கசப்புணர்வு

சகோ.ஆ.பிரேம்குமார்
(ஜனவரி-பிப்ரவரி 2021)
(சென்ற இதழின் தொடர்ச்சி)

1. கசப்புணர்வின் விளைவுகள்

அகித்தோப்பேல் என்ற ஓர் ஆலோசகர் தாவீது ராஜாவுக்கு இருந்தார். அவர் சொல்லும் ஆலோசனை தெய்வ வாக்கைப்போல இருந்தது (2சாமு.16:23). அவ்வளவு புத்தி சாதுர்யமான ஞானம் நிறைந்த, பலராலும் உயர்வாக மதிக்கப்பட்ட ராஜ ஆலோசகராக அவர் இருந்தார். இப்படி அறிவு ஜீவியாக ஞான சாதுர்யமுள்ள ராஜாவால் உயர்வாக மதிக்கப்பட்ட இந்த அகித்தோப்பேல் தற்கொலை செய்துகொண்டார். இவ்வளவு உயர் நிலையில் இருந்த ராஜாவின் ஆலோசகர் ஏன் தற்கொலை செய்தார்? கசப்புதான் அவர் அழிவுக்குக் காரணமாகியது. தாவீதோடு நெருக்கமாயிருந்தவர் கசப்புக்கொள்ள காரணமென்ன? அகித்தோப்பேலின் பேத்திதான் பத்சேபாள் (2சாமு.11:3, 1நாளா.3;:5, 2சாமு.23:34). அகித்தோப்பேல் தாவீதுக்கு ஆலோசனைக்காரனாக நம்பகமான நண்பனாக இருந்தார். அகித்தோப்பேலின் மகனும் பத்சேபாளின் தகப்பனுமான எலியாம் தாவீதின் பலவான்களில் ஒருவனாயிருந்தான் (2சாமு.23:34). அகிதோப்பேலின் பேரன் மாகீர் கூட தாவீதிற்கு உண்மையாக வேலை செய்தவன்தான் (2சாமு.9:3,4,2சாமு.17:27-29).

பத்சேபாளின் கணவன், தன் வீட்டிற்குக்கூட போகாமல் தாவீதுக்கு விசுவாசமாயிருந்தவன். இப்படி தாவீதுக்கு விசுவாசமாயிருந்த குடும்பத்திற்கு தாவீது செய்த அநியாயத்தை பாட்டனாகிய அகித்தோப்பேலால் மன்னிக்கமுடியவில்லை. தன் பேத்தியின் குடும்ப வாழ்வை சிதைத்து தனது குடும்பமே யாருக்கு உண்மையாயிருந்ததோ, அவரே அவளைக் கர்ப்பமாக்கி; தனது குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி, தனது பேத்தியின் கணவனையும் கொன்ற தாவீதை, அகித்தோப்பேலால் மன்னிக்க முடியவில்லை.

தாவீதுமேல் கசப்பு கொண்டு தாவீதைப் பழி வாங்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார். தாவீதின் மகன் அப்சலோம் தாவீதுக்கு எதிராக எழுந்தபோது, அகித்தோப்பேல் தாவீதை அழிக்கும்படி அப்சலோமோடு சேர்ந்துகொண்டார் (2சாமு15:31). தாவீதை அவமானப்படுத்தும்படி தாவீதின் மறுமனைவிகளோடு சேரும்படி அப்சலோமுக்கு ஆலோசனை கூறினார் (2சாமு. 16:;21). அப்படியே அப்சலோம் செய்த பின்பும் அகித்தோப்பேலின் கோபம் அடங்கவில்லை, கசப்பு மறையவில்லை. தாவீதைக் கொல்லும்படி அப்சலோமுக்கு ஆலோசனை கொடுக்கிறார் (2சாமு.17:1-4). அவ்விடத்திலிருந்த தாவீதின் நண்பன் ஊசா அந்த ஆலோசனையை அபத்தமாக்கினான். அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய், தன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான் (2சாமு.7:23) என வாசிக்கிறோம். தாவீதைப் பலியெடுக்கும்படி, அவனைக் கொலை செய்யமுடியாமல் போனதே என்ற கசப்பு அவனைக் கொன்றது.

