தேவன் அமைத்த முதல் குடும்பம்

திரு.பிரகாஷ் ஏசுவடியான்
(ஜனவரி-பிப்ரவரி 2021)

குடும்பத்தைக் குறித்து தேவனுடைய அநாதித் திட்டம்


குடும்ப வாழ்க்கையைப் பற்றி வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிற அநேக காரியங்களைக் குறித்து இந்நாட்களிலே நாம் சிந்தித்து வருகிறோம். குடும்ப வாழ்க்கை தேவனாலே கொடுக்கப்பட்ட ஒன்றாகும். குடும்ப வாழ்க்கையிலே தேவனுடைய மக்கள் ஈடுபட்டார்கள். குடும்ப வாழ்வைக் குறித்து கிறிஸ்துவுக்கு அக்கறை உண்டு என்று பார்த்தோம். அதோடுகூட ஆதித்திருச்சபை குடும்ப வாழ்க்கையைப்பற்றி திருச்சபை மக்களுக்குப் போதித்திருக்கிறது.

உதாரணமாக 1கொரிந்தியர் 7வது அதிகாரத்திலே விவாகரத்தைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற சில காரியங்களைக் குறித்து நாம் சிந்தித்தோம். எபேசியர் 5,6 ஆம் அதிகாரம், கொலோ.3வது அதிகாரம், தீமோத்தேயுவுக்கு எழுதின நிருபங்களிலேயும் குடும்பம் எப்படி இருக்கவேண்டும், விசுவாசிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் பவுல் பேசியிருக்கிறார்.

ஆகவே, ஆதித்திருச்சபையிலே குடும்ப வாழ்வைப்பற்றி அதிகமான காரியங்கள் போதிக்கப்பட்டிருக்கிறது. இந்த காரணங்களினாலே, இந்த நாட்களில் குடும்ப வாழ்க்கையைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும். குடும்ப வாழ்வைப்பற்றி பேசுவது, அசுத்தமான ஒரு காரியமாகும் என சிலர் நினைப்பதுண்டு. ஏனென்றால் கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கின்ற தொடர்புகளைப்பற்றி நாம் பேசவேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்களை சபையிலே போதிக்கக்கூடாது. சபையிலே பேசக்கூடாது, இவை பரிசுத்தமான காரியங்கள் இல்லை என்று.

ஆனால் என்னைப் பொறுத்தவரையிலே தேவனுடைய கிருபையைக்குறித்து நாம் எவ்வளவு பேசுகிறோமோ, அந்த அளவுக்கு தேவன் நியமித்த குடும்பத்தைக் குறித்தும் நாம் பேசவேண்டும். ஏனென்றால் தேவன் கிருபையாக நமக்கு கொடுத்த ஈவுகளிலே அடிப்படையான பங்கு நம் குடும்பமும், அந்த குடும்பத்திலே தேவன் கொடுத்திருக்கிற உறவும் ஆகும். இந்த உறவுகளைப்பற்றி நாம் பேசவேண்டும். இந்த உறவுகள் உடைந்து விடாதபடிக்கு வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிற சத்தியங்களுக்கு நம்மைக் கட்டுப்படுத்த வேண்டும், நாம் அவைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

1. அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள்

இந்த உறவுகளைப்பற்றி பேசும்போது எபேசியர் 4-6ஆம் அதிகாரங்களிலே நாம் எப்படிப்பட்ட உறவுகளிலே நாம் நிலைத்திருக்கவேண்டும் என்று பவுல் அப்போஸ்தலன் எழுதுகிறார், உதாரணமாக 4ஆம் அதிகாரம் 2வது வசனத்திலே, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள் என்று சொல்லுகிறார். ஒருவரையொருவர் தாங்குங்கள், என்று சொல்லும்பொழுது ஆங்கிலத்திலே The Toleration என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறோம். ஒருவருக்கொருவர் பொறுமையாக நீங்கள் இருங்கள். நம் வாழ்க்கையிலே இரண்டு பேர் இணைந்து, அந்த குடும்பத்தின் மற்ற மக்களோடுகூட சேர்ந்து வாழும்போது நாம் முற்றும் துறந்த முனிவர்களாகிவிடுவதில்லை. பலவிதமான பிரச்சனைகள் வரலாம்.

