் மணிகளால் உருவாக்கப்பட்ட ஓர் அலங்காரத் தோரணமாகும்; காற்றின் அசைவில் உலோகம் அசைந்து மணியில் மோதி இனிமையான ஓசைகளை உண்டாக்கும். ஒரு குடும்பம் என்பதும் இது போன்றதே. தேவன் இந்த சரத்தை ஒன்றாக இணைத்துள்ளார். அநேக உறுப்பினர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளனர். அவற்றில் ஒன்று பிள்ளைகள். இன்றைய பிள்ளைகள் எவ்வாறு அதில் பொருந்துகின்றனர்? எவ்வாறு ஓர் ஆணையும் பெண்ணையும் தேவன் சமப்படுத்தி அவர்களுக்கு பிள்ளைகளையும் அருளுகின்றார் என்பதையும் நாம் காண்போம்.

தேவன் உங்களுக்கு குழந்தைகளைக் கொடுத்திருப்பதால் அது உங்களுடைய சூழ்நிலை அமைப்பை சமநிலையாக்கியுள்ளது என எண்ணாதிருங்கள். அவர்கள் உங்கள் குடும்ப அமைப்பில் சேர்க்கப்பட்டவர்கள். ஒருவேளை குழந்தைகள் வருமுன் உங்களுடைய அமைப்பு சமநிலையடையாதிருந்தால் அவர்கள் வந்தபின் அது பாதிப்படையும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே குழந்தைகள் இருந்தால் குடும்பத்தின் சூழலமைப்பை சமமாக்கலாம் என்று எண்ணாதீர்கள். அது பிரச்சனையை அதிகமாக்கும். நம்முடைய வாழ்வில் குழந்தைகள் மகிழ்ச்சியைக் கொடுப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனால் நமது வாழ்வுக்கு அவர்கள் அதிக சவால்களைக் கொடுப்பார்கள். ஏனெனில், நாம் வாழும் உலகம் பூரணமான சூழ்நிலை உடையதல்ல.

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததிலிருந்து இந்த உலகத்தின் சூழ்நிலை உடைந்துவிட்டது. இன்று இந்த உலகில் அநேக மக்கள் உடைந்த குடும்பத்தில் வாழ்கின்றனர்.

ஒருவேளை நீங்கள் தனி பெற்றோராய் இருப்பீர்களெனில், உங்களது குடும்பம் சீர்குலைந்துவிட்டது என்று நான் சொல்லுவேன். நீங்கள் உங்கள் துணையைப் பிரிந்தவர்களாயிருந்தாலும் உங்களுடைய குடும்பம் உடைந்துவிட்ட நிலையிலுள்ளது.

இந்நிலையில் உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை உண்டா? பரிசுத்த வேதாகமம் உங்களுக்கு என்ன ஆறுதல் அளிக்கிறது என்று எதிர்பார்க்கிறீர்களா?

இன்றைய காலத்தில் அநேக குடும்பங்கள் இருக்கும் நிலை அவர்களது தெரிந்தெடுப்பாகவே அமைந்திருக்கிறது. அநேக பெண்கள் எனக்கு கணவன் வேண்டாம்; அவருடைய அன்பளிப்பு மட்டுமே வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே அவர்கள் தங்களது குடும்பத்தை சூழ்நிலை இடையூறானதாகவே திட்டமிடுகின்றனர்.

நார்வேயில் 49 விழுக்காடு குழந்தைகள் திருமணமாகாத தாயாரை உடையவர்கள். ஐஸ்லாந்தில் இது 62 விழுக்காடு. அமெரிக்கா தேசமும் இதையொத்ததாகவே காணப்படுகின்றன. மற்ற நாடுகளிலும் இந்த கலாச்சாரம் பரவி வருகிறது.

அநேக குடும்பங்கள் தேவதிட்டத்துக்கு விலகிய குடும்பம் அமைக்க திட்டமிடுகின்றனர். ஆனால் இதன் முடிவோ உடைந்த குடும்பமாகிவிடுகிறது. உங்களது குடும்ப வாழ்வு முறிந்த நிலையிலோ அல்லது பிரிந்துபோனதாகவோ தனித்து விடப் பட்டதாகவோ இருந்தால் தேவனுடைய வார்த்தை உங்களுக்குக் கூறுவது என்ன?