தானும் தனது மூன்று தலைமுறைகளும் எவருக்கு உண்மையாக விசுவாசமாயிருந்தனரோ, அவர் தமது குடும்பத்திற்கு செய்த அநியாயம் மிகவும் பாரதூரமானதுதான். ஆனால் அந்தக் கசப்பு அகித்தோப்பேலின் அழிவுக்கே காரணமாகிவிட்ட நிலை துக்ககரமானது. கசப்பும் விஷம் போன்றது; புற்று நோய் போன்றது; அது அதனை உடையவரை அழித்துவிடக்கூடியது. பழி வாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று ஆண்டவர் கூறியுள்ளார் (உபா.32:35, ரோ. 12: 19, எபி.10:30). ஆண்டவர் நீதி செய்வார், நாம் நீதி செய்யும் பொறுப்பை அவரிடம் கொடுத்துவிட வேண்டும்.

தாவீது செய்த பாவங்களுக்கு ஆண்டவர் நீதி செய்ய வாக்குப்பண்ணினார் “கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால்; இதோ, நான் உன் வீட்டிலே தீமையை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் பெண்களை எடுத்து உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்த சூரியனுடைய வெளிச்சத்திலே உன் பெண்களோடு சயனிப்பான் (2சாமு.12:11). தாவீது இரகசியமாய் பத்சேபாளோடு உறவு கொண்டார். ஆனால் அவருக்குத் தண்டனையாக அவர் மறுமனையாட்டிகளோடு அப்சலோம் பகிரங்கமாக உறவு கொண்டான். அதுமாத்திரமல்ல; தாவீதின் பாவத்தின் விளைவாக அவன் பிள்ளையும் மரித்தது, நாட்டையும் அரசாட்சியையும் இழந்தார். சொந்த மகனே அவருக்கு எதிராக எழுந்து அவரை கொலை செய்யத் தேடினாான். நீதி செய்வது, தண்டனை கொடுப்பது ஆண்டவரின் வேலை. நாம் அதை செய்ய முற்படக்கூடாது. இனி கசப்புணர்வின் சில விளைவுகளைக் கண்ணோக்குவோம்.

1. கசப்புணர்வு நம் மனநலத்தைப் பாதிக்கிறது

ஒரு மனிதனுடைய வாழ்வில் அதிகளவில் மனதை நொருக்கும் மனநிலைப் பிரச்சனை கசப்பாகும் (Bitterness is one of the most crushing mental problems in a person’s life). கசப்பானது மன உறுதிப்பாடு உள்ளடங்கலாக இயல்பு கிறிஸ்தவ வாழ்வின் பல ஆசீர்வாதங்களை இழக்க காரணமாகிறது .

கசப்புணர்வோடு வாழும் மனிதர்கள் காயப்பட்ட மனிதர்கள் ஆவர். தெருப் பிச்சைக்காரன் எப்படி தன் காயத்தை ஆற்றாமல் அதனை வைத்து மற்றவரின் அனுதாபத்தை பெற விரும்புவானோ அப்படியே கசப்புணர்வோடுள்ளவனும் மனக் காயத்தை ஆறவிடாமல் திரும்பத்திரும்ப அதனை நினைத்து அதில் திளைத்திருப்பதுண்டு. அது அவனது மனதின் சமநிலையைப் பாதிக்கிறது, சந்தோஷத்தை எடுத்துப்போடுகிறது. கசப்பை விட்டுவிட்டால் தமக்குப் பிடித்திருக்க எதுவுமிராததுபோல சிலர் கசப்பை அப்படியே பிடித்திருக்கின்றனர்.