ஆள்தத்துவங்களின் அடிப்படையிலே வித்தியாசங்கள் இருக்கலாம். தாலந்துகளின் அடிப்படையிலே, விருப்பங்களின் அடிப்படையிலே வித்தியாசங்கள் இருக்கலாம். குடும்ப சூழ்நிலையின் அடிப்படையிலே, கலாச்சாரத்தின் அடிப்படையிலே அதிகமான வித்தியாசம் இருந்துகொண்டே இருக்கும். இந்த வித்தியாசங்கள் எல்லாம் இருந்தாலும், ஒருவரையொருவர் நாம் தாங்கவேண்டும், ஒருவருக்கொருவர் நாம் பொறுமையாயிருக்க வேண்டும், புரிந்துகொள்ளுவதற்கு நாம் இடங்கொடுக்க வேண்டும். இங்கே சொல்லப்பட்டிருக்கிற காரியம் மிகுந்த தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாக, மனத்தாழ்மை என்ற வார்த்தை விவரிக்கப்பட்டிருக்கிறது. மனத்தாழ்மை என்றால் என்ன? வெளியரங்கமாக ஐயா, நான் தாழ்மையுள்ளவன், நான் தாழ்மையுள்ளவன் என்று சொல்வதல்ல, உள்ளத்திலே இருக்கிற ஒரு மனப்பான்மையிலேயே நாம் தாழ்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

சென்னையிலே ஒருபோதகரும் நானும் சேர்ந்து ஒரு குடும்பத்தை பார்ப்பதற்காய் போயிருந்தோம். அந்த வீட்டிற்கு போனபோது அந்த வீட்டினுடைய பெயர் பலகையிலே Humble Hut என்று எழுதியிருந்தது. தாழ்மையான குடிசை என்ற பொருள்பட அவ்வார்த்தை எழுதப்பட்டிருந்தது. அப்பொழுது அந்த போதகர் என்னைப் பார்த்து சொன்னார்: ஐயா, இந்த வீட்டிற்கு உங்களை அழைத்துக்கொண்டு போகிறேன். வெளியிலே பார்த்தால் தாழ்மையான குடிசை என்று எழுதியிருக்கிறது. ஆனால் உள்ளே பெருமையுடைய ஒரு பெண்மணி வாழ்கிறார்கள் என்று சொன்னார்.

அந்த வீட்டிற்குள்ளே நாங்கள் போனோம். போனவுடனே அங்கே இருக்கிற அந்த அம்மா வந்தார்கள், வாங்க, வாங்க, என்று சொல்லிக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள், தங்களைப் பற்றியே பெருமையாய் பேசினார்கள், பேசிக்கொண்டே இருந்தார்கள், அரை மணிநேரம் பேசி முடித்த பிறகு திடீரென்று சொன்னார்கள், நானே பேசிக்கொண்டு இருக்கிறேன், நீங்கள் யார் என்று கேட்டார்கள்? அப்பொழுது நான் சொன்ன ஒரே வார்த்தை, ஆமாம் என்று, எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால், அரை மணி நேரம் பேசின அந்த உரையாடலில் நான் உபயோகித்த ஒரே வார்த்தை ஆம் என்ற வார்த்தைமட்டுமே. வெளியிலே பார்த்தால் தாழ்மையான குடிசை. ஆனால் உள்ளத்திலே பெருமையுடைய ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