சங்கீதக்காரன் தேவனைப் பார்த்து பின்வருமாறு கதறுகிறார்: தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும். என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர் (சங். 61:1-3).

குறிப்பாக புயலின் மத்தியில் அடைக்கலம் தேடும் குடும்பத்தைப் பற்றி நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். ஒருவேளை நீங்கள் இப்பொழுது ஏதோவொரு புயலின் நடுவே கடந்துசென்று கொண்டிருப்பீர்கள் எனில் உங்களுக்கு அவ்வித அடைக்கலம் நிச்சயம் தேவை. அந்த அடைக்கலத்தை நாம் தேவனிடம் மட்டுமே பெறமுடியும். நீங்கள் தனிமையாகவோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்தோ இந்த அழிவைக் கொண்டு வந்த புயலை நன்மையாக மாற்றித்தர ஜெபிக்கலாம்.

ஒருவேளை உங்களது கணவரோ அல்லது மனைவியோ இறந்திருப்பாரெனில், அவர் மீண்டும் வரமுடியாது; அல்லது அந்த இடத்தை மற்றொருவர் நிரப்ப முடியாது.

ஆனால் உங்கள் வாழ்வின் வெற்றிடத்தை தேவனால் மட்டுமே நிரப்பமுடியும். தேவனுடைய மகாப் பெரிய குடும்பத்தில் உங்களது குடும்பம் ஒரு சிறு அங்கம். அது சீராக இருக்க அவர் உதவ விரும்புகிறார். உங்களது குடும்பம் சீராக இருந்தால் அவரது மாபெரும் குடும்பமும் சீராக அமையும்.

கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய பாதுகாப்பான வசதிகளையும் வாய்ப்புகளையும் விட்டு வெளியே வந்து தேவன் நேசித்து பாதுகாக்கிறார் என்பதை குழப்பமான குடும்பத்துக்கு செயலில் காட்டவேண்டும்.

ஒரு குடும்ப அங்கத்தினர் தனிமையாகவோ அலலது பாதிக்கப்பட்டிருந்தாலோ அக்குடும்பத்தில் நாம் இடைபடுகிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் அக்குடும்பத்தினர் அதனை வரவேற்பர். ஆதிகால திருச்சபையினர் குடும்பத்தைத் தாங்கினதைப்போலவே நாமும் தாங்கவேண்டும். தேவனுக்கு தனிப்பட்ட நபர் முக்கியம். தம்பதிகளும் தேவனுக்கு முக்கியம்; குடும்பமும் தேவனுக்கு முக்கியம். பல குடும்பங்கள் இணைந்த திருச்சபையும் தேவனுக்கு முக்கியம்.

ஆதிகாலத் திருச்சபையினர் ஒருவரை ஒருவர் தாங்கினர். தனிநபர்கள் தனிநபர்களுக்கும், குடும்பங்கள் குடும்பங்களுக்கும் உதவினர். அதுதான் தேவனுடைய எண்ணம். ஆனால் கடந்த பல வருடங்களாக நாம் இந்த எண்ணத்தை இழந்துவிட்டோம் என அச்சப்படுகிறேன். பாதிக்கப்பட்ட மக்களை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் அவர்களுக்கு உதவிட நாம் முன்வர வேண்டும்.

பாதிக்கப்பட்ட எவரையும் என்னால் காணமுடியவில்லையே என்று கூறுவது எளிது. ஆனால் உங்களுடைய பணியிடத்தில், வேதபாட வகுப்பு குழுவில் அநேகர் உண்டு. அவர்கள் தங்களது குடும்பசூழல் சரியில்லை என்பதை மறைத்துக்கொண்டு மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவார்கள். அம்மக்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் ஜெபித்து உதவுவதே அவர்களுடைய வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும். மூத்தவர்கள் கூடுகை, முதியோர் இல்லம் ஆகியவற்றில் நாம் இவ்விதமான அநேக மக்களைக் காணமுடியும்.

ஜெபங்கள் அநேகருக்கு ஆறுதலைத் தரும். வெறும் ஜெபம் மாத்திரம் குடும்பத்தை இணைக்கும் அல்லது பிரிந்தவர்களைக் கூட்டிவரும் அல்லது குடும்பத்தின் இயக்கத்தை மாற்றி அமைக்கும் என நான் கூறவில்லை. அது நம்மை மாற்றும். அவ்வியக்கத்தில் உள்ள நம்மை மாற்றும்பொழுது அது குடும்பத்தையும் மாற்றும்.