மனநிலை பாதிப்புறுவதால் சரியான விதத்தில் நடுநிலையாக சிந்திக்கக்கூட முடிவதில்லை. அது சுயபரிதாபம், கோபம், கசப்பு, வெறுப்பு என்று நம்மை சமாதானம் இல்லாதவர்களாக வைத்திருக்கிறது. கசப்புணர்வோடு வாழ்பவன் மன நலத்தை இழக்கிறான். அது பாரதூரமானதாயிருந்தால் மனநல ஆலோசகர் ஒருவரை நாடுவது நல்லது. நீங்கள் அதிகப் பாதிப்பிற்குள்ளாயிருந்தால் மனநல ஆலோசகர் உங்களை ஒரு மனநல மருத்துவரிடம் வழிநடத்தலாம். மருந்துகள்கூடத் தேவைப்படலாம்.

2. கசப்புணர்வு நமது உடல்நலத்தைப் பாதிக்கிறது (It affects us physically):

மனநலம் பாதிப்புறும்போது, அது நமது உடல் நலத்தையும் பாதிக்கிறது. கசப்பு விஷம் போன்றது. அதனை நாம் வருடக்கணக்கில் நமக்குள் வைத்திருக்கையில் அது படிப்படியாக நம் சரீரத்தைப் பாதிக்கிறது. கசப்பு புற்றுநோயைப் போன்றது; கசப்பை வைத்திருக்க வைத்திருக்க அது வளர்ந்து பரவலாம்; பாரதூரமான விதத்தில் உடல் நலத்தைப் பாதிக்கலாம். சிலர் கசப்பு மிகுதியால் அகித்தோப்பேலைப்போல தற்கொலை பண்ணிக்கொண்டதுமுண்டு. இன்னும் சிலர் மற்றவர்களைக் கொலை செய்ததுமுண்டு. மற்றும் சிலர் நடைபிணங்களாக வாழ்வதும் உண்டு.

பயம், கசப்பு. கவலை. கோபம், மனச்சோர்வு மன்னிக்காமை போன்ற எதிர்மறையான உணர்ச்சிகள் (Negative emotions) இராசயன பதார்த்தங்களை வெளியிடக் காரணமாகி அதனால்.. சமபாடின்மை.. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம். உடலெங்கும் எரிச்சலுடன் கூடிய வீக்கம் போன்றவற்றிற்கு வழிநடத்துவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. எதிர்மறையான உணர்ச்சிகள் நோய்எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது. நாம் பயம், கோபம், மற்றும் உணர்ச்சி ரீதியாக குழப்பத்துடன் இருக்கும்போது நமது உடலுக்கு அவசியமான சில ஹார்மோன்களை அளவுக்கு அதிகமாக சுரந்து நமது நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பலவீனப்படுத்தி, நோயை எதிர்க்கும் ஆற்றலை பாதிக்கிறது. …சிரிப்பு மனத்திருப்தி போன்ற சாதகமான உணர்ச்சிகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பெலப்படுத்தும் விதமான இரசாயன பதார்த்தங்களை வெளியிடுவதாக அறியப்பட்டுள்ளது .

கசப்பு நம் உளநலத்தை மட்டுமல்ல; உடல் நலத்தையும் பாதிக்கிறது என்பது நிச்சயமானது. நாம் கசப்போடு வாழ முடியாது. ஏனெனில் அது நமது ஆவியிலும் பின்பு உணர்வுகளிலும் (Emotions) இறுதியாக நமது சரீரத்திலும் அது தன்னை வெளிக்காட்டுகிறது .

3. கசப்புணர்வு நம் உறவுகளைப் பாதிக்கிறது.

கசப்பு நமது உளநலத்தையும் உடல் நலத்தையும் பாதிப்பதோடு நம் உறவுகளையும் பாதிக்கிறது. நமக்கு ஆண்டவரோடுள்ள உறவையும், நமக்கு மற்றவரோடுள்ள உறவையும், நமக்கு நம்மோடுள்ள உறவையும் பாதிக்கிறது.