பிரியமானவர்களே, இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே தாழ்மையுள்ளவர்களாக இருந்தாலும், உள்ளத்திலே பெருமையுடையவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பெருமையின் அடிப்படையிலே அவர்கள் செய்கிற கிரியைகள் மற்றவர்களைப் பாதித்துக்கொண்டே இருக்கும். விசேஷமாய், குடும்பத்திலே பல பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கும். ஆகவே பவுல் சொல்லுகிறார்: நீங்கள் மிகுந்த மனத் தாழ்மையுடையவர்களாய் இருக்க வேண்டும். மனதிலே தாழ்மையுடையவர்களாய் இருக்க வேண்டும், அந்த தாழ்மை சாந்தத்தோடுகூட வெளிவர வேண்டும்.

மேலும் நீடிய பொறுமை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியுள்ளார். ஒரு கூட்டம் முடிந்தவுடனே என்னிடத்திலே ஆலோசனைக்காக வந்த ஒரு சகோதரி ஐயா, 13 வருஷம் என் கண வனோடுகூட நான் வாழ்கிறேன். அவர் ஒரு குடிகாரர். குடித்து வெறித்துவிட்டு வருகிறார், வீட்டிலே வந்து பிள்ளைகளை அடிக்கிறார், ஒவ்வொரு நாளும் பல பிரச்சனைகளை நான் தாங்க வேண்டியதுள்ளது. 13 வருஷம் பொறுத்துவிட்டேனே, இன்னும் எவ்வளவு பொறுமையாக இருக்கவேண்டும் என்றார்கள். நான் சொன்னேன்: அம்மா, நீடிய பொறுமையாக இருங்கள் என வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு நான் கொடுத்த ஆலோசனையாவது, ஒவ்வொரு பிரச்சனைக்கும் இரண்டு பிரச்சனை இருக்கிறது. ஒன்று உண்மையான பிரச்சனை. இன்னொன்று அந்த பிரச்சனையைப் பற்றி நமக்கு இருக்கிற மனப்பான்மையினாலே ஏற்படுகிற இன்னொரு பிரச்சனை என்று. முதல் பிரச்சனையை நம்மால் அகற்ற முடியாது, அது அடுத்தவர்களுடைய பிரச்சனை, ஆனால் இரண்டாவது பிரச்சனையை நம்மால் அகற்றவும் மாற்றவும் முடியும் என்றேன். அது என்னவென்று கேட்டார்கள்.

உங்கள் கணவன் ஒரு பிரச்சனையாக இருக்கிறார். அவர் ஒருகுடிகாரர்; இல்லை என்று சொல்லவில்லை, வேதனையான ஒரு சூழ்நிலைதான். ஆனால் அவரைக் குறித்து உங்கள் மனப்பான்மையில் இருக்கிற பிரச்சனையை நீங்கள் மாற்றமுடியும். எப்படி மாற்றமுடியும் என்று கேட்டால், 1கொரி.13வது அதிகாரத்திலே அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே, அதின் அடிப்படையில் விசுவாசத்தோடு கூட நீங்கள் பொறுமையாக இருங்கள். தேவன் உங்கள் கணவனை மாற்றுவார் என்றேன். சில மாதங்கள் கழித்து இன்னொரு ஆலயத்திலே பேசிவிட்டு நான் வெளியிலே வருகிறேன். அந்த அம்மா ஓடிவந்தார்கள். வந்து என்னிடம் சொன்னார்கள்: ஐயா, நீங்கள் சொன்ன காரியம் கிரியைச் செய்கிறது. என்னம்மா கிரியைச் செய்கிறது என்று கேட்டேன். அவர்கள் சொன்னது, நான் அதிக அன்போடுகூட என் கணவனை அணுகினேன். என் மனப்பான்மையை மாற்றிக்கொண்டேன். அதன் அடிப்படையிலே தேவன் என் கணவனை மாற்றியிருக்கிறார் என்று கூறினார்கள். ஆண்டவரிடத்தில் நம்மைத் தாழ்த்தி நம்மை மாற்றிக்கொள்ள இடங்கொடுக்கும்போது நம் மூலமாக மற்றவர்களை மாற்றுகிறார். நம்மை ஆசீர்வாதத்தின் கருவிகளாக கர்த்தர் பயன்படுத்துவார்.