நீங்கள் என் குடும்பத்துக்காக ஜெபியுங்கள். நான் உங்கள் குடும்பத்துக்காக ஜெபிக்கிறேன். உங்களுடைய சிந்தையில் வரும் குடும்பங்களுக்காக ஜெபியுங்கள், சபையின் குடும்பங்களுக்காக, வேதபாட கூடுகைக்கு வரும் குடும்பங்களுக்காக ஜெபியுங்கள்.

ஜெபம்: பிதாவே, குடும்பங்கள் உமக்கு முக்கியமானவை என நாங்கள் அறிவோம். ஆனால் நாங்கள் எங்கள் குடும்பங்களை சீர்குலைத்துவிட்டோம். நீர் திட்டமிட்டபடி நாங்கள் அதனை அமைக்கவில்லை. பலவித மக்களை அதில் இணைத்து அதைக் குடும்பம் என்று அழைக்கிறோம். அதன் விளைவை நாங்கள் இன்று அனுபவித்து வருகிறோம்.

எனவே இன்று குடும்பங்களுக்காக, இதனை வாசிக்கும் அன்னையர்களுக்காக, தந்தைகளுக்காக இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம். உடைந்த உறவுகளை சீர்படுத்தும். கோபமான வார்த்தைகளை சீர்படுத்தி குடும்பங்களை ஒற்றுமைப்படுத்தும். உம்முடைய ஆவியானவரின் பலத்தினால் அவர்களை இணையும். நன்றியுள்ள குடும்பத்தின் உறுப்பினர்களாக வாழ உதவி செய்தருளும். இயேசுவின் நாமத்தினால் ஜெபம் கேளும் பிதாவே! ஆமென்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை


பகிர்ந்து கொடுத்தலே தேவனை மகிமைப்படுத்தும் வாழ்வாகும்!!

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேற்குப் பகுதியில் ஒரு வறண்ட பிரதேசத்தில் ஒரு மனிதன் கால்நடையாய் வந்து கொண்டிருந்தான். அவனைத் தாகம் வாட்டியது. எதிர்பாராத விதமாக ஒரு பழைய, கைவிடப்பட்ட குடிசையைக் கண்டான்.

அதில் தண்ணீர் அடித்தெடுக்கும் ஒரு கைப்பம்பு இருந்தது. அதன் அடியில் ஒரு கூஜா நிறைய தண்ணீர் இறுக மூடப்பட்டு இணைக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒரு சீட்டு எழுதிக் கட்டப்பட்டிருந்தது. அதில், “இந்தத் தண்ணீரைக் குடித்துவிடாதேயுங்கள். கைப்பம்பு இயங்குவதற்கு இதைப் பயன்படுத்துங்கள். பின்னர் அடுத்த நபருக்காக இதை நிரப்பி வையுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த மனிதன் இதைக் கண்டு திகைத் தான். அவன் தாகத்தால் செத்துக் கொண்டிருந்தான். இவன் அந்தத் தண்ணீரைப் பம்பில் ஊற்றினால், அந்த ஆழ்துளை கிணற்றில் ஒருவேளை தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தால், அவன் உயிர் பிழைக்க இருந்த ஒரு வாய்ப்பையும் இழக்க நேருமே” என்று நினைத்தான்.

இருப்பினும் முயற்சித்துப் பார்க்க முடிவு செய்தான். பம்பின் குழாய் வழியாக அந்தத் தண்ணீரை ஊற்றினான். பாத்திரத்திலிருந்த தண்ணீர் முழுவதும் ஊற்றித் தீர்ந்ததும், கைப்பிடியை அடித்தபோது, நிரம்ப சுத்தமான நீர் கொப்பளித்து வந்தது. தண்ணீர் குடித்து தாகம் தீர்த்தான். பின்னர் அவன் அந்தப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதை மூடிய பின் அதனுடன் இணைந்த குறிப்பில் மேலும் ஒரு வரியை இவ்வாறு எழுதினான்: “முயற்சித்துப் பாருங்கள். நான் முயற்சித்தபோது அது நன்றாக இயங்கியது” என்று.

(ஞான முத்துக்கள் பத்து)

சத்தியவசனம்