அ. நமக்கு ஆண்டவரோடுள்ள உறவைப் பாதிக்கிறது (ஆவிக்குரிய நலனைப் பாதிக்கிறது).

It affects your relationship with God. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்து போகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக் கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள் (எபி.12:14-16).

16ஆம் வசனத்தில் எச்சரிக்கையாயிருங்கள் என்றுள்ளது. திருவிவிலிய மொழிபெயர்ப்பு பார்த்துக்கொள்ளுங்கள் என்று மொழிபெயர்த்துள்ளது. டோனல்ட் கத்ரீ என்னும் வேத வியாக்கியானி இந்தப் பகுதிக்கு விளக்கமளிக்கையில், எச்சரிக்கையாயிருங்கள் என்ற சொல்லுக்கு உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்க சொல்லின் சொல் அர்த்தம் மேற்பார்வை செய் (to exercise oversight) என்பதாகும். ஈடுபடவேண்டிய விஷயம் ஆவிக்குரிய அதிக முக்கியத்துவம் கொண்ட விஷயமாகும் (utmost spiritual importance).

ஒருவனும் கிருபையை இழந்து போகாதபடிக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில் இது நிகழ்காலத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது என்று கூறும் டோனல்ட், இந்த இடத்தில் தேவனுடைய கிருபையானது அவரது கிருபை தரும் எல்லா நன்மைகளையும் குறித்து நிற்கிறது. அநேக கிறிஸ்தவர்களின் தவறு இந்த நன்மைகளை சொந்தமாக்கிக்கொள்ளத் தவறும் குறைபாடாகும் என்கிறார். வாரன் வியர்ஸ்பி, கடவுளின் கிருபை நம்மைக் கைவிடுவதில்லை; நாம்தான் அந்த கிருபையில் நன்மை பெற தவறுகிறோம் என்கிறார் (God’s grace does not fail, but we can fail to take advantage of His grace).

எபிரெய நிருபத்தில் எழுத்தாளர் தேவனுடைய கிருபையை உரித்தாக்கிக்கொள்ள தவறி அதனை இழந்துபோன ஏசாவை உதாரணமாக எடுக்கிறார். ஏசா தனக்குரிய சேஷ்ட புத்திர பாகத்தை அற்பமாக எண்ணி தற்காலிக காரியத்திற்காக அதனை விற்று ஆசீர்வாதத்தை இழந்து போனான்.

ஒரு கிறிஸ்தவன் கசப்பாயிருக்கும்போது தேவனோடுள்ள நெருக்கமான ஐக்கியத்தை இழந்து போகிறான். அது இயேசுகிறிஸ்துவோடு அவனுக்குள்ள உறவுக்குத் தடையாக நிற்கிறது. கசப்பானது உணர்வுகளின் சமநிலை, சமாதானம், சந்தோஷம் உள்ளடங்கலாக இயல்பான கிறிஸ்தவ வாழ்வின் பல ஆசீர்வாதங்களை இழக்கக் காரணமாகிறது.

இயேசுவின் பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்: மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார் (மத்.6;15). நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான். ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து (மத்5:22-24).

நாம் மற்றவரோடு தவறாயிருந்தால் இறைவனோடு சரியாயிருக்க முடியாது (We cannot be right with God when we are wrong with others). நாம் மற்றவர்கள் நமக்கெதிராக செய்த பாவங்களை மன்னியாமல் கசப்பு கொண்டிருந்தால் நமது பாவங்களும் மன்னிக்கப்படுவதில்லை (மத். 6:12). மற்றவர்களோடு ஒப்புரவாகாமல் மற்றவரை மன்னியாமல் இருந்தால் ஆண்டவர் நமது காணிக்கையை அங்கீகரிப்பதில்லை, நமது ஆராதனையை ஏற்றுக்கொள்வதில்லை. நமக்கு அவரோடுள்ள உறவு பாதிப்புறும். அவர் தரும் ஆசீர்வாதங்களும் தடைபடும். அது (கசப்பு) ஒருவனை, சரியான விதத்தில் ஆராதிக்கவோ, ஐக்கியப் படவோ கர்த்தரை சேவிக்கவோ முடியாதவனாக்குகிறது.