குடும்ப வாழ்க்கையிலே மனத்தாழ்மையுடையவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும் நீடிய பொறுமை உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் பேசுவதற்கு மிகவும் எளிதான காரியமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையிலே இதைக் கொண்டுவருவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆகவேதான் 1 கொரி.13வது அதிகாரத்தை அனுதினமும் நாம் வாசிக்க வேண்டும், ஒருவேளை இந்த பிரச்சனை உங்கள் வாழ்க்கையிலே இருக்குமானால் நீங்கள் அனுதினமும் அந்த அதிகாரத்தைப் படித்து ஆண்டவரே, இதிலே சொல்லப்பட்டிருக்கிற அந்த அன்பினாலே என்னை நிரப்பும் என்று ஆண்டவரிடத்திலே கேட்க வேண்டும். 1 கொரி.13வது அதிகாரத்திலே சொல்லப் பட்ட அன்பு உங்கள் வாழ்க்கையை நிரப்பும் பொழுது கணவன் மேலோ அல்லது மனைவியின் மேலோ அல்லது மற்ற மக்கள் மேலோ நீங்கள் கொண்டிருக்கிற மனப்பான்மையை தேவன் மாற்ற ஆரம்பிக்கிறார். அதினால்தான் மிகுந்த தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய் இருந்து, அன்பினாலே ஒருவரையொருவர் தாங்குங்கள் என்றார் பவுல்.

ஒருவரையொருவர் தாங்குங்கள் என்பதினால் எவ்வளவு நாள் நாம் தாங்கவேண்டும். தேவன் நம்மேல் எவ்வளவு பொறுமையாய் இருக்கிறாரோ, அவ்வளவு பொறுமையாக நாம் மற்றவர்களை தாங்கவேண்டும். இதுதான் நான் சொல்ல முடியும். சிலர் தங்கள் வாழ்க்கையில் மிக ஆழமான பிரச்சனைகளோடுகூட வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எப்படி இதிலிருந்து விடுதலையடைவது என்று தெரியாத நிலையில் இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலே இருக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிற காரியம் என்னவென்றால், தேவன் உங்கள்மேல் எவ்வளவு பொறுமையுடையவராக இருக்கிறாரோ, அவ்வளவு பொறுமையுள்ளவர்களாக நாம் இருக்கத்தக்கதாக தேவனுடைய அன்பு நம்மை நிரப்பவேண்டும். அப்பொழுது தேவனுடைய நோக்கங்கள் அங்கே நமக்கு வெளிப்பட ஆரம்பிக்கும். எனவே ஒருவரையொருவர் அன்பினால் தாங்க ஆரம்பியுங்கள்.

2. சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.

1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரம் 25வது வசனத்திலே இன்னொரு காரியத்தைப்பற்றி அவர் பேசுகிறார். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள். சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. நீங்கள் பொறுமையுடையவர்களாக இருக்கவேண்டுமென்றால் உங்கள் எரிச்சல் தணியவேண்டும். எரிச்சலோடுகூட நீங்கள் படுக்கைக்கு போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அடுத்த நாள் காலையிலே நீங்கள் எழும்பும் பொழுது அந்த ஒரு எரிச்சல் பத்து எரிச்சலாக மாறிவிடும். அந்த பத்து எரிச்சலோடு அந்த நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டு அன்றைக்கும் நீங்கள் படுக்கைக்கு போனால் அடுத்த நாள் அது நூறாக மாறிவிடும். சின்ன காரியங்களை பெரிய காரியங்களாக மாற்றி குடும்பத்திலே பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறவர்கள் இருப்பார்கள். ஆகவேதான் இங்கே பவுல் சொல்லுகிறார்: நீங்கள் கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் என்று. கோபம் என்பது ஒரு நல்ல காரியம், கோபம் என்ற ஒரு தன்மை இல்லையென்றால், யாரையும் திருத்த முடியாது. வாழ்க்கையிலே உலகத்திலே பல விதமான தீமைகள் நடக்கும்போது அவைகளைப்பற்றி எந்த விதமான உணர்ச்சியும் நமக்கு இருக்காது.