ஆ) நமக்கு மற்றவர்களோடுள்ள உறவைப் பாதிக்கிறது (It affects your relationship with others).

திருவிவிலிய மொழிபெயர்ப்பு உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். கசப்பான நச்சு வேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து தொல்லை கொடுக்காதபடியும் அதனால் பலர் கெட்டுப்போகாதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள் ( எபி 12: 15-16).

வேர் வெளியில் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அது வளரும்போது அது முளைத்தெழும்பி தொல்லை கொடுக்கலாம். கசப்பின் ஆரம்பம் சிறிதாயிருந்தாலும் அது வளர்ந்து பல தீய விளைவுகளை ஏற்படுத்தலாம். கசப்பின் கனிகளைத் தோற்றுவிக்கலாம். ஆபேலின் பலியை ஏற்றுக்கொண்ட ஆண்டவர் தன் பலியை ஏற்க மறுத்தபோது ஆபேலின் மீது கசப்பும் வெறுப்பும் கொண்ட காயீன் அவனை கொலை செய்தான். தனது சகோதரியைக் கற்பழித்த அம்னோன்மேல் கசப்பு கொண்ட அப்சலோம் தருணம் பார்த்து அவனைக் கொலை செய்தான்.

சிறையிலிருந்த ஒரு மனிதன் தான் தனது மகனைக் கொன்றவரிடம் கசப்புணர்வு கொண்டுள்ளதாக கிறிஸ்தவரொருவருடன் பகிர்ந்து கொண்டார். இவர் சிறைக்கு வந்த காரணமே தன் மகனை கொடூரமாகக் கொலை செய்தவனை கொன்றுவிட்டதுதான். ஆனாலும் அப்படி அவன் கொலை செய்த பின்பும்கூட அவன் அந்த கசப்பிலிருந்து விடுபடவில்லை. ஒருவேளை நாம் மற்றவர்களை சரீரப் பிரகாரமாக கொலை செய்யாமல் இருக்கலாம். ஆனால் கசப்பும் வெறுப்பும்கூட கொலைதான். அப்சலோம் தன் தங்கையை கற்பழித்த அம்னோன் மேலும் அது குறித்து நடவடிக்கையெடுக்காத தாவீது மேலும் கோபமும் கசப்பும் கொண்டிருந்தான். எனவே அம்னோனைக் கொலை செய்ததுடன் தாவீதையும் பழி வாங்கினான்.

தீட்டு என்பதற்கு எபிரெய நிருபத்தை ஆக்கியோன் பயன்படுத்திய அதே சொல் தீத்து 1:15 இலும் வருகிறது. சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். தீட்டுப்படுத்தல், அசுத்தப்படுத்துதல் என்ற அர்த்தங்களைக் கவனிக்கவும். கசப்பு மற்றவரிலும் தீமையான செல்வாக்கை செலுத்தக்கூடியது. மற்றவரைத் தீட்டுப்படுத்த கறைபடுத்த அசுத்தப்படுத்த மாசுபடுத்தக்கூடியது. “கிறிஸ்தவன் ஒருவன் கசப்பு மனப்பான்மையோட இருப்பது எப்பொழுதுமே தவறானது”. தணியாத சினம், பொறாமை, கசப்பு என்பன எப்பொழுதுமே மாம்சத்தின் காரியங்கள். பிரச்சனை என்னவென்றால், அவை அதிகமாகப் பரவக்கூடிய நோய்கள் ஆகும். ஒருவன் கசப்போடு இருந்து மன்னியாதிருப்பதைத் தொடர்ந்தால் அந்த கசப்பின் ஆவி மற்றவர்களுக்கும் தொற்றி மற்றவர்களையும் கறைபடுத்திவிடும்.