ஆகவே கோபம் என்பது நல்ல காரியம். ஆனால் அதை ஆக்க வேலைக்காக பயன்படுத்தாமல், அழிவுக்காக பயன்படுத்துவது கோபம் பாவமாக மாறிவிடும். குடும்ப வாழ்க்கையிலே இது எவ்வளவு முக்கியமான காரியம்! அலுவலகத்திலே வேலை பார்க்கிறோம். யாரோடும்கூட பேச முடியாத நிலையிலே நாம் இருக்கிறோம், அடுத்த நாள் போய் பார்க்கிறவரைக்கும் நாம் சமாளித்து விடலாம். ஆனால் குடும்பத்திலே 24 மணி நேரமும், வாழ்நாள் முழுவதும் அவர்களோடுகூட வாழ்கிறோம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பாக நாம் படுக்கைக்குப் போவதற்கு முன்பாக நம்முடைய வாழ்க்கையிலே இருக்கிற எரிச்சல் தணிய வேண்டும். அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? ஒருவரை யொருவர் தாங்க வேண்டும், ஒருவருக்கொருவர் அன்பாய் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உரையாடி உறவுகளைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களின் வாழ்க்கையிலே இருக்கின்ற பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, ஆண்டவருக்கு நமது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண் டும். இப்படி நடைமுறை ஆலோசனைகளை பவுல் அப்போஸ்தலன் கொடுக்கிறார்.

3. பொய்யை களைந்து மெய்யைப் பேசக் கடவன்.

எபேசி.4:25வது வசனத்திலே சொல்லுகிறார்: அன்றியும் நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யை களைந்து அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். பொய் பேசாதிருங்கள், அப்படியென்றால் என்ன அர்த்தம்? நடிக்காதிருங்கள், நாம் ஒருவருக்கொருவர் நடித்துக் கொண்டிருப்போமென்றால், மற்றவர்கள் அதை கண்டுபிடித்துவிடுவார்கள். ஒருவருக்கொருவர் நடிக்காதிருங்கள், பொய்யைக் களைந்து மெய்யைப் பேசக்கடவன், இன்றைக்கு கணவன் மனைவி ஒருவரோடொருவர் பேசும்பொழுது களங்கமில்லாதபடிக்கு உண்மையைப் பேசவேண்டும். பொய்யை பேசக்கூடாது.

உண்மையை உள்ளதென்று பேசி ஒருவருக்கொருவர் இடையே இருக்கிற பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். தொலைபேசியில் மற்றவர்களோடு நாம் பேசும்பொழுது என்ன சொல்லுகிறோம், ஒரு காரியத்தை நாம் சொல்லுகிறோம். நீங்க ரொம்ப நல்லவங்க, நல்லாயிருக்கிறீங்க என்றெல்லாம் சொல்லிவிடுகிறோம். ஆனால் தொலைபேசியை கீழே வைத்துவிட்டு மற்றவரிடத்திலே சொல்லுவோம். அவன் ரொம்ப மோசமானவன் என்று. நாம் நேரடியாக பேசும்பொழுது ஒன்றை பேசுகிறோம், முதுகிற்கு பின்னாலே இன்னொன்றை பேசுகிறோம். பொய்யை களைந்து மெய்யை பேசுங்கள் என்பதின் அர்த்தம் என்னவென்றால் முகத்திற்கு நேராக நாம் என்ன பேசுகிறோமோ அந்த பேச்சிலே நாம் நிலைத்திருக்க வேண்டும். முதுகுக்கு பின்னால் வேற, முகத்துக்கு முன்னால் வேற என்ற நிலை கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளிடையில் இருக்குமானால் அந்தக் குடும்பத்தில் சந்தோஷமும் சமாதானமும் இருக்காது.

4. ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்

அடுத்தாக, எபேசியர் 4:32ஆம் வசனத்திலே ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்று பவுல் சொல்லுகிறார். குடும்ப வாழ்க்கையிலே மன்னிப்பு என்பது, மிகவும் முக்கியமான ஒரு காரியமாகும். தவறுகளைச் செய்யும்போது, நாம் அதை மன்னிக்க வேண்டும். எவ்விதமாக மன்னிக்க வேண்டுமாம்? கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்கள் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் தேவன் நமக்கு எப்படி மன்னித்திருக்கிறார்? நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிடும்போது தேவன் அதை மன்னித்துவிடுகிறார், அதை மறந்தும் விடுகிறார் என்று வேதத்திலே வாசிக்கிறோம். அதை மறுபடியும் மறுபடியும் அவர் சொல்லிக்கொண்டே இருப்பதில்லை, இன்றைக்கு சிலர் சொல்லுவார்கள், நான் அவளை மன்னித்துவிட்டேன். ஆனாலும், அவள் அப்படிச் செய்திருக்கக்கூடாது. நான் அவரை மன்னித்துவிட்டேன், ஆனாலும் அவர் அப்படிச் செய்திருக்கக்கூடாது. மன்னித்துவிட்டோம் என்று சொல்லிவிட்டு, மறுபடியும் மறுபடியும் அவர்களை இழுத்துக்கொண்டே இருப்பார்கள், அப்படிப்பட்ட காரியம் கிறிஸ்து நமக்கு மன்னித்ததுபோல, நாம் மன்னிப்பதில்லை, கிறிஸ்து மன்னித்ததுபோல என்று சொன்னால், கிறிஸ்து மன்னிக்கிறார் அதை மறந்துவிடுகிறார், மறுபடியும் நம்மை அவர் பார்க்கும்பொழுது, அந்த காரியத்தை நாம் செய்யாதவர்களைப்போல நம்மைப் பார்த்து, நம்மை முன்னேற்ற பாதையிலே வழிநடத்துவதற்கு அவர் உதவி செய்கிறார், அதுபோலவே நாம் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும். நாம் மன்னித்து அவர்கள் செய்த காரியங்களை மறந்துவிட முடியாது, ஏனென்றால் நாம் மனிதர்கள். ஆனாலும் அவர்கள் அதைச் செய்ததில்லை என்பதைப்போல அவர்களோடுகூட நாம் உறவிலே நிலைத்திருக்க வேண்டும்.

5. தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.

தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள், (எபேசி.5:21,22). புருஷர்களே, உங்கள் மனைவிகளிலே அன்புகூருங்கள் (5:25), 6ஆம் அதிகாரம் முதல் வசனம் பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்கு கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், 4வது வசனம் பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. அதிகமாக பவுல் அப்போஸ்தலர் ஒருவருக்கொருவர் நீங்கள் கீழ்ப்படிந்திருங்கள் என்று சொல்லிவிட்டு, கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கிற தொடர்பு, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கிற தொடர்பு, வேலைக்காரருக்கும் எஜமான்களுக்கும் இருக்கிற தொடர்பைப் பற்றி பேசுகிறார். அதற்கு முன்பாக அவர் சொல்லுவது ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள், யார் யாருக்கு கீழ்ப்படிய வேண்டும், இந்திய கலாச்சாரத்திற்குள்ளே சிக்கி தவித்துக்கொண்டிருக்கிற நாம், பல விதமான எண்ணங்களை மனதிலே வைத்திருக்கிறோம். மனைவி கணவனுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும். பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும். வேலைக்காரர்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று நாம் சொல்லி பழகிக்கொண்டவர்கள், ஆனால் வேதத்திலே சொல்லப்பட்டிருப்பது, நீங்கள் ஒருவருக்கொருவர் கீழ்ப்படியுங்கள், சிலவேளைகளிலே கணவன்மார் மனைவிமார்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். சில வேளைகளிலே பெற்றோர் பிள்ளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். ஆங்கிலத்திலே சொல்லப்பட்டிருக்கிற பதம் கீழ்ப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது Submit yourself என்ற வார்த்தையாகும்.