இ) கசப்பு எனக்கு என்னோடுள்ள உறவை பாதிக்கிறது (It affects your relationship to yourself).

கசப்போடு வாழ்பவர்கள் உள்ளான சமாதானம் இல்லாதவர்களாக, கோபத்தோடும் வெறுப்போடும் இருப்பதுண்டு. அதை வெளியே காட்டாமல் மூடி மறைப்பவர்களும் உண்டு. ஆனால் உள்ளான கசப்பு ஒரு விஷத்தைப்போல அவர்களைப் பாதிப்பதுண்டு. ஒரு புண்னை சீழ்பிடிக்க எவ்வளவு அதிக காலம் அனுமதிக்கிறோமோ அவ்வளவு அதிகமாக கசப்புணர்வு, கோபம், சுய பரிதாபம் போன்ற விஷம் என் இரத்தத்தை நச்சாக்கி என் இருதயத்தை அரித்தழிக்கிறது.

4. கசப்புணர்வு சாத்தானுக்கு இடமளிக்கிறது

பவுல் எபேசியருக்கு எழுதுகையில், நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். …சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக் கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (எபேசி.4:26-32) என்கிறார்.

ஒருவன் ஒப்புரவாகாமல் கோபத்தை மனதில் தொடர்ந்து வைத்திருக்கும்போது, அவன் பிசாசுக்கு இடங்கொடுக்கிறான். பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் என்று பவுல் எழுதுகிறார். 31ஆம் வசனத்தில் கசப்பை நீக்கவேண்டும் என்றும், 32ஆம் வசனத்தில் தேவன் மன்னித்தது போல இவர்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும் என்றும் பவுல் எழுதுகிறார். மற்றவரை மன்னிக்க மனமில்லாமல் கோபத்தை வைத்திருந்து வளர்த்தால், பிசாசுக்கு இடங்கொடுக்கிறவர்களாவோம். பிசாசனாவன் பிரிவினைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவான்.

கசப்புணர்வினால் பிரிந்த குடும்பங்கள் எத்தனை, உடைந்த சபைகள் எத்தனை, பாதிக்கப்பட்ட ஊழியங்கள் எத்தனை தேவராஜ்ய வளர்ச்சியைத் தடுப்பதற்காக சாத்தான் இந்தவித கசப்புணர்வைப் பயன்படுத்தி மக்களை ஒருவர் மேல் ஒருவர் கோபமும் கசப்பும் கொள்ளவும் சண்டை பிடித்துக்கொண்டு அதிலேயே அவர்கள் காலம், நேரம், சக்தியை வீணடித்து அவர்கள் தேவ காரியங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாதபடி முட்டுக்கட்டை போடுகிறான். அப்படி அவர்கள் தேவ ஊழியத்தில் ஈடுபட்டாலும் மற்றவரை மன்னிக்காது கசப்போட ஈடுபடுவதால் தேவ ஆசீர்வாதமும் தடைபட்டு, தேவநாமமும் அவகீர்த்திக்கு உள்ளாகிறது. கசப்பின் விளைவுகள் பல உறவுகளை, குடும்பங்களை, நண்பர்களை நாசப்படுத்தியுள்ளது. சபைகள் அழிந்துமுள்ளது.

இதனை வாசிக்கும் அருமையானவர்களே, கசப்பு எத்தகைய தாக்கத்தை, அழிவை நம்மில் ஏற்படுத்துகிறதென்று பார்த்தீர்களா? இந்தக் கசப்போடு நீங்கள் தொடர்ந்து வாழப்போகிறீர்களா? அப்படியானால் நஷ்டம் மற்றவருக்கு அல்ல. உங்களுக்குத்தான். இந்த கசப்பை உங்கள் வாழ்வைவிட்டு அகற்ற ஒரு தீர்மானமெடுப்பீர்களா?

சத்தியவசனம்