எங்கள் வீட்டிலே பிள்ளைகளோடுகூட நான் பேசிக்கொண்டிருக்கிறபொழுது பல காரியங்களைப் பற்றி நாங்கள் பேசுவோம். உதாரணமாக கிரிக்கெட் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிற நாட்களிலே, கிரிக்கெட்டைப் பற்றி பேசுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு கிரிக்கெட்டைப் பற்றி அதிகமாக தெரியாது, காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் அதையே பார்த்துக்கொண்டிருப்பதற்கு எனக்கு நேரமும் கிடையாது, ஆனால் பிள்ளைகளுக்கு அதிலே விருப்பம் இருக்கிறது. எனக்கு கவாஸ்கர், கபில் தேவ் போன்ற சில பெயர்களையும், சில காரியங்களைமட்டுமே தெரியும். ஆனால் என்னுடைய மகன் பல கிரிக்கெட் வீரர்களைப்பற்றியும், எங்கே யார் சதம் அடித்தார் என்றும் பல காரியங்களைப் பற்றி பேசுவார். அவனோடு கூட கிரிக்கெட்டைப் பற்றி நான் பேசும்பொழுது நான் என்ன சொல்லுவேனென்றால், உனக்கு அதிகமாயும் தெளிவாகவும் தெரிந்திருக்கிறது, ஆகவே நீ சொல்லுகிற காரியங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பேன். அதற்கு பிற்பாடு நான் குடும்பத்தில் வேதவசனத்தை எடுத்துப்போதிக்கும்பொழுது, அவன் என்ன சொல்லுவான்: அப்பா, வேத வசனங்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் சொல்லுகிற காரியத்திற்கு நான் கீழ்ப்படிகிறேன் என்பான். இந்த கீழ்ப்படிதல் என்பது, ஒருவரையொருவரை அடக்கி, ஆட்கொள்வதல்ல; ஆட்சி செய்வதுமல்ல, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் நாம் கீழ்ப்படிவதாகும். பிள்ளைகளுக்கு அதிகமாக தெரிந்த காரியங்களுக்கு, பெற்றோர் கீழ்ப்படிய வேண்டும். பெற்றோர் சொல்லுகிற நல்ல காரியங்களுக்கு பிள்ளைகள் கீழ்ப்படியவேண்டும். இப்படி கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய வேண்டும், இந்தக் கீழ்ப்படிதலின் அடிப்படையிலே, குடும்ப வாழ்க்கையிலே அமைதியும் சந்தோஷமும், சமாதானமும் நிலைவரமாக இருக்கும். அந்தக் கீழ்ப்படிதலின் அடிப்படையிலே, தேவனுடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேறும்.

வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிற இவ்வாறு குடும்பத்திற்கு வேதாகமம் கற்றுத்தரும் சத்தியங்களை கைக்கொள்ளும்போது நமது குடும்ப உறவுகள் உடைந்துவிடாமல் பெலப்படும்.

நமது குடும்பவாழ்க்கையை அபரிமிதமாக தேவன் ஆசீர்வதித்து, அந்த உறவுகளிலே நிலைத்திருக்க, அவருடைய கிருபையை தந்தருள்வாராக! ஆமென்.

(முற்றிற்று)

சத்தியவசனம்